அன்பு 14.1

அன்பு – 14

பெங்களூரின் பிரதான சாலையில் ரஞ்சன் லாவகமாக மகிழுந்தை செலுத்திக் கொண்டிருந்தான். சனிக்கிழமை சற்றே பரபரப்பு குறைந்து காணப்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் அதிகம்தான். அவனுக்கு அருகே ஷோபனா அமர்ந்திருந்தாள்.

பின்புறம் சந்தனா, மனோகர் மற்றும் அஷ்வினும் அமர்ந்திருந்தனர். சிறுவர்கள் இருவரும் அலைபேசியில் ஏதோ விளையாடிக் கொண்டிருந்தனர்.

“மனோ அண்ணா அவுட்டே. இப்போ என் டர்ன்…” என எக்கி அவன் கையிலிருந்த அலைபேசியை வாங்கி அஷ்வின் கண்ணும் கருத்துமாக விளையாட, மற்றவன் அதை உன்னிப்பாய்க் கவனித்தான்.

சந்தனா அவர்களை மென்புன்னகையுடன் பார்த்தவள் பின் பார்வையை சாலையில் பதித்தாள். அத்தனை நேரம் ஊர்ந்து கொண்டிருந்த மகிழுந்து பிரதான சாலையைக் கடக்கவும், மெதுவாய் வேகமெடுத்தது.

ஷோபனாதான் வாரயிறுதி கடைக்குச் செல்லலாம் என சந்தனாவை அன்று அழைத்திருக்க, அவர்கள் திட்டமிட்டபடியே சனிக்கிழமையை அதற்காகப் பயன்படுத்திக் கொண்டனர். ரஞ்சன் அவர்களது திட்டத்தில் இல்லவே இல்லை. பெண்களாகச் சென்று வரலாம் என யோசித்திருக்க, ரஞ்சனுக்கு அன்றைக்கிருந்த அலுவலகக் கூட்டம் அடுத்த வாரம் தள்ளிச் சென்றிருந்தது. அதனாலே அவர்களைத் தனியே அனுப்ப மனதில்லாது உடன் இணைந்து கொண்டான்.

பெங்களூர் வந்து சில மாதங்கள் கடந்திருக்க, ஷோபனாவிற்கு புது துணிகள் எடுக்க வேண்டும் என்று எண்ணம். அதுவும் சிக்பேட்டைப் பகுதியில் துணிகள் நன்றாய் இருப்பதாக ஒரு காணொளியில் பார்த்து அதை குறித்து வைத்திருந்தாள். அதனாலே முதலில் சிக்பேட்டை செல்லலாம் என முடிவெடுத்திருந்தனர்.

மகிழுந்தை பிரபல துணிக்கடை ஒன்றின் முன்னே ரஞ்சன் நிறுத்த, நால்வரும் இறங்கிக் கொண்டனர். அவன் வாகனத்தை நிறுத்திவிட்டு வரச் செல்ல, இவர்கள் உள்ளே நுழைந்தனர்.

“மேடம் பர்ஸ்ட் ப்ளோர் ரீடெய்ல், செகண்ட் ப்ளோர் ஹோல் சேல். நீங்க என்னப் பார்க்கணும்?” கடை ஊழியர் வினவ, “ரீடெய்ல்தான் பார்க்கணும்‌‌…” ஷோபி பதிலளிக்க, முதல் தளத்தில் நுழைந்தனர்.

முதலில் புடவை எடுக்கலாம் என அந்தப் பகுதியை இவர்கள் ஆக்கிரமித்தனர். ரஞ்சன் வந்ததும் சிறுவர்கள் இருவரையும் அவன் கவனித்துக் கொள்ள, பெண்கள் தங்களது பிரதானப் பணியில் மும்முரமாகினர்.

“சந்தனா… இந்த ரெண்டு கலர்ல எது நல்லா இருக்கு பாருங்க?” ஷோபனா அருண நிறத்தில் ஒரு சேலையும் தும்பை நிறத்தில் ஒரு சேலையும் எடுத்துக் காண்பித்தாள்.

“ஹம்ம்… வொய்ட் வேணாம் ஷோபி. நீங்க நல்ல வொய்ட், சோ நல்லா இருக்காது. டார்க் ரெட் ஷேட் உங்களோட கலருக்கு செட்டாகும்…” என அருண நிறச் சேலையைத் தேர்ந்தெடுத்தாள்.

“டாக்டரம்மா… நல்லா செலக்ட் பண்றீங்களே…” என்றவள் அடுத்தடுத்து சந்தனாவின் ஆலோசனைபடியே எடுத்தாள்.

நான்கு சேலைகள் தனக்கென எடுத்தவள், “சந்தனா… இதுல உங்களுக்கு எது ரொம்ப பிடிச்சிருக்கோ, அது ஒன்னை செலக்ட் பண்ணுங்க…” என்றாள்.

சந்தனா அவளது முகத்தை யோசனையாகப் பாரக்க, “உங்களுக்குத்தான். நான் ஒரு சேரி எடுத்துக் கொடுக்கணும்னு நினைச்சிருந்தேன். நீங்களா உங்களுக்குப் பிடிச்சதை செலக்ட் பண்ணுங்க…” என அவள் பார்வைக்குப் மற்றவள் பதிலளித்தாள்.

“நோ… அதெல்லாம் வேணாம் ஷோபி. ஆல்ரெடி என்கிட்ட நிறைய புது சேலை கட்டாமலே இருக்கு. நீங்க உங்களுக்கு மட்டும் எடுத்துக்கோங்க…” என்றாள் மறுப்பாய்.

“பரவாயில்லை. அதோட இந்த சேலையும் வச்சுக்கோங்க. உங்களுக்கு எப்போ தோணுதோ, அப்போ கட்டுங்க. பட் இட்ஸ் மை கிஃப்ட். நீங்க வேண்டாம்னு சொல்லக் கூடாது!” ஷோபனா அன்பு கட்டளையிட, சந்தனா சங்கடமாக அவளைப் பார்த்தாள். எப்படி மறுப்பதென அவளுக்குத் தெரியவில்லை.

“ரொம்ப யோசிக்காதீங்க டாக்டரம்மா‌. எனக்காக ஒரு சேரி எடுத்துக்கோங்க…” என்று கேட்ட ஷோபனாவை மறுக்கும் எண்ணத்தை முயன்று விழுங்கிய சந்தனா அரைமனதாய் தலையை அசைத்தாள். ஆனாலும் எந்தப் புடவையையும் அவள் ஆர்வமாய்ப் பார்க்கவில்லை.

அவளை மென்மையாய் முறைத்த ஷோபி, “நீங்க செலக்ட் பண்ற மாதிரி தெரியலை. நானே உங்களுக்கு செட்டாகுற மாதிரி ஒன்னை எடுக்குறேன்…” என புடவைகளை அலசத் தொடங்கினாள். சந்தனா சற்று மாநிறம் உடையவள். அவளது நிறத்திற்கு ஏற்றவாறு புடவையைப் பார்த்தாள்.

பத்து பதினைந்து நிமிடங்கள் கடந்தும் ஷோபனா திருப்தியாகவில்லை. அனைத்துப் புடவைகளையும் கலைத்துப் போட்டாள்.

கடை சிப்பந்தியைப் பார்த்த சந்தனா, “ஷோபி… பாவம் அவங்க. இதுலயே எதாவது ஒன்னை எடுங்க. நீங்க எந்த சேரி எடுத்தாலும் கண்டிப்பா எனக்குப் பிடிக்கும். அதோட நிறத்துலயும் விலையிலயும் இல்ல. உங்களோட அன்புதான் அதுல தெரியும். சோ…” என நிறுத்தினாள்.

அவளைப் பார்த்த ஷோபனா, “நீங்க இப்படி பேசுவீங்கன்னு எனக்குத் தெரியும். அதனாலதான் உங்களுக்கு பெஸ்டா எடுக்கணும்னு தோணுது. நீங்க அமைதியா இருங்க சந்தனா. ஸ்டாஃப் அவங்களோட வொர்க்கைப் பார்க்குறாங்க. அவ்வளோதான்…” என்ற ஷோபனா மூன்று புடவைகளை சலித்து எடுத்தாள்.

“இந்த மூனுல எதாவது ஒன்னை செலக்ட் பண்ணுங்க…” என அவள் கூற, சந்தனா எதை எடுப்பது எனத் தெரியாது தடுமாறினாள்.

“ஷோபி…நீங்களே ஒன்னை செலக்ட் பண்ணிடுங்களேன். எனக்கு எதை எடுக்கன்னுத் தெரியலை!” என்றாள்.

“ஹம்ம்… எனக்கும் இந்த மூனு சேரியும் பிடிச்சிருக்கு. உங்களுக்கு செட்டாகும்னு தோணுது. பேசாம மூனையும் எடுத்துக்குறீங்களா?” என உற்சாகத்துடன் கேட்டாள்.

“நோ… வேணாம் ஷோபி. ஒன்னு மட்டும் போதும்…” என அவள் மறுக்க, ரஞ்சன் அவர்கள் அருகில் வந்தான்.

“ஷோபி, ஜூஸ் எதுவும் வாங்கிட்டு வரவா உங்களுக்கு. பசங்களுக்கு எதாவது வாங்கிக் கொடுக்கலாம்னு கூட்டீட்டுப் போறேன்…” என அவன் வினவ,

“எனக்கு வேணாம்ங்க. சந்தனாவுக்கு ப்ரஷ் ஜூஸ் ஒன்னு வாங்கிட்டு வாங்க…” என்றவள்,

“ஒரு நிமிஷம் ரஞ்சன். இந்த மூனு சேரில ஒன்னு செலக்ட் பண்ணுறீங்களா? டாக்டருக்குத்தான். மூனுமே எனக்குப் பிடிச்சிருக்கு. எதை எடுக்கன்னுத் தெரியலை…” என்றாள்.

சந்தனாவை ஒரு நொடி திரும்பிப் பார்த்தவன், “அந்த லைட் க்ரீன் கலர் சேரி ஓகேவா இருக்கும்…” என்றவன், “அவங்களுக்குப் பிடிச்சிருக்கான்னு கேட்டுக்கோ ஷோபி…” என்றான்.

“நீங்க எதை செலக்ட் பண்ணாலும் அவங்க ஓகேதான் சொல்லுவாங்க…” என ஷோபனா செல்லக் கோபம்கொண்டு புடவையை எடுத்து தனியே வைத்தாள். ரஞ்சனுடன் சிறுவர்கள் வெளியே சென்று வந்தனர்.

ரஞ்சன் பொத்தலில் அடைக்கப்பட்ட பழச்சாற்றுடன் வந்தான். “பக்கத்துல எதுவும் ப்ரஸ் ஜூஸ் கிடைக்கலை ஷோபி…” என அவன் பொத்தலை நீட்ட,

“பரவாயில்லை ரஞ்சன்…” என சந்தனா புன்னகைத்தாள். குழந்தைகளுக்கு எடுத்தப் பின்னர் ரஞ்சனுக்கு எடுத்து முடிய மதியமானது. அடுத்து மூவரும் அருகேயிருந்த உணவகத்தில் உண்டுவிட்டு பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்தனர்.

வீட்டிற்குத் தேவையானவற்றை தேடி எடுத்துக் கொண்டிருந்தார்கள் பெண்கள் இருவரும். ரஞ்சன் குழந்தைகள் பகுதிக்குள் அஷ்வினையும் மனோவையும் அழைத்துச் சென்றுவிட்டான். இவர்கள் பேசிக்கொண்டே என்னென்ன வேண்டுமென ஆராய, சந்தனாவிற்கு பரிட்சயமான குரல் கேட்டது.

யோசனையாய் அவள் திரும்பிப் பார்க்க, நான்கு வயது சிறுவன் அவளது சேலையைப் பிடித்திழுத்திருந்தான். அவனைக் கண்டதும் இவளது முகம் மலர்ந்தது.

“பிரகா…” என்றவள் கையிலிருந்த கூடையைக் கீழே வைத்துவிட்டு அவனைத் தூக்கி இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டாள். அவனைப் பார்த்து பத்து மாதங்களிருக்கும். இப்போது அவன் வளர்ந்துவிட்டதாய் ஒரு எண்ணம். சில மனக்கசப்புகளைத் தவிர்க்கவே அவள் குழந்தையைக் காணச் செல்லவில்லை.

“சந்தும்மா…” என அவனும் இவளது கன்னத்தை எச்சில் செய்தான்.

“மிஸ் யூ சந்துமா… ஏன் நீங்க என்னைப் பார்க்க வரலை. பாட்டீ கூட உங்களை மிஸ் பண்றாங்க…” என்றவன் குரலில் இவளுக்கு உருகிவிட்டது.

“அச்சோ… தங்கத்தைப் பார்க்கலாம்னுதான் நினைச்சேன் டா. அம்மாவுக்கு கொஞ்சம் வேலை. அதான் வர முடியலை. இனிமே கண்டிப்பா வரேன்…” என்றாள் சிறுவனை சமாதானம் செய்யும்விதமாக. அவன் முகத்தைக் கோபத்தில் திருப்ப, இவளுக்கு முறுவல் பூத்தது‌.

“உங்கப்பா மாதிரியே பண்றடா நீ…” என சுகமாய் அலுத்தவள்,

“பிரகாவுக்கு கோபம் போக என்ன செய்யணும்? எத்தனை சாக்லேட் வாங்கித் தரணும்?” என வினவ,

சில நொடிகள் யோசித்தவன், “நிறைய சாக்லேட் வேணும் சந்துமா…” என்றான் கைகளை விரித்து. அதில் இவளுக்குப் புன்னகை பெரிதானது.

error: Content is protected !!
Scroll to Top