அன்பு 10.3

.


“இல்ல குட்டி… எனக்கு வலிக்கலை!” என்றவன் அவளது உதவியுடன் நடந்துவந்து அமர்ந்தான்.

“ரொம்ப வலிக்குதா மனோ? உன் கால்ல இருக்க புண்ணு எப்போ சரியாகும்?” இவள் அவனது காலைப் பார்த்தவாறே வினவினாள்.

“தெரியலையே குட்டி. இன்னும் கொஞ்ச நாள்ல சரியாகிடும்னு டாக்டர் அங்கிள் சொன்னாரு…” அவன் பதிலளித்தான்.

“மனோ… பனியாரம் சாப்பிடு. நான் உனக்காக எடுத்துட்டு வந்தேன்.‌..” என இவள் நீட்டவும், அவன் மலர்ந்த முகத்துடன் எடுத்து உண்ணத் தொடங்கினான்.

“மனோ, மேடம்கிட்டே சொல்லிடாத. அவங்களுக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க…” இவள் கூற,

“ப்ராமிஸா சொல்ல மாட்டேன் குட்டி…” என மனோ உறுதியளிக்க, சந்தனா புன்னகைத்தாள்.

“குட்டி… பனியாரம் ரெண்டுதான் எடுத்துட்டு வந்தீயா? டேஸ்டா இருந்துச்சு, தீர்ந்து போச்சே…” என தீனா சப்புக் கொட்டினான்.

“தீர்ந்துடுச்சே தீனா. நான் அம்மாகிட்டே சொல்லி நாளைக்கும் எடுத்துட்டு வரேன்!”

“நாளைக்கு நான் இங்க இருக்க மாட்டேனே. நைட்டே ஊருக்கு கிளம்பிப் போய்டுவேன்…” தீனா கூற,

“அப்போ இனிமே வரமாட்டீயா தீனா?” என அவள் கவலையாகக் கேட்டாள்.

“ஹம்ம்… தெரியலையே குட்டி. எக்ஸாம் லீவ் விடுவாங்க இல்ல, அப்போ வர்றேன். நான் வரப்போ நீ பனியாரம் செஞ்சு எடுத்துட்டு வா…” அவன் கூற, இவள் தலையை அசைத்தாள்.

“சரி, நம்ப மூனு பேரும் ஒளிஞ்சு புடிச்சு விளையாடுவோமா?” சந்தனா வினவ, சரியென்று தீனா கண்ணை மூடித் திரும்பி நின்று நூறு எண்களை எண்ணத் தொடங்கினான். சந்தனா மனோவைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று ஓரிடத்தில் ஒளிந்து கொண்டாள்.

“மனோ… புண்ணு வலிக்கிதா?” என அவனிடம் அடிக்கடி கேட்டும் கொண்டாள். சிலபல நிமிடங்களில் தீனா இவர்களைக் கண்டு பிடித்துவிட்டான்.

அவர்கள் நின்றிருந்த இடத்தில் சேறும் சகதியுமாய் இருக்க, மனோ மற்றும் சந்தனாவின் கால் முழுவதும் சகதியாகின.

“மனோ… வா, காலைக் கழுவலாம்” என அவனை அழைத்துச் சென்றவள் தன் காலை கழுவிவிட்டு குனிந்து அவனது காலையும் கழுவினாள்.

“குட்டி… வேணாம். நானே கழுவுறேன்‌…” அவன் கூற,

“இல்ல மனோ, உனக்கு கால் வலிக்கும். நீ நில்லு‌, நானே உனக்கு கழுவிவிட்றேன்…” என மனோவின் காலை சுத்தம் செய்தாள்.

“மனோ, என் கால்லயும் சகதியா இருக்கு. நீயே கழுவிவிடு‌…” என தீனா வந்து நிற்க, இவள் அவனை முறைத்தாள்.

“போ தீனா… நீயே கழுவிக்கோ. பாவம் மனோ, அவனுக்கு கால்ல அடிபட்டிருக்கில்ல. அதான் நான் பண்ணேன்…” என இவள் பதிலுரைத்தாள். அவன் ரோஷத்துடன் காலை கழுவிவிட்டு தனியே சென்று அமர்ந்துவிட்டான்.

“தீனா… வா, விளையாடலாம்” சந்தனா அவனை அழைக்க, முகத்தைத் திருப்பினான் அவன்.

“நான் உன்கூட விளையாட வரலை. உனக்கு மனோவை தானே பிடிக்கும். அவனுக்கு மட்டும்தான் காலை கழுவிவிடுவ…” என்றவனிடம் இவள் என்ன சொல்வதென தெரியாது விழித்து நின்றாள்.

“குட்டி… ஸ்கூலுக்கு டைமாச்சு பாரு. கிளம்பு…” என பூரணி குரல் கொடுக்க, இவள் புத்தகப்பையை எடுத்துத் தோளில் மாட்டினாள்.

“பாய் தீனா, சாயங்காலம் வரேன்…” என அவள் கூற, தீனா முகத்தைத் திருப்பினான்.

“குட்டி, பாய்‌‌…” என்ற மனோ, “ஈவ்னிங் மறக்காம வா…” என அவளை அனுப்பி வைத்தான்.

மாலை பள்ளி முடிந்து மனோவின் வீட்டை நோக்கி நடந்த சந்தனாவின் முகம் யோசனையில் இருந்தது. எப்படி தீனாவை சமாதானம் செய்வது என சிந்தித்துக் கொண்டே அவள் வீட்டை அடைய, அவன் ஊருக்குச் செல்லத் தயாராகி நின்றான். சந்தனா அவனது முகத்தையே பார்த்திருக்க, அவளைக் கண்டதும் ஓடி வந்தான் தீனா.

“குட்டி… நான் ஊருக்குப் போறேன்…” என்றவன் அவளது கையில் சில இன்னட்டுகளை திணித்தான்.

“பல்லு வலி சரியானதும் நீ இதை சாப்பிடு. நான் எக்ஸாம் லீவ்க்கு வரேன். அப்போ உனக்கு நிறைய சாக்லேட் வாங்கிட்டு வரேன்!” என அவன் காலையில் நடந்த சண்டையை சுத்தமாய் மறந்திருந்தான்.

“தீனா… எனக்கு சாக்லேட் இப்போ வேணாம். அடுத்த தடவை வரும்போது நீ வாங்கிட்டு வா. பல்லு வலிக்கும்…” என அவனிடமே இன்னட்டுகளைத் திருப்பிக் கொடுத்தாள் இவள்.

“சரி குட்டி… நான் கிளம்புறேன்…” என அவன் உள்ளே சென்றுவிட, உமாநாதன் அவனை மகிழுந்தில் அழைத்துச் சென்றார்.

“பாய் மனோ, பாய் குட்டி… அத்தை வரேன்!” என அவன் மகிழுந்து சாளரம் வழியே கையை ஆட்டிக்கொண்டே சென்றான்.

“வா மனோ, உள்ள கூட்டீட்டுப் போறேன்…” சதா மகன் கையைப் பிடிக்க, “இல்ல மா, நான் குட்டியோட இருக்கேன்…” என வராண்டாவில் அமர்ந்துவிட்டான். சந்தனாவும் அவனருகில் அமர்ந்தாள்.

அவள் பையிலிருந்து புத்தகங்களை வெளியே எடுத்து வைத்து வீட்டுப் பாடங்களை செய்தாள். “மனோ… இங்கிலீஷ் எழுதித் தரீயா?” என அவனிடம் இவள் ஆங்கில புத்தகத்தை நீட்ட, அவனும் எழுதிக் கொடுத்தான்.

“மனோ… நான் செடிக்கு தண்ணீ ஊத்தவே இல்ல. கொஞ்சம் ஊத்தீட்டு வரேன்…” என்றவள் எழுந்து செடிக்கு தண்ணீர் ஊற்றினாள். ஆசையாய் வெள்ளை ரோஜாவைத் தொட்டுப் பார்த்தாள்.

அதைப் பார்த்த மனோ, “குட்டி… உனக்கு ரோஸ் வேணுமா? எடுத்துக்கோ…” என அவன் பறிக்க வர, “இல்ல… இல்ல. பாவம் மனோ, சாயங்கலாம் செடி எல்லாம் தூங்குமாம். நீ அதை தொந்தரவு பண்ணாத. அது செடியிலே இருக்கட்டும்…” என்றாள் பெரிய மனுஷியாய். பூரணிதான் மகளிடம் அவ்வாறு கூறியிருந்தார்.

“அப்படியா… சரி. உனக்கு ரோஸ்ன்னா ரொம்ப பிடிக்குமா?”

“ஆமா… ஆமா. வெள்ளை ரோஜா ரொம்ப அழகா இருக்குல்ல. நான் அம்மாகிட்டே கேட்டிருக்கேன். இதே மாதிரி எனக்கும் செடி வாங்கித் தரேன்னு சொல்லிருக்காங்க” என்றாள் ஆர்வமாய்.

“இந்த ரோஸ் எங்க அப்பா வாங்கிக் கொடுத்தாரு. வெள்ளை ரோஸ் நான்தான். இந்த மாதிரிதான் பொறந்தப்போ வெள்ளையா இருந்தேன். அதனால இந்த வொய்ட் ரோஸ் நான்னு அம்மா சொல்லுவாங்க…” என அவன் கூற, அவனையும் ரோஜாவைம் மாறி மாறிப் பார்த்தாள் சின்னவள்.

“ஆமா… நீ வெள்ளையா இருக்க. ஆனால், நான் கருப்பா இருக்கேன்!” அவள் வருத்தப்பட,

“குட்டி… நீ ப்ளாக் இல்ல. இங்க பாரு, இந்த பிங்க் கலர் ரோஸ் மாதிரி இருக்க நீ…” என்றான்.

“போ மனோ, பொய் சொல்லாத நீ. நான் கருப்பாதான் இருக்கேன். பாரு இங்க…” என அவன் முன்னே கையை நீட்டினாள்.

“குட்டி… உன்னோட உதடு என்ன கலர்ல இருக்கோ, அதுதான் உன் கலர். பாரு உன் உதடு ரோஸ் கலர்ல இருக்கு…” என அவன் கூற,

இவள் கீழுதட்டை இழுத்துப் பார்த்துவிட்டு, “ஆமா மனோ… நான் ரோஸ் கலர்ல இருக்கேன்!” என பற்கள் தெரியப் புன்னகைத்தாள். அவனும் தலையை அசைத்தான்.

“அப்போ இந்த வெள்ளை ரோஜா நீ. ரோஸ் கலர் ரோஜா நானா?” என அவள் கேட்க, “ஆமா…” என அவன் தலையை அசைத்தான். மேலும் அவளது பள்ளியைப் பற்றி மனோ வினவ, சந்தனா பதிலளித்தாள். பூரணி வேலை முடித்துவிட்டு வர, சந்தனா அவனிடம் விடைபெற்று வீட்டை நோக்கி நகர்ந்தாள்.

மனோ கூறியவற்றை தாயிடம் வளவளத்துக் கொண்டே அவள் வர, பூரணி தலையை அசைத்து அனைத்தையும் கேட்டுக்கொண்டார்.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top