• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,346
Reaction score
4,078
Points
113
நேரம் – 54 💜

பரிதியும் வாணியும் இங்கு பத்து நாட்கள் கடந்து போயிருந்தன. அவனுக்கு இரண்டு வாரம் மட்டுமே விடுப்புக் கிடைத்திருந்தது. அதுவும் இவன் ஏதேதோ பொய் சொல்லி விடுமுறை வாங்கிவிட்டு மனைவியைக் காண வந்துவிட்டான். அப்படியே வீடு விஷேசத்தையும் நன்முறையில் முடித்திருந்தான். வாணியும் சில நாட்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய அனுமதி வாங்கிவிட்டிருந்தாள்.

இந்த ஒரு வாரமும் எப்படி சென்றது என்றே தெரியாதது போல சந்தோஷம், பேச்சு சிரிப்புமாய்க் கடந்து போயிருந்தது. இவர்கள் இருவரும் காமராஜ் வீட்டிற்குச் சென்று இரண்டு நாட்கள் தங்கியிருந்துவிட்டு வந்தனர். மீண்டும் பரிதி லண்டன் செல்லும் நாள் நெருங்க, பெங்களூர் புறப்பட்டான் மனைவியோடு.

அங்கிருந்து அப்படியே கிளம்ப எண்ணி அங்கே புறப்படும் விமானத்தில் பயணச்சீட்டைப் பதிவு செய்திருந்தான். முதல்நாள் சென்று இருவரும் தூங்கி எழுந்தனர். பயணக் களைப்பு அப்போதுதான் விலகிற்று. அன்றிரவு அவனுக்கு விமானம் என்பதால், வாணி அவன் பையில் தேவையானவற்றை எடுத்து வைத்தாள். புதிதாய் நான்கு உடைகள் அவனுக்கென்று இவள் வாங்கியதையும் சேர்த்து மடித்து பைக்குள் வைத்தாள். அவன் அங்கு சென்று பார்த்து மகிழ்வான் என எண்ணியவள், வேறென்ன வேண்டுமென யோசித்து அவனுக்காக ஒவ்வொன்றும் செய்தாள்.

பரிதி அன்று காலையிலிருந்து அமைதியாக மனைவியின் செயலை அவதானித்தான். அன்றைய இரவிற்குப் பின்னே இவன் முத்தம், தொடுகை என எதையும் முன்னெடுக்கவில்லை. மாறாக எப்போதும் போல அவளையும் தன் தாயையும் வம்பிழுத்தான். அவர்களுக்கு இடையே சண்டை ஏற்படுத்த முனைந்தான். ஆனால் மாமியாரும் மருமகளும் அவனை ஓடவிட்டிருந்தனர்.

கீர்த்தனாவை கடைக்கு அழைத்துச் சென்று அவள் ஆசைப்பட்ட அனைத்தையும் வாங்கிக் கொடுத்தான் பரிதி. அஜித்திடம் இவன் ஏதும் வேண்டுமா எனக் கேட்க, “உன் வெளிநாட்டு பவுஸை என்கிட்டே காட்டாத தம்பி!” என அவன் எப்போதும் போல முறைத்துவிட்டு சென்றான்.

விதுரன் பிறந்ததிலிருந்து இவர்கள் சரியாய் எதுவுமே வாங்கிக் கொடுக்கவில்லை என எண்ணி குழந்தைக்கும் உடைகள், பொம்மைகள் வாங்கினான். அங்கு சென்ற போது கொடுத்து வந்தான்.

தாயிக்கும் தந்தைக்கும் என்ன வாங்கிக் கொடுப்பதென தெரியாது இவன் அவரிடமே கேட்க, “அதெல்லாம் ஒன்னும் வேணாம் பரிதி. வீட்டைக் கட்டுறது பெருசில்லடா. காசை சேர்த்து கடனை மொதல்ல அடைக்கணும். நீ உன் தங்கச்சி கேட்டான்னு எல்லாத்தையும் வாங்கித் தராத!” என சிந்தாமணி இவனை அதட்ட, சரியென்று கேட்டுக் கொண்டான். வாணிக்காக என்ன வாங்கவென அவன் பல நாட்கள் யோசித்தும் எதுவுமே சிந்தையில் உதிக்கவில்லை. வேறு வழியின்றி அற்புதாவிற்கு அழைத்து மனைவிக்கு என்னப் பிடிக்குமெனக் கேட்டான்.

“பொண்டாட்டியைக் கரெக்ட் பண்ணுறதுக்கு என்கிட்ட ஐடியா கேட்குறான் பாரு இத்தனை வருஷம் கழிச்சு!” என இவனைக் கேலி செய்தவள், பின்னர் வாணிக்கு என்னப் பிடிக்குமென யோசித்து, “ஹேண்ட் லூம் சேரிஸ் அவளுக்கு ரொம்ப பிடிக்கும் பரிதி. ஹேண்ட் லூம் சுடிதார் கூட நிறைய கலெக்ஷன்ஸ் வச்சிருக்கா. சோ, நீ ஒரு நல்ல சேலையா அவளுக்கு எடுத்துக் கொடு!” என்றாள்.

பரிதிக்கும் அப்போதுதான் வாணி கைத்தறி நெசவு சேலைகளை விரும்பி உடுத்துவது நினைவு வர, நிறைய இணையத் தளங்களை அலசி ஆராய்ந்து ஒரு புடவையைத் தேர்ந்தெடுத்து வாங்கி வந்தான். ஆனால் இன்னும் அவளிடம் கொடுக்காமலே வைத்திருந்தான்.

“பரிதி... வெயிட் இதுவே கரெக்டா இருக்கும். இதுக்கு மேல எதுவும் ட்ராலில வைக்க வேணாம். ஹேண்ட் லக்கேஜ்ல வச்சுக்கலாம்!” என்ற வாணி, அவனின் பையைப் பூட்டினாள். காலையிலிருந்தே பரிதி பெரிதாய் அவளிடம் பேசவேயில்லை.

வெறுமனே தலையை அசைத்து அவள் முகத்தையே ஒருவித எதிர்பார்ப்போடு பார்த்திருந்தான். ஏதோ கேட்க வந்து தயங்கினான் போல. அவள் அதை கவனித்தாலும் என்னவென கேட்கவில்லை. அவனாகக் கூறட்டும் என்று தன் வேலையைப் பார்க்கலானாள்.
நேரம் கடந்து கொண்டேயிருந்தது. அவளாக சொல்ல மாட்டாள் எனக் கடுப்பானவன், தான் வாங்கி வந்த புடவையை எடுத்து வந்தான்.

“வானு... உன்கிட்ட ஒன்னு சொல்லணும்!” துணியை மடித்துக் கொண்டிருந்தவள், நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

புடவையை அவளிடம் நீட்டியவன், “ஐ’யம் இன் லவ் வித் யூ!” என்றான் அவள் கண் பார்த்து தயக்கத்தை உடைத்தெறிந்தவனாக. அவன் குரலில் சின்னதாய் கடுப்பும் எட்டிப் பார்த்தது.

“ஓஹோ... அப்படியா?” அவன் என்னவோ கதை சொல்வதைப் போல கேட்டவளின் கரங்கள் தன் போல முன்னே நீள, அந்தப் பையைப் பிரித்துப் பார்த்தாள். அவளுக்குப் பிடித்த ஆகாய நீல நிற புடவை‌‌. ஒருமுறை அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மெதுவாய் அந்தப் புடவையை வருடினாள். அவளுக்கு நிரம்ப பிடித்திருந்தது.

“ரொம்ப நல்லாருக்கு சேரி. தேங்க் யூ!” அழகாய் முறுவலித்தவள், அதை எடுத்து பத்திரப்படுத்தினாள். வேறு ஏதாவது சொல்வாள் என அவள் முகத்தையே பார்த்திருந்தான் பரிதி.

வாணி மீதமிருந்த துணியை மடித்து தனியாய் எடுத்து வைப்பதில் மும்முரமாகிவிட, கடுப்போடு பிடரியைக் கோதியவன், “வானு... நானும் பொறுமையா இருக்கலாம்னுதான் பார்க்குறேன். ஆனால் நீ என்னை ரொம்ப சோதிக்கிற டீ. வந்ததுலருந்து நானா ஒரு வார்த்தை கேட்டிருப்பேனா உன்னை? லண்டன் கிளம்ப போறேன். இப்போ கூட ஒரு வார்த்தை உன் வாய்லருந்து வர மாட்டுது. நீ ரொம்ப ஸ்டபர்ன்!” என்றான் ஆதங்கத்துடன்.

“என்ன சொல்லணும்? என்ன கேட்குற பரிதி?” எதுவுமே அறியாதது போல வாணி விழித்தாள்.

“ப்ம்ச்... சுரைக்காய்ல உப்பில்லை. கேட்குறா பாரு கேள்வி. இப்போ நான் என்ன சொன்னேன் உன்கிட்டே? அதுக்கு எனக்குப் பதில் இப்பவே தெரியணும்!” என்றான் அடத்துடன்.

“என்ன சொன்ன நீ? எனக்கு கேட்கலை!” என்றவள், அவன் வேண்டாமென ஒதுக்கிய உடையை தனியாய் வைத்தாள்.

“ரொம்ப பண்ற வாணி நீ. காலைலருந்து உன் முகத்தைப் பார்த்துட்டே சுத்துறேன் நான்.‌ உனக்கும் அது தெரியும். ஆனாலும் தெரியாத மாதிரியே என்னை சுத்த விடுறல்ல?” அவன் பொருமினான். வாணி அலட்டிக்கவேயில்லை.

“ஓஹோ... இப்போ லவ் யூ சொன்னியே. அதைக் கேட்குறீயா?” எனக் கேட்டவளை ஆர்வத்துடன் பார்த்து பரிதி தலையை மேலும் கீழுமாக அசைத்தான்.

“ஹம்ம்... பார்க்கலாம்!” என அலட்சியமாக கூறி மடித்த துணியை நிலைபேழையில் வைத்தாள்.

“பார்க்கலாம்னா என்ன அர்த்தம்? எனக்கு இப்பவே ஒரு முடிவை சொல்லு நீ!” முகத்தைக் கடுகடுவென வைத்தபடி கேட்டான் கணவன்.

“கொஞ்சமாச்சும் பொறுமை இருக்கா உன்கிட்டே. எல்லாமே உடனே நடக்கணுமா? கொஞ்சம் பொறுமை வேணும் தம்பி. பொறுத்தார் பூமி ஆள்வார்!” உதடுவரை வெளிவரத் துடித்த சிரிப்பை மென்றபடி அவன் முகம் பார்க்காமல் நிலைபேழையில் உடையை அடுக்கினாள் வாணி. பரிதி‌ முசுட்டு முகத்தோடு அவளைப் பார்த்தான்.

“எனக்கு முப்பது வயசாகப் போகுது வானு. இதுக்கும் மேல எங்கடி பொறுமையா இருக்கது. இதெல்லாம் அநியாயம்!” அவன் கோபக் குரலில் முறையிட, வாணி திரும்பவில்லை. அவளுக்கு சிரிப்பை அடக்குவது பெரும்பாடாகப் போயிற்று. அவனை வம்பிழுக்கவே காலையிலிருந்து கண்டு கொள்ளாமல் விட்டாள். பரிதிக்கு அவள் சிரிக்கிறாளோ என பக்கவாட்டில் துடித்த கன்னம் கூற, மெதுவாய் அவளருகே சென்று தன்புறம் திருப்பினான்.

“என்ன...?” பொய்யாய் முறைத்தபடி அவன் கையைத் தட்டிவிட்டவளின் மலர்ந்த முகம் அகத்தைக் காண்பிக்க, இவன் கோபத்தோடு மூச்சை இழுத்துவிட்டு பிடரியைக் கோதினான்.

“சாரி... சாரி. ஐ காண்ட் கண்ட்ரோல் மை செல்ஃப்!” என்ற வாணி உதட்டைக் கடித்து முடியாமல் சிரித்துவிட, அவளை முறைக்க முடியாது தோற்றவன் படக்கென சுவரோடு சாய்த்து அவசரத்தோடு முத்தமிட்டான். வாணியின் இதயம் திடுக்கிட்டுப் போனது. அவளின் பலகீனமான மறுப்பு அவனை சென்றடையவில்லை. பரிதிக்கு அவளை அள்ளி அணைத்தெடுத்து தனக்குள்ளே அதக்கிக்கொள்ளும் பரபரப்பு. முழு வேகத்தையும் முத்தத்தில் காண்பித்தான்.

காலையிலிருந்து தன்னை தவிக்க விட்டுவிட்டாளே என்ற ஆதங்கத்தையும் முத்தத்தோடு கொடுத்து அவன் விலக, வாணி சட்டென முகம் திருப்பினாள். அவள் தொண்டைக் குழியில் திடீரென ஏதோ அடைத்த உணர்வு. அனிச்சையாக கழுத்தை வருடியவள், “அறிவில்லையா பரிதி உனக்கு? ஏன் இப்படி பண்ண இடியட்? என் கண்ணு முன்னாடி நிக்காத. போய்த் தொலை!” எனக் கத்திவிட்டாள். அவனுக்கு சட்டென்று பயம் வந்தது.

“வானு... சாரி. சாரி. நீ... அது என்னை மார்னிங்லருந்து நீ கண்டுக்கலைன்னு ஒரு அவசரத்துல கிஸ் பண்ணிட்டேன். சீரியஸ்லி சாரி!” தவிப்போடு அவள் கையைப் பிடித்தான் பரிதி.

வெடுக்கென தட்டிவிட்டவள், “வெளிய போடா முதல்ல!” என்றாள் அவன் கண் பார்ப்பதை தவிர்த்து. பிறந்து முப்பத்தொரு வருடத்தில் முதன்முதலில் அவளுணர்ந்த ஆணின் ஸ்பரிசத்தில் உடல் மெல்ல நடுங்கிற்று. படபடத்த இதயத்தை சமாதானம் செய்ய இயலாமல் தடுமாறினாள். இதில் எதிரிலிருப்பவன் முகத்தை எங்கே பார்ப்பது. கூச்சம், வெட்கத்தை தாண்டி ஒரு சங்கோஜம் வந்தமர்ந்தது. முப்பது நொடி முத்தத்திற்கே இவன் முகத்தைப் பார்க்க ஏன் இப்படி தடுமாறுகிறேன் என அவளுக்குத் தன்னை நினைத்தே வெட்கமாய் போய்விட்டது.

“வானு... சாரி டீ. சாரி‌ டீ!” வேறு ஏதேனும் நினைவு அவளுக்கு வந்துவிட்டதா என பரிதி பதறி அவள் முகத்தை தன்னை நோக்கித் திருப்ப முனைய, படக்கென மறுபக்கம் திரும்பி நின்றவள், “ஐயோ... என்னைப் போட்டு படுத்தாத பரிதி. வெளிய போ... எனக்கு உன்னைப் பார்க்க சங்கடமா இருக்கு. வெட்கம் வேற வந்து தொலைக்குது!” என சிணுங்கலுடன் அவள் தரையில் பொத்தென அமர, இவன் திகைத்துப் போனான். பின்னர் அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது.

தன் தலையிலே தட்டியவன், “அடிப்பாவி! என்னை பயமுறுத்திட்ட. வெட்கம்தானே? என்கிட்டே என்ன டீ வெட்கம்?” என்றான் உரிமையான கேலியுடன்.

“உன் மூஞ்சி போடா!” அவனைப் பார்க்காமல் வாணி மெல்லிய குரலில் வெட்கத்துடன் முணுமுணுக்க, அவளருகே அமர்ந்து பின்னோடு அணைத்துக் கொண்டவன், அவள் கழுத்தில் நாடியை வைத்தான்.

“வானு... என்னைப் பார்த்து வெட்கப்படு டீ. நீ அதட்டி, திட்டித்தான் பார்த்திருக்கேன். வெட்கப்பட்டா எப்படின்னு கற்பனை கூட வந்து தொலைய மாட்டேங்குது!” என அவள் செவியருகே கிசுகிசுப்பாக முணுமுணுத்தவனின் வயிற்றில் தன் முழங்கையால் குத்தியவள், “சாவடிச்சுடுவேன் உன்னை. அதைப் பத்தி பேசுறதா இருந்தா வெளிய போ!” என்றாள் சின்ன கடுப்புடன். பரிதிக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

“ஆனாலும் நான் ரொம்ப கஷ்டப்படணும் போல டீ!” என அவன் கேலியுடன் அகல, அவளின் கால்சராய் ஒன்று பறந்து வந்து அவனைத் தொட முயன்று தழுவி அறை வாயிலில் பொத்தென விழுந்தது.

பரிதி பத்து நிமிடங்கள் கூடத்தில் உலாத்தினான். பின்னர் மெதுவாய் அறையை எட்டிப் பார்க்க, முழங்காலிட்டு கீழே அமர்ந்து எதையோ பொறுக்கி எடுத்துக் கொண்டிருந்தாள் வாணி. இவன் மெதுவாக நடந்து சென்று சற்று பார்வையைக் கூர்மையாக்க, அவர்கள் முத்தப் போரில் கீழே கவிழ்ந்து போயிருந்தது வாணியுடைய காதணி டப்பா. அதைத்தான் அவள் எடுத்து வைத்தாள். இவன் சென்று கட்டிலில் அமர, முகத்தைக் குனிந்துகொண்டாள் அவள். அதில் இவனுக்கு சிரிப்பு முளைத்தது.

“வானு...” சின்ன குரலில் அழைத்தான்.

“என்ன?” உர்ரென அவள் கேட்க,

“நான் எதைப் பத்தியும் பேச‌ மாட்டேன். உன்னை டீஸ் பண்ண மாட்டேன். நார்மலா என்னைப் பார்த்துப் பேசு!” என்றான் மென்மையாக.

தயங்கியபடியே உதட்டைக் கடித்து தலையை நிமிர்த்தியவள், “நிஜமா பேச மாட்டல்ல?” என சந்தேகத்தோடு கேட்டாள்.

“சே.. சே. மாட்டேன்!” என தலையை இருபுறமும் ஆட்டியவனிடம் நிச்சயம் விஷமம் தென்பட்டது. அதை உணர்ந்தவள், முறைத்தாள்.

“சரி வா வானு... குளிக்கலாம்!” சிரிக்காமல் அவன் கூறியதும், இவள் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

“என்ன...‌என்ன பார்க்குற? குளிக்க வேணாமா? ப்ளைட்டுக்கு டைமாச்சுமா. அப்புறம் உள்ளே விட மாட்டானுங்க. நீயும் அடுத்துக் குளி!” என அவளைக் கேலி செய்தவாறே குளித்து வந்தான் பரிதி. வாணி அவனை முறைத்துக் கொண்டே சுற்றினாள். பின்னர் சற்று நேரத்திலே இருவரும் இயல்பாகினர்.

உண்டு முடித்து தள்ளும் பையை எடுத்து வந்து கூடத்தில் வைத்தாள் வாணி. பரிதி மற்ற பொதிகளை எடுத்து வந்தான். நேரமானதை உணர்ந்து இருவரும் கிளம்ப, “எல்லாத்தையும் எடுத்துக்கிட்டே தானே? எதையும் மறக்கலைல. வேற எதுவும் வேணுமா?” எனக் கேட்டவள், வீட்டுச் சாவியை எங்கே வைத்தோம் எனத் தெரியாமல் துழாவினாள்.

தொண்டையைச் செருமிய பரிதி, “வானு... எனக்கு ஒன்னு வேணும்!” என்றான் அவளை கண்களால் மேய்ந்தபடியே. சற்று முன்னர் கொடுத்த முத்தம் அவனை ஒருநிலையில்லாமல் அல்லாட செய்தது. பார்வை மனைவியைவிட்டு அகல மாட்டேன் சண்டித்தனம் செய்தது.

“என்ன வேணும்? போற நேரத்துலதான் உனக்கு ஏதாவது வேணும்னு தோணுமா? சீக்கிரம் சொல்லு!” என்றவள், சாவியை எடுத்து வீட்டுக் கதவில் வெறுமனே சொருகி வைத்துவிட்டு, அவன் முகம் பார்த்தாள்.

அந்தப் பார்வையில் தயங்கியவன், “திட்டாத வானு. எனக்கு இன்னொரு முத்தம் வேணும்!” என்றவன் படக்கென தலையைக் குனிந்துகொள்ள, இவள் திகைத்து அதிர்ந்து விழித்து, “அடி வாங்கப் போற நீ. கிளம்பு!” என்று விறுவிறுவென வெளியே சென்று நின்றாள். இல்லையென்றால் அவன் முன்பு போல முத்தமிட்டுவிடுவானோ என மனம் படபடத்துப் போனது.

பரிதி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டே பையோடு வெளியே வந்தான். வாணி அவனைக் கண்டு கொள்ளவில்லை. இருவரும் மகிழுந்தில் விமான நிலையத்தை நோக்கிப் புறப்பட்டனர். இவள் அவன் முகம் போன போக்கில் சிரிப்புடன் அவன் கையோடு கை கோர்த்து தோளில் சாய, “ஒன்னு வேணாம் போ...” என்றான் ரோஷத்துடன்.

“சரிதான் போடா...” என இவளும் விட்டுவிட்டாள்.

விமான நிலையம் சென்றதும் ஓட்டுநர் பின்னிருந்த பைகளை இறக்க, பரிதியும் அவருக்கு உதவும் பொருட்டு வெளியேற முனைந்தான். வாணி படக்கென அவன் சட்டை நுனியைப் பிடித்திழுத்து அவன் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டாள். அவளைத் திரும்பி முறைத்தவன், கன்னத்தை துடைத்தான்.

“இதெல்லாம் முத்தமா டீ? கடுப்பைக் கிளப்பாத!” என சிடுசிடுத்தவன், ‘இந்த டைம் எப்படியாவது இவளை ஓகே பண்ணி அம்மாவாக்காம போகக் கூடாதுன்னு ப்ளான் எல்லாம் பண்ணி வந்தேன். குழந்தை வந்துடுச்சுன்னா அப்புறம் எப்படி பிரிஞ்சு போறது அது இதுன்னு பேசுவான்னு பார்த்தா, எல்லாம் சொதப்பல். உன் மூஞ்சிக்கெல்லாம் ரொமான்ஸ் கேட்குதா? மூனு வருஷமா கூட இருக்கா. திறமையிருந்தா எப்பவோ கரெக்ட் பண்ணிருப்ப. எல்லாத்தையும் சொதப்பிட்டு இப்போ வந்து புலம்பு!’ என தன்னைத் தானே திட்டிக் கொண்டே இறங்கினான். வாணி அவன் செய்கையில் ஏதோ முணுமுணுத்தவாறே நடந்தாள்.

சரியாய் அவன் செல்லும் விமானத்திற்கான அறிவிப்பு வந்தது. மூச்சை இழுத்துவிட்டு சில நொடிகளில் தன்னை சமன்செய்த பரிதி, “வரேன் வானு!” என்றான். அவளும் வீம்பை விட்டுவிட்டு முறுவலித்தாள்.

அவன் கரத்தைப் பிடித்து வைத்துக்கொண்டவள், “நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் பரிதி!” என்றாள் உள்ளார்ந்த அன்புடன்.

அவளைக் கனிவோடு பார்த்தவன், “இந்தக் கதையெல்லாம் வீட்டுலருக்கும் போதே சொல்றதுக்கென்னடீ? அங்க என்னை சுத்த விட்றது? பப்ளிக் பிளேஸ்ல மிஸ் யூ, லவ் யூன்றது!” முனகியபடியே அவளை முறைத்தான். அவள் உதட்டில் சிரிப்பு படர்ந்தது.

“பார்க்கலாம்னு ஒரு வார்த்தை சொன்னதுக்கே கிஸ் பண்ணி என்னை ஒரு வழி பண்ணிட்ட. இதுல நான் மிஸ் பண்றேன்னு சொல்லிருந்தா லண்டனுக்கே போகாம டேரா போட்டு என்னைப் பாடாப்படுத்திருப்ப நீ!” அவள் மென்முறைப்புடன் கூறவும், உதட்டைக் கடித்து சிரிப்பை அடக்க முயன்ற பரிதி வெட்கத்தோடு முகத்தை திருப்பிக் கொண்டான். வாணி அவன் முகத்தை இப்போது வெகு சுதந்திரமாகப் பார்த்தாள். அவள் பார்வையில் அவன் மீதான ரசிப்பு கூடிற்று. மீண்டும் விமான அறிவிப்பு வந்தது.

அவள் கையை அழுத்திய பரிதி, “நீ இங்க, நான் அங்கன்னு இருக்கது கடுப்பாருக்கு வானு. பேசாம வேலை வேணாம்னு வந்துடலாம்னு தோணுது. ஆனால் வீட்டு லோன் இருக்கு. அப்பாவுக்கு புதுசா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஸ்டார்ட் பண்ணணும். என்னால இப்போ ரெண்டு வருஷத்துக்கு எங்கேயும் நகர முடியாது!” என்றான் வருத்தம் மிகுந்த குரலில். வாணி அவன் கையைப் பிடித்தழுத்தி புன்னகைத்தாள். அந்த முகத்தைக் கண்களில் நிரப்பிக் கொண்டே பரிதி அகன்றான்.

இருவரும் மீண்டும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர். அலைபேசியில் காதலை வளர்த்தனர். அவ்வப்போது சின்ன சின்ன பரிசுகளால் தங்களது ஏக்கம் தீர்த்துக் கொண்டனர். ஆனால் பரிதிக்குத்தான் வாணியைவிட்டுத் தனியாய் இருப்பது பெரும் கொடுமையாகத் தோன்றிற்று.

அவ்வப்போது அவளிடம் புலம்பிக் கொண்டே இருந்தான். திடீரென்று ஒருநாள் அழைத்து வேலை பிடிக்கவில்லை, இந்தியா வந்து உன்னோடு இருக்கிறேன் என்பான்.
மறுநாள் வீட்டுக் கடனை அடைக்க வேண்டும் என வந்து நிற்பான். வாணிக்கு அவனைப் பார்த்து பாவமாகப் போயிற்று.

அவளும் பரிதி அளவிற்கு அவனைத் தேடுகிறாள்தான். அவன் அருகாமை வேண்டுமென மனம் ஏங்கிற்று. ஆனால் வாயைத் திறந்து கூறவில்லை. எங்கே இவள் ஏதாவது பேசி, அவன் மறுநாளே வந்து நிற்பானோ என்ற பயம்தான் அவளது உணர்வை பகிர விடாமல் செய்திற்று. அவன் புலம்பும் சமயங்களில் ஆறுதல் வார்த்தைக் கூறி அவனைத் தேற்றுவாள்.

அவன் தனிமையை உணரும் கணங்களில் மாமியாருக்கு அழைத்து அவனிடம் பேச சொல்லி உந்தினாள். முன்பு அவள் தனிமையில் வாடிய போது பரிதிதான் அவளைப் பார்த்துக் கொண்டான். இப்போது அது தலைகீழாக நடக்கிறது. அவ்வப்போது குடும்பமா காணொளி அழைப்பில் பேசி தங்களது ஏக்கத்தை தீர்த்துக் கொண்டனர்.

“எனக்கு உன் கையால வச்ச சிக்கன் கிரேவி வேணும் வானு!”

“இங்க நியூ இயர் செம்மையா செலிபிரேட் பண்ணாங்க.‌ நீயும் வந்திருந்தா சூப்பரா இருக்கும்!”

“ரெண்டு நாளா பீவர் வானு. யாரும் என்னைப் பார்த்துக்க இல்ல!” என வருந்துவான். ஏதோவொரு வகையில் அவனுக்கு மனைவி அருகில் வேண்டுமென தோன்றிற்று. அவளது அனுதாபத்தைப் பெற்றேனும் அவளைத் தன்னிடம் இழுத்துக் கொண்டான். வாணியை முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்திருந்தான்.

வாணிக்கு அந்த வாரம் மனதே சரியில்லை. அவனுக்கு காய்ச்சல் வந்து யாருமே உடனில்லாமல் கஷ்டப்படுகிறானே என மனம் வருந்திற்று. தனியாக இருக்கப் பிடிக்காமல் உடனே பொள்ளாச்சிக்குப் புறப்பட்டுவிட்டாள். மாமியார், நாத்தனார் என இரண்டு நாட்களை அங்கே கழித்தாள். இருந்தும் பரிதி நினைவு அதிகமாகத் தாக்கிற்று. அவனைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும், அவனோடு நேரத்தை செலவிட வேண்டுமென விரும்பினாள்.

மருமகள் அமைதியைப் பார்த்த சிந்தாமணி, “என்ன வாணி... ஏன் ஒருமாதிரியா இருக்க?” எனக் கேட்டார். அவரிடம் மறைக்க முயலாதவள், அனைத்தையும் ஒப்பித்துவிட்டாள். அவருக்கு மருமகளின் மனம் புரிந்தது.

“பேசாம உன் ஆபிஸ்ல லீவ் கேளு. கொடுத்தாங்கன்னா போய் அவனைப் பார்த்து பத்து நாள் தங்கிட்டு வா!” என அவர் கூற, இவளுக்கு யோசனையானது. இப்போது நடந்து கொண்டிருந்த திட்டத்தில் இவள்தான் முதன்மை பொறுப்பாளர். அதை அப்படியே விட்டுச்செல்ல முடியாதே என கவலையானாள். விடுப்பு கிடைக்காது எனத் தெரிந்தும் மேலாளரிடம்‌ கேட்டாள்.

முன்பு போல உற்சாகமில்லாமல் சோர்வாகத் தெரிந்த வாணியைப் பார்த்த மேலாளர், “வாட் ஹேப்பண்ட் வாணி. ஏன் டையர்டா இருக்கீங்க?” என அவர் விசாரிக்க, இவள் அதுதான் காரணமென்று உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது என சின்ன குரலில் கூறினாள். உடனே அவர் மருத்துவ விடுப்பு அளித்துவிட, ஒரு மாதம் வேண்டுமென கேட்டு வாங்கியவள், அந்த வாரமே லண்டன் கிளம்பினாள்.

சுற்றுலாவிற்கான நுழைவு இசைவுதான் இவள் விண்ணப்பித்திருந்தாள். அது கிடைக்க இரண்டு வாரங்கள் ஆகுமென கவலையுற்றவளுக்கு நான்கே நாட்களில் அனுமதி கிடைத்துவிட்டது. சிவனுக்கும்‌‌ முருகனுக்கும் பெரிய நன்றியை நவில்ந்தவள், லண்டன்‌ சென்றிறங்கினாள்.

பரிதி அதே வீட்டில்தான் குடியிருந்தான். அவனோடு வெளிநாட்டு ஆடவன் ஒருவன் அறையைப் பகிர்ந்து கொண்டான். இவள் சென்று வீட்டு உரிமையாளரை சந்தித்து நலம் விசாரித்து மாற்று சாவியை வாங்கி வீட்டைத் திறந்தாள்.

அவள் எதிர்ப்பார்த்த அளவு இல்லையென்றாலும் ஓரளவிற்கு இருப்பிடம் சுத்தமாக இருந்தது. பரிதியின் அறைக்குள்ளே சென்றாள். ஏதோவொரு வாசனை திரவியம் நாசியை நிரடியது. அலுப்புத் தீர குளித்து முடித்து படுத்துவிட்டாள்.

பரிதி எப்போதும் போல அலுவலகம் முடிந்து வந்தான். வீடு திறந்திருக்கவும் தன்னோடு தங்கியிருப்பவன் வந்துவிட்டான் என் எண்ணியபடியே நுழைந்தான். இருட்டாய் இருந்த அறையை விளக்கை போட்டு அவன் உயிர்ப்பிக்க, வாணி மெத்தையில் உறங்கிக் கொண்டிருந்தாள்.

பரிதிக்கு இது கனவா? நினைவா? எனப் புரியாமல் கண்ணை சிமிட்டினான். அவள் மறையவில்லை என்றதும் தடதடக்கும் இதயத்தோடு மெல்ல போர்வைக்கு வெளியே தெரிந்த அவள் பாதத்தை தொட்டான். படக்கென அவள் காலை உள்ளே இழுத்து மெல்லிய குரலில் ஏதோ கூற, அடுத்த நொடி யோசிக்காமல் அவள் போர்வைக்குள்ளே புகுந்து இறுக்கி அணைத்துக் கொண்டான்.

வாணிக்கு கணவன்தான் தன்னைக் கட்டிப்பிடித்திருக்கிறான் எனத் தெரிந்தது. “பரிதி!” என்று சோபையான புன்னகையுடன் அவன் புறம் திரும்ப முனைந்தான்.

“ப்ம்ச்... வானு!” என்ற அதட்டலோடு அவளை இன்னும் இறுக்கிக் கொண்டான் பரிதி. அவளுக்கு அவன் குரலின் பேதம் அப்போதுதான் உறைத்தது.

“ஏய்... பரிதி. என்ன நீ?” என அவசரமாக எழுந்தமர்ந்தாள். அவள் பார்க்கும் முன்னே கலங்கிய கண்களை துடைத்தான்‌ அவன்.

“ப்ம்ச்... என்ன இது பரிதி? ஏன் இவ்வளோ எமோஷ்னலாகுற நீ?” அவள் கடிய,‌ அமர்ந்தவாறே அவளை இழுத்தணைத்தவன், “நான் ஒன்னும் அழலை. சும்மா கண்ல தூசி!” ரோஷமாய் சின்ன குரலில் முணுமுணுத்தான். வாணிக்கு சிரிப்பு வந்தது. அவன் கலங்கிய குரலும் தவித்த முகமும் அவன் தன்னை எத்தனை தூரம் தேடியிருக்கிறான் என வாணிக்கு உணர்த்தியது. அவள் மனம் அந்த அன்பில் உருகிற்று. இதோ போலொரு அன்பும், அரவணைப்பும்தான் அவளது பேராசையாக இருந்தது. இப்போது அவனும் தன்னளவில் தன் அருகாமையை விரும்புகிறான் என எண்ணும்போது மனம் நிறைந்தது.

உண்மையில் பரிதிக்கு சில நாட்களாகவே வாழ்க்கை வெறுத்துப்‌ போயிருந்தது. சரியாக உணவு கிடைக்காமல், அருகே துணைக்கு யாருமில்லாமல் அநாதையாக ஏன் இங்கே கஷ்டப்படுகிறோம் என அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. பணம் வேண்டும் தான்.

ஆனாலும் மனத்தளவில் அவனுக்கு யாரேனும் ஒருவர் உடன் தேவைப்பட்டனர். அவன் விரும்பி ஆசைப்பட்ட வெளிநாட்டு வாழ்க்கை. இப்போது முழுதும் கசந்து போனது. அழகான மனைவி, அன்பான அம்மா, அப்பா என அவர்கள் நிழலில் மீண்டும் சுகமாய் வாழ ஏக்கம் பிறந்தது. அப்படியிருக்கையில் திடுதிப்பென்று வாணி சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்கவும்,‌ ஒருமாதிரி உணர்ச்சி வயப்பட்டுவிட்டான்.

அவன் முதுகில் தட்டிக் கொடுத்து ஆசுவாசம் செய்த வாணி, “ஒரு மாசம் இங்கதான் இருக்கப் போறேன் பரிதி. இப்போ என்னைக் கொஞ்சம் விடு...” என்றாள் மெல்லிய அதட்டலுடன். அவளிடமிருந்து பிரிந்தவனின் முகம் மலர்ந்தது.

“யப்பா... ஒன் ட்வென்டி வாட்ஸ் பல்ப் தோத்துடும். இந்த மூஞ்சியைப் பார்க்கத்தான் ஓடி
வந்தேன்!” என அவள் கேலியில், “போடி...” என பொய் கோபத்தோடு பரிதி எழுந்து சென்றான். வாணி கனிந்த முகமும் விரிந்த உதடுகளுமாக அவனைப் பார்த்தாள்.

தொடரும்...

 
Well-known member
Messages
618
Reaction score
427
Points
63
அப்பாடா, சீக்கிரம் இருவருக்கும் கல்யாணம் செஞ்சி வைச்சிடு மா
 
Top