• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை 20

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
புன்னகை 20:


யாரும் வாழாத

ஆகப்பெரும் வாழ்வு
வாழ்வதற்கு ஒரு பேரன்பு

ஒன்றே போதுமானது

விழிகள் முழுவதும் நிறைந்துவிட்ட நீருடன் தன்னை வெறுப்புடன் பார்த்தபடி செல்பவளையே வெறித்த செல்வாவிற்கு கால்கள் தள்ளாடியது.

ஒரு ஆயிரம் டன் அதிர்ச்சியை தலையில் இறக்கி வைத்தது போல பிரம்மை.

உதடு கடித்து அழுகையை அடக்கி நின்றாள்.

சுஸ்மியின் வார்த்தைகள் முகத்தில் அறைய சுற்றி இருந்தவர்கள் தன்னையே கூர்ந்து பார்ப்பதில் குறுகிப் போனவள் கையில் இருந்த பொருட்களை அங்கேயே வைத்துவிட்டு மகளை தூக்கிக் கொண்டு வெளியே வந்துவிட்டாள்.

மனது வேகமாக அடித்துக் கொள்ள தனது இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு குடியிருப்பை நோக்கி சென்றாள்.

வாகனத்தை நிறுத்திவிட்டு அவர்களது தளத்தை நோக்கி நடந்தவளுக்கு நடந்த நிகழ்வை கிரகிக்க முடியவில்லை.

எப்படி வீடுவரை நன்றாக வந்து சேர்ந்தாள் என்பது அவளறியாதது.

எத்தனை மோசமான வார்த்தைகளை தன்னை நோக்கி பேசி சென்றுவிட்டாள்.

'கணவனை இழந்துவிட்டேனா? அதுவும் ஆறு மாதத்தில் வேறொருவனை தேடி கொண்டேனா? என் வாழ்வில் நடந்தது என்ன?' என்று சிந்தித்தவளுக்கு ஏதேதோ நிகழ்வுகள் யாருக்கோ திருமணம் நடப்பது போல நினைவு வந்து செல்ல தலையை இறுக்கமாக பிடித்து கொண்டவள் ஒரு கையில் மகளை பிடித்திருந்தாள்.

கண்களை இருட்டிக் கொண்டு வர சுவற்றில் சாய்ந்து நின்றவளுக்கு தலை விண்ணென்று வலிக்க அங்கிருந்து நகர முடியவில்லை.

அவர்களது வீடு இருந்த தளத்தின் ஒரு ஓரத்தில் மகளை கையில் பிடித்தபடி நின்றிருந்தவள் அதற்கு மேல் நகர முடியாதவளாக அப்படியே சாய்ந்து அமர்ந்துவிட்டாள்.

மகளுக்கு தாய்க்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை ஆதலால் அவளும் தாயின் அருகில் அமர்ந்து கொள்ள,

அங்கே சென்று கொண்டிருந்த ஒருவர் வந்து, "செல்வா என்னாச்சு?" என்று அவளிடம் வினவ, அவளால் பதில் கூற இயலவில்லை.

மெதுவாக தலையை நிமிர்த்தியவள், "லேசா ஹெட் ஏக் தான்.‌ என்னை வீட்டு வரை அழைச்சிட்டு போறீங்களா?" என்று சிரமப்பட்டு வினவ,

"லைட்டா ஹெட் ஏக்கா. இப்படி போய் உட்கார்ந்துட்ட டாக்டரை கூப்பிடணும்" என்றவர் கைக்கொடுத்து அவளை தூக்கிவிட அந்நிலையிலும் மகளது கையை விடாது பிடித்திருந்தாள்.

அப்போது வல்லபன் தனது கணவனில்லையா? எல்லோரும் தனது குடும்பத்தினரும் கூறினரே என்று எண்ணியவளுக்கு விழிகள் கலங்கியது.

சக்தி மொத்தமும் வடிந்துவிட்டது போலாக விழிகள் மங்கலாக தெரிந்தது.

என்ன முயன்றும் விழிகளை திறக்க இயலாது போக வீட்டின் வாசலிலே மயங்கி சரிந்திருந்தாள்.

தாயின் நிலையை கண்ட அதிக்கு ஏதோ புரிய, "ம்மா ம்மா…" என்று அழத் துவங்கினாள்.

செல்வாவை அழைத்து வந்தவர் வேறு சிலர் உதவியுடன் அவளை உள்ளே தூக்கி சென்று மெத்தையில் படுக்க வைத்துவிட்டு மருத்துவரை அழைத்தார்.

இதில் அதியின் அழுகை வேறு அதிமாகிட அவர் தான், "அம்மாக்கு ஒன்னுமில்லைடா" என்று சமாதானம் செய்தபடி இருந்தார்.

பத்து நிமிடத்தில் மருத்துவர் வந்து அவளை பரிசோதித்துவிட்டு,

"நத்திங் டு வொர்ரி. ஷாக்ல தான் மயங்கி இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில அவங்களே கண் முழிச்சிடுவாங்க" என்று கூறி சென்றார்.

அவர் கூறியது போலவே பத்து நிமிடத்தில் நினைவு திரும்ப விழிகளை சிரமப்பட்டு திறந்தவள் முன்னர் மகளது அழுத முகம் வந்து நிற்க,

"ச்சு அம்மாக்கு ஒண்ணுமில்லைடா. அம்மா நல்லாயிருக்கேன்" என்று அணைத்து கொண்டவள்,

"ஹெல்ப் பண்ணதுக்கு ரொம்ப தாங்க்ஸ் ஆன்ட்டி" என்று நன்றி கூற,

"இருக்கட்டும்மா. வேற ஏதாவது ஹெல்ப் வேணும்னா என்னை கூப்பிடு. வல்லபனுக்கு இன்பார்ம் பண்ணவாம்மா?" என்றவர் வினாவிற்கு,

"இல்லையில்லை வேணாம். அவர் பயந்திடுவார். வந்ததும் நானே சொல்லிக்கிறேன்" என்று அவரை அனுப்பிவிட்டு கதவை அடைத்தவள் அப்படியே மடங்கி அமர்ந்துவிட்டாள்.

கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தோட வலது கரத்தால் வாயை மூடிக் கொண்டவளுக்கு அழுகை பெருகியது.

"ஆ…." வென‌ கத்தி அழ வேண்டும் போல இருந்தது.

நடந்த அனைத்தும் கண்முன்னே நழுவிச் செல்ல செல்ல அழுகை கேவலாக பெருகியது.

நடந்தவை நினைவில் வரவில்லை‌ என்று வருந்தியவளுக்கு நினைவிற்கு வந்தால் தான் ஆயிரம் ஆயிரம் பாகங்களாக சிதறிப் போவோம் என்று தெரிந்திருந்தால் நினைவு திரும்பி வரவே வேண்டாம் என்று நினைத்திருப்பாளோ.

தன் வாழ்வில் இப்படி ஒரு சூழ்நிலை வந்து நிற்கும் என்று கனவிலும் அவள் எண்ணியிருக்கவில்லை.

எல்லோர் மீதும் கோபம் வந்தது. தன் மீது கோபம் எக்சக்கமாக வர காலில் முகத்தை புதைத்து அழுது தீர்த்தாள்.

அழுகை குறைந்தபாடில்லை. தாயின் நிலையை கண்ட அதி மீண்டும் அழத் துவங்க,

"ம்மாக்கு ஒன்னுமில்லைடா" என்று கண்ணீரை துடைத்தவளுக்கு ஆறாக பெருக,

"என்னால முடியலைடா" என்று மகளை இறுக்கி கொண்டவளது அழுகை நிற்காது தொடர்ந்தது.

அழுதழுது ஓய்ந்தவளுக்கு அங்கே இருக்க முடியவில்லை. என்னவோ நெருப்பில் இருப்பது போல சுட்டது.

அதுவும் சுஸ்மியின் வார்த்தை 'கணவன் இறந்த ஆறு மாதத்திலே வேறு ஒருவனை தேடிக் கொண்டாய்' என்று மனதினில் நெருப்பை அள்ளித் தெளித்து மனதின் ரணத்தை அதிகப்படுத்தியது.

இன்னும் சிறிது நேரத்தில் வல்லபன் வந்துவிடுவான் அவனை தன்னால் எப்படி எதிர்க்கொள்ள முடியும் என்று நினைத்தவளுக்கு உள்ளே ஒன்று மொத்தமாக நொருங்கிப் போனது.

சடுதியில் எழுந்தவள் கன்னத்தில் வழிந்த நீரை துடைத்துவிட்டு தனது அலைபேசியையும் பர்ஸையும் எடுத்து கொண்டவள் மகளை தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

அங்கிருந்து வெளியே வந்துவிட்டவளுக்கு எங்கு செல்வதென தெரியவில்லை.

மனது பெற்ற வீட்டை நினைக்க அதை தவிர வேறு வழியில்லாமல் போக அழுகையை அடக்கியபடி ஒரு மூன்று சக்கர வாகனத்தில் ஏறி பேருந்து நிலையத்தை நோக்கி சென்றவள் கோவை செல்லும் பேருந்தை தேடி கண்டறிந்து பயணச்சீட்டை வாங்கிக் கொண்டு மகளுடன் அமர்ந்துவிட்டாள்.

தன் வாழ்வில் தன்னுடைய அனுமதி இல்லாது நடந்துவிட்ட நிகழ்வுகளை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

கட்டுப்படுத்த முயன்றும் கண்களை கரித்து கொண்டு வந்தது.

அலைபேசியை அணைத்தவள் மகளை நெஞ்சோடு அணைத்து கொண்டு இருக்கையில் சாய்ந்து விட்டாள்.

என்னவோ வாழ்வு சடுதியில் கருமையை பூசிக் கொண்டது. எத்தனை அழகாக தொடங்கிய நாள் இப்படி ஒரு நிலையில் முடியும் என்று யாராவது நினைத்திருப்பார்களா?


சிறிது நேரத்தில் பேருந்து கிளம்பிவிட அதியும் தாயின் மடியில் உறங்கியிருந்தாள்.

ஆனால் அவளது தாய்க்கு தான் உறக்கம் மருந்துக்கும் இன்றி போனது.

இனியும் அது வருமா என்பது விடையறியா வினா தான்.

நினைக்க நினைக்க துக்கம் தொண்டையை அடைத்தது.

யாரிடமாவது கூறி கதறி அழ மனம் ஏங்கியது. ஆனால் யாரிடம் அழுவது எல்லோரும் தன்னிடம் பொய் கூறிவிட்டனரே…

என்னவோ அந்த நொடி மனது யாருமற்ற அனாதையாகி போனது.

நடந்துவிட்ட நிகழ்வின் ஈடு செய்ய இயலாத இழப்புகள் அவளை கொன்று தின்றது.

வேகுநேரமாக நீண்ட பேருந்து பயணம் கூட அவளது அழுகையை நிறுத்தவில்லை.

இடையில் அதி எழுந்து பசிக்குமாறு கூற அவளுக்கு மட்டும் உணவை வாங்கி கொடுத்தவள் தான் ஏதும் உண்ணவில்லை.

உண்ணும் நிலையிலும் இல்லை. உணர்வுகளே மறித்து போன நிலையில் உணவிற்கு அங்கு இடமேது.

கிட்டத்தட்ட பதினான்கு மணிநேர பயணத்தில் கோவை பேருந்து நிலையத்தை செல்வா பயணித்த பேருந்து அடைந்தது.

இரவெல்லாம் உறங்காது கண்விழித்து அழுதததில் முகமெல்லாம் சிவந்திருந்தது செல்வாவிற்கு.

உறங்கிய மகளை கையில் தூக்கியபடி இறங்கியவள் ஒரு மூன்று சக்கர வாகனத்தில் ஏறி வீட்டை நோக்கி பயணித்தாள்.

பத்து நிமிடங்களில் செல்வாவின் வீடு வந்திட பணத்தை கொடுத்துவிட்டு இறங்கியவளுக்கு கால்கள் உள்ளே செல்ல மறுத்தது.

என்னவோ அவர்களுக்கு தான் பாரமாகிவிடக் கூடாது என்று தான் இப்படி பொய் கூறினரோ என்ற எண்ணம் இரவு முழுவதும் தலைக்குள் ஓட மனது சிறிது சிறிதாக சிதைந்து கொண்டிருந்தது.

இருந்தும் தனக்கு இப்போதைக்கு போக்கிடமில்லை என்ற‌ எண்ணம் வேறு அவளை மேலும் பலவீனமாக்கியது.

சிரமப்பட்டு கால்களை நகர்த்தியவள் வாசல் இரும்பு கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்து அழைப்பு மணியை அழுத்தினாள்.

இறுதியாக விபத்து நடப்பதற்கு முன்பு தான் இங்கு வந்த நாள் நினைவு வர சிறிது சிறிதாக விழிகளில் நீர்க் கோர்த்தது.

"யாரது இந்த நேரத்தில?" என்றபடி கதவை திறந்த வேதவள்ளி அழுது சிவந்து உறங்காத விழிகளுடன் கலைந்த தோற்றத்தில் வேதனையை சுமந்து நிற்கும் மகளை கண்டு ஏகமாக அதிர்ந்து தான் விட்டார்.

மகளின் தோற்றத்தில் பதறியவர்,

"செல்வா என்னாச்சுடி. ஏன் இப்படி வந்து நிக்கிற மாப்பிள்ளை எங்க?" என வினவ,

"ஏன்மா எங்கிட்ட பொய் சொன்ன?" என்ற கேள்வி முடியும் முன்பே கன்னத்தை தாண்டியிருந்தது கண்ணீர்.

மகளின் கேள்வியிலும் அழுகையிலும் அவளுக்கு நடந்தது நினைவு வந்துவிட்டது என்று உணர்ந்த வேதவள்ளியின் கண்களும் கலங்கிப் போக மகளை மொழியின்றி வெறித்தார்.

"யாரு வேதா?" என்று கேட்டபடி வந்த ராமநாதனும் மகளின் தோற்றத்தில் அதிர்ந்து நிற்க,

"நீங்க கூட‌ நடந்ததை என்கிட்ட மறைச்சிட்டிங்களேப்பா" என்றவளது கேவல் பெரியதாக அழுகையை முயன்று அடக்கியவள் விறுவிறுவென உள்ளே நழைந்து கதவை பூட்டிக் கொண்டாள்.

இங்கே மகளின் கேள்வியில் அதிர்ந்து நின்ற பெற்றோருக்கு சில நிமிடங்கள் சென்று தான் தன்னிலை வர மகளின் செயலை உணர்ந்து பதற்றத்துடன் அவளறைக்கு சென்று,

"செல்வா கதவை திற டா. ப்ளீஸ் டா கதவை திற" என்று ராமநாதன் கெஞ்ச,

"செல்வா கதவை திறடி. அம்மா சொல்றதை கேளுடி. வெளிய வா எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்" என்று பரிதவித்தார்.

இங்கே இவர்களது குரல் கேட்டு காலையில் அலுவலகம் கல்லூரி கிளம்பி கொண்டிருந்த மற்றவர்களும் வந்திருந்தனர்.

தியாகு, "ம்மா என்னாச்சு. செல்வா எப்போ வந்தா?" என்று அதிர,

"டேய் அவளுக்கு எல்லாமே ஞாபகம் வந்திடுச்சிடா. வந்ததும் ஏன் மா இப்படி பொய் சொன்னேன்னு கேட்டு அழுதுக்கிட்டே போய் கதவை சாத்திக்கிட்டாடா" என்று அழுகையுடன் தேம்ப,

அதிர்ந்து நின்ற தியாகு, "செல்வா கதவை திற. அண்ணா சொல்றேன்ல கேட்க மாட்டியா? ப்ளீஸ்டி கதவை திற டி" என்று கெஞ்ச,

மற்றவர்களும் சேர்ந்து கதவை தட்ட துவங்கியிருந்தனர்.

கதவின் அடியில் கால்களை குறுக்கி அமர்ந்து கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தவள் எழுந்து பட்டென்று கதவை திறந்து,

"எல்லோரும் கொஞ்சம் என்னை ப்ரீயா விடுங்க. தப்பான முடிவெடுக்கிற அளவுக்கு நான் கோழையில்லை. போங்க இங்க இருந்து" என்று சடுதியில் கூறிவிட்டு மீண்டும் கதவை அடைத்துக் கொண்டாள்.

செல்வாவின் செயலில் தான் எல்லோரும் அதிர்ந்து நின்றுவிட்டனர்.

அதற்கு மேல் அவளுடைய தோற்றம் அது வெகுவாக குடும்பத்தினரை உடைய செய்திருந்தது.

"இப்படியெல்லாம் நடக்கும்னு தான் முன்னாடியே பயந்தேன்" என்ற ராமநாதன் தளர்ந்து அமர,

"ப்பா பயப்படாதிங்க. எல்லாம் சீக்கிரமே சரியாகிடும்" என்று அவரை தாங்கிப் பிடிக்க,

"எப்போடா சரியாகும். என் மகளை பார்த்தியா எப்படி அரை உசிரா நிக்கிறான்னு" என்றவர் கண்கள் கலங்கிட,

"ப்பா நீங்களே இப்படி துவண்டு போய்ட்டா எப்படி நான் வல்லபனுக்கு கால் பண்ணி என்ன நடந்ததுன்னு கேக்குறேன்" என்று அலைபேசியை எடுத்து கொண்டு நகர,

"புவனா பார்த்தியா? என் மகளை எப்படி உடைஞ்சு போய் நிக்கிறா. அதுவும் நீ‌‌ கூட‌ என்கிட்ட பொய் சொல்லிட்டியேன்னு கேட்குறா. அவ நல்லதுக்குத்தான் நான் செஞ்சேன்னு எப்படி அவளுக்கு புரிய வைக்கிறது" என்றவர் கண்ணீரை துடைக்க,

"அண்ணி அழாதீங்கண்ணி. அவளுக்கு எல்லாம் ஞாபகம் வர்றப்போ இதெல்லாம் வரும்னு நாம எதிர்பார்த்தது தானே. எல்லாமே சீக்கிரமா சரியாகிடும். செல்வா கண்டிப்பா எல்லாத் தேவைகளையும் புரிஞ்சுப்பா" என்று ஆறுதல் கூறினார்.


இங்கு தியாகுவின் அழைப்பை ஏற்ற வல்லபன் எடுத்ததுமே, "தியாகு செல்வா அங்க வந்துட்டாளா?" என்று பரிதவிப்புடன் வினவ,

"ஹ்ம்ம் வந்துட்டா. அவளுக்கு எல்லாமே நினைவு வந்திடுச்சு மாப்பிளை" என்றவனது குரல் நலிந்து ஒலிக்க,

"எனக்கு தெரியும் தியாகு. நான் இன்னும் அரை மணி நேரத்தில அங்க இருப்பேன். ஏர்போர்ட்ல இருந்து கார்ல வந்திட்டு இருக்கேன். வந்து பேசிக்கலாம்" என்றவன் பின்னர்,

"அவ அவ எப்படி இருக்கா? அழறாளா?" என்று தவிப்புடன் வினவினான்.

அவனது தவிப்பை குரல் வழி உணர்ந்த தியாகு, "ஆமா. ரொம்ப அழுகுறா" என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூற,

மறுபுறம் சில நொடிகள் மௌனம் ஆட்சி செய்தது.

"நான் வர்றேன் வந்து பேசிக்கிறேன்" என்று அழைப்பை துண்டித்தவன் தலையை இரு கரங்களாலும் பிடித்து கொண்டான்.

ஓரே நாளில் வாழ்வு இத்தனை மோசமாகும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

எத்தனை ஆசையாக மனைவியை காண வந்தவனை பூட்டியிருந்த வீடே வரவேற்க,

எங்கு சென்றாள் இவள் என்று அலைபேசிக்கு அழைக்க அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

சில நிமிடங்கள் காத்திருந்தவனுக்கு என்னவோ உள்ளுணர்வு உணர்த்த மீண்டும் அக்கம் பக்கம் விசாரிக்க யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

வல்லபனின் போதாத நேரத்திற்கு செல்வாவிற்கு உதவி செய்தவர்களும் அங்கு அப்போதைக்கு இல்லை.

மனைவிக்கு மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்து ஓய்ந்து போனவனுக்கு சிறிதான பயம் உள்ளே பரவியது.

தெரியாத ஊரில் எங்காவது வழி தெரியாது மாட்டிக் கொண்டாளா? என்று தெரியவில்லை.

பயத்தில் எதுவும் வேலை செய்யவில்லை.‌ தனது மகிழுந்தினை எடுத்து கொண்டு அருகில் உள்ள அணைத்து இடங்களுக்கும் சென்று தேடிப்பார்த்தவனுக்கு நேரம் செல்ல செல்ல பயம் நெஞ்சை கவ்விப்பிடித்தது.

தன்னவளுக்கு என்ன நேர்ந்ததோ என்ற‌ எண்ணமே அவனை அச்சம் கொள்ள செய்தது.

உடன் மகள் வேறு அவனுக்கு எதுவும் வேலை செய்யவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை.

தந்தைக்கு அழைத்து நடந்ததை கூற அவரும் அடித்து பிடித்து ஓடி வந்தார்.

மகனின் ஓய்ந்த தோற்றத்தில் வருந்தியவர் விரைந்து செயல்பட்டார்.

குடியிருப்பு வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கருவியில் பார்க்க செல்வா அழுதுக் கொண்டே மகளுடன் வெளியே செல்வது தெரிந்தது.

அதனை கண்ட வல்லபன் முழுதாக அதிர்ந்து போனான்.

அதுவும் மனைவியின் முகம் அதிலிருந்த கண்ணீர் வேதனை எதற்கும் காரணம் தெரியாது தவித்து போனவன்.

மனையாள் மகளுடன் எங்கே சென்றிருப்பாள் என்று தெரியாது இரவு முழுவதும் ஹைத்ரபாத்தினையே அலசிவிட்டிருந்தனர்.

ஒரு இரவு கடந்த பிறகும் மனைவியையும் மகளையும் காணாது மொத்தமாக உடைந்து தளர்ந்துவிட்டான் வல்லபன்.

அப்போது தான் செல்வாவிற்கு உதவி செய்தவர் மூலம் செய்தி வல்லபனை வந்தடைந்தது.

இதற்குள் அபிஷேக் செல்வா பயணித்த மூன்று சக்கர வாகன ஓட்டுநரை கண்டறிந்து அவர் இறக்கிய இடத்தினை கண்டறிந்திருந்தார்.

அத்தனை நேரமும் உரைக்காத ஒன்று மனைவிக்கு எல்லாம் நினைவில் வந்திருக்கக்கூடும் என்பது புத்தியில் உரைத்தது.

அடுத்த கணமே அவள் தாய் வீட்டிற்கு தான் சென்றிருக்கக் கூடும் என்று அறிந்திருந்தவன் உடனடியாக அடுத்த விமானத்திலே கோவையை நோக்கி பயணித்தான்.

இரவு முழுவதும் உறக்கத்தினை தொலைத்து மனைவியை தேடியவன் மனைவிக்கு நினைவு வந்ததில் அதிர்ந்து தான் போயிருந்தான்.

எப்படி அவளுக்கு தன்னை புரிய வைப்பது எதனை கூறி விளக்குவது என்று தெரியவில்லை.

நடந்தது தெரிந்த நொடியில் அவள் எவ்வளவு தூரம் அதிர்ந்திருப்பாள் வருந்தியிருப்பாள் என்று எண்ணி அவளுக்காக கலங்கி தவித்தான்.

ஒரே இரவில் வல்லபனும் மனைவியின் செயலில் ஓய்ந்து சோர்ந்து போயிருந்தான்.

அரை மணிநேரம் நகராது அவனை சோதிக்க ஒரு வழியாக செல்வாவின் வீட்டை அடைந்தவன் ஏறக்குறைய ஓடி தான் சென்றான்.

வல்லபனை வாசலிலே எதிர்க்கொண்ட தியாகு நடந்ததை கூறினான்.

வல்வபனது வாடி வதங்கிய தோற்றத்தை கண்டவர்களுக்கும் அவனது நிலை புரிந்தது. மகளை தேடி அலைந்திருக்கிறான் என்று தெரிந்தது.

அங்கிருந்த சூழ்நிலையே மனைவியின் தற்போதைய நிலையை உணர்த்திட‌ அவளறைக்கு முன்பு சென்று,

"செல்வா கதவை திற" என்று கூற மறுபுறம் பதிலில்லை‌.

"கதவை திறடி" என்றவனது கெஞ்சலுக்கும் பதிலில்லாது போக,

"செல்வா கதவை திறக்கிறியா. இல்லை நானே திறந்து உள்ள வரவா?" என்று அழுத்தமாக கூற,

சட்டென்று கதவு திறந்து கொண்டது.

உள்ளே அழுது சிவந்த முகத்துடன் நின்றிருந்த செல்வா அழுகையை கட்டுபடுத்த இதழ்களை அழுந்த கடித்து கொண்டாள்.

அழுகையை அடக்க முயற்சித்ததில் மேலும் முகம் கோவைப் பழமாக சிவந்து போனது.

கூந்தல் கலைந்து அழுது கரைந்து மொத்தமாக உடைந்து நிற்பவளை கண்டவனது உள்ளம் சில்லு சில்லாக சிதற மனையாளை வார்த்தையின்றி தவிப்புடன் நோக்கினான்.

இங்கு செல்வாவோ அவனது முகத்தினை பார்க்காது திரும்பி நின்றிருந்தாள்….






 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Selva kum.vallaban oda past la appadi enna than nadanthuchi onnumae puriyala ava love pannathu vallaban aana kalyanam avan kooda nadaka liya epudi ava innoruthar ah marriage pannikita appo adhi vallaban oda pappa illayae ah soppa sema ya mandai kayuthu
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
வல்லபன் செல்வ லைஃப் லா என்ன நடந்து இருக்கும் ஒன்னும் புரியல 2 பேரும் பார்க்க கஷ்டமா இருக்கு 😞🥺🥺
 
Top