“என்னாச்சுப்பா குட்டிக்கு? அவ என்கிட்ட சொல்லவே இல்லையே. இப்போ எப்படி இருக்காப்பா?” இவனுக்குப் பதற்றம் தொற்றிக் கொண்டது.
“பதறாத மனோ… பயப்பட்ற அளவுக்கு ஒன்னும் இல்ல. இப்போ அவ நல்லாகிட்டா…” என அவர் நகர, இவனுக்கு அன்றிரவு உறக்கம் பறிபோயிருந்தது. மறுநாள் காலை அரக்கப்பறக்க கிளம்பினான். சந்தனாவின் வீட்டிற்கு சென்றுவிட வேண்டும் என்ற முடிவை இரவே எடுத்திருந்தான்.
“மனோ… ஸ்கூல் எயிட் தேர்ட்டி தானே? இவ்வளோ சீக்கிரம் எங்கடா கிளம்புற?” சதா மகனை அதட்டி அவனது பள்ளிப் பையில் மதிய உணவைத் திணித்தார்.
“வினோத் ஸ்கூல் க்ரவுண்டுக்கு வர சொன்னான் மா. காலைல மேட்ச் போடப் போறோம்…” எனப் பள்ளிப் பையைத் தூக்கினான்.
“இந்த ஒரு தோசையை சாப்ட்டுட்டுதான் நீ போகணும்…” என அவனை உண்ண வைத்தவரை முறைத்துப் பார்த்துக்கொண்டே அவன் சமையலறைக்குள் கையைக் கழுவச் செல்ல, பூரணி உள்ளேயிருந்தார்.
அவரைக் கண்டதும் ஒரு நொடி அதிர்ந்து பின் மனம் கொஞ்சம் நிம்மதியடைய, “ஆன்ட்டி… குட்டி வரலையா?” என ஆர்வமாய் வினவினான்.
“இல்லப்பா… அவ வரலை!”
“ஏன் ஆன்ட்டி குட்டி வரலை. அவளுக்கு உடம்புக்கு முடியலைன்னு அப்பா சொன்னாரு. இப்போ எப்படி இருக்கா?” என படபடவென கேட்டான்.
சில நொடிகள் தயங்கியவர், “இப்போ நல்லா இருக்காப்பா…” என்றார்.
“எப்போ குட்டி இங்க வருவா ஆன்ட்டி?”
“அவ இனிமே வரமாட்டாப்பா…” அவர் பதிலில், “ஏன் ஆன்ட்டி… ஏன் வரமாட்டா. அவளைக் கூட்டீட்டு வாங்க ஆன்ட்டி. நான் அவளைப் பத்திரமா பார்த்துக்குறேன். அவ உடம்பு சரியானதும் வரட்டும் ஆன்ட்டி…” என்றான் பதற்றத்துடன்.
பூரணி தலையை மட்டும் அசைத்தார். இத்தனை நாட்கள் மகள் இவனுடனே விளையாடியதால் திடீரென அவளின் இன்மையை இவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
“ஆன்ட்டி… பாவம் குட்டி… தனியா அவளை வீட்ல விட்டுட்டு வந்துட்டீங்களா? அவளை யார் பார்த்துப்பா?” கவலையாய் மனோ வினவ, “குட்டி ஸ்கூலுக்குப் போய்டுவா பா…” என்றார் அவர். இவனது முகம் மலர்ந்தது.
“ஓகே ஆன்ட்டி…” என்றவன் சிட்டாய் பறந்திருந்தான். சந்தனா பள்ளிக்கு ஒன்பது மணிக்குத்தான் வருவாள். ஆனால் இவன் எட்டு முப்பதுக்கே வாயிலில் நிற்கத் தொடங்கினான். அதோ இதோவென அரைமணி நேரம் கடந்து சந்தனா பள்ளிக்கு வந்தாள்.
இரட்டை ஜடை பின்னலிட்டிருந்தவள் அதில் அரைமுழம் மல்லிப்பூவை சுற்றியிருந்தாள். முகத்தில் மஞ்சளைக் குழைத்து அப்பியிருந்தாள். எப்போதுமிருக்கும் அசட்டுத்தனம் இல்லாது பார்வையில் லேசாய் பயமோ, ஜாக்கிரதை உணர்வோ வெளிப்பட்டது. இவனுக்கு சந்தனா மிகவும் புதிதாய் தெரிந்தாள்.
அவள் அருகே வந்ததும், “குட்டி…” எனக் கத்தினான் மனோ. அவனை அந்நொடி அங்கே எதிர்பாராது திகைத்த சந்தனாவின் முகம் மலர்ந்தது. சில பல நாட்களுக்குப் பின்னர் அவனைக் கண்டதும் உதடுகளில் புன்னகை ஏறின.
“மனோ…” என்றவாறே அவனருகே வந்து நின்றாள்.
“குட்டி… உனக்கு என்னாச்சு? ஏன் நாலு நாளா நீ வரவே இல்ல? உடம்பு சரியாகிடுச்சா?” எனக் கேட்டு அவளது கழுத்தில் கையை வைக்கச் சென்றான். சந்தனா அப்படியே நகர்ந்துவிட்டாள்.
“அது… மனோ, நான் நல்லா இருக்கேன்…” என்றாள். அவன் தொட வந்ததும் பூரணியின் குரல்தான் செவியில் கேட்டது.
“குட்டி… நீ இனிமே சின்னப்புள்ளை இல்ல. பெரிய மனுஷியாகிட்ட. ஆம்பளை பசங்களைத் தொட்டுப் பேசக் கூடாது. அவங்களையும் தொட விடக் கூடாது. யாரும் கைகால் தவிர இங்க, அங்கன்னு தொட்டுப் பேசுனா உடனே அம்மாகிட்ட வந்து சொல்லிடணும். சரியா?” என பூரணி மகளுக்குப் போதித்து இருந்தார்.
“குட்டி…” என்றவன் அவளது கையைப் பிடிக்க, “கையை விடு மனோ…” என அவன் கையைத் தட்டிவிட்டிருந்தாள் சந்தனா.
“குட்டி… என் மேல கோவமா இருக்கீயா? இனிமே உன்னை ஜூஸ் குடிக்க சொல்ல மாட்டேன். எப்பவும் போல வீட்டுக்கு வா குட்டி…” என்றான் ஏக்கமாய்.
“இல்ல மனோ, இனிமே என்னை அங்க வரக்கூடாதுன்னு அம்மா சொல்லிட்டாங்க. என்னைக் கூட்டிட்டு வர மாட்டாங்க!” என்றாள் சோகமாய். அவளுக்குமே மனோவைப் பிரிவது அத்தனைக் கஷ்டமாய் இருந்து தொலைத்தது.
“குட்டி… ஏன், உடம்பு சரியானதும் நீ வா. நம்ப விளையாடலாம். நீ எனக்கு அசைன்மெண்ட் கூட எழுதித் தர வேணாம். நானே இனிமே எழுதிக்கிறேன். உன்னை நான் பார்த்துக்கிறேன். உனக்கு இங்கிலீஷ் சொல்லித் தரேன்” என்றான். இந்தப் பெண் வரமாட்டாள் என்றதும் வார்த்தைகள் வந்து விழுந்தன.
“இல்ல மனோ… அம்மா விட மாட்டாங்க. நான் கேட்டா அடிப்பாங்க. அதனால வர மாட்டேன்!” என்றாள்.
“எல்லாரும் உள்ள வாங்க. கேட் பூட்டப் போறேன்!” பள்ளியின் வாயிற்காவலாளி கூற, “மனோ… நீ ஸ்கூலுக்குப் போ. உனக்கு டைமாச்சுல்ல. மிஸ் திட்டப் போறாங்க. நானும் உள்ள போகணும். கேட் பூட்டிடுவாங்க!” என்றாள் வாயிலைப் பார்த்துக் கொண்டே.
அவளது கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டவன், “குட்டி… ம்ஹூம்… நீ வீட்டுக்கு வரேன்னு சொல்லு. அப்போதான் நான் ஸ்கூல் போவேன். இல்லைன்னா இங்கேயே நிப்பேன்…” என்றான் அடமாய்.
“மனோ… மேடம்க்குத் தெரிஞ்சா திட்டுவாங்க டா. ஒழுங்கா ஸ்கூலுக்குப் போ!” என்றாள் கோபமாய்.
“போ மாட்டேன். நீ டெய்லி என்னைப் பார்க்க வரேன்னு ப்ராமிஸ் பண்ணு. அப்போதான் போவேன்!” மனோ குரல் அத்தனை அடமாய் இருந்தது.
“ஏம்மா… உள்ள வரீயா? கேட்டைப் பூட்டவா?” வாயிற் காவலாளி இவளைப் பார்த்துக் கேட்க, அவன் கையை ஒரே உதறில் உதறிவிட்டு விறுவிறுவென உள்ளே சென்றாள். உள்ளே நுழைந்ததும் இவனைத் திரும்பிப் பார்க்க, மனோ கோபத்துடன் நின்றிருந்தான்.
“மனோ… ப்ளீஸ்டா, ஸ்கூலுக்கு கிளம்பு டா!” என்றாள் கலங்கிய குரலில். அவன் அசையவில்லை. வகுப்பிற்கு நேரமானதை உணர்ந்து அவனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள்.
சந்தனா வகுப்பறையில் அமர்ந்திருந்தாலும் மனம் முழுவதும் மனோவிடம்தான். அவன் பள்ளிக்குச் சென்றுவிட்டானா? இல்லையா? அவன் பள்ளிக்குச் செல்லவில்லை என்று தெரிந்தால் சதா அவனைத் திட்டிவிடுவாரே. தன்னையும் கடிந்து கொள்வாரே. அவனை இந்த விஷயத்தில் அடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என மனம் அதிலே உழன்றது.
பதினோரு மணிக்கு இடைவேளை விட்டதும் குடுகுடுவென ஓடி வந்து அவள் வாயிலருகே பார்க்க, மனோ அங்கேயேதான் நின்றிருந்தான். அவனைப் பார்த்ததும் இவளுக்கு பயம் அதிகரித்தது. பூரணிக்குத் தெரிந்தால் தன்னையும் வெளுத்துவிடுவார் என்பதை மனம் கூற, கண்கள் மெதுவாய் கலங்கின. அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான்.
“ப்ரேக் முடிஞ்சது… எல்லாரும் க்ளாஸ்க்குப் போங்க!” என உடற்கல்வி ஆசிரியர் விரட்ட, இவள் வகுப்பறைக்குள் நுழைந்தாள். மதிய உணவு இடைவேளை விட, சந்தனா வாயிலருகே மீண்டும் வர, மனோ அங்குதான் நின்றிருந்தான். நீண்ட நேரம் நின்று கொண்டே இருந்தது அடிபட்ட காலில் வலியைக் கொடுத்திருந்தது. அவன் குனிந்து காலை பிடிக்க, இவளுக்கு சரசரவென கண்ணீர் வழிந்தது.
வாயிற் காவலாளி கதவைத் திறந்துவிட்டார். மதிய உணவு வேளையில் சிலர் வீட்டிற்குச் சென்று உண்டு வருவார்கள். அதனால் ஒருமணிநேரம் கதவு திறந்திருக்கும். இவள் விறுவிறுவென அவனிடம் வந்துவிட்டாள்.
“ஐயோ… மனோ, கால் வலிக்குதா டா? ஏன் இப்படி பண்ற நீ?” எனக் கேட்டுத் தேம்பியவள், அவனது காலைக் குனிந்து தடவ, வெடுக்கென அவள் கையைத் தட்டிவிட்டான் அவன்.
“மனோ… கிளம்பு மனோ. மேடம்க்கும் சாருக்கும் தெரிஞ்சா உன்னைத் திட்டுவாங்க, அடிப்பாங்க டா!” என்றாள் அழுகையுடன்.
“நீ ப்ராமிஸ் பண்ணலைன்னா, நான் போக மாட்டேன்!” என் அவன் உறுதியாயிருக்க, சந்தனா அவன் கையை எடுத்து சத்தியம் செய்துவிட்டாள்.
“இனிமே ப்ராமிஸா டெய்லி உன்னைப் பார்க்க வரேன் மனோ!” என அவள் அழ, இவனது முகம் மலர்ந்தது.
“குட்டி… அழாத!” என அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டான். கால் வலியில் முகம் சோர்ந்தது. எங்கேனும் அமர இடம் கிடைக்கிறதா என அவன் பார்க்க, பள்ளி சிறுவர்கள் அமரும் கல்மேஜை தென்பட, அங்கு சென்று அமர்ந்தான். இவள் அவனது பள்ளிப் பையைத் தூக்கிக்கொண்டு சென்று அங்கே வைத்தாள்.
“மனோ… கால் ரொம்ப வலிக்குதா டா?” என அவள் அக்கறையாய்க் கேட்க, “அது… நின்னுட்டே இருந்தனால வலிக்குது குட்டி. உக்கார்ந்துட்டேன்ல, சரியாகிடும்!” என்றான் சமாதானமாக.
“குட்டி… நீ சாப்பிடலைல இன்னும். வா, சேர்ந்து சாப்பிடலாம்!” என தன் டப்பாவைத் திறந்து அவளுக்கு ஊட்டினான்.
“இல்ல மனோ… நீ சாப்பிடு!” என்றாள். பூரணி அவனுக்கு உணவு ஊட்டிவிடுவதை தவிர்க்க கூறியிருந்தார்.
“நீ சாப்பிடலைன்னா எனக்கும் வேணாம்…” என்றவனை முறைத்தவள், ஒரு வாய் உண்ண, அவளுக்கு ஊட்டியவாறே தானும் உண்டு முடித்தான்.
“மனோ… லேட்டா போறீயே. மிஸ் உன்னை அடிக்க மாட்டாங்களா?” எனக் கவலையாய்க் கேட்டாள்.
“இப்போ போனா அடிப்பாங்க குட்டி. நான் க்ரவுண்டுக்குப் போகப் போறேன். நாளைக்கு மிஸ்கிட்டே காய்ச்சல்னு பொய் சொல்லிடுவேன். அவங்களுக்குத் தெரியாது!” என்றான் புத்திசாலிதனத்துடன்.
“சரி மனோ… கால் வலிக்கும். விளையாடப் போகாத நீ. அங்கப் போய் வேடிக்கை மட்டும் பாரு. நான் வரேன்!” என அவள் விடைபெற, தன் குட்டியை சம்மதிக்க வைத்த குஷியில் மனோ பையை எடுத்து மிதிவண்டியில் வைத்துப் பூட்டி சந்தோஷத்துடன் கிளம்பினான்.
தொடரும்…