• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மேகம் 1

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
மேக மழைச்சாரல்

மேகம் 1:


ராவோடும் பகலோடும்

உந்தன் ஞாபக தொல்லை
ரயில் பாதை பூவோடு

வண்டுகள் தூங்குவதில்லை…

சிறு தூரலாய் துவங்கிய மழை சிறிது நேரத்தில் சலசலவென பொழிய தொடங்க, கையில் இருந்த குடையை விரித்த மேகா, தலையை மட்டும் எட்டி பார்க்க, இன்னும் பேருந்து வரும் வழியை காணோம்.


அங்காங்கு நின்றிருந்த ஒரு சிலரும் மழை வலுக்க துவங்கவும் பேருந்தின் நிழற்குடையின் கீழ் ஒதுங்கினர்.

“ப்ச் இன்னும் இந்த பஸ்ஸைக் காணோம்” என்று சலித்த மேகா கைக்கடிகாரத்தை பார்த்தபடி முகத்தில் விழுந்த கூந்தலை ஒதுக்கினாள்.

“மழை பெய்யிறதுனால ரோடு வேற வழுக்கும்னு பஸ்ஸ எடுக்க மாட்டாங்க” என்று ஒரு குரல் வர,

“ஆமா மழை வந்தா இது வேற தொல்லை” என்று மற்றொரு குரல் வந்தது.

அருகில் இருந்த இருவர் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருந்தது மேகாவின் செவிகளில் விழுக,

“லேட் ஆகிடுமோ கடவுளே காப்பாத்து…” என்று விழிமூடி கோரிக்கை வைத்த நேரம் பேருந்து வந்து நிற்க,

“நன்றி கடவுளே” என்று மனதிற்குள் நன்றி நவிழ்ந்தவளின் இதழ்களில் மென்னகை ஜனித்தது.

பேருந்தை கண்டதும் எல்லோரும் வெல்லத்தை கண்ட எறும்பு போல மொய்க்க துவங்கினர்.

தன்னுடைய குடையை மடக்கி கைப்பையினுள் வைத்துவிட்டு தானும் அந்த கூட்டத்தில் சேர்ந்து பேருந்தினுள் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டவளுக்கு ஆசுவாச மூச்சு பிறந்தது.

கைபையினுள் துலாவி காதொலிப்பானை எடுத்தவள் அலைபேசியுடன் இணைத்து தனது விருப்ப பாடல் வரிசையில் இருந்து ஒரு பாடலை ஓடவிட்டாள்.

பிரதீப் குமாரின் குரலில்

கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நிதம் உன்னால

பாடல் வரிகள் செவிக்குள் தேனாய் நுழைந்தது.

மேகா எப்போதும் இப்படித்தான் பயணத்தின் போது இசையை மிகவும் விரும்புவாள்.

தினமும் எவ்வளவு தூரம் பயணம் செய்கிறாய் என்று வினவினால் பாடலை வைத்து தான் கணக்கினை கூறுவாள்.

இசையின் மீது அப்படி ஒரு விருப்பம். அவளது விருப்பத் தேர்வில் கிட்டத்தட்ட ஐநூறு பாடல்கள் இருக்கும்.

தினமும் பத்து நிமிட பயணத்திற்கு இரண்டு பாடல்கள் என்று கணக்கு வைத்துக் கேட்பாள்.

சரியாக இரண்டாவது பாடல் முடியும் தருவாயில் அவள் செல்ல வேண்டிய இடம் வந்துவிடும்.

நடத்துனர் வந்ததும் தனக்கான பயணச்சீட்டை பெற்று கொண்டவள் அடுத்த பாடலை ஒலிக்கவிட்டாள்.

அதுவும் பிரதீப் குமாரின் பாடல் தான்.

தீராத காதல் தீயாக மோத… என்று அவளது செவிக்குள் மெதுவாய் இறங்கியது.

விழி மூடி இசையை அனுபவித்து வந்தவள் பாடல் முடியும் நேரம் விழிகளை திறக்க அவளது நிறுத்தம் வந்திருந்தது.

காதொலிப்பானை எடுத்து கைப்பையினுள் வைத்தவள் வரிசையாக இறங்குபவர்கள் பின் சேர்ந்து கொண்டாள்.

மழை இன்னும் பெய்து கொண்டு இருக்க குளிரின் தாக்கம் போட்டிருந்த உடையையும் தாண்டி ஊடுருவ கையில் இருந்த குடையை விரித்து கொண்டவள் உடையை லேசாக தூக்கி பிடித்தபடி வரும் வாகனங்களை கவனித்த படி சாலையை கடந்தாள்.

“காஃபி ஹவுஸ்” என்று பெரிதாக பொன்னிறத்தில் அந்தி சாயும் நேரத்தில் மின்னி கொண்டிருந்தது அந்த பெரிய தேநீர் விடுதியின் முன் வந்து நின்றவள் கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்க்க நேரம் ஐந்து ஐம்பத்தியெட்டு ஆகியிருந்தது.

இன்னும் இரண்டு நிமிடங்கள் தான் உள்ளது என்று எண்ணி வேகவேகமாக அவ்விடுதியின் பின்புறத்திற்கு சென்று பணியாட்கள் வந்து செல்ல மட்டும் வடிவமைக்கப்பட்டிருக்கும் பின் கதவின் வழியாக உள்ளே நுழைந்தாள்.

“ஹாய் மேகா வந்தாச்சா…? மழை வர்றதால வர லேட்டாகும்னு நினைச்சேன்” என்று நவீனா மொழிய,

“நானும் லேட் ஆகிடும்னு தான் நினைச்சேன் பட் பஸ் வந்திடுச்சு” என்று கூறி புன்னகைத்தாள் மேகா.

“சரி ஓகே அப்புறம் பேசுவோம்” என்று நவீனா வெளியேறினாள்.

இருவருக்கும் நடந்த உரையாடல் ஆங்கிலத்தில் தான் நவீனாவிற்கு தமிழ் தெரியாது அவள் தெலுங்கானாவை சேர்ந்தவள்.

தானும் தனது பையில் இருந்து அந்த பச்சை நிற டீசர்ட்டை எடுத்து அணிந்து கொண்டவள் தலையிலும் தொப்பியை அணிந்து கொண்டாள்.

அந்த டீ சர்டின் முன்புறம், ‘காஃபி ஹவுஸ்’ என்று பெரிதாக வெள்ளை நிறத்தில் பொதிக்கப்பட்டிருந்தது.

பையை தனக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் பத்திரமாக எடுத்து வைத்தவள் வெளியே வந்து தனது வருகையை மேலாளரிடம் தெரிவித்துவிட்டு தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த மேஜையில் அமர்ந்திருந்த ஆட்களிடம் ஆர்டர் எடுக்க சென்றாள்.

‘காஃபி ஹவுஸ்’ மேற்கு வங்காளத்தில் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் டார்ஜிலிங்கில் தான்.

டார்ஜிலிங்கின் மிக முக்கிய பகுதியான குர்சியோங்கில் அமைந்துள்ளது.

மேகா என்று மற்றவர்களால் அழைக்கப்படும் மேக மொழியாள் தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்தவள்.

மேகாவின் தந்தை சேதுபதி ஒரு தனியார் வங்கியில் பணிபுரிகிறார். தாய் தமயந்தி பள்ளி ஆசிரியர். இருவருக்கும் மேகா ஒரே செல்லப்பிள்ளை.

பள்ளி படிப்பை முடித்ததும் மேகாவின் பெற்றோர் அவளை சென்னையிலே ஒரு கல்லூரியில் சேர்த்து தங்களுடனே வைத்து கொள்ள நினைக்க இவள் தான் டார்ஜிலிங்கில் உள்ள கல்லூரியில் தான் படிப்பேன் என்று அடம்பிடித்து உண்ணாவிரதம் இருந்து காரியத்தை சாதித்து இருந்தாள்‌.


மகளின் பிடிவாதத்தினால் வேறு வழியின்றி இருவரும் அரை மனதுடன் சம்மதித்து குர்சியேங்கில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட்டனர்.

மேகா தேர்ந்தெடுத்த கல்லூரி மிகப்பெரிய கல்லூரி கட்டணம் சாதாரண கல்லூரி கட்டணத்தை விட பல மடங்கு இருந்தது.

இருப்பினும் மகளின் ஆசைக்காக இருந்த சேமிப்பை கரைத்து இங்கு சேர்த்துவிட்டிருந்தனர்.

இன்றோடு மேகா டார்ஜிலிங் வந்து இரண்டு மாதங்கள் ஆகிறது.

ஏற்கனவே கல்லூரி கட்டணத்திற்காக பெற்றோருக்கு நிறைய செலவு வைத்துவிட்டதால் தன்னுடைய செலவை தானே பார்த்து கொள்ள எண்ணி ஒரு மாதமாக அலைந்து திரிந்து இந்த தேநீர் விடுதியில் பகுதி நேர வேலையை பெற்றிருந்தாள்.

மாலை ஆறு மணி முதல் எட்டு முப்பது வரை அவளுடைய வேலை நேரம். அதன் பிறகு விடுதிக்கு சென்று உண்டுவிட்டு படிப்பது மற்றும் கல்லூரி வேலையை செய்வாள்.

அந்த விடுதியில் கிட்டத்தட்ட எழுபதுக்கும் மேற்ப்பட்ட இருக்கையில் போடப்பட்டிருக்கும்.

சற்று மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் அவ்விடுதி நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளதால் எந்நேரமும் ஆட்கள் வந்து போய் கொண்டே தான் இருப்பார்கள்.

இந்த மழை நேரத்திலும் ஓரளவு இருக்கையில் நிரம்பி இருந்தது.

மேகாவிற்கு என்று ஆறு இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஐந்து இருக்கையில் ஆட்கள் நிரம்பி இருக்க அவர்களிடம் என்ன வேண்டும் என்று ஆர்டரை பெற்று கொண்டு உள்ளே சென்று அதனை தெரிவித்து அது தயாரானாதும் எடுத்து வந்து கொடுத்துவிட்டாள்.

இன்னும் அந்த ஒரு இருக்கை மட்டும் நிரம்பாது இருக்க மேகாவின் விழிகள் அந்த இருக்கையில் அடிக்கடி விழுந்து பின்னர் கைக்கடிகாரத்தில் பதிந்தது.

வாசலிலும் யாரையோ எதிர்பார்த்து நின்றது பார்வை.

அதற்குள் அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் இருந்து அழைப்பு வர சென்று அவர்களுக்கு வேண்டியவற்றை செய்து முடித்து வந்தவளது விழிகள் மீண்டும் வாசலில் பதிந்தது.

‘மழை ரொம்ப பெய்யிறதால வரலையோ…?’

‘ஒருவேளை வந்திட்டு போய்ட்டாங்களோ…? அப்படியும் இருக்குமோ…?’ என்று மனதிற்குள் ஆயிரம் போராட்டங்கள்.

மறுகணமே, ‘சே சே இருக்காது அப்படிலாம் இருக்காது. தினமும் ஆறு மணிக்கு மேல தான வருவாங்க’ என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தி கொண்டு இருந்தவளை,

“எக்ஸ்க்யூஸ் மீ” என்ற குரல் கலைத்தது.

பாதையில் நின்று கொண்டு இருப்பதை உணர்ந்து,

“சாரி” என்றபடி நகர்ந்தவளது மூளை செவியில் விழுந்த குரலை மீண்டும் நினைவுப்படுத்தி சடுதியில் திரும்பி அந்த இருக்கையை காண,

இவ்வளவு நேரம் மேகா வழிமேல் விழி வைத்து எதிர்பார்த்து இருந்தவன் தான் அமர்ந்து இருந்தான்.

அருகில் வழக்கமாக அவனுடன் வரும் பெண்ணும் அமர்ந்து இருந்தாள்.

அவனை கண்டவளது விழிகள் மகிழ்ச்சியில் விரிய இதழ்கள், “க்யூட்டன்…” என்று முணுமுணுத்தது.

அவனது விழிகள் சுற்றும் முற்றும் திரும்பி சிப்பந்தியை தேடுவதை உணர்ந்தவள் சடுதியில் அவனருகே சென்று,

“வாட் டூ யு வான்ட் சார்?” என்று ஆங்கிலத்தில் வினவினாள்.

டார்ஜிலிங் முழுவதும் முக்கால்வாசி பேர் நோபாளம் தான் பேசுகின்றனர்.

வந்த புதிதில் மொழியை கண்டு பயந்தவள் பின்னர் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தை வைத்து தப்பிக்க வழி கற்று கொண்டாள்.

அவன், “ டூ மேட்லீன் டூ காஃபி” என்று மொழிய,


அதே நேரம் அவன் கூறியதை அப்படியே மனதிற்குள் கூறி முடித்திருந்தாள் மேகா.

தினமும் இதை தான் இருவரும் வாங்குவார்கள்.

அவன் கூறியதை கேட்டு முடித்தவள்,

“எனிதிங் எல்ஸ் சார்” என்று வழக்கமாக கேட்கும் வினாவை தொடுக்க,

அவன் எப்போதும் போல எதிரில் இருந்தவளை கண்டு அவள் வேண்டாம் என்று தலை அசைத்ததும் ஏதும் வேண்டாம் என்றான்.

‘சரி’ என்பதாய் தலையை ஆட்டியவள் அவன் கேட்டதை எடுக்க சென்றாள்.

இதழ்களில் மெலிதான புன்னகை மிளிர்ந்தது. காரணம் இரண்டு நிமிடங்களுக்கு முன் அந்த விடுதிக்கு வருகை தந்தவனால் தான்.

அவன் கேட்டதை உள்ளே கூறி எடுத்து வந்து அவனிடத்தில் கொடுத்தவள் சற்று தள்ளி அவளுடைய மேஜைகள் தெரியுமாறு நின்று கொண்டாள்.

ஆனால் பார்வை அவனிடத்தில் மட்டும் அதிக கணங்கள் படிந்தது.

வழக்கமாய் அணியும் இலகுவான உடை தான். மரகத பச்சையில் ஒரு டீசர்டும் ஆழ்பழுப்பு நிறத்தில் பேண்ட்டும் அணிந்து இருந்தவனது கையில் கைக்கடிகாரம் இருந்தது.

காலில் இருந்த ஷூ பார்த்ததும் அவனுடைய செலுமையை கூறிவிடும். பால் வெண்மை என்பார்களே அப்படி ஒரு வெள்ளை நிறத்தில் இருந்தான் அவன்.

குளிரின் காரணமாக லேசாக தேகம் அங்காங்கே சிவந்து இருந்தது. நெற்றியில் புரளும் கேசத்தை அவ்வது எடுத்துவிட்டவனது பார்வையில் கூர்மை இருந்தது.

லேசான புன்னகையுடன் பேசி கொண்டு இருந்தாலும் முகத்தில் ஒரு தீவிர பாவம் இருந்தது.

சிந்தனையுடன் அவளை பார்த்திருந்தவளுக்கு வேலை வந்துவிட சென்று மற்ற மேஜைகளை கவனிக்க துவங்கினாள்.

வந்த வேலையை முடித்து திரும்பிய நேரம் அவர்கள் இருவரும் கிளம்ப தயாராவது புரிய அவர்களிடம் சென்று,


“பில்லை எடுத்து வரவா சார்?” என்று ஆங்கிலத்தில் வினவ,

அவன் தலையசைத்ததும் சென்று அவர்கள் உண்டதற்கான பில்லை எடுத்து வந்து வைத்தாள்.

வழக்கம் போல தனது பர்ஸில் இருந்து ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து வைத்தவன் அப்பெண்ணுடன் நகர,

அதனை எடுத்து கொண்டவள் பணம் செலுத்தும் இடத்திற்கு சென்றாள்.

அவனுடைய பில் முந்நூறு போக மீதி இருநூறு இவளிடம் கொடுக்கப்பட அதனை வாங்கி தன்னுடைய பேண்ட் பாக்கெட்டினுள் வைத்து கொண்டவளது இதழ்கள்,

“பாரி வள்ளல் வாழ்க” என்று முணுமுணுத்தது.

அவள் பணிக்கு சேர்ந்த நாள் முதல் இவர்களை பார்த்து வருகிறாள்.


எல்லோரும் சாப்பிட்டு விட்டு ஐம்பது இருபது ரூபாய் டிப்ஸாக கொடுத்துவிட்டு செல்வார்கள் என்று சேர்ந்த போது நவீனா அவளுக்கு கூறியிருந்தாள்.

முதல் நாள் ஏழு மணிக்கு இந்த பெயர் தெரியாத பாரி வள்ளல் வந்து வழக்கமான இருக்கையில் அமர அவர்கள் உண்டு முடித்ததும் பணத்தை வாங்கி செலுத்திவிட்டு வந்தவள் மீதி பணத்தை கொடுக்க அவர்களை தேடினாள்.

ஆனால் அவர்கள் இருவரும் வெளியே செல்ல விழைவதை கண்டவள் விரைந்து சென்று,

“சார் மீதி பணத்தை வாங்காமல் செல்கிறீர்கள்?” என்று மொழிந்திட,

“அது உனக்கு கொடுக்கப்பட்ட டிப்ஸ்” என்றவன் நில்லாது சென்றிட,

இவள் தான், “இருநூறு ரூபா டிப்ஸா?” என்று மலைத்து நின்றுவிட்டாள்.


நவீனா வந்து, “ஏன் இப்படி நிக்கிற?” என்று வினவிய போது,

மேகா நடந்ததை கூற அவள் சிரிப்புடன்,

“இதுக்கு ஏன் இப்படி ஷாக் ஆகுற. ஐநூறு ரூபா டிப்ஸ் குடுக்குறவங்க கூட இருக்காங்க. இது பணக்காரங்க நிறைய பேர் வந்து போற இடம்” என்றாள்.

“ஓ…” என்றவள் மனதிற்குள்,

‘தெருக்கோடியில் புரள்பவர்களும் இந்த நாட்டில் தான் இருக்கிறார்கள் கோடியில் புரள்பவர்களும் இங்கு தான் இருக்கிறார்கள்’ என்று நினைத்தவள் பின்னர்,

‘எது எப்படியோ இருநூறு ருபாய் பாக்கெட் மணிக்கு ஆகும். பேர் தெரியாத பாரி வள்ளல் வாழ்க’ என்று மனதிற்குள் வாழ்த்திவிட்டு மற்ற வேலையை கவனிக்க சென்றாள்.

மறுநாளும் அந்த பாரி வள்ளல் அப்பெண்ணுடன் வர அன்றும் அவர்களுக்கு தேவையானதை
கொண்டு வந்து கொடுத்தவளுக்கு இருநூறு கிடைக்க,

‘இங்கு சம்பளத்தை விட டிப்ஸ் அதிகமாக கிடைக்கிறதே இதனை வைத்தே விடுதி கட்டணத்தை செலுத்திவிடலாம்’ என்று மனதிற்குள் குதூகலித்து கொண்டாள்.

அதன் பிறகு அந்த பாரி வள்ளலை தினமும் எதிர்பார்க்க துவங்கி இருந்தாள்.

அவன் அணிந்து வரும் உடை அவனது பாவனை என்று யாவையும் கவனித்துவிட்டவள்,

‘நேபாளத்தில் இப்படி ஒரு க்யூட்டான பையனா?’ என்று வியந்து அவனுக்கு மனதிற்குள் விதவிதமான பெயரை சூட்டியிருந்தாள்.

அதில் ஒன்று தான் அந்த ‘க்யூட்டன்’.


எட்டரை மணி ஆனதும் வழக்கம் போல உடையை மாற்றி மேலாளரிடம் கூறிவிட்டு பேருந்து நிறுத்தத்தை நோக்கி சென்றாள் மேக மொழியாள்…

*********

வாசலில் இரு சக்கர வாகனத்தின் ஓசை கேட்க, கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார் தமயந்தி.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திய மேகா உள்ளே வர விழைய,

“அடியே எதுக்கு இப்படி மழையில தெப்பலா நனைஞ்சிட்டு வந்து நிக்கிற. மழை நின்னதும் வர வேண்டி தான?” என்று தமயந்தியின் குரல் சற்று ஓங்கி ஒலிக்க,

அதற்கு எந்தவித எதிர்வினையும் காட்டாதவள் உள்ளே நுழைந்திட,

“மேகா உன்கிட்ட தான பேசிட்டு இருக்கேன். மழையில நனைஞ்சி உடம்புக்கு முடியாம போய்ட்டா என்னாகுறது” என்று மீண்டும் அதட்ட,

“ம்மா ப்ளீஸ் எனக்கு தலை வலிக்கிது. நான் போய் ட்ரெஸ் மாத்துறேன்” என்று அறைக்குள் நுழைய முயன்றாள்.

“இப்படி சொட்ட சொட்ட நனைஞ்சிட்டு வந்தா தலைவலி வர தான் செய்யும். நான் போய் டீ போட்றேன். சூடா டீ குடிச்சா தலை வலி சரியாகிடும்” என்றவர்,

“ஆமா உன் பெல்ட் எங்க?” என்று வினாவை தொடுக்க,

“மறந்திட்டேன்மா” என்றவள் அதற்கு மேல் பேச பிடிக்காது கதவை தாழிட்டு கொண்டாள்.

“என்னாச்சு இவளுக்கு பெல்ட்டை மறக்குற அளவுக்கு என்ன மறதி?” என்ற புலம்பியபடி சமையலறை நோக்கி சென்றாள்.

இங்கு கதவை அடைத்த மேகா அப்படியே சரிந்து அமர்ந்துவிட்டாள்.

விழிகளில் நீர் அருவியாய் கொட்ட ஓவென கதறி அழுக மனம் விழைந்தது.

வெளியே கேட்டுவிடுமோ என்று எண்ணியவள் கையால் வாயை மூடி கொண்டாள்.

இருந்தும் அழுகை பெருகியது. தன்னிலையை நினைத்து உள்ளே ஒன்று இறுகியது.

சற்று முன் கேட்ட விடயத்தினால் இதயம் ஆயிரம் பாகங்களாக சிதறியிருந்தது.

கழிவிரக்கம் ஒருபுறம் கொன்று தின்ன விழிகளை இறுக மூடியவள் கதவில் சாய்ந்து கொண்டாள்.

சில நிமிடங்களில்,

“மேகா கதவை திற சூடா டீ கொண்டு வந்து இருக்கேன்” என்று தமயந்தி கதவை தட்ட,

சடுதியில் விழிகளை துடைத்து கொண்டவள்,

“ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு இருக்கேன்மா. வந்து எடுத்துக்கிறேன்” என்றவளது குரல் கரகரத்தது.

“சீக்கிரம் வா டீ ஆறிடும்” என்றவரிடம்,

“சரிம்மா” என்றவள் எழுந்து உடை மாற்றி முகம் கழுவி வந்தவள்,
கண்ணாடியில் அழுத தடயம் எதாவது தெரிகிறதா என்று பார்க்க முகம் நன்றாக சிவந்து வீங்கி இருந்தது.

முயன்று துடைத்து ஓரளவு சரிசெய்தவள் வெளியே வர தமயந்தி யாரிடமோ அலைபேசியில் பேசிக்கொண்டு இருப்பது தெரிந்தது.

இவளை கண்டதும் அழைப்பை துண்டித்துவிட்டு,

“பெல்ட்டை மறந்துட்டேன்னு அசால்ட்டா சொல்ற. டாக்டர் பெல்ட் போடாம ட்ராவல் பண்ண கூடாதுனு ஸ்ட்ரிக்டா சொல்லி இருக்காருல” என்றிட,

“ஒருநாள் பெல்ட் போடாம வந்தா செத்து போய்ட மாட்டேன்” என்றவள் அவரது அதிர்ந்த முகத்தை காணாது,


“ நான் தூங்க போறேன் டிஸ்டர்ப் பண்ணாதிங்க” என்று அறைக்குள் வந்து தாழிட்டு கொண்டு படுக்கையில் விழுந்து விட்டாள்.

விழிகளை மூடினாள் அவன் தான் வந்து நின்றான் ஆளுமையாக புன்னையுடன் கோபமாக என யாவும் அவன் மயம் தான்.

அழுகையை அடக்கியவள் முகத்தை தலையணையில் அழுத்தி கொண்டாள்.

என்ன செய்தும் மனதின் வேதனை சற்றும் குறைந்தபாடில்லை.

விழி மூடினால் விழி திறந்தால் என அனைத்திலும் உடையவன் வந்து நிற்க மனம் மேலும் மேலும் ரணமாகியது.

இதற்கு ஒரு முடிவை எடுத்து தீர வேண்டும் என்று எண்ணியவள் அலைபேசியை எடுத்து உடையவனுக்கு அழைப்பு விடுத்தாள்.

அழைப்பு சென்று கொண்டிருக்க இறுதி நொடியில் அழைப்பு ஏற்க்கப்பட மறுமுனையில்,

“மேகா எனிதிங்க் இம்பார்ட்டன்ட் ஐ ஆம் இன் அ மீட்டிங்…” என்ற குரல் ஆளுமையுடனும் அவசர கதியிலும் வர,

“ஆமா” என்று இவளிடம் ஒற்றை வரியில் பதில் வந்தது.

“என்ன?” என்று சடுதியில் வினா வர,

“லெட்ஸ் ப்ரேக் அப்” என்று மேகாவின் பதிலில் எதிரில் இருப்பவன் ஏகமாய் அதிர்ந்து,

“வாட்…” என்று குரலுயர்த்தியவனது புருவம் இடுங்கியது.

“கால் ஆப் அவர் மேரேஜ்”என்று மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்தவளது இதயத்தின் அறையெங்கும் வலி விரவி கொன்று தின்றது.

ஆசை ஆசையாய் பார்த்து

பார்த்து தான் கட்டிய நேசக்கோட்டையை தானே அழிக்கும் படி இந்த விதி செய்துவிட்டதே என்று மறுகியவளுக்கு இதயத்தின் ஓரம் சுருக்கென்ற வலி பரவ தலையணையை இறுக்கி கொண்டாள்.

அழைப்பை துண்டித்த அடுத்த கணம் அவளவனிடமிருந்து மீண்டும் அழைப்பு வர, தேங்கிய விழி நீருடன் அதனை வெறித்தவள் அலைபேசியை அணைத்து போட்டுவிட்டாள்.
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Super starting mega ah va rendu vitham.ah parthu irukom.onnu azhaga patta poochi mathiri santhosham ah iruku ah megha ah va innonu ipadi azhugai la karaiyura mega ah va athuvum aval yae ava love ah vela ki vaikira alavuku avaluku enna nadanthu irukum na ra kelvi than perusa ah iruku
 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Nice starting ma

Megha ku ennachu, ean ipdi azhuraa
First half jolly ah irukka, second la romba azharaale, paavam enna problem nu theriyalaye
Waiting for next ud ma
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Nice nice cute chutty meha first part💗💗💗🥳
Ippo enn aalukura Avan yaru enn avalaay Ava vai yala breakup sollura povom la call pick Pannu meha 🥺🥺🥺
 
Top