அன்பு 13.3

வந்ததும், “குட்டி… அசைமெண்ட் எழுதிக் குடு குட்டி. எனக்கு கை ரொம்ப வலிக்குது…” என்பான் இல்லாத கைவலியை உருவாக்கி.

“இங்கிலீஷ்ல இருக்கு மனோ… போ, எனக்குத் தெரியாது…” என அவள் மறுக்க,

“நான் எப்படி எழுதணும்னு சொல்றேன் குட்டி. நீ அதுபோல எழுது…” என ஏய்த்து அவளை வேலை வாங்குவான். இதுவே தொடர்கதையாகிப் போனது.

ஒவ்வொரு முறை பரிட்சை முடிந்து விடுமுறை கிடைத்ததும் தீனா இங்கே வந்துவிடுவான். அவன் வந்துவிட்டால் மனோவிற்குப் பொறாமை பொங்கி எழும். அவனது குட்டியை இவன் சொந்தம் கொண்டாட வந்துவிட்டான் என அவனை முறைத்துக் கொண்டே சுற்றுவான்.

மூவரும் சேர்ந்து விளையாடும் போது, “என் குட்டி, என் ஃப்ரெண்ட்…” என மனோ முனைக்க,

“அவ எனக்குத்தான் ஃப்ர்ஸ்ட் ஃப்ரெண்ட். உனக்கில்ல…” என தீனா ஒரு பக்கம் அவனை கடுப்பேற்றுவான்.

இருவரும் தென்துருவம் வடதுருவமாய் நிற்க, சந்தனா அவர்களை சமாதானம் செய்யத் திணறிப் போவாள். ஒருவழியாய் சமாதானம் செய்தும்விடுவாள். ஆனாலும் மறுமுறை தீனா வரும்போது புதிதாய் எதாவது சண்டை முளைக்கும்.

ஒவ்வொரு முறை தீனா வரும்போது இவளுக்கென்று எதையாவது எடுத்து வருவான். தாயிடம் கொடுத்த சத்தியத்திற்காக சந்தனா அவனிடம் எதையும் வாங்க மாட்டாள்.

மனோ தீனாவைப் பார்த்து அவளுக்கு எதாவது வாங்கி வருவான். தீனாவைக் கூட அவளால் எளிதில் சமாளிக்க முடிந்தது. மனோ அதிகம் பிடிவாதம் பிடித்தான். அதுவும் சந்தனாவிடம் அவனது பிடிவாதத்திற்கு எல்லையே இல்லாது போனது. வயதிற்கு மூத்தவன் அவன் என்றாலும், சந்தனாதான் அவனுக்காக அனைத்திலும் விட்டுக் கொடுத்துப் போவாள். பெரிய மனுஷியாய் அவனை அக்கறையாய்ப் பார்த்துக் கொள்வாள்.

மனோவுக்கு சந்தனா தனக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றொரு அடம் மனதிலிருக்கும். அதனாலே தீனா வந்ததும் அவன் முன்னே தன்னுடைய உரிமையை நிலைநாட்ட அவள் மடியில் உரிமையாய்ப் படுத்துக் கொள்வான். உணவை ஊட்டிவிடச் சொல்லுவான். அவளை வேலை ஏவுவான்.

தீனாவும் அவனுக்கு சளைத்தவன் இல்லை என்பது போல அவனும் அவளை வேலை வாங்கத் தயங்கவில்லை என்பதே உண்மை. ஆக மொத்தத்தில் சந்தனா அவர்கள் இருவருக்கும் கையெழுத்திட்டுப் பதியப்படாத சொத்தாகிப் போயிருந்தாள்.

இரண்டு வருடங்கள் வெகு சீக்கிரம் கடந்திருந்தது. தீனாவும் மனோவும் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க, சந்தனா எட்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருந்தாள்.

முன்பு போல விளையாட்டுத்தனமாய் இல்லாது சந்தனா கொஞ்சம் பொறுப்பாய் மாற ஆரம்பித்திருந்தாள். வயது மட்டுமின்றி அவளது சூழ்நிலையும் அவளது மனமுதிர்ச்சிக்கு காரணமாகியிருந்தது. காலையில் எழுந்ததும் பூரணிக்கு சமையலில் உதவுவது, தானே பள்ளிக்கு கிளம்பிச் செல்வதென ஓரளவிற்கு தாயின் சுமையைக் குறைக்கப் பழகியிருந்தாள்.

அவ்வப்போது எதாவது சமைக்கிறேன் என தாயிடம் அடம்பிடித்து சமையலில் அ, ஆ-வில் தொடங்கி இப்போது ஐ வந்திருந்தாள். அன்று சனிக்கிழமை பள்ளிவிடுமுறையாக இருக்க, இரவு சுட்ட சப்பாத்தியை முட்டை சப்பாத்தி செய்கிறேன் என இவள் தாயிடம் கேட்டு ஓரளவிற்குத் திருப்தியாய் செய்து முடித்திருந்தாள்.

“குட்டி… நல்லா செஞ்சிருக்க டி…” என பூரணி மகளைப் பாராட்ட, முகம் மலர்ந்தது சின்னவளுக்கு. அப்படியே ஒரு டப்பாவில் அடைத்துப் பைக்குள் திணித்துக் கொண்டாள். அவள் எது சாப்பிட்டாலும் மனோவிற்கு என மனம் தானாய்க் கேள்வியெழுப்ப, அவனுக்கென்று எடுத்துச் சென்றுவிடுவாள்.

சற்றே மெலிந்திருந்த உடல்வாகு வயதிற்கேற்ப கூடியிருக்க, மீசை அரும்பத் துவங்கியிருந்தது மனோவுக்கு. பதினாறின் துவக்கத்தில் இருந்தான். நன்றாய் விவரம் தெரிய ஆரம்பித்திருந்தது அவனுக்கு.

சந்தனா தாயுடன் எப்போதும் போல சதாம்பிகா வீட்டிற்குச் சென்றாள். மனோ இல்லையென்பதை வெறிச்சோடி கிடந்த வீடே பறைச்சாற்ற, அங்கேயே அமர்ந்துவிட்டாள்.

இப்போதெல்லாம் விடுமுறை நாட்களில் காலை ஆறுமணிக்கே எழுந்து நண்பர்களுடன் மட்டைப் பந்து விளையாடச் சென்றுவிடுவான். எட்டு மணிக்கு மேல் சந்தனாவைக் காண வருவான். அன்று எட்டு மணியைக் கடந்தும் அவன் வரவில்லை. சந்தனாவிற்கு பொழுதே நகரவில்லை. எல்லா செடி கொடிக்கும் போதும் என்ற அளவிற்குத் தண்ணீர் ஊற்றியவள், அமர்ந்துவிட்டாள்.

மூச்சு வாங்க மிதிவண்டியை ஓட்டி வந்த மனோ அதை நிறுத்த, இவள் எழுந்து அவனருகே சென்றாள்.

“எதுக்கு மனோ ஃபாஸ்டா வர்ற? மூச்சு வாங்குது பாரு. தண்ணி குடி…” எனத் தண்ணீர் பொத்தலை அவனிடம் நீட்டினாள்.

“இல்ல குட்டி… இன்னைக்கு மேட்ச் முடிய டைமாய்டுச்சு…” என மூச்சு வாங்க பதிலளித்தான். சதா இவன் குரலில் வெளியே எட்டிப் பார்க்க, வீட்டிற்குள்ளே சென்று பத்து நிமிடத்தில் குளித்து உடைமாற்றி வந்தான்.

“மனோ… சாப்பிட வாடா!” சதா உணவை எடுத்துவைத்து அழைக்க, “பசிக்கலை மா…” என அவன் வெளியே வர, சந்தனா ஆர்வமாய்க் காத்திருந்தாள். அவளருகில் பொத்தென அமர்ந்தவன், இயல்பாய் அவளது டப்பாவை எடுத்து உண்ணத் தொடங்கினான். அவன் முகத்தையே பார்த்திருந்தாள் சின்னவள்.

“என்ன குட்டி?” அவன் கேட்க,

“முட்டைச் சப்பாத்தி எப்படியிருக்கு மனோ? நான்தான் செஞ்சேன்…” என்றாள் ஆர்வமாய்.

“குட்டி… பொய் சொல்லாத. இது டேஸ்டா இருக்கே…” உண்டு கொண்டே அவன் கூற,

அவனை முறைத்தவள், “ப்ராமிஸா நான்தான் செஞ்சேன் மனோ. நம்ப மாட்டீயா?” எனக் கேட்டாள் உதட்டைச் சுழித்து. அவளது சத்தியத்திலே அவனுக்கு அவளது கூற்றின் உண்மை புரிந்தது.

இந்த சில வருடங்களில் அவள் சத்தியம் செய்தால் அது உண்மை என்றும், அதை மீற மாட்டாள் என்றும் மனோ அறிந்து வைத்திருந்தானே. அதை சில பல முறை அவனுக்கு சாதகமாகவும் பயன்படுத்திக் கொண்டான்.

“சரி… சரி. நான் நம்புறேன் குட்டி…” அவன் பேசும்போதே சதா குரல் கொடுத்தார்.

“மனோ, சாப்பிடதான் இல்ல. ஜூஸ் போட்டு வச்சிருக்கேன். அதை வந்து குடுச்சிட்டுப் போ டா…” அவர் அழைக்க,

“குட்டி… ஜூஸை வாங்கிட்டு வா…” என இவன் கூறிமுடிக்கும் முன்னே அவள் எழுந்து சென்று பழச்சாற்றை வாங்கி வந்திருந்தாள்.

“சாப்பிட்டு குடி மனோ…” சந்தனா கூற,

“இதுவே வயிறு ஃபுல்லாகிடுச்சு குட்டி. நீ கொஞ்சம் ஜூஸ் குடிச்சுட்டு குடு. நான் மீதியைக் குடிக்கிறேன்‌‌…” என்றான் அவன்.

“ஐயோ… இல்ல மனோ, ஜூஸ்ல ஐஸ் போட்டிருப்பாங்க. எனக்கு சளி புடிச்சிருக்கு. அம்மா திட்டுவாங்க, வேணாம் டா…” என்றாள் மறுப்பாய்.

மனோ எது கொடுத்தாலும் ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு காரணத்தைச் சொல்லி சந்தனா தட்டிக்கொண்டே இருந்தாள். அவனிடமிருந்து எதையுமே வாங்கி உண்ணவில்லை. முதலில் சிறு பையனாக இருந்ததால் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போதுதான் இதை கவனித்தான்‌.

“குட்டி… இதுல ஐஸ் போடலை. சர்க்கரை கம்மியா போட்டிருக்கு. அதனால உனக்கு பல்லும் வலிக்காது, சளியும் புடிக்காது. குடி…” என்றான் விடாப்பிடியாக. அவள் என்ன சொல்வதெனத் தெரியாது தடுமாறிப் போய் அவனைப் பார்த்தாள்.

“நான் குடுத்த எதையுமே நீ சாப்பிட்றதில்லை குட்டி. ஆனால், உன்கிட்ட மட்டும் டெய்லி நான் வாங்கி சாப்பிட்றேன்…” எனக் கூறியவன் கையில் மிச்சமிருந்த உணவை அவளிடம் திணித்தான்.

“இனிமே உன்கிட்ட நான் எதையும் வாங்கி சாப்பிட மாட்டேன்…” என்றான் கோபமாய். சந்தனா என்ன செய்வது எனத் தெரியாது அவனைப் பார்த்தாள்.

“ஏன் வாங்கி சாப்பிட மாட்ற. ஆன்ட்டி எதுவும் திட்டுனாங்களா?” அவன் சரியாய்க் கேட்க, இல்லையென தலையை அசைத்தாள்.

“பொய் சொல்லாத. நான் உங்கம்மாகிட்டே கேக்குறேன்!” மனோ எழ,

பதறிப்போய் அவன் கையைப் பிடித்தவள், “மனோ… அம்மாகிட்ட கேக்காத, என்னைத் திட்டுவாங்க. நானே சொல்றேன்…” எனத் தாய்க்கு சத்தியம் செய்து கொடுத்ததைக் கூறிவிட்டாள்.

“ச்சு… இதானா குட்டி. உங்கம்மா கையைப் பிடிச்சு தடவி காத்துல ஊதிடு. ப்ராமிஸ் அழிஞ்சு போய்டும்…” என்று இலகுவாகப் பதிலளித்தான்.

“போ மனோ… அதெல்லாம் தப்பு. அம்மா அப்புறம் வெளுத்துடுவாங்க” என்றாள் பயத்துடன்.

“அதெல்லாம் அடிக்க மாட்டாங்க குட்டி. நீ இந்த ஜூஸைக் குடி. நான் ஆன்ட்டிகிட்டே சொல்றேன்…”

“போ மனோ… நான் குடிக்க மாட்டேன்!” சந்தனா உறுதியாய்க் கூற, “அப்போ நான் உன் கூட இனிமே பேச மாட்டேன். நீ எது கொடுத்தாலும் வாங்க மாட்டேன்…” என்றவனை இவள் அதிர்ந்து பார்த்தாள்.

“மனோ… அப்படிலாம் சொல்லாத டா. நான் ஜூஸ் குடிச்சா அம்மா திட்டுவாங்க…” என்றாள் அழும் குரலில்‌.

“எனக்குத் தெரியாது. நீ இன்னைக்கு குடிக்கணும்!” அவன் விடாப்பிடியாக கூற, இவள் அசையவே இல்லை. கோபத்தில் அவன் எழுந்து சென்றுவிட, இவள் சோகமாய் அவனைப் பார்த்து நின்றாள்.

மாலை வேண்டுமென்றே இவள் வந்தது தெரிந்தும் அவன் வீட்டைவிட்டு வெளியே வரவே இல்லை. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை எப்போதும் போல மட்டைப் பந்து விளையாடச் சென்றுவிட்டான். சந்தனா அவனுக்காக காத்திருக்க, மனோ விரைவாய் வரவில்லை. வெண்டுமென்றே காலம் தாழ்த்தி வந்தான்.

அவன் வந்ததும், “மனோ… சாரி டா. அம்மாகிட்டே ப்ராமிஸ் பண்ணி கொடுத்துட்டேன். அதை என்னால அழிக்க முடியாது. என்கிட்ட பேசு மனோ…” என கலங்கிய குரலில் உரைத்தவளை சட்டை செய்யாது அவன் வீட்டிற்குள் சென்றுவிட, இவள் கண்ணீரோடு அவனைப் பார்த்தாள். மறுநாளும் சந்தனா அவனிடம் பேச முயற்சிக்க, மனோ பிடி கொடுக்கவில்லை.

செவ்வாய் கிழமை மனோ பள்ளிக்குத் தயாராகி வர, சந்தனா வரவேயில்லை. பூரணியும் அன்று விடுமுறை எடுத்திருந்தார். அவளைக் காணாது மனம் தவித்தாலும், மறுநாள் பார்த்துக் கொள்ளலாம் என்றுவிட்டான். அடுத்து வந்த மூன்று நாட்களும் அவர்கள் வராது போய்விட, இவனுக்கு அவளைக் காணாது நாளே செல்லவில்லை.

“ம்மா… குட்டி ஏன் வரலை? பூரணி ஆன்ட்டியும் வரலையேமா?” என சதாவிடம் கேட்க, “அவ இனிமே வரமாட்டா மனோ…” என்றார் அவர்.

அவர் பதிலில் அதிர்ந்தவன், “ஏன் மா… ஏன் வர மாட்டா?” எனத் தவிப்புடன் கேட்டான்.

“அதெல்லாம் உனக்கு எதுக்கு டா… ஸ்கூலுக்கு டைமாச்சு. போய் கிளம்பு…” என அவர் நகர்ந்திருக்க, இவனுக்கு எதுவுமே புரியவில்லை. சந்தனா படிக்கும் பள்ளிக்குத்தான் நேரே மிதிவண்டியை செலுத்தினான்.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top