• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை - 12

Administrator
Staff member
Messages
606
Reaction score
836
Points
93
புன்னகை 12:

காலை சுற்றும் பூனையாய் உன்னையே சுற்றி
வரும் தூய ஆன்மாவின் நேசத்தை நிராகரிக்கும்
சூழ்நிலை எல்லாம்
ஆகப்பெரும் சாபம்.




செல்வா நகர்ந்த பிறகும் அவ்விடத்திலே சில நிமிடங்கள் அசையாது நின்றுவிட்டவனது முகத்தில் சொல்ல முடியாத உவகை நிறைந்திருந்தது.

இவ்வளவு அழகாய் நேசத்தை உணர்த்த முடியுமா என்று தெரியவில்லை.

சொல்லிலடங்காத இந்த நேசம். அவள் கண்ணீருக்குள் கரைந்து அவனிடத்திலே உறைந்து போனதோ?

படபடவென பட்டாய் வெடிக்கும் அவனது ஜான்சி ராணி இப்போதும் வெடித்து தான் சென்றுவிட்டாள். ஆனால் சிதறி போனதென்னவோ இங்கு இவன் தான்.

நேசம் கொண்ட ஆன்மாவிடமிருந்து துளியும் குறையாத நேசத்தை திரும்ப பெறுவதெல்லாம் ஆகப்பெரும் வரம். அந்த வரத்தை எந்த தவத்தாலும் வழங்க இயலாது.

அது ஒரு முக்தி நிலை. உணர்ந்தவர்களுக்கு மட்டுமே உரித்தான நிலை. இப்போது இவனுக்கும் அதனை கொடுத்துவிட்டு சென்றாள் அவனது காதலி.

என்னவோ மனது முழுதாக நிறைந்து போனது போல எண்ணம் தோன்ற மறுபடியுமாய் விடாது வதனத்தில் தொடரும் புன்னகை.

வல்லபனை வெகுநேரம் காணாது தேடி வந்த அஜய், "மச்சான் ஏன் இங்க இப்போ தனியா நின்னுட்டு இருக்க?" என்று வினவ,

பதில் கூறாது பார்த்தவனது முகத்தில் மின்னால் கீற்றாய் மென்னகை வந்து சென்றது.

"என்னடா உன் சிரிப்பே சரியில்லை?" என்று கேட்டவனது தோளில் சிரிப்புடன் கையை போட்டவன்,

"மச்சான் என் கல்யாணத்துக்கு உனக்கு என்ன ட்ரெஸ் வாங்கி தரட்டும்?" என்று வினவ,

"வாட் கல்யாணமா? என்னடா தங்கச்சி ஓகே சொல்லிடுச்சா?" என்று வியப்புடன் வினா எழுப்பினான்.

"ஹ்ம்ம் ஓகே சொன்ன மாதிரி தான். வா" என்று கூற,

"வாவ் எனக்கு ட்ரீட்?" என்க,

"வாடா உனக்கு இல்லாததா?" என்று அவனை அழைத்து கொண்டு வெளியே சென்றான்.

"ஸ்டாப் வந்திடுச்சு இறங்கும்மா?" என்ற ஓட்டுநரின் கூற்றில் அந்த தானியில் இருந்து இறங்கியவள் பணத்தை கொடுத்துவிட்டு அந்த தெருவின் இறுதியில் இருக்கும் தனது வீட்டை நோக்கி நடந்து சென்றாள்.

மனது நடந்த நிகழ்வினையே சுற்றி வந்தது‌. அங்கிருந்து நகர்ந்த பிறகு தான் தான் அவசரப்பட்டு அவனிடம் தனக்கு அவனை பிடித்திருக்கிறது என்று கூறிவிட்டோம் என்று புரிந்தது.

அறிந்த நொடி தன்னையே நொந்து கொண்டாள். ஏதோ உணர்ச்சிவசப்பட்டு கூறிவிட்டாள்.

இனி எப்படி அவனை எதிர்கொள்வேன். என்னுடைய முடிவை எப்படி கடைபிடிப்பது என்று பலவாறு சிந்தனை இதில் கண்ணீர் வேறு எங்கிருந்து வருகிறதோ நிற்காமல் வழிந்தது.

துடைத்தவாறு தான் வந்தாள். வீட்டு வாசலை அடைந்த போது தான் முகத்தில் அழுத தடயம் தெரியுமே என்ற எண்ணம் வந்தது.

பையிலிருந்த தண்ணீர் பொத்தலை எடுத்து முகத்தில் மடமடவென சரித்தவள் நன்றாக துடைத்தபடி உள்ளே நுழைந்தாள்.

இருந்தும் அவள் நுழைந்த நொடியே அவளை எதிர்கொண்ட புவனா,

"என்னடா முகம் ஒருமாதிரி இருக்கு? அழுதியா?" என்று வாஞ்சையாக தலையை தடவ,

மீண்டும் கண்ணீர் பெருகியது. முயன்று கட்டுப்படுத்தி கொண்டவள்,

"அழுகலாம் இல்லத்தை. வெயில்ல வந்தது ஒரு மாதிரி இருக்கு?" என்றாள்.

"ஓ… என்ன சீக்கிரமா வந்துட்ட க்ளாஸ் இல்லையா?" என்று புவனா வினவ,

"இல்லை லேசா தலைவலி அதான் கிளம்பி வந்துட்டேன்" என்று கூறியவள்,

"சரி நான் ரூம்க்கு போறேன்" என்று எழுந்து வந்துவிட்டாள்.

என்னவோ பொய் கூறுவது உறுத்தலாக இருந்தது.

அறைக்கு வந்தவள் உடை மாற்றிவிட்டு படுக்கையில் விழுந்துவிட்டாள்.

மனது எப்படி நாளை அவனை எவ்வாறு முகம் கொண்டு பார்ப்பது என்று சிந்தித்தவாறே இருக்க எப்போது உறங்கினாள் என்று தெரியவில்லை.

உனை காணாது நான்
இங்கு நானில்லையே என்று சத்தமாக இசைத்த அலைபேசியின் கானா அவளை எழுப்பிவிட,

"ப்ச்" என்று சலித்தபடியே புரண்டு படுத்து பாதி உறக்கத்தில் அலைபேசியை எடுத்தவள் திரையில் மின்னிய பெயரை கண்டதும் முற்றிலும் உறக்கம் கலைந்தவளாக எழுந்து அமர்ந்துவிட்டாள்.

வல்லபன் தான் அழைத்திருந்தான் அதுவும் காணொளி அழைப்பு.

உள்ளுக்குள் இதயம் தடதடக்க அழைப்பு ஓய்ந்து முடியும் வரை அதனையே வெறித்தாள்.

முதன் முதலாக வல்லபனிடமிருந்து செல்வாவிற்கு வரும் அழைப்பு அதுவும் காணொளி அழைப்பு.

உள்ளுக்குள் இனம் புரியாத பரபரப்பு தொற்றிக் கொண்டது.

மீண்டும் அழைப்பு வர துவங்க அதை ஏற்க இயலவில்லை. அடித்து ஓயும் வரை அமைதியாகவே இருந்தாள்.

மூன்றாவது முறையாக குரல் அழைப்பு மட்டும் வந்தது.

உள்ளுக்குள் உழன்றிய உணர்வுகளை கட்டி வைத்தவள் அழைப்பு மரணிக்கும் இறுதி நொடியில் ஏற்று காதில் பொறுத்த,

"ஜான்சி ராணி" என்றவனின் குரல் அழுத்தமாக செவியில் மோத சில்லிட்டு போனது உள்ளம்.

வார்த்தை வராது போக, "ஹ்ம்ம்" என்று மட்டும் கூற,

"வீடியோ கால் ஏன் அட்டென்ட் பண்ணலை" என்று வினவ, அவளிடம் மௌனம்.

"இப்போ நான் கால் கட் பண்ணிட்டு அகெய்ன் வீடியோ கால்ல கூப்பிடுவேன். அட்டென்ட் பண்ற இல்லைனா இப்போவே நேர்ல வந்து நிற்பேன். ஐ வான்னா சீ யூ" என்றவன் சடுதியில் அழைப்பை துண்டித்திருக்க,

இவள் தான் திகைத்து போய் அமர்ந்துவிட்டாள்.

அடுத்த கணமே காணொளி அழைப்பு வர அலைபேசியை வைத்திருந்த கரங்கள் நடுங்கியது.

ஒரு மணம் அவன் சொன்னால் நான் கேட்க வேண்டுமா? எடுக்க மாட்டேன் என்று வீம்பாக நினைக்க,

மற்றொரு மனம் அழைப்பை ஏற்றுவிடு இல்லையேல் நிச்சயம் அவன் வந்து நிற்பான் என்று கூற,

"வந்தாலும் வந்திடுவாரு" என்று நினைத்தவள் அழைப்பை ஏற்றுவிட்டாள்.

ஆனால் திரையை பார்க்கவில்லை மனது வேறு குதிரை பந்தயத்தில் இடம் பிடித்திருந்தது.

"ஜான்சி ராணி" என்று அழைக்க, இவள் திரும்பவில்லை.

"ஜான்சி ராணி உன்னை தான் இங்க பாரு" என்று அதட்டலாக அழைக்க,

சட்டென்று பார்வை அலைபேசியில் பதிந்தது.

ஆனால் அவனை பார்க்கவில்லை. கருமணிகள் அவனை தவிர்த்து பின்புறம் இருக்கும் சுவர் அதிலுள்ள கடிகாரம் என்று அனைத்தையும் வலம்வந்தது.

அவளது செயலை கண்டவனது இதழ்கள் புன்னகையில் நெளிய அதை மறைத்து,

"இங்க பாருன்னா என்னை பார்க்கணும் என் முகத்தை பார்க்கணும். பின்னாடி இருக்க சுவத்தை இல்லை" என்று மீண்டும் அதட்ட,

அவளது பார்வை அவனது முகத்தில் நிலைத்தது. கூடவே என்ன இப்படி அதட்டுகிறான் என்று எண்ணம் வேறு எட்டிப்பார்த்தது.

ஏதும் கூறாது அவளை ஆழ்ந்து பார்த்தான். இதயம் சிறகாய் படபடத்தது அவனது ஊடுருவும் பார்வையில்.

உறக்கத்தில் இருந்து எழுந்து கலைந்த ஓவியமாக கூந்தல் இழைகள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்க உறக்கம் தேங்கிய விழிகளில் இதயம் தொலைந்து தான் போனது.

எதாவது பேசினால் கூட பதிலுக்கு பேசலாம் எதையுமே செய்யாது அமைதியாக இருப்பவனது செயல் அவளை ஏதோ செய்ய பதட்டம் குடிகொண்டது.

சிறிது சிறிதாக வியர்வை அரும்புகள் வேறு வதனத்தில் குமிழிட்டது.

இந்த அமைதி பதட்டம் எல்லாம் தன்னுடைய இயல்பே இல்லை என்று அவளுக்கு புரிந்தது.

இவன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னியல்பை இழக்க வைக்கிறான் என்று புரிந்தது.

ஆனால் நேசத்தின் இயல்பே இயல்பை தொலைக்க வைப்பது தான் என்று தான் அவளுக்கு தெரியவில்லை.

நேரம் செல்ல செல்ல கூடும் பதட்டத்தை குறைக்க இயலாதவள்,

"நா…நான் போய் பேஸ்வாஷ் பண்ணிட்டு வந்திடவா?" என்று வினவ,

சம்மதமாக தலையசைத்தவனது இதழ்கள் வளைந்தது ஓரத்தில்.

அவன் தலையசைத்த அடுத்த விநாடியே அடித்து பிடித்து எழுந்து கொண்டவள் திரையிலிருந்த நகர அவனது பார்வை செல்வாவையே தொடர்ந்தது.

குளியலறைக்குள் நுழைந்து கதவின் மேல் சாய்ந்து கொண்டவளது இதயம் அதிவேகத்தில் துடித்தது.

'ப்ச் என்ன பார்வை அது. ஆளை உளுக்கும் பார்வை' என்று நினைத்தவளுக்கு உள்ளே நடுக்கம்.

குளிர்ந்த நீரால் முகத்தை கழுவியவளுக்கு மீண்டும் அவனை எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை.

அந்த பார்வை அவளது முதுகுதண்டை சில்லிட வைக்கும் பார்வையை எப்படி தாங்க போகிறோம் என்று புரியவில்லை.

நேரம் வேறு செல்ல கண்ணாடியில் முகத்தை பார்த்து கூந்தலை ஓரளவு சரி செய்து வெளியே வந்தவள் முகத்தை துடைக்க துண்டை தேட அது திரைக்கு நேராக கட்டிலின் கம்பியில் கிடந்தது.

வேறுவழியின்றி மெதுவாக நடந்து சென்று துண்டை எடுத்து முகத்தை துடைத்தவளுக்கு தான் தான் இத்தனை அமைதியாக இருக்கிறோமா? என்று சந்தேகம் வேறு எழுந்தது.

அதனைவிட அவன் தன்னை பார்க்கிறான் என்ற‌ உணர்வே சிறிது உதற செய்தது.

அவளது சிந்தை போலவே அவன் அவளை தான் பார்த்திருந்தான். அமர்ந்திருக்கும் போது பாதியாக தெரிந்த உருவம் இப்போது முழுதாக தெரிந்தது.


சுடிதாரை தவிர்த்து இலகு உடையில் முதல் முறை காண்கிறான். இரவு உடை அணிந்திருந்தவள் மிகவும் சிறு பெண்ணாக தெரிந்தாள்.

முகத்தில் இருந்த நிறமே மங்கிவிடும் போல அத்தனை நேரம் தேய்த்து கொண்டிருந்தாள்.

தன் மனதை அவனிடம் வெளிப்படுத்திவிட்ட பிறகு அவனை காண அத்தனை கூச்சமாக வேறு இருந்தது.

அவனும் இன்னும் எத்தனை நேரம் தப்பிக்க முடியும். எப்படியும் இங்கு வந்து தானே ஆக வேண்டும் என்று பொறுமையாக இருந்தான்.

நேரம் கடந்ததில் வேறுமார்க்கமின்றி அவன் முன் வந்து அமர‌ வல்லபன் இன்னும் நன்றாக பின்னால் சாய்ந்தமர்ந்து அவளை ஆராய்ச்சியாக பார்த்தான்.

அவளுக்கு தன்னுடைய இரவு உடை வேறு அப்போது நினைவு வர நெளிய துவங்கினாள்.

அதற்கு மேலும் அவளை படுத்த விரும்பாதவன்,

"உனக்கு என்ன பிரச்சினை. உன் மனசுக்குள்ள‌ எதை போட்டு குழப்பிட்டு இருக்க?" என்று வினாவுடன் அவளை நோக்க,

பார்வையை அவன் முகத்தில் தாங்கியவள் இச்சமயம் பதிலற்று போனாள்.

என்ன பதிலளிப்பாள் உன்னுடைய பணக்கார பின்புலம் எனக்கு பயமாக இருக்கிறது என்றா?

அப்படி கூறினால் அவன் மீது நம்பிக்கை இல்லை என்றாகிவிடாதா?

"உன்னை தாண்டி கேக்குறேன். இன்னும் எவ்ளோ நாளுக்கு இப்படி சைலண்ட்டாவே இருக்க போற" என்று கேட்டவனுக்கு பொறுமை சிறிது குறைந்திருந்தது.

மதியமே அவளை நிறுத்தி வைத்து பேசியிருக்கலாம். அவள் உணர்ச்சியின் பிடியில் இருந்ததால் சற்று சரியாகட்டும் என்று விட்டுவிட்டான்.

அதுவுமட்டுமின்றி அவளது மனதை உணர்ந்த நொடி அவனுக்கும் அதனை அனுபவிக்க சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

ஆனால் இப்போது அப்படியல்ல. அவளுக்கு தன்னை பிடித்திருக்கிறது. தன்னை போல அவளுக்கும் தன் மீது நேசம் துளிர்த்திருக்கிறது‌. அதனை கூற என்ன தயக்கம்.

இதனை தாண்டியும் கண்ணீர் வடிக்கும் அளவிற்கு என்ன பிரச்சினை என்று நினைத்தவனுக்கு தான் பொறுமை பறந்திருந்தது.

அவளுக்கு விழி நீர் நிறைந்து அவனது பிம்பம் மங்கலாக தெரிந்தது.

அவளது கலங்கிய விழிகளை கண்டவன் ஏதோ கூற வருகையில்,

"செல்வாம்மா…" என்று அழைத்தபடி ஒரு குரல் அறைக்குள் வர, அதில் கண்களை சிமிட்டி நீரை உள்ளிழுத்தவள் அலைபேசியை பின்புறம் திருப்பி கீழே வைத்துவிட்டாள்.

உள்ளே வந்த புவனா, "என்னடா இப்போ தலைவலி பரவாயில்லையா?" என்று வினவ,

"ஹ்ம்ம் பரவாயில்லைத்தை. தூங்கி எழுந்ததும் சரியாகிடுச்சு" என்று பதில் மொழிய,

"சரிடா. சூடா டீ போட்டு கொண்டு வரவா?" என்று புவனா வினா எழுப்பினார்.

"ஹ்ம்ம் போடுங்க. நானே வர்றேன் டென் மினிட்ஸ்ல" என்று செல்வா இயம்ப அவர் தலையசைத்து அகன்றார்.

வல்லபனும் அவர்களது உரையாடலை கேட்டபடி தான் இருந்தான்.

அவர் சென்றதை உறுதிபடுத்திவிட்டு அலைபேசியை திருப்பியவள்,

"நான் அழுததுக்கு காரணம் இவங்க தான் இவங்க என் அத்தை புவனேஷ்வரி" என்று கூற,

புருவம் இடுங்க புரியாது அவளை நோக்கினான் வல்லபன்.




*******************

"
நம்ம வீடு வந்திருச்சு செல்வா" என்றவனது கூற்றில் சிந்தையிலிருந்து விடுபட்டவள் வெளியே எட்டிப்பார்க்க, அவர்களை தாங்கி வந்த மகிழுந்து ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பின் முன் நிற்க வல்லபன் அதியாவுடன் இறங்க செல்வாவும் இறங்கி அவ்விடத்தை வியப்பாக பார்த்தாள்.



படங்களில் எல்லாம் காண்பிப்பது போல ஒரு தோற்றத்தில் பச்சை பசுமையான மரங்கள் சூழ்ந்து காணப்பட்டது.

"இந்த அபார்ட்மெண்ட்ல தான் நாம தங்க போறோம்" என்று செல்வாவிடம் கூறியவன் ஓட்டுநரிடம்,

"கார் பார்க் பண்ணிட்டு கீய கொடுத்திட்டு கிளம்பு" என்றுவிட்டு,

"வா போகலாம்" என்று அவளை அழைத்து கொண்டு சென்றான்.

ஹைத்ரபாத்தின் மிகவும் வசதியானவர்கள் வசிக்கும் மணிபோண்டாவில் நடுவே அமைந்திருந்தது அந்த அடுக்குமாடி குடியிருப்பு.

அவ்விடத்தை ஏ, பி, சி என்று மூன்று பாகங்களாக பிரித்திருந்தனர். ஏ பிரிவு ஒற்றை படுக்கறை கொண்ட குடியிருப்பாகவும் பி பிரிவு இரண்டு படுக்கையறை கொண்ட சற்று வசதியுடன் கூடிய குடியிருப்பாகவும் மூன்றாவது சி பிரிவு மூன்று படுக்கை அறை கொண்ட அனைத்து வசதிகளையும் கொண்ட சற்று வளமையானவர்கள் வாழும் பகுதி.

சி‌ பிரிவில் நீச்சல் குளம் முதற்கொண்டு இல்லாத பிரிவுகளே இல்லை. அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிருந்தது. மிகப்பெரிய வாகன நிறுத்துமிடம் இருந்தது.

'லக்ஸுரியஸ் அபார்ட்மெண்ட்' என்பார்களே அந்த வகையை சார்ந்தது.

செல்வாவும் வல்லபனும் தங்க போகும் வீடு சி பிரிவில் தான் இருந்தது.

மீண்டும் சென்னைக்கு செல்ல வேண்டாம் ஹைத்ராபாத்திற்கு குடிபெயரலாம் என்று வல்லபன் ஏற்கனவே முடிவு செய்திருந்தான்.

காரணம் வேறொன்றுமில்லை ஹைத்ரபாத்தில் இருக்கும் தன்னுடைய குடும்பத்தினரை சமாதானம் செய்வதற்கும் மற்றொரு காரணம் சென்னையில் இருந்தால் யாராவது தெரிந்தவர்கள் பக்கத்துவீட்டினர் வந்து பேசினால் செல்வாவிற்கு நிச்சயம் அடையாளம் தெரியாது.

நிறைய பேர் வந்து என்னை தெரியவில்லையா? என்று பேசினால் கண்டிப்பாக அவளுக்கு கஷ்டமாக இருக்கும் என்று நினைத்து தான் இம்முடிவை எடுத்திருந்தான்.

செல்வாவின் குடும்பத்தினரிடம் ஏற்கனவே தெரிவித்திருக்க அவர்களும் சம்மதம் கூறியிருந்தனர்.

செல்வாவிடமும் இதை கூறியிருந்தான். அவளும் குடும்பத்தினரை பிரியும் வருத்தத்தில் எங்கு சென்றால் என்ன என்று தலையசைத்திருந்தாள்.

மின்தூக்கியில் இருந்து வெளியே வந்ததும்,

"அந்த லாஸ்ட்ல இருக்க பிளாட் நம்பர் டூ நாட் த்ரீ தான் நம்மளோடது" என்று கைகளை காண்பித்தவன் கதவை திறந்து உள்ளே அழைத்து சென்றான்.

உள்ளே நுழைந்தவள் அந்த வீட்டின் பிரம்மாண்டத்தை கண்டு பிரம்மித்துவிட்டாள் தான்.

'ஒரு பிளாட் அவ்வளவு தான்' என்று நினைத்திருந்தவள் இத்தனை வசதிகளையும் வீட்டையும் எதிர்பார்க்கவில்லை.

குடும்பத்தினரை பிரிந்து வந்ததில் தோன்றிய வருத்ததிலிருந்து ஓரளவு மீண்டவளுக்கு அவ்வீட்டின் பிரம்மாண்டம் அச்சுறுத்தியது.

"உட்காரு செல்வா ஏன் நிக்கிற" என்றவன் கைகளில் உறங்கி கொண்டிருந்த மகளை மெத்தையில் படுக்க வைத்துவிட்டு உடைமாற்றி கைகால் கழுவி வந்து மனைவியை தேட, அவள் அங்கிருந்த ஃப்ரெஞ்ச் சாளரத்தின் அருகே நின்றிருந்தாள்.

விமானத்தில் இருந்த போது இனி இதுதான் உன் வாழ்க்கை இவர்கள் தான் உன் உலகம் என்று தனக்கு தானே கூறி தேற்றி கொண்ட போது ஓரளவு சமாதானம் ஆகியிருந்த மனது இப்போது மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து நின்றது.

அவளருகே சென்றவன், "விண்டோவ ஓபன் பண்ணிக்க வேண்டியது தானே?" என்று இயல்பாக அவளது செவிக்கருகில் வந்து இயம்பி சாரளத்தை திறந்துவிட,

இவளுக்கு தான் ஒருகணம் மூச்சடைத்துவிட்டது. இருபுறமும் அவளை அணைக்கட்டியபடி நின்றிருந்தவனது மூச்சு காற்று அவளது கழுத்தில் மோதி மயிரிழைகளை சிலிர்க்க செய்தது.

"இங்க இருந்து வியூ நல்லா இருக்கும்" என்றவன் நல்ல வசதியாக திறந்துவிட,

மூச்சடைக்கும் உணர்விலிருந்து தப்பிக்க எண்ணியவள் அவன் அசந்த சமயம்,

"ஹ்ம்ம் வியூ நல்லாயிருக்கு" என்று நகர்ந்து வீட்டை சுற்றி பார்ப்பது போல செல்ல,

"சேரிலயே இருக்க ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிக்க வேண்டியதுதானே?" என்றவனது குரலில் திரும்பாது,

"இல்லை இதுவே இருக்கட்டும்" என்று அங்கிருந்து வந்து வீட்டை விழிகளால் அளக்க துவங்கினாள்.

அவளின் பின்னே வந்த வல்லபனின் விழிகள் முழுவதும் புதுபட்டு சேலையில் புதிதாக தான் அணிவித்துவிட்ட மஞ்சள் தாலியுடன் தேவதையாக நிற்கும் மனைவி மீது தான்.

விழிகளை அவளைவிட்டு அங்குமிங்கும் நகரவில்லை என்பதை விட நகர்த்தமுடியவில்லை அத்தனை தூரம் கட்டி போட்டிருந்தாள் மனையாள்.

"வீடு பிடிச்சிருக்கா செல்வா?" என்றவனது திரும்பாது,

"ஹ்ம்ம் பிடிச்சிருக்கு" என்று பதிலை முடிக்கும் முன் சடுதியில் அவளை இழுத்து‌ இறுக அணைத்திருந்தான் வல்லபன்.

அவனது செயலை எதிர்பாராதவள் நடுங்கி விதிர்விதிர்த்து போனவள் வல்லபனிடமிருந்து விலக முயற்சிக்க,

"செல்வா ப்ளீஸ் டூ மினிட்ஸ் அப்படியே இரேன். இது இந்த செகெண்ட் நிஜம்தான். நீ என் பக்கத்துல தான் இருக்கேன்னு நான் பீல் பண்ணிக்கிறேன். என்னை நானே நம்ப வச்சிக்கிறேன்" என்றவனது கரகரத்த குரலில் அவளது கைகள் அப்படியே அந்தரத்தில் நின்றுவிட்டது.

மனது ஒரு நொடி அந்த குரலின் பேதத்தில் சர்வமும் உறைந்துவிட்டது அவளுக்குள்.

நொடிகள் நிமிடங்களாக கடக்க இருவரும் அசையவில்லை.

அமைதியாக விழிமூடி செல்வாவை தன் அணைப்புக்குள் வைத்திருந்தவனது மனமெங்கும் சொல்ல முடியாத நிறைவு.

மெது மெதுவாய் அவளை உணர்ந்தான் தன்னையும் உணர வைத்தான்.

முழுதாக ஐந்து நிமிடங்கள் கடந்த பிறகு அணைப்பின் இறுக்கத்தை கூட்டியவன் அந்த வேகத்திலே அவளை விடுவித்து அகன்றிருந்தான்.

ஆனால் அவள் தான் அவ்விடத்திலே சமைந்து நின்றுவிட்டாள்.

இதயத்தின் ஓரமெங்கும் மெலிதான நடுகம் நில அதிர்வுகளாக விரவியது. அவனது வாசமும் அணைப்பின் கதகதப்பும் நிமிடங்கள் கடந்த பிறகும் தன்னிலே தங்கிவிட்டது போல பிரம்மை.

தொடரும்








 
Last edited:
Active member
Messages
205
Reaction score
116
Points
43
செல்வாவோட புவனா அத்தைக்கு வாழ்க்கைல ஏதோ சறுக்கல் நிகழத்திருக்கு அதுதான் செல்வாவால் வல்லபனை ஏற்க தயக்கம் போல 🙄🙄🙄🙄🙄🙄🙄
 
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
Buvana aunty selva vallapan kuda irugurathum enna incident nadathu iruku selva silent ya illama sollu problem solve agum😁😁😁💕💕
Enga vallapan selva aathi kutty matum tha irugaga selva ku ellam nabagam varum vallapan pathupan 😍😍😍😍
 
Top