• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,242
Reaction score
3,659
Points
113
வேதம் – 12
முகத்தை வேறுபுறம் திருப்பி நின்றிருந்தவளின் பக்கவாட்டுத் தோற்றத்தில் மயங்கிய அன்பழகன் தொண்டையைச் செருமிக்கொண்டான்.
‘ட்யூப்லைட்... ட்யூப்லைட்’ என முணுமுணுத்தவளின் உதட்டசைவைப் படித்தவன், ‘அடிப்பாவி...’ என நினைத்துவிட்டு, “மேடம், நான் ட்யூப்லைட்டாவே இருந்துட்டுப் போறேன். எதுனாலும் டைரக்டா சொல்லுங்க” என்றவனின் முகம் முழுவதும் சிரிப்பு படர்ந்திருந்தது.
தான் முணுமுணுத்ததை அன்பழகன் கண்டுகொண்டான் என்பதெற்க்கெல்லாம் பெண் அலட்டிக் கொள்ளவே இல்லை. ஒரு நிமிடம் மூச்சை வெளிவிட்டவள், “நான் எங்கப்பாவோட பொண்ணா இருக்க வரைக்கும் அங்கதான் இருக்கணும்னு சத்தியம் வாங்கிட்டாரு அப்பா. இப்போ அங்க இருந்து வெளிய வந்துட்டேன். சோ, எனக்கான அடையாளம்ன்றது உங்க பேரோட சேர்ந்திருக்குறதுதான். அதனால...” ஒரு நொடி தயங்கிய வேதா, “கல்யாணம் பண்ணிக்கலாம்...” என்றாள் தீர்க்கமாக.
அவள் கூறுவதை கதை போல கேட்டுக்கொண்டிருந்த அன்பழகன், கடைசி வரியில் அதிர்ந்து போனான். செவி கேட்டது மெய்தான் என மனம் நம்ப மறுக்க, “இப்போ என்ன சொன்ன வேதா?” ஆச்சர்யம் விலகாமல் கேட்டான்.
“உங்க காதுல விழுந்தது எல்லாம் சரிதான். கல்யாணம் பண்ணிக்கலாமா?” வேதா அவன் முகத்தைப் பார்க்கவில்லை. லேசான தயக்கத்தையும் அடித்து விரட்டியிருந்தாள். குரலில் தெளிவிருந்தது.
அன்பழகனுக்கு உறைந்த நிலைதான். அவன் வேதாவிடமிருந்து இப்படியொரு கேள்வியை எதிர்பார்க்கவில்லையே. அவளை ஒரு பெண்கள் விடுதியாகப் பார்த்து சேர்த்துவிட்டு, தானே அவளுடையப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளலாம் என்றுதான் அவன் எண்ணியிருந்தான். ஆனால், பாவை கேட்ட கேள்வியில் மொத்தமும் மறந்து போனது. வாயடைத்துப் போய் நின்றவனைப் பதிலுக்காக நோக்கினாள் வேதவள்ளி.
அதில் திணறியவன், முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டான். அவள் வார்த்தைகளை மனது ஆராய்ந்து மூளைக்குக் கடத்த, சற்று நிதானித்தான் ஆடவன்.
“வேதா, ஆர் யூ ஷ்யூர்?” எனக் கேட்டு வலக்கையால் நெற்றியை சொரிந்தான்.
தலையை மட்டும் சம்மதமாய் அசைத்தவளின் பார்வை எதிரிலிருக்கும் பெருமாள் கோவிலில் படிந்தது. அவள் பார்வை போகும் திசையை கவனித்தவன், ‘ஓ... இதற்காகத்தான் இங்கே நிறுத்தச் சொன்னாளா?’ என சுற்றிலும் பார்வையை பதித்தான். அவ்வளவுதான், 'கரும்பு திண்பதற்கு கூலியெதற்கு?' என்று மனம் மகிழ்ச்சியில் கூக்குரலிட்டது.
“ஹ்ம்ம்...” ஒரு பெருமூச்சை வெளிவிட்டவனின் மனம் சந்தோஷத்தில் ஆர்பரித்தது. எப்படி வார்த்தைகளில் அதை வடிக்க எனத் தெரியாது திக்குமுக்காடிப் போனான் அன்பழகன்.
“சரி, நான் கால் பேசிட்டு வர்றேன். நீ கோவிலுக்குள்ள போ...” என்றவன், சற்றுத் தள்ளிச் சென்றான்.
ஏற்கனவே அன்பழகன் எண்ணியிருந்தான், கண்டிப்பாக தங்களுடைய திருமணம் இப்படி எதாவது ஒரு கோவிலில் ரகசியமாகத்தான் நடக்கும் என. ஆனால், இத்தனை விரைவாய் என அவன் எதிர்பார்க்கவில்லை.
வேதவள்ளி விஷயத்தில் மட்டும் மூளை எதையும் சிந்தித்து ஆராயும் திறனை இழந்துவிடுகிறது அன்பழகனுக்கு. அவளைக்கொண்டு வரும் எதுவாய் இருந்தாலும், நியாயம் தர்மம், சரி, தவறு என்றவை எல்லாம் செயலிழந்து செல்லாத வார்த்தையாக உருப்பெற்று விடுகிறது. மனமெங்கும் நிறைந்திருக்கும் இந்தப் பெண்ணிற்காகத்தானே இத்தனை நாள் போராட்டம்.
வேதா திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறாள். அதுவும் தன்னுடனான மணவாழ்க்கை, நினைக்கவே மனம் முழுவதும் தேனின் தித்ததிப்பு. ஒரே ஒருநாளில் தன்னுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள விழைந்திருக்கிறாள் என்றால், என் மீது எத்தனை நம்பிக்கை இருக்க வேண்டும் அவளுக்கு. வார்த்தைகளை எல்லாம் நொடி நொடியாய் நம்பிக்கை என்னும் கயிறு, நேசம், சந்தோஷம் என்னும் வழியில் சுருட்டிக்கொண்டது.
பெண் அத்தனை திடமாக உரைத்திருந்தாளே! சூழ்நிலை அவளை வஞ்சித்தாலும், அன்பழகன் எந்த ஒரு நிலையிலும் அவளை வஞ்சிக்க மாட்டான் என்று பாவை மனம் அடித்துக் கூறியிருந்தது.
ஒவ்வொரு முறையும் தன்னைக் காணும் போது, அன்பாய் நேசத்துடன் தழுவும் பார்வையை அவளும் அவனறியாது உணர்ந்திருக்கிறாள். அன்பழகன் உணர்த்தியிருந்தான். ஆனால், அவனை நிமிர்ந்து ஒரு பார்வையும் பார்த்ததில்லை. எங்கே மனம் அவனிடம் சரணடைந்துவிடுமோ? என அவள் அஞ்சிய நாட்களுண்டு. அது இத்தனை விரைவாய் நிகழ்ந்துவிட்டது.
வாழ்க்கை சட்டென மடையை மாற்றத் துவங்க, பெண்ணை அன்பழகன் தாங்கிக் கொண்டான். பலமுறை எதற்கு இவனுக்கு தன்னை இத்தனைப் பிடித்திருக்கிறது எனப் பெண் ஆராய்ந்தால், விடையெல்லாம் ராமானுஜர் கண்டுபிடித்த சுழியம்தான். இதழ்களில் லேசாய் புன்னகை படரும்.
காலையில் தினமும் காவலன் போல வருவது, இரவு வீடு வரை வந்து அவளை விட்டுவிட்டு செல்வது என வேதவள்ளியின் இரண்டு வருட வாழ்க்கையில் அன்பழகனின் ஆதிக்கம் அதிகமாய் இருந்தது. அவளும் அதை உணர்ந்துதான் இருந்தாள்.
ஏனோ, தன் தந்தையின் கதகதப்பான கரங்களின் மென்மையை, அன்பழகனிடம் உணர்ந்தாள். அவளை அழைத்துச் செல்லும்போது கூட, தவிப்பாய் பேசிய அன்பழகன் குரல்தான் செவியை நிறைத்தது. நிறைத்தான், பிடித்தம் என்ற வரையறைக்குள் இது வந்து விடுமோ? என வஞ்சி நேற்றைய தினம் அஞ்சியிருக்க, அதற்கான விடையாய் இன்றைய அவர்களின் திருமணம் அமைந்துவிட்டது.
மனதின் ஓரம் ஒரே ஒரு பாரம் பெண்ணை அழுத்தியது. தந்தை, தனக்கென்றிருக்கும் ஒரே ஒரு உறவு கூட, தன் திருமணத்தைக் காண கொடுத்து வைக்கவில்லையே! அவள் நினைத்தால், திருமணம் செய்ய விழையாமல் வேறு எங்கேனும் கூட சென்று தங்கியிருக்கலாம். மனம் அதிகம் பயந்தது, இந்தத் தனிமை தன்னை கொன்று தின்றுவிடுமோ? என்று. அம்சவேணியிடம் வசவுகளைப் பெற்றுக் கொண்டேனும், அங்கிருந்ததற்கு ஒரே காரணம் இதுதானே. தனிமைச் சிறை, அவளை அமிழ்த்தி விடுமென்று.
என்றாவது ஒருநாள் முருகையா, ‘சாப்பிட்டியா வேதா மா?’ என அன்பாய் வினவும்போது, அம்சவேணியின் வார்த்தைகள் எல்லாம் பின்னுக்குச் சென்றுவிடும். தனிமையை அறவே வெறுத்தாள் பெண்.
எத்தனை பேருக்கு தனிமையெல்லாம் வரமாக அமைந்திருக்கிறது என எண்ணிப் பார்த்தால், அது சாபமாகத்தான் பலரின் வாழ்க்கையை ஆக்கிரமித்திருக்கிறது.
யாருமில்லாது வீட்டிற்குள் நுழையும்போது, தனிமையை உணருபவர்களிடம் கேட்டுப் பாருங்கள். நிசப்தமாய் அறையில் அமர்ந்திருக்கும்போது ஆட்கொள்ளும் தனிமையை உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும்.
வாழ்நாள் சாபமாய் தனிமையை சுமப்பவர்கள் எல்லாம் துர்பாக்கியசாலிகள். சில நாட்கள் தித்திப்பை வழங்கும் தனிமை, சக்கையாய்ப் பிழிந்துப் போட்ட கரும்பு சக்கையைப் போல, சுவைக்க முடியாததாகிவிடும்.
எங்கெங்கோ அலைந்து திரிந்து வீட்டைத் திறக்கும்போது, சிரித்த முகமாய், திட்டியேனும் தன்னை வரவேற்கும் உறவுகள் எல்லாம், வரையறுக்க முடியாது வரையறைக்குள் வந்துவிடுகின்றனர்.
சிறுவயதிலே தாயை இழந்து, தந்தையுமின்றி நிராதவராய் நின்றவளை வாரி அணைத்துக் கொண்டது தனிமை சிறை மட்டுமே எனக்கூறி பெண் இதழ்கள் கசப்பான புன்னகையை உதிர்க்கும்.
‘உடல்நிலை சரியில்லை, கெஞ்சமேனும் எனக்கு ஓய்வு வேண்டும்’ தன் முகம் பார்த்து அகத்தை அறியும் ஒரு உறவுக்காகத்தான் வேதவள்ளி காத்திருந்தாள்.

எல்லையற்ற அன்பை சுவைக்க வேண்டும் என்பதுதானே ஒவ்வொருவரின் வாழ்நாள் ஏக்கமாக இருக்கிறது. அவர்கள் எல்லாம் அன்பென்னும் வார்த்தையின் அடிநாதத்தை உணர்ந்தவர்கள். அது போலொரு நேசத்தை ஸ்பரிசிக்கத்தான் யாசிக்கிறார்கள். வேதவள்ளியும் அப்படித்தான்.
தனக்கே தனக்கான ஒரு உறவு. தன்னுடைய அன்பைக் கூட அதட்டலாய் அந்த ஜீவனிடம் கொட்டி, அவனுடைய எல்லையற்ற அன்பை வாழ்நாள் முழுவதும் ஸ்பரிசித்துக்கொண்டே
அதனுடன் ஜீவிக்க வேண்டும் என்று மனதில் நினைத்திருந்த வெள்ளைக் காகிதத்தில் வண்ணமயாய் நின்றிருந்தவன் அன்பழகன் மட்டுமே என அறிந்தப் போது, பெண்ணே அதிர்ந்துதான் போனாள். பின் அதனை மனம் ஏற்றுக்கொள்ள தயாராக நேரம் வாய்க்காது போனது சூழ்நிலையின் சதி.
அலைபேசியை எடுத்துக்கொண்டு சற்றுத்தள்ளிச் சென்ற அன்பழகன் முகிலனுக்கு அழைத்தான்.
“சொல்லு மச்சான், ஒரு நாலு லேடிஸ் ஹாஸ்டல் விசாரிச்சேன் டா. எல்லாம் ஓகே, நீ சிஸ்டரை கூட்டீட்டுப் போய் பார்த்துட்டு எது ஓகேன்னு செலக்ட் பண்ணிக்கோ...” எடுத்ததும் முகிலன் படபடத்தான்.
“அந்தப் பிளான் ட்ராப் டா. நான் சொல்றதை மட்டும் செய். கல்யாணத்துக்கு ரெண்டு மாலையும், பக்கத்துல எதாவது ஒரு நகைக்கடைக்குப் போய் தாலி ஒன்னும் வாங்கிட்டு, நம்ம பெருமாள் கோவிலுக்கு வந்துடு டா...” அன்பழகன் கூற்றில், முகிலன் அதிர்ந்து போனான்.
“டேய் மச்சான், சும்மா சொல்றீயா டா?” நண்பன் பதற, “இந்த விஷயத்துல யாரும் விளையாடுவாங்களா? நான் அமௌண்டை உனக்கு சென்ட் பண்றேன். முடிஞ்சளவுக்கு சீக்கிரம் வா...” என்றவன் அழைப்பைத் துண்டித்திருக்க, வேதவள்ளி அந்த இடத்தைவிட்டு நகரவே இல்லை.
‘என்ன?’ என்பதாய் அன்பழன் பார்க்க, “இல்லை, நீங்க இன்னும் சாப்பிடவே இல்லை...” எனக் கேட்டாள் பாவை. தயக்கமெல்லாம் இல்லை அவளிடம்.
‘என்னை இவ்வளவு கவனித்திருகிறாளா இவள்?’ என்ற கேள்வி மனதில் மகிழ்ச்சியைப் பரவ செய்ய, அதை முகத்தில் வெளிப்படுத்தாதவன், “பசிக்கலை. நைட் சாப்பிட்டுக்குறேன்...” என்றான்.
‘இல்லை, நீங்க சாப்பிட்டால்தான், நான் நகருவேன்...’ அடமாய் நின்றிருந்தாள் வேதா.
‘அழுத்தக்காரி...’ முணுமுணுத்தவன், அருகிலிருந்த உணவகத்திற்குச் செல்ல, அவளும் சென்றாள். தனக்கு உணவையும், அவளுக்கு தேநீரையும் வரவழைத்தான்.
எதுவும் பேசாதவள், தேநீரை ஊதி ஊதி குடித்துக் கொண்டிருந்தாள். உண்டு கொண்டிருந்த அன்பழகனின் பார்வை மொத்தமும் பாவையிடம்தான்.
கலைந்திருந்த கூந்தலை, சற்றே சரி செய்திருந்தாள். இமைகளில் வீக்கம் குறைந்திருந்தன. முகத்தில் ஆயிரம் யோசனைகள் படர்ந்திருந்தன. அவளைப் பார்த்துக்கொண்டே உண்டு முடித்திருந்தான்.
அப்போதுதான் வத்சலா நான்கைந்து முறை அழைத்தது நினைவு வர, அலைபேசியை எடுத்து அவருக்கு அழைத்தான்.
“டேய், அறிவிருக்கா? எத்தனை தடவை கால் பண்றது, ஏன் அட்டென்ட் பண்ணலை?” படபடத்தார் அவர்.
“ம்மா, எதுக்கு கால் பண்ண? அதை சொல்லுமா...” என சலித்தான் அன்பு.
“மதியம் சாப்பிட வரலை. அதுக்காகத்தான் டா கால் பண்ணேன்”
“வெளிய சாப்பிட்டேன் மா”
“காலையிலயே சொல்ல வேண்டியதுதானே டா. உனக்கு செஞ்ச சாப்பாடு எல்லாம் வேஸ்டாகுது‌...” வத்சலா திட்ட, காதைக் குடைந்தான் அன்பு.
“சரி, நைட் எப்போ வீட்டுக்கு வருவ, வருவீயா இல்லை பரதேசம்தானா?" என கேலியாகக் கேட்டவர், “ஆமா, எங்க இருக்க டா. முகிலுக்கு கால் பண்ணா, கடையில இல்லைன்னு சொல்றான்...” என வினவினார்.
“ஹ்ம்ம்... ஆமா மா. கோவில்ல இருக்கேன் மா” என்ற அன்பழகன் சரியாய் வேதவள்ளியுடன் ஆலயத்திற்குள் நுழைந்திருந்தான்‌.
“எட்டாவது அதிசயமா இருக்கு. கூப்பிட்டா கூட வர மாட்ட?”
“வர வேண்டிய சூழ்நிலை”
“அதென்ன டா அப்படியொரு சூழ்நிலை...”
“நான் சொல்றதை டென்ஷனாகாம கேளு மா. வேதவள்ளியைக் கல்யாணம் பண்ணிக்க கோவிலுக்கு வந்திருக்கேன் மா...” அன்பு கூறியதும் வத்சலாவின் சிரிப்பு சத்தம் அவன் காதை நிறைத்தது.
“ப்ம்ச்... அந்தப் பொண்ணு கூட உனக்குக் கல்யாணம், அதை நான் நம்பணுமா? போடா, ஒழுங்கா சாமிக்கிட்டே நல்ல புத்தியைக் கொடுன்னு வேண்டிக்கோ. இனிமேலாவது அவ பின்னாடி போகாம இருக்கணும்னு...” என்றவர், “நேரத்துக்கு சாப்பிட வா. நைட்டும் சாப்பாட்டை வேஸ்ட் பண்ண வச்ச, உதை வாங்குவ” என்று அவர் அழைப்பைத் துண்டித்திருந்தார்.
அலைபேசியை சில நொடிகள் வெறித்தவன், தோளைக் குலுக்கிக்கொண்டான். ‘என்னுடைய கடமை நான் உங்களுக்குத் தெரிவித்துவிட்டேன். அதை நம்புவதும் நம்பாததும் உங்களுடைய விருப்பம்’ என நினைத்தவன், எதையும் அலட்டிக் கொள்ளாத பாவனையில் இருந்தான்.
கோவில் பூசாரி, கடவுள் சந்நிதியிலிருக்க, அங்காங்கு ஓரிருவர் மட்டும்தானிருந்தனர். அன்பழகன் அவரருகே சென்று அழைத்தான்.
“சொல்லுங்க தம்பி, என்ன வேணும்?” பூசாரி வினவ,
“ஒரு கல்யாணம் பண்ணணும் பூசாரி. அதான் வந்தோம்...” அன்பு உரைக்க,
“உள்ள நுழைஞ்சதும், கோவில் அலுவலகம் இருக்கும் பாருங்க தம்பி. என்னைக்குக் கல்யாணம், என்னென்ன வாங்கிக் கொடுக்கணும், பணம் எவ்வளோ கட்டணும்னு அங்க சொல்லுவாங்க. அவங்க கொடுக்குற ஃபார்மை எழுதிக் கொடுங்க...” அவர் செய்முறையை விளக்க, நெற்றியைச் சொரிந்தவன்,
“அவ்ளோ எல்லாம் டைமில்லை பூசாரி. இப்போவே கல்யாணம் பண்ணணும். பொண்ணு, மாப்பிள்ளை ரெடி...” என்பது போலத் தங்களைச் சுட்டியவன், “மாலையும், தாலியும் ஆன் தி வே...” என்றான்.
“அப்படியெல்லாம் பண்ண முடியாது பா. கோவிலுக்குன்னு ரூல்ஸ் இருக்கு. அதை எல்லோரும் பாலோ பண்ணணும்...” பூசாரி திடமாக மறுக்க, எதோ கூற வந்த அன்பழகனின் கையைப் பிடித்தாள் வேதவள்ளி. அதில் அவளைத் திரும்பிப் பார்த்தான் அன்பு.
‘நான் பேசிக்கொள்கிறேன்’ என்பது போல தலையை அசைத்தவள், “ஐயா, தவிர்க்க முடியாத சூழ்நிலை. வீட்ல யாரையும் கூப்பிட முடியலை. அதான் இப்படிக் கல்யாணம் பண்றோம். பெரியவங்க யாரும் இல்லை. நீங்கதான் மந்திரம் சொல்லி தாலியை எடுத்துக் கொடுத்து கல்யாணத்தை நடத்தி வைக்கணும்...” தன்மையாய் கேட்டாள் வேதவள்ளி.
அவள் குரலின் பணிவு, பூசாரியை சற்றே யோசிக்க வைத்தது. அழுது சிவந்திருந்த முகத்திலிருந்து என்ன கண்டாரோ மனிதர், தன் மகள் வயதை ஒத்திருந்த வேதவள்ளியைப் பார்த்து மனமிறங்கினார்.
“ஏன் மா இவ்வளோ அவசரமா கல்யாணம் பண்றீங்க? என்ன பிரச்சனைனாலும், அம்மா, அப்பாவை பேசி சம்மதிக்க வைக்கலாம் இல்லை” கேள்வியாய் நிறுத்தியவரிடம் வேதா பதிலளிக்கவில்லை. அன்பழகனின் கையை அழுத்தமாய்ப் பிடித்து அவனையும் பேசவிடாது செய்துவிட்டாள்.
அவளின் மௌளனத்தை அவதனித்தவர், “சரிம்மா, நான் சொல்றதை வாங்கிட்டு வாங்க. நல்ல நேரம் பார்க்குறேன்...” என்றவர், ஐந்தரையிலிருந்து ஆறுமணிக்குள் முகூர்த்தம் இருந்தது அதிர்ஷ்டம் எனக்கூறி அந்த நேரத்தை குறித்தார். அன்பழனிடம் தேவையானவற்றை கூறி வாங்கி வரச்செய்தார்.
முகிலன் கையில் மாலையுடன் உள்ளே நுழைய, அவன் பின்னே நால்வர் நுழைந்தனர். அன்பழகனின் கல்லூரித் தோழர்கள். பூசாரியிடம் மாலையையும் தாலியையும் கொடுத்தவன், அன்பழகனிடம் விரைந்தான்.
“என்னாச்சு மச்சான், எதுவும் பிரச்சனையா?” முகிலன் வினவ,
“ஒன்னும் இல்லை டா. நான் எல்லாத்தையும் சொல்றேன்...” அன்பு பதிலளிக்கவும், மற்ற நால்வரும் எதையும் தோண்டி துருவவில்லை.
“மச்சான், சொல்லவே இல்லையே டா...” நண்பன் ஒருவன் அன்பழகனின் தோளில் தட்ட,
“மைக் வச்சா டா அனொன்ஸ் பண்ண முடியும். ஏதோ வந்துட்டீங்க, வாழ்த்திட்டுப் போங்க...” அன்பழகன் இதழ்களில் புன்னகை படர்ந்தது.
“கங்கிராட்ஸ் மச்சி, நம்ம செட்ல நீதான் ஃபர்ஸ்ட் குடும்பஸ்தனாகப் போற. வழியில கண்ல பட்டதை வாங்கிட்டேன் டா...” என்ற மற்றொருவன், பரிசை அவன் கைகளில் திணித்தான்.
“மச்சான், கல்யாணம் முடிஞ்சதும் கொடுக்கலாம். இங்க கொடு டா...” வேறொருவன் அன்புவிடமிருந்து பரிசை பிடுங்கிவிட்டான்.
“டேய்...” முகம் கொள்ள சிரிப்புடன் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த அன்பழகனைத்தான் பார்த்திருந்தாள் வேதவள்ளி.
இந்த தோழமை மட்டும் எப்படி ஆண்களுக்கு வாய்த்து விடுகிறது. பெண்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் கிட்டுவதில்லை. சரியோ, தவறோ, எதுவென்றாலும், ஆண்கள் மட்டும் நண்பர்களை எந்த இடத்திலும் விட்டுக் கொடுப்பதில்லை. எத்தனை பெரிய சூழ்நிலையையும் தூசியாய்த் தட்டிவிடுகின்றனர். தன்னியல்பெல்லாம் இவர்களிடம் தானாய் மலர்ந்து செழிக்கிறது. வேதவள்ளி யோசித்துக் கொண்டிருக்க, பூசாரி அழைத்துவிட்டார்.
எல்லோரும் சந்நிதானத்திற்கு வரவும், மந்திரங்களைக் கூறி மாலையை மாற்றச் சொன்னார் பெரியவர். முகம் முழுவதும் சிரிப்புடனும், விழிகள் முழுவதும் நேசத்துடனும் வேதாவின் கழுத்தில் மாலையை அணிவித்தான் அன்பழகன். அவன் முகத்தையே இமைக்காது பார்த்தவள், ஆடவன் கழுத்தில் மாலையை அணிவிக்க, சில நிமிடங்களில் மந்திரத்தைக் கூறி மாங்கல்யத்தை எடுத்து அன்பு கையில் கொடுத்தார் பூசாரி.
பெரிதாய் வேண்டுதலெல்லாம் இல்லை அன்பழகனிடம். கடவுள் நம்பிக்கை எல்லாம் துளியேனும் அங்கிங்கு கூட ஒட்டியிருக்கவில்லை அவனுக்கு. தன்னை நம்பி வந்தப் பெண்ணை, எந்த நிலையிலும் கைவிடக் கூடாது எனத் தனக்குத் தானே கூறி, வேதாவின் கழுத்தில் மூன்று முடிச்சையும் தானே இட்டிருந்தான். அமைதியாய் அவன் கட்டிய மாங்கல்யத்தையும், அவனையும் சேர்த்தே ஏற்றுக்கொண்டாள் வேதவள்ளி, அன்புவின் வேதா.
இனி அவர்களுக்கான அன்பின் வேதம் துவங்கும். கரடு முரடான பாதைகள் எல்லாம் அன்பழகனின் வழியில் கடக்க தயாராகிவிட்டாள் வேதவள்ளி‌.












































































 
Well-known member
Messages
1,049
Reaction score
758
Points
113
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr 👌👌👌 👌 👌 👌 👌 👌 👌 👌
 
Well-known member
Messages
547
Reaction score
389
Points
63
கல்யாணம் முடிஞ்சாச்சு, அன்பு வீட்டில் வரவேற்பு எப்படியோ?
 
Top