• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,343
Reaction score
4,064
Points
113
நேரம் – 52 💜

வாணி அடிப்பாள் என எதிர்பார்த்திராத பரிதி சுவரோடு சாய்ந்தான். அனிச்சையாக வலியில் முகம் சுருக்கியவனின் கண்கள் கலங்க, நெற்றியைப் பிடித்தபடி கீழே அமரச் சென்றான்.

வாணிக்கு அப்போதுதான் தன் செயலின் வீரியம் புரிய, கண்ணை மூடி தன்னை நிதானப்படுத்தியவள், “எழுந்திரிச்சு தொலை பரிதி. படிச்சு படிச்சு சொன்னேனா இல்லையா நான்? ஏன் இப்படி எல்லார்கிட்டயும் அடி வாங்கி சாகுற?” எனக் கடிந்து அவனை அழைத்துச்சென்று அமர வைத்தவள், அவன் கையை விலக்கிவிட்டு நெற்றிக் காயத்தைப் பார்த்தாள். வீங்கிப் போயிருந்தது அது. அவள் தொட்டதும், “ச்சு...” என அவன் முனங்க, இவள் பனிக்கட்டியை எடுத்து வந்து வைத்தாள்.

சட்டென அவள் கையைத் தட்டிவிட்டவன், “கொடுமைக்காரி. ராட்சசி. ஏன் டீ அடிச்ச!” என்றான் கோபத்தோடு.

“நீ பண்ண வேலைக்கு அடிக்காம கொஞ்சுவாங்களா? நீ என்னை ஹராஸ் பண்ண ட்ரை பண்ணிருக்க. அதான் நான் அடிச்சேன்!” என்றவளை அதிர்ந்து பார்த்தான் பரிதி.

“ஏய்... பொண்டாட்டிக்கு முத்தம் கொடுக்குறதெல்லாம் ஹராஸ்ல வருமா? அநியாயம் வாணி இது...” எனப் பொங்கினான் அவன்.

“சே... உனக்கெல்லாம் புத்தியே வராதா. அறிவே கிடையாதா? எத்தனை டைம் நான் உன்கிட்ட சொல்றது. எனக்கே சலிச்சுப் போச்சு. பொண்டாட்டி அது இதுன்னு இந்த மாதிரி பக்கத்துல வந்த, இப்போ வெறும் சின்ன அடியோட போச்சு. நெக்ஸ்ட் டைம் கத்தி, அறுவான்னு வெப்பன்ஸ் மாறிடும்!” என்றாள் ஆத்திரம் மிகுந்த குரலில். பரிதியின் முகத்தில் கோபமும் ஆற்றாமையும் படர்ந்தது.

“இனிமே உன்கிட்டே பேசுனா என்ன என்னென்னு கேளு!” என்றவன் ரோஷத்தோடு அறைக்குள்ளே சென்று அடைந்துகொள்ள, இவள் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள். அவளுக்குத் தன்னை ஆசுவாசம் செய்ய நேரம் தேவைப்பட்டது. அவன் முத்தமிட்ட கன்னத்தின் குறுகுறுப்பு அவளுக்கு ஒருவித அசூயையான உணர்வைக் கொடுக்க, எழுந்து சென்று இரண்டு முறை முகத்தைத் தேய்த்துக் கழுவினாள். அப்போதுதான் மனம் சமன்பட்டது.

பின்னர் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவளுக்கு, மனம் கேட்கவில்லை. எப்படியோ போகட்டும் என அவனை விட்டுத்தொலையலாம் என முயன்றாலும் கூட அவளால் பரிதியை சட்டென உதறித் தள்ள முடியவில்லை. மனத்தின் ஏதோ ஒரு மூலையில் அவன் இம்சித்துக் கொண்டே இருந்தான். நேரிலும் கூட அவளைத் தொல்லைத் செய்தான்.

ஆமாம், நான் சுயநலக்காரன்தான். உன் அன்பில் வாழத்தான் ஆசைப்படுகிறேன். நீதான் என்னைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என அவன் வாயாலே வாக்குமூலம் கொடுத்தவனைப் போய் ஏன் தனக்குப் பிடித்து தொலைத்தது. ஏன் இவன் மீது தனக்கிந்த பிரியம் என தன் மனத்தை அவள் சரமாரியாக கேள்விகளால் அடிக்க, அது என்னவோ பதிலே உரைக்கவில்லை.

வேண்டாமென எத்தனை முயன்றும் அவனுக்கான அன்பு அவளை உந்தித் தள்ள, முகத்தைக் கைகளால் தேய்த்தபடியே அறைக்குள்ளே சென்றாள். தாயிடம் கோபித்துக் கொள்ளும் குழந்தையைப் போல அவளைப் பார்த்ததும் முகத்தை திருப்பி மறுபுறம் அமர்ந்தான். இவள் சென்று அவன் நெற்றியைப் பார்க்க, கையைத் தட்டிவிட்டான்.

வலி நிவாரணியை எடுத்து வந்து தேய்த்துவிட்டாள் வாணி. அமைதியாக அவளுக்கு உடன்பட்டவன், பின்னர் அவள் கையை அழுத்திப் பிடித்தான். அவனை அமைதியாகப் பார்த்தாள்.

“வானு... என்னை நீ மன்னிச்சுட்டேன்னு சொன்னது உண்மைதானே?” எனக் கேட்டவனை யோசனையுடன் பார்த்து தலையை மேலும் கீழும் அசைத்தாள் அவள்.

“சரி... நான் என்னை அக்செப்ட் பண்ண சொல்லி கெஞ்ச மாட்டேன். பட், நீ எனக்கு ஒரேயொரு பேவர் மட்டும் பண்ணு... இல்ல, இல்ல. ரெண்டு பேவர் பண்ணு!” என அவசரமாகத் தன் வாய் வார்த்தையை திருத்தினான். அவள் மேலும் பேசு என்பதாகப் பார்த்தாள்.

“அது... அது... ஒரு ஒன் இயர் எனக்கு டைம் கொடு வானு. நான் என்னோட அன்பை உனக்குப் புரிய வைக்கணும். உன்னைத் தொல்லைப் பண்ண மாட்டேன். பட், என் ப்ரசென்ஸை உன்னை ஃபீல் பண்ண வைப்பேன். அதுவரைக்கும் நீ யாரையும் மீட் பண்ணி மேரேஜ் அது இதுன்னு கமிட்டாகக் கூடாது!” என்றான் கெஞ்சலாக.

“கஷ்டம்... ஏற்கனவே என் ஆஃபிஸ்ல ஒரு பையன் என் மேல ரொம்ப இன்ட்ரெஸ்டா இருக்கான்!” பொய்தான் கூறினாள். என்னவோ அவனை அலற வைத்துப் பார்ப்பதில் இவளுக்கு ஒரு ஆத்ம திருப்தி. மதியோடு சேர்ந்து இவன் தன்னைப் படுத்தியப்பாட்டிற்கு கொஞ்சமாவது திருப்பிக் கொடுக்க வேண்டாமா? என மனம் குரூரமாக சிந்தித்து தொலைத்தது.

படக்கென எழுந்தவன், “வானு... பொய் தானே சொல்ற நீ?” என படபடப்புடன் கேட்டான். அவள் வெகுதீவிரமாக தலையை இல்லையென்பதாக அசைக்க, பரபரவென முடியைத் தேய்த்தவன், அவள் கையை எடுத்து தனக்குள் அடக்கினான்.

“வானு... நிஜமா நீ எனக்கு வேணும். நான் ஜஸ்ட் டைம் பாஸ் பண்றேன்னு நீ நினைக்காத. வேற யாரும் உன் லைஃப்ல கிடையாது. இந்த பரிதிதான் உனக்கு எப்பவும். அண்ட் உங்கம்மாவுக்கு என்னளவுக்கு யாரையும் பிடிக்காது வாணி. அவங்க இருந்திருந்தா கண்டிப்பா நம்ப பிரியிறதை விரும்பியிருக்க மாட்டாங்க. அவங்க நம்ப கூட இல்லைனாலும் அவங்க ஆன்மா சுத்தி வந்துட்டேதான் இருக்கும்.‌ எனக்காக நீ என்னை கன்சிடர் பண்ண வேணாம். உங்கம்மாவுக்குப் பிடிச்ச பையனா என்னைப் பாரு. அப்போ உன்னால எனக்கொரு வாய்ப்பு கொடுக்க முடியும் வானு!” என்றவன் முகத்தை அவள் உணர்வுகளற்றுப் பார்த்தாள். அந்தப் பார்வை அவனை வெகுவாக வருத்திற்று. முன்பும் அவன் மதியோடு இருக்கும் நேரங்களில் இப்படித்தான் பார்ப்பாள். அப்போது உறைக்காத பலவும் இக்கணம் நன்றாக விளங்கிற்று.

அவள் அமைதியைக் கடை பிடிக்கவும், “ட்ரஸ்ட் மீ வானு. உனக்குப் பிடிக்காத எதையும் நான் செய்ய மாட்டேன். இந்த ஒரு வருஷம் டைம் நான் என்னை உனக்குப் புரிய வைக்கத்தான் கேட்குறேன். நெக்ஸ்ட் இயர் நான் இங்க வரும்போதும் உன் மனசு மாறாம அப்படியே இருந்தா உன்னை ஃபோர்ஸ் பண்ண மாட்டேன். உன்னோட பீலிங்க்ஸை மதிச்சு நான் விலகிப் போயிடுறேன் வானு. வாய்ப்பே கொடுக்காம நீ தோத்துட்டன்னு சொல்றதை என்னால ஒத்துக்க முடியாது...” என்றான் பெருமூச்சுடன். அவள் அமைதியாய் அவனைப் பார்த்திருக்க, நெஞ்சோடு அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் பரிதி. அப்போது அவளிடம் பதிலில்லை.

“என்னை ஏத்துக்கவே முடியாதுன்னு தோணுதா வாணி? நான் ரொம்ப கெட்டவன் எல்லாம் இல்ல டீ. உன்கிட்டே மட்டும் கொஞ்சம் கெட்டவன். பட், இப்போ அதையெல்லாம் மறந்துடேன் வானு. கிவ் மீ ஒன் மோர் சான்ஸ்!” என்றவன், அவளின் உச்சந்தலையில் நாடியை அழுத்தினான்.

அவனிடமிருந்து வெடுக்கென பிரிந்தவள், “வந்து சாப்பிடு, உனக்கு ஃப்ளைட்டுக்கு டைமாச்சு!” என்றாள் அவன் முகம் பார்க்காது. அவன் முன்பு அணைத்த போது வந்தக் கோபம் இப்போது வரவில்லை. மாறாக அழ வேண்டுமெனத் தோன்ற, உதட்டைக் கடித்து தன்னுணர்வுகளை மென்றபடியே வெளியே சென்றாள். பரிதி அவளை ஆற்றாமையுடன் பார்த்துவிட்டு தலையைக் கைகளில் தாங்கியமர்ந்தான். மனத்தின் கனத்தை அவனுக்கு குறைக்கும் வழி தெரியவில்லை. இந்தப் பெண் தன் கை சேர வாய்ப்பேயில்லையா என வருத்தம் தொண்டையை நெருக்கிப் பிடித்தது‌. அடைத்த மனத்தோடு அசையாமல் அமர்ந்திருந்தான்.

சாப்பிட அழைத்தும் அவன் வரவேயில்லை எனப் பொறுத்துப் பார்த்த வாணி, மீண்டும் அறையை எட்டிப் பார்த்தாள். என்னவோ அவன் அமர்ந்திருந்த விதத்தில் இவளுக்கு மனம் பிசைந்தது போல. இவனைத் திட்டவும் மனம் வந்து தொலைய மாட்டேன் என்கிறது என ஆயாசத்தோடு, “உன்னை சாப்பிட கூப்பிட்டேன் நான்” என்றாள் முயன்று குரலில் கடுமையைப் புகுத்தி.

அவளை நிமிர்ந்து பார்த்தவன், “எனக்குப் பசிக்கலை!” என்றான் வெற்றுக் குரலில்.

“பசிக்கலைன்னா என்ன அர்த்தம்? உனக்காகத்தானே குக் பண்ணேன் நான். ஒழுங்கா வந்து சாப்பிடு. சாப்பாட்டை வேஸ்ட் பண்ணா எனக்குப் பிடிக்காது” அவள் அதட்டலிட,

“இப்போ எனக்கு சாப்பாடு ரொம்ப முக்கியமா? வேஸ்டா போக கூடாதுன்னா எடுத்துட்டு வந்து என் மூஞ்சில ஊத்து பேசாம!” எத்தனை முயன்றும் அவன் குரலில் கோபம் வெளிப்பட்டுவிட்டது. வாணி அவனை சில நொடிகள் வெறித்துவிட்டு அகன்றாள். பரிதி அறையைவிட்டு அகலும் வழியைக் காணவில்லை‌. அவன் இப்போது சாப்பிட்டுக் கிளம்பினால்தான் இந்த பெங்களூர் போக்குவரத்திற்கு சரியான நேரத்தில் விமானத்தைப் பிடிக்க முடியும் என்றெண்ணியவள், பெருமூச்சுடன் அவனிடம் சென்றாள்.

“சரி... நான்‌ உனக்கு ஒன் இயர் டைம் தரேன் பரிதி!” என்றாள் சின்ன குரலில். அவன் ஒருவித எதிர்பார்ப்புடன் மிக அவசரமாக நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.

“ப்ளீஸ் வானு... என்னை சமாளிக்கப் பொய் ஏதும் சொல்லிடாத. நான் உன் விஷயத்துல ரொம்ப சீரியஸா இருக்கேன்!” என்றான் தவிப்பு மிகுந்த குரலில்.

அந்தக் குரலை மெல்ல உள்வாங்கியவள், “பொய் சொல்லலை. உண்மையைத்தான் சொல்றேன். பட், நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ண கூடாது. எனக்கான ஸ்பேஸை கொடுக்கணும். போர்ஸ் பண்ண கூடாது!” என்றாள் அழுத்தமாய்.

ஆர்வத்துடன் எழுந்து அவளருகே வந்து கையைப் பற்றிக் கொண்டவன், “கண்டிப்பா வானு. நான் உன்னை எந்த வகையிலயும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். தேங்க் யூ... தேங்க் யூ சோ மச்.‌ எனக்கு இப்போதான் நிம்மதியா இருக்கு. எங்க உன்னை மிஸ் பண்ணிடுவேனோன்னு பயத்துல நைட்டெல்லாம் தூக்கமே வரலை!” என்றான் நிம்மதி அடர்ந்த குரலில்.

“சரி வா, சாப்பிடு...” என அவனுக்கு உணவு பரிமாறினாள்.

“நீயும் சாப்பிடு...” பரிதி அவளையும் உண்ண அழைக்க, மறுத்தவள், பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றுவிட்டாள்.

இரண்டு வாய் உண்டவன் தயக்கத்துடன், “வானு... உன்னைப் பார்க்க வச்சு சாப்பிட்டா எனக்கு வயிறு வலிக்கும்.‌ ஒரே ஒரு வாய் வாங்கிக்கோ!” என அவள் முன்னே கையை நீட்டினான்.

அவள் வேண்டாமென்பதாய் தலையை மறுப்புடன் அசைக்க, “ப்ளீஸ் வானு... ப்ரெண்ட்ஸ்குள்ளே ஊட்டி விட்றது இல்லையா என்ன? சரி ஸ்பூன் எடுத்துட்டு வந்து ஊட்டிவிடவா?” எனக் கேட்டு அவன் எழச் செல்ல, தடுத்து ஒரு வாய் உணவை வாங்கிக் கொண்டாள். பரிதியின் முகம் மலர்ந்தது. எப்படியும் அவளை சமாதானம் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு சாப்பிட்டு முடித்தான்.

இன்னும் அரைமணி நேரத்தில் அவன் கிளம்ப வேண்டும். வாணி காலையிலிருந்து வேலை செய்ததால், குளிக்காமல் இரவு உடையிலே இருந்தாள். தூக்கி கட்டிய கொண்டையும், சோர்வு அப்பிய முகமுமாய் இருந்தாள்.

“வாணி... நீயும் என்னை சென்ட் ஆஃப் பண்ண வரலாம் இல்ல?” எதிர்பார்ப்புடன் அவள் முகம் பார்த்தான் பரிதி.

“சாரி பரிதி... ஐ யம் சோ டையர்ட். ஸ்டமக் பெய்ன்‌ வேற. இங்கருந்தே பாய் சொல்றேன்!” என்றாள் கேலியாக. ஆனாலும் அவள் குரலிலே சோர்வு தெரிந்தது. ஒரு நொடி அவளை ஏக்கமாகப் பார்த்தவன், பின்னர் சரியென ஒப்புக் கொண்டான். அவன் பதிவு செய்த மகிழுந்து வந்துவிட்டிருந்து.

கதவருகே கையைக் கட்டிக்கொண்டு அவனைப் பார்த்தாள் வாணி. காலணியை மாட்டிவிட்டு நிமிர்ந்தவன், கையில் தள்ளும் பை ஒன்றிருந்தது. தோளில் கனமான சுமையை சுமந்தவன், “நீ இல்லாத இந்த ரெண்டு மாசம் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் வானு. சண்டை போட்டு நீ என்கிட்டே பேசலைன்னா கூட உன்னோட ப்ரசென்ஸை நான் ஃபீல் பண்ணிருக்கேன். இப்பவும் உன்னை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன். நீ ரொம்ப நல்லவ வானு!” என்றவனைப் பார்த்தவள், “அது சரி...” என அளவாய் முறுவலித்தாள்.

பரிதி அவளை நோக்கி தன் வலக் கரத்தை நீட்ட, என்னவென்பதாய் பார்த்தாள் அவள்.

“கையைக் குடு!” என அவள் கரத்தை இறுக்கிப் பிடித்தவன், “இந்தக் கையை எப்பவும் நான் விட மாட்டேன். விடணும் உன்னை நினைக்கிற அளவுக்கு நடந்துக்க மாட்டேன்!” என்றான். வாணி இமையை சிமிட்டி சின்ன‌ புன்னகையுடன் அவனைக் கண்களில் நிரப்பிக் கொண்டாள். அவளை நன்றாகப் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தியவன், அகன்றான். அவன் கண்ணைவிட்டு மறையும்வரை வாணி‌ பார்த்திருந்தாள்.

பின்னர் பெருமூச்சுடன் வீட்டிற்குள்ளே நுழைந்தாள். வீடே வெறிச்சோடி போய்விட்டதை உணர்ந்தாள். சில மாதங்களாக தன்னைத் துரத்தும் தனிமையை இந்த இரண்டு நாட்களாக அவள் கண்ணிலே பார்க்கவில்லை. பரிதி அவளை வேறெதையும் சிந்திக்கவிடவில்லை என்பதே உண்மை. அவன்தான் அவளை மொத்தமாக ஆக்கிரமித்திருந்தான். மெதுவாய் கண்ணை மூடி நீள்விருக்கையில் சுருண்டு கொண்டாள்.

பரிதி விமானநிலையம் சென்றதும் சிந்தாமணி அழைத்துவிட்டார். அப்படியே கீர்த்தனா, அஜித் என ஒருமுறை அலைபேசி வலம் வர, மார்த்தாண்டம் அவனிடம் பேசவில்லை. ஆனாலும் கவனமாக இருக்கும்படி மனைவியிடம் அவர் கூறியதை இவன் கேட்டான். சின்னதாய் புன்னகை முளைத்தது. பின்னர் மறுநாள் காலையில் லண்டன் சென்றிறங்கினான்.

அவன் வீடு நுழைந்ததும் வாணி ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தாள். அதற்குப் பதிலளிக்காதவன், உடை மாற்றித் தன்னை சுத்தம் செய்து கொண்டு வந்து அவளுக்கு அழைத்துவிட்டான்.

“இப்போதான் ரூம் வந்தேன் வானு!” என்றவன், அவள் வேலைக்கு கிளம்பிவிட்டாளா? சமைத்தாளா? உண்டாளா எனக் கேட்டறிந்தான்‌. பின்னர் சோர்வாக இருக்கிறதென உறங்கியெழுந்தான். மாலையிலும் அவளுக்கு அழைத்துப் பேசினான்.

அதை அப்படியே வாடிக்கையாக்கினான். தினமும் இருமுறை அவளிடம் பேசினான். சிந்தாமணிக்கு அழைத்து அவ்வப்போது மருமகளிடம் பேசுமாறு இவன் கூற, அவர் மகனிடம் சடைத்தாலும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மருமகளிடம் பேசினார். கீர்த்தனா, அஜித் கூட அவ்வப்போது அவளது நலம் நாடினர். எல்லாம் பரிதியின் உபயம் என வாணிக்குப் புரிந்தது.

அற்புதா, சரவணனிடம் தங்களுக்கிடையே நடந்த அனைத்தையும் பகிர்ந்த பரிதி, எப்படியும் அவளோடுதான் தன் வாழ்க்கை என ஸ்திரமாக கூறிவிட, அவர்கள் இருவருக்கும் வாணியின் வாழ்க்கைப் பற்றிய பயம் அகன்றது. பின்னர் அவளை எப்படி சமாதானம் செய்யலாம் என மூவரும் சிறிது நேரம் சிரித்துப் பேசி அழைப்பை முடித்துக் கொண்டனர்.

சிந்தாமணி பரிதியின் சொல்லுக்காக மட்டுமல்ல, வாணியின் மீதிருந்த பிரியத்தால் அடிக்கடி அவளிடம் பேசினார். வீட்டிற்கு ஒருமுறை வந்து செல்லுமாறு அன்புடன் கட்டளையிட்டார். வாணியால் சட்டென அவர்களை உதறித் தள்ள முடியவில்லை. உண்மையில் இப்படி தினமும் யாராவது ஒருவர் தனது நேரத்தைத் திருடிக் கொள்வது கூட அவளுக்கு நன்றாகயிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பரிதி அவளது தனிமையை விரட்டி‌ முற்றுப் புள்ளி வைத்திருந்தான்.

முதலில் அவன் அழைத்துப் பேசும்போது அவளுக்கு சற்றே எரிச்சலாகத்தான் இருந்தது. தினமும் ஒரே கேள்வியா என சலித்தாள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, அவன் அலுவலகத்தில் என்ன நடந்தது எனத் தொடங்கி, இவள் இரவிற்கு என்ன சமைத்தாள் என்பது வரை பகிரத் தொடங்கினர்.

பரிதி சென்று இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில், அஜித் திடுதிப்பென்று ஒரு நாள் மூன்று பெண்களும், இரண்டு ஆண்களுமாக வீட்டிற்கு வந்து நின்றிருந்தான். இவள் அவனை எதிர்பாராது திகைத்து வரவேற்று அமர வைத்தாள்.

“அண்ணி சாரி... இன்பார்ம் பண்ணாம வந்துட்டோம். இங்க காலேஜ்லருந்து டூர் வந்தோம். ஹோட்டல்ல ரூம் புக் பண்ணிருந்தோம்‌. ஆனால் வெப்சைட் எரர்னு எங்களுக்கு ரூம் புக்காகலை. சோ, கேர்ள்ஸைக் கூட்டிட்டு எங்கப் போறதுன்னு தெரியாம இங்க வந்து உங்களை டிஸ்டர்ப் பண்றோம்!” அஜித் சங்கடத்துடன் கூற,

“ப்ம்ச்... இதுல என்ன இருக்கு அஜித்? எத்தனை நாள்னாலும் இங்கயே தங்கிக்கோங்க. எந்த பிராப்ளமும் இல்ல!” என அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அரவணைத்துக் கொண்டாள் வாணி.

பெண்கள் நால்வரும் அறையைப் பகிர, ஆண்கள் கூடத்தில் படுத்துவிட்டனர். அந்த வாரம் முழுவதும் அவர்களுடதான் வாணிக்கு நேரம் சென்றது. அந்தப் பெண்கள் மூவரும் அண்ணி, அண்ணியென இவளிடம் சிரித்துப் பேசி கேலி செய்து என வீடே நிறைந்து போயிருந்தது. பின்னர் சுற்றுலா முடிந்து அவர்கள் விடை பெற, மறுவாரமே சிந்தாமணி அழைத்து இவளிடம் பேசினார்.

“ஏன் வாணி... இவளுக்கு காலேஜ்ல ஒரு மாசம் லீவ் விட்டிருக்காங்க. வீட்லருந்து என்னைப் படுத்துறா. அங்கன வர சொல்லவா? உனக்கும் துணைக்கு ஆள் கிடைச்ச மாதிரி இருக்கும். அவளுக்கும் பொழுது போகும்!” என சிந்தாமணி கேட்க, வாணி சரியென்றுவிட்டாள். கீர்த்தனாவிற்கு அத்தனை சந்தோஷம். இங்கு வந்ததும் இவளைக் கட்டிப் பிடித்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்தாள்.

“அண்ணனுக்கும் உங்களுக்கும் சண்டையாகிப் பிரிஞ்சுட்டீங்களோன்னு பயந்துட்டேன் அண்ணி நான். இப்போதான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!” என ஒரு மாதமும் அண்ணியோடு ஒன்றாக சுற்றினாள். விரும்பிய பொருட்களை தயக்கமில்லாமல் வாணியிடம் வாங்கித் தரச் சொல்லிக் கேட்டாள். பிடித்ததை சமைத்து உண்டனர். வாரயிறுதியில் ஊர் சுற்றினர்.

அவள் விடுமுறை முடிந்து வீடு செல்ல, “அண்ணி.‌.. உங்களுக்கு லீவ் கிடைச்சா நீங்களும் வந்துட்டுப் போகலாம் இல்ல. நாங்க உங்களை ரொம்ப மிஸ் பண்றோம்!” எனத் தன் பிரியமான அண்ணியிடம் செல்லமாகக் கோபம் கொண்டு அவள் விடைபெற்றாள்.

வாணிக்கு விடுமுறை கிடைக்கவில்லை. அதுவும் இல்லாமல் அங்கு செல்ல அவளுக்கு நிரம்ப தயக்கமாக இருந்தது. அதைப் பரிதியிடம் அவள் வெளிப்படையாகப் பகிர, அடுத்து சில நாட்களிலே மார்த்தாண்டமும் சிந்தாமணியும்‌ இவளைப் பார்க்க பெங்களூர் வந்துவிட்டனர். வாணிக்கு உண்மையில் அவர்கள் செய்கையில் கண் கலங்கிப் போனது. வேண்டாமென விவாகரத்து வாங்கிய மருமகளிற்காக அவர்கள் இத்தனை தூரம் மெனக்கெட்டு வந்ததில் ஒருமாதிரி மனம் நெகிழ்ந்து போனாள்.

சிந்தாமணி இரண்டு நாட்கள் தங்கிவிட்டுப் போனார். அவர் இருந்த நேரமெல்லாம் மருமகளுக்கு என்னப் பிடித்திருக்கிறது எனக் கேட்டு சமைத்துக் கொடுக்க, இவள் ஆசையாக உண்டாள்.

அம்சாவிற்கும் காமராஜிற்கும் அவர்கள் அங்கு சென்று வந்த விஷயம் தெரிந்ததும் வாணிக்கு அழைத்து தன் அதிருப்தியைப் பகிர்ந்தார். சீக்கிரம் அவளுக்கு நல்வாழ்க்கை அமைத்து தர வேண்டுமென அவர்கள் முடிவு செய்ய, அற்புதா அதை எதிர்த்தாள்.

“ம்மா... வாணிக்கு பரிதியைத்தான் பிடிச்சிருக்கு. லவ் மேரேஜ் பண்ணவங்க அவங்க. ஹஸப்ண்ட் அண்ட் வொய்ஃப்னா சண்டை வரத்தான் செய்யும். அதுக்காக அவங்களை ஒரேடியா பிரிக்கப் பார்க்காத!” என்றாள் அதட்டலுடன்.

“ஏன்டி... நான் என்னமோ நல்லா வாழ்றவங்களை வேணாம்னு பிரிச்ச மாதிரி பேசுற? அந்தப் பையன் இவ இருக்கும்போதே இன்னொருத்திப் பின்னாடி‌ போயிருக்கான். இதுலயே அவன் லட்சணம் என்னென்னு தெரிய வேணாமா?” என அம்சா கத்த, அற்புதா அவரை சமாதானம் செய்தாள்.

வாணியின் மீதும் சமபங்கு தவறு இருப்பதாக கூறியவள், அவள் குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்ட காரணத்தினால்தான், அவளை சம்மதிக்க வைக்கும் நோக்கோடு பரிதி வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக பழகி நடித்தான் என்றாள் ஒரு கற்பனைக் கதையைப் புனைந்து. முதலில் அவர் அதை நம்பத் தயாராகவில்லை. தம்பியையும் துணைக்கு அழைத்தவள், தாய் தந்தையரை நம்ப வைத்துவிட்டாள்‌.

அம்சா வாணிக்கு அழைத்து இதெல்லாம் உண்மையா என அதட்டிக் கேட்டு, அவள் ஒப்புக் கொண்டதும், ஏன் இப்படி செய்தாய் எனத் திட்டியவர், இருவரும் மனம் மாறி நன்றாக வாழ்ந்தால் சரியென்றுவிட்டார். வாணிக்கு இதெல்லாம் அற்புதாவின் வேலைதான் எனப்‌ புரிந்தாலும் அவள் அம்சாவை சமாளித்ததில் இவளுக்கு நிரம்ப திருப்திதான்.

மாமியார், மாமனார் வந்து சென்றதும் பரிதிக்கு காணொளி அழைப்பு விடுத்தவள், “அறிவில்லையா பரிதி உனக்கு? வயசான காலத்துல ஏன் அவங்களை அலைய விடுற?” எனக் கடிந்து கொள்ள, அவன் எதுவும் பேசாமல் சிரித்தான்.

“சிரிக்காத... டென்ஷனாகுது!” அவள் பல்லைக் கடிக்க, அவன் சிரிப்பு அதிகமானது.

“போடா!” என இவள் அழைப்பை துண்டிக்க செல்ல, “ஏய்... வானு, நான் அவங்களை போக சொல்லவேயில்ல. இன்ஃபேக்ட் அலையாதீங்கன்னு சொன்னேன். ஆனால், அம்மாதான் என் மருமகளைப் பார்த்துக்க எனக்குத் தெரியும்னு அப்பாவோட வந்துட்டாங்க!” என்றான் மலர்ந்த முகத்துடன். அவள் வெறுமனே தலையை மட்டும் அசைத்தாள். பின்னர்‌ பொதுவான பேச்சுகளோடு இருவரும் விடைபெற்றனர். முன்பு போல வாணி பரிதியிடம் பாராமுகம் காண்பிப்பதில்லை. அதற்காக பெரும் நெருக்கமும் இல்லை. ஆனாலும் ஒரு இணக்கம் வந்து சுகமாய் அவர்களை தாலாட்டிற்று.

மெதுவாய் மாதங்கள் உருண்டோடிட, பரிதி லண்டன் சென்று பத்து மாதங்கள் கடந்து போயிருந்தன. இடைப்பட்ட நாட்களில் அலைபேசியில் தங்களது உறவை வளர்த்தனர் இருவரும். பரிதி அவள் கண்டு கொள்ளவில்லை என்றாலும் கூட தானாக வந்து பேசினான். அவளையும் பேச வைத்தான். அவள் தனக்கு எவ்வளவு முக்கியமானவள் என்பதை ஒவ்வொரு செயலிலும் நிரூபித்தான்.

தூரமாய் இருந்த போதும் தன்னருகாமையை அவன் உணர வைத்ததுதான் வாணியை நிறைய பாதித்தது. வேண்டாமென அவள் வெட்டிவிட்ட செடியை அவன் தண்ணீர் ஊற்றிப் பிரியத்துடன் வளர்க்க, அது மீண்டும் முளைத்து மொட்டுவிட்டு மலரத் தொடங்கியிருந்து.

அவர்கள் வாழ்க்கையைப் போலவே வாணி வளர்த்த செடியை பரிதி பராமரித்து அவளிடம் புகைப்படம் அனுப்பிக் காண்பிக்க, அவள் மகிழ்ந்தாள். புதிதாய் உடை அணிந்தால், அவளுக்கு சுயமி எடுத்து அனுப்பினான். ஏதாவது நன்றாக சமைத்தால் புகைப்படத்தோடு, “நானும் மீன் குழம்பும் உனக்காக வெய்டிங்!” என சோக பொம்மையை அனுப்பினான்.

வாரத்திற்கு இரண்டு முறை விக்னேஷ் வாணிக்கு அழைத்துப் பேசினான். முன்பு அவள் தனிமையில் இருக்கிறாள் என்ற கரிசனத்திலும் அன்பிலும் அவளிடம் பேசினான். ஆனால் இப்போதெல்லாம் அவளுடைய அலைபேசிக்கு இணைப்பு செல்லவே இல்லை. அதைக் குறிப்பிட்டு அவன் கேலியாக, “ஆல்வேய்ஸ் கால் பிசி, வெய்டிங்கல இருக்கே வாணி?” எனக் கேட்டிருந்தான். அவள் மறைக்கவில்லை. எதையெல்லாம் அவனிடம் பகிர முடியும் எனத் தோன்றியதோ, அதையெல்லாம் கூறிவிட்டாள். அவள் குரலில் சின்னதாய் சங்கோஜம் வேறு ஒட்டிக் கிடந்தது.

“ஷப்பா...‌ என் மச்சான் இந்தளவுக்கு இறங்கி வருவான்னு நான் நினைக்கலை. அவனா உங்களைத் தேடி வர டைமாகும்னுதான் கொஞ்சமா வெறுப்பேத்துனேன். பையன் பறந்து வந்துட்டான் போல. இட்ஸ் ட்ரூலி ஃபார் யூ ஒன்லி வாணி. இப்பவும் அவன் செல்பிஷ்தான். எனக்கு அவனைப் பிடிக்காது. பட், என்ன அவனுக்கு உங்களைப் பிடிச்சிருக்கதால மன்னிச்சு விட்றலாம்!” என அவன் பேச்சில் இவளுக்கு சிரிப்பு முளைத்தது. உளமார அவனிடம் தன் நன்றியைப் பகிர்ந்தாள்.

அடுத்த வாரத்தில் பரிதி திடுதிப்பென்று மனைவியைக் காண வந்து நின்றிருந்தான்.

தொடரும்

 
Top