காதல் 17:
“வெளியவே சாப்பிட்டு வந்துட்டிங்களா…?” என்ற மாமியாரின் குரலில் நடப்புக்கு வந்த மகிழ்,
“ஹான் சாப்பிட்டு வந்துட்டோம்த்தை” என்று பதில் மொழிந்தாள்.
“ஓ… முன்னாடியே போன் பண்ணி சொல்லியிருக்கலாம்ல. நான் உங்களுக்கு சேர்த்து சாப்பாடு செஞ்சு வச்சிட்டேன்” என்றுவிட,
“அது அத்தை…” என்று தயங்கிய மகிழுக்கு வார்த்தை வர மறுத்தது. சொல்லாமல் உண்டுவிட்டு வந்தது தங்களுடைய தவறுதானே என்று எண்ணி சிறிது வருத்தத்தமும் அந்த குரலில் தொனித்தது.
மகிழ் திணறுவதை கவனித்த குரு,
“ம்மா நான் சொல்லலாம்னு தான் நினைச்சேன். என் மொபைல்ல சார்ஜ் இல்லை. அவ மொபைல வீட்லயே வச்சிட்டு வந்துட்டா” என்று குரு பதில் அளித்திருந்தான்.
மகன் மருமகளுக்காய் பரிந்து பேசுயதில் சிறிய புன்னகை பிறக்க,
“சரிடா நான் கோகிலாவ வந்து இதை எல்லாம் எடுத்துட்டு போக சொல்லிட்றேன்…” என்று முடித்துவிட்டார்.
குரு அவ்வளவு தான் என்பது போல இளையவர்களை அழைத்து கொண்டு அறைக்கு சென்றுவிட,
“அத்தை நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணவா…?” என்று தயங்கியபடி வினவினாள்.
“இதுல ஹெல்ப் பண்ண என்ன இருக்கு. எல்லாத்தையும் நான் அப்பவே ஒதுங்க வச்சிட்டேன். நீ பசங்களுக்கும் குருவுக்கும் பால் எடுத்திட்டு போ…” என்க,
“சரிங்கத்தை…” என்றவள் பாலை எடுத்து காய்ச்ச துவங்கினாள்.
இதற்குள் கோதை சமையலில் உதவிக்கு இருக்கும் கோகிலாவை வீட்டிற்கு அழைத்து சாப்பாட்டை கொடுத்துவிட்டிருந்தார்.
கோகிலா வந்து சென்ற பிறகு மீதம் இருந்தவற்றை ஒதுங்க வைக்க கோதைக்கு உதவிவிட்டே பாலை எடுத்து கொண்டு அறைக்கு சென்றாள்.
பால் குவளையுடன் அறைக்குள் நுழைந்தவளது கால்கள் ஒரு நொடி நின்றுவிட்டது.
காரணம் எதிரில் குரு மெத்தையில் அமர்ந்து கொண்டு இளையவர்களை படுக்க வைத்து ஏதோ கதையை கூறி கொண்டிருந்தான்.
ஏதோ ராஜா கதையை அவனுக்கு தெரிந்த வகையில் கூறி கொண்டிருந்தான்.
படுத்து கொண்டிருந்த எழிலும் கவினும் எழுந்து அமர்ந்து கதை கேட்கும் ஆர்வத்தில் கன்னத்தில் கையை வைத்து கேட்க துவங்கினர்.
என்னவோ அந்த நொடி அந்நிகழ்வு அவளுக்கு கவிதையாக தோன்றியது. குரு இப்படி கதை எல்லாம் செல்ல கூடும் என்று அவள் என்றுமே எண்ணியதில்லை.
ஏதோ குழந்தைகளுடன் ஓரளவு நெருங்கி பழகுகிறார் அதுவே அவரது இயல்பிற்கு அதிகமான ஒன்று என்று எண்ணியிருந்தாள்.
ஆனால் இவனது இந்த பரிமாணம் முற்றிலும் புதிது. மகிக்கு இது நிறைய ஆச்சர்யத்தை உண்டாக்கியிருந்தது.
நிமிடங்கள் கடந்தும் மகிழ் அங்கேயே தேங்கிவிட குரு தான் அவளது அரவத்தில் நிமிர்ந்து பார்த்தான்.
அவன் தன்னை நோக்குவதை உணர்ந்தவள் குருவின் முகம் காணாது உள்ளே சென்று பாலை அவனருகே உள்ள மேஜையில் வைத்துவிட்டு,
“எழில், கவின் ரெண்டு பேரும் பாலை குடிச்சிட்டு தூங்குங்க” என்றிட,
“நோ நாங்க அப்பா சொல்ற ஸ்டோரிய கேட்டு முடிச்சிட்டு தான் படுப்போம்…” என்று இருவரும் ஓரே போல பதில் அளித்தனர்.
இவள் தான் பதில் இல்லாது இருவருக்கும் பாலை கொடுத்துவிட்டு மொழியின்றி படுத்துவிட்டாள்.
பாலை குடித்து முடித்ததும் இருவரும் மீண்டும் குருவிடம், “அப்பா… ஸ்டோரி சொல்லுங்க” என்று அவனிடம் தாவினர்.
இங்கே மறுபுறம் திரும்பி படுத்திருந்த மகிழுக்கு அவர்களது குரல் கேட்டாலும் திரும்பி குருவை பார்க்கும் அளவிற்கு தைரியம் வரவில்லை.
என்னவோ ஒரு குற்றவுணர்வு வெகுவாய் தாக்கியது. அதுவும் அவன் தன் பொருட்களை கூட தொடக்கூடாது என்று கூறிவிட்டிருக்க தானோ அவனையே அணைத்து விட்டோம்.
அதுவும் அத்தனை இறுக்கமாக அணைத்து முகத்தை அவனது வயிற்றில் முகத்தை புதைத்து பல நிமிடங்களாக அப்படியும் இருந்தது. அவனது உடலை நனைக்கும் படி தான் கண்ணீர் விட்டது எல்லாம் சேர்ந்து மகிழுக்கு ஒரு வித அவமானம் என்று தான் கூற வேண்டும்.
அவரது உடமைகளை கூட தொட அனுமதிக்காத ஒருவரை அணைத்தது எத்தனை பெரிய குற்றம்.
உள்ளே குறுகுறுத்தது. தன்னை பற்றி என்ன நினைத்திருப்பார். தவறாக எண்ணியிருப்பாரோ…? சே சே இருக்காது இங்கு வந்த இத்தனை மாதங்களில் எனது சுண்டு விரல் கூட அவரது மேல் பட்டிருக்காது.
வெளியில் கூடாரத்தில் அமரும் போது தேநீரை கொடுக்கும் போது உணவை பரிமாறும் போது என்று எந்நேரமும் தன்னையும் மறந்து கூட குழுவின் மேல் விரல் நுனி கூட பட்டுவிட கூடாது என்று அத்தனை கவனமாக இருப்பேனே.
அப்படியிருக்க தான் இதை வேண்டுமென்று செய்திருப்பேன் என்று அவர் நினைக்க வாய்ப்பில்லை என்று ஒரு மனம் கூறியது.
மற்றொரு மனமோ நீயே கற்பனை கோட்டை கட்டாதே. இத்தனை நாள் வாய்ப்பு இல்லாத போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது சந்தர்ப்பம் கிடைத்ததும் இப்படி செய்துவிட்டாய் என்று தான் நினைப்பார்.
இத்தனை நாட்கள் உன் விரல் நுனி படுகிறதா? இல்லையா? என்று கவனிப்பது தான் அவருடைய வேலையா? அவருக்கே செய்ய ஆயிரம் பணி இருந்தது. இதில் உன்னை எங்கு அவர் கவனிப்பது.
உறுதியாக அவர் உன்னை தவறாக நினைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்று மகிழை அலைகழித்தது.
இருக்காது இருக்காது நிச்சயமாக அவர் என்னை தவறாக நினைத்திருக்க மாட்டார் என்று தனக்குத்தானே பலவாறு கூறி கொண்டாலும் உள்ளத்தின் ஓரம் சிறிதான பயம் பரவத்தான் செய்தது.
மனது சில மணி நேரங்களுக்கு முன்பு பயணித்தது.
அந்த நேரத்தில் ஒரு ஆறுதல் ஒரு பற்றுக்கோல் சாய தோள் மனதிற்கு தேவைப்பட அவனை இறுக்கி கொண்டாள்.
என்னவோ அந்த நொடி அவனது அருகாமை எதையோ உள்ளே நிறைத்தது. இத்தனை நாட்களாய் தாயாய் தமக்கையாய் தானே முன்னின்று அனைத்தையும் செய்துவிட்டவளுக்கு ஆறுதல் கூற ஒரு ஆன்மா தேவைப்பட்டது போலும்.
எந்த சிந்தனையும் இன்றி அருகில் இருந்தவனை இறுக்கி கொண்டாள். நேரம் செல்ல செல்ல மனதின் அழுத்தம் அதிகரிக்க மகியின் அணைப்பும் இறுகியது.
இத்தனை வருடங்களாக ஓடி ஓடி தேய்ந்திருந்த மனதிற்கும் உடலிற்கும் இளைப்பாற இடம் கிடைத்தது போல தோன்றியது போல அவளுக்கு.