• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,320
Reaction score
3,936
Points
113
நேரம் – 8 💜

பூனை நடைபோட்டு சுந்தரி அறைக்குள் நுழைந்த சரவணா, “அத்தை... எழுந்துட்டீயா? உனக்காகவே ஸ்பெஷலா கொஞ்சம் சுகர் போட்டு டீ எடுத்துட்டு வந்திருக்கேன். உன் மக ராட்சசி வரும் முன்னே குடிச்சிடு!” என்றவன், அவரிடம் தேநீர் கோப்பையை நீட்டினான்.

“இல்ல சரவணா... நீ குடி. நான் சர்க்கரை போடாம டீ குடிச்சிக்குறேன். ப்ளட் சுகர் அதிகமாகிடுச்சுன்னு டாக்டர் அப்புறம் வாணியைத்தான் திட்டுவாங்க!” அவர் எழுந்து சாய்ந்தமர்ந்து மறுப்பாகத் தலையை அசைத்தார்.

“ம்ப்ச்... ஒருநாள் குடிச்சா ஒன்னும் ஆகாதுத்தை. குடி!” இவன் கட்டாயப்படுத்தி அவரைக் குடிக்கப் பணித்தான். அவன் பின் மண்டையில் வலிக்காது தட்டினாள் சரியாய் அந்நேரம் உள்ளே வந்த இசைவாணி.

அவளைத் திரும்பி முறைத்தவன், “அத்தை... உன் மகளுக்கு கை ரொம்ப நீளமாகிடுச்சு. பேசாம ம்ம் சொன்னீன்னா நானே தாலியைக் கட்டி இவளோட திமிரைக் குறைச்சுடுவேன். சின்ன பையன்னு யோசிக்காதத்தை. அடுத்த வருஷம் வேலைக்குப் போய்டுவேன். அப்படியே வேலை கிடைக்கலைன்னாலும் அதான் உன் மக வேலைக்குப் போறாளே. அவ என்னைப் பார்த்துக்கப் போறா!” என்றவன், சுந்தரி அருகே அமர்ந்து தன் கையிலிருந்த தேநீரைப் பருகினான்.

“டேய்... உன்னை யாருடா லேட்டா பிறக்க சொன்னது. கொஞ்சம் சீக்கிரமா பிறந்திருந்தா நீ வேணாம்னு கதறுனாலும் இவளை உனக்கு கட்டி வச்சிருப்பேன்!” உண்மையில் சுந்தரிக்கு மகளை சொந்தத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று நிரம்ப ஆசை.

ஆனால் இருவீட்டு சொந்தத்திலும் அது அமையாமல் போயிற்று. சரவணனை சிறுவயதிலே இவர்தான் தூக்கி வளர்த்தார். அவனுக்கும் இசைவாணிக்கும் இடையே ஏழெட்டு வருட இடைவெளியிருந்தது. ஒன்றிரண்டு வருடம் என்றால் கூட இவர் அதைப் பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல் தம்பி மகனுக்கே மகளைத் தாரை வார்த்திருப்பார். ஆனால் அவர்கள் இருவருக்கும் கடவுள் எழுதவில்லை என்று வயது வேறுபாட்டை எண்ணிப் பெருமூச்சுவிட்டார்.

இசைவாணி அவனை முறைத்துக் கொண்டே தாயிடம் சர்க்கரை இல்லாத தேநீரைக் கொடுத்தவள், அவனுக்கு அருகே ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்தாள். மருத்துவமனையில் இருந்த இரண்டு நாட்களும் தாயைக் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாள் இவள். ஆனால் இருவருக்குமிடையே பெரிதாய் பேச்சு வார்த்தைகள் இல்லை. அவரது நலனை மட்டும் நாடியவள், நடந்து முடிந்ததைப் பேசி அவரை மேலும் வருத்த விரும்பவில்லை.

“அதான் எனக்கு ஒன்னும் இல்லன்னு டாக்டரே வீட்டுக்கு அனுப்பிட்டாங்களே வாணி. நீ ஏன் முகத்தை ஒருமாதிரி வச்சிருக்க? அப்படியெல்லாம் சீக்கிரம் உன்னைவிட்டுப் போக மாட்டேன் டீ!” என கேலியாக கூற முயன்றவரைப் பார்த்து இவளுக்கு கண்ணை கரித்துக் கொண்டு வந்தது. அவரது தோளில் சாய்ந்தாள்.

“அடடே... இந்த சென்டிமெண்டல் சீனைப் பார்க்க நான் ஆள் இல்லப்பா!” காதைக் குடைந்தவன், “ஏய் வாணி... லஞ்ச் சாப்பிட்டதோட சரி. என் வயிறு காலியா கிடக்கு. வீட்டுக்கு வந்த கெஸ்டுக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் செஞ்சு கொடுப்போம்னு தோணுதா உனக்கு?” என அவளது கையைப் பிடித்திழுத்தான் சின்னவன்.

“யாரு டா கெஸ்ட்? ஹம்ம்... கெஸ்ட்னா கொஞ்சமாச்சும் கூச்சப்படணும். நீ என்டான்னா மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு வந்த கணக்கா அவளை வேலை ஏவிட்டிருக்க!” அற்புதா தமையனைப் பார்த்து நொடித்தாள்.

“ஏய்... சொன்னாலும் சொல்லலைனாலும் இது என் மாமியார் வீடுதான் டீ!” என சிலிர்த்தவன், “அத்தை... நீயே சொல்லு!” என சுந்தரியிடம் கண்ணைக் காண்பித்தான்.

“ஏன் டீ அவனை வம்பிழுக்குற நீ. புள்ளைக்குப் பசிக்குதுன்னு ஏதாவது செஞ்சு தரச் சொல்லி கேட்குறான். இதுக்கெல்லாமா நீ அவனைக் குறை சொல்லுவ?” சுந்தரி அற்புதாவை அதட்டினார்.

“அதானே அத்த... என்னைக்கு நீ எனக்கு சப்போர்ட் பண்ணி இருக்க. அவன் தப்பே பண்ணாலும் தலைல தூக்கி வச்சு ஆடுற ஒரு ஆள் நீதான்!” இவள் நொடித்தாள்.

“ஏய் வாணி... எனக்கு இப்போ ஸ்நாக்ஸ் செஞ்சு கொடுப்பீயா? மாட்டீயா?” அவன் அடமாகக் கேட்டான்.

“ம்ப்ச்... என்ன வேணும்னு சொல்லித் தொலைடா!” இசைவாணி போலி அலுப்புடன் எழுந்தாள்.

“ஹம்ம்... லேசா மழை தூறுற மாதிரி இல்ல?” இவன் கேட்டுக் முடிக்கும் முன்னே, “இல்ல...” என பதில் கொடுத்தாள் அற்புதா.

“ப்ம்ச்... அடங்கு அற்புதா!” அவளிடம் கையைக் காண்பித்து பத்திரம் கூறியவன், “இந்தக் க்ளைமேட்டுக்கு சூடா வெங்காய பஜ்ஜி இல்லைன்னா வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டா டேஸ்டா இருக்கும்!” என்றான் கையைத் தாடையில் வைத்து தடவியபடியே.

“இதைவிட பெஸ்ட் ஐடியா நான் ஒன்னு சொல்றேன் டா. பேசாம தட்டெடுத்துட்டு நாலு வீட்டுக்குப் போய் கதவைத் தட்டு. விதவிதமான ஸ்நாக்ஸ் கிடைக்கும்!” தமக்கை நக்கல் செய்ய, அதில் கடுப்பானவன் ஏதோ சொல்ல வந்தான்.

“ஏய்! வாயை மூடு டீ!” என்ற சுந்தரி, “வாணி போ... அவளைக் கூட்டீட்டு போய் பஜ்ஜி சுட்டு எடுத்துட்டு வா!” என மகளை ஏவினார் சுந்தரி.

“ஆமா... ஆமா... இந்த அத்தை மகனுக்கு பஜ்ஜி சுட்றோம்னு நினைச்சு இதமா, பதமா அப்படியே உன் மொத்த அன்பையும் கொட்டி எடுத்துட்டு வா என் அயித்த மகளே!” என்றவனை முறைத்துக் கொண்டே பெண்கள் இருவரும் அகன்றனர்.

இசைவாணி வெங்காயத்தை எடுத்து நறுக்கத் தொடங்கினாள். வாழைக்காய் ஒன்றே ஒன்று இருந்தது. அதையும் எடுத்து தோளை நீக்கி மெல்லியதாய் சீவினாள்.

“கடலை மாவு தீர்ந்துடுச்சா வாணி?” வெறும் டப்பாவைக் கையில் வைத்து ஆட்டியபடியே கேட்டாள் அற்புதா.

“கடலை மாவு இல்லயா? அப்போ என்ன பண்றது?” என யோசித்தவள், “வீட்டுக்கு ஆப்போசிட்ல கடை இருக்கு. உன் ஃப்ரெண்டோட அப்பா கடைதான். போய் கடலை மாவு வாங்கிட்டு வர்றீயா அற்புதா?” எனக் கேட்டாள் பெரியவள்.

“ஆமால்ல... நேத்தே நீ சொன்ன நான் மறந்துட்டேன். பரிதி இந்த டைம் கடைல இருப்பானா?” என்றவள், தன் பணப்பையிலிருந்து நூறு ரூபாய் தாளொன்றை உருவினாள்.

“ஹம்ம... மே பீ இருக்கலாம். நீ போய் பாரு!” இசைவாணி பஜ்ஜிக்குத் தேவையான உப்பு, மிளகாய் பொடி, எண்ணெய் என அனைத்தையும் தேடியெடுத்து வைத்தாள். அற்புதா கடைக்குச் செல்ல, பரிதிதான் அங்கிருந்தான்.

“பரிதி... என்ன டா லண்டன்ல போய் ஏதாவது இங்கிலீஷ்காரியைக் கரெக்ட் பண்ணி குஜாலா இருப்பேன்னு பார்த்தா, இங்க உக்கார்ந்து பொட்டலம் மடிச்சிட்டு இருக்க?” இவள் கேலி செய்ய, அவன் முறைத்தான்.

“எல்லாம் என் நேரம் அற்புதா!” என முனங்கியவன், “உனக்கு இப்போ என்ன வேணும்?” எனக் கேட்டான் அவன்.

“பெருசா ஒன்னுமில்ல. இந்தக் கடையை என் பேருக்கு எழுதிக் கொடுத்துடு டா!” அவள் குறும்பாய் கேட்க,

“இதோ வர்றாரே... வெள்ளை வேட்டி அவர்கிட்டேதான் நீ இந்தக் கடையை எழுதி வாங்க முடியும். ஏன்னா அந்த மனுஷன்தான் இந்தக் கடையோட ஓனர்!” நான்கடி தூரத்தில் வந்த தந்தையைக் கை காண்பித்தான் இவன்.

“ஏய்! அப்பாவாடா?” இவள் குரலை சின்னதாக்கி கேட்க, அவன் ஆமாமென உதட்டை வளைத்தான்.

“என்னம்மா வேணும்?” அவளிடம் கேட்டுக் கொண்டே தடுப்பைத் திறந்து உள்ளே நுழைந்தவர், மகனைக் கேள்வியாகப் பார்த்தார்.

“கடலைமாவு வேணும் அங்கிள். பத்து நிமிஷமா கேட்குறேன். உங்க பையன் ஃபோன்ல இந்த பொம்பளை புள்ளைங்க ஆட்றதைப் பார்த்துட்டு நான் சொல்றதைக் காதுலயே வாங்க மாட்றாரு!” இவள் கூற்றில் மார்த்தாண்டம் மகனைத் தீயாய் முறைத்தார்.

“ப்பா... அவ சும்மா சொல்றாப்பா. அவ என் ஃப்ரெண்ட்தான். பேசிட்டு இருந்தோம் நாங்க!” தந்தையிடம் விளக்கியவன், அவளுக்கு கடலைமாவை எடுத்துக் கொடுத்தான். மார்த்தாண்டம் மகனை நம்பாது அற்புதாவைப் பார்த்தார்.

அதில் சிரித்தவள், “அங்கிள், நானும் அவனும் ஸ்கூல் ப்ரெண்ட்ஸ். சோ சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க!” என்றாள் தயக்கத்துடன்.

“பரவாயில்லைமா...” அவர் மெலிதாய் சிரிக்கவும், இவள் தலையை அசைத்தாள். இரண்டு எட்டுகள் நடந்தவள், திரும்பி அவனைப் பார்த்தாள்.

“வேலையெதுவும் இல்லைன்னா நீயும் வா பரிதி. அத்தை உன்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க!” என அவனை அழைத்தாள். அவன் பார்வை தந்தையிடம் சென்றது.

“அங்கிள், அத்தையை ஹாஸ்பிடல்ல சேர்க்குறதுக்கு பரிதி தானே ஹெல்ப் பண்ணான். அதான் அவனைப் பார்க்கணும்னு அத்தை சொன்னாங்க. நான் கூட்டிட்டு போகவா?” அவரிடம் இவளே கேட்க, பெரியவரால் மறுக்க முடியவில்லை.

“சரிம்மா கூட்டிட்டு போ!” என்றவன், ‘உன் வாலை சுருட்டி வச்சுக்கோ!’ என கண்களாலே மகனை மிரட்டினார் பெரியவர். இவன் ரோஷத்துடன் முன்னே நடந்தான்.

அவரைவிட்டு சற்றுத் தொலைவில் வந்ததும், “என்ன பரிதி இன்னும் சின்னபுள்ளை மாதிரி உன்னைக் கூப்பிட்டா உங்கப்பா மூஞ்சியைப் பார்க்குற நீ?” அவள் குரலில் ஆச்சிர்யமா அல்லது கேலியா என இவனால் கண்டறிய முடியவில்லை.

தொண்டையைச் செருமியவன், “அது அப்படித்தான். அவர் முகத்தைப் பார்த்தே எல்லாம் செஞ்சு பழகிட்டேன். சோ மாத்த முடியலை!” எனத் தோளைக் குலுக்கினான்.

“ஆமா... போகும்போது கண்ணைக் காட்டுனாரே அவரு. என்ன சொன்னாரு?” இவள் அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

அவளைப் பார்த்து இருமியவன், “உங்களையெல்லாம் தங்கச்சி மாதிரி பார்த்துக்க சொன்னாரு. அதான் குட்பாயா சரிப்பான்னு தலையாட்டிட்டு வந்தேன் நான்!” என்றான் சிரிப்பை உதட்டுக்குள் அதக்கியபடி‌. மீசையோரம் துடித்தது.

“சே... இந்தக் காலத்துல இப்படியொரு குட் பாயா? ஆனால் அவ்ளோ நல்லவன் இல்லையே நீ. வாணி சொன்னா!” இவள் கேலியாய் நிறுத்த, அவன் நடை மொத்தமாய் நின்று போனது.

“அவளா... என்ன சொன்னா உன் அத்தை மக என்னைப் பத்தி?” உர்ரென்ற முகத்துடன் கேட்டான் இவன். என்ன சொல்லி வைத்திருக்கிறாளோ ப்ரௌனி என நொடித்தான்.

“இல்ல... எப்போ பார்த்தாலும் பொண்ணுங்க ரீல்ஸா பார்க்குறீயாம் நீ!” அவனைக் குறுகுறுவென பார்த்தாள் இவள். அவன் முகத்தில் கடுப்பு படர்ந்தது.

“அவ சொன்னாளா அப்படி?” பல்லைக் கடித்தான்.

'ஏதோ ரெண்டு டைம் அழகா இருக்கான்னு பார்த்தது தப்பா போச்சு. என்னைப் பிளே பாய் ரேஞ்சுக்கு சொல்லி வச்சிருக்கா!' எனக் கடுப்பானான் இவன்.

“ஹாஹா... அவ சும்மா சொல்லிருப்பா பரிதி. நீ டென்ஷனாகாம உள்ளே வா!” என அவன் கையைப் பிடித்திழுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.

அப்போதுதான் கூடத்திற்கு வந்தமர்ந்திருந்தனர் சரவணனும் சுந்தரியும். அற்புதாவோடு வரும் புதியவனைப் பார்த்த பெரியவர், நெற்றியைச் சுருக்கினார்.

“அத்தை... இவன் பரிதி. உங்களை ஹாஸ்பிடல்ல சேர்க்க ஹெல்ப் பண்ணானே!” அற்புதா கூறியதும் சுருங்கிய வதனத்தில் புன்னகை முளைத்தது.

“தம்பி... வாங்க... வந்து உக்காருங்க!” என அவனைத் தன்னருகே அமர்த்தினார் பெண்மணி.

“ரொம்ப நன்றி தம்பி... நீங்கதான் அன்னைக்கு முழுசும் உதவியா இருந்தீங்கன்னு வாணி சொன்னா. உதவின்னு கேட்காமலே அக்கம் பக்கத்துல இருக்குற உங்களை மாதிரி ஆட்கள் வந்து ஹெல்ப் பண்றதுல ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. சென்னையில இப்படிலாம் இல்ல!” என்றார் மனத்தாங்கலுடன். சென்னையில் இவர்கள் வசித்தப் பகுதி சற்று வசதிபடைத்தவர்கள் வாழுமிடம். அதனாலே அக்கம் பக்கத்தில் பழக வாய்ப்பு வெகுகுறைவே.

அவரைப் பார்த்து முறுவலித்தவன், “அது சிட்டி ஆன்ட்டி. ஒருத்தர் முகத்தை மத்தவங்க பார்க்க நேரம் கிடைக்காம ஓடுவாங்க. பட் இங்க அப்படி கிடையாது. இது கொஞ்சம் கிராமம் இல்ல. சோ, பக்கத்துல எல்லாம் நல்லா பழகி வச்சுக்கோங்க. கேட்காமலே உதவிக்கு வருவாங்க!” எனப் புன்னகையுடன் கூறினான் பரிதி.

“ரொம்ப சந்தோஷம்பா... உங்க வீடு எங்க இருக்கு?”

“தெருமுனையில கடைசி வீடு எங்களோடதுதான் ஆன்ட்டி!” பதிலளித்தவனுக்கு இசைவாணி தேநீர் கொடுத்தாள். இவன் அவளை முறைத்தான்.

ஆனாலும் இரண்டு நாட்களில் வற்றிப் போன அவளது கன்னத்து சதையையும், கருவளையம் சூழ்ந்த விழிகளையும் மனம்‌ கவனித்திருந்தது. அவருக்கு உடல்நிலை சரியில்லையா? இல்லை இவளுக்கா எனக் கேட்குமளவு மெலிந்து போயிருந்தாள் இசைவாணி.

“டீ குடிப்பீங்கதானே தம்பி?” சுந்தரி குரலில் கலைந்தவன், “அதெல்லாம் குடிப்பேன் ஆன்ட்டி!” இவரிடம் புன்னகைத்துவிட்டு, அவளிடம் சிடுசிடுப்புடனே குவளையைக் கையில் எடுத்தான்.

“உங்களுக்கு இந்த ஊர்தான் சொந்த ஊரா? அப்பா என்ன பண்றாங்க? எத்தனை வருஷமா கடை வச்சிருக்காரு?” என ஆரம்பித்தவர், எங்கே பிறந்து வளர்ந்தான், அவனது குலதெய்வம் பெயர் என்ன, என அனைத்தையும் கேட்டறிந்தார். அவருக்குப் பதில் சொல்லிக் கொண்டே தேநீரைக் குடித்து முடித்தான் இவன்.

“அத்தை... அத்தை!” சரவணன் பெரியவரின் தோளைச் சுரண்டினான்.

“பேசிட்டு இருக்கேன்ல சரவணா!” சுந்தரி சின்னவனை அதட்டினார்.

“அதான் நானும் கேட்க வரேன் அத்த. இவருக்கு என்ன பொண்ணா கொடுக்கப் போற? விட்டா அவரோட செத்துப் போன ஆயா வரைக்கும் தோண்டி துருவி கேட்ப போல?” இவன் நக்கலாய்க் கேட்டதும், அவர் முறைத்தார்.

அவன் கூற்றில் பரிதி இருமினான். ‘ஐயோ... கடவுளா கோர்த்துவிட்ட கூட இந்த கருவாச்சி எனக்கு வேணாம். இன்னும் என்னைப் பத்தி என்னென்ன தப்பு தப்பா சொல்லி வச்சிருக்காளோ!’ இவன் மனதில் அவளை வறுத்தான்.

சமையலறையிலிருந்த இசை வாணியின் காதுகளையும் சின்னவனின் பேச்சு எட்டியது.
‘அறிவே இல்ல இந்த சரோவுக்கு!’ இவள் முனங்கினாள்.

“பின்ன என்ன? ஒரு டீ குடிச்சது குத்தமாயான்னு அவர் நினைக்கப் போறாரு!” என்றவன் பரிதியிடம், “நான் சொல்றது சரிதானே ப்ரோ?” எனக் கேட்டான்.

அவன் சில நொடிகள் திருதிருத்துவிட்டு, “சே... சே. அப்படியெல்லாம் இல்ல!” என்றான் சமாளிப்பாக. ஆனால் அவனுக்குமே சுந்தரியின் கேள்வியில் இவரது பெண்ணைத் திருமணம் செய்ய, நேர்முகத் தேர்விற்கா நான் வந்திருக்கிறேன் எனக் கேள்வி எழுந்தது உண்மை.

“அவன் அப்படித்தான் பா... அதை விடுங்க. எங்க வேலை பார்க்குறீங்க? என்ன படிச்சிருக்கீங்க?” எனக் கேட்டார். இவன் தன்னுடைய படிப்பு, வெளிநாட்டில் முதுகலை முடித்தது, இங்கே வேலை பார்க்குமிடம் பற்றி சுருக்கமாக கூறினான். அதற்குள்ளே இசைவாணி இரண்டு தட்டுகளில் வெங்காய பஜ்ஜி மற்றும் வாழைக்காய் பஜ்ஜியோடு வந்தாள்.

“பஜ்ஜி சாப்பிடுங்க தம்பி!” இவனை மீண்டும் உபசரித்தார் பெண்மணி. அவன் சங்கடத்துடன் மறுத்தான்.

“ம்ப்ச்... ரொம்ப தயங்காத பரிதி. நம்ப வீடு மாதிரி இது!” அற்புதா அவனை உரிமையோடு அதட்டி பஜ்ஜியைக் கொடுத்தாள். ஒருவாய் கடித்தான். சுவை நன்றாய் இருக்கவும் நிமிர்ந்து இசைவாணியைப் பார்த்தான். சரவணன் அவளிடம் ஏதோ வம்பளக்க, இவள் அவனைக் கண்டிப்போடு பார்த்தாள். இவனது பார்வைக் கொடுத்த உந்துதலில் நிமிர்ந்து பார்த்தாள். பரிதி மீண்டும் அவளை முறைத்துவிட்டுக் குனிந்தான். அவளது நெற்றி யோசனையாகச் சுருங்கியது. பின்னர் சுந்தரிக்கென்று வெள்ளரிக்காய், கேரட் துருவி சாலட் செய்து எடுத்து வந்து கொடுத்தாள்.

“அற்பு... உன் ஃப்ரெண்டை கூப்பிடு. ஆள் குறையுதுன்னு கேரம் விளையாடவே நீ வர மாட்ற. இப்போதான் நாலு பேர் இருக்கோமே. ஒரு மேட்ச் போடலாம்?” தமக்கையை இடித்தான் சின்னவன்.

“பரிதி... உனக்கு கேரம் விளையாடத் தெரியுமா?” அற்புதா அவனிடம் கேட்டாள். அவன் யோசனையுடன் தலையை ஆமாமென அசைத்தான்.

“சூப்பர்... அப்போ வாயேன் ஒரு மேட்ச் போடலாம். மூனு பேரா இருக்கோம்னு கேரம் போர்டைத் தொடவே இல்ல. அதுவும் இல்லாம நாங்களா விளையாடினா ரொம்ப போரிங்கா இருக்கு. நீ கம்பெனி கொடு!” அவனை அழைத்தாள் அற்புதா.

“இல்ல அற்புதா... நீங்க விளையாடுங்க. நான் வரலை!” அவன் சங்கோஜத்துடன்‌ மறுத்தான். பார்த்து சில நாட்களே ஆன இவர்களிடம் சட்டென அவனால் ஒன்ற முடியவில்லை. என்னவோ ஒரு கோட்டோடு நின்று கொள் என மனம் கூறிற்று.

“ப்ரோ... ஒரே ஒரு மேட்ச். நீங்களும் அற்புதாவும் ஒரு டீம். நானும் என் ஆளும் ஒரு டீம்!” என வாணியை அவனோடு கூட்டுச் சேர்த்தான் சரவணன்.‌ பரிதி ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தான். அவள் இவனைக் கவனிக்கவில்லை.

“ஓகே... விளையாடலாம். பட் ஆன்ட்டி வந்தாதான் நானும் வருவேன்!” சுந்திரியை பரிதி அழைக்க, இசைவாணி அவனைப் பார்த்தாள்.

“ஐயோ... தம்பி... புள்ளைங்களோட போய் விளையாடுங்க நீங்க. நான் வரலை. எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல. நான் வேடிக்கைப் பார்க்குறேன்!” அவர் சங்கடத்துடன் மறுத்தார்.

“ப்ம்ச்... ஆன்ட்டி, எனக்கும்தான் நல்லா விளையாட வராது. நீங்களும் நானும் சேர்ந்து விளையாடலாம். வாங்க!” என அவரைக் கட்டாயப்படுத்தி அழைத்தான்.

வெளியே இருள் கவிந்திருந்தது. முகப்பு விளக்கு வாயிலை நிறைக்க, இவர்கள் போர்டிகோவில் நாற்காலிகளைப் போட்டு அமர்ந்தனர். சுந்தரியைத் தன்னருகே அமர்த்தினான் பரிதி. முதலில் பெரியவர் தயங்கினார், ஒரு காயைக் கூட அவர் சரியாய் அடிக்கவில்லை.

“நான்தான் சொன்னேனே தம்பி இதெல்லாம் எனக்கு வராதுன்னு!” விலகப் பார்த்தவரை இழுத்துப் பிடித்து விளையாட வைத்தான்.

“காய்னை இப்படி வைங்க ஆன்ட்டி. இதோ இந்தக் கோட்டுக்கு நடுவுல வைக்கணும். இப்போ அந்தக் காய்னை டார்கெட் பண்ணா இந்தப் பக்கம் அடிக்கணும். நீங்க ஒருதடவை விளையாடுங்க!” என அவருக்கு ஒவ்வொன்றாக நுணுக்கமாகச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே விளையாடினான். இசைவாணி கண்டும் காணாமலும் அவனைப் பார்த்தாள். சுந்தரி சில பல சொதப்பல்களுக்குப் பிறகு ஓரிரண்டு முறை காய்களை சரியாய் அடித்தார்.

“சூப்பர் ஆன்ட்டி... செம்ம. இப்போ இதை அடிங்க!” என அவரை உற்சாகப்படுத்தினான். பெரியவருக்கு சற்றே வெட்கம் வந்திருக்க வேண்டும். இசைவாணி தாயை ஆச்சரியமாகப் பார்த்தாள். பின்னர் பரிதியைப் பார்த்தாள். அவன் அவரைக் கேலி செய்தான். அவர்கள் இருவரும் சேர்ந்து சிரிக்க, சரவணன் இடைபுக, அற்புதா கலாய்க்க என நேரம் நகர்ந்தது. இவளது பார்வை இப்போது பரிதியை அடிக்கடித் தொட்டுத் தடவிப் போனது. அவளது பார்வையைக் கவனித்துவிட்டவன் நிமிர்ந்து அவளை தீயாய் முறைத்தான்.

‘சும்மா இருக்கவனை இவளுகளே உசுப்பேத்தி விடுறது. அப்புறம் மூஞ்சிக்குப் பின்னாடி தீராத விளையாட்டுப் பிள்ளை இவன்னு பட்டம் கட்டுறது!’ என நொடித்தான். இசைவாணி அவன் பார்த்ததும் சட்டென பார்வையை மாற்றிக்கொண்டாள். ஒருமுறை சின்னவர்கள் வெற்றி பெற, மறுமுறை சுந்தரியும் பரிதியும் வென்றனர்.

நேரத்தைப் பார்த்த பரிதி, “சூப்பரா விளையாடுனீங்க ஆன்ட்டி. நெக்ஸ்ட் டைம் இன்னொரு மேட்ச் போடலாம். இப்போ டைமாச்சு. நான் கிளம்புறேன்...” என அவன் எழுந்து நின்றான்.

“சரிப்பா... அடிக்கடி வந்துட்டுப் போ!” என அன்பாய் அழைத்தவரிடம் புன்னகைத்தவன்,

“சாரி... வந்ததும் கேட்கணும்னு நினைச்சேன். பட், மறந்துட்டேன் . இப்போ உங்க ஹெல்த் எப்படி இருக்கு? நீங்க ஓகே வா?” எனக் கேட்டான்.

“நான் நல்லா இருக்கேன் தம்பி. என் பொண்ணு என்னை நல்லா பார்த்துக்கிறா!” என்றவரின் கண்கள் மகளைக் கண்டதும் கனிந்தன. இவனது விழிகள் அவளை ஒரு நொடி தொட்டு மீண்டன.

“ஓகே ஆன்ட்டி... ரூம்லயே அடைஞ்சு கிடக்காதீங்க. அடிக்கடி இந்த மாதிரி ஏதாவது விளையாடுங்க. மனசை ரிலாக்ஸ் பண்ணுங்க. உங்க ஹெல்த் சீக்கிரம் சரியாகிடும்!” என்றவன் கன்னத்தை தடவியவர்,

“சரிப்பா... உங்க்மமாவை ஒரு தடவை வீட்டுக்கு கூட்டிட்டு வாப்பா” என்றார். இசைவாணி அவர்கள் இருவரையும் இமைக்காமல் பார்த்தாள். சுந்தரி அவனோடு வெகு சுலபமாக ஒன்றிவிட்டதை ஒருவித ஆராய்ச்சியுடன் பார்த்தாள்.

'ம்கூம்... பரிதிதான் அவரிடம் ஒட்டிக் கொண்டான்!' மூளை இடை புகுந்தது.

“நிச்சயம் கூட்டிட்டு வரேன் ஆன்ட்டி...” என்றவன், “ப்ரோ... பாய், வர்றேன் அற்பி...” வேண்டுமென்றே இசைவாணியைக் கண்டு கொள்ளாது அகன்றான். அவள் அவனைத்தான் இமைக்காமல் பார்த்தாள்.

“ரொம்ப நல்ல பையனா இருக்கான்ல அற்புதா?” சுந்தரி கேட்டதும்,

“அப்படியாத்த உனக்குத் தெரியுறான். அவன் ஸ்கூல்ல ரொம்ப சேட்டைக்காரப் பையன். இப்போதான் கொஞ்சம் நல்லவனாகிட்டான் போல!” என அவள் அவரிடம் வம்பளத்துக் கொண்டே வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள் அற்புதா. அவள் பேச்சிலிருந்த கேலியில் வாணியின் உதடுகளில் மெல்லிய முறுவல் படர்ந்தது. அவன் சேட்டைக்காரனாக இருந்திருக்க வாய்ப்பு அதிகம் என அவளும் மனதிற்குள் கேலியாக நினைத்துக்கொண்டாள்.

சரவணன் கேரம் பலகையை எடு
த்துக்கொண்டு அகல, இவள் நாற்காலிகளை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்தாள். வெளிவாயில் வரைச் சென்ற பரிதி, சாலையில் இறங்காது இவளை நோக்கி கோபமாய் சிடுசிடுக்கும் முகத்தோடு வந்தான்.

தொடரும்....

 
Well-known member
Messages
604
Reaction score
413
Points
63
எதுக்கு அவ கிட்ட சண்டை போட வரானா
 

Lak

New member
Messages
28
Reaction score
10
Points
3
இப்போது என்ன நடந்தது இவ்வளவு கோபம்.
 
Top