“போகலாமா சந்தனா?” என அவன் கேட்டதற்கும் வெறும் தலையை மட்டும் அசைத்தாள். இருவரும் வீட்டை நோக்கி நகர, “சந்தனா… ஆர் யூ ஓகே?” என அருகிலிருந்தவனின் வார்த்தைகள் கூட அவளது செவியை எட்டவில்லை.
“சந்தனா… உங்ககிட்டேதான் கேட்டேன்…” என அவன் மீண்டும் அழுத்திக் கேட்க, “என்ன ரஞ்சன்?” என வினவினாள்.
“இல்ல, என்னாச்சு அந்தப் பொண்ணுக்கு. உங்களுக்கு சொல்ல விருப்பம் இருந்தா மட்டும் சொல்லுங்க…” என அவன் நிறுத்த, சாளரத்தில் பார்வையைப் பதித்தவளிடம் சில நிமிடங்கள் மௌனம்.
“அந்தப் பொண்ணு ஒரு பையனை லவ் பண்ணாளாம். இவ இல்லாத நேரம் அவன் வீட்ல கட்டாயப்படுத்தி வேறப் பொண்ணைக் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்களாம். அதனால இவ மென்டலி ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டா…” என்றாள். சொல்லும் போதே குரல் உடையத் தயாராகி இருந்தது. கவனமாய் அதை அருகில் இருப்பவனிடம் இருந்து மறைத்துவிட்டாள்.
அதைக் கேட்டவனிடம் பேச்சே இல்ல. “பாஸ்டர்ட்… இவனுக்கு எதுக்கு லவ் எல்லாம்? கட்டாயப்படுத்துனா வேறப் பொண்ணைக் கல்யாணம் பண்ணுவானா?” என இவன் வார்த்தைகள் கடுமையாய் வந்தன.
ஒரு நொடி அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தவள், “அந்தப் பையனுக்கு என்ன சிட்சுவேஷன்னு நமக்குத் தெரியாதில்ல ரஞ்சன். அவன் மேல மட்டும் தப்பு சொல்லக் கூடாது?” என்றாள் அமைதியான குரலில்.
அவள் குரலில் என்ன இருந்ததென அறிய முயன்று தோற்றவன், “நோ சந்தனா, நீங்க என்ன சொன்னாலும் அவன் பண்ணது தப்பு. அவனுக்காக வெயிட் பண்ண இந்தப் பொண்ணை அவன் ஏமாத்திட்டான். அவனுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க. எனக்கு கெட்ட கோபம் வரும்…” என்றவன் வார்த்தைகள் கடுமையை சுமந்து வந்தன. இவளிடம் கனத்த அமைதி.
அவர்கள் இருப்பிடம் வரை சென்று அவளைவிட்ட ரஞ்சன், “சாரி டாக்டர், கொஞ்சம் கோபமா பேசிட்டேன்…” என மன்னிப்பை யாசித்துவிட்டு அவன் அகல, சந்தனா அவனையே சில நொடிகள் பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தாள்.
சந்தனாவிற்கு தீனா இல்லாது வெறுமையாய் இருந்தது அன்றைய நாள். அவளும் மனோவும் மட்டும் அமர்ந்திருந்தனர். அவனால் ஓடியாடி விளையாட முடியாதே என இவள் அவனுக்காக கவலைப்பட்டு உட்கார்ந்தவாறே சில விளையாட்டை கூற, இருவரும் விளையாடினர். ஆனாலும் நேரம் செல்லவில்லை.
“மனோ… உன் ரோஜாக்கு நான் தண்ணி ஊத்துறேன். நீ என் ரோஜாவுக்குத் தண்ணி ஊத்து…” என அவள் நீரைப் பிடித்து வர, இருவரும் சிரிப்புடன் செடிகளுக்கு நீரைப் பாய்ச்சினர்.
“குட்டி… உனக்காக ஒன்னு வச்சிருக்கேன் நான்…” என்றவன் மெதுவாய் நடக்க, இவள் வாயில்வரை அவனை அழைத்துச் சென்றாள். அதற்கு மேலும் முன்னேறாது நின்றுவிட உள்ளே சென்றவன் வெளியே வருகையில் ஒரு நெகிழிப்பையோடு வந்தான்.
“குட்டி, அப்பா ஊர்ல இருந்து வரும்போது எனக்கு சாக்லேட் வாங்கிட்டு வந்தாரு. இது பேர் மார்ஷ்மெல்லோ, இது பெரரோச்சர். ரொம்ப டேஸ்டா இருக்கும். உனக்கு எடுத்து வச்சேன் நான். வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் சாப்பிடு…” என அவன் நீட்ட, இவள் கைகளைப் பின்னே கட்டிக் கொண்டாள்.
“இல்ல மனோ… எனக்கு எதுவும் வேணாம். வா, நம்ப விளையாடலாம்…” என்றாள் அந்தப் பேச்சைவிடுத்து.
“குட்டி… ஏன் வேணாம்னு சொல்ற. உனக்கு பல் வலி இப்பவும் இருக்கா. மாத்திரை போடலையா நீ?” என அவன் வினவ, “ஆமா… ஆமா…” என்றாள் தலையை அசைத்து.
“சரி, சரியானதும் சாப்பிடு…” என்றான்.
“வேணாம் மனோ… நீ என்கூட விளையாட வரீயா? இல்லையா?” என அவள் கோபமாய்க் கேட்க, “சரி குட்டி… வா, விளையாடலாம்…” என்றவன் உள்ளே சென்று இன்னட்டை வைத்துவிட்டு அலைபேசியை எடுத்து வந்தான்.
“குட்டி… கார் ரேஸ் விளையாடலாம்…” என்றவன் கைபேசியை உயிர்ப்பிக்க, இவள் ஆர்வமாய்ப் பார்த்தாள். நிறைய பேர் இதுபோல கைபேசி வைத்திருப்பதைக் கவனித்திருக்கிறாள். அதில் என்ன இருக்கிறது என ஆர்வம் எழுந்தாலும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
அவளது முகத்தைப் பார்த்தவன், “இந்தா குட்டி… நீ முதல்ல விளையாட்றீயா?” என வினவினான்.
“இல்ல மனோ… எனக்கு இதைப் பத்தி தெரியாது. நீ விளையாடு. நான் வேடிக்கைப் பார்க்குறேன்…” என அவள் காலைக் குத்த வைத்து அவனுக்கருகே அமர்ந்தாள்.
மனோ விளையாடத் தொடங்கியவன், எப்படி இயக்குவது என அவளுக்குச் சொல்லிக் கொடுக்க, கவனமாய்க் கேட்டுக்கொண்டாள். அவனே இருமுறை விளையாடினான்.
“குட்டி… இப்போ உன் டர்ன். நான் அவுட் ஆகிட்டேன்…” என அவன் அலைபேசியை இவளிடம் கொடுக்க, கொஞ்சம் பயமாய் இருந்தது இவளுக்கு. மனோவிடம் எதையும் வாங்கி உண்ணக் கூடாது, அவனது பொருட்களைத் தொடக் கூடாதென தாய் அறிவுறுத்தியது நினைவு வர,
“ப்ம்ச்… மனோ, நீ விளையாடுனது எனக்குப் புரியவே இல்ல…” பொய்யாக் கூறினாள்.
“ஐயோ… இது ரொம்ப ஈஸி லெவல், ஜெய்ச்சுடலாம். நான் டூ ஹண்ட்ரட் லெவல் முடிச்சிட்டேன்…” என அவன் கூற, “அப்படியா?” என அதிசயமாய்க் கேட்டாள். அதில் அவனுக்கு ஏகபெருமை.
“ஆமா… ஆமா… நானும் தீனாவும் சேர்ந்து விளையாண்டோம். நான்தான் ஜெய்ச்சேன்…” என மனோ கூற, இவள் தலையை அசைத்தாள்.
அவன் மீண்டும் விளையாட, “மனோ… இதை இப்படி கொண்டு போ… தோ, இடிக்க வருது பாரு…” என அவள் யோசனை கூற, அவள் கூறியபடியே செய்தவன், “உனக்குத்தான் விளையாட வருதே குட்டி. அப்புறம் ஏன் விளையாட மாட்ற?” வினவினான்.
“அது… அதில்ல மனோ, உன் விளையாட்டுப் பொருள் எதையும் தொடக் கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்காங்க…” என்றாள் சோகமாய்.
“ஏன் குட்டி… சாரி, நான் உன்னை ஃபர்ஸ்ட் டைம் அடிச்சுட்டேன்ல. அதான் ஆன்ட்டி அப்படி சொல்லிட்டாங்களா. இனிமே அடிக்க மாட்டேன் குட்டி. இந்தா, போன்…” என அவன் சோகமாய்க் கொடுக்க,
“மேடம் திட்டுவாங்க மனோ. நான் சொல்றேன், நீ அதுபடி விளையாடு. உன் டர்ன் வரும்போது நீ விளையாடு…” என அவள் கூற, அரைமனதாய் சரியென்றவன் தொடர, நேரமானதும் சந்தனா பள்ளிக்கு கிளம்பிவிட்டாள். மாலை அவள் வரும் நேரம் மனோ அவளுக்காக காத்திருந்தான்.
வந்ததும் புத்தகத்தை எடுத்து வைத்து அமர, இவன் அவளுக்கு வீட்டுப் பாடங்களை செய்ய உதவினான். இதுவே தொடர்கதையாகிப் போனது.
சந்தனாவின் காலையும் மாலையும் மனோவுடன் தொடங்கி அவனுடன்தான் முடிவடையும். பள்ளியில் நடந்தது அத்தனையும் அவனிடம் ஒப்புவிப்பதை அவள் வாடிக்கையாக வைத்திருந்தாள்.
இருவரும் சிரித்து விளையாடுவது, செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது என நாட்கள் வேகமாய் நகர்ந்தன. சந்தனா தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறவில்லை. அவனுடைய விளையாட்டுப் பொருட்கள் எதையும் தொடவில்லை. அவனிடம் எதையும் வாங்கி உண்ணவில்லை. மற்றபடி மனோ அவளுக்கு உற்றத் தோழனாகிப் போனான்.
சனி ஞாயிறு வந்தால் அவர்களுக்கு வெகு குஷியாகிப் போய்விடும். வெயில் என்றும் பாராது அங்கிங்கு என விளையாடுவார்கள். மகன் வெயிலில் வாடுவது பொறுக்காத சதாம்பிகா, கணவரிடம் கூற, வீட்டை ஒட்டி மணல் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் சிறிதாய் கொட்டகை ஒன்றை அமைத்து கட்டில் ஒன்றை அங்கு வைத்துவிட்டார் மனிதர். இவர்கள் இருவரது வாசமும் அதன்பிறகு அங்குதான் வாசம் செய்யத் தொடங்கியது.
சனிக்கிழமை அன்றும் வகுப்பிருக்கிறதென அந்தவாரம் அரசு விடுமுறையை சரிக்கட்ட ஆசிரியர்கள் கூறிவிட, சந்தனா பள்ளி சீருடையில்லாது வண்ண உடையில் செல்லலாம் என துள்ளலாகக் கிளம்பினாள். இரவு சுட்ட சப்பாத்தி மீந்துவிட, பூரணி அதை முட்டையை ஊற்றி தக்காளி வெங்காயம் சேர்த்து புதுவித உணவு ஒன்றை தயார் செய்ய, “ம்மா… என்னமா செய்ற?” என மகள் ஆர்வமாய் வினவினாள்.
“முட்டை சப்பாத்தி செய்றேன் குட்டி…” என்றவர் சமைத்தவற்றை இவளுக்குத் தட்டிலிட்டுக் கொடுக்க, ஒரு வாய் உண்டாள். ருசியாய் இருக்க, “ம்மா… சூப்பரா இருக்கு மா. டெய்லியும் செஞ்சு தருவீயா மா?” எனக் கேட்டாள்.
“டெய்லி சப்பாத்தி சுட முடியாது குட்டி. மிதமிருந்த சப்பாத்திலதான் செஞ்சேன். அடுத்த வாரம் செஞ்சுத் தரேன்…” என அவர் கூற, தலையை அசைத்து உண்டவள், டப்பாவிலும் அடைத்துக் கொண்டாள்.
“குட்டி… மதிய சாப்பாடு எடுத்துட்டல்ல. இது எதுக்கு?” என அவர் கேட்க, சில நொடிகள் திருதிருத்தவள், “ம்மா… பதினோரு மணிக்கு பரேக்ல சாப்பிட மா. அப்போ பசிக்குது மா…” பொய்க் கூறினாள்.
காலையில் ஏழு மணிக்கே மகள் உண்டுவிடுவதால் பசிக்குமென எண்ணியவர், “ஆமா டி… காலைல சீக்கிரமே சாப்பிட்ற இல்ல. பசிக்கத்தான் செய்யும், இனிமே ரெண்டு டிபன் எடுத்துட்டுப் போ…” என அவர் கூற, தலையை பலமாய் ஆட்டி வைத்தாள் சின்னவள்.
மனோ எப்போதும் போல சந்தனாவிற்காக காத்திருக்க, இவள் பையுடன் துள்ளலாக வந்தாள். “குட்டி... இன்னைக்கு ஸ்கூலா? பேக் மாட்டிருக்க?” அவன் வினவ, “ஆமா மனோ… இன்னைக்கு ஸ்பெஷல் க்ளாஸ். அதான் கலர் ட்ரெஸ் போட்டிருக்கேன்…” என்றாள் சந்தோஷமாய்.
“அப்போ… இன்னைக்கு கிட்டி விளையாட முடியாதா?” என அவன் சோகமாய்க் கேட்க, “ஆமா… நம்ப நாளைக்கு விளையாடலாம் மனோ. இன்னைக்கு உனக்கு நான் முட்டை சப்பாத்தி எடுத்துட்டு வந்திருக்கேன்…” என டப்பாவை அவனிடம் நீட்டினாள் சந்தனா.