அன்பு 15.1

மணி பதினொன்றைக் கடந்தும் உறக்கம் விழிகளைத் தழுவாதிருக்க, அலைபேசி திரையில் கைகளை அலையவிட்டவாறு அதில் கண்களை ஓட்டினாள் சந்தனா. தலை வேறு வலிப்பது போலொரு எண்ணம். மறுபுறம் திரும்பிப்படுத்த மனோ அவள் கைமீது தலையைப் புதைக்க, ஒரு கையை எடுத்து அவனைத் தட்டிக் கொடுத்தாள்.

நேரமுள்ளில் ஒருமுறை விழிகள் படர்ந்து மீற, குகாவிற்கு அவள் கடைசியாய் அனுப்பிய செய்திகளை பத்தாவது முறையாக எடுத்துப் பார்த்தாள். கடந்த இரண்டு வாரத்தில் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் ரஞ்சன் பிறந்த நாளன்று அவனிடம் பேசியது. அதற்கடுத்து குறுஞ்செய்திகளுக்கே பஞ்சமாகிப் போக, அழைப்புகள் அற்றுப் போனது. இவளாக அழைத்தாலும் அவன் ஏற்கவே இல்லை.

அவ்வாறு ஏற்றாலும் இல்லாத ஒரு வேலையைக் கைக் காண்பித்து தவிர்த்து வந்தான். இவளுக்கு மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டதோ என அவன் செய்கையில் மனம் கனத்துப் போனது.

இரண்டு நாட்கள் முன்பு வரை செய்திகளைப் படித்தான். எதிர்வினையாற்றவில்லை. ஆனால், இப்போது செய்தி அவனை சென்று சேரவே இல்லை. வேலை பளுவாக இருக்குமோ? இல்லை வேறு ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ என மனம் நிலையில்லாது அதிலே உழன்றது.

பெருமூச்சோடு அவள் இணையத்தைத் துண்டிக்கச் செல்ல, “சந்தனா, ஆர் யூ அவேக்?” என ஷோபனாவின் இலக்கத்திலிருந்து செய்தி வந்துவிழ, இவள் அதைத் தொட்டு உள்ளே சென்றாள்.

“யெஸ் ஷோபி…” இவள் பதிலளித்ததும் அவள் அழைத்துவிட்டாள்.

“சாரி சந்தனா, இந்த டைம்ல உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” ஷோபனாவின் குரல் சோர்வாய் வந்தது.

“நாட் லைக் தட் ஷோபி… என்னாச்சு உங்களுக்கு? வாய்ஸ் டல்லா இருக்கே?”

“அது… லஞ்ச் ஹோட்டல்ல சாப்டோம் இல்ல. அது ஒத்துக்கலை போல. ஈவ்னிங்ல இருந்து ஒரே வாமிட்டிங். நானும் மேனேஜ் பண்ணிடலாம்னு பார்த்தேன். பட், முடியலை. சோ, உங்களுக்கு கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டேன்!”

“அச்சோ… அதெல்லாம் ஒன்னும் இல்ல ஷோபி. இருங்க, டென் மினிட்ஸ்ல நானே வரேன்…” என்றாள் அன்பான அதட்டலிட்டு.

“இல்ல டாக்டரம்மா… நானும் அவரும் வரோம்!” என அவள் மறுக்க, “வேணாம், நான் சொல்றதை கேளுங்க. அலைய வேணாம். நானே வந்துட்றேன்!” சந்தனா முடிவாய்க் கூற,

“ஓகே, நீங்க தனியா வர வேணாம். நான் ரஞ்சனை அனுப்புறேன். அவர் வந்து உங்களைக் கூட்டீட்டு வரட்டும்!” என்றாள்.

“ஓகே, அவரை அனுப்பிவிடுங்க!” என அழைப்பைத் துண்டித்த சந்தனா மருத்துவ உபகரணப் பெட்டியை எடுத்துக்கொண்டு கழுத்தைச் சுற்றி ஒரு துப்பட்டாவை எடுத்து அணிந்தாள். இரவு உடையாய் கால் சராயும் மேல் சட்டையும் அணிந்திருந்தாள்.

ரஞ்சன் வருவதற்கு முன்பே கதவைத் திறந்து வைத்து அவனுக்காக காத்திருந்தாள். இந்த நேரத்தில் அழைப்புமணி ஒலித்தால் லட்சுமி அம்மாவும் மனோவும் எழுந்துவிடக் கூடுமெனக் கருதி வாயிலில் வந்து நின்றாள். ரஞ்சன் வரவும் அவனைப் பார்த்து தலையை அசைத்தவள், கதவை மெதுவாகப் பூட்டிவிட்டு அவனுடன் படிகளில் நடந்தாள்.

ஷோபனா இவர்களுக்காக கூடத்திலே அமர்ந்திருந்தாள். சந்தனாவைப் பார்த்ததும் அவள் எழுந்து நிற்க, “ஷோபி, உட்காருங்க…” என அவளை இருக்கையில் அமர்த்திய சந்தனா பரிசோதித்தாள்.

இதயத்துடிப்புமானியை வைத்து இதயத் துடிப்பை சரி பார்த்தவள், அவளது கையைப் பிடித்து நாடியை சோதித்தாள்.

“வென் வாஸ் யுவர் லாஸ்ட் பீரியட்ஸ் ஷோபி?” மற்றவளின் கேள்வியில் ஷோபனாவின் மனம் கடைசியாக வந்த மாதவிடாய் நாளை கணக்கிட்டது. சரியாய் நினைவு இல்லை. மீண்டும் ஒருமுறை மீட்டிப் பார்த்து நினைவு கூர்ந்தவளுக்கு, இந்த மாதம் வரவேண்டிய மாதவிடாய் வரவேயில்லை என அப்போதுதான் உறைத்தது.

“ட்வென்ட்டி டேய்ஸ் ஆச்சு சந்தனா. பீரியட்ஸ் வரவேயில்லை. எனக்கு யூஸ்வலா இர்ரெகுலர் பீரியட்ஸ்தான். சோ, நான் அதை பெருசா எடுத்துக்கலை!” என்றாள் யோசனையாக.

“ஹம்ம்… யூ ஆர் பிரக்னென்ட் ஷோபனா. நீங்க அகைன் அம்மாவாகப் போறீங்க!” சந்தனா புன்னகையுடன் கூற, அதைக் கேட்ட மற்ற இருவருக்கும் ஆனந்த அதிர்ச்சிதான்.

“சந்தனா… நிஜமா வா? நல்லா செக் பண்ணீங்களா?” ஷோபி உறுதிப்படுத்தக் கேட்டாள். கடந்த ஒரு வருடமாக இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றொரு முனைப்பில்தான் இருந்தனர் தம்பதியர். இங்கு மாற்றலாகி வந்ததும் மனைவி தனியாய்க் கஷ்டப்படுவாள் என ரஞ்சன் அந்த யோசனையை தள்ளி வைத்திருக்க, எதிர்பாராமல் உதித்திருந்தது இந்தக் கரு.

“நல்லா செக் பண்ணிட்டேன் ஷோபி. நாளைக்கு க்ளீனிக் வந்தீங்கன்னா, கன்பார்ம் பண்ணிடலாம். கங்கிராட்ஸ்!” என்றுரைத்த சந்தனா தன் பெட்டியில் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு, வாந்தி நிற்பதற்கு மட்டும் ஒரு ஊசியில் மருந்தை ஏற்றினாள்.

“ரஞ்சன், உங்களுக்கும் என்னோட விஷ்ஸஸ். செகண்ட் டைம் அப்பாவாகப் போறீங்க!” என்றாள். ரஞ்சன் மனைவியை ஆசைத் ததும்ப பார்த்திருந்தான்.

சந்தனாவின் குரலில் கலைந்தவன், “தேங்க் யூ டாக்டர்…” உணர்ந்து நன்றியுரைத்தான்.

“ஷோபி… ஒரு இன்ஜெக்ஷன் மட்டும் போட்றேன். வாமிட் ஸ்டாப் ஆகிடும். மார்னிங் ஹாஸ்பிடல் வாங்க, செக் பண்ணிடலாம்!” என்றவள் எழுந்து நிற்க, “சந்தனா… இன்ஜெக்ஷன் வேணாம். டேப்லெட் எதுவும் இல்லையா?” ஷோபனா பயந்த குரலில் வினவினாள்.

“ஷோபி… வலிக்காம நான் இன்ஜெக்ஷன் போட்றேன்!” என அவள் எழ, ரஞ்சன் மனைவியருகே வந்து நின்றவன் அவளது கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டான்.

ஒரு பக்க கையில் சந்தனா மருந்தை செலுத்த, ஷோபி மற்றக் கையால் கணவனை இறுக அணைத்துக் கொண்டாள். அவளுக்கு சந்தனா அருகில் இருக்கிறாள் என்ற எண்ணத்தை விட, ஊசிக்குப் பயம் அதிகம். அதுவே பிரக்ஞை அற்றுப் போகச் செய்தது. கண்ணை இறுக மூடிக் கொண்டாள்.

“ஒன்னும் இல்லடி… பயப்படாத!” என ரஞ்சன் வாஞ்சையாய் கூறி அவளுக்குத் துணையாய் நின்றான். சந்தனா ஊசியைக் குத்தியவள், நிமிர்ந்து இருவரையும் ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, “ஷோபி, ஊசி போட்டாச்சு…” என்றாள் புன்னகையுடன்.

படக்கென கண் விழித்தவள், “சந்தனா, நிஜமா ஊசி போட்டுடீங்களா? வலிக்கவே இல்லை!” என்றாள் உற்சாகமாய். அவளின் பாவனையில் சந்தனாவுக்கு முறுவல் பிறந்தது.

“நான் நிஜமா டாக்டர்தான் ஷோபி… ரெண்டு டைம் டெஸ்ட் பண்ணிட்டீங்க!” எனக் குறும்பாய் உரைத்தவள் கிளம்ப யத்தனிக்க, ரஞ்சன் அவளைப் பத்திரமாய் வீடுவரை சென்று விட்டுவிட்டு வந்தான்.

வீட்டிற்குள் நுழைந்து கதவை அடைத்த சந்தனா கையிலிருந்த மருத்துவ உதவிப் பெட்டியை அப்படியே கீழே போட்டுவிட்டு முட்டியில் முகம் புதைத்து அமர்ந்தாள். இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை மெல்லிய விசும்பலாக மாறத் தொடங்கியது. இரண்டு கைகளாலும் முகத்தைப் பொத்தினாள். சரசரவென வழிந்த நீர் கரங்களை நனைத்தது. கத்தி அழவில்லை. ஆனாலும் அழுதாள். மனதின் வலிகளை மொத்தமாக கரைக்கும் நோக்கோடு அழுதாள்.

இப்படியொரு நிலையில் தன்னை நிற்க வைத்த கடவுளை எண்ணித் துக்கம் தொண்டையை அடைத்தது. இத்தனை நட்கள் திடமாயிருந்த இதயம் சற்று முன்னே மொத்தமாய் உடைந்து சிதறியிருந்தது. சத்தியமாய் அதை ஒட்ட வைக்கும் எண்ணம் கிஞ்சிற்றும் இல்லை.

தேற்ற ஆளற்ற அழுகைதான். யாரும் வந்து தன்னை தேற்ற மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இன்னுமே விழிகள் உடைப்பெடுத்தன. ஏன் தனக்கு மட்டும் இப்படியொரு நிலை என எத்தனையோ நாட்கள் எண்ணி வருந்தியிருந்தாலும், தன்னை தானே தேற்றிக் கொள்ளுவாள். ஆனால், தைரியம் நிறைந்த, தன்னம்பிக்கை மிகுந்த எதையும் கடந்துவிடக் கூடிய பெண் நான் என அவள் எண்ணியிருந்தவை எல்லாம் சில நாட்களாக மெதுவாய் உதிரத் தொடங்கியிருந்தன.

இத்தனை நாட்கள் தேற்றி வைத்திருந்த இதயம் இப்போது ஆளற்ற இருள் சூழ்ந்த அமைதியில் தன் பாரத்தை இறக்கி வைக்கும் தோளொன்று வேண்டும் என ஆர்ப்பாட்டமின்றி கத்தி கதறியது. விழிகளை மூடினால் வந்து நிற்கும் பிம்பத்திடம் என்ன பேசுவது என்று அவளுக்குமே தெரியவில்லை.

பத்து வருடங்கள் வாழ்ந்த தவவாழ்க்கை எல்லாம் அவளைப் பார்த்து எள்ளி நகையாடின. நான் நன்றாய் இருக்கிறேன் என இத்தனை நாட்கள் பசப்பு வார்த்தைகளை உதிர்த்த உதடுகள் கூட அழுகையில் விம்மித் துடித்தன. அழுத்தமாக வாயைப் பொத்தினாள். விசும்பலில் தொடங்கிய அழுகை உடைந்து மெது மெதுவாக கேவலாக மாறத் தொடங்க, லட்சுமி எழுந்துவிடுவாரோ என மனம் அஞ்சியது.

வேண்டாமென தூக்கியெறிந்துவிட்டு வந்த மிச்சங்கள் எல்லாம் தன்னைத் தொடர, என்றோ சேமித்த நிகழ்வுகளின் தாக்கத்தில் இன்று மொத்தமாய் உடைந்தழுதிருந்தாள். பூரணி இறந்த அன்று நீரை உகுத்த விழிகள் அதற்குப் பின்னே அவளது கட்டுப்பாட்டில் வந்திருந்தது என எண்ணி ஏமாந்திருந்த நாட்கள் இன்று மொத்தமாய் அவளை வஞ்சித்துவிட்டன.

பத்து வருடங்களுக்கும் சேர்த்தொரு அழுகை. புறத்தூண்டல் மறந்து ஸ்மரணையற்றுப் போனது இதயம். எத்தனைதான் தாங்கும் என் இதயம்? வலித்து வலித்து மரத்துப் போய்விடாதா? ஏன் இன்னும் இதற்கு வலித்து தொலைக்கிறது. என்னையும் சேர்த்து ரணப்படுத்தி சந்தோஷம் கொள்கிறதா என்ன? எனத் தேம்பினாள்‌.

error: Content is protected !!
Scroll to Top