அன்பு 13.2

“அவருக்கு நான்னா ரொம்ப பிடிக்கும் ஷோபி. என்னை மட்டுமே பிடிச்சிருந்தது. என் முகத்துல எப்பவுமே சந்தோஷம் இருக்கணும்னு நினைப்பாரு. இப்போ என் கூட அவர் இல்லைதான். பட், அவரில்லைன்னு என்னைக்குமே நான் தனிமையை ஃபீல் பண்ணதில்லை.
“அவர் என் கூடவே இருக்க மாதிரி எண்ணம். அவரோட வாழ்ந்த நாட்களெல்லாம் என் மனசுல இன்னும் இருக்கு. சாகுற வரைக்கும் இருக்கும் ஷோபி. நீங்க நினைக்கிற மாதிரி நான் இல்ல, ஐ மீன் எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதனால அவரோட நினைப்பு ரொம்ப வந்துடுச்சு. மத்தபடி ஐ’யம் ஓகே.”

“நான் அழுதா அவருக்குப் பிடிக்காது. சிரிச்சுட்டே இருக்கணும்னு சொல்லுவாரு. அவருக்காகவே என்னை நான் சந்தோஷமா வச்சுப்பேன். மனோ இருக்கான், எனக்கு அவன் அவனுக்கு நான், அப்புறம் லட்சுமி அம்மான்னு சந்தோஷமா இருக்கேன் நான். நீங்க என்னைப் பத்திக் கவலைப்படாதீங்க!” என்றாள் தன்னை மீட்டுக் கொண்ட பாவனையில். இத்தனை நேரமிருந்த கலக்கம், சோர்வெல்லாம் நீங்கியிருந்தது. முகம் தெளிய, உதடுகளில் நீண்ட நாளைக்குப் பின்னர் புன்னகை படர்ந்தது.

“உங்க மனசு போல சீக்கிரம் நல்லது நடக்கும் டாக்டரம்மா. உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா என்கிட்ட சொல்லுங்க. தனியா இருக்கோம்னு ஃபீல் பண்ணா, ஒரு கால் பண்ணுங்க. நான் வரேன், இல்ல நீங்க நம்ம வீட்டுக்கு வாங்க…” என்றாள் அன்பான குரலில்.

ஒரு நொடி சந்தனாவின் மனம் அந்த அன்பில் நனைந்து போனது. “தேங்க் யூ ஷோபனா… தேங்க் யூ சோ மச்!” என்றவளின் குரல் லேசாய் நெகிழ்ந்திருந்தது.

“நீங்களே உங்க தேங்க்ஸை வச்சுக்கோங்க. என்னமோ தெரியலை உங்க முகத்துல சந்தோஷத்தைப் பார்க்கணும்னு ஆசையா இருந்துச்சு. டெய்லி காலைல கண் முழிச்சதும் அவர் ரூமைப் பார்த்து, போட்டோஸ் பார்த்து ஸ்மைல் பண்ணிட்டேதான் எழுந்திருப்பாரு. அந்த ஸ்மைலுக்கு ப்யூர்லி நீங்கதான் காரணம் சந்தனா”

“அவர் சிரிச்சிட்டே இருந்தா, என்னோட நாள் ரொம்ப சந்தோஷமா போகும். எங்க எல்லாரோட சிரிப்புக்கும் காரணமான உங்க முகத்துல ஒரு ஸ்மைலைப் பார்க்கணும்னு ஆசை. சீக்கிரம் பார்ப்பேன்…” என்ற ஷோபியின் பதிலில் சந்தனா முகத்தில் முறுவல் பூத்தது. இருவரும் அப்படியே படிகளில் ஏறி அவரவர் தளத்தை அடைந்தனர்.


சந்தனா புத்தகத்தை மடியில் வைத்தவாறு வாயிலை ஒட்டி அமர்ந்திருந்தாள். அவளது முகத்தில் கவலையும் பயமும் அப்பிக் கிடந்தது. விழிகளைப் புத்தகத்தில் வைத்திருந்தாலும் அவளது செவிகள் என்னவோ அறைக்குள்ளேதான் இருந்தன.

“என்னால முடியாதுங்க. கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்க வைக்கவா ஒத்தப் புள்ளையைப் பெத்து வளர்க்குறேன். அதுவும் அந்த ஸ்கூல்ல டீச்சர்ஸ் என்னைக்காவது ஒழுங்கா க்ளாஸ்க்கு வர்றாங்களா? பாதிநாள் ஸ்கூல் பசங்க வெளியேதான் திரிவாங்க. அப்படி இருக்க ஸ்கூல்ல போய் இவனை சேர்த்துவிடச் சொல்லி அடம்புடிக்குறான். நீங்களும் அமைதியா இருக்கீங்க?” சதாம்பிகா கோபத்தில் இரைய, மனோ கண்ணில் வழியும் நீரோடு தாயை முறைத்துப் பார்த்தான்.

உமாநாதனுக்கும் மகனை அரசுப் பள்ளியில் சேர்க்க துளிகூட விருப்பமில்லை. ஆனால், அவன் ஒரு மாதமாக அவரிடம் பேசி கெஞ்சி கரைத்திருக்க, மனைவி அசைவதாய் தெரியவில்லை. சதாவின் ஆதங்கமும் அவரளவில் சரிதானே. உமாநாதன் மகனை முடியாது என்பது போல பார்க்க, அவன் விழிகள் மேலும் கலங்கின.

“ப்பா… ப்ளீஸ் பா, நானும் சந்தனா படிக்கிற ஸ்கூலுக்கே போறேன் பா. அவ என்னைப் பத்திரமா பார்த்துப்பா பா…” என்றான் கடைசி முயற்சியாக. குரல் முழுவதும் கெஞ்சல்தான்.

“மனோ… அந்த ஸ்கூல் போய் படிச்சா, நீயும் அந்தப் பசங்க மாதிரியாகிடுவ. கொஞ்சம் கூட டிசிப்ளின் இல்லாம போய்டும். உன்னோட படிப்பே வீணாகிடும். இனிமே அந்தக் ஸ்கூல்ல சேர்த்துவிடுங்கன்னு கேக்காத. உடம்பு சரியில்லாத பையன்னு கூடப் பார்க்க மாட்டேன்…” என்றைக்காவது ஒருநாள் சதா மகனிடம் கோபப்பட்டு பேசுவது உண்டு.

ஆனால், இப்போது அவரது குரலில் எரிச்சலும் இருந்தது. வருடா வருடம் லட்சக் கணக்கில் செலவு செய்து பையனைப் பெரிய தனியார் பள்ளி ஒன்றில் படிக்க வைத்துக் கொண்டிருக்க, இவன் அரசுபள்ளியில் சேர்த்துவிடுங்கள் என்கிறானே என அவருக்கு ஏக எரிச்சல் மூண்டது. சந்தனாவோடு அவனைப் பழகவிட்டது தவறென மூளைக் கூறியது.

“மனோ… அம்மா சொல்றதும் சரிதான் டா. இவ்வளோ நாள் இங்க படிச்சிட்டு அங்கப் போய் மீடியம் மாறும், க்ளாஸ் என்விரான்மெண்ட் எல்லாமே மாறும். உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் டா. இங்கேயே படி…” என உமாநாதன் அவன் கையைத் தொட, வெடுக்கெனக் கோபத்தில் அவர் கரத்தைத் தட்டிவிட்டவன் விறுவிறுவென வெளியே நடந்தான்.

சந்தனா அவன் வெளியே வந்ததும் அவனருகே செல்ல, அவர்களது ஆஸ்தான கட்டிலில் சென்று இவன் அமர்ந்தான். கண்களில் கண்ணீர் வழிந்தது. என்ன செய்வதெனத் தெரியாது தானும் கலங்கிப் போய் அவனைப் பார்த்திருந்தாள்.

அந்த வருடம் முடிந்து அடுத்தக் கல்வியாண்டு துவங்கியிருந்தது. சந்தனா ஆறாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருந்தாள். மனோ இப்போது ஊன்று கோல் உதவியில்லாது சிறப்புக் காலணி அணிந்து தனியாய் நடக்கப் பழகியிருந்தான்.

உடல்நிலையை சோதித்த மருத்துவர், அவன் தாராளமாய் பள்ளிச் செல்லலாம் என கூறிவிட, நாளை திங்கட்கிழமை சென்று பள்ளியில் மகனை எட்டாம் வகுப்பு சேர்த்துவிடலாம் எனப் பெற்றவர்கள் முடிவெடுத்திருந்தனர்.

ஏற்கனவே அவன் படித்த பள்ளிதான் அது. ஒரு வருடம் இவனது உடல்நிலையைக் காண்பித்து வர இயலாது என முன்பே பெற்றவர்கள் கூறி அனுமதி வாங்கியிருந்தனர்.

அவன் ஒரு வயது அதிகம் இருந்தப் போதும், எட்டாம் வகுப்பில்தான் சேர வேண்டிய கட்டாயம். அதெல்லாம் மனோவுக்குப் பெரிதாய் தெரியவில்லை.

குட்டியும் அவனும் ஒரே பள்ளியில் பயில வேண்டும் என்று அவனுக்கு ஆசையாயிருக்க, அதனாலே தாய் தந்தையிடம் கேட்டு அடம்பிடித்துக் கெஞ்சிக் கொண்டிருந்தான். ஆனால், அவர்கள் இவன் வார்த்தைக்கு செவி சாய்க்கவில்லை. அதனாலே கோபமாய் தந்தை கையைத் தட்டிவிட்டு வந்தான்.

சந்தனா அவனருகே அமர்ந்தாள். மனோ அவளது மடியில் படுத்து முகத்தைப் புதைத்துக் கொண்டான். அவன் அழுகிறான் என்பதை உணர்ந்தவள், “மனோ, அழாத டா. மேடம் சொன்னாங்க இல்ல, எங்க ஸ்கூல் உங்க ஸ்கூல் அளவுக்குப் பெருசுல்ல. டீச்சர் வரமாட்டாங்க. வந்தாலும் அடிப்பாங்க தெரியுமா? நீ உன் ஸ்கூலுக்கே போ…” என்றாள் அவனை சமாதானம் செய்யும் விதமாக. பொய்தான் கூறினாள். மனோ அழுவதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன் நண்பனின் கண்ணீரில் அவளுக்கும் அழுகை வந்தது.

மனோ அப்படியே படுத்திருந்தான். சந்தனா எதையோ பேசி அவனை சமாதானம் செய்தாள். அவன் உணவு உண்ணாதது நினைவு வர, “மனோ, நீ சாப்பிடலை இல்ல. பசிக்கும், என் டப்பால இருக்க சோறை சாப்டுறீயா?” எனக் கேட்டாள்.

“எனக்கு வேணாம்…” அவன் குரல் தெளிவில்லாது வந்தது.

“மனோ… தக்காளி சோறு எடுத்துட்டு வந்தேன். கொஞ்சம் சாப்பிடு மனோ…” என இவள் உணவை அவனுக்கு ஊட்ட, கண்ணைத் துடைத்துக்கொண்டு அமைதியாய் உண்டான். இருவருக்குமே அன்று விளையாட விருப்பமில்லை. அமைதியாய் அமர்ந்திருந்தனர். சந்தனா ஆறாம் வகுப்பில் நுழைந்து ஒரு வாரம் கடந்திருக்க, மனோவின் உடல்நிலையை மருத்துவரிடம் கேட்டறிந்தப் பின்னரே பள்ளியில் சேர்க்க வேண்டுமென அவனது பெற்றவர்கள் தாமதித்து இருந்தனர்.

அவன் கண்ணில் வழிந்து காய்ந்திருந்த நீரைத் தன் துப்பட்டாவால் துடைத்துவிட்டவள், “மனோ… அழாத டா. நம்ப வீட்ல விளையாடலாம். நான்தான் டெய்லி வருவேன் இல்ல?” என அவனை சமாதானம் செய்து இயல்புக்கு கொண்டு வந்தப் பிறகே சந்தனா விடைபெற்றாள்.

மறுநாள் பெற்றவர்களுடன் சென்று மனோ முன்பு படித்தப் பள்ளியிலே எட்டாம் வகுப்பு சேர்ந்திருந்தான். அவனுடைய நண்பர்கள் எல்லாம் ஒன்பதாம் வகுப்பிலிருக்க, அவனால் புதிய நண்பர்களை எளிதில் ஏற்க முடியவில்லை. புதிய வகுப்பும் பிடிக்காதது போலொரு எண்ணம். அதனாலே தாய் தந்தையிடம் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு சுற்றினான்.

சிறிது நாட்களில் அவனே சரியாகிவிடுவான் என பெற்றவர்கள் விட்டுவிட்டனர். கொஞ்சம் கொஞ்சமாக புதிய நண்பர்கள், புது வகுப்பு என அவன் அனைத்தையும் ஏற்கும் மனநிலைக்கு வந்திருந்தான்.

இன்னும் சரியாய் நடக்க முடியவில்லை அவனால். ஒரு வருடம் சிறப்பு காலணி அணிய வேண்டும் என மருத்துவர் கூறியிருக்க, மற்றவர்கள் விளையாடுவதை இவன் வேடிக்கை மட்டும் பார்ப்பான்.

ஆனால், சந்தனாவுடன் இருக்கும்போது இருவரும் சேர்ந்து விளையாடினர். அவனுக்காகவென அவள் மெதுவாய் நடப்பாள். அவனால் என்ன விளையாட முடிகிறது என யோசித்து செயல்படுவாள். அவன் உட்கார்ந்து கொண்டே அது இதுவென எத்தனை வேலை வாங்கினாலும் சலிக்காமல் செய்தாள்.

இப்போதெல்லாம் மனோவின் வீட்டுப் பாடங்கள் அனைத்தும் சந்தனாவிற்குப் பாத்தியப்பட்டதாகியிருந்தன. அவன் எதுவுமே செய்யாது வெறும் வாய் வார்த்தையாக மட்டுமே கூறுவான். இவள் அவனுக்காக எழுதுவது, படம் வரைவது என அனைத்தையும் செய்து கொடுப்பாள்.

ஆங்கிலம் புரியாது அவள் தடுமாறுகையில் இவன் உதவிக்கரம் நீட்டுவான். காலை எட்டு மணிக்கு மனோ பள்ளிக்கு கிளம்பிவிடுவதால் அவர்களது காலை நேர விளையாட்டு அருகிப் போனது.

அவனுக்கு கால் குணமாகும் வரை பள்ளிப் பேருந்தில்தான் சென்றுவர வேண்டும் என்று சதா கண்டிப்புடன் கூறியிருக்க, வேறு வழியின்றி சம்மதித்திருந்தான் மகன்.

முன்பெல்லாம் தாத்தாவும் அவனும் இருசக்கர வாகனத்தில் செல்வார்கள். அவன் தாத்தா இவனை பள்ளிக்கு காலை அழைத்துச் சென்று விட்டுவிட்டு வருவார். மாலை சரியாய் பள்ளிமுடியும் நேரம் வந்து காத்திருப்பார். அதனால் பெற்றவர்களுக்குப் பயமில்லாமல் இருந்தது. ஆனால், இப்போது அவன் உடல்நிலையையும் கருத்தில்கொண்டு ஒரு வருடம் தனியாய் செல்ல அனுமதி மறுத்திருந்தனர்.

மாலை பள்ளி முடிந்து சந்தனா வந்து அவளது வீட்டுப் பாடங்களை செய்து கொண்டிருப்பாள். மனோ சற்று தாமதமாகத்தான் வருவான்.

error: Content is protected !!
Scroll to Top