அன்பு‌ 10.2

“போதும்… போங்க ரஞ்சன். உங்களோட ரொமான்ஸ் எல்லாம் நைட் வச்சுக்கலாம். இப்போ சமத்துப் பையனா ப்ரெஷாகிட்டு கேக் வெட்ட வருவீங்களாம்!” என்ற மனைவியை ஆசைத் ததும்ப பார்த்திருந்திருந்தான்.

“என்ன அஷூப்பா. என்னையே பார்த்துட்டே இருந்தா எப்படி. போங்க…” என்றவள் குரல் முழுவதும் அவன் மீதான வாஞ்சைக் கொட்டிக் கிடந்தது. அதை உள்வாங்கியவன், சிறிய தலையாட்டலோடு நகர்ந்தான்.

பால்கனியில் நின்றிருந்தாள் சந்தனா. மருத்துவனையில் இருந்து அழைப்பு வரவே, அதை ஏற்றபடி இங்கே வந்து நின்றாள். அழைப்பைத் துண்டித்தும் அந்த இடத்தைவிட்டு அகல மனமில்லாமல் வானத்தையே வெறித்திருந்தாள். பார்வையை சுழலவிட்டவளின் விழிகள் ஒரு நொடி ரஞ்சன் மற்றும் ஷோபனாவில் படிந்தது‌. காற்றிற்கு லேசாய் கதவு திறந்திருக்க, இவளது பார்வை தன்னிச்சையாக அங்கே படிய, நொடியில் திரும்பிவிட்டாள்.

குனிந்து முன்னே வண்ண வண்ணமாய் பூத்திருந்த ரோஜாக்களைப் பார்த்தாள். சிவப்பு, வெள்ளை, மஞ்சள், ஊதா என அழகாய் மொட்டவிழ்ந்திருந்தன. வெள்ளை ரோஜாவை இவளது கரங்கள் தொட்டுத் தடவின. பின்னர் நிமிர்ந்து வானிலிருந்த நட்சத்திரங்களை இலக்கில்லாது பார்த்தாள்.

என்ன செய்து இக்கணத்தின் கனத்தைப் போக்குவதென அவளுக்குத் தெரியவில்லை. யாருமே இல்லாத இடத்திற்குச் சென்று இத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்த அழுகையைக் கொட்டித் தீர்த்துவிடலாம் என்றொரு உந்துதல். தன்னை எதுவும் பாதிக்கவில்லை என்றொரு இறுமாப்பில் இருந்தவளின் நம்பிக்கை ஒவ்வொரு நாளும் உதிர்ந்து கொண்டிருந்தது. தன்னுணர்வுகளைப் பகிரக் கூட குகேஷ் அருகில் இல்லையென மனம் வலித்து தொலைத்தது. இவளது மனக்குரல் அங்கே அவனுக்கு கேட்டுவிட்டது போல. அலைபேசி இசைக்க, எடுத்துப் பார்த்தாள்.

“குகா காலிங்…” என்ற பெயரைப் பார்த்ததும் இத்தனை நேரம் இறுக்கிக் கட்டியிருந்த கயிற்றொன்றின் நூலிழை மெதுவாய் அவிழத் துவங்கியது போல அவள் போட்டிருந்த வேலி உதிரத் தொடங்கியது.

மெல்ல விழிகள் கலங்க, பார்வை மங்கலாகின. தொண்டைவரை அடைத்த உணர்வை சரிசெய்யும் எண்ணம் உத்தமமாய் அவளுக்கில்லை போல. உவர் நீர் கன்னத்தில் இறங்கின. ஸ்மரணையற்று சமைந்திருந்த மனதிற்கு அப்போதுதான் புறத்தூண்டல் உறைத்தது‌.

அலைபேசி திரையையேப் பார்த்திருந்தாள். விழிகள் பளபளத்தன‌‌. அழைப்பு முழுவதும் முடிந்து மீண்டும் வர, கண்ணீரை துடைத்துவிட்டு அதை ஏற்று செவிக்கு ஈந்தாள். சத்தியமாய் அவனிடம் பேச முடியும் எனத் தோன்றவில்லை. அழுதுக் கதறிவிடுவோம் என இத்தனை நாட்கள் இறுமாந்திருந்த நெஞ்சம் பயந்து தொலைத்தது.

“சந்து, என்ன பண்ற?” மறுபுறம் அவன் வினவ, இவளிடம் பலத்த அமைதி.

“லைன்ல இருக்கீயா டி?” குகேஷ் ஒருமுறை அலைபேசியை சரி பார்த்தவாறு வினவினான்.

“ஹம்ம்… சொல்லு குகா. சும்மாதான் இங்க ஒரு பெர்த் டே பங்க்ஷன் அட்டென்ட் பண்ண வந்தேன்!” என்றாள் சின்ன குரலில்.

“வாய்ஸ் ஏன் ஒரு மாதிரி இருக்கு சந்தனா?” அவன் நொடியில் வினவ, இவளுக்கு மேலும் விழிகள் பொங்கின.

அடைத்த தொண்டையை சரிசெய்து உருண்டு திரண்டிருந்த உவர்நீரை உள்ளிழுத்தவள், “ஐ யம் ஓகே குகா…” என்றாள் வலிய வரவழைத்தக் குரலில்.

“நீ ஓகேவா இல்லையான்றதை நான் முடிவு பண்றேன். வீடியோ கால் வா…” என்றான்.

“இல்ல வேணாம் குகா. நான் காலை எடுக்க மாட்டேன்…” இவளது குரல் லேசாய் இடறியது.

“நான் உன்னோட விருப்பத்தைக் கேட்கலை. அட்டென்ட் பண்ணுன்னு சொன்னேன்…” என்றவன் காணொளி அழைப்பைவிடுத்தான்.

இவள் முகத்தை நன்றாகத் துடைத்துவிட்டு அழைப்பை ஏற்றாள். “அழுதியா நீ?” ஒரு நொடியில் அவளது முகத்தை ஊன்றிப் பார்த்து வினவினான் குகேஷ். எதுவும் பேசாது உதட்டைக் கடித்தாள். கேவி வந்த அழுகையை அடக்கி புன்னகைக்க முயன்ற உதடுகளில் சர்வ நிச்சயமாய் உயிர்ப்பில்லை. ஏனோ குகேஷ் இந்நொடி தன்னருகே இருந்திருக்க கூடாதா என மனம் ஊமையாய்க் கதறித் துடித்தது.

“சந்தனா… உன்கிட்டே தான் கேக்குறேன். எதுக்காக அழுத? என்னாச்சுன்னு சொல்லு முதல்ல?” அதட்டலாய் உரைத்தவனின் குரல் முழுவதும் இந்தப் பெண்ணிற்கானத் தவிப்புதான் கொட்டிக் கிடந்தது.

அந்தக் குரலில் இவளுக்கு அழுகை வரப் பார்க்க, “குகா.‌.. நேர்ல பேசலாம். நீ வரும்போது சொல்றேன். ப்ளீஸ் இப்போ எதையும் கேட்காத…” என்றவளின் விரல்கள் திரையிலிருந்த சிவப்பு பொத்தானை அழுத்தின.

மீண்டும் விழிகள் கலங்க நிமிர்ந்து வானத்தை வெறித்தாள். நெஞ்சு முழுவதும் அழுத்திய பாரத்தை யாரிடமும் இறக்கி வைக்க முடியாது என்ற நிதர்சனம் உணர்ந்ததில் வயிற்றிலிருந்து ஏதோ ஒரு உணர்வு அவளை உடைந்தழச் சொல்லி உந்த, இறுகிப் போய் நின்றாள். இதுதானே அவளுடைய வாழ்க்கை என அவளாய் அமைத்துக் கொண்ட பாதை. அதில் எது வந்தாலும் தான்தானே எதிர்கொள்ள வேண்டும் என மனம் தனக்குத்தானே சமாதான மொழிகளை உரைத்தது.


பூரணி சமையலறைக்குள் நுழைய, சந்தனா வெளியே அமர்ந்துவிட்டாள். அவளது பார்வை உயர்ந்து சாளரத்தை நோக்கியது. ஆள் அரவம் எதுவுமில்லை அங்கு. இவள் பையைத் திறந்து டப்பாவை வெளியே எடுத்து வைத்தாள்.

தீனா வந்ததும் அவனுக்கு இரண்டு பனியாரங்களைக் கொடுத்துவிட்டு, மனோவிற்கும் கொடுக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் மனம் அதையே சுற்றி வந்தது. இவள் வந்து சிறிது நேரம் கழித்தே தீனா எழுந்து வந்தான்.

“ப்ரஷ் பண்ணீட்டு காஃபியைக் குடி தீனா…” என்று சதா அதட்டலை அசட்டை செய்தவன், சந்தனாவைப் பார்க்க ஓடிவிட்டான்.

தீனா தன்னருகே அமர்ந்ததும் அவனை முறைத்தவள், “ஏன் இவ்வளோ நேரம் வரலை தீனா? நான் அப்போவே வந்துட்டேன்…” என்றாள்.

“குட்டி… நான் மனோவோட இன்னைக்கு தூங்கிட்டேன். அதான் வர முடியலை…” என சுவரில் சாய்ந்தான்.

“மனோ எங்க தீனா? அவனுக்கு வலி சரியாகிடுச்சா?” என இவள் கவலையாய்க் கேட்டாள்.

“மனோ தூங்குறான் குட்டி. பாவம் அவனுக்கு நைட்டெல்லாம் வலி. அழுதுட்டே இருந்தான். அப்புறம் மாமா அவனுக்கு மாத்திரை கொடுத்தாரு. அதை சாப்ட்டு அவன் தூங்கிட்டான்…” எனக் கூறவும் இவளுக்கு வருத்தமாகிப் போனது.

“தீனா… அம்மா பனியாரம் செஞ்சாங்க. உனக்கும் மனோவுக்கும் எடுத்துட்டு வந்தேன்…” என அவனுக்குக் கொடுத்தவள், “இந்த ரெண்டு பனியாரத்தை மனோகிட்டே கொடுத்துடு…” என்றாள்.

“சரி குட்டி…” என்றவன் பனியாரத்தை எடுத்து சுவைத்தான்.

“குட்டி பனியாரம் சூப்பரா இருக்கு. உங்கம்மா அடிக்கடி செய்வாங்களா?”

“ஆமா… அப்பாவுக்கும் எனக்கும் பனியாரம் ரொம்ப பிடிக்கும். அம்மா அடிக்கடி செஞ்சுத் தருவாங்க…” என்றாள் இவள் ஆசையாய்.

“எங்கம்மா பனியாரம் எல்லாம் சுட்டே தர மாட்டாங்க. அப்பா ஹோட்டல்ல வாங்கித் தருவாரு. ஆனால் அது டேஸ்டே இருக்காது…” இவன் பதிலளிக்கும் போதே மனோ ஊன்றுகோல் உதவியுடன் வெளியே வர, சந்தனா குடுகுடுவென ஓடிச்சென்று அவனது கையைப் பிடித்துக் கொண்டாள்.

“மனோ… இந்தா, என் தோள்ல கை போட்டு புடிச்சுக்கோ. உனக்கு வலிக்கப் போகுது!” என்றாள்

error: Content is protected !!
Scroll to Top