கட்டிலுக்கு மேல பெரிதாய் மாட்டப்பட்டிருந்த புகைப்படச் சட்டத்தில் பனிரெண்டு வயதான ரஞ்சன் சிரித்துக் கொண்டிருந்தான். அவனது தோளில் கையைப் போட்டவாறு நின்றிருந்தார் ஒரு பெரியவர். அது அவனுடைய தாத்தா. அவரது முகமும் மலர்ந்திருக்க, இருவரது புன்னகையும் அத்தனையாய் உயிர்ப்புடன் இருந்தது. அவர்களுக்கு அருகில் வெள்ளை ரோஜா செடி அழகாய் மொட்டவிழ்ந்திருக்க, பின்புறம் பழங்காலத்து வீடிருந்தது. கொஞ்சம் உற்றுப் பார்த்தால், ஷோபனா, அஷ்வின், ரஞ்சனின் பெற்றோர் என அனைவரும் குட்டி குட்டியாய் பிம்பமாய் தெரிந்தனர்.
ஷோபனாவின் கடந்து சென்ற ஒரு வாரத்தின் காலையும் மாலையும் இந்தப் புகைப்படத்தில்தான் துவங்கி முடிவடைந்தன. சந்தனாதான் ரஞ்சன் பிறந்தநாளிற்கு இந்தப் புகைப்படத்தைப் பரிசளித்திருந்தாள். ஷோபிக்கு இந்தப் புகைப்படம் நிரம்ப பிடித்துப் போனது. ரஞ்சனுக்கு கூட அவளுடைய பரிசு அத்தனை நிறைவை அளித்திருந்தது.
அதுவும் ரஞ்சன் தன்னுடைய தாத்தா இறந்தப் பின்னர் அவரை எத்தனை தேடியிருக்கிறான் என தான் மட்டுமே அறிவான். சென்னை வீட்டின் கூடத்தில் நுழைந்ததும் பெரிதாய் அவனுடைய தாத்தாவின் புகைப்படம்தான் இருக்கும். இங்கு இல்லையென மனம் எண்ணியிருந்தாலும், வேலை பளுவில் அவனால் அவரது புகைப்படத்தை சேகரிக்க முடியவில்லை. அந்தக் குறையை சந்தனா தீர்த்திருந்தாள்.
வந்திருந்த பரிசுகளில் இதைவிட சிறந்தது எதுவுமே இருக்க முடியாது என்றளவிற்கு அந்தப் புகைப்படம் அவனது ஆழ்மனதில் பதிந்துபோனது. மனைவியிடம் கூட நிறைய முறை தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்திருந்தான். சந்தனாவிடமும் நன்றியைத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியிருந்தான்.
இவள் சந்தனாவிற்கு நன்றியை நவில்ந்து புலனத்தில் செய்தியை அனுப்பியிருக்க, ஒருவாரமாய் அச்செய்தி படிக்கப்படாமலே இருந்தது. ஆம், ஷோபி சந்தனாவை சந்தித்து ஏழு நாட்கள் முடிந்திருந்தன.
ரஞ்சனின் பிறந்தாள் அன்று பார்த்ததோடு சரி, அடுத்து அவர்கள் சந்திக்க வாய்ப்பின்றி போனது. காலையில் மனோவை பள்ளிக்கு அனுப்ப லட்சுமி அம்மாதான் வந்தார். அவரிடம் இவள் விசாரிக்க, சந்தனாவிற்கு வேலை பளு அதிகம் என்று அவர் பதிலியம்ப, இவளும் சரியென்றுவிட்டாள்.
ஒரு வாரத்திலே மனம் கொஞ்சம் அவளைத் தேடியது. அப்போதுதான் சந்தனா எத்தனை தன் மனதிற்கு நெருக்கமாகி இருக்கிறாள் என ஷோபா உணர்ந்து கொண்டாள்.
அடுத்த வாரமும் அவளை சந்திக்க முடியாது போக, “லட்சுமி மா, எப்போதான் உங்க டாக்டரம்மாவைப் பார்க்க முடியும். ரொம்ப பிசியாகிட்டாங்க போல?” எனக் கேட்டுப் புன்னகைத்தாள்.
“இல்ல ஷோபி மா… சந்துவுக்கு ரெண்டு நாளா காய்ச்சல். புள்ளை சுணங்கிப் போய்ட்டா. இன்னைக்குத்தான் கொஞ்சம் நல்லா இருக்கா. ஹாஸ்பிடல் கூடப் போகலை அவ…” லட்சுமி பதிலுரைக்க,
“ஓ… சரிங்க லட்சுமி மா. நான் வந்து அவங்களைப் பார்க்குறேன்…” என அஷ்வினை பள்ளி பேருந்தில் ஏற்றிவிட்டு அவருடனே சென்றாள்.
நாற்காலியைத் திருப்பிப் போட்டு அதன் விளிம்பில் தலை சாய்த்திருந்த சந்தனாவின் விரல்கள் அந்த வெள்ளைக் காகிதத்தை தடவின. ஒவ்வொரு முறை அதைத் தொடும்போதும் மனம் கனத்துப் போனது அவளுக்கு. அப்படியே பார்வையை ஜன்னல் வழியே பதித்தாள். மெதுவாய் மேகங்கள் கலைந்து செல்ல, இவளது மனதும் அதனோடு கலைந்து போனதொரு பிரம்மை.
விழிகள் தாழ்ந்து சாலையில் பதிந்தன. அங்கும் இங்கும் மக்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். ஒருவாரமாக அவள் காலை நடைபயிற்சியை மறந்திருந்தாள். இல்லையில்லை, வேண்டுமென்றே மறுத்திருந்தாள் என்பதே தகும். ஏனோ எதிலுமே அவளுக்குப் பிடிப்பில்லாது போனது. எதையும் திரும்பிப் பார்க்க வேண்டாம் என நினைத்தாலும் மனம் எதை எதையோ நினைத்து அவளை வருந்தச் செய்கிறது. இதிலிருந்து எப்படி தப்பிப்பது எனத் தவித்துப் போயிருந்தாள்.
பயமாய் இருந்தது, எங்கே மீண்டும் மோசமாய் உடைந்துவிடுவோமோ என்று? ஆறுதல் அளித்து அரவணைக்கும் குகேஷ் கூட இப்போது உடனில்லை என்ற உபரித்தகவலும் அவளை வருத்தப் போதுமாய் இருந்து விழிகளைத் தளும்பச் செய்தது.
மீண்டும் பார்வை கையிலிருந்த காகிதத்தில் நிலைத்தது. மறுபடியும் அதை எடுத்துப் படித்தாள். பணி மாற்றலுக்கான கடிதம். இரண்டு மாதங்கள் முன்பே அவளுடைய கை சேர்ந்திருந்தது.
“தேங்க் காட் டாக்டர், நீங்க ட்ரான்ஸ்பர் கேட்டதும் திருச்சில ஒரு வேகண்ட் காலியாகப் போகுது. இன்னும் ஃபோர் மந்த்ஸ் டைம். அதுக்குள்ள எப்போ வேணாலும் நீங்க அங்க ட்ரான்ஸ்பர் ஆகிடலாம். அதுக்கும் மேல டைம் எடுத்தீங்கன்னா, அந்த வேகண்ட் உங்களுக்கு இல்ல?” என தலைமை மருத்துவர் அவளிடம் கூறி கையெழுத்திட்டுக் கொடுத்து இரண்டு மாதங்கள் கடந்திருந்தன.
தினமும் அதை எடுத்துத் தொட்டுத் தடவிப் பார்ப்பாள். இன்னும் ஒரு வாரம் கடக்கட்டும், ஒரு மாதம் கடக்கட்டும் என மனம் இல்லாத காரணங்களைக் காண்பித்து அதைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தது. ஆனால் உண்மையில் அவள் மனதிலிருப்பதை ஒருவரும் அறியார். இப்போது அதை ஒத்தி வைக்கும் எண்ணம் அட்சர சுத்தமாய் இல்லை.
‘இங்கே இருக்க வேண்டாம். கிளம்பிவிடு. இது உனக்கான இடமல்ல. அப்படியே தங்கினாலும், மனக்காயங்கள் தான் மிஞ்சும்…’ என மனம் அவளை ஒவ்வொரு நாளும் கொன்று குவித்தது. பெருமூச்சோடு எழுதுகோலை கையிலெடுத்தவள் அதில் கையெழுத்துப் போட முனைய,
“சந்தனா… என்னாச்சுங்க?” என்ற குரல் அவளுக்குப் பின்னிருந்து கேட்டது.
அந்தக் கடிதத்தை நொடியில் மேஜையைத் திறந்து உள்ளே வைத்துப் பூட்டியவள், கண்களை சிமிட்டி உருண்டு திரண்டு நின்ற நீரை உள்ளிழுத்து, மற்றவளைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
“டாக்டரம்மாவுக்கே ஃபீவரா? இப்போ எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டவாறே ஒரு இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தாள் ஷோபனா.
“யெஸ் ஷோபி… ஐ’யம் ஓகே. லைட்டா ஃபீவர். அவ்வளோதான்…” என மென்னகை புரிந்தாள்.
“பார்த்தா அப்படி தெரியலையே சந்தனா. முகம் ரொம்ப டல்லா இருக்கு. வெய்ட் லாஸ் பண்ண மாதிரி இருக்கீங்க. ஹோப் யூ ஆல்ரைட்?” எனக் கேட்டவளின் குரலில் உண்மையான அக்கறை இருந்தது. ஆம், ஒரே வாரத்தில் சந்தனாவின் முகம் களையிழந்து போயிருந்தது. எப்போதும் பளிச்சென புன்னகைக்கும் உதடுகள் எங்கோ சென்று ஒளிந்து கொண்டன. கண்ணைச் சுற்றி கருவளையம் சூழ்ந்திருந்தது.
“ஷோபி… அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன்…” என அவள் பதிலளிக்க, லட்சுமி ஷோபனாவுக்கு பழச்சாற்றை எடுத்து வந்து கொடுத்தார்.
“நல்லா கேளுங்க ஷோபிமா. நானும் கேட்டுட்டேன், என்னென்னு சந்தனா சொல்லவே மாட்றா!” பெரியவர் குரலில் வருத்தம் மேவியிருந்தது. ஒரு வாரமாய் சந்தனா அவளாகவே இல்லை என்பது போலொரு எண்ணம் அவருக்கு. துறுதுறுவென அங்குமிங்கும் நடந்து கொண்டேயிருக்கும் கால்கள் சில நாட்களாகவே அதீத ஓய்வில் இருந்தன. சாப்பாடு கூட அவள் சரியாய் உண்ணவில்லை என அவரும் கவனித்தார். என்னவென அவர் கேட்டும், அது இதுவென அற்பக் காரணங்களைக் அடுக்கிவிட்டாள் மருத்துவச்சி. அவராலும் ஒரு அளவிற்கு மேல் உரிமை எடுத்துக்கொள்ள முடியவில்லை.
“டாக்டர் மேலயே கம்ப்ளைண்ட் வர்ற அளவுக்கு இருக்கா!” எனப் புன்னகைத்த ஷோபனா, “வேற எதுவும் ப்ராப்ளமா சந்தனா. உங்களுக்கு ஷேர் பண்ணணும்னு தோணுச்சுன்னா, என்கிட்ட பண்ணுங்க. உங்களோட மனசு ரிலாக்ஸாகும்…” என்றாள் அவளின் கையைப் பிடித்து ஆறுதலாக.
அதிராமல் புன்னகைத்த சந்தனா, “கண்டிப்பா ஷோபி, எனக்கு எதாவது பிரப்ளம்னா உங்ககிட்டேதான் ஷேர் பண்ணுவேன்!” என்றாள். லட்சுமி அம்மா பெருமூச்சுடன் அகன்றார்.
“சந்தனா… நீங்க கொடுத்த கிஃப்ட் அழகா இருந்துச்சு. அவருக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. ஆமா, அந்த போட்டோ உங்களுக்கு எப்படி கிடைச்சது. அவர் கூட யோசிச்சாரு, இது அவர்கிட்டயே இல்லாத போட்டோ?” இவள் வினவ, “அது… ஷோபி, ரஞ்சனோட ஃபேஸ்புக் அக்கவுண்ட்ல இருந்துதான் எடுத்தேன். ரொம்ப நாளைக்கு முன்னாடி அப்லோட் பண்ணியிருந்தார். அவர் மறந்திருப்பாரு…” என்றாள்.
“ஓ… பாருங்க, அவரே மறந்துட்டாரு. அவர் சின்ன வயசுல இன்னுமே க்யூட் இல்ல?” ஷோபனா ஆசையாய்க் கூற, இவளது முகம் மெதுவாய் மங்கத் தொடங்கியது.
“ஹே சந்தனா… வொய்ட் ரோஸ் உங்களுக்கும் பிடிக்குமா? அவருக்கு ரோஸ்னா இஷ்டம். அதனாலே நான் பால்கனில கலர் கலர் ரோஸ் செடி வச்சிருக்கேன்…” என எழுந்து ரோஜா செடியருகே சென்றாள். சில நொடிகள் அமர்ந்த இடத்திலே இருந்த சந்தனாவும் அங்கே போனாள்.