• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,242
Reaction score
3,657
Points
113
வேதம் – 20
வேதாவிற்கு முன்னே சென்று வழியை மறைத்து நின்றவன், “ரொம்ப பண்ற டி நீ...” என பல்லைக் கடித்துக்கொண்டே அவளது வளையல் அணிந்த கரத்தை அழுத்திப் பிடித்தான். அவனை நிமிர்ந்து பார்த்தவளிடம் பதிலில்லை.
“ப்ம்ச்... என்னை உன் பின்னாடி சுத்த வைக்கிறதே வேலையா வச்சிருக்கீயா? கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி. கல்யாணம் ஆனப்பின்னாடியும் சரி...” என்றவன் ஆதங்கத்தில் கத்தினான்.
“ஷ்... ஏன் கத்துறீங்க?” என்றவள், “அப்பவும் சரி, இப்பவும் சரி. உங்களை நான் என் பின்னால் சுத்தவே சொல்லலை. நீங்களா சுத்துனா, நான் என்ன பண்ண முடியும்?” அலட்சியமாகத் தோளைக் குலுக்கினாள் வேதா.
“ஏய், கல்யாணம் பண்ணிட்டு உன் பின்னாடி சுத்தாம, சும்மாவாடி இருக்க முடியும்?” கோபத்தை அடக்கிக்கொண்டு கேட்டான் அன்பழகன்.
“இல்லைன்னா மட்டும்...” என இழுத்தவளின் உதடு பற்களுக்கு இடையில் சிறைப்பட்டுப் போக, குரல் முழுவதும் நக்கல்தொனிதான். அவள் பேச்சை, அதன் சாராம்சத்தை அன்பழகன் உணர்ந்ததும், லேசாய் வெட்கம் கொண்டான். முகமெல்லாம் சிவந்து போனது. திணறியவன், “அடிப்பாவி...” என வேதா கரத்தை விடுவித்து, அவளது தாடையைத் தன் கைகளுக்குள் அடக்கினான்.
“எங்க இருந்துடி உனக்கு இவ்ளோ வாய். இத்தனை நாள் அமைதியானப் பொண்ணு மாதிரி ஆக்ட் பண்ணீயா?” என்றவனின் பார்வை ஆச்சர்யமாகவும் ரசனையாகவும் மனைவியை மொய்த்தது.
“ப்ம்ச்...” அவன் கையை விலக்கப் போராடியவாறே, “எல்லாம் சகவாச தோஷம்...” என பெண் முணுமுணுக்கவும், அன்பழகன் முகம் முழுவதும் புன்னகைதான்.
“முடிவா என்ன டி சொல்ற? எப்போ இந்த மௌன விரதத்தை முடிக்கிறதா உத்தேசம், கல்நெஞ்சக்காரி டி நீ. மனுஷனுக்கு கிறுக்குப் பிடிக்குது...” என்றவனின் கரம் அவளது முகத்திலிருந்து விடுபட்டு தன் பின்னந்தலையைக் கோத, பாவை மீதிருந்த பார்வையை விலக்கி சுவற்றில் படரவிட்டான். ஏனோ அவள் மீதான உணர்வுகளுக்கு எல்லாம் உயிர்க் கொடுத்து பேசும்போது மனம் படபடவென இறக்கைக் கட்டிக்கொண்டு பறக்கும் உணர்வு. இதழில் குடியேறிய புன்னகையால் முகம் மலர்ந்து போனது ஆடவனுக்கு.
அவனைத்தான் பார்த்தாள் வேதவள்ளி. சில நொடிகள் கடக்க, “அதான் அப்பவே சொல்லிட்டேனே! எப்போ நீங்க செஞ்ச தப்பை உணர்றீங்களோ, அப்போ வந்து பேசுங்க. நான் பேசுறேன்...” என்றாள்.
“ப்ம்ச்...” நெற்றியைச் சொரிந்து கோபத்தை அடக்கிக்கொண்டான். கண்டிப்பாக, தான் பேசி, அவள் பேசி சண்டை நீண்டுக்கொண்டேதான் செல்லும். அவளுக்கு எப்படியோ, அன்பழகன் இத்தனை நாள் அமைதியாய் இருந்ததே பெரிது. இன்றோடு இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என நினைத்தவன், பொறுமை என்னும் ஆயுதத்தைக் கையில் எடுத்தான்.
“தப்பு தப்புன்னு சொல்லாத டி. ஒவ்வொருத்தவங்க பார்வையில் ஒவ்வொரு விஷயம், நியாயம், அநியாயம்னு மாறும். என்னைப் பொறுத்தவரைக்கும் அவர் நடந்துக்கிட்டதுக்கு என்னால இப்படித்தான் ரியாக்ட் பண்ண முடியும். அதுவும் நீன்னு வரும்போது, என்னோட வரையறை எல்லாம் மாறுது...” தனக்கு சுத்தமும் வராத பொறுமையை முதன்முதலாக இழுத்துப் பிடித்துப் பேசினான்.
‘ராஜாவாகவே இருந்தாலும், ராணியிடம் அடிபணிதல்தான் உலக நியதி’ மனம் அந்த நேரத்தில் கேலி செய்ததது.
அவனை வெறித்தவள், “அதுதான் வேண்டாம்னு சொல்றேன். நியாயம் எல்லா இடத்துலயும் ஒரே மாதிரிதான் இருக்கணும். அப்படியில்லைன்னா அதுக்குப்பேர் நியாயமே இல்லை. உங்களை நீங்க மாத்திக்கலைன்னா, இப்படியே இருந்திடலாம் நம்ப ரெண்டு பேரும்...” அசராமல் குண்டைத் தூக்கிப்போட்டாள் மனைவி. அத்தனை சரளமாக பேசினாள், உறுதியாய், கொஞ்சம் அழுத்தமும் கூட. எல்லாம் அன்பழகன் கத்துக்கொடுத்ததுதான். இப்போது குருவையே பதம் பார்த்தாள் பெண் வார்த்தை என்னும் கூர் ஆயுதத்தால்.
அவள் கூறியதில் அதிர்ந்தது அன்பழகனின் மனது. ‘அடிப்பாவி! ராட்சசி. இந்த சில வாரங்களே தூக்குத் தண்டனை கைதிப்போலத்தானே புலம்பிக் கொண்டிருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் என்றால், தாங்காது. செத்து மடிந்து போய் விடுவேனே!’ மனதுக்குள் அலறியவன், ‘சே! காதலியா இருந்தப்போ எவ்ளோ அமைதியா இருந்தா. பேசாம அந்த வேதாவே இப்போதும் இருந்திருக்கலாம்...’ என நப்பாசைக் கொள்ள, “சரி, சரி. ட்ரை பண்றேன்...” பல்லைக் கடித்து, பொறுமையை இழுத்துப் பிடித்தான்.
“என்ன ட்ரை பண்றீங்க?” வேதா நக்கலாக வினவ,
“அதான் தப்பு தப்புன்னு ஏலம் போட்றீயே! அந்தத் தப்பை இனிமே செய்யாம இருக்க ட்ரை பண்றேன்...” தன்னுடைய அகராதியில் பொறுமையை வெறுப்புடன் இணைத்தான் வேதாவின் அன்பழகன்.
“ஓ... ட்ரை மட்டும்தான் பண்ணுவீங்க?” இடுப்பில் கையை வைத்து முறைத்தாள் வேதவள்ளி.
“ஏய், ரொம்ப படுத்துறடி. நானெல்லாம் இந்தளவுக்கு பேசுறதே பெருசு. இதுல இவ வேற...” என சலித்தவன், “கொஞ்சம் கொஞ்சமா மாத்த ட்ரை பண்றேன் டி. புருஞ்சுக்கோ மனுஷனை...” என்றான்.
வேதவள்ளிக்கும் அது புரிந்தே இருந்தது. அவள் பார்த்தவரையில் அன்பழகன் அத்தனை அடாவடி, யாருக்கும் அடங்கிப் போகாத பேர்வழிதான். உடனடியாக அவனை மாற்றுவதென்பது இயலாதக் காரியம் என்பதை பெண் உணர்ந்தே இருந்தாள். இன்றைக்கு இதுவே போதும் என்றுணர்ந்தவள், “அதென்ன குரல் நக்கலா இருக்கு. நம்பலாமா, நீங்க செஞ்ச தப்பை பீல் பண்ண மாதிரி தெரியலையே...” எனக் கேட்டு அன்பழகன் பொறுமையை வெகுவாக சோதித்தாள்.
“ப்ம்ச்... ஏன்டி, பீல் பண்றதுன்னா அழுதுக்கிட்டே சொல்ல சொல்றீயா?” முறைத்தான்.
“ஓ...” என இழுத்தவள், “லவ் பண்றேன்னு பின்னாடி சுத்தும் போது மட்டும் பீல் பண்ணி பக்கம் பக்கமா பேசி, உங்களோட பீலிங்க்ஸை ப்ளா, ப்ளான்னு எனக்கு உணர வச்சீங்க. சோ, இப்போ உங்களால் பீலிங்க்ஸை எக்ஸ்பிரஸ் பண்ண முடியலையோ?” குறும்பாய் வினவினாள். அதில் கணவன் உடல் தளர்ந்து போக, உதடுகள் விரிந்தன.
“ச்சு... போடி...” என்றவன் இரண்டடி கிட்டே வர, “ஸ்டாப், ஸ்டாப். என்ன பண்ண போறீங்க?” பதறிப்போய் வினவினாள்.
“எனக்கு கட்டிக்கணும்...” உதட்டோடு கையும் அபிநயம் பிடித்துக் கூறியவனைப் பார்த்து சிரித்துவிட்ட வேதா, “நோ, சேலை கசங்கிடும். சாயங்காலம் கட்டிக்கலாம்...” எனக் கூறி நகர, நொடியில் அவளது இடையில் கைக்கொடுத்து தூக்கிவிட்டான் அன்பழகன்.
“அச்சச்சோ...” பெண் பதறி அவன் தோள்பட்டையில் கைவைக்க, அவளது மார்பில் முகம் புதைத்துக்கொண்டான் கணவன். கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் கழித்து மனைவியின் ஸ்பரிசம். மனம் பரவசப்பட்டது, உடல் சிலிர்த்தது. உதட்டில் உறைந்த புன்னகையுடன் அவனது தலையைக் கலைத்துவிட்ட வேதா குனிந்து கணவன் தலையில் மென்மையாய் முத்தமிட்டு, “சாரி...” என முணுமுணுத்தாள். அன்பழகன் உறைந்து போனான். ஒற்றை முத்தத்தில் குளிர்ந்து போனான். ஏனோ இந்த ஒரு இதழொற்றலுக்காக எத்தனை படி வேண்டுமானாலும் இறங்கிப் போகலாம் என மனது ஆர்பரித்துத் தொலைத்தது அந்தக் கணத்தில்.
நிமிர்ந்து வேதா முகம் பார்த்த அன்பழகன், “நானும் சாரி...” என்க, இருவருக்குமே சிரிப்பு வந்துவிட்டது.
“போதும், விடுங்க...” என அவனிடமிருந்து பிரிந்தவள், “சேலை வேற கசங்கிடுச்சு... உங்களாலதான். போங்க...” சிணுங்கிக்கொண்டே முந்தானை மடிப்பை வேதா சரிசெய்ய, அன்பழகன் குனிந்து கீழே புடவையை சரிசெய்தான்.
லேசான புன்னகையுடன் அவனைப் பார்த்தவள், “சரி... சரி. போய்க் கிளம்புங்க. இன்னைக்கு காலேஜ் கல்ச்சுரல்ஸ். நீங்களும் வரணும்...” என்றாள்.
“நானும் வரணுமா? வேலை இருக்கு டி...” என இழுத்தவனை ஒரே ஒரு முறைப்பு முறைத்தாள் மனைவி. கணவன் தலை தானாக, ‘சரி...’ என்பதாய் ஆட, குளிக்கச் சென்றான்.
“மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே
மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே
கன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே
கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை கட்டிவிட்டு கண்சிரிக்கும் சுந்தரியே
அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை கட்டி அணை கட்டி வைத்த பைங்கிளியே
என்னில் நீயடி... உன்னில் நானடி...
என்னில் நீயடி... உன்னில் நானடி... ஓ.. பைங்கிளி”
அன்பழகன் கிளம்பி முடித்து, “நான் முகில்கிட்டே சொல்லிட்டு வரேன். நீ வீட்டைப் பூட்டு வேதா...” என்றவன் முகிலனின் அறை நோக்கிச் சென்றான். இடையில் கலை வேறு, ‘சாப்பிட வா...’ என அழைக்க, தலையை அசைத்து சாப்பிட்டுவிட்டேன் எனக்கூறி நண்பன் அறைக்குள் நுழைந்தான்.
“வா டா...” முகில் தலையை வாரிக் கொண்டிருந்தான்.
“மச்சான், நான் இன்னைக்கு கடைக்கு வரலை. நீ மட்டும் போடா...” முகத்தில் புன்னகையுடன் கூறிய அன்பழகனை மேலிருந்து கீழே பார்த்த முகில், “என்ன மச்சி, தங்கச்சியோட சமாதானம் ஆகிட்ட போல?” என நக்கலாகக் கேட்டான்.
“ஆமா டா...” அன்பு சிரிக்கவும், “தெரியுது டா. உன் முகமே சொல்லுது...” என இழுத்தவன், “எப்படி கால்ல விழுந்துட்டீயா டா?” என சன்னமான சிரிப்புடன் கேட்டான் நண்பன்.
அவனை முறைத்த அன்பு, விரைப்பாய் நின்றான். “சே... சே...” என்றவன் உதட்டோரம் சிரிப்பு வழிந்தது.
“அதானே, என் மச்சான் கெத்து டா...” முகில் கூறவும், தொண்டையைக் கணைத்த அன்பு, “அதைத் தவிர எல்லாத்தையும் செய்ய வச்சுட்டா டா.‌..” எனக் கூறி திரும்பிப் பாராது நடக்க, நண்பன் சிரிப்பு சத்தம் அன்புவின் காதை நிறைத்தது.
அன்புவும் வேதாவும் கல்லூரியை நோக்கிச் சென்றனர். அவர்கள் செல்வதற்கு முன்பே கலை நிகழ்ச்சிகள் எல்லாம் தொடங்கிவிட்டன. “வேதா இங்க வா...” உள்ளே நுழைந்ததும் வேதவள்ளியுடைய தோழிகள் பலருடைய குரல் செவியை அடைய, அன்பழகனை அழைத்துக்கொண்டு அவர்களருகே சென்று அமர்ந்தாள்.
சுற்றி அமர்ந்திருந்த மாணவர் பட்டாளத்தில் அன்பழகன் சற்றே நெளிந்தான். ஆண், பெண் என தன் வகுப்பு மாணவர்களை அறிமுகம் செய்து வைத்தாள் வேதவள்ளி. எல்லோரிடமும் சிறிய தலையாட்டல் மற்றும் புன்னகையுடன் அன்பழகன் முடித்துக் கொள்ள, யார் கண்ணையும் கவராது அவனை முறைத்தாள் மனைவி.
“என்ன டி?” கணவன் கிசுகிசுக்க,
“ப்ம்ச்... எல்லார்கிட்டயும் சிரிச்சுப் பேசுங்க. ஸ்ரிக்ட் ஆபிசர் மாதிரி நடந்துக்காதீங்க...” என முறைக்க,
“சில்லு வண்டுககிட்டேலாம் என்னடி பேச?” அன்பு நெற்றியைச் சுருக்க, “என்கிட்ட பேசுறீங்கல்ல. அவங்ககிட்டேயும் பேசுங்க...” என்றவளின் கவனம் மேடையில் குவிந்தது.
‘பொண்டாட்டியும் மத்தவங்களும் ஒன்னா? ரொம்ப மிரட்டுறாளே இவ?’ என மனதிற்குள் முணுமுணுத்தவன் கவனம் மனைவியில் பதிந்தது.
கூந்தலில் வழிந்த மல்லிகைப்பூ முன்புறம் தோளில் கிடக்க, ஆங்காங்கே முடிக்கற்றைகள் பறந்த வண்ணமிருந்தன. எப்போதும் போலில்லாது சற்று அதிகமாய் மஞ்சளை முகத்தில் குழைத்துப் பூசியிருந்தாள். மூக்குத்தியோடு சேர்ந்து முகமும் மின்னியது. விழிகளிலிட்டிருந்த மை ஆயிரம் கதை பேச, தொண்டையைக் கணைத்துக்கொண்டே மேடை மீது முயன்று கவனத்தைப் பதித்தான்.
மதிய உணவு நேரத்தில் அனைவரும் ஒன்றாய் உண்டு பேசி, என மாலை கவிழ்ந்தது. இன்னும் கலை நிகழ்ச்சிகள் முடியவில்லை. இருப்பினும் வேதவள்ளி அனைவரிடமும் கூறிவிட்டு விடை பெற்றாள். இப்போது கிளம்பினால்தான் இருவரும் இரவு ஒன்பது மணிக்காவது வீட்டை அடைய முடியும். அன்பழகனும் அனைவரிடமும் சின்ன சிரிப்புடன் விடை பெற்றான்.
செல்லும் வழியிலே இருவரும் ஒரு உணவகத்தில் உண்டுவிட்டு வீடு சென்று சேர்ந்தனர். கதவைத் திறந்ததும், அறைக்குள் சென்ற வேதவள்ளி அலமாரியைத் திறந்து இரவு உடையைத் தேட, பின்னிருந்து அவளை அணைத்தான் அன்பழகன்.
லேசாய் உதட்டில் புன்னகை மலர்ந்தது பெண்ணுக்கு. “என்னவாம்?” என இழுத்தவாறே உடையை எடுத்துவிட்டு அலமாரியை பூட்டினாள்.
“சேரில ரொம்ப அழகா இருக்கடி...” என்றவனின் முகம் அவளுடைய கழுத்தடியில் பதிந்து போனது. வேதாவின் உடல் சிலிர்த்தது.
“ஓஹோ...” சிரிப்புடன் இழுத்தாள்.
“என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ற நீ...” என்றவன் இதழ்கள் அவளது கழுத்தில் கோலமிட, சற்றே வெடவெடத்துப் போனாலும் அதைக் காட்டிக்கொள்ளவில்லை பெண்.
“சரி விடுங்க. நான் ட்ரெஸ் மாத்தணும்...” சிரிப்புடன் கூறியவளை அப்படியே கைகளில் தாங்கியிருந்தவன், “அவசியமில்லை...” என்று கூறவும் அதன் சாராம்சம் என்னெவன புரியாது சிவந்து போனாள் பெண்.
அப்படியே அவளை மெத்தையில் அமர வைத்து தானும் அமர்ந்தவனின் கரங்கள் அவளது இரண்டு கால்களையும் எடுத்து மடியில் வைத்துக்கொண்டன. கால் விரல்களிலும் உள்ளங்காலிலும் மருதாணியை குழைத்து அப்பியிருந்தாள் பாவை. இரண்டு கால்களையும் எடுத்து மூக்கினருகே கொண்டு சென்று நுகர்ந்தவனின் செயலில் கூச்சம் வந்து ஒட்டிக்கொள்ள, “என்ன பண்றீங்க?” எனக் கேட்டவளுக்கு குரலே வரவில்லை.
“நான் என்ன பண்றேன். நீதான் ஏதோதோ பண்ற...” லேசாய் பிதற்றியவனைப் பார்த்து விழிகளைத் தழைத்து வெட்கப்பட்டவளின் சிவந்த கன்னத்தில் மொத்தமாய் வீழ்ந்து போனவனின் இதழ்கள் அவளது கன்னத்தில் புதைந்து போயின. அதன் மென்மையில் உடல் சிலிர்த்தான். தான் வாங்கிக் கொடுத்த கொலுசை மனைவி அணிந்ததும் அத்தனை அழகாய் தெரிய, முத்தமிட்டான் கொலுசுக்கும் காலுக்கும் சேர்த்தே. கூச்சத்தில் கால்களை இழுக்க முயன்றாள் மனைவி.
“வேதா...” காதலாக அழைத்தவனின் குரலில் மனைவி மீதான ஆசையும் தாபமும் கொட்டிக்கிடந்தன.
“ஹம்ம்...” எனக் கேட்டவளுக்கு அந்தக் குரலிலிருந்த உணர்வு அடிவயிற்றில் குபீரென எதையோ புரளச் செய்ததது. மொத்தமாய் சிவந்து போனவளிடம், “ம்ம...” என்ற வார்த்தை மட்டுமே பதிலாய் வந்தது.
“அன்னைக்கு கட்டிக்கிட்ட மாதிரி இன்னைக்கும் கட்டிக்கோ...” என்றவன் விழிகளில் அவள் மீதான மயக்கம் கொட்டிக் கிடக்க, நிமிர்ந்து பார்த்தவளின் உதடுகள் லேசாய் விரிய, கையை விரித்தாள், கட்டிக்கொண்டான் கணவன். தவறென மூளை அறிவுறுத்த, மனம் என்னவோ அவளருகில் மயங்கி கிறங்கி கிடந்தது. அவளது வாசம் நாசியை மட்டுமல்ல நாபி வரை குளிரைப் பரப்பியது. சொல்ல முடியாத உணர்வொன்று அவனை செயலிழக்கச் செய்து கொண்டிருந்தது.
வேதாவின் கழுத்தில் முகத்தை வைத்து உரசியவனால் கூச்சத்தில் நெளிந்தவள், “என்னங்க...” என சிணுங்கினாள். மொத்தமாய் தூள் தூளாகச் சிதறிப்போனான் கணவன் அந்தக் குரலில், கெஞ்சலில், கொஞ்சலில்.
“அன்னைக்கு சொன்னதுதான் டி. என்னை ரொம்ப படுத்துற நீ. நான் கன்ட்ரோலா இருக்கணும்னு நினைக்கிறேன். நீ என்னடான்னா காலையிலே மனுஷனை கிறுக்காக்குற, இந்த சேலையை ஏன் டி கட்டுன?” அவளிடமிருந்து பிரிந்தவன் கோபமாக வினவ, உதட்டைக் கடித்துப்‌ புன்னகையை அடக்கிக்கொண்டாள் வேதவள்ளி.
அந்த உதட்டை கைகளால் அளந்தவன், “சொல்லு டி...” என மிரட்ட, குரல் குழைவாகத்தான் வந்தது.
“சேலையை என்ன பூஜை பண்றதுக்கு வாங்கிட்டு வந்தீங்களா?” நக்கலாக மனைவி கேட்டதும் லேசாய் சிவந்தவன், என்ன பதில் விளிப்பது எனத் தெரியாது திணற, பெண் அதனை அழகாய் தன் மனதில் பூட்டிக்கொண்டாள்.
“சின்னப் புள்ளை டி நீ. ச்சு போ...” என்றவன் தலையைக் கோத, ‘இதோ... இப்போது இந்த அன்பழகனை இன்னும் இன்னும் பிடித்துத் தொலைத்தது. தனக்காக என ஒவ்வொன்றிலும் பார்க்கும் இவனை யாருக்குத்தான் பிடிக்காது. அடிதடியை பிரித்துவிட்டுப் பார்த்தாள், அத்தனை தூய்மையானவன். அந்த அடிதடி கூட, நேர்மையான விஷயத்திற்கு மட்டும்தானே?’ மனம் கணவன் மீதான பெருமையில் சிலிர்த்தது.
திருமணத்திற்கு முன்பே அத்தனை பேசி முறைப்பைப் பெற்றுக் கொண்டவன், கண்டிப்பாக திருமணத்திற்குப் பின்னே என வேதா ஆரம்ப காலத்தில் எண்ணி அச்சம் கொண்டது உண்டு. ஆனால், அவன் ஆர்ப்பாட்டமும் அடாவடியும் வேதவள்ளி என்ற மந்திரத்தின் முன்பு சுழியமாகிப் போனதைப் பார்த்தவளுக்கு ஆச்சர்யமும் கூடவே கொஞ்சம் அவன் மீதான நேசமும் துளிர்க்க தொடங்கி இருந்தது. ‘நீ என்னை மயக்குற. மாயக்காரி...’ என சொல்லி சொல்லியே பெண்ணை மயக்கிவிட்டிருந்தான், அன்பால், நேசத்தால்.
லேசாய் சிரித்த வேதா அவன் சட்டை நுனியைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்தாள். இருவரது முகமும் அருகருகே இருக்க, “எனக்கு இன்னும் ரெண்டு மாசத்துல இருபது வயசாகப் போகுது. நான் ஒன்னும் சின்னப் புள்ளை இல்லை...” என்றவள் உதட்டைச் சுழித்து பக்கவாட்டாய் திரும்பவும், அவளது மூக்குத்தியில் முத்தமிட்டு நிமிர்ந்தவன் நிதானம் மனைவியின் பேச்சில் தொலைய ஆரம்பித்திருந்தது.
“அப்போ தப்பில்லையா டி?” எனக் குழந்தையாய் கேள்வி கேட்டான் கணவன் . அவனைத் திரும்பிப் பார்த்து லேசாய் முறைத்தவள், “ரெண்டு வருஷமா பின்னாடி சுத்தி, மயக்குறன்னு பேசுனதெல்லாம் சரின்னா, இதுவும் சரிதான்...” என்றாள்.
“ரொம்ப பேசுற டி...” என்றவன் விரல்கள் அவளது உதட்டை பிடித்து அளக்க, “பேச்சைக் குறைச்சுடுங்க...” என்றவளின் வார்த்தையில் கணவன் புருவம் உயர்ந்தது.
“தாங்குவியா டி...?” கிறக்கமும் குழைவுமாய் கேட்டவனின் கேள்வியில் சிவந்தவள், மீண்டும் அவனை தன் புறமாய் இழுத்தாள். இருவரும் படுக்கையில் சரிய, அவளிதழோடு தன்னைக் கலந்திருந்திருந்தான்.
‘வேண்டாம்... வேண்டாம்...’ என அனத்திய மூளை சற்றே விடுப்பு எடுத்துக்கொள்ள, மனதின் ஆட்சிதான் அங்கே. மனையாளை அழகாய் அணைத்துக் கையாண்டான். வெட்கமும் கூச்சமும் போட்டிப் போட, அழகாய் அவனிடம் தன்னை ஒப்படைத்திருந்தாள் மனைவி.
அவனிடம் கூசி சிலிர்த்தாள், சிலிர்க்கச் செய்தான். இரண்டு வருடத்தின் மொத்த நேசத்தையும் அவளிடம் கொட்டினான். அத்தனை பிதற்றல்கள் எல்லாம் மனைவி மீதான மயக்கம்தான். சிரித்தாள், சிரிப்புடன் அவனை முழுதாய் கணவனாய் ஏற்றாள்.
என்னதான் கணவன் மனைவியாக மனதளவில் இணைந்தாலும், ஒரு கூடலுக்குப் பின்னான அவர்களின் நெருக்கம் என்பது அளப்பரியது. அனுபவித்தர்வளுக்குத்தான் தெரியும்.
தன்னருகே சிவந்து கிடந்தவளை அள்ளி அணைத்தவன், “மொத்தமாய் மயக்கிட்ட டி. முந்தாணையில முடிஞ்சு வச்சிருக்க டி...” இன்னுமே அவனது பிதற்றல்களின் எச்சங்கள் நீட்சியாய் வார்த்தைகளால் கோர்த்தான். கவிதையாய் இருந்த நேசத்தை நேரம் துளி துளியாய் ஆக்கிரமித்துக்கொண்டது.

விடை தெரியாத கேள்வி ஆயிரம் மனைவி மனதில். அன்பழகனின் நேசம் ஒன்றுதான் வெற்றுக் காகிதத்தை விடையாய் நிறைத்தது. நிறைத்தானே பெண்ணை மொத்தமாய். அவளுமே அந்த நேசத்தின் பிடியில் வாழ்நாளை கடக்கலாம் என எண்ணி அடியெடுத்து வைத்த வாழ்க்கையின் மற்றொரு பரிமாணத்தை அத்தனை அழகாய் வேதாவிற்கு உணர்த்தி, தானும் உணர்ந்திருந்தான் அன்பழகன். மொத்தமாய் அவர்கள் இருவரும் அன்பின் வேதத்தை புனைந்திருந்தனர் நேசமென்னும் வார்த்தையால்.
“இன்னும் முடிஞ்சுக்குறதுக்கு என்ன இருக்கு? அதான் பின்னாடியே வர்றீங்களே...” உதட்டை வளைத்துக் கேலி பேசியவளின் இதழில் முத்தமிட்டவன், “முழுசா அன்பழகன் பொண்டாட்டியா மாறிட்ட டி. அதான் இவ்ளோ பேசுற...” மயக்கத்துடன் கூறினான். தீராத மயக்கம் அது, வேதாவின் மீதான மயக்கம். அவர்களை எப்போதும் ஒன்றிணைக்கும் மயக்கம் நேசமயக்கம்.
“போதும், தூங்குங்க...” செல்லமாய் அதட்டி உருட்டி அவனை தூங்க வைத்து தானும் உறங்கிக் போனாள் பெண்.
மறுநாள் காலையில் வேதவள்ளிதான் முதலில் விழித்தாள். மணி ஆறாகியிருக்க,
தன்னை மெத்தைப் போல பாவித்துப் படுத்திருந்த அன்பழகனிடமிருந்து மெதுவாய் பிரிந்தவள், குளித்துமுடித்து வந்தாள். காலை வேளை குளிரைக் கிளற, சூடாக தேநீர் குடித்தால் நன்றாக இருக்குமென அப்படியே மெதுவாய் நடந்து பால் வாங்கி வந்து தேயிலைத் தூளை தூவி அடுப்பில் ஏற்றினாள்.
தானாய் புன்னகை ஒன்று உதட்டை ஒட்டிக்கொண்டது. கணவனின் பேச்சில், சீண்டலில், பிதற்றலில், தன் மீதான அவன் மயக்கத்தில், கிறக்கத்தில் இன்னும் எல்லாவற்றிலுமே.
தலையை மறுபுறம் திரும்பிப் படுத்தவனுக்கு தேநீர் நறுமணம் மூக்கைத் துளைக்க, எழுந்து கழிவறைச் சென்று வந்தான். தலைக்கு குளித்து முடித்து எதோ பாடலை முணுமுணுத்துக்கொண்டே சமையலறையில் நின்ற மனைவி முகத்தையும் அகத்தையும் சேர்த்தே நிறைத்தாள்.
“வேதா...” கிசுகிசுப்பான குரலில் அழைத்தவாறே வாசமாய் இருந்த மனைவியை பின்னிருந்து அணைத்துக் கொண்டான் கணவன். அப்போதுதான் குளித்து வந்திருந்ததால், வழலைக்கட்டியின் நறுமணமும், மஞ்சள் நறுமணமும் நாசியை நிறைக்க, மனைவியை வாசம் பிடித்தான்.
அன்பழகனை எதிர்பாராது ஒரு நொடி அதிர்ந்தவள், பின் இயல்பாகி தேநீரை வடிகட்டி, “டீ குடிங்க...” சின்ன சிரிப்புடன் அவனிடமிருந்து விலகினாள்.
“டீயை விட என் பொண்டாட்டி வாசமா இருக்காளே...” சன்னமான சிரிப்புடன் தேநீரை அருந்தியவனை புருவம் உயர்த்திப் பார்த்தாள் பெண்.
சுரிதார் அணிந்திருந்தாள் வேதா. “எங்க கிளம்பிட்ட?” அவன் கேள்வியில்,
‘இதென்னயா கேள்வி?’ என்பது போல பார்த்தவள், “காலேஜூக்குத்தான்” என்றாள்.
“காலேஜூக்கா...?” என இழுத்தவன், “இன்னைக்கு காலேஜூக்கு எல்லாம் போக வேணாம்...” என அதிகாரமாய் கூற, பழைய அன்பழகன் குரல் மீண்டிருந்தது.
“ஓ... காலேஜ் போக வேணாம். ஹம்ம்...” அவனை மேலிருந்து கீழாகப் பார்த்தவள், “ஒழுங்கா காலேஜ் போய்ப் படிக்குற சின்ன புள்ளையை நைட்டு முழுசும் தூங்க விடாம தொல்லைப் பண்ணீட்டு, இப்போ கிளாஸூக்கும் போகக் கூடாதுன்னு சொல்றீங்க?” அவனைப் போலவே அதிகாரத் தோரணையில் மனைவி வினவ, அதில் விழித்தான் அன்பழகன்.
‘அடிப்பாவி...’ மனம் அவளது செயலில் சிறிய அதிர்வை தாங்கியது. ‘அதிகாரம் வேண்டாம். அன்பாய் சொல்...’ மனதின் கட்டளைக்கு கீழ் படிந்தவனின் உடல் கொஞ்சம் தளர்ந்தது.

“இன்னைக்கு காலேஜ்க்குப் போக வேணாம் டி...” அவளருகே சென்று கெஞ்சலாய்க் கேட்டவனின் விரல்கள் வேதாவின் நெற்றியில் பூத்திருந்த வியர்வை முத்துக்களைத் தொட்டது. முகத்தை அத்தனைப் பாவமாய் வைத்திருந்தவனைப் பார்த்து மனது மயங்கியதென்னவோ உண்மை. ஆனால் அவள் இன்று கல்லூரிக்கு விடுப்பு எடுக்க முடியாத சூழல் அமைந்துவிட்டது.
“நோ, இன்னைக்கு எனக்கு இன்டர்னெல்ஸ் இருக்கு. அதுக்கு உக்காந்து நைட்டு படிக்கலாம் நினைச்சிருந்தேன். அதான் அதை கெடுத்துவிட்டுட்டீங்களே!” சன்னமான சிரிப்புடன் கூறினாள் மனைவி.
“அதான் படிக்கலைல. அப்புறம் ஏன் போற, நாளைக்கு படிச்சுட்டு போய் எழுதலாமே!”
“ஓ... எழுதலாமே! எனக்கு வர்ற வாத்தியார் உங்க அப்பாவா இருந்தால் பரவாயில்லை. நமக்குத் தெரியாத மனுஷனா போய்ட்டாரே!” நக்கலடித்த மனைவியை ஒரே இழுப்பில் இழுத்தணைத்தவன், “போகணுமா...?” என மீண்டும் இழுத்தான், குரலில் கெஞ்சலிருந்தது.
இன்னும் இரண்டு நிமிடங்கள் அன்பழகனுடன் நின்றால், மனமும் மூளையும் அவன்புறம் சாய்ந்துவிடும் அபாயம் இருப்பதால், “ச்சு... போங்க. இன்னும் பத்து நிமிஷத்துல குளிச்சு கிளம்புறீங்க...” என அதட்டல் போல கூறி அறைக்குள் ஓடியவளை உதட்டிலேறிய சிரிப்புடன் பார்த்தான் கணவன். அவள் பரிட்சை என்று கூறியதுமே, அவளைக் கல்லூரிக்கு அனுப்பலாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டான். இருந்தும் அவளிடம் தான் கெஞ்சும் போது லேசாய் இளகிப் பின் விரைப்பாய் மாறும் விழிகளைக் காணும் போது ஏனோ தித்தித்தது.
இருவரும் கிளம்பி கல்லூரியை அடைய, சிறிது பணத்தை வேதாவின் கையில் கொடுத்து லேசான தலையசைப்புடன் விடை பெற்றான் அன்பழகன்.
வேதாவும் புன்னகையுடன் கல்லூரிக்குள் நுழைந்தாள். இருவருக்குமே அந்த நாள் முழுவதும் புன்னகை வாடவேயில்லை. உதட்டில் ஒட்டிக்கொண்டது.
வேலை முடிந்த அன்பழகன் வீட்டிற்குள் நுழைய, மனதெங்கும் நிறைந்து கிடந்த மனைவியே வீடு முழுவதும் ஆக்கிரமித்து அவனை ஆகர்ஷித்தாள். குளித்து முடித்து இரவு உடைக்கு அவன் மாறி வர, கலை இரவு உணவைக் கொடுத்துவிட்டுச் சென்றாள். விரைவாய் உண்டு முடித்தவன், அலைபேசியை எடுத்து மனைவிக்கு காணொளி அழைப்பை விடுத்தான்.
தன் கட்டிலில் அமர்ந்து புத்தகத்தில் எதையோ எழுதிக்கொண்டிருந்தவள், காணொளி அழைப்பை எதிர்பார்க்கவில்லை. அழைப்பை ஏற்றவளின் அலைபேசித் திரையில் பளிச்சென புன்னகையுடன் நின்றான் அன்பழகன்.
ஒரு நொடி ஆச்சர்யமாய் விழிகளை விரித்தவள் பின் இயல்பை அடைந்து, ‘என்னவாம்?’ என்ற தோரணையில் புருவத்தை உயர்த்தினாள்.
‘ஒன்னும் இல்லை...’ என்பதாய் தோளைக் குலுக்கியவனின் விழிகள் புன்னகை உறைந்திருந்த மனைவியின் முகத்தை மொய்த்தன.
“என்னங்க?” எனக் கேட்டவளிடம் பதில் கூறவில்லை அன்பழகன். இரண்டு நிமிடங்கள் கடக்க, ‘போயா...’ உதட்டை அசைத்துவிட்டு, காதொலிப்பானை எடுத்து அலைபேசியுடன் இணைத்தாள். பின் இரண்டு புத்தகங்களை வரிசையாய் அடுக்கி, அதன் மீது அலைபேசியை சாய்த்து வைத்துவிட்டு, எழுதும் வேலையைத் தொடர்ந்தாள். அவளது நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டிருந்தான் அன்பு.
கருமமே கண்ணாய் எழுதிக்கொண்டிருந்தவளின் விழிகளின் அபிநயத்தில் ஆடவன் இதழ்களில் புன்னகை குமிழிட்டது. அப்படியே மெத்தையில் படுத்து மனைவியை கண்களில் நிரப்பிக்கொண்டான். ஐந்து நிமிடங்கள் கடந்தும் அழைப்பைத் துண்டிக்காது தன்னையே நோக்குபவனை நிமிர்ந்து பார்த்து
 
Administrator
Staff member
Messages
1,242
Reaction score
3,657
Points
113
முயன்றவளின் வலக்கரம் உயர்ந்து கொண்டையிலிருந்து நழுவிய முடியை அதனோடு சேர்த்துவிட்டது.
“என்னதான் வேணும் உங்களுக்கு? சும்மா டிஸ்டர்ப் பண்றீங்க...” லேசாய் சிணுங்களுடன் கேட்டாள் மனைவி.
“வேதா வேணும். இப்போ அவளை நான் கட்டிக்கணும்” நேற்றைக்குப் போல இன்றைக்கும் அபிநயம் பிடித்தவனில் வேதாவின் முகம் முழுவதும் புன்னகை.
லேசாய் அலைபேசி அருகே வந்து, “வீட்டுக்கு வந்ததும் கட்டிக்கலாம்...” கிசுகிசுப்பாய் உதட்டை அசைத்தவளிடம் அன்பழகனின் உலகம் உறைந்து போன உணர்வு. தாய் எங்கேனும் வெளியே சென்றுவிட்டு, குழந்தையிடம் கொஞ்சும் போது வருமே, அதே பாவனை பாவை முகத்தில். அவளை அள்ளி அணைத்து உச்சி முகர வேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை சிறு புன்னகையில் அடக்கி பின் சன்னமான சிரிப்புடன் பார்த்தவன், “நோ... இப்போவே வேணும்...” அடமாய்க் கூறினான்.
“நான் ஒன்னும் பண்ண முடியாது பா...” என்றவளின் உதடுகள், ‘கையை காலை வச்சுட்டு சும்மா இருக்கணும்’ என சிரிப்புடன் முணுமுணுக்க, கணவனே வெட்கப்பட்டுப் போனான்.
“வீட்டுக்கு வா டி...” சிரிப்புடன் தான் கூறினான் அன்பழகன்.
“போயா...” என்றவள் தலையைக் குனிந்து புத்தகத்தைத் திறக்க,
“எந்தப் பெண்ணிடமும் இல்லாத ஒன்று. ஏதோ, அது ஏதோ உன்னிடம் இருக்கிறது...” என்ற வரிகளை அன்பழகன் முணுமுணுக்க, வேதாவின் விழிகள் ஆச்சரியத்தில் விரிய, கன்னம் சிவந்து போனாள். கவிதையாய் இருந்த மனைவியின் முகம் அன்பழகனின் அகம் நிறைத்தது.


























 
Well-known member
Messages
1,049
Reaction score
758
Points
113
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
 
Top