“வாங்கிக் கொடுத்துட்டா போச்சு…” என்றவள் அவனுக்கு ஒரு இன்னட்டு நெகிழிப் பையை முழுவதுமாக எடுத்துக் கொடுத்தாள். சின்னவனுக்கு ஏகக் குஷியாகிப் போனது.
“பிரகா… என்ன பண்ணீட்டு இருக்க நீ?” தூரத்திலிருந்த குரல் மெதுவாய் அவர்கள் அருகில் வர, சந்தனா முகம் நீண்ட நாளைக்குப் பின்னர் மலர்ந்தது.
“யசோ, எப்படி இருக்க டி?” என இவள் கேட்க, அவர்கள் முன்னே வந்து நின்றவளின் முகம் கடுகடுத்தது.
“யார் எது கொடுத்தாலும் வாங்குவீயா நீ… முதல்ல அந்த சாக்லேட்டைத் தூக்கிப் போடு. இங்க வா என்கிட்ட…” என்றாள் அடிக்குரலில் மகனை மிரட்டி.
“சின்ன பையன்கிட்டே ஏன்டி இப்படி பேசுற நீ?” சந்தனா அந்தப் பெண்ணைக் கடிந்தாள். பிரகா எதுவும் பேசாது அவளிடமிருந்து கீழே இறங்கி தாயிடம் வந்தான்.
அவன் கையிலிருந்த இன்னட்டைப் பறித்துக் கீழே போட்டவள், “கண்டவங்ககிட்டே வாங்குறது என்ன பழக்கம். அறிவுருக்கா இல்லையா உனக்கு? உங்கப்பா மாதிரியே இருக்காத நீயும்…” என்றவளின் வார்த்தைகளில் எதிரிலிருந்தவளின் முகத்தில் புன்னகை மெல்ல மங்கத் தொடங்கியது. வருத்தத்துடன் தன்னைக் கடந்து செல்பவளைப் பார்த்திருந்தாள். ஷோபனா நடக்கும் அனைத்தையும் கவனித்தாலும் எதுவும் பேசாதிருந்தாள்.
சில நொடிகள் அவர்களையே வெறித்த சந்தனா துன்ப பெருமூச்சோடு திரும்பினாள். ஷோபியின் பார்வை தன்னிடம் இருப்பதை உணர்ந்தவள், “அது… அவ என்னோட காலேஜ் ஃப்ரெண்ட். சின்ன மிஸ்-அண்டர்ஸ்டாண்டிங். அதான் இப்படி பிகேவ் பண்ணிட்டு போறா…” என்றாள் தயக்கத்துடன்.
“ரொம்ப க்ளோஸ் ப்ரெண்டா சந்தனா?” அவள் வினவ, “ரொம்ப ரொம்ப க்ளோஸ் ப்ரெண்ட். நான் அவளுக்கு நிறைய நன்றிகடன்பட்டிருக்கேன். பட், திருப்பி செய்ய வாய்ப்பு கிடைக்கலை…” குரல் வருத்தம் தோய்ந்து வந்தது.
“விடுங்க சந்தனா… சான்ஸ் கிடைக்கும்போது திரும்ப செஞ்சுடுங்க. பட், பப்ளிக் ப்ளேஸ்னு கூடப் பார்க்காம ரொம்ப ஹார்ஷா நடந்துகிட்டாங்க. அதுதான் ஒரு மாதிரி இருக்கு...”
“இல்ல இல்ல ஷோபி. அவ கொஞ்சம் கோபக்காரி. ஆனால், குணமானவ. அவளோட குணம் யாருக்கும் இருக்காது. நல்லவ…” என்றாள் தோழியை விட்டுக்கொடுக்காது. ஷோபனா ஆச்சர்யமாகப் பார்த்தாள். ஏனோ சற்றுமுன் வந்தப் பெண்ணின் பார்வை ஒரு நொடி கூட இவள் மீது அக்கறையாகப் படியவில்லை. ஆனால், சந்தனா பார்வை எதிரிலிருந்தவளை அன்பாய் வாஞ்சையாய் தடவிப் போனதை கவனித்தாளே.
சந்தனாவிடம் காலையிலிருந்த உற்சாகம் சுத்தமாய் வடிந்து போயிருந்தது. எதையும் வாங்கும் மனநிலை அற்றுப் போனது. ஏற்கனவே எடுத்ததற்கு மட்டும் பணத்தைச் செலுத்திவிட்டு காத்திருந்தாள். ஷோபனாவும் சீக்கிரம் வாங்கி முடிய, வீட்டை அடைந்தனர்.
“தேங்க்ஸ் டாக்டரம்மா… எனக்காக கூட வந்ததுக்கு!” ஷோபி கூற, அவளை மென்மையாய் முறைத்துவிட்டு சந்தனா விடை பெற்றாள்.
சந்தனா படிக்கும் பள்ளியின் வாயிலில் நின்றிருந்தான் மனோ. பார்வை உள்ளே நுழையும் ஒவ்வொரு பெண்ணையும் தொட்டு மீழ, அவனின் குட்டி வரவேயில்லை. எல்லோரும் உள்ளே நுழைந்து வாயிற்காவலாளி கதவை மூடிவிட, இவனது முகத்தில் அப்பட்டமான ஏமாற்றம் படர்ந்தது. தன் பள்ளியை நோக்கி நகர்ந்தான்.
தாமதமாய் வந்ததற்கு ஆசிரியர் அவனைத் திட்டிவிட்டே உள்ளே விட, அதெல்லாம் மனோவின் மனதில் சுத்தமாய் பதியவில்லை. காலையில் சந்தனாவை இனி பார்க்க முடியாது, அவள் வரமாட்டாள் என்று தாய் கூறிய வார்த்தைகளே காதில் எதிரொலித்த வண்ணமிருந்தன. மாலை பள்ளி முடிந்ததும், சந்தனா வந்திருப்பாள் என்ற ஆசையில் வீட்டிற்கு அவன் விரைவாய் செல்ல, அப்போதும் ஏமாந்திருந்தான். யாரிடம் அவளைப் பற்றிக் கேட்பது எனத் தெரியவில்லை.
மகனின் சோர்வான முகத்தைக் கண்ட உமாநாதன், “மனோ… என்னாச்சு? ஏன் டல்லா இருக்க?” என அவனது அருகில் அமர்ந்தார்.
“ஒன்னும் இல்லப்பா…” என சிரிக்க முயன்றான். ஆனாலும் சிரிப்பு உதடுகளை எட்டாது கழுத்தோடு நின்றுவிட்டது போல.
“பொய் சொல்லாத மனோ… மிஸ் எதுவும் திட்டிட்டாங்களா? எக்ஸாம்ல மார்க் கம்மியா வாங்கிட்டீயா?” என அவராய் யூகித்து வினவ,
“அதெல்லாம் இல்லப்பா… அது, குட்டி வரலை. அவ இனிமே வரமாட்டான்னு அம்மா சொல்றாங்க. ஏன் பா அவ வரமாட்டா?” என சோகமாய்க் கேட்டான்.
உமாநாதன் இருக்கும்போது தான் மகள் பூப்படைந்துவிட்டாள் என பூரணி நான்கு நாட்கள் விடுப்புக் கேட்டிருந்தார். சதாம்பிகா கூறியது போல இனிமேல் சந்தனா இங்கு வருவது சந்தேகம் என எண்ணியவர், மகனுக்கு எவ்வாறு புரிய வைப்பது என யோசித்தார்.
“மனோ, குட்டிக்கு கொஞ்சம் ஹெல்த் இஷ்ஷூ டா. அதான் அவ வரலை…” என்றார். வேறெப்படி மகனுக்குப் புரிய வைப்பதென அவருக்குத் தெரியவில்லை.