• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,242
Reaction score
3,657
Points
113
வேதம் – 8

அந்த மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அது. மனதில் ஆயிரம் குழப்பங்கள், சஞ்சலங்கள் இருக்க, அதையெல்லாம் கடவுளிடம் இறக்கி வைத்து முறையிடலாம் என எண்ணினாள் வேதவள்ளி. அதனாலே விரைவாக எழுந்து குளித்து வேலையை முடித்தவள், உணவு உண்ணவில்லை‌. நேரம் கடந்துவிட, மதியம் பார்த்துக் கொள்ளலாம் என கிளம்பிவிட்டாள்.

“பெரியப்பா, கோவிலுக்குப் போய்ட்டு போகலாமா பா?” முருகையாவிடம் பெண் வினவினாள். இப்போதெல்லாம் அவருடன்தானே வேலைக்குச் சென்று திரும்புகிறாள் வேதா.

“நேரமாகிடுமே டா. நான் உன்னைக் கோவில்ல இறக்கி விட்டுட்டு போறேன். நீ சாமி கும்பிட்டுட்டு வேலைக்குக் கிளம்பு வேதா” என்ற முருகையா, அவளை அழைத்துக்கொண்டு சென்று கோவிலில் இறக்கிவிட்டார்.

“பத்திரமா போ வேதா. எதுவும் பிரச்சனைன்னா, எனக்கு உடனே ஃபோன் பண்ணு” என அறிவுறுத்திவிட்டு நகர்ந்தார் மனிதர்.

மஞ்சளைக் குழைத்து அப்பியிருந்த வேதாவின் முகம் அந்த வெயிலுக்கு மின்னியது. எப்போதும் சுரிதார் அணியும் வழக்கம் உடையவள், ஏனோ அன்று புடவை உடுத்தியிருந்தாள். கடைசியாக ஆறு மாதத்திற்கு முன்பு புடவை அணிந்தாள். அதற்குப் பின்னே அணிந்ததாய் அவளுக்கே ஞாபகம் இல்லை‌. அலமாரியைத் திறந்ததும், பருத்தி புடவை ஒன்று கண்ணைக் கவர்ந்தது. எப்போதோ எடுத்தது. அதை உடுத்தாமல், அப்படியே வைத்திருந்தாள். ஏதோ உள்ளுணர்வு தோன்ற, அதை எடுத்து உடுத்தினாள்.

கோவிலுக்கு வெளியே அமர்ந்திருந்த பெண்ணிடம் பூவை வாங்கித் தலையில் சூடிக்கொண்டு, உள்ளே நுழைந்தாள். கூந்தலின் ஈரம் சொட்டு சொட்டாய் அவள் செல்லும் பாதையை அலங்கரித்துக்
கொண்டிருக்க, சற்றே கூட்டமாகயிருந்தது கோவில்.

கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கடவுள் பிரகாரத்திற்குள் நுழைந்தவள், விழிகளை மூடினாள். ஏனோ கேட்க வந்த, அவரிடம் முறையிட வந்த வார்த்தைகள் எல்லாம் அந்த நொடி அமிழ்ந்து போனது. என்ன வேண்டுவது என மூளை ஆராய்ந்தும் ஒரு வார்த்தை, நிகழ்வு கூட சிந்தையில் உதிக்கவில்லை.

மனம் அமைதியடைய சில நொடிகள் கடவுளைத் தரிசித்தவள், மூன்று முறை கோவிலை வலம் வந்து, பின் சற்றுநேரம் அங்கே அமர்ந்துவிட்டாள். முகம் சாந்தமாகியிருக்க, மனம் கொஞ்சம் ஆசுவாசம்
கொண்டது அந்தச் சூழலில்.

‘எனக்கானது எதுவோ, அது எனக்கு கிடைத்தால் போதும். நல்லதோ, கெட்டதோ, எதையும் தாங்கும், அதை எதிர்க்கொள்ளும் மனநிலையும் எனக்குக் கொடுத்துவிடு...’ என வேண்டியிருந்தாள். ஆனால், பெண் அறியாது போனது, அவளுக்கான ஒன்று அன்றைய தினமே அவளை அடையப் போகிறதென்பதை.

சூடான தேநீரை தொண்டையில் சரித்துக்கொண்டிருந்த அன்புவின் பார்வை, சாலையைக் கடக்கும் இருசக்கர வாகனத்தில் பதிந்து மீண்டுக் கொண்டிருந்தன. சில நாட்களாக வேதா, அவளது பெரியப்பாவுடன் தானே தரிசனம் தருகிறாள்.

முதல்நாள் அன்புவிடம் பேசிய முருகையா, அடுத்தடுத்து நாட்களில் அவன்புறம் திரும்பக் கூடவில்லை என்பதே உண்மை. அவனிடம் எத்தனை எடுத்துக் கூறினாலும், அதை தூசி போலத் தட்டிச் செல்பவனை என்ன செய்வது எனத் தெரியாது குழம்பிப்போனார் மனிதர்.

காவல்நிலையத்திலே அத்தனை திமிராக இருந்தவன். மன்னிப்பென்று ஒரு வார்த்தைக் கூட உதிர்க்கவில்லை. அவன் உடல்மொழியே அவரை எரிச்சல்படுத்தும். அதனாலே மனிதருக்கு அன்பழகன் மீது ஏக கோபம்.

முருகையாவின் முகபாவனைகளிலே அகத்தை அறியும் அன்பழகன், ஒரு நொடி கூட அதற்கு அலட்டிக் கொள்ளமாட்டான். அவனைப் பொறுத்தவரை வேதாவிற்கு மட்டுமே தன் முன்னுரிமை. அவள் முகம் வாடினால் மட்டுமே, தன்னிலையிலிருந்து இறங்குவான். மற்றபடி யாருக்காகவும் தன்னை மாற்றிக் கொள்ள விழையமாட்டான்.

குனிந்து தேநீரை அருந்திவிட்டு நிமிர்ந்தவனின் பார்வையையும் சிந்தையையும் ஒரு சேர ஆக்கிரமித்திருந்தாள் பெண். முந்தாணையின் ஒரு மடிப்பு கூட கசங்காது அத்தனை நேர்த்தியாய் அந்தப் பருத்தி புடவையை உடுத்திருந்தவளைக் கண்டவனுக்கு குப்பென்று சொல்ல முடியாத உணர்வு அடிவயிற்றில் உதித்தது.

மஞ்சள் பூசிய முகமும், தலையிலிருந்து மலரும், மூக்கில் மின்னிய மூக்குத்தியும், அவனைத் திணறடித்தன. வாயிலிருந்த தேநீர் புரையேறியது. தலையை தட்டிக்கொண்டே கடைக்காரரிடம் பணத்தைக் கூட பிரக்ஞை இன்றி கொடுத்தவனின் விழிகள் முழுவதும் வேதாதான்.

அன்புவிற்கு அவளைப் புடவையில் காண நிரம்ப பிடிக்கும் . ஆனால், அவள் சேலையே உடுத்த மாட்டாள். எப்போதும் சுரிதார்தான். இன்று அதிசயமாய் சேலை அணிந்திருந்தவள், அநியாயத்திற்கு அழகாய் தெரிந்தாள்.

நெற்றியில் இட்டிருந்த குங்குமமும் சந்தனமும் அவள் சென்று வந்த கோவிலை பறைச்சாற்றின. மெதுவாய் பார்வையை விழிகளில் படரவிட்டு, பெண்ணை தலைமுறை கால்வரை மனதிற்குள் பூட்டிக்கொண்டான்.

சில நொடிகளில் தன்னை மீட்டவன், வேதா சாலையை கடந்துவரவும், அவளுடன் இணைந்து நடக்கத் துவங்கினான்.

‘பேசு, எதையாவது பேசு. அவளிடம் கூறு, அவளுக்கு இந்தப் புடவை அத்தனை பாந்தமாய் பொருந்தியிருக்கிறதென்று கூறு’ என மனம் கட்டளையிட, மூளையோ அதைக் கேட்கவில்லை. தொண்டையைச் செருமினான். ஐந்து நிமிடத்தில் இரண்டு நிமிடங்கள் கடந்துவிட்டிருந்தன.

இன்னும் மூன்று நிமிடத்தில் அவள் வணிகவளாகத்தின் வாயிலை அடையக் கூடும் என மனம் படபடவென அடித்துக் கொண்டது. காற்று மட்டுமே வெளிவந்தது.

‘ஏன் இந்தப் பெண்ணிடம் மட்டும் இத்தனை படபடப்பு? வார்த்தைகள் கூட சதி செய்கிறதே!’ என நொந்தவன், தொண்டையை நன்றாய் செருமி, “வேதா...” என கரகரத்துப் போன குரலில் அழைத்தான். பெண் செவியை அது அடைந்திருக்க வாய்ப்பேயில்லை என்பது நிச்சயம். காற்றாய் வந்ததே குரல்.

அவளருகே சென்றதும் குப்பென்று பூவின் நறுமணமும் பாவையின் வாசமும் நாசியைத் தாக்கியது. “வேதா...” என உரக்க அழைத்துவிட்டான் அன்பழகன்.

தன் செவியைத் தீண்டிய அழைப்பில் ஒரு நொடி தயங்கியவள், பின் விறுவிறுவென நடக்க, ஆடவன் இதழ்களில் புன்னகை முகிழ்த்தது.

“ஏன் டி இன்னைக்கு சேரி கட்டீட்டு வந்த?” எனக் கரகரத்தக் குரலில் கேட்டவனைப் பெண் உணர்ந்து, ஓரக்கண்ணால் பார்த்தாள்.

“என்னைப் பின்னாடி சுத்த விடணும்னே, சேரி கட்டீட்டு வந்திருக்கீயா வேதா. என்னை மயக்குறதுக்காக சேலை கட்டியிருந்தா, சொல்லிடு. ஏன்னா, ஏற்கனவே உன்கிட்ட மயங்கித்தான் போய்ட்டேன். இந்த மயக்கம் சாகுற வரை தீராது போல...” என்ன முயன்றும் வார்த்தைகள் முழுவதும் அவள்மீதான நேசம் பொங்கியது அவன் குரலில்.

எத்தனை பிரயத்தனப்பட்டும், வேதாவால் அந்தக் குரலை புறக்கணிக்க முடியவில்லை. இதயத்தின் அடியாழம் சென்று தொட்டு மீண்டது அன்புவின் ஒவ்வொரு அன்பான வார்த்தைகளும். நேசக் கணைகளைப் பெண் மீது எய்தினான்.

“எனக்குத் தெரியலை...” என்றவன், சில நொடிகள் நிறுத்தி, “சேரில ரொம்ப அழகா தெரியுற டி. உன் மஞ்சள் பூசுன முகம், மூக்குல இருக்க மூக்குத்தி, தலையில வச்சிருக்க பூ, எல்லாமே என்னை ஏதோ பண்ணுது. வார்த்தையால சொல்லத் தெரியலை. ஏன் டி?” எனக் கேட்டு விரல்களை மடக்கி மடக்கி விரித்தவனின் குரல் பெண்ணை சிலிர்க்கச் செய்ததது. மூளை வேண்டாம் என மறுப்பை பல வழிகளில் தெரிவித்தாலும், மனம் அருகிலிருந்தவனை முதல்முறையாக உணர முயற்சித்தது. தோற்றாள் பெண், தனக்குள்ளே போராடித் தோற்றவளின் முகம் மட்டும் எப்போதும் போலிருக்க, வணிகவளாகத்தின் வாயில் வந்துவிட்டிருந்தது.

இந்த இரண்டு வருடத்தில் முதல்முறையாக தானாக, அவனுக்காக நின்றாள் வேதா. நிமிர்ந்து பார்த்தாள் அன்பழகனை. பாவை பார்வைக்காகவே காத்துக் கொண்டிருந்தவன் போல, “அழகி டி நீ. என்னைப் பைத்தியமாக்குற அளவுக்கு...” உதட்டை மட்டும் அசைத்தான். அதை அவளால் துல்லியமாக உணர முடிந்தது. உதட்டைக் கடித்து, தலையைக் குனிந்தவள், விறுவிறுவென உள்ளே சென்றுவிட்டாள்.

பயமும் பதற்றமும் பெண்ணை சூழ்ந்துவிட்டது நொடியில். இது சரி வருமா? வராதா? தவறா? சரியா? ஆயிரம் ஆயிரம் கேள்விகள் மனதில் பிரவாகமாகப் பொங்க, தவித்துப் போனாள் வேதவள்ளி, அன்புவின் வேதாவாக.

இன்னுமே அவளின் வாசம் தன்னைச் சுற்றியிருப்பது போலுணர்ந்தவனின் கால்கள், அங்கேயே வேரூன்றி நின்றுகொண்டு அடம் செய்தது. அவளிடமிருந்து மனதையும் விழிகளையும் சுத்தமாகப் பிரிக்கமுடியவில்லை அவனால். அந்த மஞ்சள் முகம்தான் அகமும் புறமும் நிறைந்து கிடந்தது.

ஒரு நொடி பாவை நிமிர்ந்து பார்த்தப் பார்வையிலே ஆடவன் அத்தனை குளிர்ந்து போனான், சிலிர்த்துப் போனான், திக்குமுக்காடிப் போனான். ஏதோ அவளிடமே தஞ்சம் புகுமளவுக்கு மனம் கற்பனைகளை வடிக்கத் தொடங்கியது அந்தக் கணத்தில். அவர்களுக்கான நேசத்தை முதன்முதலில் பெண்மை உணர, அதை அன்புவும் உணர்ந்தான். தன்னருகே நடந்தவளின் லேசான மாற்றங்கள், அவனுள் பெரும் மழையைத் தூவச்செய்திருந்தது.

‘உள்ளே செல்...’ என கட்டளையிட்ட மனதின் வார்த்தைகளைப் புறந்தள்ளிவிட்டு, தன் இருசக்கர வாகனத்தில் வீட்டை நோக்கிப் பறந்தவன், உணவை உண்டுவிட்டு, கடைக்குச் சென்றுவிட்டான்.

கைகள் அதன்பாட்டிற்கு வேலையைச் செய்ய, மனம் அன்புவின் வார்த்தைகளை அலசி ஆராய்ந்து
கொண்டிருந்தது. அதிலிருந்த உணர்வுகளை, நேசத்தை, காதலை, அன்பை ஏதோ ஒரு பெயரிடப்படாத இதயம் தொட்ட இதமான உணர்வை, தன்னை சிலிர்க்கச் செய்த உணர்வை, வடிக்க வார்த்தைகள் தேவைப்படவில்லை பெண்ணுக்கு. தன்னைக் காணும் போது பளிச்சென மின்னும் விழிகளும், சிரிக்கவே தெரியாது என பறைச்சாற்றும் உதடுகள் கூட அத்தனை அழகாய் சிரிக்கும் நொடி, எதையும் ஆராயத் தோன்றவில்லை பாவைக்கு.

‘இவனை எனக்குப் பிடித்திருக்கிறதா? இது எல்லாம் சரியாக வருமா? தன் தந்தை என்ன நினைப்பார்? தனக்கென இந்த உலகில் வாழும் ஒரே உறவு, தன் தந்தை மட்டுமே. தன் வாழ்வின் பெரிய முடிவுகள் எல்லாம் அவரில்லாது எடுக்க முடியாதே?’

இதோ சோனைமுத்து வரும் நொடிக்காகப் பெண் காத்திருக்கிறாள். அவர் வந்ததும் தன்னிடமுள்ள மொத்தப் பாரத்தையும் அவரிடம் இறக்கி வைத்து, மீண்டும் தன் தந்தையின் செல்ல மகளாக வேண்டும். அவர் தோளில் சாய்ந்துகொண்டு இத்தனை வருடங்கள் அவரை எவ்வளவுத் தேடியிருக்கிறாள் என தன் அன்பைப் பகிர வேண்டும். தன் கையால் சமைத்து அவருக்குக் கொடுக்க வேண்டும். மீண்டும் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் புரட்டிப் பார்க்க வேண்டும் என எத்தனையோ எண்ணங்கள் பெண் மனதில் குடியிருந்தன. அதனுடன் இப்போது அன்பழகனும் சேர்ந்திருந்தான். அவனது நினைவுகளும் கூட.

“வேதா... வேதா, என்ன பகல் கனவா?” சிரிப்புடன் கேட்ட மேற்பார்வையாளரை சங்கடமாக நோக்கினாள் வேதவள்ளி.

“ஸ்டாக் வரலை இன்னைக்கு. சோ, நீ எக்ஸ்ப்ரெரி டேட் மட்டும் பார்த்துட்டு, ப்ராடெக்ட்ஸை துடைச்சு வை. ரொம்ப தூசியா இருக்கு அந்தக் கடைசி ரேக்ல” மேற்பார்வையாளர் கூறவும், சரியென தலையை அசைத்தவள், ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து, பொருட்களை எடுத்து தேதி வாரியாகப் பிரித்து, துடைத்து அடுக்க ஆரம்பித்திருந்தாள்.

நன்றாக வேலை செய்து கொண்டிருந்தவளின் கைகளில் லேசான நடுக்கம். தலை சுற்றுவது போலிருந்தது பெண்ணுக்கு. இரவும் சரியாக சாப்பிடாதது, காலையில் சாப்பிடாதது என இரண்டும் சேர்ந்து கொள்ள, மயக்கம் வருவது போலிருந்தது.
எழுந்து நின்றாள். யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என விழிகளைச் சுழற்றியவள், நிலைத் தவறி, சுவற்றில் கையை வைத்தாள்.

“ஹே! வேதா, என்னாச்சு மா?” என பதறியபடியே சக ஊழியர் ஒருவர் ஓடி வர, ஆட்கள் கூடிவிட்டனர்.

“ஒன்னும் இல்லைகா, சாப்பிடலை. அதான் மயக்கம்...” என அவள் கூறி தண்ணீரைப் பருக, கடை முதலாளி வந்துவிட்டார்.

“நீங்க வீட்டுக்கு கிளம்புங்க மா. உடம்பு சரியானதும் வேலைக்கு வாங்க...” என அவர் கூற, மற்றவர்களும் அதையே வலியுறுத்தினர். சரியென தலையை அசைத்தாள் பெண்.

“வேதா, நான் உன்னை வீட்ல விட்டுட்டு வரவா? தனியா போய்டுவீயா?” என்று ஒரு பெண்மணி அக்கறையாக வினவ, “வேணாம் கா‌. நானே வீட்டுக்குப் போய்க்கிறேன்” மெலிதாகப் புன்னகைத்தவள், பேருந்துநிலையத்தை நோக்கி நடக்கத் துவங்கினாள்.

அழையா விருந்தாளியாக அன்பழகனின் நினைவு அந்த நொடி வந்திருந்தது. இதோ இப்போது தன்னருகே அவன் இருந்திருந்தால், தன் உடல்நிலை சரியில்லை எனத் தெரிந்ததும் பதறிப் போயிருப்பான். தவிப்பான முகத்துடன் நின்றிருப்பான்.

முன்பு ஒருநாள் அவளுக்கு உடல்நிலை சரியில்லை என அறிந்த போது, எத்தனை தவித்துவிட்டான் அவன். கொட்டும் மழை என்று கூடப் பாராது தனக்காக காத்திருந்தவன் இப்போது மனதையும் முகத்தையும் சேர்த்து நிறைத்தான். மனதில் ஏதோ ஒரு நிறைவு. சொல்லத் தெரியவில்லை பெண்ணுக்கு.

“வேதா, வா டாக்டரைப் பார்க்கப் போகலாம். உடம்பு சரியில்லாம இப்ப வேலைக்கு வரணும்னு என்ன அவசியம்? அறிவில்லையா டி?” பல்லைக் கடித்துக்கொண்டு பேசியவனின் வார்த்தைகள் இப்போது அவளது இதழ்களில் புன்னகையை உதிர்க்கச் செய்தன. தன்னருகே அவனிருக்கும் போது, முகத்தில் குடியிருக்கும் பாவனைகள் முதன்முதலில் பெண்ணைச் சுருட்டிக் கொள்ள விழைந்தது.

காலையில் தன்னைப் பார்த்ததும், அதிர்ச்சியில் விழிகள் விரிந்து, லேசாய் உதடு பிளந்தன ஆடவனுக்கு. குடித்துக் கொண்டிருந்த தேநீரை இருமிக்கொண்டே துப்பியவனின் ஆச்சர்யப் பார்வை பெண்ணை அசைத்தது.

தன்னருகே வந்ததும் விழிகள் தொட்டு பாதம் வருடிய நேசமான பார்வையில் துளி கூட கள்ளமில்லை. அன்பாய் தழுவியப் பார்வைப் பெண்ணை ஆகர்ஷித்தது. தான் நிமிர்ந்து பார்த்ததும், உதட்டசைத்து புன்னகைத்த பார்வை மனதில்
தங்கிவிட்டிருந்தது. தலைக்
கோதிக்கொண்டே, தான் அகன்றும், அவ்விடத்திலே தேங்கி நின்றவனின் பார்வை பெண்ணை இம்சித்தது. மொத்தத்தில் இம்சித்தான் அன்பழகன் பெண்ணை. உதட்டில் உறைந்த புன்னகையுடன் பேருந்து நிலையத்தை நோக்கி நடை போட்டாள் வேதவள்ளி.

இன்னும் சற்று நேரத்தில் அவள் முகத்திலிருந்த புன்னகை இருந்த இடம் தெரியாது மறையப் போவதை பெண் அறியவில்லை. அந்த அழுகையுடன் அன்பழகனுக்கு அழைக்க, உயிரை வெறுத்துக் கொண்டு அவளிடம் விரைந்தான் அவன்.

 
Well-known member
Messages
547
Reaction score
389
Points
63
என்ன ஆச்சு?
 
Top