• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை 2

Administrator
Staff member
Messages
606
Reaction score
836
Points
93
புன்னகை 2:

புன்னகைக்குள்

பூகம்பத்தை ஒளித்து
வைத்திருப்பாள் போலும்
ஓரடி புன்னகையில்
ஓராயிரம் பாகங்களாய்
சிதறிவிட்டேன்…!


"மச்சான் ஏன்டா இப்படி பண்ணிட்ட?" என மதன் வினவ,

"டேய் நாங்க பேசிட்டு இருக்கோம்ல நீ எதுக்கு இடையில வந்து நான் தான் செஞ்சேன்னு ஒத்துக்கிட்ட?" என்று அஜய் ஏகமாக முறைத்தான்.

வல்லபனிடம் எந்த பதிலும் இல்லை அமைதியாக நின்றிருந்தான். இல்லையில்லை சற்று முன்னர் மின்னலென வந்து சென்ற மஞ்சள் சுடிதாரை தோள்பட்டை தாண்டி ஊசலாடிய கூந்தலை கண்ணாடிக்கு பின்னால் ஒளிந்திருந்த நீண்ட கண்களை அவனை முறைத்த நொடி செவ்விளனியாய் சிவந்த நாசியினை தான் நினைத்து கொண்டிருந்தான்.

"ஹெச் ஓ டி கிட்டயே இப்படி பேசிட்டு வந்திட்ட. இனி ப்ரின்சி கண்டிப்பா சஸ்பெண்ட் பண்ணிடுவாரு" என்று மதன் வருந்த,

"ஆமா பெரிய ப்ராப்ளம் ஆக போகுது. எல்லாம் அந்த ஜான்சி ராணியால தான்" என்று கோபத்தில் மொழிந்தவன் அப்போது தான் வல்லபன் பேசாதிருப்பதை கண்டு,

"என்ன இப்படி சிலை மாதிரி நின்னுட்டு இருக்க. நாங்க இங்க கத்திட்டு இருக்கோம்" என்று பொறிந்தான்.

கைகள் இரண்டையும் தூக்கி சோம்பல் முறித்தவன் இவர்களது கத்தல் எதுவுமே காதில் விழாத பாவனையில் சுவாதீனமாக திரும்பி,

"கிரவுண்டுக்கு போலாமா? பசங்க வெயிட் பண்ணுவாங்க" என்று கூறிவிட்டு நடக்க துவங்க,

அஜயும் மதனும் தான் இவனது செயலில் முழுவதுமாக கோபமாகி போயினர்.

நண்பர்களை விட்டுவிட்டு நடந்து விளையாட்டு மைதானத்திற்கு நடந்து வந்தவனது மனம் செல்வாவையே சுற்றி வர,

'செல்வான்னு சொன்னாங்களே முழுப்பெயர் என்னவாக இருக்கும்?' என்று சிந்தித்தவாறு இருந்தது.

தான் இப்போது கோபமாக பேசியது அதுவும் துறைத்தலைவரிடம் அடுத்ததாக முதல்வரிடம் சென்று நிற்க வேண்டும் பிரச்சனை பெரியதாக வரும் என்று எதையுமே மனது சிந்திக்கவில்லை.

அந்த மஞ்சக்காட்டு மைனா தான் மனமெங்கும் உலாவினாள்.

மைதானத்தில் நுழைந்து பந்தை கையில் எடுத்து விளையாடிய போதுமே,

'யாரிவள் எந்த துறை மாணவி. இதற்கு முன்னாள் தான் இவளை பார்த்தது இல்லையே…?' என்று பலவாறு எண்ண அலைகள் கரைபுரண்டு ஓடியது.

இங்கே செல்வா தான் வகுப்பறையில் கோபத்தை அடக்கி கொண்டு அமர்ந்திருந்தாள்.

'எவ்வளவு திமிரிருந்தால் துறை தலைவரிடமே இவ்வாறு பேசியிருப்பான். செய்வதை செய்துவிட்டு இல்லையென்று வேறு அவனது நண்பர்கள் கூசாமல் பொய் கூறுகிறார்கள்' என்று பொருமியவளின் மனது ஆறவே இல்லை.

'பெரிய பணக்கார வீட்டு பிள்ளை என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வானா? எல்லாம் பணத் திமிர். முதல்வரிடம் கூறி இவனை கல்லூரியில் இருந்து விலக்க வேண்டும்' என்று மனதிற்குள் எண்ணி கொண்டவளுக்கு கோபம் மட்டும் குறைந்தபாடில்லை.

ஆகாஷை பார்க்க பார்க்க பாவமாக இருந்தது. எப்படி அடித்திருக்கிறான். அவனுக்கு எவ்வளவு வலித்திருக்கும் என்று நினைத்தவளுக்கு நேற்று நடந்த நிகழ்வு நினைவு வந்தது.

வழக்கம் போல வகுப்பு முடிந்ததும் ஒரு சில குறிப்பெடுப்பதற்க்காக நூலகத்திற்கு சென்றிருந்தாள்.

அமைதியாக இருந்த நூலகத்தில் திடீரென சலசலவென சத்தம் கேட்க திரும்பி பார்த்தாள்.

எல்லோரும் எழுந்து வேகவேகமாக வெளியே ஓடினர்.

செல்வா அருகில் சென்ற பெண்ணிடம், "என்ன ஆச்சுக்கா?" என வினவ,

"பிஜி வல்லா சீனியர் ஒரு பையனை கிரவுண்ட்ல போட்டு அடிச்சிட்டு இருக்காராம்" என்று கூறிவிட்டு தானும் நடந்துவிட்டாள்.

இதனை கேட்டதும் பதறிய செல்வாவும் அங்கே ஓடினாள்.

ஓடும் போதே மனது வல்லா என்கிற வல்லபனை கரித்து கொட்டியது.

செல்வாவின் தந்தை ராமநாதன் மக்கள் சேவை மையத்தில் பணிபுரிகிறார். இதற்கு முன்னர் வரை நாமக்கல்லில் பணிபுரிந்திருந்தவருக்கு சொந்த ஊரான கோவைக்கு இப்போது தான் மாற்றல் கிடைத்தது. வெகு நாட்களாக முயற்சித்து கொண்டிருந்தார்.

இப்போது கிடைக்கவும் குடும்பத்துடன் சொந்த ஊரில் குடியேறிவிட்டார். செல்வா அங்கு ஒரு பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று கொண்டிருக்க இந்த கல்லூரிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் மாற்றலாகி வந்திருந்தாள்.

வந்ததிலிருந்து அவளுடைய செவியில் வல்லா, வல்லபன், சக்கரவர்த்தி என்ற பெயர் பலமுறை விழுந்துவிட்டது.

அவன் பெரிய பணக்காரன் அழகானவன் கூடைப்பந்தில் சிறந்தவன் மோட்டர் பந்தையத்தில் இவனை அடித்து கொள்ள யாருமில்லை என்று பலவாறு வந்து விழ ஏனோ இத்தனை தூரம் அவனை உயர்த்தி பேசியதில் ஏதோ பிடிக்கவில்லை.

கூட்டத்தை விலக்கிவிட்டு செல்வா உள்ளே செல்ல அங்கே வல்லபன் ஆகாஷை போட்டு வெளுத்து கொண்டிருந்தான்.

ஆகாஷ் செல்வாவின் வகுப்பில் தான் படிக்கிறான்.

முதல் முதலாய் வல்லா என்கிற வல்லபன் சக்கரவர்த்தியை நேரில் பார்க்கிறாள். இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் இப்படி ஒரு கோலத்தில்.

விழிகள் முகம் முழுவதும் சிவந்து கோவ ஜ்வாலையுடன் ஆகாஷின் முகத்தில் ஓங்கி குத்தியவனை தான் அதிர்ந்து பார்த்தது.

கோபத்தின் மறு உருவமாக நின்றவனை கண்டு உள்ளுக்குள் சிறிது நடுக்கம் கூட பிறந்தது.

ஆகாஷ், "வலிக்கிது விட்றா…" என்று அலறியபடி ஓடி வர,

ஓடி ஓடி அவனை அடித்தான் வல்லபன் சக்கரவர்த்தி.

ஆகாஷ் எழுந்து செல்வா நிற்கும் திசையை நோக்கி ஓடி வர எல்லோரும் விலகிவிட்டனர்.

ஆனால் செல்வா மட்டும் நகராது நடப்பதில் அதிர்ந்து சமைந்திருந்தாள்.

ஆகாஷ் அவளை தாண்டி ஓட அவன் பின்னே வந்த வல்லபன் வழியில் நின்றிருந்தவளின் கையை பிடித்து விலக்கிவிட்டு சென்றிருந்தான்.

அவனது செயலை சுயம் உணர்ந்தவள் திரும்பி பார்க்க ஆகாஷ் ரத்த காயத்துடன் ஓடியிருந்தான்.

விழிகள் வல்லபனை அவசர அவசரமாக தேட அவனை காணவில்லை.

சடுதியில் நின்று வேடிக்கை பார்த்தவர்கள் மீதும் அடித்தவன் மீதும் அத்தனை கோபம் வர விறுவிறுவென நடந்து வல்லபனை தேடினாள்.

கண்களில் சிக்கினால் நாலு வார்த்தை கேக்கலாம் என்று தேடினாள் ஆனால் அவளை காணவில்லை.

மறுநாள் தானே சென்று துறை தலைவரிடம் புகார் அளித்திருந்தாள்.

முணுமுணுவென தனக்குள்ள
புலம்பியபடி அமர்ந்திருந்தவளை கண்டு அருகில் வந்த பானு,

"என்னடி ஹெச்.ஓ.டி என்ன சொன்னாரு?. அவரை சஸ்பெண்ட் பண்ணியாச்சா?" என்று வினவ,

"ப்ச் போடி ஒன்னுமே நடக்கலை" என்று அலுத்தபடி நடந்ததை கூறினாள்.

"அப்படியேவா சொன்னாரு அதுவும் சார் முன்னாடி?" என்று விழிகளை விரிக்க,

"ஹ்ம்ம் ஆமா எல்லாம் பணத்திமிரு" என்று பல்லை கடித்தாள்.

"என்க்கென்னமோ அவர் பக்கம் நியாயம் இருக்குமோன்னு தோணுது. ஆகாஷ்கிட்ட ஏன் அடிச்சாருன்னு கேட்ருக்கலாம்" என்று பானு இழுக்க,

"மண்ணாங்கட்டி என்ன நடந்திருந்தா என்ன? ஒரு ஆளை மாட்டை அடிக்கிற மாதிரி அடிக்க யார் உரிமை குடுத்தது" என்று பொறிந்தவள்,

"எனக்கு தலைவலிக்கிது நான் லைப்ரரிக்கு போறேன்" என்று எழுந்து சென்றுவிட்டாள்.

நூலகம் அவளுக்கு மிக மிக பிடித்த இடம். அதன் அமைதி அவளுக்குள் ஒரு ஆழ்ந்த நிம்மதியை கொடுக்கும்.

எத்தனை வருத்தம் கோபம் இருந்தாலும் நூலகத்திற்கு சென்றால் அத்தனையும் மாயமாக மறைந்துவிடும் என்பது அவளெண்ணம்.

எவ்வளவு நேரம் நூலகத்தினுள் அமர்ந்து புத்தகத்தை புரட்டினாளோ நேரம் காலம் தெரியாது அமர்ந்திருந்தவள் நூலகர் வந்து,

"லைப்ரரிய க்ளோஸ் பண்ண போறேன்" என்று கூறியபிறகு தான் எழுந்தாள்.

நேரம் ஆறரையை கடந்திருக்க லேசாக ஆதவன் மெதுவாக மறைய தொடங்க இருள் கவ்வ துவங்கியிருந்தது.

அலைபேசியை எடுத்து பார்க்க வீட்டிலிருந்து மூன்று அழைப்பு வந்திருந்தது. நூலகத்தினுள் இருப்பதால் அலைபேசியின் ஓசையை குறைத்திருந்தாள்.

நேரமாகிவிட்டதை உணர்ந்து வேகவேகமாக நடந்தவளது கால்கள் மைதானத்தை கடக்கும் போது தானாக நின்றுவிட்டது.

மெலிதான சூரிய ஒளியிலும் லேசான இருளிலும் கால்களையும் கைகளையும் மாற்றி மாற்றி லாவகமாக பந்தை சுழற்றியவனிடம் பதிந்தது.

அங்கே அவனை தவிர யாருமில்லை. கடந்து சென்றுவிடலாம் என்று ஒரு மனம் நினைத்தாலும் மறு மனம் அவனிடம் ஏன் அடித்தாய் என்று கேட்டே ஆக வேண்டும் என்று கூறியது.

இரண்டாவது மனம் வெற்றி பெற விறுவிறுவென நடந்து சென்று அவன் முன்னே நின்றாள்.

குனிந்து பந்தை தட்டி கொண்டிருந்தவன் தன் முன் நிழலாட‌ நிமிர்ந்து பார்த்தான்.

எதிரே அவளது எண்ணங்களின் நாயகி அவனை முறைத்தவாறு நின்றிருந்தாள். அதே மஞ்சள் சுரிதார்.

நிச்சயமாக மனது அங்கே அவளை எதிர்பார்க்கவில்லை.

"நேத்து எதுக்கு ஆகாஷை போட்டு அப்படி அடிச்சிங்க. உங்களுக்கென்ன பெரிய இதுன்னு நினைப்பா? பணமிருந்தா யார வேணாலும் அடிச்சிட்டு திமிரா பேசுவிங்களா?" என்று வழக்கம் போல படபடவென பட்டாசை வெடிக்க,

அவன் எந்த பதிலும் மொழியாமல் கைகள் இரண்டையும் தனது பாக்கெட்டிற்குள் விட்டு கால்களை சற்று விரித்தவாறு தோரணையாக நின்றுகொண்டான்.

விழிகள் அவளை ஆராய்ந்ததோ ரசித்ததோ எதுவோ ஒன்று ஆனால் உறுதியாக அவளை பார்த்தது.

காலையில் பார்த்த அதே மஞ்சள் சுரிதார் தான். அப்போது க்ளிப்பில் அடக்கப்பட்டிருந்த கூந்தல் இப்போது மயில் தோகையாய் விரிந்திருந்தது.

காலையில் பார்த்தது போலே முகம் பளிச்சென்று இருந்தது. பேசிவிட்டு மூச்சை வாங்கியவளது கரங்கள் வழக்கம் போல கண்ணாடியை சரி செய்ய,

விழிகள் மருதாணி இட்டு சிவந்திருந்த விரல்மேல் பதிந்து நீண்ட விழிகளில் நிலைத்தது.

அவளது கோபம் விழிகளிலும் தெறிக்க மனம் கண்ணாடிக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த விழிகளை முழுதாக காணும் ஆவல் கொள்ள சடுதியில் பார்வையை அவளிடமிருந்து விலக்கிவிட்டான்.

இத்தனை பேசியும் அமைதியாக அழுத்தக்காரனாக நிற்பவன் மீது கோபம் எக்கச்சக்கமாக பெருகியது.

"உங்க வீட்டு பசங்களை யாராவது அடிச்சா நீங்க சும்மா விடுவிங்களா? ஆகாஷோட அம்மா நேத்து எப்படி அழுதாங்கன்னு தெரியுமா? இதெல்லாம் உங்களுக்கு எங்க தெரிய போகுது?" என்றவள் இதழ்களை சுழிக்க,

ஒருநொடி பார்வை அவள் இதழ்களில் படிந்து மீள,


அவ்வளவு தானா? முடிந்ததா? என்ற அலட்சிய பாவனையை முகத்தில் தேக்கி அவளை பார்த்தவன்,

"எனக்கு எதுவும் தெரிய வேணாம்" என்று முகத்தில் அடித்தாற் போல கூறிவிட்டு நகர்ந்து செல்ல,

இதனை எதிர்பாராதவள் விழிகள் அதிர்ந்து சூரிய ஒளியில் அழுத்தமான காலடிகளுடன் நடந்து சென்றவது மஞ்சளான தோற்றத்தினை பார்த்தது.

வல்லபன் நடந்து அங்கிருந்து சென்றுவிட்டாலும் மனது மட்டும் அங்கேயே அவளையே சுற்றி வந்தது.


இதுவரை பார்த்த பெண்ணில் உன்னை போல
என்னை யாருமே
அழகாலே கொன்று தின்று உயிர் மீட்டு

தர வில்லையே….

******************
ஆறு மாதங்கள் கழித்து,

ஹைத்ரபாத்தின் மிகவும் புகழ்பெற்ற ஈஸி க்யூர் மருத்துவமனை.

புகழ்பெற்றது மட்டுமல்லாது மிகவும் வசதியானவர்கள் மட்டும் வைத்தியம் பார்க்கும் மருத்துவமனை‌.

எலைட் மருத்துவமனை பிரிவிற்குள் அதனை பிரிக்கலாம். சிகிச்சை பெற வந்திருப்பவரின் அறையிலேயே குளிர்சாதன பெட்டி படுக்கை நீள்விருக்கை என வீடு போன்று அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

காலை ஆறுமணிக்கு நோயாளிகள் உறங்கி கொண்டிருக்க சற்று அமைதியுடன் இருந்தது மருத்துவமனை.

மருத்துவமனையின் வாயிலிலிருந்தே மருந்தின் நெடி மூக்கை துளைத்தது.

இரவு நேர வேலையை முடித்துவிட்ட செவிலியர்கள் வேலையை மாற்றிவிடுபவர்கள் எப்போது வருவார்கள் வீட்டிற்கு செல்லலாம் என்று கண்களில் தேக்கிய உறக்கத்துடன் சுற்றி கொண்டிருந்தனர்.

துப்புரவு பணியாளர்கள் தரையை கிருமிநாசினியை கொண்டு காலை வேலையிலே சுத்தம் செய்ய பளிங்கு தரை பளபளவென மின்னியது.

அந்த தளத்தின் மூன்றாவது அறையில் உள்ள மெத்தையில் விழிகளை மூடி படுத்திருந்தாள் செல்வா.

பார்பதற்கு சீரான மூச்சுடன் உறங்குவது போல தான் தெரியும். ஆனால் செல்வா நடந்த விபத்தில் தலையில் அடிப்பட்டு கோமா எனப்படும் உணர்விழந்த முழு மயக்கநிலைக்கு சென்றிருந்தாள்.

இதே போல தான் அமைதியாக ஆறு மாதமாக உறங்கி கொண்டிருக்கிறாள். அவள் விரைவில் சுயநினைவை அடைந்திடுவாள் என்று எதிர்பார்த்து அவளது குடும்பமே காத்திருந்தது.

அவளது படுக்கைக்கு நேர் எதிரில் போடப்பட்டிருந்த மெத்தையில் சாய்ந்தபடி அமர்ந்திருந்த வேதவள்ளி செல்வாவின் தாய் அப்போது தான் கண்ணயர்த்திருந்தார்.

அருகில் நாற்காலியில் செவிலியர் ஒருவரும் அமர்ந்திருந்தார். கையில் ஒரு புத்தகம் இருந்தது.

உறங்கிவிடாமல் இருக்க அதனை படித்து கொண்டிருந்தவரது பார்வையில் பட்டது செல்வாவின் விரல்களில் தெரிந்த அசைவு.

சடுதியில் புத்தகத்தை கீழே வைத்தவர் எழுந்து சென்று பார்க்க மீண்டும் விரல்கள் மேலும் கீழும் அசைந்தது.

அதில் அதிர்ந்தவர், "பேஷண்ட்க்கிட்ட மூவ்மென்ட்ஸ் தெரியிது" என்று மெதுவாக கூக்குரலிட,

வேதவள்ளி உறக்கம் கலைந்து எழுந்துவிட்டார். செவலியரின் வார்த்தை பாதி தான் காதில் விழுத்திருக்க,

"என்னம்மா என்னாச்சு?" என்று பதறினார்.

"பேஷண்ட்க்கிட்ட அசைவு தெரியிது" என்றவரின் வார்த்தையில் வேதவள்ளியின் முகத்தில் பிரகாசம்.

"எம்மகளுக்கு நினைவு திரும்பிடுச்சா?" என்றவரின் முகத்தில் அத்தனை ஆர்வம்.

"சீக்கிரமா நினைவு திரும்பிடும்மா" என்றவள் மருத்துவரை அழைக்க சென்றுவிட்டாள்.

வேதவள்ளி உடனே ராமநாதனுக்கு அழைத்து விடயத்தை கூறியிருக்க, அவர் உடனே கிளம்பிவருவதாக மொழிந்தார்.

மகளின் அருகிலே ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்த அந்த தாயின் முகத்தில் தான் எத்தனை ஆர்வம்.

இருக்காதா பின்னே ஆறு மாதங்களாக அசைவற்று இருந்தவள் இன்று தான் சிறிய அசைவை காண்பித்திருக்கிறாள்.

மனதிற்குள் நம்பிக்கை துளிர்விட துவங்கியது.

மருத்துவர் அறைக்குள் நுழைந்தார்.

செவிலியர், "இந்த ஹாண்ட்ல தான் டாக்டர் மூவ்மெண்ட்ஸ் தெரிஞ்சது" என்க,

அவர் கூறுவதை கேட்டு கொண்டே செல்வாவை பரிசோதித்த மருத்துவர்,

"நல்ல இம்ப்ரூவ்மெண்ட் தெரியிது. மே பீ இன்னைக்கே கூட கான்சியஸ் வர சேன்ஸ் இருக்கு. பட் ஐ ஆம் நாட் ஸ்யூர்" என்று கூறிவிட்டு சென்றார்.

அதிலிருந்தே மகள் இன்று நிச்சயமாக கண்விழித்துவிடுவாள் என்று நம்ப துவங்கியிருந்தார் வேதவள்ளி.

"வள்ளி செல்வா கண்முழிச்சிட்டாளா?" என்று பரபரப்புடன் உள்ளே நுழைந்தார் ராமநாதன்.

அவரின் பின்னே சாம்பவியும் உள்ளே நுழைந்தாள்.

"இல்லைங்க. ஆனால் அசைவு தெரியுது கண்டிப்பா இன்னைக்கு கண்முழிச்சிடுவான்னு டாக்டர் சொல்லியிருக்காரு" என்று மகிழ்வுடன் கூற, மற்ற இருவரது முகத்திலும் சொல்லமுடியாத மகிழ்ச்சி.

"ம்மா அக்கா சீக்கிரமே கண்முழிச்சிடுவா" என்று பவியும் தாயை கட்டி கொண்டாள்.

மூவரும் அந்த அறையிலேயே செல்வா கண்விழிக்கும் தருணத்திற்க்காக காத்திருக்க துவங்கினர்.

மதியம் வந்தது மாலை வந்தது ஏன் இரவும் வந்துவிட்டது செல்வா கண்விழிக்கவில்லை.

செவிலியர் கூட வந்து, "இன்னைக்கு நினைவு வர வாய்ப்பு இருக்குன்னு தான் டாக்டர் சொன்னாரு.‌ அதுக்குனு இன்னைக்கே வந்திடும்னு உறுதியில்லை. மே பீ நாளைக்கு ஏன் அடுத்த வாரம் கூட வரலாம்" என்று கூறிவிட்டு செல்ல, மூவரும் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

அவர்களது பிரார்த்தனை கடவுளுக்கு கேட்டுவிட்டது போலும்.

இரவு பணிரெண்டு மணிக்கு செல்வாவின் கருமணிகள் அங்கும் இங்கும் உருண்டது.

இமைகளில் மெல்லிய அசைவு தெரிந்தது‌. அவளையே நோக்கியபடி இருந்தவர்களுக்கு இது தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

வேதவள்ளி அருகில் சென்று, "செல்வாம்மா கண்ணை திறந்து பாரும்மா. அம்மா கூப்பிட்றேன்" என்று அவளிடம் கலங்கிய விழிகளுடன் கூற,

இமைகளை மெல்ல பிரித்தாள் செல்வ மீனாட்சி.

பவி ஓடி சென்று மருத்துவரை அழைத்து வந்தாள்.

வெகுநாட்களுக்கு பிறகு வெளிச்சம் படுவதால் செல்வாவிற்கு விழிகள் கூச, மீண்டும் விழிகளை மூடி கொண்டாள்.

"செல்வா அம்மாவ பாருடா" என்று வேதவள்ளி உணர்ச்சிவசப்பட,

இரண்டு முறை இமை தட்டி விழித்து தன்முன்னே கலங்கிய விழிகளுடன் நின்றிருந்த வேதவள்ளியை கண்டாள்.

"செல்வாம்மா" என்று அவளை நின்றிருந்தவாறே அணைத்து கொண்ட வேதவள்ளிக்கு கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

செல்வ மீனாட்சி தான் நடப்பது ஏதும் தெரியாது மலங்க மலங்க விழித்தாள்.

மருத்துவர் வந்து, "கொஞ்சம் விலகுங்க சில செக்கப் பண்ணனும்" என்று சில மருத்துவ பரிசோதனைகளை செய்தார்.

சரியாக அதே சமயம் ஊரிலிருந்து செல்வாவின் அண்ணன் தியாகுவும் அண்ணி வினிதாவும் அதியாவுடன் உள்ளே நுழைந்தார்கள்.

மருத்துவர், "கண்ணை நல்லா திறங்க. கையை அசைங்க காலை தூக்குங்குங்க நடங்க?" என்று நிறைய செயல்களை செய்ய கூறிய பிறகு,

"இவங்க யாருன்னு தெரியுதா?" என வேதவள்ளியை காண்பிக்க,

"ஹ்ம்ம் அம்மா" என்று மெதுவாக பதிலளித்தாள்.

பின்னர் தந்தை தங்கை தமையன் என்று எல்லோராயையும் அடையாளம் சரியாக கூற,

மருத்துவர், "இவங்களுக்கு இனி எந்த ப்ராப்ளமும் இல்லை. ஷீ இஸ் ஆல்ரைட்" என்று கூறிவிட்டு செல்ல,

அங்கே மகிழ்ச்சியின் அலைகள் தான் எல்லோரிடமும்.

வினிதாவிடமிருந்த அதி, "ம்மா ம்மா" என்று தாயை நோக்கி கையை நீட்ட, அவள் குழந்தையை அவளிடம் கொடுக்க முற்ப்பட்டாள்.

"இது யாரோட குழந்தை?" என்று செல்வாவிடமிருந்து வந்த கேள்வியில் அனைவரும் ஸ்தம்பித்து போயினர்.

பெற்ற பிள்ளையையே யாரென வினவுகிறாளே…?
 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
செல்வா கோமால இருந்து மீண்டாச்சு அப்போ அவ கணவர் யாரா இருப்பான் 🤔🤔🤔🤔🤔🤔வல்லபனா 🙄🙄🙄🙄🙄
 
Administrator
Staff member
Messages
606
Reaction score
836
Points
93
செல்வா கோமால இருந்து மீண்டாச்சு அப்போ அவ கணவர் யாரா இருப்பான் 🤔🤔🤔🤔🤔🤔வல்லபனா 🙄🙄🙄🙄🙄
Avan illama vera yara irukum. 😁😁.
 
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
Yellow chutida😊😊r Ava heroine entha valapanu ku kojam over tha Ava kekurala athavathu sollurana paru😊😊 .. Selva meenakshi komala iruthala six month ya🥺👍 Avaloda Papa va yaru nu kekura 😲😲 husband enga avanuku enna aju
 
Top