அன்பு 15.2

எவ்வளவு நேரம் ஆனதென்று அவளுக்குத் தெரியவில்லை. அப்படியே அமர்ந்திருந்தாள். சுயம் பெற்றதும் தன்னிச்சையாக கால்கள் எழுந்து நிற்க, அறைக்குள் சென்று அவர்களது தூக்கத்தை கெடாதவாறு ஆணியில் மாட்டியிருந்த சாவியைக் கையிலெடுத்தாள். ஐந்து வருடங்களாகப் பூட்டி வைத்திருந்த அலமாரி. இதோ இப்போது மீண்டும் காயப்படுவோம் எனத் தெரிந்தே அதை திறந்தாள். கைகள் நடுங்கின.

பூரணியும் அவளும் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தனர். அப்படியே அந்தப் பையை எடுத்து வந்து நீள்விருக்கையில் அமர்ந்தாள்.

தாயின் புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். “ஏன் மா… ஏன் மா என்னைத் தனியா விட்டுட்டுப் போன? நீ போகும் போதே என்னையும் கூட்டீட்டுப் போய்ருக்கலாம்ல மா. என்னால முடியலை மா. என்னால முடியலை. எல்லாத்தையும் மறந்துடலாம்னு நினைச்சேன் மா. ஆனால், முடியலையே மா!” என தேம்பினாள்.

“ம்மா… ப்ளீஸ் மா. ஒரு தடவை என் முன்னாடி வாம்மா. உன் மடியில படுக்கணும் மா. எனக்கு யாரும் வேணாம். நீ மட்டும் போதும் மா!” எனக் கதறியவளின் கீழிமைத் தொட்டு மேழிமை வரைப் படர்ந்த உவர் நீர், புகைப்படத்தில் பட்டுத் தெறித்தது.

‘வேணாம்… அதை எடுக்காதே!’ என கட்டளையிட்ட மூளையைப் புறந்தள்ளி அந்தப் பையைத் தலைகீழாய்க் கவிழ்த்தினாள். மனோ! மனோ என்ற ஒற்றைச் சொல்தான் அந்தப் பை முழுவதும் நிறைந்து கிடந்தது. அவளுக்கும் அவனுக்கும் மட்டுமேயான உலகம். மீண்டும் குழந்தையாய் மாறிவிட மாட்டோமா என நினைத்து விசும்பினாள்.

‘ஏன் மனோ என்னைவிட்டுப் போன? ஏன் டா? ஏன் என்னைப் பார்க்க வரலை?’ எனப் பிதற்றியவள் பித்துப் பிடித்தது போல அமர்ந்திருந்தாள். இத்தனை நாட்கள் எல்லாவற்றையும் கடந்துவிட்டேன் என நினைத்திருந்த இதயம் இன்று மொத்தமாய் அவளுக்கு எதிராய் சதி செய்திருந்தது. மனோவும் அவனது குட்டியும் அந்தப் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தனர். அவனது முகத்தைத் தொட்டுத் தடவினாள்.

‘இல்லை… இப்போது அவளது மனோ இல்லையே! எங்கே தேடுவாள்? யாரிடம் சென்று கேட்பாள்? ஒவ்வொரு நாளும் இன்று மனோ வருவான். நாளை வருவான் என காத்திருந்த நாட்கள் எல்லாம் கானல் நீராய் சென்றிருக்க, யாரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதெனத் தெரியவில்லை.

ஒவ்வொரு முறையும் தெரியாத இலக்கத்திலிருந்து அழைப்பு வரும்போது மனோ என உதடுகள் முணுமுணுக்க, உற்சாகத்துடன், “ஹலோ…” என அவள் உதிர்க்கும் வார்த்தைகள் யாவும் மறுபுறம் அவனில்லை என்றதும் மொத்தமாய் அமிழ்ந்து போய்விட்டக் காலங்கள் எல்லாம், ‘கண்டிப்பா மனோ வருவான். எனக்காக வருவான்!’ என்ற சுயசமாதானத்தில், சுயதேற்றலில்தானே கடந்தன.

அவனுக்காகவென சேர்த்து வைத்த அன்பு மொத்தத்தையும் லாவகமாய் அவனிடம் கொட்டிக் கவிழ்க்கத் துடித்த இதயம் இறுதியில் காயம்பட்டு துடித்துப் போயிருந்தது. நீள்விருக்கையில் சாய்ந்தமர்ந்து அதில் தலை சாய்த்திருந்தாள்.

“குட்டி… எனக்காக வெயிட் பண்ணுவதானே டி. நான் படிச்சு முடிச்சுப் பெரிய பையனானதும் பூரணி ஆன்ட்டிகிட்டே கேட்டு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன். வெயிட் பண்ணுவீயா நீ?”

“நான்தான் ப்ராமிஸ் பண்ணிட்டேன்ல மனோ. உன்னை மட்டும்தான் கல்யாணம் பண்ணிப்பேன்…”

“எத்தனை வருஷமானாலுமா?”

“ஆமா… ப்ராமிஸ் பண்ணா அதைக் காப்பத்தணும் டா. நீ எப்போ வரீயோ, வா. நான் உனக்காக வெயிட் பண்றேன் மனோ…”

“என்னை எவ்வளோ பிடிக்கும் குட்டி?”

“ஹம்ம்… இவ்வளோ… இல்ல இல்ல, இந்த வானத்தளவு பிடிக்கும் மனோ…”

“வானத்துக்குத்தான் அளவே இல்லையே குட்டி!”

“ஆமா… அந்தளவுக்கு உன்னைப் பிடிக்கும் மனோ. உனக்கு?”

“ஹம்ம்… நீ சொல்லிட்ட. பட், நான் சொல்ல முடியாத அளவுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் குட்டி…” செவிகள் என்றோ சேமித்த நினைவுகளின் தாக்கத்தில், அது கொடுத்த வேதனையை இப்போதும் அவளுக்குப் பரிசளித்து கொஞ்சம் கொஞ்சமாக ஆறிய காயத்தைக் கீறின.

எத்தனை கனவுகள், எத்தனை ஆசைகள். தானும் அவனும் மட்டுமான ஒரு உலகம். அந்த உலகத்தில் ஒருவருக்கும் இடமில்லை. அவன், மனோ, மனோ மட்டும்தான். அவனை நிரப்பவெல்லாம் யாராலும் முடியாதே. அவனுக்கென கனவுகளை சுமந்து காத்திருந்த காலங்கள் எல்லாம் கரைந்திருந்தன. இப்போது அதை நினைத்ததும் உதடுகளில் விரக்தி புன்னகை உதிர்ந்தது.

கண்ணை இறுக மூடிக் கொண்டாள். அனைத்திலிருந்தும் தப்பித்துப் போக வேண்டும். ஒரே ஒருநாள் நிம்மதியாக உறங்க வேண்டும் என்பது அவளது பேராசை. ஆம், பேராசைதான். ஏனோ எல்லோருக்கும் இயல்பாய்க் கிடைத்த நிம்மதியான உறக்கம் கூட சந்தனாவிற்கு எட்டாக் கனியாகியிருந்தது.

விடியும் வரை ஒரு நொடி கூட இமைகள் அதன் இணையோடு சேராமல் போராட்டம் நிகழ்த்திவிட, கழுத்துவரை கூட தூக்கம் எட்டவில்லை என்பதே உண்மை. தன்னைப் போலவே இமைகளும் தனித்து நின்றுவிட்டன என எண்ணியதும் கசந்தது‌.

நேரத்தைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள். கைகள் நிழலாய் மாறிப்போன மனோவின் புகைப்படத்தை நெஞ்சோடு அழுத்திக் கொண்டன. தவறென தெரிந்தும் அவளால் எளிதில் அவனைக் கடக்க முடியவில்லை.

மடையை மாற்றிக் கொள்ளத் தயாராய் இருந்த இதயம் இப்போதும் மனோ விட்டுச் சென்ற இடத்திலே நின்று வாதம் செய்தது. அவன் கடந்து விட்டான். அவனுக்கென ஒரு பாதை, உலகம் என அவனுடைய வாழ்க்கை மொத்தமாய் மாற்றத்தின் மறுஉருவமாய் மாறியிருக்க, இவள் மட்டும் தாயைத் தொலைத்த சேயாய் அங்கேயே தேங்கிவிட்டாள்.

எங்கே செல்வது? யாரிடம் செல்வது? எனத் தெரியாது அழும் குழந்தையாய் மனம் அங்கேயே ஸ்தம்பித்துவிட்டது. எத்தனையோ பேரை தன்னம்பிக்கை மிகுந்த வார்த்தைகளால் மீட்டெடுத்த சந்தனா இன்று நிர்க்கதியாய் நிற்க, மீட்க ஒருவரும் இல்லையென்ற உபரித் தகவலை மனம் வழங்கியது போல. கசந்த முறுவலை உதிர்த்தாள். நேரம் ஆறைத் தொட பதினைந்து நிமிடங்கள் இருந்தன. லட்சுமி அம்மா எழுந்துவிடுவார் எனப் புறத்தூண்டலை கஷ்டப்பட்டுப் பிடித்து வைத்த மூளை அவளை முடுக்கிவிட, சிதறிக் கிடந்தப் பொருட்களைப் பார்த்தாள்.

அனைத்திலும் மனோவே நிரம்பியிருந்தான். அருகில் இல்லையென்றாலும் இதோ அவளுடன் ஜீவித்துக் கொண்டுதானே இருக்கிறான். துக்கம் தொண்டையை அடைத்தப் போதும் அனைத்தையும் எடுத்து பையில் வைத்து எடுத்த இடத்திலே பூட்டிவிட்டாள். ஏனோ, எடுக்கும் போது நடுங்கிய கைகளின் நடுக்கம் இப்போது எங்கு சென்றதென சந்தனா அறியாள்.

அவளுக்கும் அவனுக்கும் மட்டுமான நிஜங்கள், நிழல்கள் என எதையும் யாரிடமும் காட்சிப்படுத்த உத்தமமாய் அவளுக்கு விருப்பமில்லை.

கலைந்திருந்த முடியைத் தூக்கிக் கொண்டையிட்டாள். இத்தனை நாட்கள் நன்றாக இருக்கிறேன் என அணிந்திருந்த மூகமுடி அரிதாரமின்றி மீண்டும் அவளது முகத்தை ஆக்கிரமிக்க, முகத்தை நீரால் அடித்துக் கழுவினாள். அழுகையோடு அவளது துக்கமும் அதில் அடித்துச் செல்லப்பட்டதென மனதை நம்ப வைத்துப் போராடினாள். இன்னும் ஒரு வாரம் மட்டும்தான் இந்த வலியும் வேதனையும்.

‘இங்கிருந்து செல்ல வேண்டும்!’ என்பதை மட்டுமே மனம் ஜெபித்துக் கொண்டிருந்தது. சிவந்த விழிகளை சிமிட்டி சரிபடுத்த முயன்றவளால் முடியாது போக, சோர்ந்த உடலை சுயதேற்றலில் மீட்க முயன்ற கணம், அழைப்புமணி ஒலித்தது.

error: Content is protected !!
Scroll to Top