• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

முதல் முத்தம் ❤️

Administrator
Staff member
Messages
912
Reaction score
2,633
Points
93
முதல் முத்தம் ❤️


"காதல் ஆசை யாரை விட்டதோ?
அதை தட்டிக் கேட்க உன்னை விட்டால்
யாரும் இல்லையே..."


என்று ரிங்டோன் அடிக்க, ஃபோனை எடுத்து யாரென்று பார்த்தேன். என் அம்மா தான். ஃபோனை எடுத்து, "ஆங்... சொல்லுங்க அம்மா" என்றேன். "சாப்பிட்டாயா..?" என்று கேட்டார். சாப்பிட்டேன் என்றுக் கூறி விட்டு, மேலும் சில நிமிடம் பேசிவிட்டு போனை க்கட் செய்தேன். பிறகு, பெட்டில் சென்று விழுந்தேன். மணி 8 30 பி.எம் எனக் காட்டியது. படுத்து தூங்க முயற்சி பண்ணினேன்.

தூக்கம் வரல, ஆங்... என்ன பத்திச் சொல்ல மறந்துட்டேன். என் பெயர் சுகன்யா. அப்பா பெயர் ராமலிங்கம், அம்மா பெயர் மகாலட்சுமி. நான் ஒரு வங்கி மேலாளராக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு வயது 35.

எனக்குத் தூக்கமே வரல, உருண்டு புரண்டு படுத்து ஒரு வழியாக தூங்கிவிட்டேன். காலை 6 மணிக்கு என்னுடைய போன் அலாரம் அடித்தது. நான் கண் விழித்துப் பார்த்தேன்.

பின் எழுந்து குளித்து வந்து எந்த சேலையை உடுத்துவது எனத் தெரியாமல் அரை மணி நேரமாக அலசி ஊதா நிறத்தில் பூ போட்ட ஒரு சேலையை எடுத்து அணிந்துகொண்டு, எல்லா அலங்காரத்தை முடித்து, நல்லா இருக்கேனா? என்று கண்ணாடியில் மேலிருந்து கீழ்வரை ஒருமுறை பார்த்துக் கொண்டேன். வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக் காத்து இருந்தேன்.

நான் ஏற வேண்டிய பேருந்து வந்ததும் ஏறி ஜன்னல் சீட்டில் அமர்ந்துகொண்டேன். எனக்கு முன் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த இளம் வயது பெண்ணையும் ஆணையும் பார்த்து என் நினைவு பின்னோக்கிச் சென்றது.

பல வருடங்களுக்கு முன்பு, நான் என் தந்தையிடம் கூறி விட்டு, என் கல்லூரிக்கு ஸ்கூட்டியில் கிளம்பினேன். நான் பாரதியார் கல்லூரியில் பி.காம்(சி.ஏ) இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன்.

கல்லூரிக்கு செல்லும் வழியில் ஒரு இடத்தில் மக்கள் கும்பலாக நின்று கொண்டிருந்தனர். நான் சென்று என்னவென்று பார்த்தேன்.

அங்கு ஒரு இளைஞன், 6 அடி உயரம் நல்ல வட்டமான முகம், மாநிறத்தில் பார்ப்பதற்கு கல்லூரி மாணவன் போல் இருந்தான். அவன் ஒருவனை அடித்துக் கொண்டிருந்தான். அடிவாங்கியவனுக்கு வயது முப்பதுக்குள் இருக்கும்.

நான் என்னவென்று விசாரித்தபோது, அந்த முப்பது வயது இளைஞர் ஒரு பெண்ணின் மீது ஆசிட் ஊற்ற முயற்சி செய்தான் என்றும், அந்த கல்லூரி இளைஞன் தடுத்து, அவனை அடித்துக் கொண்டு இருப்பதாகவும் கூறினார்கள். பின்னர் போலீஸ் வந்து அந்த 30 வயதுடைய இளைஞனைக் கைது செய்து சென்றுவிட்டனர்....

பிறகு நான் காலேஜ் சென்று விட்டேன். சில நாட்களில் நான் அதை மறந்தும் விட்டேன்.

சில நாட்கள் கழித்து, ஒரு நாள் கல்லூரியில் ஏதோ சண்டை என்று எல்லோரும் சென்று வேடிக்கைப் பார்த்தனர். என்னையும் என் தோழி இழுத்துச் சென்று விட்டாள்.

அங்கு இருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். நான் அவர்களில் ஒருவன் எங்கோ பார்த்த மாதிரி ஞாபகம். ஆ ஞாபகம் வந்துவிட்டது. நடுரோட்டில் சண்டை போட்டவன், அவனேதான். என் தோழிதான் அவனைப் பற்றிக் கூறிக் கொண்டே வந்தாள். "அவன் பெயர் கார்த்திக் என்றும் அவன் இங்குதான் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படிக்கிறான்.

"இப்போது அவன் சண்டை போடுவதற்குக் காரணம், ஒரு பெண்ணிடம் அந்த பையன் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும், அதனால் தான் கார்த்திக் அவனை அடித்துக் கொண்டிருப்பதாகவும்" கூறினாள்.

மேலும், "அவன் யாருக்குத் துன்பம் என்றாலும் ஓடி வந்து உதவி செய்வான்..." என்று அவனைப் பற்றிப் புகழ்ந்து கொண்டே இருந்தாள். எனக்கும் அவள் கூறியதில் இருந்தே அவனுடன் பேச வேண்டும் என்ற ஆவல் வந்தது. ஆனால், அதை செயல்படுத்த முனையவில்லை. அதன் பின் எப்போதாவது அவனை கல்லூரியில் பார்ப்பேன்.

ஒருமுறை அம்மாவின் வற்புறுத்தலால் கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கு அந்த கார்த்திக்கை பார்த்தேன். ஆயிரம் முறை எனக்குள் பேசலாமா? வேண்டாமா? என கேள்வி கேட்டுவிட்டு, பின் அவனிடம் பேசலாம் என முடிவெடுத்து பேச சென்றேன்.

அப்போது ஒரு மூதாட்டி கால் தவறி விழப்போனார். நான் அவரைக் கீழே விழாமல் பிடிக்கச் சென்றேன். அதற்குள் அவனும் வந்து விட்டான். இருவரும் சேர்ந்து அந்த மூதாட்டியை பிடித்துவிட்டோம். மூதாட்டியை அமர வைத்து தண்ணீர் கொடுத்து , ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தோம்.

பின் நான் தான் முதலில் அவனிடம் பேசினேன். என் பெயரை கூறினேன். அவன் சிரித்துக்கொண்டே அவன் பெயரை கூறினான். பிறகு, நானும் அவன் படிக்கும் அதே கல்லூரியில் தான் படிக்கிறேன் என்று கூறினேன். பின் இருவரும் சிறிது நேரம் பேசி விட்டு கிளம்பி விட்டோம்.

மீண்டும் அடுத்த வாரம் அதே கிழமையில் கோவிலுக்கு சென்றேன், அவன் வருவான் என்ற ஆசையில். அன்றும் அவன் வந்திருந்தான். எதேர்ச்சையாகப் பார்ப்பதுபோல பேசினேன், அவனும் பேசினான். பின் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசினோம், நண்பர்களானோம்.

ஒருநாள் நான் அவனிடம் எனக்கு அவனை எனக்கு பிடிச்சுருக்கு என்றேன்." எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற உலகத்தில் இப்படித் தான் வாழ வேண்டும் என்று நினைக்கிற அவனுடைய கொள்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது" என்று சொன்னேன். அவனை காதலிப்பதாகவும் சொன்னேன். அவன் ஒத்துக்கவில்லை, மறுத்துவிட்டான். பிறகு நீண்ட நாட்கள் அவனுடன் போராடி அவனை என் காதலை ஒத்துக்க வைத்தேன்.

நாட்கள் வேகமாக சென்றது. அவனும் நானும் ஒரே கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தோம். என் காதல் எப்படியோ என் வீட்டுக்கு தெரிந்து விட்டது. என் தந்தை எதிர்த்தார் போராடினேன் முடியவில்லை.

என் தந்தை அவனை கொன்று விடுவேன் என மிரட்டினார். என் அம்மாவிடம் வெளியே சென்று வருவதாக கூறி சென்று அவனை சந்தித்தேன்.

அவன் வீட்டிலும் அதே நிலைமைதான். என் தந்தை ஆட்கள் அங்கு சென்று அவன் பெற்றோரை மிரட்டி வந்துள்ளதைக் கூறினான். என்னால் அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் எதுவும் நேர்ந்து விடக்கூடாது என பயந்து அவனிடம் பிரிந்து விடுவோம் என்றும், அவனை ஒரு நல்ல பெண்ணை பார்த்து கல்யாணம் செய்துகொள்ள கூறிவிட்டேன்.


அதுதான் அவனைக் கடைசியாகப் பார்த்தது. இப்போது 12 வருடங்களுக்குப் பிறகு பார்க்கப் போகிறேன். யாரோ எனக்கு தெரிந்தவர் மூலம் என் எண்ணைஅழைத்து சந்திக்க வரச்சொன்னான். அங்குதான் இப்போது சென்று கொண்டிருக்கிறேன்.

நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் இறங்கி அந்த ஹோட்டலை நோக்கி முன்னேறினேன். ஹோட்டலில் நுழைந்து ஒரு டேபிளில் அமர்ந்தேன். வாட்சைப் பார்த்தேன், நேரம் 9.30 எனக் காட்டியது. நேரம் ஆக ஆக என் இதயத்துடிப்பு அதிகமானது.


எனக்குப் பின்னே இருந்து என ஒரு குரல் கேட்டது "ஹாய்! சுகன்யா..." என்று குரல் கேட்க திரும்பி பார்த்தேன், கார்த்திக் நின்று கொண்டிருந்தான்.

அவன் ஆளே மாறி இருந்தான். தாடி வைத்து கொஞ்சம் பருமனாக, கண்ணாடி அணிந்து, இருந்தான். அவன் கூட ஒரு குழந்தை வந்து இருந்தது, பார்க்க அழகாக இருந்தாள். அவள் வயது 5 இருக்கும்.

முதலில் அவன்தான் பேசினான். "எப்படி இருக்க சுகன்யா?" என்றான்.

"நான் நல்லா இருக்கேன்..." என்றேன். சில பல நல விசாரிப்புகளுக்கு பிறகு, "கல்யாணம் ஆயிடுச்சா..?" என்று என்னை பார்த்து கேட்டான். இல்லை என்றேன்.

அவன், "எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, இது என் குழந்தை" என்று அறிமுகப்படுத்தினான்.

அந்த குழந்தை என்னைப் பார்த்து சிரித்தது, அதன் பெயர் என்ன என்று கேட்டேன். அது மழலை தமிழில் சுகன்யா என்றது. நான் முதலில் அதிர்ந்து, பின் சமாளித்து நார்மலாக பேசினேன்.

"இங்க வா என்கிட்ட..." என்று கையை நீட்டினேன், அவள் என் மடியில் வந்து அமர்ந்துகொண்டாள். கார்த்திக் தான் நிறைய பேசினான். என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினான். நானும் தலையை ஆட்டினேன். பின், "நான் எப்படி இருக்கேன்னு கவலை பட்டுட்டு இருக்காத, நான் நல்லா இருக்கேன்..." என்றான.

"எனக்கு உன்னை பற்றி தெரியும்.." என்றான். நான் அதிர்ச்சியாகி விட்டேன். பின் இருவரும் நிறைய பேசினோம். கிளம்ப வேண்டிய நேரமும் வந்தது. அவன் என்னிடம், "சீக்கிரம் திருமணப் பத்திரிக்கை அனுப்பு..." என்று கூறினான்.

நானும் சரி என்று தலையாட்டினேன். கிளம்பும்போது அந்த குட்டி சுகன்யா என்னை குனிய சொல்லி என் கன்னத்தில் முத்தமிட்டாள். என் உடம்பு சிலிர்த்து விட்டது. அதுதான் என் வாழ்வின் முதல் முத்தம், என்னை சிலிர்க்க வைத்தது. பின் இருவரும் கிளம்பி விட்டோம்.

நான் ஆபீஸ் போக மனமில்லாமல் வீடு வந்து சேர்ந்தேன். இத்தனை வருஷமா என் மனதில் இருந்த பாரம் குறைந்த மாதிரி இருக்கு..... ஏதோ நிம்மதி மனசு முழுக்க பரவியிருக்கு. சாப்பிடத் தோணவில்லை, பெட்டில் படுத்தேன். இன்றிரவு நான் நிம்மதியாக தூங்குவேன் என்று நினைக்கிறேன்.

சுபம் ❤️
 
Well-known member
Messages
354
Reaction score
272
Points
63
நைஸ். ஆனால் சுகன்யா பாவம்
 
Top