• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,242
Reaction score
3,659
Points
113
வேதம் – 21
நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தன. வேதவள்ளிக்கும் அன்பழகனுக்கும் வாழ்க்கை சிறு சிறு சண்டைகள், அதற்குப் பின்னான சமாதானங்கள் என கடந்தது.
பலமுறை மனைவிதான் முறுக்கிக்கொண்டு திரிந்தாள். அவள் பின்னே சுற்றுவதைத்தான் எப்போதும் தன்னுடைய பிரதானக் கடமையாய் வைத்திருந்தான் அன்பழகன்.
சில நாட்கள் எந்தப் பிரச்சனையும் இன்றி நகர, வேண்டுமென்றே அவனிடம் கோபம்கொண்டு தன் பின்னே அலைய வைத்தாள் வேதா. ஏனென்றே தெரியாத போதும், கடமையே கண்ணாக இருந்தான் அன்பழகன்.
வார நாட்களில் வேதவள்ளி வீட்டிற்கு வருவது, அவ்வப்போது கணவனுடன் வெளியே சுற்றுவது என நாட்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியாகச் சென்றது.
வத்சலா மகன் விஷயத்தில் சற்று இளகியிருந்தாலும், கணவர் விரைப்பாய் சுற்ற, அவரால் எதுவும் செய்ய முடியாது போனது. அன்பழகனைப் பற்றிய பேச்செடுத்தாலே, கணவர் கோபம் கொள்ள, என்னதான் செய்வார் பெண்மணி.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதைப் போல, கொஞ்சம் கொஞ்சமாக கணவரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால், அன்பழகனிடமும் வேதாவிடமும் பேச முயற்சிக்கவில்லை.
அறிவழகன் ஒரு தனியார் மருத்துவமனையில் பல்மருத்துவராகப் பணியில் சேர்ந்திருந்தான். பெரியவர்கள் முறைத்துக்கொண்டு சுற்றினாலும், அண்ணனும் தம்பியும் எப்போதும் போலத்தான் இருந்தனர். மாதத்திற்கு ஒரு முறையாவது அன்பழகனை சந்தித்துவிடுவான் அறிவு. அவ்வப்போது தம்பியுடைய தேவைக்கென்று அவன் கையில் பணத்தைத் திணிப்பான் பெரியவன்.
“என்ன டா வேலைக்குப் போய்ட்டு, உன்னை விட நல்லா சம்பாரிக்கிறேன்னு சீன் போட்றதுக்காக பணத்தைக் கொடுக்குறீயா?” அன்பழகன் முறைக்க, இருவருக்கும் இடையில் சிறியதாய் போர் நிகழும். அப்போது எல்லாம் வேதவள்ளி என்ன செய்வது எனத் தெரியாது விழித்து நிற்பாள். கட்டிப் பிடித்து உருண்டவர்கள், ஐந்தே நிமிடத்தில் கட்டிப்பிடித்து பேசிக் கொண்டனர். முதலில் அவர்களது அக்கப்போரில் வேதா பதறிப்போனாள்.
நாளாக நாளாக அவர்கள் சண்டையிட்டால், கண்டும் காணாது அதை அலட்சியமாக கடந்து விடுவாள். பார்வை, ‘இது எனக்கு பழக்கமானது’ என்பது போலிருக்கும்.
அவர்கள் இருவரது அன்பையும் பார்த்து சில சமயம் வேதவள்ளிக்குப் பொறாமை கூட துளிர்த்தது உண்டு அவளுக்கு அப்படியொரு தமக்கையோ, தமையனோ இருந்திருக்கலாம் என்று.
நாட்கள் கடக்க, வேதவள்ளி முதல் பருவத்தேர்வுகளை முடித்துவிட, இரண்டாவது பருவம் நடந்து கொண்டிருந்தது. கெஞ்சல் கொஞ்சல் எல்லாம் வீட்டிலிருக்க, படிப்பில் படு கெட்டியாக இருந்தாள் பெண். தேர்வில் நல்ல மதிப்பெண்கள்தான் வாங்கியிருந்தாள். அவள் ஆசைப்பட்ட படிப்பு, கையில் சேரும்போது அதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும் என மூளை ஒவ்வொரு முறையும் அறிவுறுத்தியது. அதையேதான் செயலிலும் காட்டினாள்.
வழக்கம்போல திங்கட்கிழமை காலை வேதாவைக் கல்லூரியில் இறக்கிவிட்டு வீட்டிற்கு வந்தான் அன்பழகன். ஆனால், மறுநாள் காலையிலே வீடு வந்த மனைவியை யோசனையாய்ப் பார்த்தான் கணவன்.
“என்னாச்சு வேதா, உடம்பு எதுவும் சரியில்லையா?” கொஞ்சம் பதறிப்போய் வினவியவனை லேசாய் முறைத்தாள் மனைவி.
“ஆமா, ஆமா. ரொம்ப உடம்பு சரியில்லை...” சடைத்துக்கொண்டே அறைக்குள் நுழைந்தவனின் பின்னாலே சென்றான் அன்பு.
“என்னாச்சு வேதா, வா டாக்டரைப் பார்க்கலாம். ஏன் டி தனியா வந்த?” மனைவியைக் கடிந்துகொண்டே தன் சட்டையை எடுத்து மாட்டினான் கணவன்.
“இப்போ எங்க கிளம்புறீங்க. அதெல்லாம் அவசியம் இல்லை. கசகசன்னு இருக்கு. நான் குளிச்சுட்டு வர்றேன். அதுக்குள்ள டீ மட்டும் போட்டு வைங்க...” அதிகாரமாய்க் கூறிவிட்டு மாற்று உடையை எடுத்துக்கொண்டு குளியலறை வரை சென்றவள், ஒரு நொடி நிதானித்து அவனைத் திரும்பி நோக்கினாள். பெருமூச்சை வெளிவிட்டவள்,
“எனக்கொன்னும் இல்லைங்க. பதறாதீங்க. போங்க, சூப்பரா ஒரு டீ மட்டும் வேணும். ஹ்ம்ம்?” லேசாகப் புன்னகைத்து தலையை அசைத்தவளின் முகத்தைப் பார்த்ததும் அன்பழகன் உடல் தளர, இதழில் மென்முறுவல் பூத்தது.
வேதா குளித்து வர, தேநீரை தயாரித்து வைத்திருந்தான் அவன். இருவரும் அருந்தி முடிய, “இப்போ சொல்லு டி, என்னாச்சு?” என வினவினான்.
லேசாய் மூச்சை வெளிவிட்டவள், “ஏன், நான் வீட்டுக்கு வரக்கூடாதா? ரீசன் சொல்லணுமா?” முறைத்தவளின் அருகே சென்று அணைத்துக்
கொண்டான்.
“என்னாச்சு டி? எதுவும் பிரச்சனையா?” வாஞ்சையாகக் கேட்டவனின் குரல் முழுவதும் அவள் மீதான நேசம் விரவி கிடந்தது. முகம் கனிந்திருந்த கணவனைப் பார்த்தவளுக்கு விழியோரம் ஈரம் துளிர்க்க, எதுவும் கூறாது அவன் மார்பில் புதைந்தாள் பெண். இதோ அவர்களுக்கென ஒரு ஜீவன் வரப்போகிறது என்பதை எப்படி உரைப்பது எனத் தெரியாது தடுமாறினாள் பெண்.
சில நொடிகளில் தன்னை மீட்டவள், “சரி போங்க, நான் எதாவது சமைக்கிறேன்...” என இயல்பாகக் கூற, அன்பழகன் முகத்தில் இப்போது முறைப்பு படர்ந்தது.
“டிஸ்டர்ப் பண்ணாம போங்க...” அவன் முதுகில் கையை வைத்து அப்படியே கூடத்திற்குத் தள்ளிச் சென்றாள்.
“போடி...” முனைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்துவிட்டான் அன்பழகன். ஆனாலும் முகத்தில் இன்னும் சிந்தனைக் கோடுகள் படர்ந்தன.
என்ன சமைக்கிறோம் என்ற பிரக்ஞை கூட இன்றி எதையோ சமைத்து முடித்தவள், எப்படி தங்களது தாய்மையை அவனிடம் கூறுவது என மனதில் அசைப்போட்டாள். கைகள் அன்னிச்சையாய் வயிற்றைத் தடவின. பெண் எதிர்பார்க்காதது. ஏன் அன்பழகன் கூட யோசிக்கவில்லை. ஆனால், கடவுள் அவர்களுக்கு குழந்தைச் செல்வத்தை வழங்கியிருக்க, எதிர்பாரா இந்த இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காடிப் போனாள் வேதவள்ளி.
நேற்று இரவு விடுதியில் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தவளை விடுதி கண்காணிப்பாளர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார். அவளைப் பரிசோதித்த மருத்துவர், கர்ப்பத்தை உறுதி செய்ய, வேதாவிற்கு வாயடைத்துப் போனது. என்ன செய்வது எனத் தெரியாது விழித்தாள்.
“உன் ஹஸ்பண்டை வர சொல்லவா மா?” கண்காணிப்பாளர் வினவ, அப்போதே நேரம் இரவு எட்டு மணியைத் தொட்டிருக்க, இதுதான் விஷயம் எனக் கூறி அன்பழகனை அழைத்தால் அவ்வளவுதான். அவன் இந்த நேரத்தில் ஆர்ப்பாட்டம் செய்து விடுவான் என்பதை உணர்ந்தவள், வேறு காரணங்கள் கூறியும் அவனை அழைக்க முடியாது என யோசித்துவிட்டு, “இப்போ அன்டைம் மேம். நாளைக்கு நானே வர சொல்றேன்...” என்று கூறிவிட, அவரும் சரியென்றுவிட்டார்.
மறுநாள் காலையில் எழுந்தவள், முதல் பேருந்தில் வீட்டிற்குக் கிளம்பியிருந்தாள். மனம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்து கிடந்தது. ஏனோ இந்தச் செய்தியைக் கேட்டதும் அழுகை வரப் பார்க்க, தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.
மெத்தையில் அமர்ந்து அலைபேசியைக் கையில் வைத்திருந்த அன்பழகனின் அருகே சென்றாள் வேதா. நிமிர்ந்து பார்த்தவனின் விழிகளை நோக்கிக்கொண்டே முட்டிப்போட்டு அமர்ந்து கணவன் தலையை தன் வயிற்றோடு அழுத்தினாள்.
“உங்க கிட்ட சொல்லணும்னு ஆசையா ஓடி வந்தேன். இதோ, நீங்களா அதை உணருங்க. இதயத்துடிப்பைக் கேளுங்க. என்ன சொல்றான் உங்கப் பையன்?” உதட்டில் மலர்ந்த சிரிப்புடன் கூறினாள் வேதா. இமைதாண்டி விழிநீர் கன்னத்தை நனைத்தது.
மனைவியின் கூற்றில் அதன் சாரம்சத்தில் அன்பழகன் உடல் லேசாய் அதிர, நிமிர்ந்து அவளைப் பார்த்தவனின் விழிகளில் இன்ப அதிர்ச்சி.
“உண்மையா?” எனக் கேட்டவனின் குரலில் அத்தனை மென்மை.
“உண்மையாதான்...” என்று வேதா கூறியதும், எழுந்து அவளை அணைத்துக்கொண்டான்.
‘தான் அப்பா ஆகப்போகிறோம்...’ என்ற உணர்வு இத்தனை அழகாய் இருக்குமா? என ஆடவன் சந்தேகப்படுமளவிற்கு மனது சந்தோஷத்தில் கூக்குரலிட்டது.
“வந்ததும் ஏன்டி சொல்லலை...?” சிரிப்பும் முறைப்புமாய் கேட்டவனின் அணைப்பிலிருந்தபடியே நிமிர்ந்து பார்த்தாள் வேதா.
“ப்ம்ச்... ஏதோ கூச்சமா இருந்துச்சுங்க. எப்படி சொல்லன்னு தெரியலை. அதான், வார்த்தையால சொல்றதை விட, நீங்களா அதை உணர்ந்தா, இன்னும் நல்லா இருக்குமேன்னு...” இழுவையாய் இழுத்தவளின் உதட்டில் அழுத்தமாய் முத்தமிட்டவனின் உதடுகள் அவளது நெற்றியிலும் பதிந்து மீண்டன.
“எப்போ கன்பார்ம் பண்ண?” எனக் கேட்டவன் சுவற்றில் சாய்ந்து அமர, அவன் மீது சாய்ந்து அமர்ந்தாள் பெண். அவளது வயிற்றில் தன் கரங்களை பதித்துக்கொண்டான் கணவன்.
“நேத்து நைட்டுதான் கன்பார்ம் பண்ணேன்...” பக்கவாட்டாக முகம் பார்த்துக் கூறியவளின் மூக்கைப் பிடித்து ஆட்டியவன், “நேத்தே சொல்லி இருக்கலாம் இல்லை? ஏன் தனியா வேற வந்த?” என முறைத்தான். குரலில் அவ்வளவு காரமெல்லாம் இல்லை. மனது அத்தனை இதமாய் உணர்ந்தது. இந்த நொடியை, தன் கைகளுக்குள் அடங்கியிருந்தப் பெண்ணை, அவளுக்குள் அழகாய் பூத்திருக்கும் தங்களது குழந்தையை. வார்த்தையெல்லாம் தேடி தோற்றுப்போனான் அன்பழகன்.
“சாரி டி...” பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டான் கணவன்.
“ஏனாம்?” சிரிப்புப் படரக் கேட்டவள் கணவன் மீசையை பிடித்திழுத்தாள்.
“அன்எக்ஸ்பெக்டட் பேபி. ரொம்ப சந்தோஷமா இருக்கு டி...” என்றவன் கரங்கள் வேதாவின் வயிற்றைத் தடவின.
“ஆனால், உன்னால ஸ்டடிஸையும் பேபியையும் பேலன்ஸ் பண்ண முடியுமா? ஒரு மாதிரி கில்ட்டா இருக்கு...” என்றவனின் தாடியடர்ந்த கன்னத்தை கைகளில் தாங்கினாள்.
“ப்ம்ச்... இதுல என்ன கில்ட்டா இருக்கு. இதெல்லாம் கடவுளோட பரிசு. எப்போ கிடைக்கணும்னு இருக்கோ, அப்போ நம்மகிட்ட வந்துடும். அதான் இப்போ நம்ம அப்பா, அம்மா ஆகப் போறோம். சந்தோஷமாக அதை ஃபீல் பண்ணுங்க. படிப்பையும் என் புள்ளையையும் நான் பார்த்துப்பேன். என்னை சின்ன புள்ளைன்னு நீங்க நினைக்காம இருந்தா சரி...” அத்தனை நேரம் வாஞ்சையுடன் கூறியவள், கடைசி வரியில் கணவனை முறைத்தாள்.
“சின்னப்புள்ளைதான் டி நீ...” என்றவனின் கைகளில் கிள்ளினாள் பெண்.
சில நிமிடங்கள் ஆழ்ந்த அமைதி. என்ன பேசுவதென இருவருக்கும் தெரியவில்லை. தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை அப்போதுதான் சிந்தையை எட்டியிருந்தது. சிறிது நேரம் அதையும் இதையும் பேசினார்கள்.‌ மனம் மட்டும் சந்தோஷத்தில் ஆரவாரம் செய்து கொண்டிருந்தது.
அதிர்ஷ்டலட்சிமியிடம் அன்பழகன் விஷயத்தைக் கூறினான். வேதா வெட்கம்கொண்டு வீட்டிற்குள்ளே இருந்து விட, “ரொம்ப சந்தோஷம் வேதா...” எனக் கட்டியணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பெண்மணி.
கலை வேறு, ‘அண்ணி, அண்ணி...’ என கையில் எதையோ சைகை செய்து தனது சந்தோஷத்தைப் பகிர, “மச்சான், கங்கிராட்ஸ் டா...” என முகில் அன்பழகனை அணைத்துக்கொண்டான்.
அதிர்ஷ்லட்சுமி இனிப்பு செய்து கொண்டுவந்து அனைவரிடமும் கொடுக்க, அழையா விருந்தாளியாக தாயின் முகம் நினைவில் வந்தது அன்பழகனுக்கு.
“ம்மா, எனக்கு மட்டும் புள்ளை பொறக்கட்டும், பாட்டிக்கிட்டே போங்கன்னு உன்கிட்ட தொரத்திவிட்ருவேன். நீதான் பார்த்துக்கணும். அப்புறம் குழந்தையை வச்சு உன்னை மயக்கி இந்த வீட்டை என் பேர்ல எழுதி வாங்கிப்பேன்...” சன்னமான சிரிப்புடன் கூறியவனின் தலையிலே ரெண்டு கொட்டு வைத்தார் வத்சலா.
“காலேஜ் படிக்கும்போது பேச்சைப் பாரு...” அவர் திட்டுவதை சிரிப்புடன் பார்த்தான் மகன்.
“ஹ்ம்ம்... எனக்கும் ரொம்ப ஆசை டா. பொம்பளைப் பிள்ளை இல்லை, சரி பிறக்குற பேத்தியைக் கொஞ்சிக்கலாம்னு” ஆசையாய் கூறியவரின் முகம் இப்போது நினைவில் வர, அறிவழகனுக்கு அழைப்பை விடுத்தான். பெற்றவர்கள் சமாதானமடைந்து விட்டார்களா எனத் தெரியவில்லை. அதனால் தமையனுக்கு அழைத்தான்.
“என்ன டா, இந்த நேரத்துல கால் பண்ணியிருக்க?” அழைப்பை ஏற்றதும் அறிவழகன் வினவ,
“ஏன், டாக்டரா இருக்கேன் நான். ரொம்ப பிசி, உன் காலை அட்டென்ட் பண்ண டைமில்லைன்னு இன்டேரக்டா சொல்றீயா டா?” அன்பு சிரிப்புடன் வினவ,
“என்கிட்ட அடிவாங்கி நாளாச்சுல்ல. அதான் டா உன் உடம்பு நமநமன்னுது போல...” அறிவும் சிரித்தான்.
“சரி, சரி. நாளைக்கு நீ ஃப்ரியா?” எனக் கேட்டவன், “இல்லை, இல்லை. நாளைக்கு ஃப்ரீ பண்ணீட்டு வீட்டுக்கு வா...” என்றவன் அழைப்பை உடனே துண்டிக்க,
“டேய்! டேய்...” எனக் கத்திய அறிவு அழைப்பு துண்டானதில் காண்டாகி, “எருமை, எதுக்குன்னு சொல்றானான்னு பாரேன்...” என பல்லைக் கடித்தான்.
இரவு மனைவியைக் கைவளைவில் படுக்க வைத்திருந்தான் அன்பழகன். இன்னுமே அவர்கள் அந்த மோன நிலையிலிருந்து வெளியே வரவேயில்லை. அன்று மட்டும் ஒருநொடி கூட பிரியாது வேதாவை அட்டைப் போல ஒட்டிக்கொண்டு திரிந்தான் ஆடவன். மனைவி முறைக்க, கணவன் சிரித்தான்.
“முதல்ல உங்களுக்குச் சிரிக்கத் தெரியுமான்னு எல்லாம் நினைச்சிருக்கேன். இப்போ திறந்த வாயை மூடாம சிரிச்சுட்டே இருக்கீங்க...” மனைவி தலையில் அடித்துக்கொண்டாள். அந்த நாளின் மகிழ்ச்சியோடு, தூங்கிப் போயினர் இருவரும். மறுநாள் காலையிலே அறிவழகன் வந்துவிட்டான்.
“என்னடா, எதுக்கு கூப்பிட்ட?” கேள்வி கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான் அறிவு.
“ஏன் அதை உள்ள வந்து கேட்க மாட்டீயா டா?” என என்றுமில்லாது முகத்தில் புன்னகையுடன் வரவேற்ற தமையனை யோசனையாகப் பார்த்தவாறே உள்ளே நுழைந்தான் அறிவு.
“வாங்க...” வேதா புன்னகைக்க தலையை அசைத்தவன் அமர, அவள் தேநீர் எடுத்து வந்து கொடுத்தாள்.
அ- வில் ஆரம்பித்து ஃ வரை உலகத்திலுள்ள தேவையற்ற எல்லா விஷயத்தையும் பற்றிப் பேசிய அன்பழகனை முறைத்தவாறு உட்கார்ந்து இருந்த அறிவழகனின் பொறுமை எல்லைக் கடந்துவிட்டது.
“நீ ஒரு மை*** சொல்ல வேண்டாம். நான் கிளம்புறேன்...” அன்பழகன் காதருகே சென்று பல்லைக்கடித்த அறிவு கிளம்புவதற்காக எழுந்து விட, “சரி, இதை மட்டும் கேட்டுட்டுப் போடா...” என்றவனின் முகம் முழுவதும் புன்னகை.
“ஒரு ஆணியும் வேணாம்...” வாயிலருகே வரை அறிவு சென்றுவிட, “நீ பெரியப்பா ஆகப்போற டா...” தமையன் கத்தவும், அவன் நடை நின்றுவிட்டது.
உதடு முழுவதும் சிரிப்பு படர, திரும்பியவன், “விளையாட்றீயா டா?” உறுதிபடுத்திக் கொள்ள வினவினான்.
“ப்ம்ச்... என்னைக்கு நீ என்னை நம்பியிருக்க. வேதாவையே கேளு...” என்றவன் மனைவியைக் கைக்காட்டினான். இத்தனை நேரம் நடந்தவைகளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த வேதா, கணவனின் பேச்சில் அவனை முறைத்துவிட்டு அறிவழகனைப் பார்த்தாள். அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான். சங்கடமாக அவள், 'ஆமாம்' என தலையை அசைக்க, தமையனை அணைத்துக்கொண்டான் அறிவு.
“கங்கிராட்ஸ் டா...” என புன்னகையுடன் கூறியவன், அவன் தலையில் நறுக்கென கொட்டி, “வந்ததும் சொல்லாம, ஏன் டா படுத்துன?” என்றவனின் குரலில் கோபம் சிறிதும் இல்லை. அத்தனை மகிழ்ச்சி தங்கள் வீட்டிற்கு புது வரவொன்று வரப்போவதை நினைத்து.
“அது ஒன்னும் இல்லை டா...” ராகமாய் இழுத்தவன், “ஏற்கனவே உனக்கு முன்னாடி நான் கல்யாணம் பண்ணிட்டேன்னு மனசுக்குள்ள கறுவி இருப்ப. இப்போ வேற நான் முதல்ல அப்பா ஆகப்போறேனா, நீ பொறாமையில பொங்கக் கூடாதுன்னுதான் லேட்டா சொன்னேன்...” உதட்டோரம் வழிந்த குறும்பு சிரிப்போடு தோளைக் குலுக்கினான் அன்பழகன்.
“வாய் உனக்கு அதிகம் ஆகிடுச்சு...” அறிவு அன்பழகனின் சட்டையைப் பிடிக்க, இருவரின் அடிதடி ஆரம்பமானது.
‘இதையெல்லாம் பார்த்து சலித்தாகிவிட்டது’ சிரிப்புடன் வேதா அறைக்குள் நுழைந்தாள்.
சிறிது நேரத்திலே இருவரும் சமாதானமாகி விட, “இனிமேலாவது பொறுப்பா இரு டா...” என்று அறிவு விடை பெற, “அந்தப் பருப்பு எனக்குத் தெரியும். நீங்க மூடிட்டு கிளம்புங்க...” வாயில் கையை வைத்து அபிநயம் செய்தவனை முறைத்துக்கொண்டே வெளியேறிய அறிவழகன் முகத்தில் லேசான சிரிப்பு.

கடந்த மாதம் வேலைக்காரணமாக அன்பழகனை காண வரமுடியாது போய்விட்டது. அதற்குத்தான் தமையன் தன்னை இந்தப் பாடுபடுத்துக்கிறான் என நினைத்து புன்னகையுடன் வீடு வந்தவன் முதலில் தன் தாயின் அறைக்குள் நுழைந்தான்.
“ம்மா, உனக்கு ஒரு ஹேப்பி நீயூஸ். நீ பாட்டியாகப் போற...” அறிவு இனிப்பை அவர் முன் நீட்ட,
“அடப்பாவி! உன் தம்பி கல்யாணம் மட்டும்தான் டா பண்ணீட்டு வந்தான். நீ அவனுக்கு மேல பண்ணியிருக்கியே டா...” வத்சலா அதிர்ந்து நெஞ்சில் கையை வைத்துவிட, அவர் கூற்றின் அர்த்தம் புரிந்தவன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்.


















































































































































































 
Well-known member
Messages
547
Reaction score
389
Points
63
ஆஹா பிள்ளைங்க மேல எவ்ளோ நம்பிக்கை 🤪🤪🤪🤪🤪
 
Top