“குட்டி… அப்போ நான் பெரிய பையனா வளர மாட்டேனா? எங்க வீட்டு அரிசி சின்னதா இருக்கே…” என இவன் எழுந்து நிற்க, சந்தனாவும் அவனருகே வந்து நின்றாள். அவன் இவளை விட உயரமாய் இருந்தான்.
“மனோ… நீதான் ஏற்கனவே பெரிய பையனா இருக்கீயே. அதனால சின்ன அரிசி சோறே சாப்பிடு. நான் பெரிய அரிசி சோறு சாப்ட்டு, உன் ஹைட்டுக்கு வந்துடுறேன். ரெண்டு பேரும் ஒரே ஹைட்ல இருப்போம்…” என அவள் கூற, அவனும் ஒப்புக்கொண்டான்.
அவன் உண்டு முடித்ததும் டப்பாவைக் கழுவி வைத்தவள், “மனோ… இங்கிலீஷ் மிஸ் டெஸ்ட் வைப்பேன்னு சொன்னாங்க. எனக்கு எதுவுமே புரியலை. எதாவது கேட்டா, மிஸ் க்ளாஸ் கவனிக்கலைன்னு திட்டுறாங்க. நீ சொல்லித் தரீயா?” எனப் புத்தகத்தை விரித்து வைத்தாள்.
“சரி குட்டி… நானே சொல்லித் தரேன்…” என இவன் அவளுக்குப் புரியும்படி விளக்கினான். சந்தனாவிற்கு அப்போதும் தெளிவாய்ப் புரியவில்லை. சரியென்று கேட்டுக் கொண்டாள்.
அந்த வாரம் முழுவதும் சந்தனாவுக்கு அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற, மாலை முழுவதும் படித்தாள். மனோ அவளுக்கு உதவினான். சிறிது நேரம் விளையாட்டிற்கு ஒதுக்கினர்.
அந்த வாரயிறுதி தீனா வந்துவிட்டான். பத்து நாட்கள் அவனுக்குத் தேர்வு விடுமுறை கிடைத்திருந்தது. சந்தனாவிற்கும் பள்ளி விடுமுறைதான். மூவரும் சேர்ந்து விளையாடினர்.
தீனா வரும்போது வீட்டிலிருந்து அவளுக்கு விளையாட்டுப் பொருட்கள், இன்னட்டுகள் என நிறைய எடுத்து வந்திருந்தான். இவள் ஏதோ பொய்க் கூறி அது எதையும் வாங்கவில்லை. அவன் கோபித்துக் கொள்ள, ஒருவழியாய் சமாதானம் செய்து முடிய, மூவரும் கண்ணைக் கட்டிக்கொண்டு கண்ணாம்பூச்சி விளையாண்டனர். ஒருமுறை சந்தனா கண்ணைக் கட்டிக் கொள்ள, மறுமுறை தீனா கண்ணைக் கட்டிக் கொண்டான்.
“குட்டி… இப்போ மனோ கண்ணைக் கட்டலாம்…” தீனா அவனருகே செல்ல,
“தீனா… மனோவுக்குப் பதிலா நானே கண்ணைக் கட்டிக்கிறேன். அவன் பாவம், கால் வலிக்கும். எங்கேயும் கால் இடிச்சிடும்!” என இவளே அவனுக்குப் பதில் கண்ணைக் கட்டிக் கொண்டாள்.
மறுமுறை தீனா கண்ணைக் கட்டவில்லை. “குட்டி… மனோக்கு பதிலா நீதானே கண்ணைக் கட்டிக்கிட்டே. இப்போ எனக்குப் பதிலாவும் நீயே கட்டிக்கோ…” என்றான் அவன்.
“தீனா… போ, நான் மாட்டேன்!” கையிலிருந்த துணியை அவனை நோக்கி எறிந்தாள் சந்தனா.
“குட்டி, அப்போ அவன்தானே உன் ஃப்ரெண்ட். அவனுக்காக மட்டும்தான் நீ செய்வ. நான் உன் ஃப்ரெண்ட் இல்லையா?” அவன் கோபம் கொள்ள, சந்தனா விழித்து நின்றாள்.
“தீனா… பாவம் குட்டி. எத்தனை தடவை கண்ணைக் கட்டுவா. இந்த டைம் நீ தான் கட்டணும்!” மனோ சந்தனாவிற்கு ஆதரவு தெரிவித்தான்.
“நீ போ டா… நான் குட்டிகிட்டதான் கேக்குறேன். உனக்கு பதிலா பண்ணா இல்ல, எனக்கும் பதிலா அவளே கண்ணைக் கட்டிக்கிடட்டும்…” தீனா அடமாய் நிற்க, மனோ அவனை முறைத்துப் பார்த்தான்.
தன்னால் சண்டை வேண்டாம் என நினைத்தவள், “விடு மனோ… நானே கண்ணைக் கட்டிக்கிறேன்…” எனத் துணியை எடுத்து வந்து தீனாவிடம் கொடுத்தாள். அவன் இவளது கண்ணை இறுக கட்டிவிட்டான்.
சந்தனா அங்கிங்கு தேடி மனோவின் கையைப் பிடித்தாள். “அவுட்டே… மனோ அவுட்டே…” என அவள் கூறிக் கொண்டே கண்கட்டை அவிழ்க்க, “குட்டி… போதும். போய் உக்காரலாம்!” என்றான் அவன்.
“என்னாச்சு மனோ… கால் வலிக்கிதா உனக்கு. வா, நம்ப உக்காரலாம்…” என அவனை கொட்டகைக்கு அழைத்துச் சென்று கட்டிலில் அமர்த்தியவள், அவன் காலை மெதுவாகப் பிடித்துவிட்டாள்.
சில நிமிடங்களிலே அவளருகே அமர்ந்த தீனா, “குட்டி… எனக்கும் கால் வலிக்குது. என் காலையும் அமுக்கிவிடு…” என அவள் மடியில் காலைத் தூக்கி சட்டமாய் வைத்தான்.
“தீனா… அவ மேலருந்து காலை எடு. குட்டி உனக்கு காலை அமுக்கிவிட மாட்டா…” மனோ வெடுக்கென அவனது காலைத் தட்டிவிட்டான்.
“குட்டி… எனக்கு காலை அமுக்கிவிடுவீயா? மாட்டீயா?” அவன் இவளிடம் கோபமாகக் கேட்க, “அவ அமுக்கிவிட மாட்டா…” என மனோவே பதில் கொடுத்தான்.
“குட்டி… உனக்கு மனோவை மட்டும்தான் புடிக்குமா? அவனுக்கு மட்டும்தான் காலை அமுக்கி விடுவியா?” தீனா கோபமாய்க் கேட்டான்.
“தீனா…இல்ல, இல்ல. உனக்கும் காலை அமுக்கிவிடுறேன்…” என அவள் பதிலளிக்க, மனோ அவளைத் தன்புறம் பிடித்திழுத்தான்.
“குட்டிக்கு என்னை மட்டும்தான் புடிக்கும். எனக்கு மட்டும்தான் அவ காலை அமுக்கிவிடுவா…” மனோ தீனாவைப் பார்த்து கூற, அவனுக்கு ரோஷம் வந்துவிட்டது.
“குட்டி… மனோவுக்கு முன்னாடி நான்தானே உனக்கு ஃப்ரெண்டானேன். அப்போ என்னைதானே உனக்கு ரொம்ப புடிக்கும். அவனைப் புடிக்காதுதானே?” பொறாமையாய்க் கேட்டான். சந்தனா அவர்கள் இருவரையும் பார்த்து என்ன செய்வதெனத் தெரியாது தவித்துப் போய் நின்றாள்.
“தீனா, மனோவையும் புடிக்கும். உன்னையும் புடிக்கும். ரெண்டு பேரும் எனக்கு ஃப்ரெண்ட்ஸ் தான்…” என அவள் கூற, “அப்போ எனக்கு காலை அமுக்கிவிடு…” என அவள் மடிமீது காலை வைத்தான் தீனா.
“குட்டி… அவனுக்கு காலை அமுக்கிவிட்டா, நான் உன் கூடப் பேச மாட்டேன். உனக்கு மேஜிக் பண்ணி ரோஸ் வர வைக்க மாட்டேன்!” மனோ கோபமாய்க் கூறினான்.
“குட்டி… கால் ரொம்ப வலிக்குது எனக்கு…” தீனா இடைபுக,
“மனோ… பாவம் தீனா. அவனுக்கும் கால் வலிக்கும்ல. நான் அமுக்கி விட்றேன்…” என இவள் அவனது காலை அமுக்கிவிட, மனோ சட்டென எழுந்து கோபமாய் நடக்கத் தொடங்கினான். சந்தனா அவனைக் கவலையாகப் பார்த்தாள். அவள் தன்னைத் தொடர்ந்து வரவில்லை என்பதை உணர்ந்த மனோ வேண்டுமென்றே காலைக் கல்லில் இடித்துவிட்டான்.
அப்படியே அவன் கீழே விழுந்துவிட, சந்தனா பதறிக்கொண்டு அவனருகே சென்றாள்.
“ஐயோ… மனோ, என்னாச்சு மனோ. என்னைக் கூப்பிட்டிருக்கலாம்ல. ஏன் தனியா நடந்த மனோ. ரொம்ப வலிக்குதா?” என இவள் கண்களில் சரசரவென நீர் கோர்த்தது. தீனா கூட ஓடிவந்து அவனது காலை ஆராய்ந்தான்.
“ஆ… வலிக்குது குட்டி… கால் இடிச்சிடுச்சு…” என மனோ கூற, சந்தனா அவனை மெதுவாய் அழைத்துச் சென்று அமர வைத்துக் காலை எடுத்துப் பார்த்தாள்.
“எங்க வலிக்குது மனோ?” அவள் கவலையாய்க் கேட்க, “இங்க… இங்க, அப்புறம் இங்க கூட…” என வலிக்காத இடத்தைக் கூட காண்பித்தான். அவள் மெதுவாக அவனது காலைத் தடவிக் கொடுத்தாள். தீனா சற்று முன்னே நடந்த சண்டையை மறந்துவிட்டான்.
“மனோ, ரொம்ப வலிக்கிதா டா. நான் போய் அத்தையைக் கூட்டீட்டு வரவா?” என அவன் வினவினான்.
“இல்ல தீனா… இப்போ வலி குறைஞ்சுடுச்சு…” என்றவனுக்கு சந்தனா தீனாவுக்கு உதவுவது பிடிக்கவில்லை. அவள் தன் தோழி, தனக்கு மட்டுமே வேண்டும் என்கிற உரிமை உணர்வு இப்படி நடந்து கொள்ள வைத்திருந்தது.
அதற்குப் பின்னர் தீனா சந்தனாவுடன் சண்டை போடவில்லை. மனோவின் காலில் அடிபட்டிருப்பதால், அவனே விட்டுக்கொடுத்துப் போனான்.
பத்து நாட்கள் விரைவில் ஓடிவிட, “குட்டி… நெக்ஸ்ட் எக்ஸாம் லீவுக்கு வரேன்…” என அவன் விடைபெற்றான். மனோ அவனுக்கு உற்சாகத்துடன் கையை அசைத்து அனுப்பிவைத்தான். இனிமே சந்தனாவை சொந்தம் கொண்டாட ஒருவரும் வரமாட்டார்கள் என்கிற அற்ப சந்தோஷம் அவனுக்கு முளைத்தது.
தொடரும்…