• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

வேந்தன் 6

New member
Messages
9
Reaction score
1
Points
3
அத்தியாயம் 6

கடற்கரை ஓரம் வரிசையாக கடைகள் அணிவகுத்திருந்தது. ஆங்காங்கே மேஜையும் இருக்கைகளும் போடப்பட்டிருந்தது.

அதில்தான் நண்பர்கள் மூவரும் அமர்ந்திருந்தனர். “மானம் மரியாதை அம்புட்டும் காத்தோட போச்சேடா முருகேசா” என கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தான் ஸ்வீட் ஹீரோ துருவ்.

அவன் சோகமாக இருந்தாலும் சரிதான் கோபமாக இருந்தாலும் சரிதான் மனதை மயக்கி இழுக்கும் மாயக் கள்வனாகவே இருந்தான்.

இருகரங்களின் உள்ளங்கைகளும் கன்னத்தில் தாங்கியிருக்க, முழங்கைகள் மேஜையில் ஊன்றி இருந்தது. கீழ் உதடு அழகாய் பிதுங்கி இருக்க, அதுவும் அவனுக்கு அழகுதான்.

நடந்ததில் இருந்து அவனால் மீளவே முடியவில்லை. அடிச்சதும் இல்லாம அப்பாவியாட்டம் முழிச்சாளே பார்க்கலாம். அதில்தான் இவனுக்கு ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது.

யார்கிட்டயாவது சொன்னாலும் இந்தப் பொண்ணை குறை சொல்லாதடா என அவனுக்குத்தான் மொத்து விழும். முகத்தில் சாந்தமும், கையில் இருந்த செருப்பும் பார்க்கவே முரணாக இருந்தது.

கழுத்து உயரத்துக்கு இருந்தவளை அந்த இடத்துலயே கன்னம் கன்னமா நாலு அப்பு அப்பியிருந்தாக் கூட மனசு ஆறியிருக்குமோ என்னவோ. வந்த கோபத்தைக் காட்ட முடியாமல் நண்பர்கள் இருவரும் அவனைக் கொத்தோட தூக்கிக்கிட்டு வந்துட, அவனால் எதுவும் செய்ய முடியாமல் போனது.

இதுல அந்தக் குள்ளவாத்தோட அக்கா வேற காளியாட்டம் முறைச்சுக்கிட்டு வந்தாளே. நினைக்க நினைக்க மண்டைக்குள் சுள்ளுன்னு ஏறியது அவனுக்கு.

கைகள் வேறு தடிமாடுங்களை அடிச்சதால் வலியெடுக்க, ஒரு முறை உதறிக்கொண்டான்.

“அப்பவே வரலைன்னு சொன்னேன். பட்டிங்களா எல்லாம் உங்களால வந்த வினைடா” துருவ் நண்பர்கள் இருவரையும் வெறி தீர பேசியும் விட்டான். கைகள் நோக அடித்தும் உதைத்தும் விட்டான்.

அவன் கையும் காலும் நொந்ததுதான் மிச்சம். ஜிம் போய் உடம்பைத் தேத்தி பீம்பாய்க்கு இணையாக உடம்பை வைத்திருப்பவர்களுக்கு அவன் அடிப்பது உரைக்கவே இல்லை.

“விதிடா மச்சி. சக்தியில இருந்து தூத்துக்குடி வந்து செருப்படி வாங்கணும்னு விதிச்சிருக்கு உனக்கு” ஆத்மா சிரிப்பை மென்றவாறு அவனைக் கலாய்க்க.

“நாயே செத்தடா இன்னைக்கு” துருவ் அவன் மீது பாய.

“என்னண்ணே அடி பலமா” அவர்கள் பேசுவதைக் கேட்டுகிட்டே பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்தவன் கேட்ட கேள்வியில், அசந்து நின்றுவிட்டான் துருவ்.

வாயில் கைவச்சு நின்றவனுக்கு நளிர்பெண்ணை சும்மா விட்டுட்டோமேன்னு கடுப்பாக வந்தது.

“இதுமட்டும் மாமாக்கு தெரிஞ்சது!” ரவிக் இன்னும் உசுப்பேற்ற.

“தெரிஞ்சது?” துருவ் தெரிஞ்சா என்னாகும்னு கற்பனையில் கண்டவாறே ரவிக் பேச்சுக்கு ஒத்து ஊத.

“தெரிஞ்சா என்ன. யானைய விட்டு மிதிக்க விடுவாரு, சட்னிதான்டா நீ” ஆத்மா சிரிச்ச சிரிப்பில் துருவ்க்கு பிரம்மை கலைய.

மூன்று நண்பர்களுக்கும் கலகலப்பாக சென்றது அன்றைய தினம்.

நளிரா வீட்டிலோ,

பார்க்கிலிருந்து வந்ததில் இருந்தே மூவருக்குள்ளும் பனிப்போர் நடந்தது.

ஆர்த்தி ஒரு கையை நளிரா ஒரு கையைப் பற்றிக் கொள்ள வீட்டுக்குள் வந்துதான் சைத்ராவை விடுவித்தார்கள்.

கோபப் பெருமூச்சோடு நின்றவளுக்கு கோபம் தங்கைகள் மீது பாய்ந்தது. அவர்கள் மட்டும் தன்னைத் தடுக்காது இருந்திருந்தால் நறுக்குன்னு நாலு கேள்வி கேட்டிருக்கலாம்.

கேக்கற கேள்வியில இனியொரு தடவை இந்த மாதிரி எந்தப் பொண்ணுங்ககிட்டயும் பொறுக்கித் தனம் பண்ணக் கூடாது. ஏன் பொண்ணுங்ககிட்ட போகக் கூட யோசிக்கணும் அந்த அளவுக்குப் பேச வார்த்தைகளை யோசித்தாள். அப்படியிருக்கையில் நந்தி மாதிரி உள்ளே புகுந்தவர்களை என்ன சொல்ல.

அவர்களையே முறைத்துப் பார்த்தாள். சண்டையிட தானாக அல்வா மாதிரி ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்க, இந்தக் குட்டிப் பிசாசுங்களால புற முதுகிட்டு ஓடி வர வேண்டியதாப் போச்சே. தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் தங்கைகளை முறைத்துத் தள்ளினாள்.

வீட்டு வேலைகளை முடித்துவிட்ட மலர்விழியும் ராஜனும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

வரும் போதே சைத்ரா முகம் கோபத்தை சுமந்திருக்க மூவருமே கிட்டத்தட்ட படபடப்போடு இருப்பதை கவனித்த மலர் எழுந்து வெளியே வந்தார், “என்ன பொண்ணுங்களா என்னாச்சு?” கேட்டவரின் பார்வை நளிராவை விடுத்து ஆர்த்தியையும் சைத்ராவையும் சந்தேகமாய் நோக்கியது.

அவருக்குத் தெரியும் நளிரா மீது எந்தத் தப்புமே இருக்காது என்று. அதனால் மற்ற இருவரையும் கேள்வியாகப் பார்த்தார்.

“எதுக்கும்மா என்னை சந்தேகமா பாக்கறீங்க? நளிராவையும் சேர்த்து முறைங்க அவளும் எங்களோடதான் வந்தா” ஆர்த்தி அவரை முறைத்தாள்.

“அவளுக்கு எறும்பைக் கூட கொல்ல மனசு வராதுடி. என்னோட பட்டுத் தங்கத்துக்கு கருணை மனசு” நளிராவின் கன்னத்தில் இதமாய் தட்டிக் கொடுத்தார் மலர்.

“பாத்தும்மா கொஞ்சம் அழுத்தித் தட்டி வைக்காதே. பட்டுக் குட்டிக்கு வலிக்கப் போகுது” சைத்ரா கோபமாய் நளிராவை முறைத்தாள்.

“ஆமாமா. பட்டுத் தங்கம் நீ தட்டுற வேகத்துல ரெண்டு கிராம் தேய்ந்து போகப் போகுது” ஆர்த்தி தன் பங்குக்கு பொறாமையில் பொசுங்கினாள்.

“அக்கா இப்ப எதுக்கு கோபப்படற. நீ பண்ணது ரொம்பத் தப்பு. நடந்தது என்னன்னு உனக்கு தெரியுமா?” கேட்டவள் அவளுக்கு அதைப் பற்றிக்கூற முயன்றாள்.

“என்ன சொல்லப் போற நளிரா. பொண்ணுங்களை தப்பா பேசறவனுக்கு சப்போர்ட் பண்ணப் போறியா இப்ப?” சைத்ரா கோபமாய் அவளிடம் சண்டைக்குப் போனாள்.

“அக்கா நான் சொல்ல வரதைக் கேளேன்” நளிரா அவளிடம் பேச முயல.

ஆர்த்தி அவளை முந்திக்கொண்டு பேசினாள்,
“அக்கா நளிரா என்னமோ பண்ணியிருக்கட்டும். ஆனா நீ செருப்பால அடிச்சது தப்புக்கா. அவன் பாட்டுக்கு என்னமோ உளறிட்டு போகட்டுமே. பொண்ணுங்களைக் கண்டா கேலி பேசறவன் ஒரு ஒருத்தனையும் நாம செருப்பால அடிச்சா நம்மை உசுரோட விட்டு வைக்க மாட்டாங்க தெரிஞ்சுக்கோ. முதல்ல நம்ம வீடு வயலன்ஸ் தாங்குமா அதை யோசிக்கா. அப்பா சத்தமா பேசுனா கூட வீசுற காத்துக்கும் வலிக்கும்னு நெனைப்பார். அப்படியிருக்க நீ ஓவரா போயிட்ட தெரிஞ்சுக்கோ” ஆர்த்தி பொரிந்தாள்.

“என்னடி ஆர்த்தி என்னாச்சு?” மலர் விசாரிக்க.

“அம்மா என்னாச்சுன்னு தெரியுமா?” சைத்ரா விவரம் சொல்ல.

“அம்மா அது தப்பும்மா. நான் சொல்றேன் கேளு” நளிரா சொல்ல வரவும், ராஜன் வரும் ஓசை கேட்டது.

“சரி பொண்ணுங்களா அப்பா வந்துட்டாரு அவர் முன்ன இதெல்லாம் பேசினா பயந்துடுவார். இந்த பேச்சை விட்டுட்டு சாப்பிட வாங்க” மலர்விழி அழைக்க.

தந்தையின் வருகையில் கப்பென அந்த இடமே அமைதியானது.

ராஜனின் உடல்நிலை அதிர்ச்சியை தாங்காது என்பதால் எதுவாக இருந்தாலும் அவர்களே சமாளிப்பார்கள். டென்ஷன் ஆனால் கூட அவருக்கு மயக்கம் வந்துவிடும். அதனால் முடிந்த மட்டும் பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள மாட்டார்கள்.

அந்த விஷயத்தை அப்படியே கிடப்பில் போட்டார்கள். பிறகு அடுத்த வந்த நாளில் அந்த விஷயத்தை அப்படியே மறந்தும் போனார்கள். சைத்ரா தங்களை கேலி செய்த ஒருவனுக்கு தண்டனை கொடுத்தோம் என்ற அளவில் திருப்தி வர, அத்தோடு அதை விட்டுவிட்டார்கள். ஆனாலும் அப்பப்ப அவங்களுக்கு சப்போர்ட் போடும் நளிராவை, சைத்ரா எதையாவது சொல்லிட்டே இருக்க,

“அக்கா ப்ளீஸ் காம்டவுன்” நளிரா சமாதானம் செய்ய அவளை இன்னும் முறைத்தாள் சைத்ரா.

“எதுக்குடி அமைதியா போகணும். அநீதி நடந்தா தட்டிக் கேட்பா இந்த சைத்ரா” சைத்ரா கொதிக்க.

“என்னத்த நியாயத்தை வழங்கிட்ட நீ. பண்ணது முழுக்க முழுக்க தப்புக்கா” நளிரா நடந்ததை வரைபடம் போட்டு விளக்காத குறையாக விளக்கிச் சொல்ல.

சைத்ராவுக்கு முகத்தை எங்கே கொண்டு போய் வைக்கவென்றே தெரியவில்லை. தப்பு பண்ணிட்டோமேன்னு நினைத்தவளை, அதற்கு மேல் அதைப் பற்றி நினைக்க விடாமல் வேலைகள் இழுத்துப் பிடித்துக் கொண்டது.

ஆர்த்தியோ இதில் சம்பந்தப்படாததால் நினைப்பில் கூட இருக்காது.

நளிராவுக்கு நடந்த விசயத்தில் யாதொரு சம்பந்தமும் இல்லாத காரணத்தால் அந்த வாலிபனை நினைத்து வருத்தம் இருக்கே தவிர பெரிதாய் யோசிக்க தோன்றவுமில்லை.
படிச்சுட்டு கமெண்ட் லைக் தந்துட்டும் போலாமே friends 🤗
 
Top