• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,242
Reaction score
3,657
Points
113
வேதம் – 9

வேதவள்ளி பேருந்துநிலையம் அடைந்து பத்து நிமிடங்கள் கடந்தும், அவளிருப்பிடத்திற்குச் செல்லும் பேருந்து வரவே இல்லை. நேரத்தைப் பார்த்தவள், எழுந்து நின்றாள்.

கண்ணெல்லாம் இருட்டிக்கொண்டு வந்தது பெண்ணுக்கு. தானியிலே சென்றுவிடலாம் என்றெண்ணி சாலையில் இறங்கியவளின் முன்பு, மகிழுந்து ஒன்று வந்து நின்றது.

லேசாகத் தடுமாறி கண்ணைச் சிமிட்டிப் பார்த்தாள் பெண். “எப்படி இருக்கீங்க சிஸ்டர்?” எனப் புன்னகையுடன் ஒருவன் இறங்கி வந்தான்.

அவனைப் பார்த்து லேசாக சிரித்தாள் வேதவள்ளி. அவள் நின்றிருந்ததை வைத்தே உடல்நிலை சரியில்லை என்று உணர்ந்தவன், “சிஸ்டர், என்னாச்சு, உடம்பு எதுவும் சரியில்லையா?” என வினவினான்.

“இல்லை சார், லேசா தலை சுத்துது. அவ்வளோதான்” வேதா பதிலளிக்கவும்,

“வாங்க சிஸ்டர், நான் உங்களை வீட்ல ட்ராப் பண்றேன்...” என்றான் அந்த ஆடவன்.

வேதவள்ளி வேலைக்கு சேர்ந்த புதிதிலிருந்து இன்றுவரை கடைக்கு வரும் வழக்கமான வாடிக்கையாளன் தரணி. அவனது மனைவிக்கும் வேதவள்ளிக்கும் கொஞ்சம் பரிட்சயம். அதனாலே எப்போது வணிக வளாகத்திற்கு வந்தாலும், ஒரு புன்னகையை உதிர்த்து நலம் விசாரிப்பான் தரணி.

“இல்லை சார், நானே போய்க்கிறேன்...” என்றவள், தடுமாறிக் கீழே விழப்போக, அவளது தோள்பட்டையை பதற்றத்தில் இருபுறமும் பிடித்திருந்தான் அவன்.

“சிஸ்டர், முதல்ல நீங்க வந்து கார்ல உட்காருங்க...” வேதாவைக் கைத்தாங்கலாக அழைத்து மகிழுந்தில் அமர்த்தியவன், அருகிலிருந்த கடைக்குச் சென்று தண்ணீர் வாங்கி வந்தான்.

“இதை குடிங்க சிஸ்டர்...” என அவளுக்குத் தண்ணீரைக் கொடுத்தவன், மகிழுந்தை இயக்கினான்.

“பக்கத்துலதான் ஹாஸ்பிடல் இருக்கு. போகலாமா சிஸ்டர்?” தரணி வினவ,

“இல்லை சார், ஹாஸ்பிடல் போற அளவுக்கு ஒன்னும் இல்லை. என்னை வீட்ல மட்டும் இறக்கிவிடுங்க” என்றவள், தன் வீட்டு முகவரியைத் தெரிவிக்க, பத்து நிமிடத்தில் அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டான் தரணி.

“சிஸ்டர், நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா, உங்க வீடு வரை வந்து நான் உங்களை விட்டுட்டு வர்றேன். ஐ திங்க் யு ஆர் நாட் ஸ்டேபிள்...” தயங்கிக் கேட்டவனிடம் தலையை அசைத்தவள், தன் கைப்பையை எடுத்துக்கொண்டு தெருவிற்குள் நுழைய, தரணியும் நுழைந்தான்.

வேதவள்ளி வீடு வந்ததும், “தேங்க் யூ சார்...” என நன்றி உரைத்து அவனை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தவள், கூடத்திலிருந்த நீள்விருக்கையிலே அமர்ந்துவிட்டாள்.

இன்னுமே மயக்கம் தெளியாத நிலைதான் பெண்ணுக்கு. சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என மனம் எண்ண, வீட்டில் ஒருவரும் இருக்கவில்லை. இருந்தாலும், முருகையாவைத் தவிர மற்ற இருவரும் அவளை ஒரு பொருட்டாகக் கூட மதித்தது இல்லையே.

விழிகள் மூடி இருக்கையில் சாய்ந்துவிட்டாள் வேதவள்ளி. தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, எழலாம் என அவள் நினைக்கும்போதே சந்தைக்குச் சென்றிருந்த அம்சவேணி வந்துவிட்டார்.

முகமெல்லாம் தகதகவென கோபத்தில் சிவந்திருந்தது பெண்மணிக்கு. உள்ளே நுழைந்தவர், அவள் முன்னே நின்றார்.

“பெரியம்மா...” என ஏதோ கூற வந்தவளின் வார்த்தையை கைநீட்டி தடை செய்தவர்,
“உனக்கு இந்த வீட்ல எதாவது குறை வச்சிருக்கோமா டி?” என அழுத்தமாக வினவினார்.

அவர் வார்த்தைப் புரியாது விழித்தவள், “இல்லை பெரியம்மா...” எனப் பதிலளித்தாள்.

“எழிலுக்குப் பிறகு உன்னை எங்களுக்குப் பிறந்த பொண்ணு மாதிரி தானே நினைச்சோம். என்னை விடு, அவர் அப்படித்தானே உன்னைப் பார்த்துக்கிட்டாரு. ஆமா வா? இல்லையா?”

அவரது அதட்டல் தொனியில் லேசாக பயந்துதான் போனாள் வேதவள்ளி. “ஆமா பெரியம்மா...” என்றாள், குரல் நலிந்திருந்தது.

“அப்புறம் ஏன்டி இப்படி பண்ண? கோபத்துல எத்தனையோ தடவை திட்டியிருக்கேன்தான் நான். ஆனால், நீ கெட்டு சீரழியணும்னு ஒருநாளும் நினைச்சது இல்லையே...” என்றவரின் வார்த்தைகளில்,

“ஏன் பெரியம்மா இப்படியெல்லாம் பேசுறீங்க?” என வினவியவளின் விழிகளிலிருந்து கண்ணீர் சரசரவென வழிந்தது.

“ஏன் டி இப்படி பண்ண, ஏன் இப்படி பண்ண? ரோட்ல எவனையோ கட்டிப் பிடிச்சுட்டு நிக்கிற. எழில் சொன்னப்ப கூட, நான் நம்பலை டி. உன் மேல இருக்க கோபத்துல தான் திட்டுனேன். ஆனால், நீ இன்னைக்கு என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்க?” என வினவியவாறு அவள் கன்னத்திலே ஓங்கி அடித்திருந்தார் பெண்மணி. இதுவரை ஒருமுறை கூட வேதவள்ளியின் மீது அவர் கை நீட்டியது இல்லை. முதல்முறையாக அடித்திருந்தார்.

அத்தனை கோபம் அம்சவேணிக்கு. சந்தைக்குச் சென்று மீண்டும் வீட்டிற்குத் தானியில் திரும்பிக் கொண்டிருந்தவரின் கண்கள் எதேச்சையாக சாலையில் பதிய, ஒரு ஆணும் பெண்ணும் கட்டியணைத்தத் தோற்றம் தெரிந்தது. அந்த ஆணின் பின்புறம் மட்டுமே அவருக்குத் தெரிந்தது.

“சைக், ரோட்ல நடக்க முடியலை. கருமம். கருமம்...” என திட்டியவரின் விழிகள் நொடியில் சிவந்தது, அந்தப் பெண் வேதவள்ளி எனத் தெரிந்த போது. அவள் நின்றிருந்தத் தோற்றம் அம்சவேணிக்குத் தவறாக உணர்த்தியது. அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்பதெல்லாம் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆத்திரத்தில் பல்லைக் கடித்தவர், வீட்டிற்கு வந்ததும் கோபத்தை அவளிடம் காட்டிவிட்டார்.

அம்சவேணி அறைந்தது கூட வேதவள்ளிக்கு வலிக்கவில்லை. அவரது வார்த்தைகளில் ஆணியடித்ததைப் போல நின்றாள். அந்த வார்த்தைகள் செவியைத் தொட்டதும், பெண் உடல் நடுங்கியது.

“வாயைத் தொறந்து சொல்லு டி. உன்னை பெத்தப் பொண்ணு மாதிரி தானே வளர்த்தாரு அந்த மனுஷன். என்னை எதிர்த்துட்டு உனக்கு அது, இதுன்னு எல்லாமே செஞ்சாரே! அப்புறம் ஏன்டி உன் புத்தி இப்படி போச்சு. கார்ல வந்தவனைப் பார்த்ததும் மயங்கிட்டீயா?” எனக் கேட்டவரின் வார்த்தைகளில் கூனிக் குறுகிப் போனாள் பெண். அவரது அடிகளை எல்லாம் மறுப்பின்றி பெற்றுக் கொண்டவளின் இதயம் மட்டும் பெண்மணியின் வார்த்தைகளில் மரத்துவிட்டிருந்தது.

‘நான் அப்படியெதும் செய்யவில்லை. அவர் எனக்கு சகோதரர் போல! உடல்நிலை சரியில்லாத பெண்ணை, கைத்தாங்கலாக அழைத்து வந்தார். எப்படி இவர் என்னை இத்தனை பெரிய வார்த்தைகள் கேட்கலாம்?’ என மனதிற்குள் விம்மதித் துடிதுடித்துப் போனாள் வேதா.

“நானும் அவரும் ஒழுக்கமா தானே டி இருக்கோம். நான் பெத்ததும் ஒழுக்கமா தானே இருக்கான். அப்புறம் ஏன் டி நீ மட்டும் கெட்டு சீரழிஞ்சுப் போன? எங்க வளர்ந்தாலும், உங்காத்தா புத்தி உன்னை விட்டுப் போகலைல...” என்றவரை அதிர்ந்து போய் பார்த்தாள் வேதவள்ளி. அந்த வார்த்தைகள் அவளை ஆயிரம் முறை கூர்வாளால் கூறுபோட்டிருந்தது.

“பெரியம்மா, என்னை என்ன வேணாலும் சொல்லுங்க. என் அம்மாவைப் பத்தி தப்பா பேசாதீங்க...” என்ற வேதவள்ளியின் குரல் நடுங்கியது. இத்தனை நாட்கள் அம்சவேணியின் மனதில் தன் தாயைப் பற்றி இத்தனை இழிவான எண்ணங்கள் இருந்ததா? எனப் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

‘எத்தனை எளிதாக ஒரு பெண்ணின் ஒழுக்கத்தை குறை கூறுகிறார் இவர்? நேரில் வந்து பார்த்தது போல பேசுகிறார். என் தாய் தவறானவர் இல்லை. பரிசுத்தமானவர்...’ பெண்ணின் மனம் அரற்றியது.

“என்னடி, உள்ளதை சொன்னா, கோபம் வருதோ? ஹ்ம்ம்... நீயும் அப்படித்தான் கெட்டுப் போய்ட்ட. எங்க குடும்ப மானத்தையும் சேர்த்துக் கெடுக்குற. வீட்டு வாசல்வரை வந்து கண்டவனோட இறங்குறீயே டி‌. ஒழுக்கமா இருக்கணும்னு எத்தனை தடவை திட்டியிருக்கேன் உன்னை. அப்படி இருந்தும் இப்படி ஒரு காரியத்தைப் பண்ணீட்டு வந்திருக்க நீ” என்றவருக்கு மனதே ஆறவில்லை.

எத்தனை முறை வேதவள்ளியை வசைபாடி இருந்தாலும், அவள் ஒருவரையும் நிமிர்ந்து பார்க்க மாட்டாள். தன் கணவனின் வளர்ப்பு என மனதில் நினைத்திருந்த எண்ணத்தை ஒரே நாளில் பெண் தகர்த்துவிட்டதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

“பெரியம்மா, போதும் நிறுத்துங்க. என் அம்மாவைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும். வாய்க்கு வந்ததைப் பேசாதீங்க...” விழிகளில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டு நிமிர்ந்து நின்றாள் வேதா.

“நான் என்னடி சொல்றது. ஊரே சொல்லுதே, உங்கம்மா பத்தினி மாதிரி பேசாத...” என்றவரின் எல்லை மீறிய வார்த்தைகளில் காதைப் பொத்திக்கொண்டவளுக்கு அழுகையில் உடல் குலுங்கியது. வாழ்க்கையில் இந்த நொடியை வெறுத்தாள் பெண்.

‘ஏன் தனக்கு மட்டும் இப்படி ஒரு சூழ்நிலை? கடவுளே, என்னை மட்டும் ஏன் இப்படி நிற்க வைக்கிறாய்! இதெல்லாம் கேட்டுக் கொண்டு உயிருடன் இருக்க வேண்டுமா?’ என்று எண்ணங்கள் தோன்ற, உடல் இறுகியது வேதவள்ளிக்கு.

“இதை இப்படியேவிட்டா, சரி வராது டி. அவரை கூப்பிட்டு இதுக்கொரு முடிவைக் கட்டுறேன் இரு” என்ற அம்சவேணி முருகையாவிற்கு அழைத்துவிட்டார்.

எதிரிலிருப்பவரை பேச விடாது தடுத்த அம்சவேணி, “இப்போவே வீட்டுக்கு கிளம்பி வாங்க. இல்லை நடக்குறதே வேற” என்று அழைப்பைத் துண்டித்திருக்க, மனைவியின் வார்த்தைகளில் பதறிப் போனார் மனிதர்.
உடனே வேலையிலிருந்து விடுப்பெடுத்துக்கொண்டு விரைவாக வீட்டிற்கு சென்றார். எழிலரசனுக்கும் அழைத்து வரச்சொல்லிவிட்டார் அம்சவேணி.

சுவற்றில் சாய்ந்து நின்றிருந்த வேதவள்ளிக்கு வயிற்றைப் பிரட்டியது. வெறும் தண்ணீரை குடித்தது, வாந்தி வருவது போலிருக்க, கழிவறைக்குள் நுழைந்திருந்தாள். காலையில் குடித்த தேநீரும், வேலை செய்யுமிடத்தில் அருந்திய நீரும் மொத்தமாய் வெளியே வந்திருந்தது. சுவற்றைப் பிடித்து நின்றிருந்தவள், தன்னை சுத்தம் செய்துகொண்டு கூடத்திற்குள் நுழைந்தாள்.

“சீ கருமம்... என்ன வாந்தி டி இது?” அருவருத்துப் போன குரலில் அம்சவேணி வினவ, உடல் கூசிப் போனது வேதவள்ளிக்கு. இதற்கு மேலும் இவர்களால் தன்னை இழிவுபடுத்த முடியுமா? என எண்ணியவளின் இதழ்களில் விரக்திப் புன்னகை.

சில நிமிடங்களிலே முருகையாவும், எழிலும் உள்ளே நுழைந்திருந்தனர். “அம்சு, என்னாச்சு டி...?” எனப் பதறியபடி வினவினார் மனிதர்.

“இன்னும் என்ன ஆகணும்? இவ பண்ணக் காரியத்தை சொல்லவே வாய்க் கூசுது எனக்கு. ரோட்ல எவனோ ஊர் பேர் தெரியாதவனைக் கட்டிப் பிடிச்சுட்டு நிக்கிறா. ஏன்னு கேட்டா, கண்ல தண்ணி வருது. வாந்தி வேற எடுத்துத் தொலைக்கிறா. கருமம், கருமம். இதுக்கும் மேல என்ன அசிங்கத்தை எல்லாம் தாங்கணுமோ இவளை வளர்த்ததுக்கு?” அம்சவேணி தன் தலையில் அடித்துக்கொண்டார்.

“ஏய்! நம்ம வீட்டுப் புள்ளையை போய் என்னடி இப்படி பேசுற. வாயை மூடு நீ...” முருகையா மனைவியைத் திட்டினார். அழுதழுது முகம் வீங்கிப் போய் நின்றிருந்த வேதவள்ளியைப் பார்த்து அவருக்குப் பதறியது.

“நீங்கள்தான் அவ நம்ம புள்ளைன்னு தலையில தூக்கி வச்சு ஆடுறீங்க. ஆனால், அவ பண்ணக் காரியத்தை சொல்லவே வாய் கூசுது. என் ரெண்டு கண்ணால நான் பார்த்தேன். பொய் சொல்லலை. அவளைப் போய் என்னென்னு கேளுங்க, என்கிட்ட துள்ளாதீங்க...” அம்சவேணி குரலை உயர்த்தினார்.

“வாயை மூடு அம்சு. யாரையாவது பார்த்துட்டு, அதை வேதான்னு சொல்லீட்டு இருக்காத. அவ அப்படியெல்லாம் பண்ண மாட்டா...” என்று முருகையாவும் மனைவியைவிட அதிகமாய் குரலை உயர்த்திப் பேசினார்.

“ஆமா! நான் சொல்றது எல்லாம்
உங்களுக்கு பொய்தான். வயித்துல நெப்பிட்டு வந்து நிக்குறவளைக் கேட்க மாட்டீங்க...” அம்சவேணி கூறியதும், முருகையா அவரை ஓங்கி அறைந்திருந்தார்.

“ப்பா... என்ன பண்றீங்க?” எழில் பதறிக் கொண்டு இடையில் நுழைய, இத்தனை நேரம் விழிகளில் நீர் வற்றிப் போய் நின்றிருந்த வேதவள்ளி கூட அதிர்ந்து போனாள்.

“அவளுக்கு ஏத்துட்டு என் மேலயே கையை வச்சுட்டீங்க இல்லை. அவ உங்களை சந்திசிரிக்க வைக்காம விட மாட்டா. இனிமேல் இந்த வீட்ல நான் இருக்க மாட்டேன். கேடு கெட்டவ! கெட்டுப் போய் வந்திருக்கா. அவளை விட்டுட்டு என் மேல கை நீட்டுறாரு...” என அம்சவேணி மேலும் வார்த்தைகளை விட,

“ஏய்! சொல்லிக்கிட்டே இருக்கேன். அடங்க மாட்டீயா டி நீ” என்ற முருகையா மீண்டும் கையை ஓங்க, “பெரியப்பா...” என இடையில் புகுந்திருந்தாள் வேதவள்ளி. எழிலும் தந்தையின் கையைப் பிடித்திருந்தான்.

“ரெண்டு பேரும் நகருங்க. அவளை அடிச்சு சாவடிக்கிறேன்...” ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தார் முருகையா.

“பெரியப்பா... ப்ளீஸ்...” அவர் முன்னே கையைக் கூப்பிய வேதா, அழுதுக்கொண்டே தளர்ந்து அமர்ந்தாள். உடலிலிருந்த மொத்த சக்தியும் வடிந்திருந்தது பெண்ணுக்கு. இதற்கு மேலும் அம்சவேணியின் வார்த்தைகளை கேட்கும் தெம்பு துளிகூட இல்லை பெண்ணிடம். கண் இரைப்பைகள் கூட தன் வேலையை அதிகம் செய்து களைத்துப் போயிருந்தன.

“வேணாம் பெரியப்பா, என்னால உங்களுக்கு இடையில சண்டை வேணாம். இத்தனை வருஷம் என்னை வச்சுத்தான் இந்த வீட்ல நிறைய சண்டை. அதுக்கு இன்னைக்கு முற்றுப்புள்ளி வச்சுடலாம்...” எனத் தேம்பியவள், விழிகளைத் துடைத்துக்கொண்டே எழுந்து நின்றாள்.

“என்னை மன்னிச்சுடுங்க பெரியப்பா. நான் போறேன். இந்த வீட்டை விட்டுப் போறேன். என் அப்பா, சொன்ன ஒரு வார்த்தைக்காக மட்டும்தான் இவ்வளோ நாள் இங்க இருந்தேன். இத்தனை வருஷமா என்னைப் பத்திரமா பார்த்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி...” அவரின் முன்னே கையைக் கூப்பிய வேதவள்ளியின் வார்த்தைகளில் அழுத்தமும் தெளிவுமிருந்தது.

இதற்குமேல் இந்த வீட்டில் ஒரு நொடி கூட இருக்கக் கூடாது என அவளுக்கு வைராக்கியம் பிறந்திருந்தது. அம்சவேணி தன்னை சாடிய வார்த்தைகளைக் கூட அவளால் பொறுத்துக் கொள்ள முடிந்தது. ஆனால், தன் தாயைப் பற்றி கூறியதை ஒரு நொடி கூட பாவையால் சகிக்க முடியவில்லை. இதயம் அத்தனை பாரமாக இருக்க, இந்த சூழ்நிலையின் கனம் அவளை அதிகமாய்ப்படுத்தியது.

‘என்ன வாழ்க்கை இது? இப்படி இவர் வாய்க்கு பயந்து ஒவ்வொரு நாளும் இங்கு இருக்க வேண்டுமா? வீடே இல்லாது தெருவோரமாய் வசிக்கும் மக்கள் கூட எத்தனை நிம்மதியாய் இருக்கின்றனர். ஆனால், எனக்கு மட்டும் நிம்மதி என்பது கடைசி வரை கிட்டாது போய் விடுமோ?’ என எண்ணிய வேதா போராடி போராடிக் களைத்துப் போனாள். உடலை விட மனம் அதிகமாய் யாரேனும் தோள் கொடுக்க மாட்டார்களா? என விம்மித் தவித்தது.

‘என் விதியே இப்படித்தானா? அதை மாற்ற முடியாதா? பிறந்ததிலிருந்தே கஷ்டம்தான். ஆனால், அப்போது தாய் தந்தை என்ற பெரிய இளைப்பாறுதல் இருந்தது. ஆனால், இப்போது யாருமின்றி நிற்கதியாக நிற்கின்றேனே! இதை விட கொடிய கணங்கள் இருந்துவிட முடியாது தன் வாழ்நாளில்’ என தேம்பியவளின் விழிநீர் அவளது முகத்தை நனைத்தது.

‘ஏழு வருடமாக இப்படியொரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருக்கிறேன். அப்போது ஒரு நொடி கூட வலிக்கவில்லை. ஆனால், அம்சவேணியின் ஒவ்வொரு கூரிய வார்த்தைளும் பெண்ணை கூறுபோட்டது, முடியவில்லை. இதற்கு மேலும் என்னிடம் எதுவும் இல்லை’ வாழ்க்கையை வெறுத்துப் போனாள். விழிநீரை துடைத்துக்கொண்டவளின் வார்த்தைகள் கூட வற்றிப் போய்விட்டது. கைகள் முழுவதும் கண்ணீரின் பிசுபிசுப்பு. அதை துடைத்துக்கொண்டே முருகையாவை நிமிர்ந்து பார்த்தாள்.

“என்னம்மா, அவதான் எதுவும் தெரியாமப் பேசுறான்னா, நீ வேற. உன் அப்பன் வர்ற வரைக்கும் நீ இங்க தான் இருக்கணும். எங்கேயும் போகக்கூடாது வேதா மா...” பெண்ணின் தளர்ந்த தோற்றத்தில் முருகையாவிற்கு குற்ற உணர்வு கொன்று தின்றது.

‘எத்தனை அமைதியானப் பெண். தன் மனைவியின் சுடு சொற்கள் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு, இதுவரை ஒரு முறை கூட எதிர்த்துப் பேசியதில்லையே! அப்படிப்பட்ட பெண்ணையே, பதம் பார்த்துவிட்டாளே தன் மனைவி. எத்தனை தூரம் வலித்திருந்தால், எத்தனை வெறுத்துப் போயிருந்தால், பெண் இப்படி பேசுவாள்...’ என துடித்துப் போனார் பெரியவர்.

அவரிடம், ‘இல்லை’ என்பது போல தலையை அசைத்தவள், “நான் போறன்...” என்றாள். வார்த்தைகளில் அத்தனை திடம். இங்கிருந்து சென்றே தீருவேன் என்ற பிடிவாதம் அதிகமிருந்ததது பெண்ணின் குரலில்.

“எங்கமா போவ? போறேன் போறேன்னு சொல்றீயே. உங்கப்பன் வந்து கேட்டா, நான் என்ன பதில் சொல்லுவேன்?” என கேட்ட முருகையாவின் விழிகள் கூட லேசாகப் பனித்தன.

“எங்கையோ போறேன் பெரியப்பா. இந்த உலகத்துல நான் வாழ, எனக்குன்னு ஒரு இடம் கண்டிப்பா கிடைக்கும். இதுக்கும் மேல என்னை வச்சு உங்க குடும்பத்துல பிரச்சனை வேண்டாம்...” எனத் தலையை மறுப்பாக அசைத்தவள், அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டாள்.

துக்கம் தொண்டையை கவ்வியது. அழுதாள், நெஞ்சம் நடந்த நிகழ்வில் விம்மித் துடித்தது. இந்த வார்த்தைகளைக் கேட்க கூடாது என்றுதானே சோனைமுத்து அவளை முருகையா வீட்டில் அடைக்கலம் புகச்செய்தார். ஆனால், இப்போது தாய் ஸ்தானத்தில் இருந்தவரின் வாய் மொழியிலே அந்த வார்த்தைகளைக் கேட்டதும், அனலிடைப்பட்ட புழுவாய் துடித்துப் போனாள் வேதவள்ளி, சுருண்டு போனாள்.

எங்கே செல்வது? யாரிடம் செல்வது? தனக்கென யார் இருக்கிறார்கள்? என்ற கேள்வி பிரவாகமாகப் பொங்கி எழ, கண்முன்னே அன்பழகனின் பிம்பம் தோன்றி மறைந்தது. அப்படியே சமைந்தவள், கால்களில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். வெளியே அம்சவேணியின் சத்தமும் முருகையாவின் கோபக் குரலும் செவியை நிறைத்தது. இதழ்களில் விரக்திப் புன்னகை. இந்த முடிவை முன்பே தான் எடுத்திருக்க வேண்டுமோ? என மனதின் ஓரத்தில் ஒரு குரல் கேட்டது.

வேதாவின் தந்தை, அவரது ஒரு சொல்லுக்காகத்தானே இத்தனையும் பொறுத்துப் போனாள். பூமா தேவியின் பொறுமையை கடை பிடித்தவளின் கடைசி சொட்டுப் பொறுமை சற்றுமுன் காற்றோடு கலந்துவிட்டிருந்தது.

‘என் பொண்ணா இருக்க வரைக்கும் நீ முருகையா வீட்லதான் இருக்கணும் வேதா மா. அப்பா சீக்கிரம் உன்னைத் தேடி வருவேன்...’ தலையில் வாஞ்சையாக தடவிய தந்தையின் குரல் செவியோரம் கசிய, விழிகள் மீண்டும் உடைப்பெடுத்தது பெண்ணுக்கு.

‘என்னை மன்னிச்சிடுங்கப்பா. உங்க பேச்சை என்னால கடைசிவரை கேட்க முடியலை. மீறிப் போகப் போறேன். வெளிய போறேன். என் வாழ்க்கையோட பெரிய முடிவை நானே தேடிக்கிட்டேன்...’ என நினைத்து விம்மியவளின் விழிகளில் குபுகுபுவென நீர் பொங்கியது. அடைத்தத் தொண்டையை சரிசெய்து கொண்டவள், தன் அலைபேசியை எடுத்து அன்பழகன் எண்ணை தட்டச்சு செய்தாள். கருப்பியிருந்த எண்ணை அதிலிருந்து நீக்கிவிட்டு, அழைப்பை விடுத்தாள்.

எத்தனையோ முறை அன்பழகன் அழைத்தும், குறுஞ்செய்திகள் அனுப்பியும் அவனுக்கு ஒருமுறை கூட வேதவள்ளி பதிலளிக்கவில்லை. அனைத்திலும் அவனை கருப்பியிருந்தாள். அதற்கெல்லாம் பெரிதாய் அன்பழகன் அலட்டிக் கொண்டதில்லை.

அலைபேசியை கால்சராயில் வைத்திருந்தவன், “அண்ணே! ரெண்டாயிரம் ஆகும். யோசிச்சு சொல்லுங்க...” என ஒருவரிடம் பேசிக்கொண்டே ஒலியெழுப்பிய அலைபேசியை கையிலெடுத்தான்.

வேதாவின் எண்ணைப் பார்த்ததும் விழிகள் பளிச்சிட்டன அவனுக்கு. ஆச்சரியமாக இருந்தது ஆடவனுக்கு. ஓராயிரம் முறை செய்திகளும், அழைப்புகளும் விடுத்திருக்கிறான். ஆனால், ஒரே ஒரு பதில் செய்தி, திட்டிக்கூட வேதவள்ளி அனுப்பியதில்லை. அன்பு முதன்முதலில் அழைத்தப் போது, அவனது குரலைக் கேட்டு அழைப்பைத் துண்டித்தவள் தான், அதற்கடுத்து எந்த எதிர்வினையும் இல்லை பெண்ணிடம்.

அப்படி இருக்கையில் திடீரென அழைத்தவளின் அழைப்பில் அழையா விருந்தாளியாக மனதின் ஓரத்தில் பயம் துளிர்விட்டது. யோசனையுடனே அழைப்பை ஏற்றுக் காதில் பொருத்தினான் அன்பழகன்.

“ஹலோ, வேதா...” ஆடவன் குரல் கேட்டதும், மறுபுறம் சில நொடிகள் அசாத்திய அமைதி. அதை கிழித்துக் கொண்டு பெண்ணின் விசும்பல் ஆடவன் செவியை அடைந்தது.

அதில் பதறியவன், “ஏய்.. என்னாச்சு டி, ஏன் அழற? எதுவும் பிரச்சனையா?” எனக் கேட்டவன், கடையின் மரத்தடுப்பை தாவி குதித்து தன் இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்திருந்தான். அவளிடம் பதிலில்லை. அழுதாள் பெண்.

“வேதா, அழறதை நிறுத்து டி...” என்றவனுக்கு மனது முழுவதும் பதட்டமும் பயமும்தான். என்னானது, இவள் இப்படி தேம்பி அழும் அளவிற்கு என்ன பிரச்சனையோ? அங்கே எந்த நிலையில் பெண் இருக்கிறாளோ? என எண்ணி துடித்துப் போனான் அன்பழகன். ஆடவன் குரலில் மேலும் அழுகை பொங்கியது வேதவள்ளிக்கு. உதட்டைக் கடித்து அழுகையை அடக்க முயன்றாள். முடியாது போக, தேம்பினாள். குரல் அடைத்து, வார்த்தைகள் எல்லாம் வர மறுக்க, திக்கித் திணறிப் பேசினாள் பாவை.

“வீட்டு... வீட்டுக்கு வாங்க‌...” என்றவள் குரல் மீண்டும் தேம்பியபடி வெளிவர, அவள் வேலை பார்க்கும் வணிக வளாகத்திற்கு செல்லும் வழியில் சென்றவன், அப்படியே இருசக்கர வாகனத்தைத் திருப்பி, முருகையா இருப்பிடத்திற்குச் செல்லும் சாலையில் நுழைந்தான்.

“ப்ம்ச்... ஒன்னும் இல்லைடி. அழாம இரு. எதுனாலும் பார்த்துக்கலாம். பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன் நான்” என்றவன் குரலில் அத்தனை பொறுமையும் அவளுக்கான பரிதவிப்பும் கொட்டிக் கிடந்தன. அதில் வாயைப் பொத்திய வேதவள்ளி, அழைப்பைத் துண்டித்திருந்தாள். உயிர் மொத்தமும் அவனிடம் ஆறுதல் தேடி அலைய, அவனைக் காணும் நொடிக்காக காத்திருந்தாள் பெண். தனக்கு ஒன்று எனும்போது, துடித்துப் போகும் அந்த ஜீவனிடம் தன் பாரத்தை இறக்கி வைத்து ஆறுதல் பெற வேண்டும் என்று மனம் விம்ம, வாயில் கையைவைத்து அழுகையை அடக்கிக் கொண்டாள்.

பாவையின் ஒவ்வொரு வார்த்தையும், அழுகையும், கேவலும் அன்பழகனை உடையச் செய்திருந்தது. பதற்றம்
தான், அதீத பயம். உயிரை வெறுத்துக் கொண்டு பத்தே நிமிடத்தில் வேதாவின் வீட்டை அடைந்தவன், வண்டியை அப்படியே கீழே போட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்திருந்தான்.



 
Well-known member
Messages
547
Reaction score
389
Points
63
வேதா சரியான நேரத்தில் அன்பை கூட்டிருக்கா
 
Top