சந்தனா கூறியது போல அரைமணி நேரத்தில் தயாராகினாள். இளமஞ்சள் நிறத்திலான பருத்திப் புடவை ஒன்றை உடுத்தியவள், பால்கனிக்குச் சென்று புதிதாய் பூத்திருந்த வெள்ளை ரோஜா ஒன்றை எடுத்து தலையில் வைத்துக் கொண்டாள்.
லட்சுமி அம்மா மனோவை தயார் செய்து தானும் கிளம்பியிருந்தார். மூவரும் சரியாய் கூறிய நேரத்திற்கு ரஞ்சன் வீட்டை அடைந்தனர்.
“வாங்க… உள்ள வாங்க சந்தனா. வாங்க அம்மா…” எனப் புன்னகையுடன் அவர்களை வரவேற்றாள் ஷோபனா. அஷ்வின் மனோ கையைப் பிடித்துக் கொண்டான். பெரியவர்களுக்கு புன்னகை பிறந்தது.
“உட்காருங்க லட்சுமிமா… ஜூஸ் எடுத்துட்டு வரேன்!” என்றவள் ஏற்கனவே பிழிந்து வைத்திருந்த ஆரஞ்சு பழச்சாற்றை மூன்று குவளையில் ஊற்றிக் கொடுத்தாள்.
“மனோ… சிந்தாம குடிக்கணும். மெதுவா!” என்ற சந்தனாவின் பார்வை மனோகரிடம்தான்.
“ப்ம்ச்… சந்தனா, சின்ன பையன் தானே? விடுங்க நீங்க!” ஷோபனா இவளை மென்மையாய் முறைத்தாள்.
சந்தனா பழச்சாற்றை அருந்தாது வீட்டைச் சுற்றி கண்களை சுழலவிட, “ரூம்க்குள்ள வந்து பாருங்க டாக்டர்…” என்ற ஷோபியின் குரலில் துள்ளலிலிருந்தது. சந்தனா தன் பழச்சாற்றை மனோ குவளையில் ஊற்றியவள், ஷோபனாவுடன் சென்றாள்.
இவள் உள்ளே நுழைய, வலதுபுறம் இடதுபுறம் என அறை முழுவதும் ஷோபனாவும் ரஞ்சனும் நிறைந்து கிடந்தனர். அவர்களுள் அஷ்வினும் அடக்கம். ஆங்காங்கே ரஞ்சனின் தாய் தந்தையரும் ஷோபியின் பெற்றவர்களும் எட்டிப் பார்த்தனர்.
“சந்தனா… யூ ஆர் சோ ஸ்வீட். இங்க பாருங்க, நீங்க சொன்னது போல நான் போட்டோஸ் எல்லாம் கலெக்ட் பண்ணி ப்ரேம் போட்டு மாட்டிட்டேன்…” என்ற ஷோபனா,
“இது நான் அவரை செகண்ட் டைம் பார்த்தது. இந்தப் போட்டோ மேரேஜ்ல அவருக்குத் தெரியாம எடுத்தேன். இதோ… இப்போதான் ப்ரபோஸ் பண்ணேன். பாருங்க ரிஜெக்ட் பண்ணும்போது கூட சிரிச்சிட்டே இருக்காரு அவரு. அப்புறம் மூனு வருஷம் அவருக்குத் தெரியாம ஃபாலோ பண்ணி எடுத்தது இந்த பிக்ஸ். தென், மேரேஜ் ப்ரபோசல் அப்போ இது. அப்புறம் ஹனிமூன் போனப்போ எடுத்தது அந்த பிங்க் ட்ரெஸ் போட்டோ…” என ஒவ்வொரு புகைப்படமாக அவள் விவரித்துக் கொண்டே போக, சந்தனா அமைதியாய் சின்ன புன்னகையுடன் அவளை நோக்கினாள். பின்னர் ஒவ்வொரு புகைப்படமாக விழிகளைப் பதித்தாள்.
இருபத்து ஐந்து வயதில் கொஞ்சம் முதிர்ச்சி இல்லாது இருந்தான் ரஞ்சன். இப்போதிருக்கும் தோற்றத்திற்கும் அந்தப் புகைப்படத்திற்கும் இடையே ஏழெட்டு வேறுபாடுகள் இருந்தன. வயது முதிர்வு மட்டுமல்ல, முகம் இந்தப் பிராயத்திற்குரிய முதிர்ச்சியிலிருந்தது. ஆனாலும் அவன் வயதை இன்னதென கணிக்க முடியாதது போன்ற தோற்றம். உதடுகளில் புன்னகை உதிர, ஷோபனா, அஷ்வின் என அவர்களுடைய ஒவ்வொரு கட்ட வாழ்க்கையின் நகர்வை நிறைவாய்ப் பார்த்தாள். அத்தனை அழகாய் இருந்தது. அதை வாய் வார்த்தையாக கூறவும் செய்தாள்.
“ரொம்ப அழகா இருக்கு ஷோபி. ஒரு மாதிரி குட்டியா ஃபீல் குட் லவ் மூவி பார்த்தது போல உங்களோட லைஃப்ல ஒவ்வொரு ஸ்டேஜூம் லவபிளா இருக்கு…” சந்தனா உணர்ந்து கூற,
அவளது முகத்தையே பார்த்திருந்த ஷோபனா, “தேங்க் யூ சோ மச் சந்தனா. போட்டோஸ் வெறும் இமேஜ் மட்டும் இல்ல, அது நம்பளோட ஃபீலிங்க்ஸ், மெமரீஸ். ஒவ்வொரு தடவை நம்ப அதைப் பார்க்கும் போது அழகான நினைவு நம்ம மனசைவிட்டுப் போக டைம் எடுக்கும்னு நீங்க சொன்னது எவ்வளோ உண்மைன்னு இப்போ என்னால உணர முடியுது. டெய்லி இனிமே இந்த போட்டோஸ்ல தான் என்னோட டேய்ஸ் ஸ்டார்ட்டாகி முடியும்…” மகிழ்ச்சி ததும்பிய குரலில் உரைத்தாள்.
“இன்னொரு கிஃப்ட் கூட நான் வாங்கி வச்சிருக்கேன். கஸ்டமைஸ்ட் கிஃப்ட் அது. பார்க்குறீங்களா?” என்றவள் கைபேசியை எடுத்து அதைக் காண்பித்தாள்.
“ஹேப்பி பெர்த் டே ரஞ்சன்!” என அழகாய் எழுதியிருக்க குட்டியாய் அவர்களுடைய வீட்டின் அமைப்பை நகலெடுத்து அதில் ரஞ்சன், அவனது தாய், தந்தை, மனைவி, மகன் என அனைவரும் வீற்றிருந்தனர். அது கண்ணைக் கவரும் வகையிலிருக்க, சந்தனாவின் இதழ்கள் விரிந்தன.
“சூப்பரா இருக்கே ஷோபி. உங்க ஹஸ்பண்ட்க்கு இன்னைக்கு நிறைய சர்ப்ரைஸ் போங்க…” என்றாள். ஷோபியின் முகம் மலர்ந்து போனது.
அழைப்புமணி ஒலிக்க, “அவர் வந்துட்டார்னு நினைக்கிறேன் சந்தனா. நீங்க இருங்க, நான் வந்துட்றேன்…” என்றவள் அகல, சந்தனா அமைதியாய் அந்தப் புகைப்படத்தையே பார்த்திருந்தாள். ரஞ்சன் ஷோபியின் ஒவ்வொரு நகர்விலும் அவர்களது காதல் இன்னுமின்னும் கூடியிருந்ததை அவளால் உளமார உணர முடிந்தது. அவர்களது முகத்திலிருக்கும் புன்னகையே அதற்கு சாட்சி. திருமணப் புகைப்படத்தைத் தொட்டுத் தடவிப் பார்த்தாள்.
“ஹேப்பி பெர்த்டே அங்கிள்…” மனோகர் குரலில் கலைந்தவள், அறையைவிட்டு வெளியே வந்தாள்.
இவளைப் பார்த்ததும், “வாங்க டாக்டர்…” என அவன் அழைக்க, இவள் சின்ன தலையாட்டலுடன் அதை ஏற்றிருந்தாள்.
“இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ரஞ்சன். இதே மாதிரி உங்க குடும்பத்தோட என்னைக்கும் சந்தோஷமா இருக்க, என்னோட வாழ்த்துக்கள்!” என்றவளின் குரலில் ரஞ்சனின் புருவங்கள் உயர்ந்து இறங்கின.
“காலைல இருந்து இப்போ வரைக்கும் ஒருத்தர் கூட தமிழ்ல விஷ் பண்ணலை. உங்களோட விஷ் ரொம்ப ஸ்பெஷலாகிடுச்சு டாக்டர். தேங்க் யூ…” என அவன் கூற, இவளது முகம் மலர்ந்தது.
“ஃபைவ் மினிட்ஸ்ல வந்துட்றேன்…” என அனைவரிடமும் பொதுப்படையாகக் கூறிவிட்டு அவன் அறைக்குள் நுழைய, ஷோபனாவும் அவன் பின்னே சென்றாள்.
சந்தனா கூடத்திலிருந்த இருக்கையில் அமர்ந்தாள். அஷ்வினும் மனோவும் அவளது அலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்தனர். லட்சுமி நீள்விருக்கையில் அமர்ந்திருந்தார்.
“இந்தப் பொண்ணு ஷோபனா ரொம்ப நல்ல பொண்ணா இருக்கால்ல சந்துமா?” என அவர் வினவ, இவளது தலை அதை ஆமோதித்தது. மேலும் அவர் பேச, இவள் பதிலளித்த வண்ணமிருந்தாள்.
அறைக்குள் நுழைந்த ரஞ்சனின் முகம் நொடியில் மலர்ந்து போனது. அறை முழுவதும் அவர்களது அன்பை நிரப்பியிருந்தாள் மனைவி. அதில் அவனுக்குமே அகமும் முகமும் நிறைந்து போனது. அவனது முகபாவனைகளை சிந்தாமல் சிதறாது உள்வாங்கினாள் ஷோபனா.
“ஷோபி… பென்டாஸ்டிக்…” என்றவன், “ஹே… இந்தப் பிக் எப்போ எடுத்தது டி?” திருமணத்திற்கு முன்பான புகைப்படம் ஒன்றைக் கைகாண்பித்தான்.
“சொல்ல மாட்டேன்…” இவள் சுவரில் சாய்ந்து நின்றாள்.
“ப்ம்ச்… ஷோபி…” என்றவன் அவளது கையைப் பிடித்திழுக்க, “நம்ப அப்புறம் பேசலாம். இப்போ எல்லாரும் வெயிட் பண்றாங்க. போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க…” என்றாள் அவள்.
“நீ பதில் சொல்லாம விட மாட்டேன் ஷோபி…” என்றவன் மனைவியை அணைத்துக்கொள்ள, மென்முறைப்புடன் அவனைப் பார்த்தவள், “ஃபர்ஸ்ட் டைம் உங்களைப் பார்த்தப்போ எடுத்தது…” என்றாள்.
அவன் முகத்தில் யோசனைப் படர, “அப்போ உங்களுக்கு என்னைத் தெரியாது. எனக்கு மட்டும்தான் உங்களைத் தெரியும். சோ, மறைஞ்சு நின்னு எடுத்தேன் அஷூப்பா…” என ஆசையாய்க் கூறியவளை ஆதுரமாய்ப் பார்த்தான் ரஞ்சன். அவள் குரல் முழுவதும் கணவனுக்கானதுதான். அந்த வார்த்தையில் கொட்டிக் கிடந்த அன்பை சுகமாய் சலுகையாய் இவனது மனம் உள்வாங்கியது.
“தேங்க்ஸ் ஷோபி. தேங்க்ஸ் ஃபார் கம்மிங் இன் மை லைஃப்!” என அவனது உதடுகள் அன்பாய் மனைவியின் நெற்றியில் பதிந்தன. அதில் ஷோபனாவின் முகம் கணவனின் நேசத்தில் திளைத்திருந்தது.
“நான்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும் அஷூப்பா. நீங்க சொல்லக் கூடாது!” என்றவள் எக்கி அவனது நெற்றியில் முத்தமிட முயல, இவன் மனைவியைத் தூக்கினான்.
“தேங்க் யூ அஷூப்பா… தேங்க் யூ ரஞ்சன். இதே மாதிரி எப்பவும் உங்களை நான் காதலிச்சுட்டே இருக்கணும்!” என அவன் நெற்றியில் முத்தமிட்டவளின் குரல் நெகிழ்ந்திருந்தது. ரஞ்சன் கரங்கள் மனைவியை இன்னுமே இறுக்கிக் கொண்டன.
இந்தப் பெண் ஏன் தன் மீது இத்தனை அன்பு செலுத்துகிறாள் என ஒவ்வொரு முறையும் அவன் வியந்தது உண்டு. அவளது ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் அவன் மீதான அன்பும் காதலும் வெளிப்படும்.
இப்போது கூட அவன் பிறந்தநாளுக்கு அணிச்சல் செய்வற்காகத்தான் அவள் பகலில் சிறப்பு வகுப்பிற்குச் சென்றாள் என்றுணர்ந்து அவன் கடிந்தப்போது கூட மனைவி அதை அசட்டை செய்திருந்தாள்.
அவளுடைய அத்தனையிலும் தான்தான் நிறைந்திருக்கிறோம் என்ற நினைப்பே இவனை போதைக் கொள்ள செய்தது. இந்த அன்பின் பிடியில் வாழ்நாள் முழுவதும் அடிமையாகக் கிடக்க கூட அவனது மனம் ஒப்புக்கொள்ளும். அந்த அளவிற்கு மனைவி அவனை அன்பால் உருக்கியிருந்தாள்.
அவளது வார்த்தைகள் இவனை உருகச் செய்ய, “நான் கூட காலம் முழுக்க இந்த ஷோபியோட காதல்ல வாழ்ந்துடணும். அவளோட மொத்த அன்பும் காதலும் யாருக்கும் கொடுக்காம நானே வச்சுக்கணும் டி. உன் அளவுக்கு என்னால நேசிக்க முடியலை. பட், இருந்தாலும் என்னோட அன்பு மொத்தமும் இந்த ஜென்மத்துல என் பொண்டாட்டியைத் தவிர யாருக்கும் கிடையாது. ஐ லவ் யூ ஷோபி. லவ் யூ அ லாட்!” என அவளது முகம் முழுவதும் இதழ்களை ஒற்றியெடுத்தான் ரஞ்சன்.
அவன் வார்த்தைகள் எத்தனை இன்பத்தை வாரியிறைத்தன என ஷோபனாவால் வாய் வார்த்தையாக உரைக்க முடியாது. தான் மட்டுமே கொடுத்த நேசத்தை அவன் திரும்பக் கொடுக்கும்போது ஏதோ உலகையே வென்ற திருப்தி. அவளைப் பொறுத்தவரை ரஞ்சன்தான் அவளது உலகம். அஷ்வின் அதிலொரு பிரதான பகுதி. அவர்களைச் சுற்றித்தான் பெண்ணின் நாட்கள் இயங்கும்.