***
கோயம்புத்தூர் நகரின் கிராமப்புறம் அது. கொஞ்சமே கொஞ்சம் நகரத்தின் வளர்ச்சியை வரவேற்றுக்கொண்டிருந்தது அந்தப் பகுதி. அதில் பத்துக்கு பதிமூன்று என்ற அளவிலிருந்த சிறிய ஓட்டு வீட்டில் அங்குமிங்கும் விளையாடிக்கொண்டிருந்தாள் சிறுமி ஒருத்தி.
“குட்டி, இந்தப் பக்கம் வந்து விளையாடு. வீட்டை கூட்ட விடு!” என்ற அதட்டலுடன் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார் அன்னப்பூரணி.
“பூரணி, சீக்கிரம் வா. உன்னைக் கூட்டீட்டுப் போய் வேலைக்கு சேர்த்து விட்டுட்டு நான் என் பொழப்பைப் பார்க்கணும்!” பக்கத்து வீட்டு மரிக்கொழுந்து சேலையை உதறிவிட்டு இடுப்பில் சொருகியவாறே சப்தமிடவும், விரைவாய் சுத்தம் செய்து முடித்த பூரணி, “இதோ வந்துட்டேன் கா!” என வீட்டைப் பூட்டிவிட்டு மகளின் கையைப் பிடித்தார்.
“புள்ளையை எதுக்கு அவ்வளோ தூரம் கூட்டீட்டு வர. இங்கேயே விட்டுட்டு வர்றதுதானே?” என்ற கேள்வியுடன் அவர் இரண்டு எட்டு வைக்க,
“இல்லக்கா… ஊருக்குப் புதுசு. எங்கேயும் தொலைஞ்சுப் போய்ட்டா என்ன பண்றது. என் கூடவே வரட்டும்!” உதடுகள் பதிலை உதிர்க்க, அந்த மூத்தப் பெண்ணின் நடைக்கு ஈடுகட்டும் வகையில் மகளின் கையை இழுத்துக் கொண்டு நடந்தார் பூரணி.
“ம்மா… கை வலிக்குது. விடும்மா!” என அவரது கையை உதறிவிட்டு சின்னவள் முன்னே ஓடவும், “குட்டி பார்த்து…” என தாய் அதட்டினார். இருபது நிமிட நடை பயணத்தில் அந்தப் பெரிய வீட்டை அவர்கள் அடைந்தனர். வீட்டின் முன்னே இருந்த காயாம்பூ நிற மகிழுந்தை கடந்து அந்த விசாலமான வரண்டாவினுள்ளே நுழைந்தனர்.
“ம்மா… சதாம்மா!” மூத்தவர் குரல் கொடுக்கவும், “இதோ வரேன் மரிக்கொழுந்து!” என்றவாறு வந்து நின்ற பெண்மணியின் வலது கை கழுத்தோடு சேர்த்து கட்டப்பட்டிருந்தது. முகத்தில் வலியின் சாயல் தென்பட்டது. விபத்திலிருந்து மீண்டவர் என அவரது தோற்றமே எடுத்துரைத்தது.
“நல்லா இருக்கீங்களா சதாம்மா? தம்பி எப்படி இருக்காரு?” மரிக்கொழுந்து வினவ, சதாம்பிகா பதிலளித்தார்.
“இருக்கோம் மரிக்கொழுந்து. அவனை நினைச்சுத்தான் கவலையா இருக்கு!” என அவரிடம் பெருமூச்சு எழுந்தது.
“விடுங்கம்மா… ஏதோ நம்ப கெட்ட காலம். இப்படியெல்லாம் நடந்து போச்சு...” என வருந்தியவர்,
“இது பூரணி… எங்க ஊர்காரப் புள்ளை. புருஷனைப் பறிகொடுத்துட்டு, எங்கப் போறதுன்னு தெரியாம இங்க வந்துருக்கா. வேலை வேணும்னு கேட்டா. நீங்க வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு சொன்னது ஞாபகம் வர, இவளைக் கூட்டீட்டு வந்தேன்!” என பூரணியை அறிமுகம் செய்தார்.
சதாம்பிகா பூரணியை விழிகளால் அளந்தார். பருத்திப் புடவை ஒன்றை அணிந்திருந்தவரின் கழுத்து வெறுமையாக இருந்தது. முடியைத் தூக்கி கொண்டையிட்டிருந்தார். வெயிலில் நடந்து வந்ததால் முகம் வியர்வையில் குளித்திருந்தது.
இவர் பார்வையை உணர்ந்து, “வணக்கம்மா…” என்றார் பூரணி.
அதை தலையசைத்து ஏற்றுக்கொண்ட சதாம்பிகா, “நம்பிக்கையான ஆள் தானே மரிக்கொழுந்து?” என வினவ,
“அதெல்லாம் பூரணி தங்கம்மா. நல்ல புள்ளை, வாழ்க்கை சரியில்லாம போச்சு. அதனாலதான் வேலைக்கு வர்றா. கை சுத்தம் இவளுக்கு!” என மரிக்கொழுந்தின் வார்த்தைகள் உண்மையில் பூரணி மீதான அக்கறையில் தோய்ந்திருந்தது.
“சரி, அப்போ வேலைக்கு வரட்டும்!” சதா உரைத்ததும், “சரிங்க மா, நீங்க மத்ததைப் பேசிக்கோங்க. எனக்கு வேலைக்கு நேரமாச்சு. நான் போவணும்!” என மரிக்கொழுந்து விடை பெற்றார்.
“காலைல ஏழு மணிக்குள்ள வந்துடணும். வாசல் தெளிச்சு கோலம் போடணும். டீ, காஃபி போடணும், காலைக்கு சமைக்கணும். துணியை மிஷின்ல போட்டு காயப்போடணும். மதியத்துக்கும் சமைக்கணும்!” என்னென்ன வேலைகள் எனப் பட்டியலிட்டவர், மாத சம்பளத்தையும் உரைத்தார்.
“இதெல்லாம் உங்களுக்கு சரின்னா, இன்னைக்கே வேலைக்கு சேர்ந்துக்கோங்க!” என அவர் கூறியதும், “எனக்கு எல்லாம் சரிங்கம்மா, வேலைக்கு சேர்ந்துக்குறேன்…” எனப் பூரணி பதிலியம்பினார்.
அங்கே விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமியைப் பார்த்தவர், “இந்தப் பொண்ணு?” எனக் கேள்வியாய் நிறுத்தினார்.
“எம் பொண்ணுதான் மா. பள்ளிக்கூடம் சேர்த்துவிட்டுட்டேன். திங்கள் கிழமைல இருந்து போய்டுவா மா!” என கேட்காததற்கும் பதிலளித்தார்.
“சரி, சரி. சின்ன பிள்ளை, எதையும் உடைச்சிடுவா. அதனால பத்திரமா பார்த்துக்கோங்க!” என அவர் கூற,
“இல்ல மா, உள்ள கூட்டீட்டு வரலை. அவ இங்கனயே என் கண் பார்வையிலயே விளையாடட்டும்!” என்றுவிட்டார்.
“அப்போ சரி… வந்து வேலையைப் பாருங்க. மேல ரூம்ல என் பையன் இருக்கான். அந்த ரூம் மட்டும் நீங்க சுத்தம் பண்ண வேணாம். நான் பார்த்துக்குறேன்…” என்றவர் நீண்ட நேரம் நின்று பேசியதில் முதுகு வலித்ததற்கு அறிகுறியாக முகத்தைச் சுளித்தார்.
அவர் வீட்டுக்குள்ளே நடக்க, “குட்டி, அம்மா போய் வேலையைப் பார்க்குறேன். நீ இங்கேயே விளையாடணும். எங்கேயும் போகக் கூடாது!” என மகளிடம் அறிவுறுத்தினார்.
“போம்மா… நானும் உன்கூட உள்ள வர்றேன்” சின்னவள் சிணுங்கினாள்.
“உள்ள வரக்கூடாது டா தங்கம். நீ சமத்தா விளையாடீட்டு இருந்தா, அம்மா போகும்போது உனக்கு மிட்டாய் வாங்கித் தரேன்…” என மகளிடம் பேரம் பேசினார்.
“நிஜமா வாங்கித் தருவீயா மா?” எனக் கேட்டாள் சின்னவள்.
“அம்மா பொய் சொல்ல மாட்டேன் குட்டி!” என மகளை கண்ணுக்கு முன்னே விளையாட பணித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார் பூரணி.
அருகே கொட்டி வைத்திருக்கும் மணலருகே சென்ற சின்னவள், அதில் சரிந்து விளையாடத் துவங்கினாள். பின்னர் மணல்வீடு ஒன்றைக் கட்டி, அதற்கருகே குட்டியின் வீடு என தமிழில் எழுதினாள். அம்மாவிடம் காண்பிக்க வேண்டும் என்றொரு ஆர்வம் அவளுக்கு. மெதுவாய் வீட்டை எட்டிப் பார்க்க, பூரணி சமையலறையில் இருந்தார்.
இவள் சில நொடிகள் யோசித்துவிட்டு உள்ளே அடியெடுத்து வைக்க, மாடியில் ஏதோ சப்தம் கேட்டது. யாரோ கத்துவது போலிருக்க, தயங்கியபடியே மேலே பார்த்தாள். மீண்டும் அந்தக் கத்தல் தொடர்ந்தது. தாயைத் திரும்பி பார்க்க, அவர் வேலையில் மும்முரமாக இருந்தபடியால், அந்தச் சப்தம் அவரது செவியை எட்டவில்லை.
ஏதோ கீழே விழுந்து உடையும் சப்தம் கேட்க, தனது பிஞ்சுக் கால்களைக்கொண்டு வேகவேகமாக படியேறி அந்த அறை வாயிலில் நின்றாள். மூச்சு வாங்கியது, வெளியே தாழிட்டிருந்த அறையை மெதுவாய்க் கையை வைத்துத் தள்ள, திறந்துகொண்டது.
அந்த அறையே அலங்கோலமாக கிடக்க, இவள் பார்வை அங்கே கீழே அமர்ந்திருந்தவனிடம் சென்றது. அவளது வயதைவிட ஒன்றிரண்டு வயது மூத்தவன் போலிருந்தான். கால்களில் கட்டுப் போட்டிருக்க, அதை அசைக்க முடியாது அமர்ந்திருந்தவனின் நெற்றியிலும் பெரிய கட்டுப் போடப்பட்டிருந்தது. தூரத்திலிருந்த பொம்மை ஒன்றை அவன் எடுக்க முயற்சித்து முடியாது போனதால் கத்தியிருக்கிறான் என இவளால் உணர முடிந்தது.
“பொம்மை வேணுமா? நான் எடுத்து தரவா?” எனக் கேட்டவளுக்கு அவனைப் பார்த்து பாவமாய் இருந்தது.
விறுவிறுவென சென்று அந்தப் பொம்மையில் அவள் கையை வைக்க, “ஏய்… தட்ஸ் மை டாய்!” என கையில் கிடந்ததை அவள் மீது தூக்கியெறிந்திருந்தான் பெரியவன்.
“ஆ… அம்மா!” என்ற அலறலோடு கீழே விழுந்த சந்தனாவின் வலதுபுற நெற்றியில் லேசாய் ரத்தம் கசியத் துவங்க, இவள் அழுகை பெரிதானது.
தொடரும்...