• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,030
Reaction score
2,923
Points
113
பொழுது – 13 💖
சுதி அப்போதுதான் உண்டுவிட்டு அசத்திய உடலை படுக்கையில் சாய்த்தாள். கால்கள் மரத்துப் போயிருந்தன. மெதுவாய் கையை நீட்டி தானே அழுத்திவிட்டுக் கொண்டாள். கொஞ்சம் சுகமாய் இருக்க, ஒருபக்கமாய் சரிந்து படுத்தாள். இடுப்பும் வலித்தது. ஓய்வின்றி ஓடுகிறோம் என்று தெரிந்தாலும் எங்கேயும் இளைப்பாற இடம் கிடைக்கவில்லை என மூளைக் கூற, அடுத்த ஞாயிற்றுக்கிழமை எப்போதடா வருமென மனம் ஏங்கிற்று. மனதை திசை திருப்ப எண்ணியவள் அலைபேசியைக் கையிலெடுத்தாள். புலனத்திற்குள்ளே நுழைந்தவளுக்கு விவேகா ஏதோ காணொளியைப் பகிர்ந்திருந்தாள். அதைத் தொட்டு இவள் பார்க்க, குழந்தை சேட்டை செய்யும் காணொளி அது. மனம் இலகுவாக அப்படியே ஒவ்வொன்றாய் தள்ளி கேலிக்கை காணொளியில் மனதை திசை திருப்பினாள். நாளைக்கு என்ன சமைக்க வேண்டும் என நிவின் செய்தி அனுப்பியிருக்க, அது திரையில் வந்து விழுந்தது. தொட்டு உள்ளே சென்றவள், “ஓகே சார்!” என அனுப்பிவிட்டு சில நொடிகள் யோசித்தாள். அவனுக்குப் பிறந்தநாள் எனத் தெரிந்தும் சுதி வாழ்த்தவில்லை‌.
தற்போதைக்கு குடும்பத்தில் பணப் பிரச்சனை வெகுவாய் குறைந்ததற்கு அவனும் ஒரு காரணம் என மனம் அவன் மீதான நல்ல எண்ணத்தை முன்னடுக்க, சரியென்று, “ஹேப்பி பெர்த் டே நிவின் சார். ஸ்டே ஹெல்தி அண்ட் வெல்தி ஆல்வேய்ஸ்!” என இவள் அனுப்பினாள். அவன் எப்படியிருந்தாலும் சுதி உண்மையாய்தான் வாழ்த்தைப் பகிர்ந்தாள்‌. அதைப் பார்த்துவிட்டான் என்பது புரிய, இரண்டு நிமிடங்கள் புலனத்தில் உலாவினாள். நிவின் பதிலளிக்கவில்லை எனத் தெரிய, இணையத்தை துண்டித்துவிட்டு போர்வையைப் போர்த்தி தூங்க முயற்சித்தாள்.
‘மெசேஜ் பார்த்தும் அவன் பதிலலிக்கவில்லை. வாழ்த்தை தெரிவிக்காமலே இருந்திருக்கலாம்!’ என அவன் செய்கை முகத்தில் அறைய, தன்னையே நிந்தித்துக்கொண்டு உறங்கிப் போனாள்.
மறுநாள் சுதி நிவின் வீட்டிற்குச் செல்ல, வீடே அலங்கோலமாக இருந்தது. அப்போதுதான் எழுந்த மகேந்திரா தன்னால் இயன்றவரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். நிவின் பூட்டிய அறை அவன் எழுந்திருக்கவில்லை எனக் கூறியது.
“வாம்மா சுதி...” என அவர் கூற, இவள் புன்னகைத்தாள்.
“சார், நான் க்ளீன் பண்ணிக்கிறேன். நீங்க ஸ்ட்ரெய்ன் பண்ணாதீங்க!” என அவர் கையிலிருந்த துடைப்பத்தை வாங்கினாள் இவள்.
“நேத்து இந்தப் பசங்தான் லேட் நைட் வரை அரட்டை அடிச்சிட்டு அப்படியே போட்டுட்டு கிளம்பிட்டாங்க மா!” அவர் சங்கடமாய்ப் புன்னகைத்தார்.
“பரவாயில்லை சார், இதுதானே என் வேலை. நான் பார்த்துக்கிறேன். நீங்க உட்காருங்க சார்!” என்றவள் மொத்த வீட்டையும் ஒருமுறை சுத்தம் செய்து குப்பையெல்லாம் குப்பைக் கூடையிலிட்ட போது அது நிரம்பி வழிந்தது‌. குனிந்து மேஜைக்கு அடியில் குப்பையையும், அணிச்சலையும் சாப்பிட்டுவிட்டு ஆங்காங்கே சிந்தி சிதறி வைத்திருந்தார்கள். எப்படியும் இதைத் தண்ணீர் வைத்து துடைத்தால்தான் சரிவரும் எனத் தோன்ற, மெலிதாய் சலிப்பு வந்தது. சென்ற வாரம்தான் முழு வீட்டையும் பளபளவென துடைத்திருந்தாள். இப்போது பார்க்கவே கறையும் அழுக்குமாய் இருக்க, இதை அழுத்தித் துடைத்தால் கையும் முதுகும் விண்டுவிடும் என்பது உறுதி. பெருமூச்சோடு வாளியில் நீரை நிரப்பி சலவை திரவத்தை ஊற்றினாள்.
“நான் கீழே போய் குப்பையைக் கொட்டீட்டு வரேன் மா!” என மகேந்திரா குப்பைக் கூடையோடு அகல, இவள் வீட்டைத் துடைக்கத் தொடங்கினாள். முதலில் கூட்டத்தைத் துடைத்து மின்விசிறியை சுழலவிட்டாள். பின்னர் சமையலறை படுக்கை அறை என துடைத்தாள். மீண்டும் சுத்தமான நீரை வாளியில் பிடித்து வீட்டை துடைத்தப் பின் நிமிரவே முடியவில்லை. முதுகோடு சேர்த்து ஒரு பக்க காலும் வலி உயிர் போனது. நகர மாட்டேன் என்ற கால்களை மெதுவாய் நகர்த்திக் கொண்டு சமையலறைக்குச் சென்றாள். இரவு ஏதோ சமைக்கிறேன் என்ற பேர்வழியில் மொத்த சமையலறையும் பாழாக்கி வைத்திருந்தார்கள். அதைப் பார்த்ததும் தலைச் சுற்றியது சுதிக்கு. நேரமானதை உணர்ந்து விறுவிறுவென அனைத்தையும் சுத்தம் செய்து பாத்திரத்தை துலக்கிவிட்டு சமையலைத் தொடங்கினாள்.
“ஒரு காஃபி போட்டு தர்றீயா சுதாமா?” என மகேந்திரா உள்ளே நுழைய, “ஐஞ்சு நிமிஷத்துல போட்றேன் சார்!” என்றாள்.
“அவனுக்கும் சேர்த்துப் போடு மா. எழுந்துட்டான் போல!” என்றவர் மகனது அறைக்குள் அடைய, இவள் குளம்பியை எடுத்துக்கொண்டு நிவின் அறை வாயிலிலே நின்றுவிட்டாள். உள்ளே செல்லும் எண்ணம் நிச்சயமாக இல்லை அவளுக்கு. ஏற்கனவே இரண்டு முறை நிவின் கேட்டான் என அவனுக்கு குளம்பி எடுத்து வந்திருக்கிறாள். இவளை அவன் உள்ளே அழைக்கவில்லை.
“சைட் டேபிள்ல வச்சிடுங்க!” என்று இருமுறையும் அவன் கூறிவிட, இவளும் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடைய அறை, நிறைய தனிப்பட்ட விஷயங்கள் இருக்கலாம். யாரை உள்ள விட என்று அவன்தானே முடிவு செய்ய வேண்டும் நியாயமாய் யோசித்திருந்தாள்.
“சார் காஃபி!” இவள் மெலிதாய்க் குரல் கொடுக்க, “உள்ள வாம்மா சுதா...” என்றார் பெரியவர்.
“இல்ல சார். டேபிள் மேல வைக்கிறேன்!” என அவள் குரல் நிவினுக்கும் கேட்டது.
“நானே வர்றேன் மா...” என மகேந்திரா ஒரு குவளையை எடுத்துக் கொள்ள, நிவினும் குளம்பியை அருந்தினான்.
“உன்னைப் பார்க்க வச்சு ரெண்டு பேரும் காஃபி குடிக்கிறோம். நீ ஜூஸ் எதுவும் பிரிட்ஜ்ல இருந்தா எடுத்துக் குடிம்மா...” பெரியவர் அக்கறையாய்க் கூற, அவரைப் பார்த்து புன்னகைத்தவள், “இல்ல சார்... எனக்கு கூலிங் ஒத்துக்காது!” என அவர் மனம் நோகாது மறுத்துவிட்டாள் சுதி. அவர் மேலும் அவளை வற்புறுத்தவில்லை.
சுதி சமையலை முடித்துவிட்டு நேரத்தைப் பார்த்தாள். கடகடவென அது ஓடியிருந்தது. தேநீர் இடைவேளையின் போது உணவு உண்டு கொள்ளலாம் எனக் கிளம்பினாள். பாலு மகேந்திரா அவளருகே வந்தார்.
“இன்னைக்கு சாயங்காலம் நான் கிளம்புறேன் மா!” அவர் கூற, “ஓ... ஓகே சார். பார்த்து பத்திரமா போய்ட்டு வாங்க!” என்றாள்.
“நான் பத்திரமா போய்டுவேன் மா. நீயும் உடம்பை பார்த்துக்கோ. என் மகனையும் பார்த்துக்கோ மா. தனியா இருக்கான்னு அவனைப் பத்திதான் கவலை. இத்தனை வருஷம் அவ அம்மா பார்த்துக்கிட்டா. அப்புறம் அவ போனப் பிறகு எல்லாமே அவனேதான் பண்ணிப்பான். இந்த ஆக்ஸிடென்ட் மட்டும் ஆகலைன்னா, வீட்டு வேலைக்கு எல்லாம் சோம்பேறிதனப் பட்ற ஆள் இல்லைமா அவன்!” என அவர் பேச, இவளது விழிகள் கடிகாரத்தை தொட்டு மீண்டன‌. சட்டென பேச்சைக் கத்தரிக்க முடியாது நின்றிருந்தாள் சுதிரமாலா.
“அவன் எதுவும் சுள்ளுன்னு பேசிட்டா மனசுல வச்சுக்காதம்மா. நானும் கண்டிச்சிருக்கேன்!” என்றவர் இருநூறு ரூபாய்த் தாளை அவளிடம் நீட்டினார்.
“இதை செலவுக்கு வச்சுக்கோம்மா!” என அவர் கூற, சுதியின் முகம் ஒரு நொடி மாறினாலும் அதை சமாளித்திருந்தாள்.
“வேணாம் சார்... அதான் பார்க்குற வேலைக்கு நிவின் சார் சம்பளம் தர்றாரு இல்லை. அதுவே போதும் சார். நீங்களும் உங்க உடம்பைப் பார்த்துக்கோங்க சார்!” என்றவள் அவர் மேலும் பேசும்முன், “எனக்கு டைமாச்சு, லேட்டா போனா ஓனர் திட்டுவாரு. நான் கிளம்புறேன் சார்...” என வலுக்கட்டாயமாகப் புன்னகைத்து விடை பெற்றாள். பெரியவருக்கு ஆச்சரியம்தான். அவர் பார்த்தவரை தண்ணீர் கூட சுதி இங்கே அருந்தவில்லை. அவராக காசுக் கொடுத்தும் அதை நாசுக்காய் மறுத்துவிட்டவளை நினைத்து கொஞ்சம் ஆச்சர்யம்தான். நேர்மையான பெண் என எண்ணிக் கொண்டார். நிவினும் நடந்த அனைத்தையும் கவனித்தான்.
அன்றைக்கு மாலை பாலு மகேந்திரா விடை பெற, நிவின் அவரை பேருந்து நிலையம் வரை சென்று விட்டுவிட்டு வந்தான். மறுநாளிலிருந்து சுதிக்கு நாட்கள் எப்போதும் போல நகர்ந்தன. பெரிதாய் எந்த மாற்றமும் இன்றி வேலை, வணிகளவாளம், வீடு என நேரம் சென்றது. இடையில் சௌம்யா அரசுத் தேர்வை நன்முறையில் எழுதி முடித்திருந்தாள். வேலை கிடைத்துவிடும் என தேர்வு அறையிலிருந்து வெளிவரும் போதே அவளுக்குத் தெரிந்தாலும் கொஞ்சம் பயம்தான். முடிவுகள் வெளிவரட்டும் என அனைவரிடமும் ஏதோ எழுதியிருக்கிறேன் என்று மட்டும் உரைத்திருந்தாள்.
சுதி நிவின் வீட்டிற்கு வேலைக்குச் சேர்ந்து நான்கு மாதங்கள் முடிந்திருந்தன. நிவின் கையிலிருக்கும் கட்டை ஒரு மாதத்தில் பிரித்துவிடலாம் என மருத்துவர் உரைத்திருக்க, அவன் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தான். சுதிக்கும் அந்த விடயம் பாலு மகேந்திரா மூலம் தெரிந்திருக்க, ஒரு மாதம் மட்டும்தான் இங்கே வேலை பார்க்க முடியும் எனப் புரிந்தது. இந்த சில மாதங்களாக பணக் கஷ்டம் கொஞ்ம் குறைந்திருந்ததை அவளும் உணர்ந்தாள். இப்போது இந்த வேலையை விட்டுவிட்டால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டி வருமே என மனமும் மூளையும் அதையே சுற்றி வந்தன.
இங்கே இந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலே வேறு எதாவது வீட்டில் இதே போல ஒருவருக்கு சமைத்துக் கொடுக்கும் வேலைக் கிடைத்தால் நன்றாக இருக்குமெனத் தோன்ற, நிவின் வேலையை விட்டு நிற்க சொன்னால், வேறு ஒன்றைத் தேடிக் கொள்ளலாம் என முடிவெடுத்தாள். எந்த வீடென்றாலும் காசு கொடுக்கப் போகிறார்கள், வேலை செய்யப் போகிறோம் என மூளை கூற, இருந்தும் அவளுக்குப் பயம்தான். நிவின் வீட்டில் வேலைக்கு வரும்போதே இடுப்பில் எப்போதும் சிறிய கத்தியை மறைத்து வைத்திருப்பாள். ஆரம்பத்தில் ஐம்புலன்களும் எப்போதும் விழிப்புடன் இருப்பன‌. ஆனால் இப்போதெல்லாம் அதற்கு அவசியம் இல்லை என்பது போல வெகு சாதாரணமாக வேலை செய்தாள். காரணம் நிவின்தான்.
அவன் முகத்தில் அடித்தது போல பேசினாலும், அவளை சக மனுஷியாக மதிக்கவில்லை என்றாலும் கூட அவன் மீது சுதிக்கு மரியாதை உண்டு. இதுவரை அவளை ஒரு நொடி கூடத் தவறாய் அவன் கண்டதில்லை. தன்னுடைய முகத்தை கூட அவன் சரியாய்க் பார்த்திருக்க மாட்டான் என நினைத்த நாட்களும் உண்டு. உண்மையிலே அவன் ஒழுக்கமானவனாக இருக்க வேண்டும்; இல்லையென்றால் வேலைக்காரி தானே என இளக்காரமாகக் கூட எண்ணி இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அவளுக்கு கவலையில்லை. இந்த வேலை போல பாதுகாப்பான மற்றொரு வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும் என்றொரு எண்ணம் படர்ந்தது.

(தொடர்ந்து கீழே படிக்கவும்)
 
Administrator
Staff member
Messages
1,030
Reaction score
2,923
Points
113
சுதி சிந்தித்துக் கொண்டே அடுக்குமாடிக் குடியிருப்பின் உள்ளே நுழைய, வாயிற் காவலாளி இவளை அழைத்தார். திரும்பி பார்த்தாள் சுதி‌‌. “ம்மா... நிவின் சார் வீட்லதானே வேலை பார்க்குற?” என அவர் கேட்க, “ஆமாண்ணா...” பதிலளித்தாள் பெண்.
“இந்தக் கொரியர் நிவின் சார் பேருக்கு வந்திருக்கு மா. அவர்கிட்டே கொடுத்துடுமா!” அவர் கூற, இவள் தலையசைத்து ஏற்று அந்தப் பையை வாங்கினாள். சற்றே கனமாய் இருந்தது அது. கஷ்டப்பட்டு தூக்கிக் கொண்டு மேலே சென்றாள்.
இவள் நிவின் வீட்டின் கதவை தட்டச் செல்லும் முன்னே, “ஹே... சுதிரமாலா. நீ இங்க என்ன பண்ற?” என்ற குரலில் யோசனையாய் திரும்பினாள் சுதி. ஒரு நிமிடம் எதிரிலிருப்பவளை மூளை அடையாளம் காண்பிக்க திணறிப் பின் கூறியது. காதில் வாங்காதது போல சென்றிருக்கலாம். இல்லை சில நிமிடங்கள் தாமதமாய் வந்திருக்கலாம் என மனம் அனத்த, அதைப் புறந்தள்ளிவிட்டு அவளைப் புன்னகைத்தாள். இந்த சூழ்நிலையை மனம் கொஞ்சம் வெறுத்தது கூட. இருந்தாலும் முயன்று இயல்பாகினாள்.
“நான் நல்லா இருக்கேன் நிவேதா. நீ?” எனக் கேட்டாள்.
“பைன்... பைன். இது என்னோட ஹஸ்பண்ட் அண்ட் இது என்னோட பையன்!” என நிவேதா அருகிலிருந்த இருவரையும் அறிமுகம் செய்துவைத்தாள். மூவரிடமும் மேல்தட்டு வாசம் நிரம்பி வழிந்தது.
“ஹாய் சார்!” சுதி அவனைப் பார்த்து கட்டாயமாக சிரித்து வைத்தாள்.
“ஏங்க, இவ சுதிரமாலா. என்கூட காலேஜ்ல கொஞ்சநாள் கூடப் படிச்சா. நல்லா படிப்பா. பட், ஃபேமிலி சிட்சுவேஷன்னு ஸ்டடீஸை டிஸ்கன்டினியூ பண்ணிட்டா!” என அவள் வருத்தமாய்க் கூற, அவளது கணவன் சுதியை பாவமாய்ப் பார்த்தான். சுதிக்கு அந்தப் பார்வை பிடிக்கவில்லை. ஆனாலும் அவ்விடத்திலிருந்து அகல முடியாது நின்றிருந்தாள்.
“ஆமா... நிவின் வீட்ல என்ன பண்ற நீ? உன்னோட ரிலேடீவா அவர்?” எத்தனை முறை சுதி கண்டு கொள்ளது விட்டாலும் நிவேதா கேட்டுக் கொண்டே இருக்க, சங்கடமாய் புன்னகைத்த சுதி, “நிவின் சார் வீட்ல வேலை பார்க்குறேன் நிவேதா!” என்றாள்.
“ஓ...” என்ற நிவேதாவின் முகம் மாறிப்போனது. சுதி அலட்டிக் கொள்ளவில்லை. இன்னுமே நிமிர்ந்து நின்றாள். வேலைதானே பார்க்கிறேன் என்ற எண்ணம் அவளிடம் வலுப்பெற்றிருந்தது. அவரது கணவன் பார்வையும் கூட மாறிவிட, கண்டு கொள்ளாது கடக்க முற்ப்பட்டாலும் சுதிக்கு வலித்ததுதான்.
“சரி சுதி, இங்கதான் நானும் இருக்கேன். இப்போ நாங்க வெளிய கிளம்புறோம். சண்டே ஒருநாள் ஃப்ரியா பேசலாம்!” என அவள் குடும்பத்துடன் விடைபெற, நிவின் வெளியே வந்தான். சுதி யாரிடம் பேசுகிறாள் என அவன் பார்க்க, ஒருவரும் இல்லை. கதவைத் நன்றாய் திறந்தவன், அவள் கையிலிருந்த பொருளைப் பார்த்தான்.
“உங்களுக்கு கொரியர் வந்திருக்குன்னு வாட்ச்மேன் கொடுக்க சொன்னாரு சார்!” என்றவள் அதை மேஜை மீது வைத்துவிட்டு ரத்தப் பசையற்றிருந்த விரல்களையும் உள்ளங்களையும் தேய்த்து விட்டுக் கொண்டாள். அதை தூக்கி வந்ததில் கை வலித்தது.
நிவின் யோசனையாக அதைத் திறந்து பார்த்தான். அக்ஷாதான் எதையோ அவனுக்கு வாங்கி அனுப்பியிருந்தாள். இவனின் முகம் கடுகடுவென்றானது. பிறந்த நாளன்று அவள் முத்தமிட்ட போதே தனியாய் அழைத்து திட்டித் தீர்த்திருந்தான். அவளது எண்ணையும் கருப்பிவிட்டு இனிமேல் என்னை பார்க்க முயற்சிக்காதே என கடுஞ்சொற்களால் உரைத்திருக்க, ஒரு மாதமாய் அமைதியாய் இருந்தவள், இப்போது சமாதானத் தூதாக விலையுயர்ந்த பொருட்களை வாங்கி அனுப்பியிருக்கிறாள். அதைப் பார்க்க பார்க்க அவனுக்கு கோபம் வர, “சுதிரமாலா...” எனக் கத்தி அழைத்தான்.
சுதி அந்த அழைப்பில் பதறிக் கொண்டு வர, “இந்த பாக்ஸை நீங்க போகும்போது டஸ்பின்ல போட்ருங்க!” என்றான் எரிச்சலாய். ஏனென்ற கேள்வி தொக்கி நின்ற போதும் தலையை மட்டும் அசைத்தாள் அவள்.
“ஒரு காஃபி கொடுங்க!” என அவன் கேட்டுக் கொண்டே தலையை இருக்கையில் பின்னோக்கி சாய்ந்தமர, ஐந்து நிமிடத்தில் சுதி குளம்பியை அவன் முன்னே வைத்தாள். சுடசுட குளம்பி உள்ளிறங்கியதும் மனதின் வெம்மை அவனுக்கு குறைந்திருந்தது. தொலைக்காட்சியை உயிர்ப்பித்து தமிழில் பாடல் ஏதோ ஒன்றை ஒலிக்கவிட்டான்.
சுதியின் காதில் பாடல் விழுந்ததும் ஆச்சரியம் தாங்கவில்லை அவளுக்கு. அவள் வேலைக்கு சேர்ந்த தினத்திலிருந்து ஒருநாளும் அவன் தமிழ் படங்களையோ, பாட்டையோ ரசித்தது இல்லை. ஆங்கில செய்தியோ அல்லது சண்டை காட்சிகள் நிறைந்த ஆங்கில படத்தையோதான் பார்ப்பான். ஆச்சரியத்தோடு வேலையை முடித்தவள், மீண்டும் அந்தப் பெட்டியைத் தூக்கினாள்.
மேலே தூக்கிக்கொண்டு வரும்போதே கை வலித்தது. மீண்டும் கீழே எடுத்துச் செல்ல வேண்டுமா என சலிப்புத் தட்டினாலும் கீழே எடுத்துச் சென்றாள். உள்ளே விலையுயர்ந்த பொருட்களை பார்த்ததும் மனம் அதன் விலையைக் கணக்கிட முனைய, சட்டென அதைத் தட்டி அடக்கினாள். விலை தெரிந்தால் குப்பையில் தூக்கியெறியும் போது அவளுக்கு மனம் வருந்தும். பொத்தென அவற்றைக் குப்பைக் கூடையில் சுதி தூக்கியெறிய, நிவினும் அக்ஷாவும் ஒன்றாய் இருக்கும் புகைப்படமும் அதனுள்ளே நொறுங்கியது. எட்டிப் பார்த்தவள் இருவருக்கும் இடையில் ஏதோ சண்டை போல என நினைத்தாள். என்னதான் காதலர்களுக்கு இடையே சண்டை என்றாலும் இப்படித் தூக்கியெறிவது எல்லாம் அதிகப்படி என சிந்தித்துக் கொண்டே நடந்தாள்.

அந்த மாதம் முடிந்திருந்தது. நிவின் கைக்கட்டு முழுதாய் அவிழ்த்திருந்தான். முன்பு போல வீட்டிலே இருந்து வேலை செய்ய விருப்பமில்லாது அலுவலகம் செல்லத் துவங்கினான். சுதி அவன் தன்னை வேலையை விட்டு நிறுத்திவிடக் கூடுமென்று எண்ணியிருக்க, அவன் அதைப் பற்றி பேசவே இல்லை. அவளுக்கும் கொஞ்சம் நிம்மதிதான். இங்கேயே வேலையைத் தொடரலாம் என எண்ணி மகிழ்ந்தாள். நாளுக்கு நாள் உடல்நிலை அவளுக்கு மோசமாகிக் கொண்டே சென்றது.

ஒரேயடியாகப் படுத்துவிடுவோமோ என்று அஞ்சும் அளவிற்கு உடல்வலி துரத்தியது. மாத்திரைக்கு மட்டுப்படாத வலியோடு தினமும் இரண்டு இடங்களிலும் வேலைப் பார்த்தாள். ஓய்வெடுக்க உடல் உந்தினாலும் சம்பளம் குறைந்துவிடுமே என மனம் கவலையுற்றது. ஓடும் வரை ஓடுவோம். முடியாத பட்சத்திற்கு மருத்துவரை சந்திக்கலாம் எனப் பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டாள்.

இங்கே வலிக்கிறது அங்கே வலிக்கிறது என சொல்லி சலுகையாய் சாய்ந்து கொள்ள ஒருவர் இருந்தால் எத்தனை நன்றாய் இருக்கும் என மனம் ஏங்காமல் இல்லை. அதைத் தட்டி அடக்கினாள். இப்போதெல்லாம் சுதியின் வாசனையே தைலம் என்றாகிப் போனது. காலை எழுந்தது முதல் இரவு படுத்து தூங்கும் வரை தைலத்தை தலை, கால், இடுப்பு எனப் பூசிக் கொண்டாள். சௌம்யா கூட அவளைக் கவனித்து அதட்டிக் கேட்க, சமாளித்திருந்தாள் பெண். பெரியவளுக்கு கவலையாகப் போய்விட்டது.

சந்திராவும் சுதிக்கு திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தார். இன்னும் ஓரிரு வாரத்தில் அவளுக்கு இருப்பத்து ஐந்து வயது முடியப் போகிறது என பெண்ணின் வயது தாயாய் அவரைப் பயம் கொள்ள வைத்தது. தன் கணவர் இருந்திருந்தால் ஒரு நல்ல வரனாகப் பார்த்து அவளுக்குத் திருமணம் செய்து வைத்திருப்பார். சந்திராவுக்கு சுதியின் திருமண பேச்சை துவங்கவே பயமாய் இருந்தது. பணம் என்பதைத் தாண்டி நல்ல ஒழுக்கமான பையனைத் தேடி எப்படி இவளை அவன் கையில் ஒப்படைக்கப் போகிறோம் என்ற எண்ணமே அவரை தூங்கவிடாமல் செய்தது‌. இன்றைய சூழலில் யாரையும் நம்ப முடியவில்லை. திருமணம் என்று வந்ததும் ஆயிரம் பொய்யைக் கூறி முடித்துவிட்டு பின்னர் நிமிர்ந்து கொள்ளும் கூட்டத்தை அவர் கண்ணால் கண்டதுண்டு. அதனாலே யார் மூலம் மணமகனைத் தேடுவது என அவருக்கு முப்பொழுதும் இதே யோசனையாய் இருந்தது.

எங்கேயாவது பார்க்கும் ஓரிரு சொந்தங்களிடம் மட்டும் சுதிக்கு நல்ல பொருத்தமிருந்தால் சொல்ல சொல்லிக் கேட்டிருந்தார். பெரிதாய் முன்னெடுக்கவில்லை. அதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. சில வாரங்களுக்கு முன்பு சுதியின் ஜாதகத்தை ஜோசியரிடம் காண்பித்திருந்தார்.

“மாப்பிள்ளையை நீங்க தேடி போக வேணாம். அதுவா வரும். இந்த வருஷத்துக்குள்ள நல்ல இடமா அமையும்மா. போய்ட்டு வாங்க!” என ஆலம்பட்டியில் இருக்கும் ஜோசியர் ஆருடம் கூறியிருக்க, சந்திராவிற்கு ஆசுவாசம் பிறந்தது. அவர் கூறியது நடந்துவிட்டால் போதுமென நிம்மதியாய் இருந்தார். நல்ல வரனாய்க் கூடி வரட்டும் எனக் காத்திருந்தார். ஆனால் சுதிக்கு இது எதுவும் தெரியாது. சௌம்யாவிடம் பகிர்ந்திருந்தார். எல்லாம் சரியாய் அமைந்ததும் அவளிடம் தெரிவிக்கலாம் என்று நினைத்தார்.
அன்றைக்கு வேலை முடிந்து சுதி கிளம்பாமல் கூடத்திலிருந்து நிவினை அறையைப் பார்க்கவும், அவன் எழுந்து வந்தான். என்னவென உரைக்காது நிமிர்ந்து பார்த்தான்.
“சார், நாளைக்கு ஒன்டே எனக்கு லீவ் வேணும்!” என இவள் தயங்க, “ரீசன் தெரிஞ்சுக்கலாமா?” எனக் கேட்டான் அவன்.
“ஹம்ம்... பெர்சனல் ரீசன் சார்!” சுதி ஒரு நிமிடம் நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் பார்வையை எங்கோ பதித்தாள். இப்போதெல்லாம் அவன் முகத்தைக் கூட சுதி பார்ப்பதில்லை. அவள் வந்ததும் கதவைத் திறந்துவிட்டு நிவின் அறைக்குள்ளே முடங்கிக் கொள்வான். இவள் வேலையை முடித்துவிட்டு அவனைப் பார்த்துவிட்டு கிளம்புவாள். பேச்சுக்கள் மொத்தமாய் அருகிப் போயிருந்தன.

நிவின் சில நொடிகள் யோசிக்கவும், “இந்த மந்த் சண்டே லீவை காம்பன்சேட் பண்ணிட்றேன். டோன்ட் வொர்ரீ சார்!” என அவள் வலுக்கட்டாயமாக புன்னகைக்க, “ஓகே...” எனத் தோளைக் குலுக்கி அவன் அகலவும், சுதி விழிகள் நொடிக்கும் அதிகமாய் அவன் முதுகைத் துளைத்தன. என்ன மனிதன் இவன் என மனம் கசந்தாலும், விறுவிறுவென வெளியே சென்றாள். ஒரு மனம் அவனை சாடினாலும் நியாய மனம் கொடுக்கும் சம்பளத்திற்கு நீ வேலை செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் தவறில்லை எனப் போராட, மெதுவாய் நடந்தாள். கால்வலி அவளுக்குப் பாத்தியப்பட்டு விட்டிருந்தபடியால்‌.
‘ஒருநாள் விடுப்புக் கொடுத்தால் எந்த வகையில் இவன் குறைந்துவிடுவான். ஏன் எங்களைப் பார்த்தால் இவனுக்கு மனிதர்களைப் போல தெரியவில்லையா என்ன. வாரத்தில் இரண்டு நாட்கள் விடுப்பென பொழுதைக் கழிப்பவனுக்கு தன்னுடைய நிலை புரியவா போகிறது?’ மனம் குமுறினாலும் எப்போதும் போல அதைத் தட்டிவிட்டு உணவை முடித்துக்கொண்டு வணிகவளாகம் நுழைந்தாள்‌.
தோழியின் முகத்தைப் பார்த்து அகத்தை அறிந்த விவேகா, “என்னாச்சு சுதி... அம்மா, அப்பா ஞாபகமா?” எனக் கேட்க, சுதியின் உதடுகளில் விரக்தி புன்னகை. ஏழு வயதில் அவர்கள் விட்டுச் சென்றார்கள். பதினெட்டு வருடங்கள் ஓடியிருந்தது. அவளது மாமாவும் அண்ணனும் இருக்கும்வரை தாய், தந்தையைப் பற்றிய எண்ணம் எழவேயில்லை என்பதுதான் உண்மை. ஆனால் இப்போதெல்லாம் ஏன் அவர்கள் தன்னை விட்டுச் சென்றார்கள் என ஏங்கியழும் நிலைக்கு வந்திருந்தாள். ஆனாலும் வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை. நாளைதான் சுதியின் பெற்றவர்கள் இறந்ததினம். அதனாலே நிவினிடம் விடுப்பைக் கேட்டு வாங்கியிருந்தாள். வைகுண்டத்திடம் ஒரு வாரம் முன்பே அனுமதி பெற்றிருந்தாள்.
“இல்லைன்னு சொல்ல மாட்டேன் விவே!” என்றவளின் குரலின் ஏக்கம் மற்றவளுக்கும் புரிந்திருக்க வேண்டும்.
“ப்ம்ச்... விடு சுதி. எத்தனை வருஷம் அழுதாலும் போனவங்க திரும்பி வர மாட்டாங்க. நீ அழாத, அவங்க உன்னைப் பார்த்துட்டேதான் இருப்பாங்க. உன் சந்தோஷம்தான் அவங்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும்!” என்ற தோழியை அணைத்துக் கொண்டாள் சுதி. அழ வேண்டும் என்றொரு எண்ணம் உந்தினாலும் இருக்கும் சூழ்நிலை அழுகையை தொண்டையிலே அடைத்து வைத்தது. ஆனாலும் விழிகளில் ஈரம் படராமல் இல்லை.
“ஏன் விவே.. நாளைக்கு அம்மா, அப்பா நினைவு நாள்னு நினைச்சு கஷ்டமா இருந்தாலும், ஒருநாள் நிம்மதியா லீவ்ல இருக்கப் போறோம்னு மனசு சந்தோஷப்படுது டி. எனக்கு எவ்வளோ கொடூர மனசு பாரேன்!” என சிரித்தவளின் சிரிப்பு முழுவதும் விரக்தியின் சாயல். உண்மையிலே மனதிலுள்ளதைத்தான் பகிர்ந்தாள். அழுது கரைந்தாலும் வர மாட்டார்கள் தான். அவர்கள் பெயரை சொல்லி ஒருநாள் இந்த உடலுக்கு ஓய்வு கிட்டட்டும் என மனம் அற்பமாய் சந்தோஷித்தது. விவேகா தோழியை வேதனை ததும்ப பார்த்தாள்.
“அந்த வேலையைத்தான் விட்டுத் தொலையேன் டி. அவனுக்குத்தான் கை சரியாகிடுச்சுல்ல. அப்புறம் என்னத்துக்கு உன்னை இன்னும் தொரத்தாம வச்சிருக்கான். உன்னை வேலை வாங்கி சுகம் கண்டுட்டான் போல!” இவள் கடுகடுக்க, சுதி சிரித்தாள்.
“என்னை வேலையைவிட்டு நிறுத்துனா அவருக்கு நஷ்டம் இல்லை விவே. எனக்குத்தான், அதனாலே இப்படியெல்லாம் பேசாத டி. சும்மாவா வேலை பார்க்குறேன். அதான் மாசம் மாசம் எட்டாயிரம் தர்றாரே!” என்றாள் உதடுகளில் நெளிந்த சிரிப்புடன்.
“உன் பக்கத்துல வந்தாலே தைலம் வாசம்தான் சுதி. என்னைக்கு நீ இந்த வேலையை விட்றீயோ அப்போத்தான் உன் உடம்பு நல்லாகும். தைலம் பேக்டரியை வச்சிருக்கீயா என்ன?” என விவேகா ஆதங்கத்தில் பொரிந்தாள். சுதியிடம் அளவானப் புன்னகைதான்.
“எனக்கென்ன ஆசையா விவே. கஷ்டமாத்தான் டி இருக்கு. ரெண்டு இடத்திலயும் வேலை செஞ்சு செத்துடுவேன்னு கூடப் பயமா இருக்கு. ஆனாலும் வைராக்கியத்துக்காக செய்றேன் டி. அண்ணியோட அம்மா சொன்ன மாதிரி ஒருநாளும் அவங்ககிட்டே கையேந்துற நிலைமை வரக் கூடாதுன்னு பல்லைக் கடிச்சு செய்றேன். பார்ப்போம் டி... கடவுளுக்கா தோணுச்சுன்னா கருணை வந்து எனக்கு அவர் ரெஸ்ட் கொடுப்பாரு டி. அதுவரைக்கும் ஓடுறேன்!” என புன்னகைத்தக் குரலின் பின்னே அவளது வலியும் வாதையும் தொக்கி நின்றன.
“போ... போய் அவன்கிட்டே வேலைக்கு வர முடியாதுன்னு சொல்லித் தொலை சுதி. கடவுள் நேரா எல்லாம் வர மாட்டார். நீ உன் கஷ்டத்துக்கு வேலை பார்த்தா, அவர் என்ன பண்ணுவாரு. அவரா உன்னைப் பார்க்க சொன்னாரு. ஒழுங்கா வேலையை விட்டுட்டு, உடம்பை கவனி!” விவேகா கடுகடுக்க, சுதி அனைத்தையும் கேட்டுப் புன்னகைத்தாள். நேரமானதை உணர்ந்து இருவரும் அவரவர் வேலையில் கவனமாகினர்.
மறுநாள் வீட்டில் சுதியின் தாய், தந்தை படத்தை வைத்து படையல் செய்து சாமி கும்பிட்டனர். அமைதியாய் அவர்களது புகைப்படத்தை மனதில் பதித்துக் கொண்டாள் பெண். சிறுவயது ஞாபகங்கள் அத்தனை தெளிவில்லை எனினும் அவர்களோடு வாழ்ந்த நாட்களை அவ்வப்போது நினைத்துக் கொள்வாள். சந்திரா அவளது நெற்றியில் விபூதியைப் பூசினார். அடுத்த வருடம் மகள் திருமணமாகி ஜோடியாக நிற்க வேண்டும் என்று சாமியாகிப் போன தன் நாத்தனாரையும் அவரது கணவரையும் வேண்டிக் கொண்டார்.
பெயருக்கு உண்டுவிட்டு சுதி அறைக்குள் முடங்கினாள். உடல் ஓய்வுக்கு கெஞ்ச, அமைதியாய்ப் படுத்து உறங்கிப் போனாள். வலிக்காமல் இல்லை, அழுதால் மட்டும் பெற்றவர்கள் வந்துவிடப் போகிறார்களா என மனதைத் தேற்றிக்கொண்டு உடலை ஓய்வுக்கு அர்ப்பணித்தாள். கொஞ்சம் இளைப்பாறல் கிடைத்தால்தான் அடுத்தடுத்து நாட்கள் ஓட முடியுமென அவளுக்குமே தோன்றிற்று. அதனாலே ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தாள்.
தொடரும்...








































 
Well-known member
Messages
431
Reaction score
320
Points
63
பாவம் சுதி, எப்போ அவளுக்கு இந்த வலியிலிருந்து விடுதலை கிடைக்கும்?
 
Messages
57
Reaction score
37
Points
18
தெரியாமல் படிக்க வந்துட்டேன் 😭போல
கண்களில் தாறுமாறாக கண்ணீர் ஓடுது.....
முடியலைடா சாமி.....
முடிந்ததும் படிப்போமா
மனசு ஒரு பக்கம் தடை சொல்ல
மாலாவின் கவலையில்

மனம் படிக்க உந்தத்தான் செய்கிறது... 😭😭😭😭😭😭
 
Messages
57
Reaction score
37
Points
18
தோழி ஒருத்தி
தோள் கொடுக்க
துயரங்களை பகிர்ந்துக்க
தாங்காத பாரத்தை இறக்கி
தானும் சேர்ந்து தாங்கிட

துணையாய் நிற்கும் விவேகா அருமை.....
 
Top