• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

பொழுது - 26 💖 (முன் இறுதி அத்தியாயம்)

Administrator
Staff member
Messages
1,343
Reaction score
4,066
Points
113
பொழுது – 26 💖
நிவின் சுதியைக் கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொண்டான்.இரண்டு வாரங்கள் முடிவடைந்திருக்க, இருவரும் மீண்டும் மருத்துவரைச் சந்திக்க சென்றிருந்தனர்.
“குட் சுதிரமாலா... இப்போ உங்களோட ஹெல்த் இம்ப்ரூவ் ஆகியிருக்கு. வீ கேன் கன்டினியூ திஸ் ட்ரீட்மெண்ட். பெய்ன் கில்லர் டேப்லெட்ஸ் போதும். கால்சியம் டேபலெட் மட்டும் கன்டினியூ பண்ணுங்க. இப்போ பெயின் இருக்கா?” என அவர் கேட்க,
“இல்ல டாக்டர். காலைல எக்ஸர்ஸைஸ் பண்ணா, அன்னைக்கு டே நல்லா இருக்கு. எந்த வலியும் தெரியலை டாக்டர்!” என்றாள்.
“குட்... உங்களுக்கே தெரியுது இல்ல. சோ, இனிமே லைஃப் லாங்க் டெய்லி ஒரு ஃபைவ் மினிட்ஸ் ஸ்பெண்ட் பண்ணி நீங்க எக்ஸர்ஸைஸ் செய்ங்க. வலியே இருக்காது. நெக்ஸ்ட் மந்த் செக்கப் வாங்க. அப்போ இன்னும் இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும்!” என அவர் கூற, சுதி புன்னகை முகமாய்த் தலையை அசைத்தாள்.
“டாக்டர், ஸ்டீராய்ட்ஸ் வெய்ட் கெய்ன் காஸ் பண்ணும் தானே டாக்டர்!” நிவின் இடைபுக,
“யெஸ் மிஸ்டர் நிவின். கண்டிப்பா வெயிட் கெய்ன் ஆகியிருக்கும். லாஸ்ட் டைம் பார்த்ததை விட உங்க வொய்ஃப் இப்போ வெயிட் கூடி இருக்காங்க. ஐ கேன் சீ த விசிபிள் சேஞ்சஸ். பட், பெருசா பாதிப்பு இல்லை. எல்லா டேப்லெட்ஸ்க்கும் சைட் எஃபெக்ட்ஸ் உண்டு. இனி டேப்லெட் டிஸ்கன்டினியூ பண்ணிடலாம்!” என அவர் பேசும்போதே சுதி குனிந்து தன்னை ஒருமுறை சோதித்துக் கொண்டாள். அவளுக்கு சரியாய் வேறுபாடு கண்டறிய முடியவில்லை. அவரிடம் நன்றி கூறி இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
உடை மாற்றி வந்த சுதி கண்ணாடியின் முன்பு நின்று முன்னும் பின்னும் தன்னைப் பார்த்தாள். நிவின் அறைக்குள் நுழைந்தவன் அவளைக் கேள்வியாகப் பார்க்க, “வெயிட் போட்டுட்டானாங்க. சொல்லவே இல்ல?” என முகத்தைக் கோணிக் கொண்டு கேட்டாள். இப்போதுதான் உப்பியிருந்த கன்னங்களும் கொஞ்சம் சதை வைத்திருந்த உடலும் அவளது விழிகளுக்குப் புலப்பட்டிருந்தன.
“ஹம்ம்... லைட்டா வெயிட் போட்டிருக்க சுதி...” என்றவன் துணிக் கூடையிலிருந்த துவைக்காத துணிகளை இயந்திரத்தில் துவைக்க எடுத்துச் சென்றான்.
“ஓ... அப்போ நான் குண்டாகிட்டேனா? அழகா இருக்கேனா? முன்ன எல்லாம் ஒடிச்சா உடைஞ்சுடுவன்னு எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. இப்போதான் கன்னம் புசுபுசுன்னு இருக்கு. பார்க்குற மாதிரி இருக்கேன்!” என முகம் மலரக் கூறினாள் பெண்.
“குண்டா இருக்கோம், ஒல்லி இருக்கோம்ன்றது முக்கியம் இல்ல சுதி. ஹெல்தியா இருக்கதுதான் இம்பார்டெண்ட். சோ, ஹெல்த்தை இம்ப்ரூவ் பண்ணா போதும்!” என கணவன் பதிலளித்தான்.
“ஹம்ம்... ஆனாலும் இருபத்தி நாலு மணி நேரம் சும்மா இருந்தா வெயிட் போடத்தாங்க செய்யும்!” எனக் கணவனை மென்மையாய் முறைத்தாள் பெண்.
“நீதானே கல்யாணம் முடிஞ்சதும் வேலைக்குப் போகாம வீட்ல ஜாலியா இருக்கணும்னு சொன்ன?” சின்ன சிரிப்புடன் கேட்டான் நிவின்.
“ஹம்ம்... ஆமாங்க. பட் வீட்ல இருக்க வேலையைக் கூட செய்ய விட மாட்றீங்க நீங்க. செம்ம போரா இருக்குங்க!” என்றாள் அலுப்பாய்.
“இன்னும் டூ மந்த்ஸ்க்கு உனக்கு ரெஸ்ட் சுதி. டாக்டர் நீ ஹெல்தியா இருக்கன்னு சொல்லட்டும். தென் வீட்டு வேலையை ஷேர் பண்ணி செய்யலாம்...”
“உங்களைப் பார்த்தாதான் எனக்கு அதிசயமா இருக்கு. அம்மா அண்ணனையும் அப்பாவையும் கிட்சன்குள்ள கூட விட மாட்டாங்க. அவங்களைப் பார்த்தே பழகுன எனக்கு நீங்க எல்லாத்தையும் செய்யவும் என்ன சொல்றதுன்னு தெரியலை. பட், நீங்கதாங்க மிஸ்டர் பெர்பெக்ட் எல்லா விஷயத்துலயும்...” எனப் பாராட்டிய மனைவியைப் பார்த்து இவன் முறுவலித்தான்.
“ம்கூம்... உங்ககிட்டேயும் ஒரு குறை இருக்கு. உங்களுக்குப் பிடிச்சவங்க கிட்டே மட்டும்தான் பேசுறது. மத்தவங்கன்னா மூஞ்சியைக் காட்றது. உர்ருன்னு இருக்கது. அன்னைக்கு மேரேஜ்க்கு வர முடியலைன்னு ஒரு அம்மா குடும்பத்தோட வந்தாங்க இல்ல. அப்போ ரெண்டு வார்த்தைப் பேசுனா உங்க முத்து உதிர்ந்துடுமா என்ன? பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி உக்காந்து இருக்கீங்க?” என முறைத்த சுதியை அசட்டை செய்தவன், மதியத்திற்கு தாமதமாய் சமைக்கலாம் என யோசித்துவிட்டு கூடத்திற்குச் சென்று தொலைக்காட்சியை உயிர்ப்பித்து ஏதோ படத்தை ஒலிக்க விட்டான். செய்தி வைத்தால் எங்கிருந்தாலும் சுதிக்கு மூக்கு வியர்த்துவிடும். அதனாலே இப்போதெல்லாம் நிவின் அலைபேசியில் அன்றாட நிகழ்வுகளைப் பார்த்துக் கொள்ளுகிறான்.
சுதியும் அவனுக்கருகே சென்று அமர்ந்தாள். சிறிது நேரத்திலே அவள் அப்படியும் இப்படியும் அசைந்து அமர, “சுதி... உட்கார கம்பர்டபிளா இல்லைன்னா, படுத்துக்கோ...” என்றான் நிவின். அவளும் முதுகு வலியைக் குறைக்க, நிவின் மடிமீது தலைவைத்துப் படுத்தாள். அவன் கையை எடுத்தவள் தன் இடையில் வைத்துவிட்டு அசட்டுச் சிரிப்பை உதிர்க்க, அவன் முறுவலுடன் மனைவியின் இடையைப் பிடித்துவிட்டான். சுகமாய் இருந்தது பெண்ணுக்கு.
“ஒருநாள் இடுப்பை பிடிச்சுவிட்டு பழகிட்டீங்க. வலிக்கும் போது இப்படி பிடிச்சுவிட்டா சுகமா இருக்குன்னு உங்களைப் படுத்திட்டு இருக்கேன் பாருங்க!” என்றாள் அவன் முகம் பார்த்து தயங்கி. நிவின் புன்னகைத்தான்.
“சிரிச்சா என்ன அர்த்தமாம்?” அவள் முறைக்க, “பத்து நிமிஷம் பிடிச்சு விட்றதுல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லைன்னு அர்த்தம்!” என்றான் அவன்.
“ஹம்ம்...இன்னைக்கு லீவ். அதனால பிடிச்சு விடுறீங்க. வொர்க் ப்ரம் ஹோம்ல இருக்கீங்க. லேப்டாப்ல க்ளையண்ட் மீட்டிங்க்ல இருக்கும்போது வந்து வலிக்குதுன்னு சொன்னா, என்ன பண்ணுவீங்க?” எனத் துடுக்காய்க் கேட்டாள் மனைவி.
சில நிமிடங்கள் யோசித்தவன், “நீ என்ன நினைச்சு வச்சிருக்க?” எனக் கேட்டான்.
அவனை முறைத்தவள், “ஒரு கேள்வி கேட்டா, அதுக்குப் பதில் சொல்லாம மறுபடியும் என்கிட்டவே கேள்வி கேளுங்க!” என அவனை கடிந்தவள், “நீங்க முதல்ல பதிலை சொல்லுங்க...” என்றாள்.
“ஹம்ம்...சேலரி வாங்குறோம். சோ பாஸ்க்கு லாயலா இருக்கணும். அதனால மீட்டிங் முடிஞ்சு வந்து பத்துக்கு இருபது நிமிஷம் இடுப்பைப் பிடிச்சுவிடுவேன்!” என்றவனை வெட்டவா குத்தவா எனப் பார்த்தாள் மனைவி.
“அதானே பார்த்தேன். சச் அ அன்ரொமான்ட்டிக் பெர்சன் நீங்க. ஒரு பேச்சுக்காவது ஐயோ என் பொண்டாட்டிதான் முக்கியம்னு சொல்ல வாய் வருதா?” எனக் கடுகடுத்தாள் இவள்.
“என்னால செய்ய முடியாத எதையும் நான் உன்கிட்ட சொல்ல மாட்டேன் சுதி. ஹோப் குடுத்து அதை ப்ரேக் பண்ண கூடாது. அது தப்பு!” என்றவனைப் பெண் முறைக்க முயன்று தோற்றாள். கணவனின் குணம் பற்றி அவள் அறிந்ததே.
“என் மாமியார், உங்க அத்தை ரொம்ப நல்லா வளர்த்துருக்காங்க உங்களை!” என நொடித்தவள், “போதும் விடுங்க...” என அவன் கையைத் தட்டிவிட்டு உடையை சரிசெய்து கொண்டாள். சுதிக்கு
நிவினுடைய அத்தனைக் குணங்களும் பிடித்தே இருந்தது. எந்த வகையிலும் யாரையும் காயப்படுத்தக் கூடாது, பொய் சொல்ல கூடாது, நேர்மையாய் இருக்க வேண்டும் என்பதெல்லாம் அவனுடைய சித்தாந்தம் என இந்த சில நாட்களில் அறிந்திருந்தாள்.

அவர்கள் இருவரும் படம் பார்த்துக் கொண்டிருக்க, “மச்சான்... என்ன பண்ற டா?” எனக் கேட்டவாறே பாலாஜி உள்ளே நுழைந்திருந்தான். அவன் இப்படி நுழைவான் என எதிர்பாராத சுதி தடுமாறி நிவினின் மீதிருந்து எழுந்தமர்ந்தாள்.
பாலாவும் இதை எதிர்பார்க்கவில்லை போல. நண்பனுக்கு திருமணம் முடிந்துவிட்டதை மனம் தாமதமாகவே உரைக்க, அவர்களை சங்கடமாய்ப் பார்த்தவன், “சாரி டா...சாரி சிஸ்டர்!” எனப் புன்னகைத்தான்‌. சுதி எதுவும் கூறாது உள்ளே சென்றுவிட, இவன்தான் தவறு செய்த பாவனையில் நின்றிருந்தான்.
“இட்ஸ் ஓகே டா... விடு!” என்ற நிவின் புன்னகைக்க, ஆரோன், நந்தனா, அக்ஷா என மூவரும் உள்ளே நுழைந்தனர். ஆண்கள் இருவர் மட்டும் வந்திருப்பார்கள் என்றுதான் நிவின் நினைத்தான். பெண்களை எதிர்ப்பார்க்கவில்லை‌. நந்தனா தன் மீது கோபமாய் இருந்தாளே என அவன் யோசிக்க, அக்ஷா தயக்கமாய் அவன் முன்னே வந்து நின்றாள்.
“சாரி நிவின்... ஐ யம் எக்ஸ்ட்ரீம்லி சாரி. நான் அன்னைக்கு ரொம்ப சைல்டிஷ்ஷா நடந்துகிட்டேன். ஐ க்நோ, அது தப்புதான். பட் என்னோட ஃபீலிங்க்ஸ் ஹெர்ட் ஆகவும் அப்படி பிகேவ் பண்ணிட்டேன். லேட்டர் ஐ ரியலைஸ்ட் எவ்ரிதிங்க். லெட் பீ ஃப்ரெண்ட்ஸ் அகைன்!” என அவள் கையை முன்னே நீட்ட, நிவினால் முகத்தைத் திருப்பிச் செல்ல முடியவில்லை.
“இட்ஸ் ஓகே அக்ஷா... எப்பவுமே நீ எனக்கொரு குட் ஃப்ரெண்ட். ஹோப் திஸ் கன்டினியூஸ் வெல்!” என அவனும் முறுவலிக்க, நந்தனா இருவரையும் பார்த்தாள்.
“எப்படியோ ரெண்டு பேரையும் சமாதானம் செஞ்சுட்டேன். உங்க ரெண்டு பேருக்கு இடையில இருக்க பஞ்சாயத்துல என்னை இழுக்காதீங்க. செம்ம காண்டாவுது!” என்றவள், நிவினை முறைத்து விட்டு இருக்கையில் பொத்தென அமர, இவன் முகம் மலர்ந்தது. வேண்டுமென்றே அவளருகில் இடிப்பது போல அமர்ந்தான் இவன்.
“போடா... போ!” என அவள் முகத்தை சிலுப்ப, அவளாக இறங்கி வந்ததில் நிவினும் தன்முனைப்பை விட்டுவிட்டு அவளுடனான பிணக்குகளை கரைத்திருந்தான். நீண்ட நாட்கள் கழித்து இப்படியொரு பொழுது வாய்க்கவும், அவர்கள் புன்னகையுடன் பேசி சிரிக்க, சுதி அனைவருக்கும் குளிர்பானம் எடுத்து வந்து கொடுத்தாள்.
“சாரி சிஸ்டர்... சாரி!” என பாலா அப்போதும் மன்னிப்பை வேண்ட, “இட்ஸ் ஓகே!” என அவள் தலையை அசைத்தான்.
“வந்தோடனே என்ன சேட்டை பண்ண டா!” என நந்தனா தமையனைக் கேட்க, அக்ஷா பழக்க தோஷத்தில் சமையலறைக்குள் விறுவிறுவென செல்ல, சுதி யோசனையோடு பின்னே சென்றாள்.
“என்ன பண்றீங்க அக்ஷா?” இவள் கேட்க, பதிலளிக்க வேண்டுமென முகத்தைத் தூக்கியவள், “நிவினுக்கு ப்ரெஷ் ஜூஸ் ப்ரிபேர் பண்றேன். ஸ்டில் ஹீ இஸ் மை குட் ஃப்ரெண்ட் யூ க்நோ...” என அவள் கூற, சுதி உதட்டைப் பிதுக்கினாள்.
“யெஸ்... யெஸ், இப்போன்னு இல்ல, என்னைக்கும் அவரு உங்களுக்கு குட் ஃப்ரெண்ட் தான் அக்ஷா. நான் அதை இல்லேன்னு சொல்லலையே!” என்ற சுதி அவள் கையிலிருந்த ஆரஞ்சுப் பழத்தை வாங்கினாள்.
“தேங்க் யூ அக்ஷா... என் ஹஸ்பண்ட் மேல உங்களுக்கு இருக்க அக்கறைக்கு. பட் அவர் முன்ன பேச்சிலரா இருந்தாரு நீங்க ஃப்ரெண்ட்ஷிப்பா இதெல்லாம் செஞ்சீங்க. இப்போதான் அவருக்கு மேரேஜ் ஆகி பொண்டாட்டின்னு நான் ஒருத்தி இருக்கேனே. உங்களுக்கு எதுக்குங்க கஷ்டம். நீங்களே ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ணி இருக்கீங்க. போய் பேசி என்ஜாய் பண்ணுங்க!” என சுதி நாசுக்காக கூறிவிட, அக்ஷாவின் முகம் கறுத்தது. சுதியின் மூக்கை உடைந்துவிடும் நோக்கோடு தான் அவள் உள்ளே நுழைந்தாள். ஆனால் தான் நினைத்ததற்கு எதிர்மாறாக நடக்கவும், அவளது முகம் விழுந்து போனது.
அக்ஷா சில அடிகள் நகர, “அக்ஷா ஒன் மினிட், உங்ககிட்ட சில விஷயம் க்ளாரிஃபை பண்ணணும்!” என்ற சுதியின் குரலுக்கு மற்றவள் நின்றுவிட்டாள்.
“நான் இதை சொன்னா உங்க மனசுக் கஷ்டப்படும்தான். பட் இருந்தாலும் சொல்லிட்றேன். நீங்க என்ன நினைச்சு இங்க வந்துருக்கீங்கன்னு எனக்குத் தெரியாது. நல்லவிதமா வந்திருந்தா, ஓகே. பட் நடந்ததை மனசுல வச்சிட்டு எதாவது தகிடு தத்தம் பண்ணலாம்னு நினைக்க வேணாம். நான் அமைதியா அட்ஜஸ்ட் பண்ணி போனா கூட, என் புருஷனுக்கு அதெல்லாம் பிடிக்காது. அவர் எல்லாத்துலயும் நேர்மையா இருக்கணும்னு நினைக்கிறவரு. அதான் நீங்க சாரி கேட்டதும் அக்செப்ட் பண்ணி ப்ரெண்ட்ஷிப்பை புதுப்பிச்சிட்டாரு. அதே சமயம் நீங்க தப்பான இன்டென்ஷன்ல வந்திருந்தா, அவரோட கோப முகத்தைதான் பார்க்க வரும். ஹோப் யூ அண்டர்ஸ்டான்ட் அக்ஷா!” என சுதி வலுக்கட்டாயமாக உதட்டைப் பிரித்துப் புன்னகைக்க, “ஷட் அப் சுதி. நான் ஒன்னும் அடுத்தவ புருஷனுக்கு ஆசைபடுறவ இல்லை. நிவின் இனிமே எனக்கு ஃப்ரெண்ட் மட்டும்தான்!” என்றாள் ரோஷத்துடன்.
“இட் சவுண்ட்ஸ் குட். கீப் இட் இன்‌ யூவர் மைண்ட்!” என அவள் பிழிந்த பழச்சாற்றை எடுத்துக்கொண்டு சென்று நிவினுக்கு கொடுத்தாள்.
அக்ஷா அவளை முறைத்துக் கொண்டே பாலாவின் அருகில் அமர்ந்தாள்.
சுதிக்கு என்ன செய்வது எனத் தெரியாது அங்கே நின்று பின் அறைக்குள்ளே நுழையப் போக, “சிஸ்டர்... ஜாய்ன் வித் அஸ்!” என ஆரோன் அவளை அழைத்தான்.
“இல்ல... நீங்க பேசிட்டு இருங்க!” அவள் தன்மையாய் மறுக்க, நிவின் மனைவி கையைப் பிடித்திழுத்து அருகே அமர்த்தி அவள் தோளில் கையைப் போட்டுக் கொண்டான். சுதி அவர்கள் பேச்சை மட்டும் அவதானித்தாள். பெரிதாய் கலந்து கொள்ளவில்லை. பாலாவும் ஆரோனும் அவ்வப்போது அவளைப் பேச்சில் இழுக்க, ஓரிரு வார்த்தைகள் பதிலளித்தாள்.
மதிய உணவை சமைக்காது வெளியே வாங்கி அனைவரும் உண்டு முடித்தனர். சுதி நீண்ட நேரம் உட்கார்ந்தே இருந்ததில் இடுப்பு வலிப்பது போல தோன்றவும் அவள் அசைந்து அமர, நிவின் பேசிக் கொண்டிருந்தாலும் மனைவியைக் கவனித்தான் போல.
“சுதி... ரூம்க்குப் போ!” என அவன் எழுந்து சமையலறைக்குள் செல்ல, இவள் அனைவரிடமும் மரியாதை நிமித்தமாக தலையை அசைத்துவிட்டு அறைக்குள் நுழைய, நிவின் கையில் தண்ணீருடன் வந்தான்.
“கால்சியம் டேப்லெட் போடலை நீ. அதைப் போட்டுட்டு ரெஸ்ட் எடு. ரொம்ப நேரம் உட்கார்ந்தா யூ ஃபீல் அன்கம்பர்டபிள்...” என அவன் கூற, மாத்திரையை விழுங்கியவள், “இல்லங்க... நான் ஓகேதான். வெளிய உக்கார்றேன்!” என்றாள் சுதி.
“நோ சுதிரமாலா... நீ ரெஸ்ட் எடு!” அவன் அழுத்திக் கூற, “சரி... சரி. நான் படுக்கிறேன். நீங்க ரொம்ப நேரம் உள்ள இருக்காதீங்க. வெளிய எல்லாரும் இருக்கவும் சங்கடமா இருக்கு!” என மென்முறைப்புடன் அவனை அனுப்பிய சுதி, படுத்ததும் உறங்கிப் போனாள். மாலை நான்கைத் தொட்டதும் தேநீர் அருந்திவிட்டு அவர்கள் விடை பெற்றனர்.
பாலு மகேந்திரா அழைக்கவும் நிவின் அவரிடம்‌ பேசினான். பின் அலுவல் சம்பந்தப்பட்ட அழைப்பு வர, சிறிது நேரம் அந்த வேலையில் மூழ்கி இருந்தான். மணி ஆறாக சுதி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். இவன் வெந்நீர் வைத்து பருத்தி துணியை எடுத்து வந்து இடுப்பிலும் காலிலும் ஒத்தடம் கொடுக்க, மனைவியின் உறக்கம் கலைந்திருந்தது. இருந்தாலும் அப்படியே கண்களை மூடிப் படுத்திருந்தாள். மருந்தையும் தடவிவிட்டு அவன் அகல, இவள் எழுந்து முகம் கழுவி வர, சூடாய் தேநீரைக் கையில் கொடுத்தான் நிவின். அவனைக் கண்களில் மெல்ல நிரப்பிக் கொண்டே சூடாயிருந்த தேநீரை ஒரு மிடறு விழுங்கியவள் பால்கனிக்கு வந்தமர்ந்தாள்.
வானம் கொஞ்சம் கொஞ்சமாக இருள் கவிழத் தொடங்க, சுதி மெதுவாய் கண்களை சாலையில் மேயவிட்டபடியே கோப்பையைக் காலி செய்து மேஜையில் வைத்தாள். பின்னர் காலை நன்றாக நீட்டியமர்ந்தவள் பார்வையை வீட்டில் ஓட்ட, நிவின் சமையலறைக்குள் இருந்தான்.
வலது கைக்கும் தோள்பட்டைக்கும் இடையே அலைபேசி புகுந்திருக்க, யாருடனோ புன்னகைத்துப் பேசிக் கொண்டே மற்ற கையால் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தான். வெளீரென வெண் பற்கள் மின்னின. தலைக்கு குளித்திருப்பான் போலும். அவனைப் போலவே அடங்காத கேசம் அங்குமிங்கும் பறந்தது. இலகுவான மேல் சட்டை ஒன்றும் முட்டி வரை ஷார்ட்ஸ் வகையிலான கால்சராயும் அணிந்திருந்தான்.
பொறுமையாய் அவனை அளந்தாள் சுதிரமாலா. என்னவோ மனமெல்லாம் இந்த நிவின்தான் இப்போது நிறைந்து கிடந்தான். அவனொன்றும் அவளைக் கவர வேண்டும் என்று எவ்வித மெனக்கெடலும் இடவில்லை. அன்பாய் அனுசரணையாகப் பார்த்துக் கொண்டான். அவ்வளவே, பசப்பு வார்த்தைகள் இல்லை. மயக்கும் பேச்சும் செய்கையும் இல்லை. தான் இப்படியென்பதை உணர்த்திக் கொண்டிருந்தான். மற்றபடி இந்த நிவின் அவளுக்கென்று பார்த்து பார்த்து செய்யும் அன்பென்ற வார்த்தையில்தான் பெண்ணின் மனம் பரிபூரணமாக அவனிடம் சரணடைந்திருந்தது.
அன்பு என்ற வார்த்தையின் பிடியில் சரணடையும் அற்ப மனிதர்கள் நாம் எல்லோரும். அதற்கு சுதிரமாலா மட்டும் என்ன விதிவலிக்கா? அவளும் இது போலொரு நேசத்தின் பிடியில்தானே வாழ்வை பறிகொடுக்க வேண்டும் என்று நாளொரு வண்ணமும் பொழுதும் மேனியுமாய் உருப்போட்டிருந்தாள். அவளைச் சுற்றியிருந்த தேவதைகள் ததாஸ்து சொல்லிவிட்டனர் போலும் என நினைத்ததும் இவளுக்கு சிரிப்பு வந்தது.
இப்படி ஆற அமர தூங்கியெழுந்து எந்த வேலையும் அற்று சோம்பேறித் தனமாய் வேடிக்கைப் பார்ப்பது கூட சுகமாய்த்தான் இருந்தது. வேலை வேலை என்று ஓடிய ஓட்டம் மொத்தமும் நிவின்‌ என்ற மனிதனிடம் இளைப்பாறிக் கொண்டிருந்தது.
‘அட் தி எண்ட் ஆஃப் தி டே, வீ ஆல் நீட் ஒன் சோல் டூ ஷேர், க்ரை, லவ். தட்ஸ் இட்!’ என அவள் உதடுகள் முணுமுணுத்தன.
சுதிக்கு எப்போதும் இந்த நிவின் ஒரு புதிர் பெட்டகம்தான். பார்த்த நாளிலிருந்து ஒரு அனுசரணையான பார்வை, பேச்சு, நேசம் நிறைந்த விழிகள் என எதுவுமே இல்லை. முசுட்டு முகத்துடன் சுற்றியவனை இவளுமே போடா என்றுதான் பார்த்து வைத்தாள். அப்படியிருக்கையில் திடீரென ஒருநாள் வந்து காதலிக்கிறேன், பிடித்திருக்கிறது என்றவனை ஒரு சதவீதம் கூட அவளால் நம்ப முடியவில்லை. எந்த ஒரு முகாந்திரமும் அற்று எந்த வகையில் இவள் அவனை நம்ப என மனம் கணவனுக்கு எதிராக அப்போது பெரிய போரையே தயார் செய்து வைத்திருக்க, மறுநாள் வீடு வரை வந்து அனைத்தையும் நீர்த்துப் போகச் செய்திருந்தான்.
நீதான் வேண்டும்... நீ மட்டும் தான் வேண்டும் என்ற வார்த்தைகளை அதன்பின்னே கொட்டிக் கிடக்கும் அன்பை சுதியால் நிராகரிக்க முடியவில்லை என்பதே உண்மை. தாய், தந்தையற்று நிர்க்கதியாக உறவினர் வீட்டில் இத்தனை நாட்கள் வாழ்ந்தவளுக்கு தன்னை மட்டுமே நேசிக்கிறேன் என வந்து நிற்கும் இந்த தூய அன்பை நிராகரிக்க துளி கூட மனதில்லை. பிடித்தம் என்ற வார்த்தையின் அடிநாதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இவனது வாழ்வில் நுழைந்திருந்தாள். திருமணத்திற்கு முன்பு தன்னை நேசித்தவன் என்றொரு எண்ணம் மட்டும்தான் அவளிடம். ஆனால் இப்போது அவளது அகமும் புறமும் நிவின் மட்டும்தான் நிறைந்து கிடந்தான்.
இதோ அதட்டி மாத்திரையைக் கொடுத்து உறங்கச் சொல்லிய அழுத்தம் மிகுந்த வார்த்தைகளுக்குப் பின்னிருந்த அன்பை அவளால் மட்டுமே ஸ்பரிசிக்க முடிந்தது. நுரைத்துப் பொங்கிய தேநீர் குவளை முழுவதும் நிவின்தான் வாசம் செய்தான். சந்திராவுடன் இருக்கும் போது வேலைக்குச் செல்வதால் அவளை இரு பெண்களும் வேலை ஏவ மாட்டார்கள். ஆனாலும் இவளாக இழுத்துப் போட்டு செய்வாள். ஆனால் இங்கே அப்படி எந்தக் கட்டாயமும் இல்லை. இது அவளுடைய வீடு‌. அவளுக்குப் பாத்தியப்பட்ட நிவினின் இருப்பிடம். அவளுக்கென்றிருக்கும் ஒரு ஜீவனின் வீடு முழுவதும் இப்போது அவளது வாசம்தான்.
கடந்த பதினைந்து நாட்களாக வேலை செய்யாமல் உடம்பு சுகம் கண்டிருந்தது. எல்லாம் இவரால் என மனம் கணவனை மென்மையாய்க் கடிந்தாலும், இப்போதிருக்கும் இந்த சுதந்திரத்தை ஆசையாய் அனுபவித்தாள். எவ்வித அவசரமும் ஆரவாரமும் அற்று சேம்பேறித் தனமாக எட்டைக் கடந்த கடிகாரத்தை முறைத்துப் பார்த்துவிட்டு மீண்டும் போர்வைக்குள் புகுந்து கொள்ளும் இந்த காலை வேளையை மனம் வெகுவாய் ரசித்தது.
எழுந்ததும் கை மேல் நிற்கும் சூடான குளம்பி முதல், சுடசுட கணவன் கையால் பரிமாறும் உணவு வரை அமிர்தம் அவளைப் பொறுத்தவரை. இடையை மென்மையாய் பிடித்துவிடும் கைகளுக்கு ஆயிரம் நன்றியுரைத்திருப்பாள்.
ஏன்? எப்படி? எதற்கு என் எந்தக் கேள்விக்கும் இடமளிக்காது நிவின் அவனுடைய கூட்டில் அவளை சேர்த்திருந்தான். இல்லையில்லை அன்பாய் அரவணைத்து அவளுக்காக அவன் கூட்டை தளர்த்தியிருந்தான். சில பல வரைமுறைகளைத் தகர்த்தியிருக்கிறான். இறைச்சி அவனுக்குப் பிடிக்காத போதும் மனைவிக்காகவென அவன் பார்த்து சமைத்துவிட்டு இவள் முகம் காண்கையில் எங்கோ ஓர் மூலையில் ஒட்டிக் கொண்டிருக்கும் தாயின் முகத்தோடு இவனது புன்னகையும் ததும்பி வழியும். பத்திரப்படுத்திக் கொண்டாள் பெண். முதலில் எல்லாம் நிம்மதியான வாழ்க்கையொன்றின் பிடியில் வாழ வேண்டும் என்பதுதான் பிரதான நோக்கம். ஆனால், இப்பொழுதெல்லாம் நிவினுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றொரு பேராசை மெதுவாய் மேலெழும்பி நிற்க, மனமுவந்து அதைத் தட்டிவிட முடியாது அதை ஏற்றிருந்தாள் பெண்.
நிவின், சுதிரமாலா, அவர்களது இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் என நினைக்கும் போதே மனமெங்கும் பரவசமும் தித்திப்பும் பரவிற்று. விழிகள் முழுவதும் தங்களுக்கான கனவுகள் கொட்டிக் கிடக்க, அதன் பிரதிபிம்பமாய் நிற்பவனை உள்ளமும் புறமும் நிறைத்துக் கொண்டாள் பெண்.
“சுதி, சாப்பிட வா!” என அவன் இருமுறை அழைத்ததும் நினைவு வந்தவள் எழுந்து சென்று உணவு மேஜையில் அமர்ந்தாள். இருவரும் உண்டு முடிய, நிவின் அனைத்தையும் சுத்தம் செய்ய, சுதி கட்டிலில் சென்று சாய்ந்து அமர்ந்தாள்.
வேலையை முடித்து வந்த நிவின், “தூங்கலையா மேடம்?” எனக் கேட்டுக் கொண்டே மடிக்கணினியை எடுத்து வந்து அவளருகே அமர்ந்தான்.
“தூங்கணும்ங்க!” என அவள் தலையை அசைக்க, “ஹம்ம்...” என்றவன் வேலையில் கவனமாக சுதி அப்படியே உடலைத் தளர்த்தி இறங்கிப் படுத்தாள். மெதுவாய் நகர்ந்து கணவனருகே சென்று படுத்தாள்.
“நிறைய வொர்க் இருக்காங்க?” இவள் அவனைப் பார்த்துக் கேட்க, “இல்லை மா... டென் மினிட்ஸ்!” என்றான்.

தலையை அசைத்தவள் அவனையே பார்த்திருக்க, “என்ன சுதி, வலிக்கிதா?” என அன்பாய்க் கேட்டான் கணவன். முதலில் இல்லையென தலையை அசைத்தவள் பின் ஆமாம் என்க, “ஃபைவ் மினிட்ஸ் சுதி. வந்துடுறேன்!” என்றவன் கூறியது போலவே ஐந்து நிமிடத்தில் மடிக்கணினியை அணைத்துவிட்டு மனைவியருகே படுத்தான்.
அவளது இடையை இவன் மெதுவாய் அமுக்க, “போதுங்க...” என அவள் நிவின் கையைப் பிடித்து தன்னோடு இறுக்கிக் கொண்டு கண்ணை மூடினாள்.
“ஏன் வாய்ஸ் டல்லா இருக்கு சுதி. இந்த மூளை என்ன யோசிக்குது?” நிவின் குரலை தழைத்து வினவ, “ஒன்னும் இல்லைங்க!” என்றாள் சுவாதீனமானக் குரலில்.
“நோ... வாட் இஸ் கோய்ங் ஆன் யூவர் மைண்ட் கேர்ள்?” என நிவின் மனைவி தலையைத் தட்ட, நிமிர்ந்து சில நொடிகள் அவனைப் பார்த்தாள்.
“அம்மா ஞாபகம் வந்துடுச்சுங்க!” என்றாள் முறுவலித்து. நிவின் முகம் மென்மையானது.
“என் அம்மா இருந்திருந்தா, எனக்கு உடம்பு சரியில்லைன்னா இப்படித்தானே பார்த்திட்டு இருந்திருப்பாங்கன்னு தோணுச்சா... அதான் அப்படியே அம்மா, அப்பான்னு மனசு அவங்க கூட சின்ன வயசுல வாழ்ந்ததை ரவுண்ட் அடிச்சிடுச்சு. ஒரு மாதிரி... என்ன சொல்லன்னு தெரியலை. எந்த உறவுக்கும் ரீப்ளேஸ்மெண்ட் இல்லலைங்க. பட், கடவுள் யாரு யாருக்கு செட்டாவாங்கன்னு சரியா யோசிப்பாரு போல!” எனக் கேட்டுவிட்டு அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். கண்கள் லேசாக கலங்கினாலும், சிமிட்டி அதைத் தடுத்துவிட்டாள். நிவின் எதுவும் உரைக்காது மனைவியின் தலையைக் கோத, அவள் உறங்கிப் போக, இவனும் மெதுவாய் நித்திரா தேவியைத் தழுவினான்.
“நான் என்ற சொல்
இனி வேண்டாம்
நீ என்பதே இனி
நான் தான்
இனிமேலும் வரம்
கேட்கத் தேவையில்லை
இது போல் வேரெங்கும்
சொர்க்கம் இல்லை
உயிரே வா!”
தொடரும்...
P.S - முக்கிய குறிப்பு மக்களே. இத்தனை அன்பான அனுசரணையான கணவனைப் பெற்ற சுதியைப் பார்த்து யாரும் பொறாமை பட வேண்டாம்.‌.. இது முழுக்க முழுக்க என்‌ சுய கற்பனையே 🙈🏃‍♀️🙈 நாளைக்கு இறுதி அத்தியாயம் வித் எபிலாக் 🤭 ரொமான்ஸே இல்லாம எழுதுன கதை இதுவாத்தான் இருக்கும். போனா போகுதுன்னு கடைசி எப்பில எதாவது வச்சு விடறேன் 🙈🙈🙈







































































 
Well-known member
Messages
1,110
Reaction score
799
Points
113
Kadhaila Vara heroes thaan ipdilam iruppaanga, ipdiyavathu rasichukka vendithaan


Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
 
Top