அன்பு 15.3

இத்தனை விரைவாய் யார் வந்திருக்க கூடுமென எண்ணியபடி கதவைத் திறந்தாள். “சந்தும்மா…” என குகேஷ் பின்னிருந்து பாவனா குரல் கொடுக்க, பயணப்பையுடன் அவள் முன்னே நின்றிருந்தான் ஆடவன். அவனைக் கண்டதும் இத்தனை நேர சுயதேற்றல்கள் எல்லாம் விழலுக்கு இரைத்த நீரென வீணாக, வேக வேகமாய் விழிகள் நனைந்தன.

பளபளத்த விழிகளும் புன்னகைக்க முயன்று தோற்ற உதடுகளை இறுக்கிக் பிடித்து, “குகா…” என்றழைத்தவளின் குரல் சர்வ நிச்சயமாய் உடைந்து போனது.

இத்தனை நேரம் யாருமில்லாத தனிமை சிறையில் தவித்திருந்த இதயம் எதிரிலிருந்தவனைக் கண்டதும், காயம்பட்ட குழந்தையாய் தாயிடம் அழும் சேயைப் போல அவனிடம் அழுது கரையச் சொல்லி உந்தியது‌ போல.

***

விளக்கை உயிர்ப்பித்துவிட்டு வாசலை திறந்து வைத்த சந்தனா வெளியே ஒரு கண்ணும் புத்தகத்தில் மறுகண்ணுமாய் வாயிலருகே இருந்தாள். மையிருட்டாய் இருட்டியிருந்த இரவு அவளை சற்றே அச்சமூட்டியது உண்மை.

பூரணி வேலை முடித்து வர நேரம் எட்டறையைத் தொட்டிருந்தது. அவரது இருப்பை உணர்ந்ததும் சந்தனாவிடம் மெல்ல பயம் கரைய, அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.‌

“என்ன குட்டி… முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு?” என வினவியவாறே அவர் உள்ளே வர, இவளும் எழுந்து கூடத்திற்கு சென்று அமர்ந்தாள்.

“தோசை ஊத்தவா, இட்லி சுடவா குட்டி?” எனக் கேட்டவர், காலையில் அரைத்து வைத்த மாவை சமையல் மேடையில் எடுத்து வைத்து, தண்ணீர் ஊற்றி அதை கலக்கியபடி மகளைப் பார்த்தார்.

“ம்மா… எதுனாலும் சரிதான் மா!” என்றாள் இவள் பிரக்ஞை இன்றி.

“குட்டி… என்னடி ரொம்ப யோசிக்கிற?” பூரணி மகளைத் திரும்பிப் பார்த்து வினவ, சில நொடிகள் அவரை அமைதியாய்ப் பார்த்தவள், “ம்மா… அது, அது பழைய மாதிரி நானும் உன்கூட வரவா மா?” என்றாள் தயங்கியபடியே.

“ஏன் குட்டி… முன்ன மாதிரி நீ சின்ன புள்ளை இல்லடி. உன்னைக் கூடவே கூட்டீட்டுப் போனா நல்லா இருக்காது. வீட்லயே இரு…” பூரணி கூற,

“ம்மா… தனியா இருக்க பயமா இருக்கு மா. ரொம்ப இருட்டிடுது நீ வீட்டுக்கு வர. அதுவரைக்கும் தனியா இருக்கும்போது யாரோ இந்தப் பக்கம் போய்ட்டு வர மாதிரி இருக்கு மா…” என்றாள் அவர் முகத்தைப் பார்க்காது. பொய்யும் மெய்யும் கலந்துதான் உரைத்தாள்.

“என்ன… என்ன, எந்தப் பக்கம் குட்டி? யார் வர்றா?” பூரணி பதற்றத்துடன் வினவ, “தெரியலை மா. சத்தம் கேட்டுச்சு. பக்கத்துல பெரியம்மா வேற இல்ல. அதனாலே ரொம்ப பயமா இருக்கு…” என்றவள் குரலில் பயம் அப்பிக் கிடந்தது. தாயிடம் பொய் கூறுகிறோம், அவர் கண்டு பிடித்துவிட்டால் வெளுத்துவிடுவாரே என்ற பயமும் சேர்ந்து கொண்டது.

பூரணிக்கு மனதில் கவலைப் புகுந்தது. அவருக்குமே மகளை இரவு வீட்டில் தனியாய் விட மனதில்லை. மரிக்கொழுந்து காலை வேளையில் வீட்டில்தான் இருப்பார். இரவு நேரத்தில் இவரைப் போலவே வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வர தாமதமாகும். பக்கத்தில் வீடுகள் சற்றே தூரமாய் இருந்தன. இவர்களது இருவீடு மட்டும் ஒன்றாயிருக்க, மகளைத் தனியே விட வேண்டாம் என பயபந்து சுழன்றது. ஆண் துணையில்லாத வீடென்று அவருக்கு ஏற்கனவே அச்சம் அதிகம்.

இதில் சந்தனா கூறியது வேறு கற்பனைகளை வாரியிறைக்க, “குட்டி… சரி, நீ இனிமே எப்பவும் போல என்கூடவே வந்துரு…” என்றுவிட்டார் பூரணி. மகளின் பாதுக்காப்பின்மை ஒரு தாயாய் அவரை பயப்பட வைத்திருந்தது. கணவர் இருந்திருந்தால் இப்படியெல்லாம் கஷ்படத் தேவை இருந்திருக்காதே என இறந்து போன கணவரை எண்ணி அவருக்கு மனம் கனத்துப் போனது. அவரது வார்த்தைகள் சந்தனாவிற்கு அத்தனை உவகையை அளித்தது.

மறுநாள் காலை வேளையில் பூரணி பணிக்கு கிளம்ப, சந்தனாவை அழைத்துக் கொள்ளவில்லை. மாலை மட்டும் பள்ளி முடிந்ததும் அங்கே வந்துவிடக் கூறினார். பகலில் தெரு எப்போதும் ஆட்கள் நடமாட்டம் அதிகம். அதுவும் இல்லாமல் மரிக்கொழுந்து காலையில் ஒன்பது மணிக்கு மேல்தான் பணிக்குச் செல்லுவார். அதனால் பயமில்லை என சந்தனாவை உடனழைத்துச் செல்லவில்லை. அவளும் மாலை வேளையில் மனோவைப் பார்த்துக் கொள்ளலாம் என்றுவிட்டாள்.

காலையில் பூரணியின் குரல் கேட்டதும் மனோ விரைந்து வந்தான். அவரது பின்னே இவனது விழிகள் துழாவ, ஏமாற்றமே மிஞ்சியது. ‘குட்டி ஏன் வரலை. ப்ராமிஸ் பண்ணாளே. அதை அவ கண்டிப்பா காப்பாத்துவா!’ என மனம் அதிலே உழன்றது.

பள்ளிக்கு கிளம்பிச் சென்றுவிட்டான். மாலை கண்டிப்பாக குட்டி வந்துவிடுவாள் என மனோ உற்சாகத்துடன் வீடு வர, அவர்களது ஆஸ்தான இடத்தில் அமர்ந்து சந்தனா வீட்டுப் பாடங்களை செய்து கொண்டிருந்தாள்.

“குட்டி… வந்துட்டீயா?” அகமும் முகமும் மலர்ந்து போனது மனோவுக்கு.

வேக வேகமாக நடந்து வந்தவனைப் பார்த்து பதறிய சந்தனா, “மனோ… ஏன் டா இவ்வளோ ஃபாஸ்டா வர்ற? மெதுவா நட…” எனக் கடிந்தபடியே அவனருகே விரைந்தாள்.

“கால் வலி எப்படி இருக்கு மனோ? இப்போ சரியாகிடுச்சா?” என அவள் பார்வை அவனது காலை சமீபித்தது.

“குட்டி… அதான் நீ வந்துட்டல்ல. என் கால் வலி சரியாகிடுச்சு…” அவன் புன்னகையுடன் கூற, சந்தனா அவனை முறைத்தாள்.

“ஒரு வாரமா உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் டி…” என்றவன் உரிமையாய் அவளது தோளில் கையைப் போட, சந்தனாவிற்கு சட்டென ஏதோ அசௌகரியம் தொற்றிக் கொண்டது.

அவனது கையை நாசூக்காக எடுத்து விட்டாள். “என்ன குட்டி…?” என முறைத்து அவளருகே வந்தவன், மீண்டும் கையைப் போட முயல, “மனோ… இனிமே என்னைத் தொட்டுப் பேசாத டா!” என்றாள் தயங்கியபடியே.

“ஏன் குட்டி?” என அவன் கேள்வியாக நோக்க, “அது… அது வந்து நான் இங்க வரணுமா? வேணாமா?” என வினவினாள்.

“ப்ராமிஸ் பண்ணியிருக்க குட்டி நீ. கண்டிப்பா டெய்லி வரணும்!” மனோ குரலில் மெலிதான கோபம் எட்டிப் பார்த்தது.

“அப்போ என்னைத் தொடாம பேசு மனோ. அப்போதான் வருவேன் நான்!” என அவள் கூற, அவனும் சரியென்றுவிட்டான். மனோவுக்குப் புரிந்து தான் இருந்தது. முதலில் தாய் தந்தை கூறிய போது எதுவும் விளங்கவில்லை.

ஆனால் அவனது வகுப்புத் தோழிகள் பூப்பெய்தியதைக் கேள்விப்பட்டிருக்கிறான். மாணவர்களுக்குள்ளே இதைப் பற்றிய பேச்சும் உண்டு என்பதால் மேலும் அவன் எதுவும் துருவித் துருவிக் கேட்காது தலையை அசைத்தான்.

ஒரு வாரத்தில் சந்தனா அழகாகிவிட்டதாய் அவனுக்குள்ளே ஒரு எண்ணம் தோன்றியது என்னவோ உண்மை. மஞ்சள் பூசியிருந்தாள். தலை நிறைய பூ வைத்தும் இருந்தாள். அதை அவளிடம் கூற வேண்டும் எனத் தோன்றினாலும், அந்த எண்ணத்தை தள்ளி வைத்தான்.

“குட்டி… இந்தா, இந்த அசைமெண்ட் மட்டும் செஞ்சு கொடு…” என சில தாள்களை அவளிடம் கொடுத்தான் மனோ.

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “என்னை இனிமே அசைமெண்ட் செய்ய சொல்ல மாட்டேன்னு நேத்து சொன்ன மனோ?” கேள்வி கேட்க, மனோ திருதிருவென விழித்தான்.

“அது… குட்டி, இன்னைக்கு ரெண்டு அசைமெண்ட் கொடுத்துட்டாங்க. அதான், எனக்கு கை வலிக்குது குட்டி. காலும் வலிக்குது. நிக்க முடியலை!” என அவளருகே அமர்ந்தான்.

“பொய் சொல்றீயா மனோ? இப்போதான் கால் வலிக்கலைன்னு சொன்ன?” என அவள் கேட்க,

“அப்போ வலிக்கலை குட்டி‌. இப்போ நின்னுட்டே இருந்தது வலிக்குது. நீ எனக்கு அசைமெண்ட் எழுதி தருவீயா மாட்டியா டி?” என மெல்லிய கடுப்புடன் கேட்டான்.

“சரி… சரி. குடு, நானே எழுதி தரேன்!” என அவள் அவனது கால்வலி என்ற வார்த்தையிலே சரியென்றுவிட்டாள்.

“ஹம்ம்… இதை எழுது. நான் வரேன்!” என்றவன் உள்ளே சென்று உடைமாற்றி தன்னை சுத்தம் செய்து வந்தான்.  சதா அவனுக்கு குளம்பியையும் ரொட்டி துண்டுகளையும் கொடுத்தார்.

குளம்பியை ஒரு மிடறு பருகியவன் இடது கையால் ரொட்டியிருந்த கிண்ணத்தை எடுக்கச் சென்று பின்னர், வேண்டாம் என்று கையைப் பின்னிழுத்துக் கொண்டான். இப்போதெல்லாம் சந்தனாவின் முன்னே தான் மட்டும் உண்ணுவது அவனுக்கு விருப்பமில்லாது போனது. அவள் அவனிடம் எதையும் வாங்கிக் கொள்ள மாட்டாள் என்பதை உணர்ந்தவன், அவள் முன்னே உண்பதை சிறிது சிறிதாக தவிர்த்தான்.

குளம்பிக் கோப்பையோடு அவளருகே அமர்ந்தான்.‌ “எழுதிட்டியா குட்டி?” எனக் கேட்க, “இன்னும் ரெண்டு பக்கம்தான் இருக்கு மனோ. எழுதித் தரேன்!” என்று அவனுடைய ஒப்படைப்பை எழுதி முடித்தவளை கெஞ்சியே மற்றொன்றையும் எழுத வைத்திருந்தான்.

பேச்சு மும்முரத்தில் மனோ அவளருகே அமர்ந்து விட, சந்தனா தள்ளியமர்ந்தாள். பின்னர் பூரணி வர, இவள் மனோவிடம் விடை பெற்றுக் கிளம்பினாள்.

error: Content is protected !!
Scroll to Top