• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,279
Reaction score
3,751
Points
113
நேரம் – 6 💜

“நான் பிரதீப் பேசுறேன்” எவ்வித சம்பிரதாயப் பேச்சுகளுக்கும் இடமளிக்காமல் அவன் நேரடியாகப் பேச, புது இலக்கத்திலிருந்து அவன் அழைக்கவும் இவளுக்கு யோசனையானது.

“சொல்லுங்க பிரதீப், என்ன முடிவு எடுத்து இருக்கீங்க?” இயல்பாய் கேட்க முயன்றவளின் குரலில் என்ன முயன்றும் பதற்றத்தை மறைக்க முடியவில்லை. எப்படியாவது அவன் மனம் மாறிவிடாதா என்ற நப்பாசையுடன் பேசியவளின் நம்பிக்கையை உடைத்து போட்டிருந்தான் எதிரிலிருந்தவன்.

“சாரி அண்ட் தேங்க்ஸ் இசைவாணி, நான் ரொம்ப குழப்பத்துல இருந்தப்போ உன் பேச்சுதான் ஒரு தெளிவை கொடுத்துச்சு. நானும் என் லவ்வரும் இன்னைக்கு மார்னிங் ஹிந்து கோவில்ல கல்யாணம் பண்ணிகிட்டோம்.” அவன் தயங்கியபடியே கூறியதும், இவளது மூளை சில நொடிகள் அவன் பேச்சை உணர்ந்து வேலை செய்ய எடுத்துக்கொள்ள, பின்னர் வெடித்துச் சிதறி இருந்தாள்.

“உங்களுக்கு எல்லாம் அறிவுன்னு ஒன்னு இருக்கா இல்லையாங்க? நான் என்ன சொன்னேன், நீங்க என்ன பண்ணி வச்சு இருக்கீங்க? ஹம்ம்... முதல்ல ஒரு டிசிஷன் எடுத்துட்டு உங்க பேரண்டஸ்கிட்டே பேசுங்கன்னு சொன்னேன். ஆனால், நீங்க எல்லாத்தையும் காம்ப்ளிகேட் பண்ணி வச்சுருக்கிங்க... ஹவ் செல்பிஷ் யூ ஆர்? என் அம்மா ஹெல்த் பத்தி சொல்லியும் உங்க இஷ்டத்துக்கு எல்லாத்தையும் பண்ணிடீங்க. இப்போ போய் என் அம்மாகிட்டே நான் என்ன சொல்லுவேன்? அவுங்க ஹார்ட் பேஷண்ட்...” இவள் குரல் உயர்த்தி மனக்குமுறலை வார்த்தையாகக் கொட்டியதும் அவனுக்கு குற்றவுணர்வு தோன்றியிருக்க வேண்டும்.

“சாரி இசைவாணி, என்னோட சிட்சுவேஷேன் அப்படி. என் அம்மா அப்பாவைக் கன்வின்ஸ் பண்ண முடியலை.சோ, இப்படியொரு முடிவெடுக்க வேண்டியதாகிடுச்சு...” அவன் மேலும் ஏதோ சொல்ல வர,

“மண்ணாங்கட்டி சிட்சுவேஷன். எல்லாருக்கும் கஷ்டம் இருக்கத்தான் செய்து. அதுக்காக யாரைப் பத்தியும் யோசிக்காம உங்களுக்கு எது நல்லதோ அதை மட்டும்தான் பண்ணுவிங்களா? இதுவே நீங்க எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லைன்னு உங்க உணர்வுக்கு மதிப்புக் கொடுக்காம கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டு, நான் இந்த மாதிரி சிட்சுவேஷனைக் கைக்காட்டுனா சும்மா விடுவீங்களா?” சுள்ளென அவள் கேட்க, பிரதீப் வாயடைத்துப் போனான்.

உண்மையில் இசைவாணி கூறியது போல அவள்தான் தன் திருமணத்திற்கு முழுமுதற் காரணம். அவள் பேசவில்லையெனில் கண்டிப்பாக தன்னவளை மனம் முடிக்காது காலம் முழுக்க குற்றவுணர்வில் மாண்டு போயிருப்பான். மணம் முடித்த இவளுக்கும் உண்மையாய் இருக்க முடியாது இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்திருப்பான். அனைத்திலிருந்தும் அவனுக்கு விடுதலைக் கொடுத்தவள் இசைவாணிதானே. அவனால் மறுக்க முடியாத உண்மை இது.

“உங்களை மாதிரி ஒரு ஆளுக்காகப் பாவம் பார்த்து மதிச்சுப் பேசுனது என் முட்டாள்தனம். பேசாம எப்படியோ போங்கன்னு சும்மா இருந்திருக்கணும். எல்லாம் என் தப்பு. ஹம்ம்...
உங்களை நம்பி பத்திரிக்கை வரை அடிச்சு வச்சிருக்குற என் அம்மாக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?” குரலில் காரம் குறையாது கேட்டாள். அவன் மட்டும் நேரில் இருந்திருந்தால் கடித்துக் குதறியிருப்பாள். அந்தளவுக்கு கோபம் வந்தது.

“ஐ யம் எக்ஸ்ட்ரீம்லி சாரி இசைவாணி. நான் செஞ்சது பெரிய தப்புதான். நானே ஆன்டிகிட்டே பேசி என்னாச்சுன்னு எக்ஸ்ப்ளைன் பண்றேன். நீ பயப்படாத...” என்னவோ தொட்டிலையும் கிள்ளிவிட்டு பிள்ளையும் ஆட்டி விடுவது போன்ற அவன் செய்கையில் இவளுக்கு ஏகமாய் எரிச்சல் மண்டியது.

“நீங்க ஒன்னும் கிழிக்க வேண்டாம் மிஸ்டர் பிரதீப்...” எனப் பல்லைக் கடித்தவள், “நல்லவேளை உங்களை மாதிரி ஒரு செல்பிஷைக் கல்யாணம் பண்ணலை நான். என் லைஃப் தப்பிச்சது. இனிமேல் எதுக்காகவும் எனக்கு கால் பண்ணாதீங்க” வெடுக்கென பேசிவிட்டு அழைப்பை துண்டித்தவள், அலைபேசியை தூக்கி மெத்தையில் எறிந்தாள். அடுத்து என்னவென மூளை வேலை நிறுத்தம் செய்யாது ஸ்தம்பித்துவிட, அறையை நான்கு முறை வெறுங்காலால் அளந்தாள். மனம் சமன்பட மறுக்க, கோபமும் ஆதங்கமும் மேலெழுந்தது.

எப்படியும் இந்த விஷயத்தை சுந்தரியிடம் சொல்லித்தான் ஆக வேண்டும். வேறு யாராவது மூலமாக அவர் தெரிந்துக் கொள்வதை காட்டிலும் தானே பக்குவமாய் எடுத்துக் கூறினால் நல்லது என் மனம் அமைதியாய் அறிவுரை கூறியது. நான்கைந்து முறை மூச்சை இழுத்துப் பின் வெளியிட்டு தன்னை சமன்செய்தாள்.

எப்படியும் பிரதீப் இந்த திருமணம் வேண்டாம் என்று மறுத்தாலும் அவன் பெற்றோரை வைத்துதான் தன் தாயிடம் பேசுவான். ஓரளவிற்கு பிரச்சனையை சமாளித்து சுமூகமாக முடித்து விடலாம் என இவள் போட்டிருந்த கணக்கு தவறிப் போயிருந்தது.

பிரதீப் இத்தனை சுயநலவாதியாக இருந்திருக்க வேண்டாம் என் மனம் ஆதங்கப்பட்டது. இரண்டு கைகாலும் முகத்தைத் தொட்டு பார்த்தாள். கண்ணோரம் படர்ந்த ஈரம் கன்னத்தில் இறங்கியிருந்தது.

சமீபகாலமாக இசைவாணி தன்னையே வெகுபலவீனமாக உணர்ந்தாள். இத்தனை வருடங்களாக அவளது தைரியத்திற்கு உரம் போட்ட மனிதரே வாழ்கையின் ஒரு சறுக்கலில் தவறான முடிவை நோக்கி ஓடிவிட, இவளுக்கு வாழ்கையின் மீதான பிடிப்பு மொத்தமும் அற்றுப்போயிருந்தது.

சுந்தரி மட்டும் இல்லையென்றால் எதைப் பற்றிய கவலையும் இல்லாது தான்தோன்றித் தனமாய் வாழ்ந்திருக்கக் கூடும். ஆனால் இப்போது அவள் வாழ்கையின் எல்லா முடிவுகளும் தாயை சார்ந்துதான் இருக்கிறது. தந்தையைத்தான் காப்பாற்ற முடியவில்லை. உடனிருக்கும் சுந்தரியையாவது நன்றாய் பார்த்துக்கொள்ள வேண்டும். தனக்கென இருக்கும் பெண்மணியைப் பாதுகாப்பு செய் என மூளை அவளை உந்திற்று. பெருமூச்சோடு எழுந்தவள், முகத்தை நன்றாய் நீரில் அடித்து கழுவினாள். கண்ணின் சிவப்பு தீரும்வரை நீரை முகத்தில் வாரியிறைத்தவள், தாயின் குரலில் கலைந்தாள்.

“வாணி, என்னடி பண்ற?” இதோடு இரண்டுமுறை தாய் அழைத்துவிட்டார். முகத்தை எபோதும் போல சாதாரணமாக வைத்துக்கொண்டவள்,
“போன் பேச போனேன்மா...” என்றுவிட்டு நேராய் சமையலறை நோக்கிச் சென்றாள். வெகுகவனமாக தாயின் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்தாள் இவள்.

சிறிது நேரம் எப்படி அவரிடம் பேச வேண்டும் என மூளையும்‌‌ மனதும் போட்டியிட, இவள் ஒருதலைப்பட்சமாக மூளையின் பேச்சிற்கு செவிமடுத்தாள். இதயம் இப்போதெல்லாம் முட்டாள்தனமாக உணர்ச்சிகளின் பிடியில் அவளைத் தள்ளிக் கேலிக்குள்ளாக்கியது. எல்லோரையும் போல இயந்திரத்தனமாக வாழ்ந்துவிட்டுப் போய்விடலாம் என்ற விரக்தியில் உதடுகள் வளைந்தன.

“யாருடி போன்ல? என்ன பேசுன இவ்ளோ நேரம், மாப்பிள்ளை பேசுனாரா?” ஆர்வமாய் தன் முகத்தைப் பார்த்தவரை கண்டவளுக்கு மனம் கனத்தது. தன் திருமணத்தில்தான் இந்தப் பெண்மணியின் நிம்மதி அடங்கி இருக்கிறது என்பதை உணர்ந்தும், தன்னை விட்டுச்சென்ற ஒருவனுக்காக இத்தனை வருடங்கள் இவரைக் காயப்படுத்தியிருக்கிறோம் என்றெண்ணியவளுக்கு, தன் மீப்பெரு தவறின் வீரியம் உறைத்தது.

“ஏன்டி, நான் கேட்டுட்டே இருக்கேன். நீ பதில் சொல்லலைன்னா என்ன அர்த்தம்? மாப்பிள்ளைக்கும் உனக்கும் இடையில் பிரச்சனை இல்லைல வாணிமா?” கவலையாய் கேட்டவரின் குரலில் இவளுக்கு துணுக்குற்றது. குதிக்காலில் எக்கி கேஸ் அடுப்பிற்கு நேர்மேலே அலமாரியில் இருந்த ரவை டப்பாவை எடுக்க சென்றவள் கைகள் ஒருநொடி நின்று போயின.


பின்னர் சுவாதீனமாக அதை எடுத்தவள், “ம்ப்ச்... அதெல்லாம் ஒன்னும் இல்லைமா. இது ஆபீஸ் கால்” என்றாள் அவரது கண்களை நோக்காது. வாணிக்குப் பொய் பேசுவது அறவே பிடிக்காது. அதுவும் சுந்தரியிடம் பொய் சொல்ல விரும்பவே மாட்டாள். ஆனால் சூழ்நிலை அவளை சுழற்றிப் போட்டிருந்தது. சரி தவறு என்பதையெல்லாம் தாண்டி தாயின் நலனே அவளுக்குப் பிரதானமாகப் போயிற்று.

“என்ன ஆபீஸ் காலோ போ. லீவ் அன்னைக்கு கூட வீட்டுல நிம்மதியா இருக்க விட மாட்றாங்க. பேசாம நீ கல்யாணத்துக்கு பிறகு வேலையை விட்ரு. மாப்பிள்ளைதான் வேலைக்கு போறாரே!” என்ற தாயை முறைத்தாள் இவள்.

“சரி சரி... நீ வேலைக்கு போ. ப்ரெக்னன்டாகிட்டேனா அப்றோம் வேலையை விடுக்கலாம்...” என்றவரை இன்னுமே முறைத்தாள் மகள்.

“எது சொன்னாலும் ஏன்டி முறைக்குற? வேலைக்கு போய்ட்டே எப்படி புள்ளைக் குட்டிய வளர்க்குறது?” இவர் அங்கலாய்த்தார். இருவருக்கு தேவையான அளவு ரவையை ஒரு குவளையில் அளந்த இசைவாணி, அதே குவளையில் இருமடங்கு நீரையும் தனியே எடுத்து வைத்தாள்.

“உங்க காலம் மாதிரியே எல்லாரையும் நினைக்காதம்மா. இப்போ எல்லாருமே வேலைக்கு போறாங்க. ஜெண்டர் ஈக்குவாலிட்டி வந்துடுச்சு...” என்று நிறுத்தியவள், “ஏன் என் புள்ளைய நீ பார்த்துக்க மாட்டீயா என்ன?” எனத் தாயைக் கண்கள் இடுங்கப் பார்த்தாள்.

“உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி பேரப் புள்ளையை பார்கணும்றதுதான் என்னோட ஆசையே! ஆனால், உன் குழந்தைங்க வளருற காலம் வரை நான் உயிரோட இருப்பேனோ என்னவோ? உனக்குன்னு ஒருத்தன் வந்துட்டா, என் கவலை எல்லாம் காணாம போய்டும் வாணிமா...” மகள் கன்னத்தை வாஞ்சையாய் தடவியவரைப் பார்த்து இவளுக்கு கண்கள் கலங்கின.

“சும்மா எதையாவது சொல்லாதம்மா... அப்படிலாம் அவ்ளோ சீக்கிரம் உன்னை போக விட மாட்டேன்...” என்று பெருமூச்சை இழுத்துவிட்டாள்.

“எந்தப் பேச்சை ஆரம்பிச்சாலும் என் கல்யாணத்துலயே வந்து நிக்குறம்மா நீ...” சிடுசிடுத்தாள் மகள். அவர் கண்களில் தெரிந்த நிம்மதியில் இவளுக்கு பேச்சு வரவில்லை. தான் சொல்லப் போகும் விஷயத்தை எப்படி இவர் கையாளப் போகிறார் என பயம் தொண்டையைக் கவ்வியது. அதை முகத்தில் காண்பிக்க முடியாது கோப அரிதாரம் பூசினாள்‌.

“சரி விடு டி... உப்மாக்கு தொட்டுக்க எதுவும் செய்ய வேணாம். சக்கரை தொட்டு சாப்ட்டுக்கலாம்!” ஆசையாய் தன் முகத்தை பார்த்தவரிடம் மறுப்பது இவளுக்கு அத்தனை எளிதாய் இல்லை.

“ம்மா... இப்போ உனக்கு சுகர் அதிகமா இருக்கு. சக்கரை வேண்டாம்மா. சட்னி அரைக்குறேன். நீயும் நானும் சேர்ந்து சாப்பிடலாம்!” என்றாள் கனிவான குரலில்.

“எனக்கு ஒன்னும் வேணாம், போடி...” சின்னக் குழந்தை போல அவர் முகத்தைக் கோண, இவளது உதடுகளில் முறுவல் பூத்தது.

“ம்மா... ஆப்ரேஷன் நல்லபடியா முடியட்டும்மா. அப்புறம் நானே நீ கேட்குற எல்லாத்தையும் செஞ்சு தர்றேன்!” என்றாள் மென்குரலில். அவர் முகத்தில் சின்னதாய் புன்னகை உதிர்ந்தது.

“எனக்கு சக்கரை வேண்டாம் வாணிமா... உன் கல்யாணம் வரைக்கும் நான் நல்லா இருக்க வேண்டாமா சொல்லு? நான் தானே உன் கல்யாணத்தை எடுத்து செயயணும்...” என்றவரைப் பார்த்தவளுக்கு இயலாமையில் கண்கள் கலங்கும் போலிருந்தது. எங்கே தொடங்கினாலும் பேச்சு என்னவோ அவளது திருமணத்தை தொட்டே நகர்ந்தது.

அதில் கோபமும் ஆற்றாமையும் பொங்க, “எது பேசுனாலும் அதைக் கல்யாணத்துலதான் முடிப்பீயாம்மா? போம்மா முதல்ல என்னைக் கடுப்பேத்தாம...” யார்மீதானக் கோபமோ, அதை இவர் மீது காண்பித்தாள்.

மகள் கடுகடுக்கவும், “சரி சரி... நீ சமையலைப் பாரு. நான் போய் ஹால்ல உக்காருறேன்!” எங்கே இசைவாணி கோபத்தில் திருமணமே வேண்டாம் என்று விடுவாளோ எனப் பயந்த சுந்தரி அவ்விடத்தைவிட்டு அகன்றார்.

சுந்தரியின் அலைபேசி இசைக்க, இவளுக்கு பக்கென்றிருந்தது. அவர் அறைக்குள் செல்லும்முன், “ஆ...” எனக் கத்திவிட்டாள்.

அறை வாயிலில் காலை வைத்தவர், மகளின் கத்தலில், “என்ன ஆச்சு வாணிமா?” என்றவாறே சமையலறைக்குள் நுழைந்தார்.

“கை சுட்டுக்கிச்சுமா...” என்றாள் கண்கலங்க. ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு அவளது உள்ளங்கையில் சிவந்து போயிருந்தது. வேண்டுமென்றேதான் சுட்டுக் கொண்டாள்.

“என்ன டி இது? இப்படிதான் கவனக்குறைவா வேலை பார்ப்பீயா... கை எப்படி சிவந்து போயிருக்கு...” மகளின் கையில் எண்ணெயைத் தடவியவர் முகம் கலங்கிப் போனது.

“நீ சமைச்சது போதும் போ. நான் பார்த்துக்குறேன்!” அவளை
விரட்டியபடியே அவர் தேங்காயை எடுத்து சட்னிக்கு துருவத் தொடங்கினார்.

இவள் நிம்மதியுடன் தாயின் அறைக்கு சென்று அவரது அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். காமராஜ், பிரதீப்பின் பெற்றோர் என அடுத்தடுத்து இரண்டு மூன்று தவறி அழைப்புகள் வந்திருந்தன. அவரின் அலைபேசியை மொத்தமாய் அடைத்துப் போட்டவள், தன்னுடையதையும் சத்தத்தைக் குறைத்து வைத்தாள்.

அரவை இயந்திரத்தின் சப்தத்தை தொடர்ந்து, “வாணி...சாப்பிடவா...” என சுந்தரி அழைக்கவும், “வரேன் மா...” என்று இவள் வெளியே சென்றாள்.

சுந்தரியின் கையில் இரண்டு தட்டுகள் இருந்தன. ஒன்றில் உப்மாவும் சட்னியும் இருக்க, மற்றொன்றில் சக்கரை இருந்தது. அவள் தாயை வாஞ்சையுடன் பார்த்தாள்.
“என் முகத்தையே என்ன பார்த்திட்டு இருக்க? வந்து சாப்பிடுடி...” அதட்டலிட்டவரின் முகத்தை அன்பாய் பார்த்தவள், அவரோடு சேர்ந்து உண்ணத் தொடங்கினாள். இந்தப் பெண்மணியின் மொத்த உலகமும் தன்னைச் சுற்றித்தான் நகர்கிறது என்பதில் நெஞ்சம் விம்மிற்று.

இரண்டு வாய் சாப்பிட்டவள், சக்கரையை உப்மாவில் தோய்த்து தாயின் வாயருகே கொண்டுசென்றாள். அவர் சிரிப்போடு வேண்டாம் என தலையை அசைத்து, இவளது கையை பின்னோக்கி நகர்த்தினார். இவள் அவரது சிரித்த முகத்தையே பார்த்திருந்தாள். தான் சொல்லப் போகும் செய்தியால் இந்த பெண்மணியின் சிரிப்பு பறிபோகக் கூடும் என எண்ணியதும் மனம் வலித்தது. தொண்டைக்குழியில் உணவு இறங்க மறுக்க, தண்ணீரை குடித்து அதை விழுங்கினாள்.

சாப்பிட்டு முடித்ததும் மறக்காமல் சுந்தரிக்கு ரத்த சக்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கான மாத்திரையைக் கொடுத்து விழுங்க செய்தாள். சரியாய் அரைமணி நேரம் கடந்து இருக்கும். உடலளவில் அவர் தான் கூறப்போகும் செய்தியைத் தாங்கிக்கொள்ள தயாராய் இருக்கிறார் என்பதை உணர்ந்தவள், மெதுவாய் பேச்சைத் தொடங்கினாள்.

தயங்கியபடியே சுந்தரியின் முகத்தைப் பார்த்தவள், “ம்மா... உன்கிட்ட ஒன்னு சொல்லணும்...” என்றாள் நெஞ்சை அப்பிய பயத்துடன்.

மகளின் பயந்த முகத்தைப் பார்த்து கலவரமானவர், “என்ன ஆச்சு வாணி... என் இப்படியிருக்க? என்ன வேணா சொல்லு. ஆனா கல்யாணம் வேண்டாம்னு மட்டும் சொல்லிடாதடீ!” என்றவர் குரலில் கவலையும் பதற்றமும் ஒருங்கே தெரிந்தன.

“ம்ப்ச்... நான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லலை மா. பிரதீப் வேண்டாம்னு சொல்லிட்டாரு!” தாயின் முகத்தைப் பரிதவிப்புடன் பார்த்தாள் மகள்.

“விளையாடாத வாணி... அவரு ஏன் வேணாம்னு சொல்ல போறாரு? அவர் சம்மதத்தோடதானே எல்லா ஏற்பாடும் நடக்குது” மகள் தன்னிடம் விளையாடுகிறாள் என்பதைப் போல பார்த்தார் பெரியவர்.

“ம்மா... நீ டென்ஷனாக கூடதும்மா... எது நடந்தாலும் நல்லதுக்குதான். நான் சொல்றதைப் பதட்டப்பட்டாம கேளுமா” என்றவள், அவர் கையை ஆதரவாகப் பிடித்துக்கொண்டாள்.

“வாணி... என் தலையில குண்டு எதுவும் போட்டுறாதடி. இபோதான் உனக்கு கல்யாணம் கூடி வந்துருக்கு” பயத்தோடு அவளைப் பார்த்தவரை நோக்கியவள்,

“ம்மா... பிரதீப் வேற ரெலிஜியன் பொண்ணைக் காதலிச்சிருக்காரு. அவங்க வீட்டுல சம்மதம் சொல்லலை. சோ, பேரண்ட்ஸ் வற்புறுத்துனதால எனக்கு ஓகே சொல்லி இருக்காரு...” எனத் தொடங்கியவள், தங்களுக்கு இடையேயான உரையாடலையும் நடந்த நிகழ்வையும் மெல்லிய குரலில் கூறி முடித்து அவரைப் பார்த்தாள் . சுந்தரியின் முகம் வெளுத்துப் போயிருந்தது.

“ம்மா... என்னம்மா... ஏன் இப்படி வேர்க்குது உனக்கு? என்ன பண்ணது?” பதறிப் போனாள் இவள்.

“ஒத்த பொண்ணைப் பெத்துட்டு அவளுக்கு கல்யாணம் பண்ண முடியாம தடங்கல் வந்துட்டே இருக்கே வாணி. என்னப் பாவம் பண்ணேன் நான்? உனக்கு அழகில்லையா? அறிவில்லையா? கண்ணுக்கு லட்சணமா இருக்க. எப்படி டீ உன்னை வேணாம்னு சொல்ல மனசு வந்துச்சு?” எனக் கேட்டவரின் முகம் வேதனையில் கசங்கியிருந்தது.

“ம்மா... பிரதீப் எனக்கானவர் இல்லைம்மா. இப்பவே இப்படி பண்ணவரு, கல்யாணத்துக்கு பின்னாடி அந்தப் பொண்ணைத் தேடி போக மாட்டாருன்னு என்ன நிச்சயம்? இவன் எனக்கு வேணாம்மா!” எனத் தாயின் தோள் சாய்ந்தாள். அவன் தனக்கு சரியானவன் இல்லையென அவர் மனதில் அழுந்தப் பதிய வைக்க முயன்றாள்.

“நான்தான் தப்பு பண்ணிட்டேன் வாணி. நீ என்னை நம்பி பையன் யாரு, என்னென்னு கூடக் கேட்காம சரின்னு சொன்ன. ஆனால் நான் அவனைப் பத்தி சரியா விசாரிக்காம விட்டுட்டேன் போல...” தன்னையே குற்றம் சுமத்திக் கொண்டவரைக் கவலையுடன் பார்த்தவள்,

“ம்மா... அவர் அப்படி பண்ணா நீ என்னம்மா பண்ணுவ? இவன் மட்டும்தான் ஆம்பளையா? இவனைவிட நல்ல பையனா நீ பாரு, நாளைக்கே கூட நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். இதை நினைச்சு நீ உன்னை ஸ்ட்ரெஸ் பண்ணாதம்மா. பீபி ஏறிடும்!” என அவரது கையை அழுத்தினாள்.

“உன் கல்யாணம் முடியும்வரை எனக்கும் ஒன்னும் ஆகாது டீ!” என்றவர், “என் ஃபோனை எடுத்துட்டுவா டீ. அந்தம்மாவை நாலு வார்த்தைக் கேட்கலைன்னா எனக்கு மனசே ஆறாது. என் பொண்ணைப் பார்த்தா எப்படி தெரிஞ்சுதாம் அவங்களுக்கு? பிடிக்காத பையனைக் கட்டி வச்சு உன் வாழ்க்கையை பாழாக்கப் பார்த்திருக்கு. இவ்வளோ தூரம் பத்திரிக்கை எல்லாம் அடிச்சு வந்தப் பிறகு ரெண்டாவது தடவை உன் கல்யாணம் நின்னுப் போய்டுச்சு. இதுக்கெல்லாம் அவங்க பதில் சொல்லியே ஆகணும்!” என்றவர் கோபத்தில் கத்த,

“ம்மா... அவங்ககிட்டே பேசி என்னாகப் போகுதும்மா? நீ கோபப்படாத. எது வந்தாலும் நம்ப ஃபேஸ் பண்ணிக்கலாம். வேற மாப்பிள்ளையைப் பாரு நீ. இதே முகூர்த்தத்துல கல்யாணம் பண்ணிக்கிறேன் நான்!” இவள் அவரை சமாதானம் செய்ய விழைந்தாள். குரலை உயர்த்திக் கத்தியதில் அவருக்கு மூச்சு வாங்க, முகம் செந்நிறமானது. பயந்து போனவள், தண்ணீரைக் கொடுத்து அவரை ஆசுவாசம் செய்தாள். சுந்தரியின் கண்கள் சொருக, அவருக்கு மயக்கம் வரப் பார்த்தது.

கையிலிருந்த நீரை அவரது முகத்தில் தெளித்து, “ம்மா... உனக்கு என்ன பண்ணுது?” எனக் கேட்டவள், ஓடிச்சென்று அலைபேசியை எடுத்து மருத்துவருக்கு அழைத்து விஷயத்தை வெகுசுருக்கமாக கூறினாள்.

“மே பீ பிரஷர் ரெய்ஸாகி இருக்கலாம். லேட் பண்ணாம அம்மாவை சீக்கிரம் கூட்டிட்டு வாங்க!” அவர் கட்டளைப் பிறப்பித்ததும் அவசர அவசரமாக செயலியைத் திறந்து ஒரு மகிழுந்தை முன்பதிவு செய்தாள். அவளுடைய மகிழுந்தை இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் பழுதுபார்க்க கொடுத்திருந்தாள். பிரதீப் பிரச்சனையால் மொத்தமாக அதை மறந்து போன தன் மடத்தனத்தை எண்ணி தன்னையே திட்டினாள்.

வாயிலுக்கும் வீட்டிற்கும் இரண்டுமுறை நடந்துவிட்டாள். முன்பதிவு செய்த மகிழுந்து இன்னமும் வரவில்லை என்றதும் பதற்றத்தில் கண் இரைப்பைகள் நீரை உகுக்கத் தயாராகின. இவ்வளவு நேரம் திடமாய் இருந்த மனது பயத்தில் நடுங்கத் தொடங்கியது.

பரிதியும் அஜித்தும் கடையில் அமர்ந்திருந்தனர். அஜித் புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருக்க, பரிதி காலாட்டியவாறே அலைபேசியில் ஏதோ படம் பார்த்தான். இரண்டுமுறை வந்து சென்ற இசைவாணி மூன்றாவது முறை வாயிலில் கால் வைக்கவும், இவனது நெற்றிச் சுருங்கியது. அவள் முன்பு வந்து சென்றதை அவனும் கவனித்தான்தான்.

இசைவாணியின் கண்கள் அழுத தடயத்தைக் காண்பித்தன. அவளிடம் செல்ல விழையாது ஓரக்கண்ணால் பார்த்தவன், தோளைக் குலுக்கிவிட்டு அலைபேசியில் கவனமானான். ஆனாலும் அவள் நின்றிருந்த தோற்றம் மனத்தை ஏதோ செய்ய, நிமிர்ந்து பார்த்தான். அவளும் நொடி நேரம் இவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் இவனது இதயம் ஒரு நொடி தடுமாறிப் பின் சீரானது.

சாலையில் வேறு ஏதாவது வாகனம் வருகிறதா எனப் பார்த்தாள் அவள். அவர்கள் வசிப்பது ஊருக்கு ஒதுக்குப்புறமான குடியிருப்பு பகுதி என்பதால் பெரிதாய் வாகன நடமாட்டம் இல்லை. சாலையில் இறங்கி அவள் நடக்கத் துவங்க, பரிதி அவளையே பார்த்தான். சற்று முன்னர் அவள் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் இவனை உந்த, உச்சுக் கொட்டியவாறே காதொலிப்பானை அகற்றிவிட்டு அலைபேசியை கால்சராயில் வைத்தவன், தடுப்பிலிருந்து ஒரே தாவாகத் தாவி கடையிலிருந்து வெளியே வந்தான்.

“அஜித்... கடையைப் பார்த்துக்கோ. நான் வந்துடுறேன்!” என்றவன் நான்கே எட்டில் அவளை அடைந்தான்.

“என்னாச்சு?” பக்கவாட்டில் வந்து நின்றவன் பேச்சில் திடுக்கென அதிர்ந்தவள்,

“அம்மாவுக்கு பீபி அதிகமாகி‌ மயங்கிட்டாங்க. கேப் புக் பண்ணேன். பட் இன்னும் வரலை!” எனும் போதே அவள் கன்னத்தில் கண்ணீர் இறங்கிற்று. இத்தனை நேரம் யாருமே அருகில் இல்லாது இவன் வந்து ஒருவார்த்தை என்னவாகிற்று எனக் கேட்டதும் உவர் நீர் கரை கடந்திருந்தது.

“ஏன் உன் காருக்கு என்னாச்சு?” நெற்றி சுருங்க கேட்டான்.

“சர்வீஸ்க்கு விட்டிருக்கேன். இன்னும் வரலை!” அவள் பதில் சொல்லி முடிய, “ஓகே... நீ அவங்களைப் போய் பாரு. நான் ஆட்டோ ஏதாவது கிடைச்சா கூட்டிட்டு வரேன்!” என சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கினான் பரிதி.

இவள் சென்று சுந்தரியைப் பார்த்தாள். அவரது இதயத்துடிப்பு அதிகமானது. இன்னுமே ஆழ் மயக்க நிலையில் ஆழ்ந்தார். இவளுக்குக் கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது. அவருக்கு என்ன முதலுதவி கொடுப்பது எனக் கூடத் தெரியாது தவித்துப் போனாள்.

இரண்டே நிமிடத்தில் சாலையில் செல்லும் தானியை வழி மறைத்து அழைத்து வந்த பரிதி, அவள் வீட்டையே பார்க்க அவர்கள் வரும் அரவம் தெரியவில்லை. இவனே உள்ளே சென்றான்.

சுந்தரி மயங்கியிருப்பதை உணர்ந்தவன், “அறிவில்லையா உனக்கு? மயங்கிட்டாங்கன்னு சொல்றதுக்கு என்ன? நீயா அவங்களைத் தூக்கிட்டு வந்துடுவீயா?” அவளது தொடர் அழுகையில் சிடுசிடுத்தவன், ஒடிசலாயிருந்த சுந்தரியை அள்ளித் தூக்கினான். இசைவாணியின் முகம் அவன் கூற்றில் சினந்தாலும், அவன் என்ன செய்கிறான் எனப் பார்த்தாள்.

“என் முகத்தையே ஏன் பார்த்துட்டு நிக்கிற? போய் ஃபோன் பர்ஸ், வேற ஏதாவது வேணும்னா எடுத்துக்கோ. கதவை நல்லா லாக் பண்ணிட்டு வா!” அவளை அதட்டிய பரிதி சுந்தரியைத் தூக்கிக்கொண்டு சென்று தானியில் ஏற்றினான்.

இசைவாணி அவசர அவசரமாக அலைபேசி, கைப்பையை எடுத்தவள், ஒரு துப்பட்டாவை எடுத்து தோளைச் சுற்றிப் போட்டவாறே ஆணியில் மாட்டியிருந்த வீட்டுச் சாவியை எடுத்து கதவை நன்றாய் பூட்டிவிட்டு குடுகுடுவென வாயிலுக்கு ஓடினாள்.
சுந்தரி தானியின் பின்புறம் ஒரு பக்கமாய் சாய்ந்தமர்ந்திருக்க, இவள் ஏறி அவரது தலையைத் தன் தோளில் நோக்கி சாய்த்தாள்.

“எந்த ஹாஸ்பிடல் போகணும்?” பரிதியின் கேள்விக்கு, “சுந்தரம் ஹாஸ்பிடல் போங்கண்ணா!” என ஓட்டுநரிடம் பதிலளித்தவள், “தேங்க்ஸ்!” என்றாள் இவன் முகம் பார்க்காது புறங்கையால் கன்னத்தில் வழிந்த நீரைத் துடைத்தபடி. சுந்தரி மூச்சு பேச்சில்லாது கிடந்தார். இவளுக்கு உயிரே போனது போல பயம் வந்தது.

“அண்ணா... பத்திரமா இறக்கிவிடுங்க!” ஓட்டுநரிடம் குனிந்து கூறியவன் இசைவாணியைப் பார்த்தான். என்னவோ அவள் தனியாய் செல்கிறாள் என்பது இவனது மனதை உறுத்தியது. அத்தனைப் பேர் இருக்கும் தன் குடும்பத்தில் தந்தைக்கு ஒன்று எனும்போது யாருக்குமே அவசரத்தில் என்ன செய்வது எனத் தெரியாது திக்கற்று நின்றோம். அப்படியிருக்கையில் ஒற்றை ஆளாக அவள் எல்லாவற்றையும் பார்த்துவிடுவாளா என மனம் அவளுக்காக கரிசனத்தை உதிர்க்க, தானி ஓட்டுநரிடம் குனிந்திருந்தவன் தலையை உயர்த்தி தம்பியைப் பார்த்தான்.

அவனும் இங்கு நடக்கும் அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருந்தான். “அஜித்... கடையைப் பார்த்துக்கோ. நான் கூடப் போய்ட்டு வரேன்!” தம்பியிடம் கையை அசைத்தவன், ஓட்டுநருக்கு அருகே அமர்
ந்தான்.

“இல்ல.. பரவாயில்லை!” இசைவாணியின் மறுப்பைக் கண்டுகொள்ளாமல், “அண்ணே... சீக்கிரம் போங்க!” என ஓட்டுநரை துரித்தப் படுத்தினான் இவன்.

தொடரும்....

கமெண்ட் ப்ளீஸ் மக்களே 🌺🦋

 
Top