• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,343
Reaction score
4,062
Points
113
நேரம் – 51 💜

வாணி முட்டியைக் கைகளால் கட்டிக்கொண்டு மூடியிருந்த வீட்டு கதவையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். அவள் அழுது தேம்பி முடித்து, கண் இரைப்பைகள் வேலை நிறுத்தம் செய்த பின்னரே, அவள் விழிநீர் வற்றியது. கன்னத்தில் கண்ணீர் தடயங்கள் காய்ந்து போயிருந்தன. ஒருமாதிரி பயம் நெஞ்சை கவ்வினாலும், இறுகிப் போய் அமர்ந்திருந்தாள்.

வெளியே பேய் மழை அடித்து ஊற்றியது. பரிதி சென்று சில பல மணி நேரங்களாகியிருந்தது. இன்னும் அவன் வரவில்லை என்று இவள் கதவை வெறித்திருந்தாள். வீடு முழுவதும் இருளில் முழ்கிப் போயிருந்தது. எப்போதும் அவளை அச்சுறுத்தும் அந்த தனிமையைக் கூட அவளை உணர விடாமல் செய்திருந்தான் பரிதி. துக்கப் பந்தொன்று தொண்டையை அடைத்த போதும் கூட அவனை நிராகரித்திருந்தாள்.

எந்தக் கணத்தில் அவன் மீதான அன்பு தனக்குத் துளிர்த்தது என அவள் மனமே அறியாமல் போயிற்று. பிடித்ததுதான். அதை காதல், நேசம் என்ற வரையறைக்குள் அடக்காமல் தோழமை என பொய்யாய் அரிதாரம் பூசி வைத்திருந்தாள். என்றைக்கு மதியை அவன் பிடித்திருக்கிறது என இவளிடம் கூறினானோ, அன்றைக்குத்தான் அந்த அரிதாரம் உதிர்ந்து, அவள் மனத்தை அவளுக்கே உணர்த்திற்று‌.

அர்ஜூன் என்ற மனிதனைக் கடந்து விட்டவளால் வேறொரு ஆணை அதேபோல அன்பு செய்ய முடியுமா என எண்ணி எத்தனையோ நாட்கள் வேதனைப்பட்டிருக்கிறாள். ஆனால் அதையெல்லாம் நொடியில் துடைத்தெறிந்திருந்தான் பரிதி.

வெறும் பழகிய சொற்ப மாதங்களில் எப்படி அவனிடம் ஒப்பந்த திருமணத்திற்கு சென்று நின்றோம் என அவள் மனம் கேள்வி கேட்டபோது தான் அவன் மீதான நேசம்‌ முகத்தில் அறைந்தது. முதலில் அவளுக்குத் தன்னை நினைத்தே திடுக்கிடல். பின்னர் தன்னுடனே ஒரு ஆடவன் வாசிக்கும்போது ஆண் பெண் ஈர்த்தல் என்பது பொதுவானது என தன் உணர்வுகளை இறுக்கிப் பூட்டிவிட்டாள்.

மதியோடு பரிதியைப் பார்த்த போது அவள் எத்தனை முயன்றும் அவனுக்கான அன்பும் அக்கறையும் வெளிப்பட்டிருந்தது. ஒவ்வொரு முறையும் பரிதி அவள் தோற்றத்தைக் கேலி செய்யும்போது தனக்குள்ளே இறுகிப் போனாள். பரிதி நிறைய முறை அவளை மனத்தளவில் உடைத்துப் போட்டிருக்கிறான். ஆற்றவே முடியாத வார்த்தைகளையெல்லாம் உபயோகித்து அவளைக் குன்ற செய்திருக்கிறான். அப்படிப்பட்டவன் மீது உனக்கேன் இந்த அன்பு என தன்னையே அவள் வெறுத்திருக்கிறாள்.

சுந்தரியிடம் அவன் காண்பிக்கும் அன்பும் அக்கறையும் இயல்பான பேச்சும் தனக்கும் வேண்டுமென அடியாழத்தில் ஒரு ஏக்கம் பிறந்தது. பிடித்திருக்கிறது என்பதைக் கூட அவனிடம் பகிர இவள் விரும்பவில்லை. ஒப்பந்த திருமணம் என்பதில் அவன் தெளிவாக இருந்தான். அப்படியிருக்கையில் இவள் சென்று காதல் என்று பிதற்றினாள், ஒன்று கேலி செய்வான். இல்லை காலத்துக்கும் மறக்காத வகையில் அவளை வார்த்தைகளால் நோகடித்திருப்பான். இந்த இரண்டையும் அவள் விரும்பவில்லை. என்னதான் காதல் என்றாலும் கூட அவளுக்கு தன்மானம் முன்னே வந்து நின்றது. அதனால்தான் அவனை வேண்டாமென இவளால் தூக்கிப் போட முடிந்தது.

இப்போது அவளின் மறுப்பு மிக மிக பலவீனமாக மாறிற்று. இந்த தனிமை அவளைப் போட்டு வதைத்ததாலா? இல்லை சிந்தாமணி, கீர்த்தனா போன்றோரின் அன்புக்கு மனம் ஏங்கியதோ? ஒற்றைப் பிள்ளையென தாய், தந்தையை சுற்றி வளர்ந்தவளுக்கு பரிதியின் குடும்பத்தின் மேல் பிரியம் கூடிப் போயிருந்தது.

அவனுடன் வாழும் சொற்ப காலத்தில் அவர்களோடு நன்றாக பழகி உறவைப் பேண வேண்டும் என அவள் எண்ணத்தைக் கூட சுடு சொற்களால் மாற்றியிருந்தான். அவன் அன்றைக்குப் பேசிய பிறகு, இவளால் இன்றுவரை அவர்களுடன் முழு மனத்தோடு பழக முடியவில்லை. என்னவோ ஒரு ஒதுக்கம். அது அப்படியே தங்கிவிட்டது.

அதுதான் வேண்டாமென பூசிய அரிதாரத்தையெல்லாம் உதிர்த்துவிட்டு இரு வீட்டு ஆட்களின் முன்னே பிரிவதாய் உறுதி கொடுத்துவிட்டானே. பிறேகன் காலைச் சுற்றும் பாம்பாய் அவளை இன்னுமின்னும் அழ வைக்கிறான் என வாணிக்கு கண்களில் ஈரம் கோர்த்தது.

மழையின் வீரியம் அதிகரிக்க அதிகரிக்க இவளுக்குள்ளே பயம் கூடியது. அவன் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருக்க, எங்கு சென்றிருப்பானோ என மனம் பரிதவித்துப் போனது.

எங்கேயாவது கண்காணாத இடத்தில் அவன் எப்படி சென்றாலும் பரவாயில்லை. ஆனால் தனக்கு முன்னே அவன் வேதனைப்படுவதை அவளால் பார்க்க முடியாது. அவள் அவனை எந்த நிபந்தனையும் அற்றுதான் அன்பு செய்தாள். இந்த அன்பு மானம், வெட்கத்தையெல்லாம் துறந்து அவன் பின்னேதான் சென்று தொலைக்கிறது.
அவன் நிறம், படிப்பு, அழகு என எதுவுமே அவளுக்குப் பொருட்டாக இருந்ததில்லை. வாணி எப்போதும் குணத்திற்கு மதிப்பு கொடுத்துப் பழகும் ரகம். ஆனால், அதற்கு எதிர்மாறான குணம் பரிதியுடையது‌.

இப்போது கூட அவனுக்கு அவள் பிடித்துப் போய் வரவில்லையாம். தனக்குப் பிடித்ததால் வந்திருக்கிறான் என கேட்டதும் என்னவோ ஒன்று அவள் நெஞ்சை போட்டு பிசைந்தது. அன்பைக் கொடுத்து கொடுத்து இவளுக்கு சலித்துப் போனது. யாரேனும் தன்னிடம் பிரயத்துடன் அனுசரணையாகப் பேச மாட்டார்களா என மனம் ஏங்கிற்று.

குறைந்தபட்ச பரஸ்பர அன்பும், மரியாதையும் கிடைக்கும் ஒரு உறவுதான் அவளுக்கு வேண்டும். இவள் மட்டுமே தன்மானத்தை தூக்கிப் போட்டுவிட்டு உறவை இழுத்துப் பிடிக்க முடியாது என்றுதான் அவனை வேண்டாமென நிர்தாட்சண்யமாக மறுத்திருந்தாள்.‌

நேரம் பத்து மணியைத் தொட்டது. நீண்ட நேரம் இறுக்கிப் பிடித்த கால்கள் மரத்துப் போயிருக்க, கையைக் கட்டிக்கொண்டு இருக்கையின் பின்னே சாய்ந்தாள். விழியோரம் ஈரம் கசிந்தது.

சற்று நேரத்தில் கதவைத் திறக்கும் சப்தமும் அதோடு பரிதி உள்ளே நுழைவதும் தெரிந்தது. இவள் தலையை சரித்து அவனைப் பார்த்தாள். முழுவதும் நனைந்து போயிருந்தான். கண்கள் சிவந்து போயிருந்தன. குடித்திருக்கிறானோ என்ற திடுக்கிடலுடன் அவனைப் பார்த்தாள். அவன் மட்டும் மது அருந்திவிட்டு வந்திருந்தாள் இப்போதே அவனுடைய உடமைகள் சகிதம் வெளியே துரத்திவிடும் எண்ணம் அவளிடம்.

ஆனால் பரிதி ஒரு வேகத்தோடு அவளருகே வந்து முட்டிப் போட்டு அமர்ந்தவன், அவள் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டான். வாணியின் உடல் இன்னும் இறுகிப் போனது. குளிருக்கு நடுங்கிய உடலோடு அவன் அமர்ந்திருக்க, அவன் அழுகிறான் என சூடான கண்ணீர் சொல்லிற்று.

இவ்வளவு நேரம் எங்கே செல்வது எனத் தெரியாமல் கோபம், ஆற்றாமையைக் கரைக்கும் வழியறியாது தெருத் தெருவாக சுற்றினான். மழை அடித்துப் பெய்ததும், ஓரிடத்தில் ஒதுங்கிவிட்டான். அவனுக்கு அடுத்து என்ன செய்து அவளை தன்னிடம் கொண்டு வருவது என எதுவுமே மனத்தில் தோன்றவில்லை.

முதல்முறையாக அவன் ஒரு பெண்ணிற்காக அழுதிருக்கிறான். மதிக்காக இதுவரை அவன் ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தவில்லை. ஆனால், வாணியை அவனால் விட்டுக்கொடுக்க முடியவில்லை. அவள் வேண்டுமென உடலில் ஒவ்வொரு அணுவும் ஏங்கிற்று.

உண்மையில் அவளைப் போலொரு பெண்ணை அவன் மீண்டும் சந்திக்க வாய்ப்பு வெகு அரிது. அவனை அவனாக ஏற்றுக் கொண்ட பெண்ணை புறத்தோற்றத்தை வைத்து நிரம்ப காயப்படுத்தியிருக்கிறோம் என்பதே அவனுக்கு இப்போதுதான் உறைத்தது. தான் விளையாட்டாக செய்த ஒவ்வொரு விடயமும் அவளை நிறைய பாதித்திருக்கின்றன என எண்ணித் தன்னையே திட்டிக் கொண்டான்.

எப்படி அவள் மனக்காயத்தை ஆற்றி, மீண்டும் அவள் நம்பிக்கையைப் பெறுவது எனத் தெரியாது இவன் தவிப்புற்றான். எங்கெங்கோ அலைந்து திரிந்தாலும் கடைசியாக கூடடையும் பறவையாக வீட்டிற்குள் நுழையும்போது அவன் பார்க்கும் முகம் வாணியுடையதாகத்தான் இருக்க வேண்டுமென மனம்‌ முழுவதும் ஆசையாக இருந்தது. அவளைத் தான் உணராத காலத்திலே தனக்காகவென இந்தப் பெண் இத்தனை செய்திருக்கிறாள். காயப்படுத்தினால் கூட தன்னை அரவணைத்துப் போகும் தாயாய் அவனை ஒவ்வொரு நிலையிலும் உயர்த்தியிருக்கிறாள். அப்படி தன்னை நேசிக்கவும் அன்பு செய்யுமளவிற்கு இவன் அவளுக்கு எவ்வித நல்லதும் செய்திருக்கவில்லை.

சொல்லப் போனால் அவள் செய்த உதவிக்கு இரண்டு மடங்காக அவளைக் காயப்படுத்தியிருக்கிறான். வார்த்தையால் தெரிந்து அவளை வதைத்தவன், அவள் நேசம் புரியாது மதியோடு சுற்றி இன்னுமே அவளைக் காயப்படுத்திவிட்டான். எதையும் அவன் யோசித்து செய்யவில்லை. என்னவோ ஒரு கோபம். இத்தனைக்குப் பிறகும் இந்தப் பெண் ஏன் தன்னிடம் நன்முறையில் நடந்து கொண்டாள். இப்போதுவரை அவனைக் காயப்படுத்த அவளுக்கு மனம் வரவில்லை. சிந்தாமணி தன்னை அடித்ததும் அவள் கண்களில் உருண்டு திரண்டு நின்ற நீர் அவளது ஆழ்ந்த அன்பை விளக்கிற்று.

அந்த அன்பில் வாழ எந்த தகுதியும் தனக்கில்லை எனத் தெரிந்தும் கூட பரிதிக்கு அவளை இழக்க மனம் வரவில்லை. வாணியிடம் இப்போதும் அவன் சுயநலமாகத்தான் நடந்து கொண்டான். தான் நேசிக்காத போதே அன்பை அள்ளிக் கொடுத்த இந்தப் பெண்ணின் முழு பிரியத்திலும் நேசத்திலும் காலம் முழுக்க வாழ அவனுக்கு ஆசையாக இருந்தது. ஒரு பெண்ணின் தூய அன்பில் வாழ பேராசை கொண்டான்.

இனிமேல் எந்தப் பெண் தன் வாழ்வில் வந்தாலும் வாணி அளவிற்குத் தன்னைப் பார்த்துக் கொள்வது என்பது எட்டாக்கனி. தன் கிறுக்குத்தனங்கள் அனைத்தையும் அவளால் மட்டுமே பொறுத்துக்கொள்ள முடியும். வாணியிடம் அவன் வெகுசுயநலக்காரன். இப்போதும் அப்படியே நடக்க எண்ணியவன், சுவரில் அடித்த பந்தாய் அவளிடமே திரும்பி வந்தான்.

அவன் உடலின் குளிர் தன்னிடம் கடத்தப்பட்டு, தன் தேகத்தின் சூடு அவனிடம் பரவியதை உணர்ந்த வாணி, “பரிதி... போய் ட்ரெஸ் மாத்து!” என்றாள் அவனைத் தன்னிடமிருந்து விலக்கிவிடும் நோக்கோடு.

அவன் மெல்ல நிமிர்ந்து பார்த்தான். கண்கள் செவ்வரியோடிப் போயிருந்தன.
அவனிடம் ஒருவித பிடிவாதமும் இறைஞ்லும் கொட்டிக் கிடந்தது. அசைய மாட்டேன் என்பதாய் பார்த்தான்.

“எழுந்திரிச்சு போய் ட்ரெஸ் மாத்துன்னு சொன்னேன் நான்!” அவள் மெல்ல குரலை உயர்த்திக் கட்டளைப் பிறப்பிக்க, மனமே இல்லாமல் அவளிடமிருந்து பிரிந்தவன், உடை மாற்றி வந்தான்.

“தலை ஈரமா இருக்கு. நல்லா துவட்டு!” அதட்டலிட்டவளைப் பார்த்தவன், தலையைத் துவட்டினான்.

“மேட் எடுத்துப் போட்டு தண்ணியை துடைச்சு விடு!” அவள் கூறியதை அமைதியாக செய்தான்.

“போய் சாப்பிடு... மதியமும் நீ சாப்பிடலை. சாப்பிட்டு வந்தா எப்படியெல்லாம் பேசி என்னை ஏமாத்தி கன்வின்ஸ் பண்ணலாம்னு உனக்கு ஐடியா கிடைக்கும்” எனக் கேலியாக அவள் கூறினாலும், அதன் பின்னிருந்த அன்பை அவனால் பரிபூரணமாக உணர முடிந்ததில், உதட்டோரம் சின்னதாய் ஒரு மென்முறுவல். எப்படி இந்தப் பெண்ணை தன்னால் விட்டுக்கொடுக்க முடியும் எனத் தோன்ற, அவளருகே சென்றவன், அவள் உச்சந்தலையில் மெதுவாய் கை வைத்தான். வாணி வெடுக்கென தட்டிவிட்டாள்.

“நீயும் வா சாப்பிடலாம்!” அவன் அழைக்க, இசைவாணி வேண்டாமென்பதாய் தலையை அசைக்க, “ம்ப்ச்... வா வாணி!” என அவள் கையைப் பிடித்து இழுத்தான் பரிதி.

“வேணாம்னு சொல்றேன்ல. நீ போய் சாப்பிடு!” அவள் கண்டிப்புடன் கூற, கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றான் பரிதி. அவனே உணவை எடுத்து வந்து கீழே வைக்க, அவள் அவனை முறைத்தாள்.

பாத்திரத்தை திறந்து பார்த்தவனின் நாசியை மீன் குழம்பு வாசனை நிறைக்க, உற்றுப் பார்த்தான். வாலை மீன் குழம்பு செய்திருந்தாள் போல. சட்டென முகமும் உதடும் மலரப் புன்னகைத்தவன், “இப்படி எனக்குப் பிடிச்சதா பார்த்துப் பார்த்து செய்ற உன்னை எப்படி டீ விட சொல்ற?” என ஆற்றாமையுடன் கேட்டான். வாணி அவனை கண்டனமாகப் பார்த்தவாறே சாப்பிட தொடங்க, படக்கென அவள் கையை இழுத்து தன் வாயில் அடைத்தான் பரிதி.

ஒரு நொடி அதிர்ந்தவள், “அறிவில்லையா உனக்கு?” என கடுப்பானாள் அவள்.

“ஆசாசையா எனக்குன்னு குக் பண்ணிருக்கா என் பொண்டாட்டி. அவ கையால ஒரு வாய் சாப்பிட்டா நல்லாருக்கும்னு சாப்பிட்டேன் வானு!” என்றவன், மீண்டும் ஒருமுறை அவளது கையைத் தன் வாய்க்குள் இழுத்துக் கொண்டான். அவள் விரல்கள் அவன் நாக்கு, உதடு, வாய் என உரசிவிட்டு வந்ததில், சட்டென மற்றொரு கையால் அவன் தலை முடியைப் பிடித்து ஆட்டிவிட்டாள்.

“உன் லிமிட்டை க்ராஸ் பண்ணாம நடந்துக்கிறதா இருந்தா இங்க நைட் ஸ்டே பண்ணு. இல்ல, மழையோட மழையா எங்கேயாவது தெருவோரமா படுத்துகிடன்னு விட்டுடுவேன்!” சீறிவிட்டு வாணி எழுந்து செல்ல,

“ஏய் வானு... சாரி. சாரி. இனிமே இப்படி பண்ண மாட்டேன். நீ சாப்பிடு ப்ளீஸ்!” என அவள் கையைப் பிடித்தான் பரிதி.

“ஏய்... உனக்காக நான் ஏன்டா பட்டினியா கிடக்கணும்?” என எரிச்சலானவள், கையை சோப்பு போட்டு கழுவிவிட்டு வந்து மீண்டும் சாப்பிட, இவனுக்கு கடுப்பானது.

‘சாப்பாடு ஊட்டுனதுக்கே இப்படியா? இவகூட எப்படி குடும்ப நடத்தி புள்ளைப் பெத்து... ஒரு மாமாங்கம் ஆயிடும் போலயே. ஐயயோ... அவளுக்கு வயசாகிடுமே!’ எனப் பதறியவன், ‘சீ... உனக்கும்தான்டா ஆகும். ரெண்டு வயசு தானே அவளுக்கு அதிகம்’ எனத் தன்னையே திட்டிக் கொண்டவன், உண்டு முடிக்க, வாணி அவனையே உறுத்துப் பார்த்தாள்.

“வானு!” என்றவன் ஏதோ கூற வர, “எங்கப் போய் சுத்தீட்டு வர்ற? டைம் என்ன தெரியுமா?” என அழுத்திக் கேட்டாள்.

“சாரி.‌. சாரி. நான்... நீ அப்படி அழுதததும் எனக்கு என் மேலயே கோபம் வானு. என்ன பண்றதுன்னு தெரியாம தெருத் தெருவா சுத்துனேன். மழை வேற செம்மையா வரவும், ஒரு கடையில ஒதுங்கி நின்னுட்டேன். அதான் இவ்ளோ நேரமாகிடுச்சு. பயந்துட்டீயா?” என அவசரமாக அவன் விளக்கம் கொடுக்க முற்பட,

“நான் ஏன் பயப்படணும்? என் வீட்டுக்கு வந்துட்டு எங்கேயும் அடிபட்டு ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிடுச்சுன்னா உன் அப்பாம்மாவுக்கு யார் பதில் சொல்றது?” என அலட்சியமாக கேட்டவள், “அதுவும் இல்லாம சோகத்துல குடிச்சிட்டு எங்கேயும் ரோட்ல விழுந்து கிடக்குறீயோன்னு நினைச்சேன். இதென்ன புதுசா உனக்கு?” என நக்கல் செய்தாள்.

“ச்சு... நான் குடிக்கிறதை விட்டுட்டேன் வாணி. நிஜமா இனிமே அந்தக் கருமத்தை என் கையால கூட தொடவே மாட்டேன். ஸ்மோக்கிங் கூட நோ. ரொம்ப குட் பாயா மாறிட்டேன்!” பரிதி கூற,

“நல்லது, மேட்ரிமோனி ப்ரொபைல்ல ஆட் பண்ணிக்கோ. பொண்ணுத் தேட வசதியா இருக்கும்!” உதட்டை சுழித்தவள், மீதமான உணவை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள். அவள் பேசியதையெல்லாம் கிடப்பில் போட்டவன், வால் பிடித்தது போல பின்னே சென்றான்.

“வானு... எனக்கு நீ இல்லாம ரொம்ப கஷ்டம் டீ!” என சின்னக் குரலில் அவன் பேச, அவனைத் திரும்பி கேலியாகப் பார்த்தாள்‌ அவள்.

“அது... நான் ரொம்ப செல்பிஷா பேசுறேன்னு கூட நினைச்சுக்கோ. பட், நான் நமக்காககத்தான் திரும்பி வந்தேன். நீயும் நான் இல்லாம கஷ்டப்படுவ!” அவன் உரைத்ததும், “இன் யூவர் ட்ரீம்ஸ்!” படக்கென அவள் பதிலளித்தாள்.

“ச்சு... நான் என்ன சொல்றேன்னு கேளு முதல்ல. உன்னை மாதிரி யாருமே என்னை இந்தளவுக்கு நல்லா பார்த்துக்கிட்டது இல்ல வானு. ஈவன் என் அம்மா கூட சம்டைம்ஸ் கடுப்பாகி அடி வெளுத்துடுவாங்க. பட், நீ... நீ என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிற. அந்த கம்பர்ட்சேன்க்கு நான் பழகிட்டேன். என்னால என்னை மாத்த முடியாது. உன் விஷயத்துல நான் ஒரு சுயநலக்காரன்!” அவன் தயங்கி தயங்கிப் பேச,

“தெரிஞ்ச விஷயம் தானே? அடுத்து ஏதாவது இருக்கா? எனக்கு தூக்கமா வருது. நாளைக்கு உண்மையா ப்ளைட் தானே? உன்னைப் பக்கத்துல வச்சிருந்தா எந்த நேரத்துல என்ன ஏழரையைக் கூட்டுவனு பயந்துட்டே இருக்க முடியாது. முதல்ல ஊர் போய் சேரு!” எரிச்சலாக அவள் கூறியதும்,

“ப்ளைட் டிக்கெட் காட்டுனா நம்புவீயா நீ?” என ஆதங்கப்பட்டவன், “எனக்கு ரொம்ப டைம் கம்மியா இருக்கு. உன்னை நான் கன்வின்ஸ் பண்ணணும் வானு!” என்றான் அயர்வுடன்.

“பெட்டர் லக் இன் நெக்ஸ்ட் ஜென்மம். தூக்கம் வருது எனக்கு!” என்றவள், பட்டென அறைக் கதவை சாற்றிவிட, இவன் தலையை அழுந்தக் கோதினான்.

மறுநாள் காலை வாணி எழும்போதே பரிதியும் எழுந்துவிட்டான். அவள் தேநீர் தயாரிக்கும்போது பக்கத்தில் நின்று சர்க்கரை டப்பாவை எடுத்துக் கொடுத்தான். அவள் வீட்டை சுத்தம் செய்ய, குப்பையை அள்ளிப் போட்டான். அவள் துவைத்த துணிகளை உலர்த்த, இவன் கொடியில் கவ்விகளை மாட்டினான்.

ஒரு நிமிடம் கூட அவளைவிட்டுப் பிரியாது தாயின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு சுற்றி வரும் சிறுவன் போல அவன் நடந்து கொண்டதில் வாணிக்கு சற்றே எரிச்சலானது.

“எதுக்கு இப்போ என் பின்னாடியே சுத்தீட்டு இருக்க பரிதி நீ? போய் வேற ஏதாவது வேலை இருந்தா பாரேன்!” சுள்ளென அவள் கத்திவிட, அவன் முகம் வாடியது. படக்கென ரோஷத்துடன் சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

வாணி நிம்மதி பெருமூச்சுடன் வேலை பார்த்தாள். மதியத்திற்கு என்ன சமைக்கவென யோசித்தாள். எளிமையாக சமைக்கலாம் என்றால் மூக்கால் அழுவான் இந்தப் பரிதி என சலித்தபடியே தேங்காய்ப்பால் நெய் சாதமும், மிளகு கறி வறுவலும் செய்யலாம் என சமைக்கத் தொடங்கினாள்.

சிறிது நேரத்திலே அவளுக்குப் பின்னால் அரவம் கேட்டது. பரிதி வந்து சுவரில் சாய்ந்து நின்று வாணியையே பார்த்திருந்தான். அவன் பார்வை தன்னைத் துளைப்பதை உணர்ந்து சலிப்புடன் நிமிர்ந்தவள, “என்ன வேணும் உனக்கு?” எனக் கேட்டாள்.

“நான் வெங்காயம் கட் பண்ணித் தரேன்!” என அவன் கையை நீட்ட, பட்டென கத்தியை அவன் கரத்தில் வைத்தவள், அடுத்த வேலைகளை கவனிக்கலானாள்.

இரண்டு வெங்காயத்தை வெட்டி முடித்த பரிதி, “நான் முன்ன மாதிரி இல்ல வாணி. நீ சொல்லாமலே எல்லா வேலையும் செய்றேன். அங்க ரூமைக் கூட ரொம்ப நீட்டா வச்சிருக்கேன்!” என்றான் மெல்லிய குரலில். அவள் காதிலே வாங்காதது போல சமையலில் கவனமாக இருந்தாள்.

“இனிமே நீ மட்டும் குக் பண்ண வேணாம் வானு. ரெண்டு பேரும் சேர்ந்தே பண்ணலாம். எல்லா ஹவுஸ் ஹோல்ட் வொர்க்கையும் ஷேர் பண்ணிக்கலாம். ஹம்ம்... ப்யூச்சர்ல குழந்தை பிறந்ததும் ரெண்டு பேரும் ரெஸ்பானிபிலிட்டி எடுத்துக் கேர் பண்ணிக்கலாம். எனக்கு உன்னோட இருக்கணும் வானு. அதுக்காக என் கேரக்டரையே நான் மாத்திக்க ரெடியா இருக்கேன்!” என்றவனை அவள் நக்கலாகப் பார்த்தாள்.

“நிஜமா வானு... நான் சொல்றது உண்மைதான். நான் எனக்காக மட்டும் சொல்லலை. நீ தனியா இருக்கது கஷ்டமா இருக்குன்னு சொன்னல்ல. இனிமே உன்னைத் தனியாளா ஃபீல் பண்ண வைக்க கூடாதுன்னு தோணுது. எப்பவுமே நான் உனக்காக இருப்பேன்னு நம்பிக்கை கொடுக்குற மாதிரி நடந்துக்க நினைக்கிறேன். ஆனாலும் சம்டைம்ஸ் ரொம்ப இம்மெச்சூர்டா பிஹேவ் பண்றேன். அதெல்லாம் பெர்த் டிபெக்ட். நான் என்னை நோட் பண்ணி பார்த்ததுல, எல்லார்கிட்டயும் நான் பொறுப்பா இருக்கேன். பட், நீன்னு வரும்போது நீதான் என்னைக் கேர் பண்ணணும்னு தோணுது. டேக் இட் ஃபார் கிராண்டடா எடுத்துக்கிறேன். உன்கிட்ட நான் ரொம்ப லிபரலா இருக்கேன். எல்லாத்தையும் நீ பார்த்துப்பன்னு ஒரு எண்ணம் எப்போலருந்து வந்துச்சுன்னு தெரியலை வானு. பட், ட்ரஸ்ட் மீ. இனிமே நான் உன்னை நல்லா பார்த்துக்கிறேன்!” என அவன் பேசிக்கொண்டே வெங்காயத்தை நறுக்க, வாணி காமைக்கலத்தில் விசிலை சொருகிவிட்டு மிளகு கறி வைக்கத் தொடங்கினாள்.
பரிதி நகராமல் அங்கேயே நின்றான்.

“போய் எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டீயான்னு பாரு. என் மூஞ்சில என்ன இருக்கு?” சட்டென மூண்ட எரிச்சலுடன் அவள் கோழிக் கறியை அள்ளி சட்டியில் போட்டு வதக்கினாள். அடுத்து மிளகாய் தூள், அரைத்த மசாலா என எல்லாம் சேர்த்து அடுப்பைக் குறைத்து வைத்துவிட்டு அவனைப் பார்த்தாள்.

அவள் நெற்றியில் வழிந்த வியர்வையைப் பரிதி துடைக்க செல்ல, சட்டென நகர்ந்தவள், “நீ இங்கேருந்து நகர மாட்ட. எனக்கு ஓவரா ஸ்வெட்டாகிடுச்சு. நான் போய் குளிக்கிறேன்!” என இரண்டு அடிகள் நகர்ந்தவளின் கையைத் தவிப்புடன் பற்றினான் பரிதி. இன்னும் சற்று நேரத்தில் அவன் கிளம்பியாக வேண்டும். எப்படியாவது அவளை சமாதானம் செய்துவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்றொரு திடம் அவனிடம். ஆனால் வாணி அசைந்து கொடுக்க மறுக்கிறாளே என ஆயாசமா போயிற்று.

“கையை விடு பரிதி. தொடாதன்னு சொல்லியும் எந்த உரிமைல என் மேல கை வைக்கிற நீ. ஏற்கனவே அறை வாங்கினது போதாதா. போகும்போது என்கிட்டே திட்டு வாங்காத!” என்றாள் எச்சரிக்கையுடன்.

“நீ ரொம்ப ஸ்டபர்னா இருக்க வாணி. நான்தான் தப்புன்னு உன் கால்லயே விழுந்துட்டேனே. உன்னை சமாதானம் செய்யாம அங்கப் போனா என்னால ஒழுங்கா வேலை பார்க்க முடியாது. அவன் அவன் எவ்ளோ பெரிய தப்பெல்லாம் பண்றான். நான் பண்ணது மன்னிக்க கூடிய சின்ன தப்புதானே வானு? கொஞ்சம்‌ மனசு இறங்கு டீ!” என தவிப்பும் ஆற்றாமையுமாய் பேசினான் பரிதி‌.

கையை இரண்டு பக்கமும் திருப்பி அவனிடமிருந்து உருவ போராடிய வாணி, “நான்தான் எப்பவோ உன்னை மன்னிச்சுட்டேனே. இல்லைன்னா நீ இந்த வீட்டுக்குள்ள இருக்க முடியுமா சொல்லு?” எனக் கேட்டாள் அவள்.

“ப்ம்ச்... மன்னிச்சு ஏத்துக்கோன்னு சொல்றேன் நான்!” அவன் கூற்றில் இவள் கடுப்பாகிவிட்டாள்.

“தேஞ்ச டேப்ரிகார்டர் போல பிஹேவ் பண்ணாத பரிதி. நான்தான் நேத்தே படிச்சுப் படிச்சு சொல்லிட்டேனே. தயவு செஞ்சு அடுத்த வருஷம் லீவுக்கு வரேன்னு இங்க வந்து என் உயிரை வாங்காத. யார் கண்டா... நீ வரும்போது நான் ஒரு நல்ல பையனா பார்த்துக் கல்யாணம் பண்ணியிருப்பேன். அப்போ என் லைஃப்ல நீ குறுக்க வரக் கூடாது. அப்படியே வந்தாலும் நீ மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லுவீயே தம்பி தம்பின்னு. அந்த மாதிரி கெஸ்ட் அப்பியரன்ஸ் மட்டும் குடு!” என்றவள் பேச்சில் அவனுக்கு கோபம், எரிச்சல், அதைவிட அவன் இங்கு இல்லாது போனால் வாணி சொல்வது போல அவள் தன்னைவிட்டுப் பிரிந்துவிடுவாளோ என்ற பாதுக்காப்பின்மையும் தோன்றியதில் படக்கென அவளை சுவரோடு சாய்த்திருந்தான்.

அவளுடைய இரண்டு கைகளும் அவன் கரத்தில் சிறைபட்டிருக்க, “பரிதி... இடியட். என் கையைவிடு, முதல்ல தள்ளி நில்லு. எதுக்கு இவ்ளோ பக்கத்துல வந்து நிக்கிற?” என அவள் அடிக்குரலில் அவனை எச்சரிக்க,

“சாரி வானு... எனக்கு நீ வேணும். நான் அதுக்காக என்ன வேணா பண்ணுவேன். லாஸ்டா ஒரே ஒரு தப்பு. ப்ளீஸ் மன்னிச்சிடு!” என்றவனை மிரண்டு பார்த்துப் பின் திடுக்கிட்டவள், “செருப்பு பிஞ்சிடும். முதல்ல என் கையை விடுடா!” என அவள் துள்ளினாள்.

“இந்த ஒரு வருஷம் என்னை நீ மறக்காம இருக்கணும்னுதான் இதைப் பண்றேன்!” என்றவன் என்ன செய்யப் போகிறான் என்பதை உணர்ந்தவள், “ஒழுங்கா என் கையை நீ விடலைன்னா முழுசா லண்டன் போக மாட்ட!” என்றாள் கடித்தப் பற்களுடன்.

“சாரி வானு!” என்றவன் வேகத்தோடு அவள் முகம் நோக்கி குனிய, வாணி திடுக்கிட்டுப் பதறி முகம் திருப்ப, பரிதியின் உதடுகள் அவள் கன்னத்தில் ஆழமாய் பதிந்து மீண்டன. நொடியில் அவன் இளகிய நேரத்தை பயன்படுத்தி கைக்கு கிடைத்த பாத்திரத்தை எடுத்து அவன் தலையி
லே ஓங்கி ஆத்திரத்தோடு அடிந்திருந்தாள் வாணி. அவள் அடித்த வேகத்தில் பரிதிக்கு நெற்றிப் புடைத்து, தலை கிறுகிறுவென சுற்றியது.

தொடரும்...

 
Top