- Messages
- 1,336
- Reaction score
- 3,983
- Points
- 113
நேரம் – 49 
வாணி சென்று ஒரு வாரம் கடந்து போயிருந்தது. பரிதி தாயின் கவனிப்பில் நன்றாக உடல் தேறியிருந்தான். சிந்தாமணி அவனை அக்கறையாகப் பார்த்துக் கொண்டாலும், அவ்வப்போது சாடை மாடையாகத் திட்டத்தான் செய்தார்.
“அழகு பெத்த பொண்டாட்டி... அமைதியான புள்ளை. ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசாது. அப்படி இருக்கவளை வச்சு வாழத் துப்பில்லாத பையன்!” என மகனைத் திட்டினார் பெரியவர். மார்த்தாண்டம் பரிதியிடம் பேச்சே வைத்துக் கொள்ளவில்லை. அவனிடம் முகத்தைத் திருப்பினார். அதையெல்லாம் அவன் கண்டு கொள்ளவேயில்லை. அவனுக்கு முப்பொழுதும் மனைவியின் நினைவுதான்.
காலையில் கண்விழித்ததும், அவள் என்ன செய்கிறாள் என்ற யோசனையுடன் எழுந்தான். உணவுண்ணும் போது அவள் சாப்பிட்டிருப்பாளா? என்ற கேள்வி முன்னே வந்து விழுந்தது. இரவு தூங்கும்போது எதையும் நினைத்து அவள் உழல்கிறாளா என கவலைப்பட்டான். எங்கும் எதிலும் வாணியே நிறைத்து போயிருந்தாள். அவளை மனம் அதிகம் தேடிற்று. அவள் கண்ணீர் இவனை நிறைய பாதித்தது.
வாணியின் பிடித்தம் ஒன்றே இவனைப் பிடித்து வைக்கப் போதுமானதாக இருந்தது. உண்மையிலே மதியோடு சண்டையிட்டவன், வாணியைத் தேடி வந்தது அவளுடைய பிரியத்தின் பெயரில் அன்றி வேறொன்றும் இல்லை. அவளிலில்லாத இரண்டு மாதங்களில் மனத்தளவில் அவளைத் தேடினாலும் கூட, அதற்கு காதல் எனப் பெயரிட விரும்பவில்லை பரிதி. அவனுக்கு அப்படித் தோன்றவும் இல்லை.
ஒருவேளை வாணிக்கு அவனை இத்தனை தூரம் பிடிக்காது போயிருந்தால், நிச்சயமாக ஒரு தோழியாய் அவளிடம் சென்று நின்றிருப்பான்தான். ஆனால் அப்போது இது போல நீதான் வேண்டும் என்று உளறியிருக்க மாட்டான். ஆக, அவளுடைய பிரியம்தான் அவர்களை சேர்த்தும் பிரித்தும் விளையாடிக் கொண்டிருந்தது.
பரிதி எதார்த்தவாதி. வாணி அவனைத் தோழனாக மட்டும் பாவித்திருந்தால், அவளிடமே வேறு பெண்ணைப் பார்க்க சொல்லியிருப்பான் இந்த நல்லவன். ஆனால் அதற்கெல்லாம் அவள் இடம் கொடுக்கவில்லை. அவளுக்குத் தன்னைப் பிடித்திருக்கிறது என்பதே பரிதிக்கு ஒருவகையில் போதுமானதாக இருந்தது. அதைக் கொண்டே மீத வாழ்க்கையை ஓட்டி விடலாம் என்றெண்ணித்தான் வந்தான். இங்கு வந்தப் பின்னர் வாணியைக் கண்டதும் அவனுக்குமே அவளோடு வாழ வேண்டும் என்ற பேராசை கிளர்ந்தது. அவனைப் பொறுத்தவரை அவள் அவனுக்கு ஒரு நல்ல தோழமை உணர்வு கொடுத்த துணை. அவளுடனிருக்கும் போது அவன் எதற்குமே பெரிதாய் அலட்டிக் கொண்டதில்லை. என்னவோ நீண்ட காலம் பழகிய நட்பு போல அவளிடம் வெகு இயல்பாக தன்னை வெளிப்படுத்திப் பொருத்திக் கொண்டான்.
முதன்முதலில் தன்னைப் பிடிக்கும் என்பதைக் கூட வாய்விட்டுக் கூற முடியாத நிலையை எண்ணி வாணி அன்று விரக்தியின் விளிம்பில் சிரித்தப் போதுதான் பரிதிக்கு நெஞ்சு பிசைந்தது, கனத்தது. அவள் அன்பின் ஆழம் கண்ணோரம் உறைந்து போயிருந்த கண்ணீர் உரைத்தது. காதலிக்கப்படுதல் என்பது எத்தனை பெரிய வரம்? அதுவும் எவ்வித நிபந்தனையும் அற்று இந்தப் பெண் தன்னை அன்பு செய்திருக்கிறாள் என இந்த முட்டாள் புரிந்து கொள்ளவே இரண்டு வருட காலம் தேவைப்பட்டிருக்கிறது.
இந்தப் பெண்ணில்லாமல் யாருடன் நீ மகிழ்ச்சியாக வாழ்ந்து கிழிக்கப் போகிறாய்? எனத் தன்னையே திட்டிக் கொண்டான். அன்பைக் கொடுப்பது ஒருவகை. பெறுதல் என்பது பேரூவகை. ஒரு பெண்ணின் தூய அன்பில் முழுவதும் நனைந்து வாழ்வது என்பது வாழ்நாள் போதையாகிற்றே. அவன் நன்றாக யோசித்துப் பார்த்தால் இந்த இரண்டு வருடமும் வாணி ஏதோவொரு வகையில் அவளுடைய பிரியத்தை இவனிடம் காண்பித்துக் கொண்டே இருந்திருக்கிறாள்.
தனக்கு வேலையில்லாமல் திண்டாடிய போது முசுட்டு முகத்துடனேனும் தன்னை அரவணைத்துக் கொண்டது, பகுதி நேர வேலை வாங்கிக் கொடுத்தது முதல், நேர்முகத் தேர்விற்குத் தன்னைத் தயார்படுத்தியது வரை அவளது அன்பு அவனை சுற்றித்தான் வாசம் செய்திருந்தது. அப்போதெல்லாம் அவனுக்கு வாணி மீது ஒருவகை கோபம், தன்முனைப்பு. இவள் என்னைக் கட்டாயப்படுத்துவதா? கட்டுப்படுத்துவதா என்று தன்முனைப்பு முன்னே வந்து நிற்க, அவளை நிறைய காயப்படுத்தியிருக்கிறான்.
அதை இப்போது நினைத்து வருந்தினான். அவள் தன் மீது காண்பித்த நேசத்திற்கு குறைந்தபட்சம் அவளுடன் ஒரு நல்ல நட்பையாவது பேணியிருக்கலாம். அதை விட்டுவிட்டு அவள் முன்பே மதியுடன் பழகியது, முத்தமிட்டது, காதல் சொல்லியது என இவனுக்கே தன் மீது வெறுப்பு உண்டாகிற்று. வார்த்தையளவில் அல்லது, மனத்தளவில் அவளை நிறைய காயப்படுத்திவிட்டான் பரிதி.
உண்மையிலே அவன் ஆழமனம் ஏதொவொரு கணத்தில் வாணியை உணர்த்தியது. மோதிரம் வாங்கச் செல்லும்போது இரண்டு இ எழுத்துக்கள் சேர்ந்தது நன்றாக இருக்கிறதென்று இருவரும் கையை வைத்துப் பார்த்தப் போது அவள் பார்வை சில நொடிகள் தன்னை தொட்டு மீண்டது இப்போது நினைவிற்கு வந்தது. தன் மீதான நேசத்தைக் காண்பிக்க முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவள் அனுபவித்த வேதனை இப்போது இவனை வாட்டியது.
அவன் மதியை முத்தமிட்டதை வாணி கூறிக் கண்டித்தபோது அவள் கண்களில் வந்து போன உணர்வுக்கு என்னப் பெயர் வைப்பது என அப்போது அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் இப்போது அட்சர சுத்தமாக விளங்கிற்று. அவள் நிறைய வேதனையுற்றிருக்கிறாள், அழுதிருக்கிறாள் என சிவந்த கண்கள் கூறின. கண்டிப்பை மட்டுமே கண்ட மனம் அதன் பின்னே அவள் வைத்த அளவில்லா நேசத்தை பார்க்க தவறிற்று.
எல்லாவற்றிற்கும் மேலாக அவள் கண்முன்னே மதியின் காதலை தான் ஏற்றுக் கொண்டதும், மறுநாளிலிருந்து வாணி காண்பித்த ஒதுக்கமும் இப்போது சிந்தையை நிறைத்தது. ஏன் இந்தப் பெண் திடீரென இப்படி நடந்து கொள்கிறாள் என அவளை அழைத்து அவன் கேட்ட பொழுது கூட, சின்ன முறுவலுடன் அவள் ஏதுமில்லை என உரைத்த வார்த்தை, காயம் கண்ட குழந்தையின் அழுகுரலாக நெஞ்சை அழுத்திற்று.
ஆனால் அவனுக்குப் புரியாத, விளங்கிக் கொள்ள முடியாதது வாணிக்குத் தன் மீதான நேசம். ஏன் இந்தப் பெண் தன்னை இவ்வளவு நேசித்திருக்கிறாள். அவள் கண்களில் ஒவ்வொரு முறை உருளும் உவர் நீர் அவளது சொல்ல முடியாத காதலின் கனத்தை இவனுக்கு உணர்த்தியது.
வாணியைப் போல யாரிடமும் அவன் தன் வாழ் நாளில் கோபத்தைக் காண்பித்திருக்க மாட்டான். என்னவோ அவளிடம் மட்டும் அவன் அரிதாரம் இல்லாமல் பொறுப்பற்றுத் திரிந்திருக்கிறான். அவள் மீது தன் சுமையை சுமத்தியிருக்கிறான். அவள் சம்பாத்தியத்தில் எவ்வித கூச்சமும் வெட்கமும் அற்று உட்கார்ந்து தின்றிருக்கிறான்.
படித்து முடித்ததும் சில மாதங்கள் வேலைக்குச் செல்லாதபோது தாய், தந்தையின் உழைப்பில் உட்கார்ந்து சாப்பிடுகிறோம் என வெட்கப்பட்ட இருபத்தியோரு வயது பரிதிதான், இருபத்தியெட்டு வயதில் அவளிடம் எந்தவி தயக்கமும் அற்று உரிமை எடுத்திருக்கிறான்.
வாணியைக் கண்ட நாள் முதல் இன்றுவரை அவளை யாரோவாக அவனால் பாவிக்க முடியவில்லை. அவளிடம் ஏதோ ஒரு பற்றுதல், ஈர்ப்பைத் தாண்டி ஒரு தோழமை உணர்வு. அவள் அதட்டும் போது முறுக்கிக் கொண்டாலும் கூட, அவன் நிறைய விஷயங்களில் தன்னை திருத்தி மெருகேற்றியிருக்கிறான்.
இப்போது அவன் பார்க்கும் உத்தியோகம் முதல் அவனின் நற்குணம் வரை வாணி அவனுக்காகவென செய்தது. என்னவோ அவள் இல்லாமல் இவனுக்கு பசிக்கவில்லை, சரியாகத் தூக்கம் வரவில்லை. நெஞ்சைப் போட்டு அவள் நினைவு அழுத்திற்று.
கடைசியாய் அவள் லண்டனை விட்டு செல்லும்போது விபத்தாக மாற்றி முத்தமிட்ட கன்னத்தின் குறுகுறுப்பை இன்றுவரை அவன் உணர்ந்தான்.
எத்தனையோ முறை மதி அவனை முத்தமிட்டிருக்கிறாள். இவனும் சொக்கிப் போயிருக்கிறான். ஆனால் வாணியின் முத்தம் காமத்தில் சேராது. என்னவோ ஒரு குழந்தை தனக்கு சொந்தமில்லாத பொம்மைக்கு கடைசியாய் கொடுக்கும் முத்தம் போல மிகத் தூய்மையானதாக இருந்தது. அப்பழுக்கற்ற நேசத்தோடு அவளிட்ட முத்தத்தின் ஈரம் இன்னும் இவன் கன்னத்தில் காயவில்லை. மெதுவாய் கன்னத்தைத் தொட்டுப் பார்த்தான்.
சதா காலமும் இந்த இரண்டு வருடங்களாக அவன் கவனிக்காமல் விட்டுவிட்ட, அவளின் ஒவ்வொரு செயலின் பின்னிருந்த அன்பை இப்போது உணர்ந்து கொண்டிருந்தான். அதனாலே அவனிடம் ஒரு நீண்ட அமைதி வந்து போயிருந்தது.
“அண்ணா... நீ பண்ணது சரியே கிடையாது. எதையாவது கேட்டா சின்ன புள்ளைன்னு என் வாயை அடைக்குறீங்க? ஏன்னா அண்ணியை டிவேர்ஸ் பண்ண நீ. எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும். மருமக வந்ததும் அங்கங்க புருஷனைப் பிரிச்சு தனிக்குடித்தனம் கூட்டிட்டுப் போய்ட்றாளுகன்னு அம்மா ஒருநாள் சொல்லும்போது அண்ணி, என்ன சொன்னாங்க தெரியுமா?” என சின்னவள் ஆதங்கத்தில் கேட்டாள். பரிதி என்னவென்பதாய் தமக்கையைப் பார்த்தான்.
“அம்மா, அப்பா இல்லைன்னு வருத்தம் இருந்தாலும் உங்களையும் மாமாவையும்தான் இப்போ அந்த இடத்துல வச்சுப் பார்க்குறேன் அத்தை. நீங்களா தொரத்தி விட்டா கூட உங்க புள்ளையும் நானும் இங்கதான் இருப்போம்னு சொன்னாங்க. எனக்கு அப்போல இருந்துதான் அண்ணியை ரொம்ப பிடிச்சது. நான் உன்கிட்ட, அம்மாகிட்டே எது கேட்டாலும் வாங்கித் தர மாட்ட. ஆனால், அண்ணிதான் எல்லாமே வாங்கித் தந்தாங்க. ஷீ இஸ் வெரி ஸ்வீட். நீ இப்படி பண்ணது ரொம்ப தப்பு!” என கீர்த்தனா அவனிடமே அவனைக் குறை படித்தாள்.
அவள் தலையைப் பிடித்து ஆட்டிய பரிதி, “எனக்கும்தான் உங்கண்ணி இல்லாம கஷ்டமா இருக்கு கீர்த்தி. எங்களுக்குள்ள சின்ன மிஸ்-அண்டர்ஸ்டாண்டிங். டிவோர்ஸ் எல்லாம் கோபத்துல எடுத்த முடிவு. மத்தபடி உங்கண்ணிதான் எப்பவும் இந்த வீட்டு மூத்த மருமகள். சீக்கிரமே அவளை சமாதானம் பண்ணிக் கூட்டிட்டு வரேன்!” என உத்திரவாதம் அளிக்கவும், கீர்த்தனாவின் முகம் மலர்ந்து போனது. அஜித்திற்கு அண்ணன் அண்ணிக்கிடையே நடக்கும் பிணக்கு தெரிந்தாலும், அவர்களாக சமாதானமாகிக் கொள்வார்கள் என எதிலும் அவன் தலையிட்டுக் கொள்ளவில்லை.
பரிதிக்கு இன்னும் நான்கு நாட்களில் விடுப்பு முடிவதால், லண்டன் செல்ல பயணச்சீட்டு முன்பதிவு செய்தான். சென்னை அல்லாது பெங்களூரிலிருந்து புறப்படும் விமானத்தை தெரிவு செய்தவன், “நான் என் பொண்டாட்டியைப் பார்த்துட்டு ஊருக்குப் போறேன்!” எனத் தாயிடம் சென்று நின்றான். சிந்தாமணி ஒப்புக் கொள்ளவே இல்லை. அவளை நீ தொந்தரவு செய்யக் கூடாது என கண்டிப்புடன் கூறிவிட்டார்.
“ம்மா... இதெல்லாம் அநியாயம். அவ என் பொண்டாட்டிம்மா. முதல்ல எனக்குத்தான் அவகிட்டே உரிமை இருக்கு. நான் போகத்தான் போறேன். அவ உனக்கு கால் பண்ணி கம்ப்ளைண்ட் பண்ணா என்னென்னு கேளு. மத்தபடி என்னைத் தடுக்காத!” என்றவன், தந்தையிடமும் சம்பிரதாயத்திற்காக உரைத்தான்.
“சிந்தாமணி, உன் மகன் அந்தப் புள்ளையை எதுவும் தொந்தரவு செஞ்சான்னு தெரிஞ்சது தொலைச்சுப்புடுவேன்!” என இவனிடம் கூறாமல் மனைவியிடம் அவர் சீற,
‘நாந்தான் இந்த வீட்ல பொறந்தேன். ஆனால் இப்போ அவதான் மக மாதிரி மாத்தி மாத்தி சப்போர்ட் பண்றாங்க என்னைப் பெத்த அம்மாப்பா!’ என முனகிக் கொண்டே பெங்களுர் பயணப்பட்டிருந்தான்.
கீர்த்தனா வேறு அவன் செல்லும் முன்னே அண்ணிக்கு அது பிடிக்கும், இது பிடிக்கும் என அவளே ஏதோ சமைத்துக் கொடுத்தாள். சீக்கிரமே அண்ணியை சமாதானம் செய்து அழைத்து வரும்படி அவள் தமையனிடம் கட்டளையிட, அவளிடம் தலையசைத்த பரிதி, ‘முன்னாடியே யோசிச்சு வச்சதுதான். பொண்டாட்டி கால்ல விழத் தயங்குறவன் எல்லாம் எதுக்கு கல்யாணம் பண்றான்? அதெல்லாம் கூச்சமே படக் கூடாது. படக்குன்னு விழுந்து எழுந்திரிக்கணும்!’ என்ற எண்ணத்தில் அங்கே சென்றிறங்கினான்.
தொடரும்...