வேலை முடித்து வந்த ரஞ்சன் அலுப்புத் தீரக் குளித்துவிட்டு தலையை துவட்டியபடியே வெளியே வர, அவனது விழிகள் பால்கனியில் நிலைத்தன. புதிதாய் முளைத்திருந்த வெள்ளை ரோஜா செடியைப் பார்த்ததும் இவனது அதரங்களில் முறுவல் பூத்தது. அதனருகே சென்று நின்றவன், “ஷோபி, வொய்ட் ரோஸ் எனக்குத் தெரியாம வாங்குனீயா?” எனக் கேட்டான்.
சமையலறையில் இருந்தவள் எட்டிப் பார்த்தாள். “இல்ல ரஞ்சன், இது சந்தனா கொடுத்தாங்க. அவங்க வீட்ல வச்சிருந்தாங்க. டைம்க்கு தண்ணீ ஊத்த முடியலை. வாடிப் போகுது, நீங்களே எடுத்துட்டுப் போங்கன்னு சொன்னாங்க. ஓகேன்னு எடுத்துட்டு வந்துட்டேன்...” பதிலளித்தாள்.
“ஓ…” என உதட்டைக் குவித்துக் கேட்டுக் கொண்டான் இவன்.
“பாவம்ங்க… ஃபீவர் போல சந்தனாவுக்கு. ரொம்ப டல்லாகிட்டாங்க. அவங்களுக்கு வேற ஏதோ மனசுல கஷ்டம் இருக்கோ, என்னவோ? முன்ன மாதிரி சிரிக்கவே மாட்றாங்க. எப்பவுமே ஏதோ யோசனையாவே இருக்காங்க!” என்றாள் வருத்தமான குரலில். ரஞ்சன் அமைதியாய் அவளது பேச்சை அவதானித்தான்.
“யெஸ் ஷோபி, நான் கூட அதை ஃபீல் பண்ணேன். அவங்க முகத்துல, சிரிப்புல ஏதோ மிஸ்ஸிங். அவங்க ஹஸ்பண்டை ரொம்ப மிஸ் பண்றாங்க போல!” என்றான்.
“இருக்கும்ங்க. சீக்கிரம் ரெண்டு பேரும் சமாதானம் ஆனா சரி…” என இவள் பெருமூச்சுவிட்டாள். இவன் அவளிடம் தன் பிறந்தநாளன்று பேசியதைப் பகிர, ஷோபனாவும் சந்தனாவின் கணவனைப் பற்றி யோசிக்கலானாள்.
ரஞ்சனுக்கு அவர்களுக்கு இடையே சண்டை இருக்குமென துளியளவும் தோன்றவில்லை.வேறு ஏதோ காரணமென யோசித்தாலும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் தான் தலையிட முடியாது என்ற எண்ணத்தோடு நகர்ந்தான்.
மேலும் இரண்டு நாட்கள் கடந்திருந்தன. அன்று ஷோபனா மகனைப் பள்ளிப் பேருந்தில் ஏற்றிவிடுவதற்காக கடகடவென படிகளில் இறங்கினாள். இன்னும் இரண்டு நிமிடத்தில் பேருந்து வந்துவிடும். நேர தாமதத்தை எண்ணி விரைவாய் இறங்கினாள்.
கடந்த ஓரிரண்டு நாட்களாக மின்தூக்கிவேறு இயங்கவில்லை. சரிசெய்வதாய் பொறுப்பாளர் உரைத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எண்ணிக் கொண்டே அவள் கீழே இறங்க, சந்தனா மேலேறி வந்தாள். அன்று அவளுக்கு இரவு நேரப்பணி. மாதத்தில் இரண்டு நாட்கள் சுழற்சி முறையில் ஒவ்வொரு மருத்துவர்களும் இரவு நேரப் பணிபுரிவர்.
அன்று சந்தனாவுடைய முறை. தூங்காத விழிகள் லேசாய் சிவந்திருக்க, அதை மூக்குக் கண்ணாடியில் மறைத்திருந்தாள். எப்போதாவது தலைவலித்தால் கண்ணாடியை பயன்படுத்துவது உண்டு. தூக்கமில்லாத இரவு லேசாய் தலைவலியை உண்டு பண்ணியிருந்தது.
முகம் அப்பட்டமாய் சோர்வைக் காண்பித்தது. இவள் அவளைக் கவனிக்காது கடந்து செல்ல முற்பட, ஷோபியின் நடை நிதானப்பட்டது.
“இப்போ ஹெல்த் எப்படி இருக்கு சந்தனா. ஹோப் யூ பெட்டர் நவ்?” என அவள் அக்கறையாய் வினவ, இவள் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தாள். நான் நன்றாய் இருக்கிறேன எனக் கூற முயன்ற புன்னகையில் சர்வநிச்சயமாய் உயிர்ப்பில்லை. ஏன் இந்தப் பெண் பொய்யுரைக்கிறாள் என அவளுக்கு யோசனையானது.
கண்கள் உள்ளே சென்றிருக்க, கருவளையம் சூழ்ந்திருந்தது. இரண்டு நாட்கள் முன்பு பார்த்ததை விட, இன்னுமே சோர்ந்து தெரிந்தாள் பெண். அவளது பார்வைக் கொடுத்த சங்கடத்தில், “என்னாச்சு ஷோபி?” எனக் கேட்டாள் இவள்.
“டூ மினிட்ஸ் சந்தனா…” என்ற ஷோபனா லட்சுமி அம்மாவிடம் அஷ்வினையும் மனோவுடன் சேர்த்து பத்திரமாய்ப் பள்ளிப் பேருந்தில் ஏற்றிவிடக் கூறிவிட்டு இவளருகே விரைந்தாள். சந்தனா அமைதியாய் இவளைப் பார்த்தவாறு நின்றிருந்தாள்.
“நிஜமா நல்லா இருக்கீங்களா சந்தனா?” ஷோபனா அவளது முகத்தை ஊன்றிப் பார்த்தவாறு கேட்க, இவளிடம் சில நொடிகள் கனத்த அமைதி.
அதை விழுங்கியவள், “ஹம்ம்…” எனத் தலையை அசைத்தாள்.
“நீங்க ஓகே இல்லையோன்னு தோணுது சந்தனா. ரெண்டு நாள் முன்னாடி பார்த்ததை விட இப்போ ரொம்ப டயர்டா தெரியுறீங்க. அஸ் அ ஃப்ரெண்டா உங்களை நினைச்சு வருத்தமா இருக்குங்க. நீங்க உங்க ஹெல்த்தை சரியா கவனிக்கிறது இல்லையா?” எனக் கேட்டவள் குரல் முழுவதும் அவள் உடல் நலத்தின் மீதான கரிசனமும் அக்கறையும் கொட்டிக் கிடந்தன.
அதை சிந்தாமல் சிதறாமல் உள்வாங்கியவள், சோபையாய்ப் புன்னகைத்தாள். “தேங்க் யூ ஷோபி. ரொம்ப நாள் கழிச்சு இப்படி கன்சர்னா வார்த்தையைக் கேட்குறேன். பட் டோன்ட் வொர்ரீ, ஐ கேன் டேக் கேர் மை செல்ஃப். நைட் ஷிஃப்ட் முடிச்சிட்டு வந்ததால பார்க்க டல்லா இருக்கேன். மத்தபடி ஐ’யம் ஓகே…” என்றாள் எதிரிலிருப்பவளை சமாதானம் செய்யும்விதமாக.
இருந்தும் ஷோபிக்கு மனம் கேட்கவில்லை. “சாரி சந்தனா, உங்ககிட்டே நான் அட்வான்டேஜ் எடுத்துக்கிறேன்னு நினைக்க வேண்டாம். நான் ஒன்னு சொன்னா கேட்பீங்களா?” தயங்கியபடியே கேட்டாள். சந்தனா புரியாது அவளை நோக்கினாள்.
“உங்க ஹஸ்பண்ட்கிட்டே ஒரு டைம் நீங்கப் பேசலாம் இல்ல ?” எனக் கேட்டவள் குரலில் சந்தனா முகத்திலிருந்த புன்னகை கரையத் தொடங்க, பார்வையை அவளிடமிருந்து அகற்றிவிட்டாள். அருகேயிருந்த செடி கொடியென விழிகள் அலைபாய்ந்தன.
அவள் முகத்தையே பதிலுக்காகப் பார்த்திருந்த ஷோபனா, “சந்தனா…” என அழைத்தாள். சில நொடிகள் காக்க வைத்தே அவளிடம் பார்வையைப் பதித்தாள் இவள்.
“ஹம்ம்… எனக்குத் தோணலை ஷோபி!” என்றாள். குரலில் என்ன இருந்தது என ஷோபிக்குத் தெரியவில்லை. ஆனாலும் அவள் கண்களில் இருந்தது சோகமா? ஆற்றாமையா? எதுவெனப் பிரித்தரிய முடியாத போதும், இவளுக்கு கவலை அப்பியது.
“பேசக் கூட முடியாத அளவுக்கு அவர் மேல கோபமா? அவரை வெறுத்துட்டீங்களா நீங்க?” என்ற கேள்வியில் இவளது உதடுகள் மெதுவாக விரிந்தன.
அதிராமல் புன்னகைத்தவள், “இந்த ஜென்மத்துல நானே நினைச்சா கூட அவரை வெறுக்க முடியாது ஷோபி…” என்றாள். குரலில் நேசம் ததும்பி வழிந்தது.
அதை உணர்ந்தவள், “இந்த அளவுக்கு அவரை நேசிக்குற நீங்க ஏன் ஒரு முயற்சி பண்ணக் கூடாது சந்தனா. எனக்கும் ரஞ்சனுக்கும் இடையில சண்டை வரலைன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆரம்பத்துல ஒரு சில சண்டை வந்தது. முதல் தடவை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு தெரியாம தடுமாறுனோம்…”
“பட், அடுத்தடுத்து சண்டை வந்தா, நானோ அவரோ இறங்கி வந்து பேசிடுவோம். ப்ராப்ளம் அப்போவே சால்வ் ஆகிடும் சந்தனா. அதை நினைச்சுத்தான் நானும் அவர்கிட்ட உங்களைப் பேச சொல்றேன். ஐ க்நோ, இது உங்களோட பெர்சனல். பட், உங்களை, உங்க முகத்தைப் பார்த்து எப்படியோ போன்னு விட முடியலை என்னால.”
“நீங்க தப்பா நினைச்சாலும் பரவாயில்லைன்னுதான் பேசுறேன் சந்தனா. என்னைத் திட்டுனா கூட ஐ டோண்ட் கேர். உங்க ஹஸ்பண்ட்கிட்டே ஒரே ஒரு தடவை மனசுவிட்டுப் பேசுங்க…” என ஷோபனா கூற, சந்தனா அவளை வெறுமையாய்ப் பார்த்தாள்.
என்ன பதிலளிப்பது எனத் தெரியாது மனம் மெதுவாய் உடைந்தழ தயாராக, “என்னால முடியல ஷோபி…” என்றாள். குரல் கொஞ்சமே கொஞ்சம் கலங்கியிருந்தது போல. இத்தனை நேரம் முடியும் என்றிருந்த எண்ணம் எதிரிலிருப்பவளின் பேச்சில் லேசாய் உடைந்தது.
“டாக்டரம்மா…” என அவளைப் பிடித்து அருகேயிருந்த கல்மேஜையில் அமர வைத்தாள் ஷோபனா.
“ஏன் பேச முடியலை. நான் வேணா உங்களுக்காக அவர்கிட்டே பேசவா?” என இவள் அக்கறையாய்க் கேட்க, சந்தனா தலையை இடம் வலமாக வேண்டாம் என அசைத்தாள்.
“சில இடத்துல பேசுனா பிரச்சனை சால்வ் ஆகும் ஷோபி. பட், சம்டைம்ஸ் அமைதியா இருந்தா பிரச்சனையை அவாய்ட் பண்ணலாம்…” என்றாள் வருத்தம் மிகுந்தக் குரலில். ஷோபனா அவளை வேதனையுடன் பார்த்தாள்.
“எனக்கும் அவருக்கும் இடையில யாரு வந்தாலும் அவருக்குப் பிடிக்காது ஷோபி. ரொம்ப பொசசீவ் அவரு…” சந்தனா கூறும்போது அவளது முகமும் குரலும் அவளவனின் மீதான நேசத்தில் தோய்ந்து வந்தது. மற்றவள் அமைதியாய்ப் பார்த்தாள்.