ரஞ்சன் உடைமாற்றி தன்னை சுத்தம் செய்துகொண்டு வெளியே வந்தவன் விழிகள் சந்தனாவில் நிலைத்தன. ஏனோ பக்கவாட்டாய்த் தெரிந்த அம்முகத்தில் உயிர்ப்பில்லாதது போலொரு எண்ணம் இவனுக்கு. திரும்பிக் கூடத்தைப் பார்க்க, ஷோபனா உணவகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட உணவை வாங்கி வைக்க, லட்சுமி அவளுக்கு உதவினார்.
சில நொடிகள் தயங்கிய இவனது கால்கள் பின்னர் அதை உடைத்துவிட்டு அவளை நோக்கி நகர்ந்தன. தன்னருகே அரவம் உணர்ந்தும் சந்தனா திரும்பவில்லை.
பெருமூச்சை வெளிவிட்டவன், “என்னாச்சு டாக்டர், உங்களுக்கும் உங்க ஹஸ்பண்ட்க்கும் எதாவது மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்கா?” என இவன் குரல் செவியைத் தொட்டதும் ஸ்மரணை வரப்பெற்றவள், அவன்புறம் திரும்பி புன்னகைக்க முயன்றாள். அவ்வளவே, மற்றபடி சர்வ நிச்சயமாய் உதடுகளில் சிரிப்பில்லை.
“ரொம்ப அட்வாண்டேஜ் எடுத்துக்கிறேன்னு நினைக்காதீங்க டாக்டர். நம்ப வாழ்றது ஒரு வாழ்க்கை. யெஸ், உங்க ஹஸ்பண்ட் மேல தப்பு இருக்கலாம். இல்ல, உங்க சைட் மிஸ்டேக் இருக்கலாம். வாட் எவர், நீங்க அவர்கிட்டே பேசுங்க. அவர் மேல எவ்வளோ லவ் வச்சிருக்கேன்னு புரிய வைங்க. பேசுனா எல்லாம் சால்வ் ஆகிடும்னு தோணுது. இப்போ உங்களுக்குத் தேவை உங்க மனசுல இருக்கத ஷேர் பண்ண ஒரு சோல். கண்டிப்பா அது உங்க ஹஸ்பண்டாதான் இருக்க முடியும்…” என்றவன் சில நொடிகள் நிறுத்தி,
“நீங்க அவரை ரொம்ப மிஸ் பண்றீங்களா டாக்டர்?” என அவன் கேட்டதும், இவள் உதட்டைக் கடித்து தலையை மெதுவாய் அசைத்தாள். சட்டென விழிகளில் நீர் நிரம்பின.
“பாருங்க... நீங்க வாய் வார்த்தையா சொல்லலை. பட் கண்ணீர் சொல்லுது உங்களோட அன்பை. முதல் தடவை உங்களை மீட் பண்ணதுல இருந்து இப்போ வரைக்கும் உங்க சிரிப்புல ஏதோ ஒன்னு குறையும். உங்க கண்ல லைக் சம்திங் என்னென்னு என்னால சொல்ல முடியலை. அது உங்க ஹஸ்பண்டை நீங்க பிரிஞ்சு இருக்கதாலன்னு ஒரு எண்ணம். சீக்கிரம் அவரோட சேர என்னோட விஷ்ஷஸ்…” என்றவன் திரும்பி வெள்ளை ரோஜா ஒன்றைப் பறித்தான்.
“சாரி ரோஸ், இந்த டைம்ல நீங்க தூங்கிட்டு இருப்பீங்க. பட், வேற வழியில்லாம உங்களை டிஸ்டர்ப் பண்றேன்!” என முணுமுணுத்தவனின் வார்த்தைகள் அருகிலிருந்தவளின் செவியையும் தொட்டன.
“இந்தாங்க டாக்டர், வொய்ட் ரோஸ், உங்க ஹஸ்பண்டை இதைக் கொடுத்து சமாதானம் பண்ணுங்க. கண்டிப்பா உங்களைப் புரிஞ்சுப்பாரு…” என்றவன் செய்கையில் இவளது உதடுகளில் புன்னகை ஏறியது. அதை வாங்காது அவனையே பார்த்தாள்.
“டாக்டர்… சந்தனா…” என அவன் அழைக்க, “ஹம்ம்… தேங்க் யூ சார். பட் வொய்ட் ரோஸ் வேணாம். ரெட் ரோஸ் எடுத்துக்கிறேன்…” என சிவப்பு நிற ரோஜாவைப் பறித்தாள்.
“சூப்பர்… ரெட் ரோஸ் இஸ் அ சிம்பள் ஆஃப் லவ். சோ, சீக்கிரம் உங்க லவ் உங்ககிட்டே வந்துடுவாரு…” என்றவன், “இந்த சாரை கட் பண்ணிட்டு, ரஞ்சன்னு நீங்க கூப்பிடலாம். நானும் டாக்டரைக் கட் பண்ணிட்றேன்…” என்றான் துள்ளலானக் குரலில்.
இவளது முகம் மெதுவாய் மலர, “தேங்க் யூ ரஞ்சன்…” என்றாள் உணர்ந்து.
“யூ ஆர் ஆல்வேய்ஸ் வெல்கம் சந்தனா. இப்போ கேக் வெட்டப் போகலாமா?” என அவன் கேட்க, இவள் தலையை அசைத்ததும் இருவரும் கூடத்தை அடைந்தனர்.
ஷோபனா தான் செய்த அணிச்சலின் நடுவில் அழகாய் மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றி வைத்தவள், “கட் பண்ணுங்க ரஞ்சன்…” என அவன் கைகளில் கத்தியைக் கொடுத்தாள். தனக்காகவென மனைவி செய்திருந்த அணிச்சலை பார்த்தவன், புருவத்தை உயர்த்தி மெச்சுதலாய்ப் பாரட்டியவாறே கத்தியை வாங்க, இவளது முகம் மலர்ந்து போனது.
“ஹேப்பி பெர்த் டே ரஞ்சன், ஹேப்பி பெர்த்டே அங்கிள், ஹேப்பி பெர்த் டே டாடி…” என்ற குரல் செவியை அடைய, சிறிதான கூச்சத்துடன் அணிச்சலை வெட்டி மகனுக்கு முதலில் ஊட்டியவன், மனோவிற்கு அடுத்ததாய் ஊட்டினான். சந்தனா மென்புன்னகையுடன் அவர்களை கைபேசியில் பதிந்தாள். அவன் மனோவுக்கு ஊட்டுவதைப் பார்த்து,
“ரஞ்சன்… பரவாயில்லை. நீங்க ஷோபிக்கு கொடுங்க…” என்றவளின் குரலை அவர்கள் இருவரும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை.
அடுத்ததாய் மனைவிக்கு அவன் கொடுக்க, அவள் ஆசையுடன் அதை உண்டாள். மனம் நிறைந்து போயிருந்தது. மனோவும் சந்தனாவும் தாங்கள் கொண்டுவந்த பரிசை உரியவனிடம் கொடுக்க, புன்னகையுடன் அதைப் பெற்றுக் கொண்டான்.
பின்னர் ஷோபனா அணிச்சலை சிறு சிறு பகுதிகளாக வெட்டி கிண்ணத்தில் வைத்து அனைவருக்கும் கொடுத்தாள். சந்தனா சாப்பிடவில்லை. வாங்கி மேஜையில் வைத்தாள்.
“சாரி சந்தனா… எக் போடாம கேக் செய்யலாம்னு நினைச்சேன். பட், அது சரிவராதுன்னு எக் கலந்துட்டேன்…” ஷோபி தயங்க, “ப்ம்ச்… அதெல்லாம் ஒன்னும் இல்ல ஷோபி…” என இவள் புன்னகைத்தாள்.
சிறிது நேரம் கழிய, “சரி வாங்க. எல்லாரும் சாப்பிடலாம்…” என்ற ஷோபி உணவை மேஜை மீது எடுத்து வைக்க, மற்றவள் அவளுக்கு உதவினாள்.
“சந்தனா, நீங்க போய் உக்காருங்க. நானே சர்வ் பண்றேன்…” என சந்தனாவைக் கட்டாயப்படுத்தி அமர வைத்தாள் ஷோபனா. ஐவருக்கும் அவளே உணவைப் பரிமாற, மனோ சந்தனாவின் சேலையில் பழச்சாற்றை சிந்திவிட்டான்.
“ம்மா… சாரி மா…” என அவன் பாவமாய் விழிக்க, இவள் மென்மையாய் அவனை முறைத்தாள்.
“பொறுமையா சாப்பிடணும். சிந்தக் கூடாது மனோ. இது நம்ப வீடில்லை…” இவள் மெல்லிய குரலில் அதட்ட, ரஞ்சன் அவளை முறைத்தான்.
“இருந்தாலும் சந்தனா, நீங்க இவ்வளோ ஸ்ட்ரிக்டா இருக்க கூடாதுங்க!” என அவன் கடிய, இவள் சிரித்துவிட்டாள்.
“ச்சு… அப்படியெல்லாம் இல்ல ரஞ்சன். நான் முன்னவே சொல்லி இருக்கேனில்ல. இவனுக்கு சேட்டை அதிகம். பொறுமையே இல்ல. இப்போல இருந்தே சொல்லிக் கொடுத்தாதான் கத்துப்பான்…” எனக் கூறியவள் எழுந்து சென்று சேலையைக் கழுவிவிட்டு வர, அவளது அலைபேசி இசைத்தது.
அதை இவள் ஏற்று பேச, “ஓ… நைட் ட்யூட்டில டாக்டர் ஷைலஜா இருப்பாங்களே?” என இவள் கேட்க, மறுமுனையில் என்ன கூறப்பட்டதோ, “ஓகே, ஒரு ட்வென்ட்டி மினிட்ஸ்ல நான் அங்க இருப்பேன்…” என்றவளின் முகத்தை ஷோபனா கேள்வியாக நோக்கினாள்.
சில நொடிகள் தயங்கிய சந்தனா, “ஷோபி, அது ஒரு எமர்ஜென்சி கேஸ். இப்போ நான் ஹாஸ்பிடல் போகணும். சாரி…” என்றாள் சங்கடமாய்.
ஷோபனாவிற்கு வருத்தமிருந்தாலும், “பரவாயில்லை சந்தனா. ஒரு டாக்டரா உங்களோட சிட்சுவேஷன் புரியுது. நீங்க கிளம்புங்க…” என்றாள் அவளது தோளில் தட்டி.
ரஞ்சனும் அவளது பேச்சைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தான். “மனோ… அம்மா வர லேட்டாகும். பாட்டியை ரொம்ப தொல்லைப் பண்ணாம டைம்க்கு தூங்கிடணும்…” என மகனிடம் அறிவுறுத்தியவள், லட்சுமியிடமும் பேசிவிட்டு வெளியே சென்றாள்.
காலணியை மாட்டிவிட்டு அவள் நிமிர, ரஞ்சன் தலையை அசைத்தான். இவளும் பதிலுக்குப் புன்னகை புரிய, “சந்தனா, ஒரு நிமிஷம்…” என்றவன் கையைக் கழுவிவிட்டு எழுந்தான்.
“இப்போவே டைம் எய்ட் ஆச்சு. தனியா எப்படி போவீங்க. நானும் வரேன்…” என்றான்.
“ஐயோ… இல்ல ரஞ்சன், பரவாயில்லை. நானே மேனேஜ் பண்ணிடுவேன்…” என்றாள்.
“நோ… நோ. நானும் வரேன்…” எனக் கிளம்பியவன், “ஷோபி போய்ட்டு வரேன்…” என மனைவியிடம் தலையை அசைக்க, அவள் சம்மதமாய் புன்னகைத்தாள்.
இந்த நேரத்தில் ரஞ்சனைத் தொந்தரவு செய்கிறோமே என்று சங்கடமாய் சந்தனா அவனைப் பார்க்க, “ம்ப்ச்… சந்தனா. வாங்க…” என அவன் மகிழுந்தை உயிர்ப்பிக்க, இருவரும் மருத்துவமனையை அடைந்தனர்.
அவனையும் உடன் அழைத்துச் சென்றவள், “ரஞ்சன், நீங்க இங்க வெயிட் பண்றீங்களா? நான் போய் பார்த்துட்டு வரேன்…” என அவள் நகர, இவன் வெளியே இருக்கையில் அமர்ந்துவிட்டான்.
இளம் வயது பெண் ஒருத்தி கத்திக் கூச்சலிட்டுக் கொண்டிருக்க, இவனுக்கும் அந்தச் சத்தம் செவியை அடையத்தான் செய்தது. பெண்ணின் பெற்றவர்கள் ஏதோ கூற, சந்தனா அந்தப் பெண்ணிடம் பேசி அமைதிப்படுத்த முயன்று தோற்றுப் போனாள்.
பெருமூச்சை வெளிவிட்டவள் செவிலியரை அழைத்து அந்தப் பெண்ணிற்கு மயக்க ஊசியைப் போட பணித்தாள். சில நிமிட போராட்டத்திற்குப் பின் அந்தப் பெண் மயக்க நிலைக்குச் செல்ல, அவளைக் கட்டிலில் கிடத்தினர்.
பெருமூச்சோடு அவளின் உடல்நிலையை சோதித்துக் குறிப்பெழுதியவள், தன்னறைக்கு வந்து அமர, அந்தப் பெண்ணின் பெற்றவர்களும் வந்தமர்ந்தனர்.
“உங்கப் பொண்ணுக்கு என்னாச்சு மா?” என இவள் கேட்க, எதிரிலிருந்தப் பெண்மணி கதறியழுதார்.
“என்னத்த சொல்ல சொல்றீங்க டாக்டரம்மா. எம்புள்ளை சொந்தக்காரப் பையன் ஒருத்தனைக் காதலிச்சா. அந்தப் பையனுக்கு இவ மேல விருப்பம்தான். பையன் வீடு எங்களைவிட வசதி. இவளை அவங்களுக்கு ஆரம்பத்துல இருந்தே புடிக்கலை. நானும் இவகிட்டே சொல்லிப் பார்த்தேன். பணம்தான் பிரச்சனைன்னா, நான் வெளிநாட்டுக்குப் போய் சம்பாதிக்கிறேன்னு அவனுக்காக வெளிநாடு போய்ட்டா.”
“இதுதான் நேரம்னு அவங்க வீட்ல அவசர அவசரமா ஒரு பொண்ணைப் பார்த்து அந்தப் பையனுக்கு கட்டாயக் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. அது தெரிஞ்சு எம்மவ உடைஞ்சு போட்டா மா. சரியா சாப்பிடலை, தூங்கலை, யார்கிட்டேயும் பேசலை. ஒரு வார்த்தைக் கூட அழலைமா. நான் அவளே சரியாகிடுவான்னு விட்டுட்டேன் மா. போகப் போக எல்லாத்தையும் தூக்கிப் போட்டு உடைக்க ஆரம்பிச்சுட்டா. ரொம்ப ஆக்ரோஷமா நடந்துக்க ஆரம்பிச்சுட்டா மா…” என அவர் கதறியழ, சந்தனா உணர்வு துடைத்த முகத்துடன் அவரைப் பார்த்தாள். அந்தக் கண்ணீர் அவளை ஏதோ செய்து தொலைத்தது.
மனம் தறிக்கெட்டு எங்கோ பயணிக்கத் தொடங்க, அதை வெகுபிரயத்தனப்பட்டு கட்டுக்குள்கொண்டு வந்தவள், மேலும் அவர்களிடம் தகவல்களைப் பெற்றாள். அவருடைய மகளைக் கண்டிப்பாக குணப்படுத்திவிடலாம் என நம்பிக்கையை அளித்து வெளியே வந்தவள் உதடுகளில் அதீத அமைதி. ரஞ்சன் எழுந்து நின்றான்.