• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,247
Reaction score
3,666
Points
113
வேதம் – 14
முதல் தொடுகை, கூசி சிலிர்த்துப் போனாள் வேதவள்ளி. வேண்டாம் என விலக்க முடியவில்லை அவளால். காயப்பட்டுப் போவான் அன்பழகன் என மனம் கொஞ்சம் அவனுக்காக யோசித்தது.
“ஏன்டி இத்தனை நாள் என்னைத் தவிக்கவிட்ட?” என கேட்டவனின் இதழ்கள் அவளின் கழுத்தில் ஆழ்ந்து பதிய, நடுங்கிவிட்டாள். வார்த்தைகள் வர மறுத்தது. உடல் மொத்தமும் சிவந்து போனது பாவைக்கு.
“ஏன்டி டெய்லி என்னைப் பைத்தியம் மாதிரி அலையவிட்ட?” எனக் கேட்டு மீண்டும் அழுத்தமாய் கழுத்தில் முத்தமிட்டு, மோட்சமடைந்தான். ஒரு கரம் பெண்ணைத் தன்னோடு சேர்த்து இறுக அணைத்துக் கொள்ள, மற்றொன்றோ கூந்தலில் அலைந்தது. அத்தனை இதமாய் பதமாய் அவனுள் அடங்கினாள் வேதா.
காலையில் அழகாய் புடவையில் தரிசனம் தந்தவள், மாலையில் தன் மனைவியாகியிருப்பாள் என கிஞ்சித்தும் எண்ணவில்லையே அவன். அவளை ஸ்பரிசித்தவனின் இதழ்கள் அவளோடு உறைந்துவிட்ட உணர்வு. லேசாய் விலகப் பார்த்தாள் வேதவள்ளி.
‘எதற்கு இத்தனை வேகம்? தாங்க மாட்டேன்!’ மனம் அலற, உதடுகள் நடுங்கியது. அவளது உடலின் மாற்றத்தை உணர்ந்தவன், “ஒன்னும் பண்ண மாட்டேன். பயப்படாம, கொஞ்சம் நேரம் அப்படியே இரு டி...” என்றுவிட்டு அவளது தலையில் தன் நாடியைப் பதித்தான். மனம் நிறைந்தாள் பெண். உடலெல்லாம் சொல்ல முடியாத உணர்வொன்று உவகையை படரச் செய்தது. இது நிஜம்தான் என தன்னை நம்ப வைக்கப் போராடிக் கொண்டிருந்தான் அன்பழகன். இரண்டு வருட தவமாகிற்றே வேதா அவனுக்கு. பைத்தியம் பிடிக்காத குறை ஒன்றைத் தவிர, அவள்தானே ஆதியும் அந்தமுமாகி இருந்தாள்.
அவளிடமிருந்து பிரிந்ததும் அவனை நிமிர்ந்து பார்த்த வேதவள்ளி மழையில் நடுங்கிய கோழி குஞ்சாய்தானிருந்தாள். வார்த்தைகள் எல்லாம் தடையில்லாது ஆடவனை அடைந்த போதும், இந்த நெருக்கம் கங்காய் கனன்றது. முகத்தில் எதையும் காட்டாதிருக்கப் பிரயத்தனப்படவளின் கன்னத்தை தட்டியவன், இதழில் சிரிப்பு வேறு முளைத்து தொலைத்தது.
‘வாய் மட்டும்தான். இதுல பார்க்குற பார்வை வேற’ என நினைத்தவன், உதட்டில் புன்னகை பெரிதாய் படர்ந்தது. தன்னருகே நின்று, தன்னுள்ளே அடங்கிப் போன இந்தப் பெண் அவனை மொத்தமாய் சுருட்டிக் கொண்டாள். லேசாய் விரிந்திருந்த உதடுகளில் பார்வைப் பதிந்தது. கள்ளத்தனமாய் பார்த்த நாட்களெல்லாம் இப்போது மனதில் குளுமையைப் பரவச் செய்தன. இப்போது உரிமையுடன் பார்த்தான். மனைவி என்ற சொல்லே தித்தித்தது ஆடவனுக்கு.
“ஏன் டி?” என கேட்டு மறுபுறம் திரும்பி நின்றவனின் உணர்வுகளும் உடலும் அருகே நின்றவளில் அடிபணிந்திட விழைந்தது. ஏன் இந்தப் பெண் இப்போதும் எப்போதும் தன்னைப் பாடாய்ப் படுத்துகிறாள். தூரத்திலிருந்து இம்சை செய்தாள். இப்போது அருகிலிருந்து அதீத தொல்லை செய்தாள். கொஞ்சம் இதமாய், கொஞ்சம் பதமாய் அவனை வாரிக் கொண்டாள் பார்வையிலே. என்ன பார்வை அது? தூர நிறுத்தி துரத்தினாலும், அருகே செல்லத்தான் துடித்தான். ஆச்சரியமாய் தன்னை நோக்கும் விழிகளில் மூழ்க நினைத்தான். இதோ, இப்போது பார்க்கும் பார்வையில் அவளிடம் மொத்தத்தையும் சரணடையக் காத்திருந்தான்.
பின்னந்தலையைக் கோதியவன் தொண்டையைக் கணைத்துக்கொண்டு அவள் புறம் திரும்ப, அவன் செய்கைகளை ஆச்சரியத்துடன் விழிகளை விரித்து நோக்கினாள் வேதவள்ளி. அந்தப் பார்வையில் விழிகளில் மூச்சடைத்தவன், “ச்சு... போடி. மனுஷனை பாடாப்படுத்துற தூரமா இருந்தாலும், கிட்ட இருந்தாலும். உன்கிட்ட மட்டும் கன்ட்ரோலே இல்லை. சரி தப்புன்னு எதையும் யோசிக்க முடியலை. ரொம்ப ஏதோ பண்ற” என்றவன் இதயத்தைச் சுட்டிக்காட்டி, அவளை இழுத்து மீண்டும் அணைத்தான்.
“ஏன் டி... இந்தக் கண்ணு, இந்த மூக்கு, இந்த லிப்ஸ், உன் முக்குத்தி. என்னை திமிரா பார்க்குற பார்வை... எது என்னை உன் பின்னாடி வர வச்சது?” எனக் கேட்டவன் பிதற்றல்கள் எல்லாம் கவிதையாய் இருவருடைய நேரத்தையும் திரையிட்டு விழுங்கிக் கொண்டது. தன்னை அணைத்துக் கொண்டிருப்பவனின் அனத்தல்கள் எல்லாம் பெண்ணை கொஞ்சம் பயங்கொள்ள செய்ததது. இருப்பினும் மனதின் ஓரம் மழைச்சாரல்தான்.
அட்டைப் போல ஒட்டிக் கொண்டான். எத்தனை நாட்கள், எவ்வளவு தவிப்புகள், தூங்காத இரவுகள், அணைத்திடாத நினைவுகள், நீங்கா நேசம், அவளோடான வாழ்க்கையின் கனவின் பெரும்பகுதி, இதோ இந்த நொடி நடந்து கொண்டிருந்தது. பெரிதாய் என்ன, அவளை, அவளது சுகந்தத்தை, தன்னை அலட்சியம் செய்யும் பெண்ணை, அதிகமாய் பாடாய்படுத்தியவளை,
தன்னுடைய நிலையை, என்ன வார்த்தையால் உரைத்தாலும், அதெல்லாம் கன்னித்தீவிற்கு துணைப்போனவையாகிற்றே.
ஒரே நாளில் அடங்கிவிடுமா என்ன? பத்து நிமிடங்கள் கடந்தும், இருவர் நிலையும் மாறவில்லை.
“பசிக்குது, சாப்பிடலாமா?” எப்படியாவது அவனிடமிருந்து பிரிய வேண்டும். கொஞ்சம் இன்ப அவஸ்தைதான். அன்பழகன் செய்தத் தொல்லையில் அவளுக்கு என்னவோ போலிருந்தது.
“ச்சு...” உச்சுக் கொட்டிக்கொண்டே
“போகலாம்...” என சலித்துக்கொண்டான்.
‘ரொம்பத்தான்...’ என மனதில் நினைத்தவளின் முன்பு மண்டியிட்டவன், சேலையின் மடிப்பை லேசாய் நீவி விட, ‘போதுமே! இதற்கு மேல் இந்த நாளின் அதிர்ச்சி நீட்சியடைய வேண்டாம்’ பெண் மனம் அலறித் துடித்தது. அன்பழகன் செய்கைகள் எல்லாம் ஏதோ காலங்காலமாக வாழ்ந்த ஆதர்ஸ தம்பதிகள் போலிருந்தன.
எதுவுமே நடவாதது போல எழுந்து வெளியே சென்றான். சுவற்றில் சாய்ந்து நின்று தன்னை ஆசுவாசம் செய்தாள் வேதவள்ளி. தள்ளி நிற்கும்போதே அத்தனை பேசினான், காதல் செய்தான். இப்போது அருகிலே வந்துவிட்டோம். என்ன செய்யப் போகிறானோ?’ என பயம் படர்ந்த சிந்தனையுடன் வேதா வெளியே வர, அதிர்ஷ்டலட்சுமி இருவரையும் உணவுண்ண அழைத்தார்.
“ம்மா, நான் ஈவ்னிங்தான் சாப்பிட்டேன். அவ சாப்பிடட்டும். வீடுவரை போய்ட்டு வரேன்...” என்ற அன்பு அவளிடம் லேசாய் தலையை அசைத்துவிட்டு, தன் வீட்டை நோக்கிப் பயணப்பட்டான்.
அவன் வீட்டிற்குள்ளே நுழைய, “வா டா, சாப்பிடு...” என அழைத்தார் வத்சலா.
“பசிக்கலை மா...” என்ற பதிலுடன் நகரப்பார்த்தவனின் முன்பு மறைப்பது போல நின்றவர், “உனக்கு பிடிக்குமேன்னுதான் பூரியும் உருளைக்கிழங்கும் செஞ்சு வச்சிருக்கேன். எந்த வேலைனாலும், சாப்பிட்டு போய்ப் பாரு...” என்றவர் தட்டில் உணவைப் பரிமாற, அவரை நிமிர்ந்து இரண்டு நொடிகள் பார்த்தவன், கை கழுவிக்கொண்டு வந்து உண்ணத் தொடங்கினான்.
அருகிலே அமர்ந்த வத்சலா, “குருமா வைக்கவா டா?” எனக்கேட்டு ஆசையுடன் பரிமாற, புரையேறியது அன்பழகனுக்கு.
“மெதுவா சாப்பிடு டா...” திட்டியவாறே தண்ணீரை எடுத்துக் கொடுத்தார் பெரியவர். அமைதியாய் உண்டு முடித்து கையைக் கழுவியவன், “ம்மா...” என வத்சலாவை அணைத்துக் கொண்டான்.
“டேய்...” தாய் கூச்சத்தில் நெளிய, “சாரி மா...” என கூறி அறைக்குள் நுழைந்தான். கண்டிப்பாகத் தாய் தன் செயலில் காயப்படுவார் எனத் தெரிந்துதான் செய்தான். இருந்தும் அவர் மனம் வேதனைப்படுவதை ஒரு மகனாய் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தவறுதான், செய்துவிட்டான். வேதவள்ளி விஷயத்தில் மட்டும் பிறருக்கான அநியாயங்கள் கூட, அவனுக்கு நியாயமாய்ப்பட்டுத் தொலைத்தது.
முத்துக்கிருஷ்ணனுக்கும் அவனுக்கும் ஒவ்வொரு முறை சண்டை வரும்போதும், இரண்டு பேருக்கு இடையில் அல்லாடுவார் வத்சலா. அவருக்கு கணவரும் முக்கியம், மகனும் முக்கியம். ஒருவரைவிட்டு ஒருவரை அவரால் தேர்ந்தெடுக்க முடியாதே! அதனாலே இரண்டு பேருக்கும் பாதகம் இல்லாது ஒவ்வொரு முறையும் பிரச்சனையைக் கையாள்வார்.
“என்ன டா, கிறுக்கு எதுவும் பிடிச்சிருக்கா? சாரியெல்லாம் கேட்குற?” வினவிக்கெண்டே அன்பழகன் பின்னே அவனது அறைக்குள் நுழைந்தார் வத்சலா.
அவரிடம் பதிலுரைக்காதவன், ஒரு பையை எடுத்துத் தன் உடைமைகளை அடுக்க ஆரம்பித்தான். “என்ன டா, இப்போ எதுக்கு இதெல்லாம் பேக் பண்ற?” என அவர் யோசனையுடன் கேட்டார். அதற்கும் ஆடவன் பதில் இயம்பவில்லை‌.
“வெளியூர் எதுவும் போறீயா டா? எங்கப் போற, எத்தனை நாள் ஸ்டே?” அடுக்கடுக்காய் அவர் கேள்விக் கணைகளைத் தொடுக்க, எல்லாவற்றையும் பையில் திணித்து நிமிர்ந்தான்.
“ம்மா, நான்தான் முன்னாடியே சொல்லி இருக்கேன்ல. கல்யாணம் முடிஞ்சா, நானும் என் பொண்டாட்டியும் தனிக்குடித்தனம் போய்டுவோம். இங்க வர மாட்டோம்னு...” என்றவனை கேள்வியாகப் பார்த்தார் வத்சலா. அவன் கூற்றின் சாராம்சம் முழுமையாய் அவருக்குப் புரியவில்லை.
“என்ன டா உளர்ற?”
“ப்ம்ச்... ம்மா, அதான் ஈவ்னிங் கால் பண்ணும்போதே சொன்னேனே. வேதாவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு. மேரேஜ் முடிஞ்சது. அதான் ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு இருக்கேன் மா...” எப்போதும் போல அலட்டலில்லாத பாவனைதான்.
“டேய்...” என்ற வத்சலாவிற்கு மயக்கம் வருவது போலிருந்தது.
“என்ன டா சொல்ற. விளையாட்றீயா?” பதறிப்போனார் தாய்.
“ம்மா, ஈவ்னிங்கும் இதான் கேட்குற. அவ விஷயத்துல என்னைக்காவது ஒருநாள் உன்கிட்ட நான் பொய் சொல்லி இருக்கேனா? இல்லைல. இப்போ சொல்றதும் உண்மைதான். சாயங்கலாம்தான் கோவில்ல வச்சு கல்யாணம் முடிஞ்சது...” என்றவனின் கன்னத்தில் வத்சலாவின் கரங்கள் இடியாய் இறங்கியது. அமைதியாய் அவரது அடியைப் பெற்றுக்கொண்டான் அன்பழகன். எந்த எதிர்வினையும் இல்லை
அவனிடம்.
“ஏன் டா, ஏன் இப்படி பண்ண? எத்தனை தடவை படிச்சு படிச்சு சொன்னேன். ஆகாத வேலையைப் பார்க்குறதே உன் குணமா போச்சு டா...” வத்சலா குரலை உயர்த்தவும், முத்துக்கிருஷ்ணனும், அறிவழகனும் வந்துவிட்டனர்.
“என்னாச்சு வத்சலா, இன்னைக்கு என்னப் பண்ணிட்டு வந்திருக்கான்
உன் புள்ளை?” நக்கலாய் கணவர் வினவ, அவரைப் பார்த்த வத்சலாவிற்குப் பயம் தொண்டையைக் கவ்வியது. கணவரின் எதிர்வினை என்னவாக இருக்கப் போகிறதோ என்ற பயபந்து வயிற்றில் உருண்டது.
“அது... அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணீட்டு வந்து நிக்குறான்...” என்ற வத்சலாவின் குரலில் அதிர்ந்து போனார் மனிதர். எப்போதும் போல வேதா விஷயத்தில் எதையாவது செய்துவிட்டு வந்திருப்பான் எனதான் எண்ணியிருந்தாரே தவிற, இப்படியொரு காரியத்தை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“நினைச்சேன். என்னைக்காவது ஒருநாள் இந்தமாதிரி பண்ணீட்டு வருவான்னு...” என்ற முத்துக்கிருஷ்ணன் கோபத்தில் அன்பழகன் சட்டையைப் பிடித்திருந்தார்.
“பொறுக்கியா டா நீ? என்ன காரியம் பண்ணீட்டு வந்துருக்க. உன்னைப் புள்ளையா பெத்ததுக்கு, எல்லாத்தையும் அனுபவிச்சாச்சு. ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரைக்கும் அடிதடி சண்டை. வேலைக்குப் போய், இப்போ இப்படி ஒரு காரியம் பண்ணிட்டு வந்துருக்க? உன்னையும் அவனை மாதிரிதானே டா வளர்த்தேன்...” என்ற முத்துக்கிருஷ்ணன் கோபத்தில் ஆங்காரமாய் கத்தினார். அவருக்கு மகனின் செயலை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எப்படி இத்தனை தைரியம் இவனுக்கு? இவன் மட்டும் கடைசிவரை வீட்டுக்கு அடங்காமல் போய்விட்டானே! என மனம் புழுங்கியது பெரியவருக்கு.
“குடும்ப மானமே உன்னால் போச்சு. ஊர்ல இருக்க எல்லாரும் வந்து விசாரிச்சுட்டுப் போவானுங்க. எல்லாம் உன்னாலதான் டா. இனிமே இந்த வீட்ல ஒரு நொடிகூட உனக்கு இடம் கிடையாது. வெளியப் போடா. எங்கேயாவது போய் கெட்டு சீரழி...” முத்துக்கிருஷ்ணன் கூறியதும், அவர் கையை சட்டையிலிருந்து தட்டிவிட்டவன், “கிளம்பத்தான் போறேன். நீங்களே சொன்னாலும் இங்க தங்குற ஐடியா இல்லை எனக்கு...” என சிலுப்பினான் சின்னவன்.
“இவ்ளோ செஞ்சும், உன் திமிரு மட்டும் உன்னைவிட்டு போக மாட்டுதே டா. கொஞ்சமாச்சும் தப்பு செஞ்சோம்னு உறுத்தல் இருக்கா டா உனக்கு?” எனக் கேட்ட வத்சலா அன்பழகனைப் கைவலிக்கும் வரை அடித்தார்.
“என்ன தப்பு செஞ்சேன் மா நான்? பிடிச்ச பொண்ணைக் கல்யாணம் பண்ணேன். ஊர்ல உலகத்துல எவனும் செய்யாததையா செஞ்சேன்?” அவன் கேள்வியில் முத்துக்கிருஷ்ணனுக்கு கோபம் உச்சியைத் தொட்டது.
“வத்சலா, முதல்ல அவனை இந்த வீட்டைவிட்டு போகச் சொல்லு...” அவர் பல்லைக் கடித்தார்.
“போடா... வெளியே போ. இனிமே இந்த வீட்ல உனக்கு ஒரு நிமிஷம் கூட இடம் இல்லை. போ..” வத்சலாவும் ஆதங்கத்தில் வார்த்தைகளைக் கொட்ட, இருவரையும் வெறித்தான் அன்பழகன்.
தமையன் செயலில் அதிர்ந்திருந்த அறிவழகன், “டேய்! நீ மொதல்ல கிளம்பு. மத்ததை அப்புறம் பேசிக்கலாம்...” என்று அன்புவின் கையைப் பிடிக்க, “விட்றா...” என்ற சின்னவன், பையை எடுத்துக்கொண்டு விறுவிறுவென வெளியேறினான்.
“என்னடி புள்ளைய வளர்த்து வச்சிருக்க. ஒரே நாள்ல குடும்ப மானத்தைக் குழி தோண்டி புதைச்சுட்டான். எப்படியும் எல்லாருக்கும் விஷயம் தெரியப் போகுது. ஒரு ப்ரொஃபசரா இருந்துட்டு, என் புள்ளையவே நான் ஒழுங்கா வளர்க்கலைன்னு, ஊரே காரித்துப்ப போகுது‌...” என்றவருக்கு இப்போதும் கூட மகனின் செயலை ஜீரணிக்க முடியவில்லை. எத்தனைப் பெரிய காரியம்? செய்துவிட்டு எதையும் செய்யாததுப் போல திமிராய் பேசியவனின் பேச்சில்தான் மனிதர் கொதித்துப் போனார்.
வத்சலா உடனே தன் அண்ணன், அண்ணி, அன்னை என எல்லோருக்கும் அழைத்து ஒருபாடு அழுது தீர்க்க, மறுநாள் அனைவரும் வருவதாய்க் கூறி சமாதானம் செய்து அழைப்பைத் துண்டித்தனர். அவ்வளவுதான், அடுத்தடுத்து அழைப்புகள் வந்த வண்ணமிருக்க, அவர் அலைபேசியுடன் ஐக்கியமாகிவிட்டார். முத்துக்கிருஷ்ணன் மனதில் குமைந்துகொண்டிருந்தார்.
தொடர்ந்து கேட்ட அலைபேசி ஒலி எரிச்சலை கொடுக்க, அறைக்குள் நுழைந்த அறிவு, அன்பழகனுக்கு அழைப்பைவிடுத்தான். இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தவன் வேண்டுமென்றே அழைப்பை நிராகரித்தான். இரண்டு மூன்று முறை அழைத்து ஓய்ந்த அறிவு, நாளைக்கு நேரில் பேசிக் கொள்ளலாம் என்றுவிட்டான்.
வீட்டை மீண்டும் ஒருமுறை நன்றாய் சுத்தம் செய்துகொடுத்து, ஒரு பாயையும் இரண்டு தலையணை மற்றும் போர்வையையும் கொடுத்துச் சென்றிருந்தார் அதிர்ஷ்டலட்சுமி.
“வேற எதுவும் வேணும்னா, வந்து கேளும்மா...” என்றவர் விடை பெற, ஜன்னலைத் திறந்துவிட்டு பாயை உறங்க வசதியாக விரித்து தயார் செய்துவைத்தாள். கொஞ்சம் மனது படபடவென அடித்துக் கொண்டது. சற்று நேரத்திற்கு முன்பான ஆடவன் செய்கை, ஏதேதோ கற்பனையை அவளுள் விதைத்து, பதற்றத்தை உண்டு பண்ணியிருந்தது.
நேரம் சென்று கொண்டிருக்க, வாயிலைப் பார்த்துவிட்டு அலைபேசியை கையில் எடுத்தாள். ‘நேரமாச்சே... இன்னும் அவரைக் காணோம்?’ மற்றொரு மனம் கவலையுடன் கேள்வி கேட்ட நொடி வீட்டிற்குள் நுழைந்து கதவை பூட்டினான் அன்பழகன்.
கையிலிருந்த பையை அறைக்குள் எடுத்துச் சென்றவனின் வலது கன்னம் சிவந்து தடித்திருப்பதைப் பார்த்து பதறி எழுந்தவள், அவன் பின்னே அறைக்குள் நுழைந்தாள்.
பையை எடுத்து அலமாரிக்குள் திணித்தவனின் பின்னே சென்று நின்ற வேதா, “என்னாச்சு?” என பதற்றத்துடன் கேட்டாள்.
“ஒன்னும் இல்லை...” என்றவன் குரலில் ஏதோ சரியில்லை என உணர்ந்தவள்,
“பொய் சொல்லாதீங்க. என்னாச்சு? கன்னத்துல காயமா இருக்கு...” வேதா அழுத்தமாய் வினவினாள்.
“ப்ம்ச்... ஒன்னும் இல்லை. போய்ப் படுடி” எரிச்சல் படர்ந்திருந்த அன்பழகனின் குரலில் வேதவள்ளியின் விழிகளில் நீர் கோர்த்துவிட்டது.
‘போடா, போ. உனக்காகப் பதறிப் போய் கேட்டால், போ...’ எப்போதும் போல ஒரு பார்வை பார்த்தவள், கூடத்திற்குள் நுழைந்து படுத்துக்கொண்டாள்.
“ச்சு...” நெற்றியைச் சொரிந்தவன், வெளியே வர, பாவையின் விழிகள் கலங்கியிருந்தன.
எதுவும் பேசாது மின்விளக்கை அணைத்துவிட்டு வேதாவினருகே படுத்தவன், இடையில் கைக்கொடுத்து அவளைத் தன்னோடு அணைத்துக்கொண்டான்.
அவன் கையைத் தட்டிவிட முயன்று தோற்றாள் பெண். முகம் கோபத்தைக் காண்பிக்க, “ப்ச்... சாரி டி...” என்றான்.
‘தேவையில்லை...’ என்பது போல பெண் பார்க்க, “ச்சு... படுத்தாதடி மனுஷனை. ஏற்கனவே வீட்ல ஒரு சண்டை. அவங்க வேற எதோ கொலைக் குத்தம் பண்ணது போல பேசி வெளிய அனுப்பிட்டாங்க. நீ வேற...” சலிப்பாய் வெளிவந்தது ஆடவனின் குரல். வேதவள்ளிக்கு அவனது நிலைமை புரிந்தது. கண்டிப்பாக தங்கள் செயலுக்கு அவர்களது எதிர்வினை இதுவாகத்தான் இருக்கும் என பெண் ஏற்கனவே சிந்தித்திருந்தாள்.
சிவந்திருந்த அன்பழகன் கன்னத்தில் தன் கையை வைத்தாள். கொஞ்சம் மனதுக்கு வருத்தமாயிருந்தது. தன்னால், தனக்காகத்தானே இது? எனத் தோன்ற, அவன் கன்னத்தை மென்மையாய் தடவிவிட்டாள் பெண். அதில் அவன் இதழ்களில் புன்னகை படர்ந்தது.
அப்படியே அவள் உள்ளங்கையில் தன் கன்னத்தை வைத்து தேய்த்தவன், தலையணையோடு பாவை கரத்தையும் அழுத்திப் பிடித்தான்‌. பின் அவள் கையில் சிரிப்புடன் முத்தமிட்டவனின் மீசை குறுகுறுப்பில் பட்டென அவனிடமிருந்து கையை உருவியவள், மறுபுறம் திரும்பி படுக்கவும், பின்னிருந்து இறுக அணைத்துக்கொண்டான் அன்பழகன்.
எதுவும் பேசாது இடையில் பதிந்த அவன் கையை எடுத்துவிட முனைந்தவளைத் தடுத்தவன், “இனிமே இப்படித்தான் தூங்கணும். பழகிக்கோ டி...” கிசுகிசுப்பாய் கூறி அன்பு உறங்கத் துவங்க, தனியே படுத்துப் பழகிய வேதவள்ளிக்கு இப்படி அன்பழகன் தன்னை அட்டைப் போல ஒட்டிக்கொண்டு தூங்குவது அவஸ்தையைக் கொடுக்க, உறக்கம் கண்களை எட்டவே இல்லை. செவியருகே கேட்ட மூச்சு சத்தமும் காற்றும் லேசாய் அவளைக் குறுகுறுக்கச் செய்ய, நீண்ட நேரம் கழித்தே உறக்கத்தைத் தழுவியிருந்தாள் பெண்.































































 
Well-known member
Messages
1,059
Reaction score
764
Points
113
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
 
Well-known member
Messages
551
Reaction score
389
Points
63
சூப்பர்👌👌👌👌
 
Top