• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை 1

Administrator
Staff member
Messages
606
Reaction score
836
Points
93
முல்லை நிகர் புன்னகை:

புன்னகை 1:


பக்கம் பக்கமாய்

பேசிய பொழுதுகள் எல்லாம்
பக்கம் நின்று
தொல்லை செய்கிறது
பார்வையில் இருந்து
நீ விலகிய நொடிகளில்…!




"வல்லா உன்னை எச்.ஓ.டி கூப்பிட்றாராம்" என்ற மதனின் குரலில் கையில் கூடைப் பந்தை வைத்து விளையாடி கொண்டிருந்தவனின் இயக்கம் தடைபெற திரும்பி பார்த்தான்.


அவன் வல்லபன் சக்கரவர்த்தி.‌ விளையாட்டு உடையில் இருந்தவனது தேகம் வெயிலின் தாக்கத்தால் வியர்வையில் தொப்பலாக நனைந்திருந்தது.

"எதுக்கு?" என்று வினவியபடி நெற்றியில் வடிந்த வியர்வையை வழித்தெறிந்தான்.

"தெரியலை ஆனால் ஏதோ ப்ராப்ளம்னு நினைக்கிறேன்" என்றவனது கூற்றில்,

வல்லபனின் புருவம் இடுங்க அவனை பார்த்தவாறு நடந்து வந்து அருகில் உட்காரும் கல்மேசை மேலிருந்த தண்ணீர் பொத்தலை எடுத்து கடகடவென வாயில் சரித்துவிட்டு முகத்திலும் ஊற்றி கொண்டான்.

அதற்குள், "வல்லா…" என்று விளையாடிய கூட்டத்திலிருந்து அழைப்பு வந்தது.

திரும்பி, "நீங்க கன்டினியூ பண்ணுங்க நான் வந்துட்றேன்" என்றுவிட்டு முகத்தை பூத்துவாலையால் துடைத்துவிட்டு ஏதோ கூற வர,

"மச்சான் நேத்து நீ ஆகாஷை அடிச்சதை பார்த்திட்டு யாரோ ஒரு பொண்ணு உன்மேல ஹெச்.ஓ.டிக்கிட்ட கம்பிளைண்ட் பண்ணியிருக்கா. அதான் சார் கூப்பிட்றார்" என்றபடி வந்து நின்றான் அஜய்.

"கம்பிளைண்ட் என்றவனது இதழ்கள் வளைய,

"எஸ் கம்ப்ளைண்ட் தான். அதுவும் ரிட்டர்ன் கம்ப்ளைண்ட்" என்று அழுத்தி கூற,

"யாரு அந்த பொண்ணுனு தெரியுமா?" என்று மதன் அஜயிடம் வினவினான்.

"தெரியலை யாரு அந்த ஜான்சி ராணின்னு மே பி புதுசா ஜாயிண்ட் பண்ண பொண்ணா இருக்கணும். அதான் வல்லா மேல கம்ப்ளைண்ட் பண்ணியிருக்கா" என்று அஜய் பதில் மொழிந்தான்.

தனது அலைபேசியை எடுத்து நேரத்தை பார்த்தவன்,

"இன்னும் பிப்டின் மினிட்ஸ்ல வர்றேன்னு சொல்லு" என்றுவிட்டு எதிர்புறமிருந்த விடுதிக்கு குளித்து வர சென்றான்.

சரியாக பதினைந்து நிமிடத்தில் குளித்து ஆழ்சிவப்பு நிறத்தில் டீ சர்ட்டும் அதற்கு தோதாக நீலத்தில் பேண்ட்டும் அணிந்திருந்து துறை தலைவர் அறையை நோக்கி சென்றான்.

வாசலில் சிலர் கூட்டமாக நின்றிருக்க, இவன் எந்த ஒரு அவசரமும் இன்றி சுவாதீனமாக நடந்து வந்து கொண்டிருந்தான்.

வெளியே வல்லபனிடம் அடி வாங்கிய ஆகாஷும் கை மற்றும் தலையில் கட்டுடன் நின்றிருந்தான்.

ஆகாஷை அந்த கோலத்தில் கண்டவனது இதழ்கள் கேலியாக வளைந்தது.

"பாரு அடிக்கிறதும் அடிச்சிட்டு எப்படி சிரிக்கிறான்" என்று ஆகாஷின் நண்பன் பொரும,

"அவன் தனியா இருந்ததால அவனுக்கு மட்டும் அடி விழுந்திருக்கு. நீயும் இருந்திருந்தா உனக்கும் இந்த நிலைமை தான்" என்று அஜய் கூற,

வல்லபன் அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தான்.

துறைத்தலைவர், "வா வல்லபன்" என்று கூற,

"சொல்லுங்க சார்" என்றான் பதிலுக்கு எதுவுமே நடக்காத பாவனையில்.

"நான் எதுக்கு உன்னை கூப்பிட்டேன்னு தெரியாதா?" என துறைத் தலைவர் வினவ,

"தெரியாது சார்" என்று சட்டென்று மின்னல் வேகத்தில் பதில் வந்தது.

இவன் இப்படித்தான் பேசுவான் என்று அறிந்திருந்த துறைத்தலைவர் அருகில் இருந்தவரிடம்,

"ஆகாஷை வர சொல்லுங்க" என்று கூற,

ஒரு காலை விந்தியபடி அனுமதி பெற்று உள்ளே நுழைந்தான்.

துறைத்தலைவர், "ஏன் இப்படி இவனை அடிச்ச வல்லபன்? எப்படி அடிப்பட்டிருக்கு பாரு. இவனுக்கு ஏதாவது ஆச்சுனா ஆகாஷோட பேமிலிக்கு யார் பதில் சொல்றது" என்று கடிய,

வல்லபன் பேசும் முன் அஜய் முந்தி கொண்டு, "சார் வல்லா அவனை அடிக்கவே இல்லை. அவன் எங்கேயோ வம்பிழுத்து யார்க்கிட்டயோ அடிவாங்கிட்டு வந்து வல்லா மேல பழிய போட்றான்" என்று கூறினான்.

"இல்லையே வல்லபன் அடிச்சதை நேரில பார்த்த விட்னெஸ் இருக்கு இன்பாக்ட் அந்த பொண்ணு கம்ப்ளைண்ட் கொடுத்ததால தான் நான் உங்களை கூப்பிட்டு விசாரிக்கிறேன்" என்றவர் உதவியாளரிடம்,

"அந்த பொண்ணை வர சொல்லலையா?" என்க,

"வர சொல்லிட்டேன் சார். இரண்டு நிமிஷத்துல வந்திட்றேன்னு சொல்லுச்சு சார்" என்று பதில் வந்தது.

சரியாக அதே சமயம், "மே ஐ கம்மின் சார்" என்ற குரலோடு உள்ளே ஓடி வந்தாள் செல்வா.

வேகமாக வந்ததில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது அதனை பொருட்படுத்தாது வந்த மறுநொடியே, "இவர் இவர் தான் சார் ஆகாஷை போட்டு அடிச்சது. நான் நேத்து ரெண்டு கண்ணாலயும் பார்த்தேன் சார். இவரை சஸ்பெண்ட் பண்ணுங்க சார். இல்லையில்லை டிஸ்மிஸ் பண்ணிடுங்க சார். முடிஞ்சா போலிஸ் கம்ப்ளைண்ட் கொடுத்திருங்க சார்" என்று சற்று சத்தமாக எடுத்த எடுப்பிலே படபடவென பட்டாசு போல பொறிய துவங்கியிருந்தாள்.

வேகமாகப் பேசியதில் மேலும் மூச்சு வாங்கியது. வல்லபனின் விழிகள் அவளை தான் அவள் வந்த நொடியில் இருந்து ஆராய்ந்தது.

பார்வை முதலில் அவனை நோக்கி நீண்டிருந்த அந்த நீண்ட விரல் மேல் பதிந்தது. அதோ அந்த விரல் அவனை தான் குற்றம் சுமத்தி கொண்டிருந்தது.

இடுப்பிற்கு சற்று மேல் வரை இருந்த கூந்தலை ஒரு சிறிய க்ளிப்பில் அடக்கியிருக்க ஓரு சில கூந்தல் இழைகள் நெற்றியில் விழுந்து ஒரு கன்னத்தில் சிம்மாசனமிட்டிருந்தது. நீண்ட புருவங்கள் பெரியதான விழிகள் அதனை கண்ணாடிக்கு பின்னே மறைத்திருந்தாள். சிறியதான இதழ்கள்.

அடர் மஞ்சள் நிறத்தில் சுரிதார் அணிந்திருந்தவளது துப்பட்டா ஒரு பக்க தோளில் வழிந்திருந்தது.

பேசியதில் புஸுபுஸுவென்று மூச்சு வாங்க அவனை முறைத்தபடி மூக்கு கண்ணாடியை சரிசெய்தாள்.

அவள் பேசிய மறுநொடி அத்தனை அமைதி அவ்விடத்தில்.

இப்படி படபடவென அவள் வெடித்ததில் துறைத் தலைவரே சற்று அதிர்ந்திருந்தார்.

வல்லபன் ஏதும் கூறாது அழுத்தமாக அவளையே பார்த்து நிற்க,

"சார் இந்த பொண்ணு பொய் சொல்லுது. வல்லா ஆகாஷை அடிக்கவே இல்லை" கூற,

"யாரு யாரு பொய் சொல்றது. இவரு ஆகாஷை மாட்டை அடிக்கிற மாதிரி அடிச்சதை நான் என் ரெண்டு கண்ணால பார்த்தேன்" என்று பொங்கிவிட்டாள்.

வல்லபனின் பார்வை அவளது சிவந்த மூக்கின் நுனியில் பதிய இதழ்கள், "இவ ஜான்சி ராணியே தான்" என்று தனக்குள் முணுமுணுத்தது.

மதன், "இல்லை" என்று ஏதோ கூற வருகையில் இடை நுழைந்த வல்லபன்,

"நான் தான் இவனை நேத்து அடிச்சேன் பிரின்சிபல்க்கிட்ட கம்ப்ளைண்ட் பண்றதுன்னா பண்ணிக்கோங்க" என்றவன் செல்வாவை ஒரு முறை அழுத்தமாக பார்த்துவிட்டு வெளியேறியிருந்தான்.

அவனது செய்கையில் மொத்தமாக அதிர்ந்து விழிவிரித்து நின்றுவிட்டாள் செல்வா என்ற செல்வ மீனாட்சி….



**********************


அடர் சாம்பல் நிறத்தோடு மெலிதான கருப்பு நிறத்தை சேர்த்து குழைத்தாற் போல வண்ணத்தில் வானமெங்கும் போர்வை போத்தியிருக்க, வெள்ளிக் காசுகளை சிதறவிட்டது போல ஆங்காங்கே நட்சத்திரம் அந்த இரவு வேலையிலும் மின்னியது.

மெல்லிய சாரலாய் தழுவி செல்லும் தென்றலின் தாளத்திற்கேற்ப ஆடி கொண்டிருந்தது பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குல்மெஹர் மரங்கள்.

ஹைத்ராபாத்திலிருந்து சென்னை செல்லும் பிரதான சாலை அது. நெடு நெடுவென கருநாகம் போல நீண்டிருந்த தார் சாலையில் அழகாய் வெண்ணெய் போல வழுக்கிக் கொண்டு சென்றது அந்த பொலிரோ.

அடர் கருப்பு நிறத்தில் பளபளவென மின்னிய அந்த பொலிரோ பார்ப்பவர்கள் கண்களை நிச்சயமாக கவர்ந்திழுக்கும்‌.

அதன் முன்புற இருக்கையில் அதாவது ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தவன் வெகு சுவாதீனமாக சாய்ந்து கைகளை வித்தை செய்வது போல பொலிரோவை இயக்கி கொண்டிருந்தான்.

சராசரி ஆண்களது உயரத்தில் சிவந்த நிறத்திற்கும் மாநிறத்திற்கும் இடைப்பட்ட நிறத்தில் உயரத்திற்கேற்ற எடையில் குங்கும சிவப்பு நிறத்தில் சட்டையும் வெண் சாம்பல் நிறத்தில் கால்சாராயும் அணிந்து இருந்தான்.

சாலையில் யாருமில்லை என்றாலும் அவனது பார்வை வழியில் தான் இருந்தது. அவனது இருக்கைக்கு முன்பிருந்த வானொலியில் ஏர். ஆர் ரகுமான்

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ… என்று உருகி கொண்டிருக்க,

பாடலின் வரிகளை உள்வாங்கி மெதுவாக இதழ்களுக்குள் முணுமுணுத்தபடி வந்தவனது முகத்தின் குறுஞ்சிரிப்பில் விழிகள் மின்னியது.

விழிகளின் சிரிப்பில் அடர்த்தியான புருவங்கள் சுருங்கி விரிந்தது. விழிகள் ஓரப்பார்வையில் அருகில் அமர்ந்து தன்னை முறைத்தபடி அமர்ந்தவளை பார்ப்பதும் சாலையை பார்ப்பதுமாக இருந்தது.

அவனது சிரிப்பில் துடிக்கும் கன்னக் கதுப்பில் அவளது முகம் கோபத்தில் சிவப்பேற துவங்கியது.

நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதே
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ… என்று இதழ்கள் வானொலியுடன் சேர்ந்து அவன் குரல் மெலிதாக வெளிவந்த நொடி, அவளது பொறுமை காற்றில் பறந்திருந்தது.

"இங்க பக்கத்துல நான் குத்துக்கல்லு மாதிரி உட்கார்ந்து இருக்கேன். என்னைவிட்டுட்டு இயற்கையை ரசிச்சிட்டு இருக்கிங்க…" என்று அவனது தோளில் பலம் கொண்ட மட்டும் அடிக்க துவங்கியவளது செயலில் அவனது இமை நீண்ட புன்னகை பெரியதாகியது.

அவனது பெரியதான சிரிப்பில் அவளது கோபம் பெருக,

"அதுவும் நான் இங்கே நீ எங்கேன்னு வேற பாட்டு. நான் இங்கே தான இருக்கேன் யாருக்காக இந்த பாட்டை பாட்றிங்க" நாசி விடைத்து புருவம் சுருக்கி பார்த்தாள்.

அதில் சத்தமாக சிரித்துவிட்டவன்,

"ஹேய் விடுடி வலிக்கிது ஷ்…" என்று ஒருகையால் எடுத்துவிட்டான்.

"சொல்லுங்க யாருக்காக பாட்றீங்க" என்று மீண்டும் வினவ,

"ஹ்ம்ம் என்னோட எக்ஸ் கேர்ள்ப்ரெண்டை நினைச்சு பாட்றேன்"என்றவனது முகத்தில் குறுஞ்சிரிப்பு.

'எக்ஸ்' என்ற வார்த்தையை கேட்டதும் அவளது உரிமை குணம் தலைதூக்க,

"எக்ஸா? உனக்கெல்லாம் நானே ஓவர் இதுல இன்னொரு பொண்ணு வேறயா?" என்றவளின் வதனத்தில் சிறிதான பொறாமை எட்டி பார்த்தது.

அவ்வபோது அவளை வம்பிழுக்க எக்ஸ் எக்ஸ் என்று கூறுவான். இப்போதும் அதே போல கூற அவளது உரிமை குணம் தலைதூக்கியது.

"இன்னொன்னுலாம் இல்லை இது ஆல்ரெடி இருந்தது நீ தான் செகெண்ட்" என்று கூற அவளது சினம் உச்சத்தை அடைந்தது.

"எது நான்… நான் செகெண்ட்டா?" விழிகள் விரிய அவனை பார்த்தாள்.

அவனது முகத்தில் தெரிந்த விஷமத்தில் முகம் மீண்டும் தக்காளியாய் சிவப்பேறியது.

ஏதும் கூறாது புஸ் புஸ்ஸென்று மூச்சை வெளியிட்டு அவனை இரண்டு நொடிகள் முறைத்தவள் சாரளத்தின் பக்கம் திரும்பிவிட்டாள்.

மனையாள் கோபமாகிவிட்டாள் என்று அவளது செயலிலே புரிந்தது.

ஒரு கையால் திசைமாற்றியை இயக்கியபடி மறுகையை எடுத்து மனையாளின் தோளில் வைத்தவன் தன்புறம் திருப்ப முயல,

"ப்ச் விடுங்க எதுக்கு தொட்றிங்க. போங்க உங்க எக்ஸ் கேர்ள்பிரெண்ட்க்கிட்டயே பேசிக்கோங்க" என்றவளது வார்த்தையில் கேர்ள் ப்ரெண்ட் என்று கூறும்போது மட்டும் இதழ்கள் சற்று அதிகமாக வளைந்தது.

அதில் மென்னகை ஜனிக்க அதை கண்டுகொண்டால் மேலும் முறைப்பாள் என்று எண்ணி இதழ்களுக்குள் அதக்கிவிட்டு,

"ப்ச் அவளுக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சே" என்று இல்லாத சோகத்தில் இயம்ப,

"இப்போ கூட என்னை சமாதானம் பண்ண தோணுதா பாரு. அவ போய்ட்டாளாம். பின்னாடியே போக வேண்டியதுதான" என்று இரண்டு கைகளாலும் பலமாக அடித்தாள்.

அதில் சற்று சத்தமாக சிரித்துவிட்டவன், "நீ இருக்கும் போது நான் ஏன் அவ பின்னாடி போகணும்?" என்று புருவம் உயர்த்த,

"ம்க்கூம் ரொம்பத்தான்" என்றவள் முகத்தை திருப்பி கொண்டாள்.

"ஆமா ரொம்பதான் என் பொண்டாட்டி மேல லவ்" என்று கண்ணடிக்க,

"ஆமா பொல்லாத லவ். இங்க வந்ததுல இருந்து கண்டுக்கவே இல்லை இப்போ வந்து பேச்சை பாரு" என்று முறைத்தாள்.

"ப்ச் இது பப்ளிக் ப்ளேஸ். இங்க எப்படி கண்டுக்கிறது. வீட்டுக்கு போனதும் மொத்தமா கண்டுக்கிறேன்" என்று கண்ணடித்தவனது முகம் முழுவதும் விஷமப் புன்னகை மிளிர்ந்தது.

அவனது பேச்சில் சட்டென்று முகம் சிவந்துவிட,

"சீ பப்ளிக் ப்ளேஸ்ல என்ன பேசுறிங்க" என்று அவனை முறைத்தாள்.

"நீதான நான் உன்னை கண்டுக்கிறதே இல்லைன்னு பர்ஸ்ட் ஸ்டார்ட் பண்ண. அதான் கண்டுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்" என்க,

"ஐயா சாமி தெரியாம கேட்டுட்டேன். விட்டுடுங்க" என்று கையெடுத்து கும்பிடும் அவளது பாவனையில் இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

இருவரும் நகைக்க துவங்க சத்தம் அதிகமாவதை உணர்ந்து,

"ஷ் மெதுவா அதி எழுந்துடப் போறா" என்றவளது பார்வை பின்னிருக்கையில் விரிக்கப்பட்டிருந்த சிறிதான மெத்தையில் புன்னகைத்த முகமாக உறங்கும் மகளின் மேல் விழுந்தது.

இதில் அவனது சிரிப்பின் ஓசையும் குறைந்தது. பொலிரோவை இயக்கி கொண்டிருந்தவனது கை திடீரென நிற்க, அவளது விழிகள் கேள்வியாக நோக்கியது.

"அங்க பாரு" என்றவனின் பதிலில் திரும்பி பார்த்தவளின் முகத்தில் பிரகாசம்.

காரணம் அங்கே அழகாய் ஒரு குடில் போன்ற அமைப்பில் தேநீர் விடுதி விளக்குகளால் மின்னியது.

அவளுக்கு தேநீர் என்றால் கொள்ளை பிரியம். தேநீருக்காக சொத்தையே எழுதி வைத்திடுவாள் ‌அத்தனை விருப்பம் அந்த தேநீர் மேல்.

அதுவும் தன் தாய் சுக்கு இஞ்சி எல்லாம் தட்டி போட்டு கொடுக்கும் ஏலக்காய் தேநீரின் வாசத்திலே உணவின்றி வாழ்ந்திடுவாள் அவள்.

மகிழுந்தை அந்த தேநீர் விடுதியின் அருகில் நிறுத்தியவன் இறங்கி உள்ளே சென்றான்.

செல்லும் கணவனை கண்டவளது பார்வை மகனது சிணுங்கலில் திசை மாற எட்டி, "ஒண்ணுமில்லை தூங்குடா பட்டு" என்று தட்டி கொடுத்தாள்.

தாயின் கரத்தை உணர்ந்ததும் திரும்பி படுத்தாள் அதியா அவர்களது புதல்வி.

உள்ளே சென்றவன் இரண்டு நிமிடங்களில் கையில் இரண்டு மண் குவளையில் தேநீருடன் வெளியில் வந்தான்.

வெளியே இறங்கி அந்த குவளையை கையில் வாங்கியவள்,

"ஹ்ம்ம்… டீ வாசம் தூக்குது" என்று அதன் நறுமணத்தை நாசிக்குள் நிரப்பியவள் விழி மூடி அதன் சுகந்தத்தை அனுபவித்தாள்.

நொடிக்கு நொடி பாவங்களை மாற்றியபடி இருக்கும் மனையாளை தான் விழிகள் நிறைந்த நேசத்துடன் பார்த்தவனது இதழ்களில் மென்னகை முகிழ்ந்தது.

கணவனது ரசனையை ஓரப் பார்வையில் கண்டு கொண்டாலும் பார்க்காத பாவனையில் மிடறு மிடறாக தொண்டைக்குள் சரித்தாள்.

முழுதாக ஐந்து நிமிடங்கள் தேநீரை அனுபவித்து அருந்தியவளது விழிகள் அப்போது தான் கணவனின் மீது விழுந்தது.

"போலாமா?" என்றவளின் முகத்தில் மந்தாச புன்னகை.

தேநீரை அருந்திய மகிழ்ச்சி அது அவளது வதனமெங்கும் பிரதிபலித்தது.

அவனும் குவளையை கொடுத்துவிட்டு வந்து வாகனத்தை இயக்கினான்.

அமைதியான பயணத்தில் மீண்டும் ஹரிஹரனின்

வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா? என்று நேரம் கரைய துவங்கியது.

இடையில் அவளது கைபேசி கானாவை இசைத்தது.

எடுத்து பார்க்க தாயிடமிருந்து அழைப்பு வந்தது.

அழைப்பை ஏற்றவள்,

"சொல்லும்மா" என்க,

"என்னடி கிளம்பியாச்சா?" மறுமுனையில் கேட்டது.

"ஹ்ம்ம் ஏழு மணிக்கே கிளம்பிட்டோம். நீங்க என்ன இந்த நேரத்தில கால் பண்ணியிருக்கிங்க தூங்கலையா?" என வினவ,

"தூங்க போகணும்டி. சரி நீங்க கிளம்பிட்டிங்களான்னு கேட்கலாம்னு கூப்பிட்டேன்" என்க,

"இவள் சரிம்மா" எனும் போது அங்கே ஒரு குரல் கேட்டது.

"யாரும்மா பவியா?" என அவள் வினா தொடுக்க,

"ஹ்ம்ம் ஆமா அவளுக்கு வேற வேலையில்லை. நீ ஊருக்கு போனதில இருந்து அவளை கண்டுக்கிறதே இல்லையாம்" என்றவரின் பதிலில் சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது.

காரணம் அவர் கூறிய 'கண்டுக்கலை' என்ற வார்த்தை தான். சடுதியில் அவன் கூறியது நினைவு வந்துவிட்டது.

அவனுக்கும் இவர்களது உரையாடல் கேட்டது. அந்த வார்த்தையில் அவனது இதழ்களிலும் புன்னகை.

அவள் தாயிடம் பேசிவிட்டு காலை துண்டித்த நொடி இருவரும் சத்தமாக சிரிக்க தொடங்கிவிட்டனர்.

"ப்ச் உங்களை இனி யாரு இந்த வார்த்தையை சொன்னாலும் எனக்கு இது தான் ஞாபகம் வரும்" என்றவள் அவனை செல்லமாக அடிக்க,

"ஏய் நான் என்னடி பண்ணேன்" என்று சிரிப்புடன் வினவிவிட்டு திரும்ப எதிரில் ஒரு லாரி வந்திருந்தது.

அது ஒரு வளைவு ஆதலால் அவனுக்கு முன்பே தெரியவில்லை.

சடுதியில் அதிர்ந்தவன் வாகனத்தை திருப்பும் முன் லாரி மகிழுந்தை அடித்து தூக்கியிருந்தது.

மகிழுந்து இரண்டு முறை முழுதாக குதித்து தாவி திரும்பி கவிழ்ந்துவிட்டது.

எல்லாம் ஒரு நொடியில் நகர்ந்துவிட்டது. அந்த லாரி அவ்விடத்தை விட்டு சென்றும் இருக்க,

இதோ இங்க ரத்த வெள்ளத்தில் மூன்று உயிர்கள் மகிழுந்தினுள் கிடந்தது.

சாரளத்தின் புறமாக அமர்ந்திருந்தவளின் தலை கண்ணாடியில் மோத சற்று முன் கோபத்தில் சிவந்த முகம் இப்போது குருதியில் சிவக்க துவங்கியது..

கருப்பு நிற தார் சாலையெங்கும் செங்குருதி நிறைய துவங்கியது.
பொலிரோ தலைகீழாக கிடக்க கண்ணாடி எல்லாம் சுக்கு சுக்காக சிதறியிருந்தது.

அவனால் விழிகளை திறக்க முடியவில்லை கார் குதித்ததில் முன்புறமாக சென்று மோதியிருந்தான்.

கால்வேறு உள்ளே மாட்டி கொண்டது. ரத்த வெள்ளத்தில் மெதுவாக சுயநினைவை இழக்க துவங்கிய மனையாளை விழிகள் வெறித்தது.

அவளால் இமைகளை பிரிக்க கூட இயலவில்லை. வலியில் உயிரே போக முழுதாக சுயநினைவை இழந்திருந்தாள்.

இமைகளை மொத்தமாக மூடிவிட்ட சரிபாதியை கண்ட கணம் விழிகளில் நீர் கோர்த்தது.

பின்சீட்டில் உறங்கி கொண்டிருந்த மகளது நினைவு வர தலையை திருப்ப முடியவில்லை.

சிறிய‌ எறும்பு கடியை கூட பொறுக்காத மகளுக்கும் மனையாளுக்கும் ஏற்பட்ட நிலையினால் விழிநீர் வெளியேற அவளையே இமைக்காது பார்த்திருந்தவன் சில நிமிடங்களில் சுயநினைவை இழந்திருந்தான்.

சற்று முன் கேட்ட சிரிப்பொலி இப்போது மாயமா என்று எண்ணுமளவிற்கு அங்கே அசாத்திய அமைதி.

அந்த அடர்ந்த கருமையை பூசிய இரவில் மூன்று உயிர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்தது.

நேசத்தில் பூத்த உயிர்களுக்கெல்லாம் நேசத்தில் திளைத்து கரைந்து அந்நேசத்தை கொண்டாடும் வாய்ப்பு கிடைப்பதில்லையோ…?
















 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
ஆரம்பத்துல ஒரு மோதல், அப்புறம் காதல், இப்போ உயிருக்கே போராட்டம் அச்சோ 😳😳😳😳😳😳😳😳
 
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
First starting oru fight selva ayoo pesidaay Iruka muju vidu ma ne😂😂 hero romba tha thairiyam pa 😁... Next oray love ya iruthuju ❤️❤️athula enna epadi oru shock twist enna nadaga poguthu 🥺🥺🥺
 
Top