• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,309
Reaction score
3,888
Points
113
வேதம் – 13 ❤️

வாழ்க்கையில் பெரிய பெரிய முடிவுகள் எல்லாம் நொடியில் மனம் எடுத்துவிடுகிறது. நின்று நிதானமாய் கையாள நேரம் எல்லாருக்கும் வாய்ப்பது இல்லையே. அந்த முடிவு நல்லதோ, கெட்டதோ, அதன் சுவடைப் பற்றித்தான் மீதவாழ்க்கையையும் வாழ வேண்டிய கட்டாயம் நிறைய பேர் வாழ்க்கையில் விரும்பியும் விரும்பாமலும் நிகழ்ந்து விடுகிறது.

பள்ளியிலிருந்து கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் குழந்தையின் மனநிலையும், வாழ்க்கையை யாருடன் வாழப் போகிறோம் என முடிவெடுக்கும் வாலிபனின் மனநிலையும் கிட்டதட்ட ஒன்றுபோலத்தான்.

தளிர் நடையிட்டு தவழும் கணத்தில் இவருடன் தான் தன்னுடைய நட்பு என்று தொடங்கி, வாழ்வின் இறுதிநாள் தேநீர் விடுதியில் அமர்ந்து அன்றைய செய்தியைப் புரட்டிக் கொண்டே தன்னுடன் அமர்ந்திருப்பவருடன் பொக்கைவாய் தெரிய சிரித்தும் மகிழும் நொடிவரை, முடிவு என்ற சொல் நம்மை முழுமுதலாய் ஆக்கிரமித்துவிடுகிறது. ஆம்! சிலவற்றை நாம் தேர்வு செய்ய, பல நம்மை தேர்ந்தெடுத்துவிடுகின்றனர்.

பிடிக்காத விருந்தாளியாக இருந்தாலும், புன்னகைத்து வரவேற்கும் நொடி முடிவுகள் எல்லாம் எந்த முகாந்திரமும் இன்றி நம்மை கட்டிப்போட்டு விடும். அது சூழ்நிலையின் கட்டாயம், அதில் தான் நாம் எல்லோரும் அமிழ்ந்து போகின்றோம்.

இதுதான் முடிவெனத் தெரியாது, கானகத்தில் திரியும் மனநிலையில் வாழ்க்கையோடு ஓடிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். வெகுசிலரே நின்று நிதானமாய் ரசித்து ருசித்து வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் சேமித்துக் கொள்கின்றனர்.

வேதவள்ளியின் வாழ்க்கையிலும் அப்படித்தான். அவளே எதிர்பாராத திடுக்கிடும் வளைவுகள் வாழ்க்கையை திசைமாற்றியிருந்தனர்.
எதிர்பாராத சூழ்நிலையில் தன் வாழ்க்கையை மடை மாற்றி இருந்தாள். இதுதான் இன்னதென அறியும் முன் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.

பெரிதாய் எதையும் யோசிக்காது தன் வாழ்க்கையே நொடியில் தீர்மானித்துவிட்டிருந்தாள். எப்படி? ஏன்? எதற்கு? எந்தக் கேள்விக்கும் அவளிடம் விடையில்லை. நேற்றைய இரவு படுக்கையில் வீழ்ந்து கண்ணை மூடும்போது கூட, மறுநாள், தான் வேறு ஒருவரின் மனைவியாகி
இருப்போம் என துளிகூட எண்ணியிருக்கவில்லை பெண். இதுதான் விதி? நாளை என்ன நமக்காக சுமந்து கொண்டிருக்கிறது என அவிழ்க்க முடியாத சுவாரஸ்யமான முடிச்சை, அவிழ்க்கும் நேரம் சுற்றியுள்ளவை எல்லாம் படபடவென உருமாறி விடுகின்றன. நேற்றைய சுவடு கூட இன்றில்லாது போன நாட்களும் உண்டு. எஞ்சி நிற்பவை எல்லாம் வெறும் நினைவுகள் மட்டும்தான்.

தன் வாழ்க்கையின் எடுத்த முடிவிற்கு அச்சாணியாய் இருப்பவனை உணர்ந்தாள் வேதவள்ளி. அருகிலிருப்பவனை, அவன் சுகந்தததை, அந்த முகத்தில் படர்ந்திருக்கும் நேசத்தை, நிம்மதியை. நடந்ததை கிரகிக்க முயன்றவள் பார்வை அன்பழகனின் முகத்திலிருக்க, அவளது நெற்றியில் குங்குமத்தை இட்டிருந்தான் அவன். லேசாய் விழிகளை மூடித் திறந்தாள் பெண். இந்த நொடி அவள் வாழ்க்கையில் அன்பழகனின் அத்தியாயம் அதிகமாய் ஆட்சி செய்ய அனுமதி வழங்கியிருந்தாள்.

அவன் நேசத்தின் பிடியில் வாழ்நாளை எழுதிக் கொடுத்துவிட்டாள், அன்பழகனின் வேதாவாக. அன்பின் வேதமாக மாறிவிட்டிருந்தாள்.

காலையில் மனம் ஏதோ சொல்ல முடியாத உணர்வில் அடித்துக்கொண்டது. காரணமறியாது உடுத்திய புடவைக்கு இப்போது அர்த்தம் விளங்கியது. ஒவ்வொரு நொடி நம்மைச் சுற்றி நிகழும் ஒவ்வொரு காரியத்திற்கும் ஏதோ ஓர் காரணம் இருந்துகொண்டுதான் இருக்கிறது, நம் விழிகளுக்கு புலப்படாத வகையில்.

“சிஸ்டர், வாழ்த்துக்கள். மச்சான் கங்கிராட்ஸ் டா!” அனைவரும் சேர்ந்து மணமக்களை வாழ்த்தி, பரிசை கையில் திணித்திருந்தனர். அமைதியாய் ஒரு புன்னகையுடன் அவர்களுக்கு நன்றியை நவில்ந்தாள் வேதவள்ளி. மனம் மட்டும் அலைகடல் போல திக்கற்று திசையில் சுற்றி, அன்பழகன் என்ற புள்ளியில் நின்று, ஆசுவாசம் கொண்டது. அணைத்துக்கொண்டான். இறுக்கமாய் பெண்ணைத் தன்னுள் பூட்டிக்கொண்டான்‌.

எட்ட நின்ற போதே, அவனை, அவன் அருகாமையை, உணர வைத்தான் அன்பு. இப்போது, அவளில் மொத்தமாய் உணர்ந்து, உருகித்தான் போனான். அவள் விழிப்பார்த்து ஆடவன் அணிவித்த மாங்கல்யம், எதிரெதிரே இருந்த இரண்டு வழிகளை, ஒன்றாய் ஒரே நேர்க்கோட்டில் இணைத்திருந்தன.

தன் கழுத்திலிருந்த மாங்கல்யத்தையும், அருகே நின்று முகம் கொள்ளா புன்னகையுடன் நின்றிருவனின் முகத்தையும் அகத்தில் முதன்முதலில் பதிந்தாள். விழியோரம் ஈரம் துளிர்க்க, இமை சிமிட்டி உள்ளிழுத்துக்கொண்டாள். மனமானது தந்தையானவரிடம் ஆயிரம் மன்னிப்பை யாசித்தது. விழிகளை உயர்த்தி வானத்தைப் பார்த்தாள். எங்கோ ஓர் மூலையில் தன் தாய் தன்னை ஆசிர்வதித்திப்பார் என நினைத்துக்கொண்டாள்‌.

சிறிது நேரம் கடக்க, “மச்சான், இப்போ எங்கப் போற?” என முகிலன் அன்புவைத் தனியாய் அழைத்து வினவினான்.

“போற இல்லை, போறோம்...” நண்பனின் வாக்கியத்தைத் திருத்தியவன், “எங்க வீட்டுக்குப் போகமுடியாது டா. இப்படியே வேதாவைக் கூட்டீட்டுப் போய் நின்னா, கோபத்துல அம்மா அவளை எதாவது
சொல்லிடுவாங்க. அவங்களுக்கும் நடந்ததை அக்செப்ட் பண்ண டைம் வேணும்...” என்றான்.

“சரி டா மச்சான், ஒன்னும் பிரச்சனை இல்லை. நம்ம வீட்டுக்கே போகலாம். நான் கலைக்கிட்டே சொல்றேன்” முகில் அலைபேசியை எடுக்க,

“மச்சான், உங்களுக்கு எதுக்கு தேவையில்லாதக் கஷ்டம். உங்க வீட்டுப் பக்கத்து வீட்டுக்கு ரெண்டு மாசமா யாரும் குடி வரலைன்னு ஓனர் புலம்புனாருன்னு சொன்னல்ல. அந்த வீட்டுக்குப் போகலாம். கலைக்கிட்ட வீட்டை மட்டும் சுத்தம் பண்ணி வைக்க சொல்லு டா...” அன்பழகன் கூற,

“ஏன் டா, நம்ம வீட்டுக்கு வரலாம் இல்ல...”

“ப்ம்ச்... அதில்லை டா. ஒருநாள், ரெண்டு நாளுன்னா பரவாயில்லை. பட், வீட்ல அம்மா, அப்பா எப்போ சமாதானமாவாங்கன்னு நமக்குத் தெரியாது. அதுவரைக்கும் தங்கணும், சோ தனி வீடுதான் பெட்டர் டா” அன்பழகன் கூற, முகிலுக்கும் அதுவே சரியெனப்பட்டது. தங்கைக்கு அழைத்து அந்த வீட்டைச் சுத்தம் செய்யப் பணித்தவன், வீட்டு உரிமையாளரிடமும் பேசிவிட்டிருந்தான். எல்லாம் சரியாய் நடந்து முடிந்தது.

“டேய், ஒரு போட்டோ கூட எடுக்கலை பாரு. நீயும் சிஸ்டரும் நில்லுங்க. நான் எடுக்குறேன்...” கூட்டத்தில் ஒருவன் அலைபேசியைத் தூக்க, வேதாவும் அன்புவும் ஒன்றாய் நின்றனர். இயல்பாய் அவளது தோளில் கையைப் போட்டவன், “ஹம்ம்... எடு டா” எனக் கூற, அதில் வேதவள்ளி லேசாய் நெளிந்தாள். அதையெல்லாம் கருத்திலே கொள்ளவில்லை அன்பு. ஒட்டி உரசி நின்றதில் இதயம் படபடவென அடித்துக்கொண்டது‌. கைகள் எல்லாம் பிசுபிசுத்துப்போன உணர்வு பெண்ணுக்கு. தன் தந்தை மற்றும் முருகையாவிற்குப் பிறகு முதன்முறையாக ஒரு ஆடவனின் ஸ்பரிசத்தை ஸ்பரிசிக்கிறாள் என்றால், அது அன்பழகன் மட்டும்தான். எழில் கூட, வேதாவிடம் தொட்டுப் பேசியதெல்லாம் இல்லை. அவன் பேசியதே இல்லை என்பதுதான் உண்மை. இருவருக்கும் இடையில் சண்டைகள்தான் அதிகம் நிகழ்ந்திருக்கின்றன.

இருவரையும் விதவிதமான கோணங்களில் அன்புவின் தோழன் புகைப்படம் எடுக்க, “போதுங்க...” என்ற வேதா அவஸ்தையில் முணுமுணுத்தாள். அவனின் ஸ்பரிசத்தில் லேசாய் உள்ளுக்குள் குறுகுறுத்தது, குளிரெடுத்தது பாவைக்கு. நெற்றியில் வியர்வை பூத்திருந்தது.

அவளது முகத்தைப் பார்த்த அன்புவிற்கு இதழ்களில் மென்னகை படர்ந்தது. ‘போதும்’ என்பது போல நண்பனிடம் கையைக் காட்டியவன், மாலையைக் கழட்டினான், வேதவள்ளியும் மாலையை அகற்றினாள்.

“போகலாம் டா” முகிலன் கூறி முன்னே நடக்க, மற்றவர்களும் நடந்தனர். வேதவள்ளியின் கரங்களுடன் தன் கரங்களைப் பிணைத்துக்கொண்டவனின் கரத்தின் மென்மை இதயம் வரை கதகதப்பைப் பரவச்செய்தது பாவைக்கு. ஏனோ, அந்த நொடி யாருமற்று கதறிய மனம், அருகிலிருப்பவனின் இருப்பில் சுகமாய் உணர்ந்தது.

அன்பழகனின் இருசக்கர வாகனத்தில்தான் இருவரும் சென்றனர். தயங்கித் தயங்கி அவன் தோளில் கையை வைத்தாள் வேதவள்ளி. எதோ ஒரு உணர்வு அடிவயிற்றில் குபீரென பொங்கியது. வார்த்தைகள் எல்லாம் இல்லை அவளிடம். இருசக்கர வாகனத்தின் கண்ணாடி வழியே அவளது முகபாவங்களைக் கவனித்தவன் முகத்தில் லேசாய் புன்னகை அரும்பியது.

இத்தனை பிரச்சனைகள் வந்தப் போதும் கடைசியில் அது தங்களது திருமணத்திற்கு வித்திட்டதில், அன்பழகனின் மனம் சொல்ல முடியாத நிம்மதியைத் தத்தெடுத்திருந்தது. இந்த நொடி உவகை எல்லாம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதாகிப் போன உணர்வு.

எதிர்பாராத நேரத்தில் நடந்த இன்ப அதிர்ச்சி அவனைப் பொறுத்தவரை. தன் முகம் கூட காணாது தன்னை சுற்ற வைத்தவள், தன்னை அத்தனையாய் இம்சித்தவள், இன்று தனக்கு மனைவியாகி அருகிலிருக்கிறாள். தன் தோளில் உணர்ந்த பாவையின் கரத்தின் ஈரம், அவன் உடையையும் மனதையும் சேர்த்து நனைத்தது. நனைந்து போனான், வேதவள்ளியின் ஒரே ஒரு வார்த்தை.

பொக்கிஷமான தருணங்கள் எல்லாம் எதிர்பாரத நேரங்களில் தம்மிடம் வந்து சந்தோஷப்படுத்தும். அதுபோலத்தான் இப்போது அன்புவிற்கும் நிகழ்ந்தது. இன்னுமே நடந்த நிகழ்வின் உண்மையை அவனால் நம்ப இயலவில்லை என்பதே உண்மை.

எப்போது வேதவள்ளியை சம்மதிக்க வைத்து கரம் பிடிப்பது என எண்ணி, எத்தனையோ நாட்கள் ஆடவன் தவித்திருக்கிறான். எந்த வழியும் புலப்படாது, தேடியிருக்கிறான். அதையெல்லாம் இந்த நொடி தூள் தூளாய் சிதறவிட்டிருந்தது‌. காதலுக்கு பெற்றவர்கள் தான் எதிரியாய் எப்போதும் தோன்றுவர். ஆனால், அன்பழகன் விஷயத்தில் அவன் காதலியே எதிரியாய் மாறிப்போனதுதான் விந்தை. இரண்டு வருடத்தவம்தான் வேதா அவனைப் பொறுத்தவரை.

ஏனோ முதல் பார்வையிலே அவனை மொத்தமாய் ஈர்த்துத் தொலைந்தாள் பெண். வேண்டாம் என மூளை அறிவறுத்தினாலும், மனம் அவள் பின்னேதான் சென்றது. வேண்டாம் வேண்டாம் என மொத்தமாய் அவனை வசீகரித்திருந்தாள் பெண். அவளுடனான வாழ்வில் மட்டுமே ஜீவிக்க முடியும் என்ற நிலை எப்போது அடைந்தோம் என்பது அவனே அறியாதது. அதீத பிடித்தமென்பது காரணங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டதாக இருக்கிறது‌. அதற்கு முகாந்திரங்களும் காரணங்களும் தேவைப்படுவது இல்லை. வெறும் ஒரே ஒரு கண்ணசைவிலே ஆளையே மொத்தமாய் மாற்றிவிடும்.

எப்போதும் காலையில் அருந்தும் தேநீரில் கூட சுவையைக் கூட்டி ரசிக்க வைக்கும். உப்பே இல்லாத உப்புமாவைக் கூட ரசித்து புசிக்க வைத்துவிடும் வல்லமை பெற்றது. பெரிதாய் ஒன்றும் இல்லை சிந்தையை ஆக்கிரமித்து
வாழ்வின் பெரும்பகுதியை சுருட்டிச் சென்றுவிடும்.
பெண் என்பவள் வசீகரமானவள் என்பதை காதலிப்பவர்களைக் கேட்டுப்பார்த்தால், கதைகதையாக கதைப்பார்கள்.
காதல் வயப்பட்டவர்கள் எல்லாம் மருந்து கண்டிறிய முடியாத கொரோனோவை விட அதிகமாய் விஷத்தன்மை உடையவர்கள். அவர்களைப் பொறுத்தவரை நியாயம், அநியாயம் எல்லாம் தங்கள் காதலின் முன்பு செல்லாக்காசாக்கி தூக்கியெறிந்து சென்றுவிடும் அற்ப மனிதர்கள் அவர்கள்.

அன்பழகனும் அந்த வரையறுக்குள் அட்ஙகிவிடும் மனிதனே. வேதவள்ளிவின் ஒரு வார்த்தையில் இருவருடைய வாழ்க்கைப் பாதையும் மாறியிருந்தது. மாற்றியிருந்தான் ஆடவன், மாற வைத்திருந்தாள் பெண்.

இரவு நேரம், இதமாய்க் காற்று இருவரையும் தழுவிச் சென்றது. நன்றாய் கருமை சூழ்ந்திருக்க, மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்கினான் அன்பழகன். மூளை நடந்த நிகழ்வை உண்மை என மனதை நம்பவைக்கப் போராடிக் கொண்டிருந்தது. சுற்றியுள்ள சூழலை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே மனதில் நடந்தவற்றை அலசி ஆராய்ந்தாள் பெண். மனம் தந்தையை ஒருபுறம் சுற்றி வந்தது.

எங்கெங்கோ தேடிய நிம்மதியும் ஆசுவாசமும் அன்பழகன் தன் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்த நொடி, மனம் சமன்பட்டதை பெண் உணர்ந்தாள். ஏதோ தனக்கான இடம் இதுதான் என்பது போல அவன் வயிற்றில் முகத்தை புதைத்து அழுத கணங்கள் இப்போது லேசாய்ச் சிலிர்ப்பை ஏற்படுத்தியது பெண்ணுக்கு. இப்போது நினைத்தால் கூட, முகம் சிவந்து போவாள்.

எதற்கு? ஏன்? எந்தவொரு கேள்வியுமின்றி தலையைத் தடவிய அந்த கரத்தின் வெம்மையும் மென்மையும் அவளுள் தங்கிவிட்ட உணர்வு.
என்ன இது? எனப் பிரித்தரிய முடியாத உவகை ஒன்று இதயத்தை இதமாக்கியது.

தன் குரல் கேட்டதும் பதறித் துடித்து காரணமறியாது தன் முன்னே ஜீவித்தவனின் நேசத்தை ஒரு நொடி கூடத் தாண்டிச் செல்ல முடியாது என மனம் அந்தக் கணத்தில் உரைத்திருந்தது.
அமைதியாய் அவனை அவதனித்துக்கொண்டிருந்தாள் வேதவள்ளி.

ஏன்? என்ற ஒற்றைக் கேள்விக்கு ஆயிரம் பதிலிருந்தப் போதும், அவனிடம் பதிலில்லை. அவனிடமிருந்து தனக்கு அது கிட்டவில்லையே!

'யார்? எவர்? அவருடைய பதவி என்ன?' எனக் கூட யோசிக்காது அலட்சியமாய் அனைவரையும் கடக்கும் ஆடவன், தன் முகம் பார்த்து திணிறிய கணங்கள் எல்லாம் அத்தனை அழகானவை, பொக்கிஷமானவை. தான் முறைத்தபோதும் கூட, தோளைக் குலுக்கியவனின் அந்த பாவனை மனதின் ஓரத்தில் இம்சித்திருந்தது. கன்னியமான பார்வை கன்னியை அசைத்திருந்தது.

'பெர்ஃபாமனஸை ஹெவியாக்குவேன்' என்றவன் கூற்றில் லேசாய் பெண் உள்ளம் அதிர்ந்து போனது உண்மை. இப்போதே அவன் செய்யும் அலும்பல்கள் எண்ணிக்கை இல்லாதவை, யாருக்கும் அடங்காதவை. லேசாய் சிரிப்பு கூட வந்தது பெண்ணுக்கு. இரண்டு வருடங்கள், தன்னிடமிருந்து சிறு எதிர்வினை கூட இல்லாத போதும், தன்னையே சுற்றி வந்தவனை நினைத்தால், ஆச்சரியம் பொங்கும்.

அதை விட, தன்னுடைய முடிவென்பது ஒரு சூழ்நிலையின் காரணமாக இருக்கும்பட்சத்தில் தான் கேட்ட நொடி கூட, தன் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தவனின் பாவனை அகத்தில் தங்கவிட்டிருந்தது. எனக்காகவென ஒரு நொடி நின்று யோசித்தவன், அவனுக்காக என ஏன் யோசிக்கவில்லை.

‘இல்லை, இது சரிவராது. வேணாம், நாளைக்குப் பண்ணிக்கலாம், கொஞ்சம் யோசிக்கணும்’ எத்தனை வார்த்தைகள் பதிலாய் இருந்தது. ஒரே ஒரு நொடி கூட, 'இது வேண்டாம்' என ஆடவன் முகத்தில் பாவனை தோன்றியிருந்தால் கூட, வேதா கண்டிப்பாக தன் முடிவிலிருந்து பின்வாங்கி இருப்பாளோ, என்னவோ? ஆனால் வார்த்தைகள் கூட இராது,
தலையை அசைத்தவனின் புருவம் ஆச்சரியத்தில் ஏறியிறங்கிய நொடி, உள்மனம் அடித்துக்கொண்டது. தொன்னூற்று ஒன்பது சதவீதம் நம்பிக்கை ஆடவன் மீதிருந்த போதும், அந்த ஒரு சதவீதம் நம்பிக்கை அந்த ஒற்றை தலையாட்டலில் பெண்ணை அடித்துச் சென்றுவிட்டது.

‘நான் எந்த விதத்தில் அத்தனை சிறந்தவள்? ஏன் என்னிடம் மட்டும் இத்தனை நேசம்’ ஏன் என ஆயிரம் கேள்வி உதித்தப் போதும், விடையாய் அன்பழகனின் இதழோரப் புன்னகை மனதில் பதிலாய் படர்ந்தது.

இருவரும் சென்று இறங்க, முகிலனின் தாய் அதிர்ஷ்டலட்சுமியும், அவனது சகோதரி கலையரசியும் வந்துவிட்டிருந்தனர்.

“வா அன்பு, வாம்மா...” என அழைத்தப் பெரியவர், அவர்கள் இருவரையும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றார். அதிர்ஷ்டலட்சுமிக்கு அன்பழகன் பெறாத பிள்ளை. ஏனோ, அவன் மீது எப்போதும் அவருக்கு தனிப்பிரியம் உண்டு.

‘அண்ணே! அண்ணி சூப்பர்’ கலை கையில் சைகை செய்து உதட்டை அசைத்தாள். அவள் தலையைக் கலைத்துவிட்டான் அன்பழகன்.

“கலை, பாலும், பழமும் எடுத்துட்டு வா...” என்ற அதிர்ஷ்டம்லட்சுமி மகள் எடுத்து வரவும், இருவருக்கும் கொடுத்தார்.

“ஏன் ப்பா, முதல்லயே சொல்லி இருந்தா, அம்மா வந்து இருப்பேன் இல்லை. முறையா செஞ்சு இருக்கலாம்” அதிர்ஷ்டலட்சுமி சலுகையாய்க் குறைபட, அன்பழகன் சங்கடமாய் வேதவள்ளியைப் பார்த்துவிட்டு அவரைப் பார்த்தான்.

“ம்மா, சிட்சுவேஷன் அமைஞ்சுடுச்சு. நடந்ததை விடு மா...” என்ற முகில், “அன்பு, வா டா. நம்ம வீட்டைப் பார்க்கலாம்...” என்று அவனை அழைத்தவாறு அருகிலிருந்த வீட்டைத் திறந்தான். இல்லையென்றால் அதிர்ஷ்டலட்சுமி வாய் நிற்காதே.

“ம்மா, வீட்டைப் பார்த்துட்டு வரேன் மா...” என்ற அன்பு வேதாவைப் பார்க்கவும், சிறிய தலையாட்டலுடன் அவளும் எழுந்து நின்றாள்.

முகில் வீட்டைக் சுற்றிக் காண்பித்தான்‌. “என்ன டா ஓகே வா, பேசி முடிச்சுடலாமா?” எனக் கேட்க, அன்பழகன் வேதாவைப் பார்த்தான்.

“எனக்கு ஓகேதான் டா...” என்றவன், “வேதா, உனக்கு ஓகே வா?” என வினவினான்.

முகிலன் முன்பு எதையும் பேச முடியாது என்பதால், தலையை மட்டும் அசைத்தாள் பெண். ஏன் இங்கே வந்திருக்கிறோம்? என மனம் வந்த கணத்திலிருந்து கேள்வியைக் கேட்ட வண்ணமிருந்தன. இப்போதுதான் அதற்கு விடை கிடைத்திருந்தது.

“ஓகே டா, அட்வான்ஸ் பே பண்ணிட்றேன். இன்னைக்கு நைட் இங்கேயே ஸ்டே பண்ணிக்கிறோம்...”

“அதெல்லாம் பார்த்துக்கலாம் டா. நம்ம சொந்தக்காரங்கதான் ஓனர். பொறுமையா கொடுத்துக்கலாம்” முகிலன் கூறிக்கொண்டிருக்கும் போதே கலை உள்ளே நுழைந்தாள்.

“என்ன கலை, அம்மா எதுவும் சொல்லி விட்டாங்களா?” தமையன் வினவ, ‘ஆமாம்...’ என தலையை அசைத்த கலை பூஜை அறைக்குள் நுழைந்தாள்.

வெறுமையாய் இருந்த அறையில்தான்கொண்டு வந்த புகைப்படத்தை அணிவித்தவள், மஞ்சள் குங்குமத்தை தனித்தனியாய் வைத்தாள். ஒரு விளக்கை நடுவே வைத்து எண்ணெயும் திரியையும் வைத்துவிட்டு, வேதவள்ளியிடம் தீப்பெட்டியைக் கொடுத்தாள் கலையரசி.

‘அண்ணி, விளக்கை ஏத்துங்க. அம்மா சொல்லிவிட்டாங்க’ கலையரசி கையில் சைகை செய்ய, வேதா புரியாது விழித்தாள்.

“விளைக்கை ஏத்த சொல்றா மா...” முகில் கூற, வேதாவிற்கு அப்போதுதான் உரைத்தது கலையரசி வந்ததிலிருந்து ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை என. மனதில் அதை எண்ணிக்கொண்டே, “சரிங்க அண்ணா...” தலையை அசைத்தவள் விளக்கை ஏற்றினாள்.

‘கடவுளே! இந்த வெளிச்சம் எங்களது வாழ்வை பிரகாசிக்கச் செய்யட்டும்’ மனதில் நினைத்துக்கொண்டாள் பெண்.

‘அண்ணா, நான் போறேன். நீயும் அண்ணியும் சாப்பிட வாங்க...’ அன்பு கையைப் பிடித்து சைகையில் பேசிய கலையரசி வெளியே விரைந்தாள்.

“சரி டா, நீங்க பேசுங்க. நைட் நம்ம வீட்ல சாப்பிட்டுக்கலாம். நாளைக்கு மத்ததைப் பேசிக்கலாம்...” என்ற முகில் சென்றுவிட்டான்.

இரண்டு நாற்காலிகள் மட்டுமிருந்தது. கலையரசிதான் வைத்துவிட்டு சென்றிருந்தாள். அன்பழகன் அதில் அமரவும், “இங்க எதுக்கு வந்திருக்கோம் நம்ம, உங்க வீட்டுக்குப் போகாம?” வேதவள்ளி வினவ, அவளைப் புருவம் சுருக்கிப் பார்த்தான் ஆடவன்.

“திடீர்னு போய் நின்னா, அவங்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகிடும். பிரச்சனை எதுவும் வரக் கூடாதுன்னுதான் இப்போதைக்கு தங்க ஒரு வீட்டைப் பார்த்தேன்...” அன்பு பதிலளிக்கவும்,

“பிரச்சனைக்கு அஞ்சுற ஆளா நீங்க?” குனிந்து முணுமுணுத்தாள் பெண்.

அதைக் கேட்டவன் இதழ்களில் மென்னகைப் படர்ந்தது. “ஆமா, பிரச்சனைக்கு அஞ்ச மாட்டேன்தான். பட், நீன்னு வரும்போது உன்னைக் காயப்படுத்தக் கூடாதுன்னு நினைக்குது மனசு. என் அம்மா, அப்பா என்னை எது சொன்னாலும் அது உரிமையில போய்டும். ஆனால், உன் விஷயத்துல அப்படி இல்லை. என் அம்மா கோபத்துல எதுவும் பேசிட்டா, கடைசிவரை அது உனக்கு மனசுல நின்னுடும். என் அம்மாவுக்கும் பொண்டாட்டிக்கும் இடையில அந்த மாதிரி எதுவும் வேணாம்னுதான் அங்க போகலை...” கூறிவிட்டு தோளைக் குலுக்கினான் அன்பழகன்.


அவன் பதிலில் கொஞ்சம் ஆச்சர்யம்தான் வேதவள்ளிக்கு‌. ‘இத்தனை பொறுமையாய் அதைவிட பொறுப்பாய் எல்லாம் இவன் யோசிப்பானா?’ மனம் கேள்வி எழுப்பியது. அடிதடிக்குப் பேர் போன மனிதனாகிற்றே.
கையைக் கட்டிக்கொண்டு அவளைப் பார்த்து ‘என்ன?’ என்பதாய் புருவத்தை, உயர்த்தினான் ஆடவன்.

‘ஒன்றும் இல்லை...’ என தலையை அசைத்தவள், “சீக்கிரம் அங்கப் போகலாம்...” என்றாள்.

“ஏன், இந்த வீடு பிடிக்கலையா? முகில் வீடு இங்க இருக்கு. உனக்கும் துணைக்கு ஆளிருக்கும்னு நினைச்சேன். உனக்குப் பிடிக்கலைன்னா, மாத்திடலாம்...”

“இல்லை, அதெல்லாம் இல்ல. வீடு பிடிச்சிருக்கு. ஏற்கனவே உங்க அம்மாவுக்கு என்னைப் பிடிக்காது. இதுல கல்யாணமாகி என் புள்ளையை தனியா கூட்டீட்டுப் போய்ட்டான்னு பேச்சு வந்துடக் கூடாது இல்லை. உங்களுக்கு ஒன்னும் இல்லை, அம்மாவும் புள்ளையும் சேர்ந்துடுவீங்க. நான் எப்படி இருந்தாலும் அந்த வீட்டுக்குதானே வாழ வரணும்...” இயல்பாக எந்த அலட்டலுமின்றி அவனிடம் மட்டும் பேச்சு வந்தது பெண்ணுக்கு. லேசாய் சிலுப்பியபடி மெல்லிய குரலில் பேசியவளைப் பார்த்து மந்தகாசப் புன்னகைப் படர்ந்தது அன்பழகனுக்கு.

நொடியில் அவளருகே வந்தவன்,
“இத்தனை நாள் எங்க டி வச்சிருந்த இந்த வாயை?” என்றவன் காதோரம் கிசுகிசுக்கவும், திடீரென நிகழ்ந்த அருகாமையில் மூச்சடைத்துப் போனாள் வேதவள்ளி. அவள் உதட்டை கைகளால் அளந்தான் ஆடவன். அவனிடமிருந்து வந்த மூச்சுக்காற்றின் வெப்பம், அவளது மூச்சை தடை செய்திருந்தது.

பேச்செல்லாம் மறந்துவிட, நகரச் சென்றவளின் தாடையை ஒற்றைக் கையால் பற்றியவன், நெற்றியில் அழுந்த முத்தமிட, பெண் உறைந்து போனாள். சுற்றியுள்ள உலகம் ஒரு நொடி உறைந்து பின் இயங்க, இமயமலையின் உச்சியில் நிற்கும்போது ஏற்படும் சிலிர்ப்பில் உடல் சிலிர்த்தது. அன்பழனுக்கு இத்தனை நாள் மனதிலிருந்ந தவிப்பெல்லாம் அந்த ஒற்றை இதழெற்றல் அடித்துச் சென்றிருந்தது. எத்தனை நாட்கள் எண்ணியிருக்கிறான், வேதாவை தன் கரங்களுக்குள் அடக்க வேண்டும். முத்தமிட்டு மூச்சடைக்க வைக்க வேண்டும், இறுக்கி அணைக்க வேண்டும், தன்னை அவளுக்குப் புரிய வைக்க வேண்டும், தனக்கு அவளைப் பழகி, தானும் அவளுக்குப் பழக வேண்டும், தன் காதலை, தன்னை பெண் மயக்கிய வித்ததை, தான் மயங்கியதை கூற வேண்டும் என ஆயிரம் வேண்டும் மனதிற்கு இந்த முத்தம் இப்போது ஒரு சொல்ல முடியாத நிறைவை, ஆசுவாசத்தை அளித்திருந்தது.

அவளிடமிருந்து பிரிந்தவனை அதிர்ந்து பார்த்தாள் வேதவள்ளி. அந்தப் பார்வையில் சொக்கிப் போனான் அன்பழகன். பெண் பார்க்காத போதே, அவளிடம் மயங்கி கிறங்கியவன், இப்போது இந்த பார்வையில் மொத்தமுமாய் அவளிடம் வீழ்ந்திருந்தான்.

தன்னை ஆச்சரியமாய் நோக்கும் விழிகளில் ஆயிரம் முத்தமிட தோன்றியது கணவனுக்கு. மூக்குத்தியில் முத்தமிட்டு மோட்சம் பெற துடித்த மனதையும், எப்போதாவது வார்த்தைகளை உதிர்க்கும் அந்த உதட்டில் தொலைந்து போகத் தோன்றிய எண்ணத்தையும் புதைத்தவன், “வேதா...” என கரகரத்துப் போய் அழைத்து, அழுத்தமாய் அவளை இழுத்து அணைத்திருந்தான். அஞ்சி நடுங்கியவளின் கூந்தல் காட்டில் ஆடவன் முகம் குடியேர, நடுங்கியபடியே அவனுடன் ஒன்றினாள் பெண். பெண் சுகந்தததை சுகித்தவனின் அனலான மூச்சுக்காற்றில் வேதாவின் உயிர் தகித்து உறைந்து போனதென்னவோ உண்மை.


தொடரும்...





 
Well-known member
Messages
519
Reaction score
376
Points
63
Anbu already vedha unnoda undefined love ls yae ayiram aacharyam iruku avalukku ne vera ipadi.ellam aval ah freeze akidatha
 
Messages
60
Reaction score
39
Points
18
தாலி கழுத்தில் ஏறிய நொடி
தன்னுள் மறைந்து போன பேச்சு தானாய் வருகிறது வேதவல்லிக்கு....
காதல் மட்டும் கைகூடவில்லை கல்யாணமும் முடிந்துவிட்டது கனவா கனவாக எண்ணிய காதல்
கைக்குள் அடங்கி இருக்க....
கண்களில் சந்தோஷம் பொங்க
காதலாய் ஒரு நெற்றி முத்தம் பரிசாக..
 
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
Semma semma epadiyaay life fulla santhosama Iruka problem vantha vedha oda anbu pathukuvan 😍😍😍
 
Messages
39
Reaction score
18
Points
8
வாவ் செம செம சூப்பர் 😍😍 ரொம்ப இயல்பா இருக்கு
 
Top