• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,348
Reaction score
4,085
Points
113
பொழுது – 1 💖

மதுரையின் பிரதான சாலை வாரநாட்களுக்கே உரிய பரபரப்புடன் காணப்பட்டது. ஆங்காங்கு தென்பட்ட கடைகளும் உணவகங்களும் கூட சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.

போக்குவரத்து சமிக்ஞை காரணமாக குழுமியிருந்த வாகனங்கள் சாலையையே முழுதாய் ஆக்கிரமித்து வரிசையாய் தீக்குச்சி போல நின்றிருந்தன. ஓட்டுநர்களின் விழிகள் சிவப்பு ஒளி பச்சைக்கு மாற காத்திருந்தவாறே விளக்கில் படர்ந்திருந்தது.

மஞ்சள் நிறப்பள்ளி வாகனம் ஒன்று சற்றே முந்திக்கொண்டு முன்னே வந்து நிற்க, உள்ளிருந்த மாணவ, மாணவிகள் கொஞ்சம் கூச்சலிட, அனைவரது கவனமும் அங்கே குவிந்தது. ஒரு சிலர் புன்னகைக்க, மற்ற சிலர் உதட்டுக்குள்ளே அவர்களை மென்று தின்றனர். விளக்கு சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறிய நொடி சலசலவென வாகனங்கள் நகரத் தொடங்க, புகையும் இரைச்சலும் அவ்விடத்தை ஆக்கிரமித்தன.
அப்பகுதியில் சற்றே ஊர்ந்து மெதுவாய் வந்தப் பேருந்து மகளிருக்கு இலவசம் என்பதைப் புடம் போட்டத் தங்கம் போலக் காண்பித்தவாறு அந்த நிறுத்தத்தில் ஆடி அசைந்து நிற்க, வாயில்வரை முட்டி நின்ற ஜனத்திரளில் மூச்சுவிட சிரமப்பட்டவாறே கீழே இறங்கினாள் சுதிரமாலா. நெற்றியில் வியர்வை வழிய, வெளியே வந்து மூச்சை இழுத்துவிட்டவள், கைப்பையை ஒரு தடவை சோதித்துப் பார்த்து அனைத்தும் அதனதன் இடத்திலே இருப்பதை உறுதி செய்துவிட்டு அப்படியே நடக்கத் தொடங்கினாள்.
வழியிலிருந்த அரசமரத்துப் பிள்ளையாரின் அருகே செல்ல மனம் உந்தினாலும் அவளுக்கு நேரமில்லை என்று புரிய, தூரத்திலிருந்தே அவரைக் கண்களில் நிரப்பிக் கொண்டாள். ‘பிள்ளையாரப்பா, எந்தப் பிரச்சனையும் இல்லாம நாள் நல்லா போகணும்!’ என மானசீகமாக மனதில் வேண்டிக்கொண்டு அவள் இரண்டு எட்டுகள் வைக்க, “ஹே சுதி, நானும் வரேன்!” என்றவாறு அவளுடன் இணைந்து கொண்டாள் இளம்வயது யுவதி ஒருத்தி‌.
பக்கவாட்டாய் அவளைத் திரும்பிப் பார்த்த சுதி புன்னகைக்க, “ஷப்பா, கரெக்ட் டைம்க்கு வர்றதுக்குள்ள செத்துப் பொழக்க வேண்டியதா இருக்கு சுதி. சே, நாய் பொழப்புடா சாமி. ஃப்ரீ பஸ்னு சொல்லி போற வர்றவன் எல்லாம் இடிச்சிட்டுப் போறான். செம்ம கடுப்பு!” அவள் சலிப்புடன் பற்களைக் கடித்தாள். அவளது பேச்சை செவி வாங்கி அவதானித்தாலும் சுதியிடம் பதிலில்லை. போக்குவரத்து சமிக்ஞையில் விழிகளை ஓட்டினாள். தினமும் நடப்பதுதான் இது. ஆனாலும் ஒவ்வொரு முறையும் சலிப்புடன் விவேகா கூறுவாள். அவள் வாய்விட்டு புலம்பிவிடுவாள். சுதி எதையும் கூறாது உள்ளக்கிடங்கில் புதைத்துக் கொள்வாள். அவ்வளவுதான் இருவருக்கும் இடையிலிருக்கும் வேறுபாடு‌.
“சிக்னல் போட்டுட்டாங்க சுதி, இங்க வா, இப்படியே போகலாம். சுத்திப் போனா லேட்டாகிடும்!” என விவேகா தோழியின் கையைப் பிடித்து சாலையைக் கடக்க, இருவரும் ஐந்து நிமிடத் தொலைவிலிருந்த வணிகவளாகத்தை நோக்கி நகர்ந்தனர்.
சுதிர மாலா எதையோ யோசித்துக் கொண்டே சாலையில் விழிகளைப் பதித்திருக்க, அவளுக்கு எதிர்புறமிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞன் மகிழுந்தில் சட்டென்று மோதிவிட, அவன் அப்படியே தூக்கியெறியப்பட்டான். அசட்டையாய் நடந்து வந்த சுதிக்கு ஒரு கணம் என்ன நடந்ததென புரியவில்லை. அவள் திரும்பிப் பார்க்க, நொடியில் அந்த விபத்து நடந்து முடிந்திருந்தது. இதயம் தடதடக்க, அவள் அவனை நோக்கி ஓட, மக்கள் அவ்விடத்தில் குழுமத் தொடங்கினர்.
“ஹே... யாருப்பா அது? என்னாச்சு?” கூட்டத்தில் ஒரு குரல் கேட்டது.
“ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணுங்க யாராவது!” வாலிபன் ஒருவன் அலைபேசியை எடுத்து அவசர ஊர்திக்கு முயன்றவாறு குரல் கொடுத்தான்.
“ரோட்டைப் பார்க்காம, எங்கப் பார்த்து வண்டி ஓட்டிட்டு வர்றானுங்களோ? என் உசுரை எடுக்குறானுங்க!” போக்குவரத்து காவலர் சிடுசிடுத்தார்.
“கண்ணுத் தெரியாம யார் மேலயும் மோதி சாக வர்றானுங்க போல. இவனுங்களுக்கு எல்லாம் யார் லைசென்ஸ் கொடுத்தது?” என முணுமுணுத்தார் பெரியவர் ஒருவர்.
சுதி அவ்விடத்தை சமீபிக்க, அந்த இளைஞன் முகம் முழுவதும் குருதி படர்ந்திருந்தது. குப்புற விழுந்து கிடக்க, வலது கையில் பலத்த அடியென்பதை பார்த்தவுடன் அவதானிக்க முடிந்தது. அவனைக் கண்டதும் இவளுக்கு மனம் கேட்கவில்லை. அவனை நோக்கி இவள் ஓரெட்டு வைக்க, “சுதி, பொதுசேவை செய்ற நேரம் இல்ல இது. ஏற்கனவே டைமாகிடுச்சு. சூப்பர் வைசர் எப்போ எப்போன்னு காத்திருக்கான். நீ லேட்டா வந்த, உன்னை வச்சு செஞ்சுடுவான் டி!” விவேகா தோழியின் கையைப் பிடித்திருந்தாள்.
அவளை நிமிர்ந்து பார்த்த சுதி, “பரவாயில்லை விவேகா, திட்டு வாங்கிக்கிறேன்!” என மெல்லிய குரலில் உரைத்து அவளது கையை விலக்கிவிட்டு முன்னேறி அந்த வாலிபனருகே முட்டிப் போட்டு அமர்ந்தாள் சுதி.
“இங்க இத்தனைப் பேரு இருக்காங்கல்ல சுதி. யாராவது பார்த்துப்பாங்க‌. நீ தேவையில்லாத வேலை பார்க்காதே!” விவேகா எரிச்சலாய்க் கூற, சுதி அந்த வாலிபன் முகத்தை நிமிர்த்தி தன் மடியில் வைத்தாள். எங்கிருந்து குருதி வழிகிறது எனத் தெரியாமல் அவனது பின் மண்டையில் கையை வைத்துப் பார்க்க, ரத்தம் இன்னுமே குபுகுபுவென வழிந்தது. அவன் முகத்தை அப்படியே வயிற்றோடு அணைத்து தன் கைப்பையிலிருந்த சீருடையை எடுத்துக் கிழித்து இறுக கட்டினாள். அவன் வலியில் முகத்தைச் சுருக்க, “ஒன்னும் இல்ல சார்!” என அவனுக்கு மட்டும் கேட்குமாறு முணுமுணுத்தாள்.
“உங்கப்பாம்மா ஆக்சிடென்ல இறந்துட்டாங்கன்னு எங்க ஆக்சிடென்ட் நடந்தாலும் முத ஆளா போய் நிக்கிறதெல்லாம் ரொம்ப ஓவர் சுதி. இன்னைக்கு ஒருநாள் உனக்கு சம்பளம் கட்டு. அதுகூடப் பரவாயில்லை . அந்தாளு அத்தனை பேர் முன்னாடியும் வச்சு உன்னை அசிங்கப்படுத்துவான். எல்லாத்தையும் தாங்கிட்டு இதெல்லாம் பார்க்கணும்னு அவசியம் என்ன உனக்கு?” சிடுசிடுத்த விவேகாவிற்கு சுதி பதிலளிக்கவில்லை. அந்த வாலிபனின் உடைந்தக் கையை எடுத்து அசையாது பிடித்துக் கொண்டாள். அவனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதென்ற கரிசனமும் அக்கறையும் அவளை வெகுவாய் பதற்றப்படுத்தின.
“நான் கிளம்புறேன் சுதி. இப்போவே பத்து நிமிஷம் லேட்டு!” யாருக்கு வந்த விருந்தோ என்று விவேகா சென்றுவிட, இவளுக்கு தன் மடியில் படுத்திருந்தவனை நினைத்து பதைபதைத்துப் போனது. மண்டையில் நிற்காது ரத்தம் வழிய, அவசர ஊர்தி விரைவில் வந்துவிட வேண்டும் என்ற வேண்டுதலோடு சாலையில் விழிகளைப் பதித்தாள். சில பல நிமிடங்களில் பெரும் அலறலுடன் அவசர ஊர்தி வந்து நின்றது.
“யாராவது ஹெல்ப் பண்ணுங்க, ப்ளீஸ்!” இவள் கூட்டத்தை நோக்கி குரலை உயர்த்த, இரண்டு மூன்று இளைஞர்கள் வந்து உதவி புரிய, சுதியும் அந்த ஊர்தியில் ஏறியமர்ந்துவிட்டாள்.
அவசரசிகிச்சை உதவியாளர் அவனுக்கு ஆக்ஸிஜன் முகமூடியை அணிவித்து, ரத்தம் வரும் இடத்தில் கட்டுப்போட்டுவிட்டார். பதினைந்து நிமிடங்களில் வாகனம் அரசு இராஜாஜி மருத்துவமனையின் பெரிய வாயிலின் உள்ளே சென்று நின்றது.
“ம்மா... ரெண்டு நிமிஷம் இருங்க. நான் போய் ஸ்ட்ரக்சரை தள்ள ஆள் கூட்டிட்டு வர்றேன்!” என அவர் அகலப்பார்க்க, “அண்ணா... நானே ஹெல்ப் பண்றேன். சீக்கிரம் கூட்டிட்டுப் போகலாம். இரத்தம் வந்துட்டே இருக்கு!” என்றவள் ஒருபுறம் ஸ்ட்ரக்சரைத் தள்ள, அவன் மறுபுறம் தள்ளினான். ஆயிரக்கணக்கான மக்கள் அங்குமிங்கும் நடந்தும் பேசிக் கொண்டும் இருந்தனர். இவர்களைப் பார்த்ததும் பேச்சு சில நிமிடங்களுக்கு இவனைத் தொற்றியிருந்தது.
வாயிலைக் கடந்ததும் வலதுபுறம் சிறிய உணவகத்தோடு தேநீர் விடுதியும் இருந்தது. அதற்கருகே கால்வாய் மூடப்படாது திறந்துவிட்டிருக்க, அவர்கள் அப்பகுதியைக் கடந்து உள்ளே சென்றனர். அவசர சிகிச்சை பிரிவில் ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் இருந்தார். இரண்டு செவிலியர்கள் மேஜை முன்னே அமர்ந்திருந்தனர்.
இவர்கள் உள்ளே நுழைய, “என்னாச்சு?” ஒரு செவிலியர் மட்டும் அருகே வர, மற்றவர் குனிந்து நோட்டில் எதையோ எழுதிக் கொண்டிருந்தார். இவர்களைக் கவனித்தாலும் அவர் பெரிதாய் எதிர்வினையாற்றவில்லை. இதுபோல பல நூறு விபத்துகளைப் பார்த்தாகிவிட்டது என்றொரு பாவனை அவரிடம்.
“டாக்டர் வேற கேஸைப் பார்த்துட்டு இருக்காங்க. வெயிட் பண்ணுங்க. நான் ஃப்ரஸ்ட் எய்ட் பண்றேன்!” என்ற செவிலியர் அவனை அறைக்குள்ளே அழைத்துச் செல்ல, சுதி அந்த அறையையே பார்த்திருந்தாள். அவனுக்கு எதுவும் நிகழ்ந்துவிடக் கூடாதென மனம் பரிதவித்துப் போனது. கைப் பையை இறுக்கிப் பிடித்தபடி நின்றாள். ஐந்து நிமிடங்கள் கழித்து மருத்துவர் அந்த அறைக்குள் நுழைந்தார்.
அந்த வாலிபன் போட்டிருந்த சட்டையை கத்தரிக்கோல் வைத்து கிழித்தவர், தோள் பட்டையிலிருந்த காயத்திற்கு மருந்திட்டார். பின்பக்க தலையில் லேசாய் பிளந்திருக்க, அவனைத் திரும்பிப் படுக்க வைத்து அந்தப் பகுதியை பஞ்சை வைத்து அவர் சுத்தம் செய்ய, செவிலியர் அவன் தலை முடியை குறிப்பிட்ட இடத்தில் அகற்றினார். அவர்கள் இருவரும் ஏதோ அவனைப் பற்றிப் பேசிக் கொள்கின்றனர் என்பது மட்டுமே சுதிக்குப் புரிந்தது. என்னெவென அனுமானிக்க முடியாது நின்றிருந்தாள். அந்த வாலிபனின் பின்புற தலையில் மருத்துவர் தையலிட்டதை இவள் விழி சிமிட்டாது பார்த்தாள்‌.
மற்றொரு செவிலியரும் உள்ளே நுழைய, அவர் அறைக் கதவை சாற்றிவிட்டார். இவளுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. எங்கேனும் அமரலாமா எனச் சுற்றிப் பார்க்க, அங்கிருந்த இருக்கைகள் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. சிலர் நின்று கொண்டும் இருக்க, இவள் ஓரமாய் சுவரில் சாய்ந்தாள்.
இருபது நிமிடங்களை அசாத்தியமாய் விழுங்கிவிட்டு செவிலியர் வெளியே வந்தார்.
“அவருக்கு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிட்டோம். உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. கைல பிராக்சர் ஆகியிருக்கு. அதுக்கு ஆப்ரேஷன் பண்ணணும். உடனே பண்ண முடியாது. டாக்டர்தான் டேட் சொல்வாங்க. எல்லாத்துக்கும் முன்னாடி அட்மிஷன் போடணும்மா. அவரோட டீடெயில்ஸ் எல்லாம் சொல்லுங்க!” என்றபடி அவர் நடந்து சென்று ஒரு நோட்டை விரித்தார்.
“என்ட்ரன்ஸ் கேட் தெரியுமா உங்களுக்கு?” அவர் வினவ, இவள் தலையை அசைத்தாள்.
“அங்க முன்னாடி ஓபி சீட்டு தருவாங்க. அதுக்குப் பக்கத்துல சின்ன ரூம்ல ஒருத்தர் உக்காந்து இருப்பாரு‌. அங்கப் போய் அட்மிஷன் போட்டுட்டு வாங்க. அப்புறம்தான் இவரை அட்மிட் பண்ணி அடுத்து ட்ரீட்மெண்ட் பார்க்க முடியும்மா!” அவர் கூற, இவள் தயங்கினாள்.
“சிஸ்டர், அவர் யாருன்னு எனக்கு டீடெயில்ஸ் தெரியாது. ரோட்ல போகும்போது ஆக்ஸிடென்ட். நான் கூட்டீட்டு வந்தேன்!” அவள் கூறவும், அவர் முகம் கடுகடுத்து.
“ஏம்மா... முன்னாடியே சொல்றதுக்கென்ன. இவ்வளோ நேரம் பேசவிட்டு வேடிக்கைப் பார்த்தீயா நீ? போ... போய் அவன்கிட்டே ஃபோன் எதுனா இருந்தா எடுத்து வீட்டுக்கு இன்பார்ம் பண்ணு. யாராவது வரட்டும். அப்புறம் அட்மிட் பண்ணிக்கலாம்...” அவர் எரிச்சலாய்க் கூற, சுதியிடம் எந்தவித பாவனையும் இல்லை. தலையை அசைத்தவள், அவனிருந்த அறைக்குள்ளே நுழைந்தாள்.
“உள்ள எல்லாம் வரக்கூடாது மா... வெளிய போங்க முதல்ல!” மற்றொரு செவிலியர் சிடுசிடுக்க, “சிஸ்டர், அவர்கிட்டே ஃபோன் எதாவது இருக்கான்னு பார்க்க வந்தேன். வீட்டுக்கு இன்பார்ம் பண்ணணும்!” என இவள் மெதுவாய் உரைக்க, “சீக்கிரம் எடுத்துட்டுப் போங்க!” என அவர் கூறியதும், விறுவிறுவென உள்ளே சென்றவள் சில நொடிகள் தயங்கிவிட்டு அவன் கால்சராயில் கைவைத்தாள். ஒரு பக்கம் அலைபேசி இருப்பதாய் தெரியவில்லை. மறுபுறம் சென்று பார்க்க, அலைபேசி இருந்தது. பெருமூச்சுடன் அதை கையிலெடுக்க, அவன் கைக்குட்டையும் கையோடு வர, அதை எடுத்து அலைபேசியில் படிந்திருந்த ரத்தத்தைத் துடைத்தாள்.
அலைபேசி நிறைய அடிவாங்கியிருந்தது. அதை உயிர்ப்பிக்க, அவள் நினைத்தது போலவே கடவுச்சொல் கேட்டது. என்ன செய்வது எனத் தெரியாது சுதி விழித்து நிற்க, அலைபேசி இசைத்தது‌. உடனே அதை ஏற்றுக் காதுக்கு கொடுத்தவாறே சலசலப்புகளற்ற அமைதியான இடத்திற்கு நகர்ந்தாள்.
“நிவின், வேர் ஆர் யூ? ஒன் அவர் ஆச்சு நீ கிளம்பி. இங்க எல்லாரும் வெயிட்டிங்‌. மூடே அப்செட் பண்ண வைக்கிற மேன் நீ!” மறுபுறம் ஒருவன் கத்த, “ஹலோ...” என்றாள் சுதி.
திடீரென ஒரு பெண் குரல் கேட்கவும், அவன் நிதானித்தான். “ஹலோ... நிவின்?” அவன் நிறுத்த, “சார், என் பேர் சுதி. இங்க இந்த போனோட ஓனருக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு. கூட்டீட்டு வந்து நான்தான் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணேன்!” அவள் கூறியதும், எதிரிலிருந்தவன் பதற்றத்துடன் எழுந்து நின்றான்.
“எந்த ஹாஸ்பிடல் சிஸ்டர். இப்போவே நான் வரேன்!” என்றவன் மகிழுந்தை நோக்கி விரைய, அவனுடன் இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் உடன் வந்தனர்.
“இங்க ஜி.ஹெச்ல தான் இருக்கோம் சார்!” சுதி பதிலுரைக்க, “ஓகே சிஸ்டர், டென் மினிட்ஸ். வீ வில் பீ தேர்...” என அவன் அழைப்பைத் துண்டிக்க, சுதிக்கு நிம்மதி படர்ந்தது. அவர்கள் வந்தவுடன் இவனை ஒப்படைத்துவிட்டு அகன்று விடலாம் என எண்ணியவள் கையை முகத்தருகே கொண்டு செல்ல குருதி வாசனை குமட்டியது. தன் பையை எடுத்து அவனது அலைபேசியைப் பத்திரப்படுத்தியவள், “சிஸ்டர், இந்த பேக்கை மட்டும் பார்த்துக்குறீங்களா? ஒரு டென்மினிட்ஸ்ல இதை வாஷ் பண்ணிட்டு வர்றேன்.‌..” என செவிலியரிடம் கூறிவிட்டு பத்து நிமிடங்கள் அலைந்து திரிந்து கழிவறையைக் கண்டு பிடித்தாள்.
அவள் உள்ளே செல்ல, ஏற்கனவே வரிசையில் ஆட்கள் நின்றிருந்தனர். கழிவறை ஓரளவிற்கு சுத்தமாய் இருந்தாலும் இவளுக்கு அங்கே நிற்க ஒப்பவில்லை. இன்னுமே குமட்டிக்கொண்டு வந்தது.
நான்கு கழிவறை முன்னே இரண்டிரண்டு நபர்கள் நிற்க, இவள் மூன்றாவதாய் நிற்க வேண்டிய சூழ்நிலை. எப்போதடா இங்கிருந்து செல்லலாம் என மூச்சை இழுத்துப் பிடித்தவளைப் பார்த்து மனமிறங்கிய முதிய பெண்மணி, “ஏம்மா... என்னாச்சு, ட்ரெஸ் எல்லாம் ரத்தமா இருக்கு?” என வினவினார்.
“வர்ற வழியில ஒரு ஆக்ஸிடென்ட்மா. அதான்!” என்றாள் இவள்.
“சரிம்மா... வா, வந்து இங்க கழுவிக்கோ!” அவர் இடம்தர, இவள் நன்றியாகப் பார்த்தாள்.
“எம்மா... இப்போ வந்த புள்ளையை உள்ள விட்ற. உனக்குப் பின்னாடி நிக்கிறேனே. நான் உன் கண்ணுக்குத் தெரியலையா?” அந்தப் பெண்ணின் பின்னே நின்றிருந்தவர் எரிச்சலாய்க் கூற, சுதி தயங்கி நின்றுவிட்டாள்.
“ஏம்மா... ரெண்டு நிமிஷம். அந்தப் புள்ளை கழுவிட்டுப் போகட்டுமே. நீ எனக்கு முதல்ல கூட போ, நான் பிறகு போய்க்கிறேன்!” என அவர் சுதிக்கு உதவ, இவள் சென்று முகம் கைகால் கழுவி, உடையையும் நீரில் நனைத்தாள். ரத்தம் காய்ந்திருக்க, கறையாய் படிந்துவிட்டது. முடிந்தவரை முயற்சித்துவிட்டு, அந்தப் பெண்ணிடம் நன்றியுரைத்தவாறே வெளியே வந்து மூச்சை வெளிவிட்டாள்.

பொதுக் கழிவறை என்பதால் ஒவ்வாமையில் வயிற்றைப் பிரட்டியது சுதிக்கு. அதுவும் இவள் சென்ற கழிவறை கொஞ்சம் அசுத்தமாய் வேறு இருக்க, பெண்ணால் சுத்தமாய் முடியவில்லை.
அப்படியே வெயில் படுமாறு உடையை காயவைத்துக் கொண்டே நடந்துவந்து அவசரசிகிச்சைப் பிரிவிற்குள் நுழைந்தாள். அந்த வாலிபனின் அலைபேசி அலறிக் கொண்டே இருக்க, “ஃபோன் அடிச்சிட்டே இருக்கு‌‌. எடுத்துப் பேசு மா!” அருகில் ஒருவர் கூற, அதை உயிர்ப்பித்து காதிற்கு ஈந்தாள்.
“சிஸ்டர், எங்க இருக்கீங்க. வீ ஆர் இன் ஹாஸ்பிடல்!” எதிர்முனையில் குரல் பதற்றத்துடன் வர, “ஹாஸ்பிடல் ரெண்டாவது கேட்கிட்டே இருக்கோம். முதல்ல ஒரு சின்ன கேட் இருக்கும். அதை க்ராஸ் பண்ணி வாங்க. உள்ள வந்ததும் ரைட் சைட் திரும்புனீங்கன்னா, ஐஞ்சாவது நம்பர் அவசர சிகிச்சைன்னு போட்டிருக்கும். லேபர் வார்ட்க்கு ஆப்போசிட்ல இருக்கும். உள்ள வந்து ஸ்ட்ரெய்ட்டா வாங்க சார்!” அவள் கூற, பத்து நிமிடங்கள் பிடித்தது அவர்கள் வழி கேட்டு உள்ளே வர.
இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் உள்ளே நுழைய, சுதிக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது. “சிஸ்டர்...” அவன் பேசியபடியே கைபேசியை காதில் சொருக, இவள் அவர்களாகத்தான் இருக்கக் கூடுமென அனுமானித்து அழைப்பை ஏற்காது அவர்களை நோக்கிச் சென்றாள்.
“சார், நான்தான் கால் பேசுனது...” இவள் கூறியதும், “இப்போ நிவினுக்கு எப்படி இருக்கு? அவன் நல்லா இருக்கானா?” என உடன் வந்தப் பெண் அழுகையுடன் கேட்டாள். அவள் கண்களில் கண்ணீர் தளும்பி நின்றது.
“அக்ஷா, டோன்ட் க்ரை. அவனுக்கு ஒன்னும் இருக்காது!” மற்றொரு பெண் அவளை சமாதானம் செய்ய, “உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லைன்னு டாக்டர் சொன்னாரு. ஆனால் கைக்கு மட்டும் ஆப்ரேஷன் பண்ணணும்னு சொன்னாங்க. எனக்கு மத்த டீடெயில்ஸ் எதுவும் தெரியாது. நீங்க கேட்டீங்கன்னா சொல்லுவாங்க...” என்றாள் அவர்களை சமாதானம் செய்யும் விதமாக, பெரியதாய் ஒன்றுமில்லை என்பது போலத்தான் உரைத்தாள்.
“தேங்க் யூ சோ மச் சிஸ்டர். இட்ஸ் அ டைம்லி ஹெல்ப்!” அவன் மனதார நன்றியுரைக்க, “பரவாயில்லை சார், நீங்க பார்த்துக்கோங்க. இந்த ஃபோன் ஆக்ஸிடென்ட்ல டேமேஜ் ஆகிடுச்சு. அவரோட பர்ஸ், கர்சீப், செயின், வாட்ச் எல்லாம் இதுல இருக்கு. செக் பண்ணிக்கோங்க. நான் கிளம்புறேன். எனக்கு வேலைக்கு டைமாச்சு...” அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, “ஆரோன்... என்னால இங்க நிக்க முடியலை டா. சீக்கிரம் நிவினை ப்ரைவேட் ஹாஸ்பிடலுக்கு ஷிப்ட் பண்ணலாம். ஐ ஃபீல் லைக் வாமிட்டிங்!” என மற்றொரு வாலிபன் முகத்தைச் சுளித்தான். பெண்கள் இருவரும் செவியலியரிடம் நின்று என்னவென விசாரித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் உடை, அணிந்திருந்த வாசனை திரவியம், பேச்சு என அனைத்திலும் பணக்காரத் தன்மை கொட்டிக் கிடந்ததை சுதி கவனித்தாலும் கருத்தில் கொள்ளவில்லை.
“ஒன்ஸ் அகைன் தேங்க் யூ சோ மச் சிஸ்டர்!” என அவன் கைக் குலுக்க வர, சிறிய தலையசைப்புடன் அதை ஏற்றவளின் கைகள் அவனை நோக்கி நீளவில்லை.
“கைல ப்ளட்டா இருக்கு சார். அதான்!” என சம்பிரதாயமாகப் புன்னகைத்தாள்.
“சாரி சிஸ்டர், நான் கவனிக்கவே இல்ல. உங்க ட்ரெஸ் ஸ்பாயில் ஆகிடுச்சு. வாங்க, நான் வேற வாங்கித் தரேன்!” அவன் கூற, “பரவாயில்லை சார். நான் பார்த்துக்கிறேன்...” என அவள் நகர, “நோ... நோ. ப்ளீஸ் ஒன் மினிட் சிஸ்டர்...” என அவன் கட்டாயப்படுத்த, சுதியால் அதற்கு மேலும் மறுக்க இயலவில்லை. அங்கேயே நின்றாள்.
“நந்து, இங்க வா...” அவன் குரல் கொடுக்க, ஒரு பெண் இவனருகே வந்தாள்.
“நந்து, இவங்களைக் கூட்டீட்டுப் போய் ட்ரெஸ் வாங்கிக் கொடு. நாங்க அவனை வேற ஹாஸ்பிடல் ஷிஃப்ட் பண்றதைப் பார்த்துக்கிறோம்...” அவன் கூற, “ஓகே பாலா, அக்ஷாவை கன்சோல் பண்ணுங்க. அவ அழுறது கஷ்டமா இருக்கு. நர்ஸ்கிட்டே பேசிட்டோம். ஆரோன் டாக்டரை மீட் பண்ணிட்டு வந்ததும், நீங்க பக்கத்துல இருக்க ஹாஸ்பிடல் கூட்டீட்டு போங்க. ஹம்ம், ப்ரீத்தி ஹாஸ்பிடல் போங்க‌. என் ஃப்ரெண்ட் ஆனந்த் அங்க டாக்டரா இருக்கான்...” என்றவள் சுதியைப் பார்த்து புன்னகைக்க, இருவரும் நடந்தனர்.
“தேங்க் யூ சோ மச்ங்க. உங்களோட ஹெல்ப்பை என்னைக்கும் மறக்க மாட்டோம். நீங்க இல்லன்னா, நிவினுக்கு என்ன ஆகியிருக்கும்னு நினைச்சே பார்க்க முடியலை!” அந்தப் பெண் நந்தனா உணர்ந்து பேச, இவள் அமைதியாய் கேட்டுக் கொண்டாள். முகம் நந்தனாவின் குரலிலிருந்த ஆசுவாசத்தில் கொஞ்சம் கனிந்து போனது. ஆறுதலாய் அவளைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
நந்தனா மகிழுந்தை இயக்க, தயக்கத்துடன் சுதி ஏறி அமர்ந்தாள். மருத்துவமனையைக் கடந்து அவள் வலதுபுற சந்தில் ஒடித்து உள்ளே சென்று ஜம்ஜம் எனப் பெயரிட்டப்பட்ட ஜவுளி கடையின் முன்பு வாகனத்தை நிறுத்தினாள்.

இருவரும் உள்ளே செல்ல, “ரெடி மேட் சூட்ஸ் பார்க்கணும்!” நந்தனா கூற, “ரைட் சைட் மேடம்...” என்ற ஊழியரிடம் தலையசைத்து அப்பகுதியை அடைந்தனர்.
“எந்த ரேட்ல பார்க்குறீங்க மேடம்?” கடை சிப்பந்தி வினவ, “மணி இஸ் நாட் அ இஷ்ஷூ. நல்ல சூட்டா காமிங்க...” நந்தனா கூறிவிட்டு அலைபேசியை எடுத்துக்கொண்டு இரண்டடிகள் நகர்ந்தாள். சிப்பந்தி விலை உயர்ந்த உடைகளை எடுத்துப் போட, சுதி விலையைப் பார்த்து மலைத்தாள். மூன்றாயிரம், நான்காயிரம் என விலை போட்டிருக்க, “அக்கா... ஐநூறு ரூபாய்ல ட்ரெஸ் காமிங்க கா. சிம்பிளா போட்ற மாதிரி இருந்தா போதும்‌...” எனக் கூறி விலை குறைந்த உடையை தேர்ந்தெடுத்தாள்.
“செலக்ட் பண்ணிட்டீங்களா?” நந்தனா வர, சுதி தலையசைத்தாள். அவள் பணத்தை செலுத்திவிட்டு காத்திருக்க, உடைமாற்றி வந்தாள் சுதி. பழைய உடையை கைப்பையில் பத்திரப்படுத்தினாள். அந்த உடையை தூக்கிப் போட விருப்பமில்லை. அவளுடைய அண்ணன் கடைசியாக அவளுக்கு வாங்கிக் கொடுத்தது மட்டுமன்றி, அதை அணியும் போது தமையன் உடனிருப்பதைப் போல அவளும் உணர்ந்திருக்கிறாள். அதனாலே அந்த உடையை அவளுக்கு தூக்கி எறிய மனதில்லை.
“வாங்க, உங்களை நானே ட்ராப் பண்றேன்...” நந்தனா நடந்து கொண்டே கூற, “இல்ல... பரவாயில்லை. பஸ் ஸ்டாப் பக்கத்துலதான். நானே போய்க்கிறேன்...” என மறுத்த சுதி விறுவிறுவென பேருந்து நிலையத்தை நோக்கி நடையிட்டாள். காலையிலிருந்து உணவு ஈயாத வயிறு கத்தியது.
வசந்தநகர் செல்லும் பேருந்து வர, இவள் ஏறியமர்ந்தாள். அலைபேசி இசைத்தது. எடுத்துக் காதிற்குப் பொருத்த, “சுதி, எப்போ வருவ டி... இங்க சூப்பர் வைசர் நல்லா கோபத்துல இருக்காரு‌. நீ மட்டும் மாட்டுன, செத்த. நான் சொன்னதை கேட்டிருக்கலாம் டி நீ. இப்போ பாரு, அந்தாள்கிட்டே செம்மையா வாங்கப் போற. போ...” விவேகா இவளுக்காக வருந்த, சுதிக்கும் மனதில் பயபந்து சுழலாமல் இல்லை. இருந்தும் காலையில் அப்படியே அந்த வாலிபனை விட்டுச் செல்ல மனதில்லை. இப்போது வணிகவளாகம் செல்வதை நினைத்தாலே பயம் படர்ந்தது‌.
இதற்கு முன் சுதி ஒரு சில முறை
மேற்பார்வையாளரிடம் திட்டு வாங்கியிருக்கிறாள்தான். இருந்தும் என்னவாகப் போகிறதோ என்ற பதைபதைப்பு அவளையும் மீறி முகத்தில் வியர்வையை அரும்பச் செய்தது. எப்படியும் எதிர்கொள்ளத்தான் வேண்டும். 'ஒன்னும் இல்ல சுதி, பயப்படாத. பார்த்துக்கலாம்!' அலைப்புற்ற மனதை சுயத்தேற்றலில் மீட்டு, அலைபேசியில் கவனத்தைப் பதித்தாள்.
“அங்கேதான் வரேன் விவேகா...” சுதி பதிலளிக்க,
“சரி, சரி. சாப்பிட்டு வா நீ. இங்க அந்தாள் சாப்பிட கூட விடாம நிக்க வச்சே கொன்னுடுவான். திட்டு வாங்குறதுக்கு தெம்பா வா!” என அவள் அழைப்பைத் துண்டிக்க, சுதியும் என்ன சொல்லி மேற்பார்வையாளரை சமாளிப்பது என யோசிக்கலானாள்.

தொடரும்...



 
Well-known member
Messages
1,110
Reaction score
799
Points
113
Evlo naal kalichu story pottirukka jaanu ma, thank you


Nice starting ma
Accident aana payyan thaan hero va, daily ud undaa

Waiting for next ud ma
 
Well-known member
Messages
619
Reaction score
429
Points
63
இன்னிக்கு தான் படிக்க ஸ்டார்ட் பண்ணியிருக்கேன். நைஸ் ஸ்டார்ட்
 
Messages
60
Reaction score
39
Points
18
சாலையில் நடந்த விபத்து
சாவுமுன் நிற்கும் ஓர் உயிர்
வலி நிறைந்த கண்கள் மூட,
அஞ்சிடாமல் கை கொடுத்தாள்
வஞ்சி இவள் துணிந்து....

பார்க்கின்றோர்
பலர் இருந்தும்,
பதறி ஓடினர் சிலர்
பழைய ரணம்
பாவையின் மனதில் ஆதரவு கரம் நீட்ட
அன்பு இங்கு
அனாதை இல்லை

உயிர் காக்க
உதவி செய்ய,
உள்ளம் கொண்டோர் துணை நிற்க
உணர்ந்தேன்
உயிரின் ஓசை....



 
Top