மனோ தினமும் காலை விரைவாய் எழுந்து கிளம்பி மட்டைப்பந்து விளையாட ஓடிவிடுவான். அவனுக்கு விளையாட்டிலிருந்த அளவிற்கு ஆர்வம் படிப்பில் இல்லை. கொஞ்சம் மந்தமாகத்தான் படித்தான்.
சந்தனாதான் அவனுக்கு வீட்டுப் பாடங்கள் முதல் ஒப்படைப்பு வரை அனைத்தையும் செய்து கொடுத்தாள். அவன் ஓடியாடி விளையாடுவதில் மும்முரமாயிருக்க, இவள் எப்போதாவது அவனைக் கண்டிப்பதும் உண்டு. அவள் கூறியதற்காக இரண்டு நாட்கள் படிக்கிறேன் என உட்காருபவன், அடுத்தடுத்த நாட்கள் அந்த எண்ணத்தை கிடப்பிலிட்டு விடுவான்.
அப்படியே அந்த வருடம் முடிய, மனோ எண்பது சதவீதத்துடன் நேர்ச்சி பெற்று பதினொன்றாம் வகுப்பில் அடியெடுத்து வைக்க, சந்தனாவும் ஒன்பதாம் வகுப்பில் நுழைந்திருந்தாள்.
மகன் எடுத்த மதிப்பெண்ணில் சதாவுக்கு அத்தனை குறை. சின்னப் பையன் என அவனைக் கண்டிக்காமல் விட்டதுதான் தவறென அவர் மூச்சுக்கு மூன்னூறு தடவை கூறிக் காண்பிக்க, உமாநாதன் மனைவியை சமாதானம் செய்தார்.
இருந்தும் அவர் மகனைக் காணும் போதெல்லாம், “லட்ச ரூபாய் கட்டிப் படிக்க வச்சது இந்த மார்க் வாங்க தானா டா? ட்வெல்த்லயாவது ஒழுங்கா படிக்கிற. இனிமே காலைல கிரிக்கெட் விளையாடப் போகக் கூடாது நீ. எழுந்து படிக்கிற. மார்னிங் ட்யூஷன் சேர்த்து விடுறேன்!” எனக் கெடுபிடியாய் கூறிவிட, இவனுக்கு அத்தனை கோபம்.
“உங்க இஷ்டத்துக்கு என்னால ட்யூஷன் சேர முடியாது மா. என்னால என்ன முடியுமோ அவ்வளோதான் படிப்பேன். மார்க்கும் எடுப்பேன்!” என மீசை அரும்பிய மனோ, தாய் தன்னைத் திட்டிய வார்த்தைகள் பிடிக்கவில்லை என்பதோடு, மதிப்பெண்ணை வைத்து தன்னை குறையாய் மதிப்பிட்டதில் வெகுண்டெழுந்தவனின் வார்த்தைகள் கோபமாய் வந்து விழுந்தன.
“என்ன டா… என்னை எதிர்த்துப் பேசுற அளவுக்கு வளர்ந்துட்டீயா நீ?” சதா இருந்த கோபத்தில் அவன் முதுகில் சுளீரென்று ஒரு அடி வைக்க, அது கொடுத்த வலியில் விழிகள் கலங்கினாலும் அவரை முறைத்தவன், அந்த இடத்தைவிட்டு நகரவே இல்லை. வீம்புகென்றே நின்றான்.
“சதா… என்ன பண்ற நீ? தோளுக்கு மேல வளர்ந்தப் பையனை கைநீட்டி அடிப்பீயா?” உமாநாதன் மனைவியை அதட்டலிட்டு மகனை சமாதானம் செய்ய விழைய, அவரது கையைத் தட்டிவிட்டு பள்ளிப் பையை எடுத்துக்கொண்டு நகர்ந்திருந்தான் மனோ. தாய் அடித்ததின் வலி அவனது மனதில் ஆழப்பதிய, காலை உணவும் உண்ணவில்லை. மதிய உணவையும் எடுத்துச் செல்லவில்லை.
“சதா… சாப்பிடாம போறான் பாரு. எல்லாம் உன்னால தான்!” கணவர் கடிந்ததும் சதாம்பிகாவிற்கும் மகன் உண்ணாது சென்றதில் வருத்தம் மேவியதுதான். இருந்தும் அவர் இந்த விஷயத்தில் இறங்கிவரத் தயாராய் இல்லை. ஒற்றை மகனென தாங்கள் செல்லம் கொடுத்ததன் விளைவே அவன் படிப்பில் இத்தனை அலட்சியத்தைக் காண்பிக்க காரணமென அவர் உணர்ந்து, இனிமேல் அவனிடம் படிப்பில் கெடுபிடியாய் இருக்க வேண்டும் என மனதில் உருப்போட்டார்.
மனோ காலை, மாலை எனக் கோபத்தை இழுத்துப் பிடித்து உண்ணாது உண்ணாவிரதம் நிகழ்த்திவிட்டான். மாலை வீட்டிற்கு வந்ததும், தாய், தந்தை முகம் பார்க்காது உடை மாற்றிவிட்டு விறுவிறுவென சந்தனாவின் அருகில் சென்று அமர்ந்தான். வந்ததும் எப்போதும் புத்தகப்பையை அவளிடம் நகர்த்தி அது இதுவென எழுதச் சொல்லி தொல்லை செய்பவன், இன்று அமைதியாய் அமர்ந்திருந்தான்.
சந்தனா அவனது முகத்தைப் பார்த்தவள், “மனோ… என்னாச்சு. அழுதீயா?” எனக் கலக்கத்துடன் கேட்டாள்.
“இல்லையே… நான் ஏன் அழப் போறேன்?” என முகத்தைத் திருப்பினான். மீசை அரும்பிய வயதில் அவள் குட்டியின் முன்பு அழ விருப்பப்படவில்லை மனோவின் இளமனது.
“பொய் சொல்லாத மனோ. ஏன் அமைதியா இருக்க? மேடம் எதுவும் திட்டீட்டாங்களா?” என மீண்டுமொருமுறை வினவ, “ஒன்னும் இல்லன்னு சொல்றேன் இல்ல. சும்மா கேக்காத டி. உன் ஹோம் வொர்க்கை எழுது நீ!” கடுப்புடன் அவன் உரைக்க, உமாநாதன் அங்கே தட்டுடன் வந்தார்.
“மனோ… என்ன இது? அவகிட்டே ஏன் கோபமா பேசுற?” எனக் கேட்டுக் கொண்டே அவனருகே அமர்ந்தார். காலையிலிருந்து உண்ணாது சோர்ந்திருந்த மகனைக் காண்கையில் அவருக்கு மனம் பிசைந்தது.
“மனோ… காலைல இருந்து சாப்பிடாம இருக்க. ஏன் டா இப்படி பண்ற? என்ன கோபம் இருந்தாலும் சாப்பாட்டுல காட்ட கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல?” என அவர் அதட்டலிட, அவன் பதில் மொழியெல்லாம் பேசவே இல்லை. முகத்தைக் கோபமாய் வைத்திருந்தான்.
“மனோ… அம்மா அடிச்சது தப்புதான். பட், அவ பேசுனதுல தப்பில்லையே டா. நீ நல்லா படிச்சு நல்ல மார்க் எடுத்தா தானே உன்னோட எதிர்காலம் நல்லா இருக்கும். அவ உன் நல்லதுக்குத் தானே சொல்றா!” என்றவரை இவன் அனல் கக்கும் விழிகளுடன் பார்த்தான்.
ஏனோ சந்தனா முன்னே தான் அடிவாங்கியதை உரைத்ததும் அவனுக்கு அவமானமாய் போய்விட, அது கொடுத்த கோபத்தில் அவரை முறைத்தான். அவள் இருவரது உரையாடலை மௌனமாய்க் கேட்டபடி அமர்ந்திருந்தாள்.
“ப்பா… முதல்ல நீங்க இங்க இருந்து கிளம்புங்க!” என்றான் கடித்தப் பற்களிடையே வார்த்தைகளைத் துப்பி.
“டேய் மனோ… நீ சாப்பிடு டா, நான் கிளம்புறேன்…” என அவர் இறைஞ்ச, இவன் செவி சாய்க்கவில்லை.
“சார், என்கிட்ட கொடுங்க சார். நான் அவனை சாப்பிட வைக்கிறேன்!” என சந்தனா உரைக்க, தட்டை அவளிடம் நீட்டியவர் பெருமூச்சுடன் அகன்றார்.
உணவை கட்டிலில் வைத்துவிட்டு அவனருகே அமர்ந்தவள், “ஏன் மனோ இப்படி சார்கிட்டே கோபமா பேசுற. அவர் உன் அப்பாதானே? அம்மா, அப்பா நம்ப நல்லதுக்குத்தான் டா சொல்வாங்க. நீ அவங்க சொல்ற மாதிரி படிச்சு நிறைய மார்க் வாங்கு. பெரிய காலேஜ் படிச்சு பெரியவனா வரலாம்…” சந்தனா கூற, அவளை முறைத்து வைத்தான். பதினான்கு வயதிற்குரிய சிறுமி தனக்குத் தெரிந்தளவில் அவனுக்குப் புரிய வைக்க முயன்றாள்.
“ஏன் மனோ… உன் அப்பா கூட இருக்கதால உனக்கு அவரோட அருமை தெரியலையா? என்னை மாதிரி அப்பா இல்லாம அம்மா மட்டும் கஷ்டப்பட்டு வளர்த்திருந்தா, நீ இப்படி பேசியிருக்க மாட்டல்ல?” எனக் கேட்டவளின் குரலில் வேதனை மிஞ்சியிருந்தது. சிறு வயதில் புரியாத யாவும் இப்போது விழிகளுக்கு நன்றாய் புலப்பட்டன. காலை எழுந்ததில் தொடங்கி இரவு வரை ஓடாய் தேயும் தாயைப் பார்த்து அவளுக்கு நிறைய வருத்தம் பிறந்தது. பூரணி கூட கடந்த சில நாட்களில் கால்வலி தாங்காது முனங்க, இவள்தான் அவரது காலைப் பிடித்து விடுவாள்.
“உங்கப்பா இருந்திருந்தா, நம்பளை இவ்வளோ கஷ்டப்பட விட்டிருக்க மாட்டாரு குட்டி. இருக்கும் போது அந்த மனுஷன் அருமை தெரியலை. இல்லாதப்போ தான் புரியுது!” என பூரணி தன் மனக்கிடங்கை தற்போதெல்லாம் வாய் வழியாக மகளிடம் உரைத்திருந்தார். அது கொடுத்த வலியில் தான் சந்தனா மனோவுடன் இப்படி பேசியிருந்தாள்.
மனோ எதுவும் பேசாது அமர்ந்திருந்தான். சந்தனா உணவுத் தட்டைக் கையிலெடுத்தவள், “சாப்பாட்டை வேஸ்ட் பண்ண கூடாது மனோ. எங்க மிஸ் சொன்னாங்க, சாப்பாடு இல்லாம எவ்வளவோ பேர் கஷ்டப்படுறாங்க. கடவுள் நமக்கு மூனு வேளையும் சாப்பிடக் கொடுக்குறதை வேஸ்ட் பண்ண கூடாது!” என அவனுக்கு ஊட்டச் சென்றாள். மனோ எதுவும் பேசாது அமைதியாய் உண்டான். அவனுடைய கோபம் வெகுவாய் குறைந்திருந்தது.
“குட்டி… உன் மடியில நான் கொஞ்ச நேரம் படுத்துக்கவா?” என அவன் கெஞ்சலாகக் கேட்க, சந்தனா என்ன செய்வதென்று தெரியாது நின்றாள். பூரணிக்குத் தெரிந்தால் மனோவுக்கு உணவு ஊட்டியதற்கே திட்டுவார் என அவள் அஞ்சி, வேகவேகமாக அவனுக்கு ஊட்டி முடித்தாள். இப்போது இவன் தன் மடியில் படுத்தால் அடி வெளுத்துவிடுவார் என பயந்து போனாள்.
“ப்ளீஸ் குட்டி, ஐஞ்சு நிமிஷம் படுத்துக்குறேன்…” மனோ குரல் சோர்ந்து வர, சந்தனா வீட்டினுள்ளே எட்டிப் பார்த்துவிட்டு கட்டிலில் அமர, கண்ணை மூடி அவளது மடியில் படுத்துக் கொண்டான் மனோ. ஏனோ எல்லா பிரச்சனைகளும் குட்டியிடம் நீர்த்துப் போவதாய் அவனுக்கொரு எண்ணம்.
சந்தனாவிற்கு மனம் முழுவதும் பயம் அப்பிக் கிடந்தது. லேசாய் வியர்த்து வழிந்தது. தொட்டுப் பேசக் கூடாதென தாய் கூறியது மீண்டும் மீண்டும் நினைவு வர, அவர் வந்துவிடக் கூடாதென எண்ணி கடவுளிடம் வேண்டுதல் வைத்தபடியே அமர்ந்திருந்தாள்.
பத்து நிமிடத்தில் அவளது மடியிலிருந்து எழுந்தவன், “குட்டி… பயப்படாத. நான் எழுந்துட்டேன்!” என்றான். அதில் சுயம் வரப்பெற்றவள், நிம்மதியுடன் தலையை அசைத்தாள்.
“மனோ… இனிமே நீ நல்லா படிப்ப தானே?” அவள் கவலையாகக் கேட்க, மனோவிற்கு மறுக்க மனம் வரவில்லை. தலையை மட்டும் அசைத்தான்.
சந்தனா தன் வீட்டுப் பாடங்களை எழுத, இவன் அவளருகே அமைதியாய் அமர்ந்திருந்தான். பூரணி வர, “பாய் மனோ…” என அவள் விடைபெற்றாள். செல்லும் சந்தனாவையே மனோவின் பார்வை தொடர்ந்தது. இப்போதெல்லாம் குட்டி அவனுக்கு மிக மிக புதிதாய் தெரிந்தாள்.
தொடரும்…