• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,333
Reaction score
3,977
Points
113
நேரம் – 48 💜

“பரிதி... நீ எழுந்து சாப்பிட்டு படு. நான் போய் அற்புதாவையும், சரோவையும் பார்த்துட்டு வரேன்!” வாணி அவன் தோளை உலுக்கினாள். காலை ஒன்பது மணியாகியும் கூட பரிதி எழவில்லை.

சிந்தாமணி காலையில் அழைத்து மகன் எப்படியிருக்கிறான் என கேட்டறிந்தார். வாணி அவனை நன்றாகப் பார்த்துக் கொள்வாள் என இவர் அவர்களைத் தொந்தரவு செய்யவில்லை. ஆனாலும் அவரது உள்மனம் சின்னவர்கள் வாய் வார்த்தையாக உரைத்தாலும் கூட மனத்தளவில் பிரிய தயங்குகின்றனர் என கூறிற்று. அதனாலே அவர்களே சண்டையிட்டு தெளிந்து வரட்டும் என்றுவிட்டார். மார்த்தாண்டத்திற்கும் அதே எண்ணம்தான். அவர்களாக முடிவெடுக்கட்டும் என அமைதி காத்தார்.

அம்சாவிற்கு வாணியின் செய்கையில் சுத்தமாய் விருப்பமில்லை. பரிதி அப்படியொரு காரியத்தை செய்த பிறகு இவள் ஏன் அவனுக்கு சேவகம் செய்ய வேண்டும்? மீண்டும் அவனுடன் வாணியை சேர்த்து வைக்க அவர்களுக்கு துளியும் விருப்பமில்லை. அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தரவே விரும்பினார். அதுவும் மார்த்தாண்டமும் சிந்தாமணியும் அன்றைக்கு அமைதியாய் இருந்ததும், வாணி அவர்களுக்கு ஆதரவாகப் பேசியதும் இவருக்கு பெரும் உறுத்தலாகப் போயிற்று.

பரிதி வாணிக்கு ஆதரவாக பேசியது வேறு குடைந்தது. ஒருவேளை அவர்கள் மீண்டும் வாணியை அவ்வீட்டில் சேர்த்துக்கொள்ள எண்ணியே இப்படி நடக்கிறார்களோ என ஊகித்தவர், அப்படித்தான் என முடிவு செய்தார். அது மட்டும் நடக்க கூடாது. சட்டப்படி இருவரும் விவாகரத்துப் பெற்று விட்டார்கள். வாணிக்கு தங்கள் தகுதிக்கு ஏற்ப ஒருவனைப் பார்த்து மணம் முடித்து அவளை நன்றாக வாழ வைக்க வேண்டும் என மனத்தில் உறுதியாக எண்ணியவர், கணவரிடமும் அதைப் பற்றி பேசினார்.

“இல்ல அம்சா... ஏற்கனவே அவ இந்தப் பிரச்சனையால உடைஞ்சு யோய்ருக்கா. இப்போ போய் இரண்டாவது கல்யாணம்னு அவகிட்டே சொன்னா ஒத்துக்க மாட்டா. முதல்ல புள்ளைக்கு கொஞ்சம் டைம் கொடுப்பேன் அம்சா. அவ இந்த வாழ்க்கைலருந்து முழுசா வெளிய வரலை. அந்தப் பையன் பரிதி தப்பு பண்ணா கூட அவனை எங்கேயும் விட்டுத் தராம இருக்கா. அவ மனசுல என்ன ஓடுதுன்னு எதுவுமே புரியலை!” என்றார் யோசனையுடன்.

“அதாங்க நானும் சொல்றேன். முதல்ல அவளை அங்கப் போகக் கூடாதுன்னு சொல்லணும். இருந்தாலும் உங்க அக்கா மகளுக்கு ரொம்ப தைரியம்தான். ஊரைக் கூட்டிக் கல்யாணம் பண்ணிட்டு யாருக்கும் சொல்லாம டைவர்ஸ் பண்ணிருக்கா. உங்க அக்கா உயிரோட இருந்தா இதைக் கேட்டே அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கும். இந்தக் காலத்து பிள்ளைக ரொம்ப மோசம்.”

“நல்லவேளை, நான் பெத்தவ இந்தளவுக்கு இல்ல. நம்ப சொல்ற பையனைக் கட்டி நல்லா வாழுறா. அவ எதுவும் இப்படி பண்ணிருந்தா உரிச்சு உப்புக் கண்டம் போட்டிருப்பேன்!” நேற்றிலிருந்து காலைவரை அம்சா வாய் ஓயாமல் புலம்பிக் கொண்டே இருந்தார்.

அவரால் வாணியின் செய்கையை ஏற்கவே முடியவில்லை. அதெப்படி திருமணமான இந்தக் குறுகிய இடைவெளியிலே அவர்கள் விவாகரத்து என்னும் முடிவிற்கு வரலாம். அதுவும் பரிதி வேறொரு பெண்ணின் பின்னே செல்லலாம்? வாணிக்கு கேட்க யாருமில்லை என்று அவன் இவ்வாறு நடந்து கொண்டானா என அவன் மீது துவேஷம் வளர்த்தார்.

“என் மக தங்கம்... கல்யாணமான நாள்ல இருந்து இன்னைக்கு வர எந்தப் பஞ்சாயத்தையும் இழுத்துட்டு வந்ததில்லை. எல்லாரையும் அனுசரிச்சுப் போயிடுறா. இல்லைன்னா எனக்குத்தான் தலைவலி புள்ளையை ஒழுங்கா வளர்க்கலைன்னு!” என அவர் குரலை உயர்த்தியபடியே கணவருக்கு காலை உணவை பரிமாற,

“என்னம்மா... நான் இல்லாதப்போதான் என்னைப் பத்தி புகழ்ந்து பேசுவ போல?” எனக் கேலியாக கேட்டவாறே கைக்குழந்தையுடன் உள்ளே வந்தாள் அற்புதா.

அவளை எதிர்பாராத அம்சவல்லி, “ஏன்டி... புள்ளைக்கு உடம்பு முடியலைன்னு சொன்ன. இப்போ எதுக்கு அவனைத் தூக்கிட்டு அலையுற? ஃபோன் பண்ணா நானும் உங்கப்பாவும் வந்து பார்க்க மாட்டோமா?” என மகளைக் கடிந்தார்.

“ரெண்டு நாள் இங்க இருந்துட்டு போகலாம்னு வந்தேன்மா. இவன் ரொம்ப பாடாப்படுத்துறான். நைட்டெல்லாம் அழுதுட்டே இருக்கான். என்னால ஒத்தாளா பார்க்க முடியலை. என் மாமியார், மாமியார் ரூம்க்குள்ள போய் கதவை அடைச்சுக்கிட்டா காலைதான் எழுந்துக்குறாங்க. இவன் அழுதா கூட அந்தம்மா கண்டுக்க மாட்டுது. ஏதாவது கை வைத்தியம் பண்ணி இவன் அழுகையை நிறுத்தும்மா!” என்றாள் சோர்வுடன்.

சளி, இருமல் தொந்தரவு குழந்தைக்கு. மருத்துவரை சந்தித்து மருந்து மாத்திரைகள் கொடுத்தும் கூட அவன் அழுகை நின்றபாடில்லை. இரண்டு நாட்களாக அற்புதாவை எந்த வேலையும் செய்ய விடாமல் கையிலே வைத்திருக்கச் சொல்லி அழுது அடம்பிடித்தான். அவளால் இரவு தூங்கவே முடியவில்லை. தொட்டிலை ஆட்டிக்கொண்டே விழித்திருந்தாள். அதிலே சோர்ந்து போயிருக்க, தாய்வீடு வந்துவிட்டாள்.

வாணியிடம் பேச வேண்டும் என்பதும் மற்றொரு காரணம். நேற்று சரவணன் அழைத்து நடந்ததை கூறியதும், அவளுக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. வாணி வாயால் கேட்டால்தான் என்ன நடந்தது எனத் தெரியும் என்பதால் இங்கு வந்துவிட்டாள்.

“ஏன்டி... ரெண்டு நாள்ல புள்ளை இவ்ளோ இளைச்சுப் போய்ட்டானா? ஏன் உன் மாமியார் உன் புருஷனை வளர்த்தாங்க தானே? அவங்க கை வைத்தியம் பார்க்க மாட்டாங்களா?” எனக் கேட்ட அம்சா பேரனைத் தூக்கிக் கொஞ்சினார்.

பின்னர் அவன் அழுகையை நிறுத்துவதாக கூறி அகல, அற்புதா நேரே சரவணனிடம் சென்று நின்றாள். நேற்று என்னவானது என விளக்கமாக கேட்டறிந்தாள். காலையிலே வாணியை அழைத்து இங்கு வரச் சொல்லி பணித்திருந்தாள். அதனால்தான் அவளும் பரிதியை எழுப்பினாள்.

“ம்ப்ச்... எங்கப் போற வானு?” எனத் தெளிவில்லாத குரலில் கேட்டான் அவன். காய்ச்சல் குறைந்து போயிருந்தது. ஆனால் புண்கள் இன்னும் சரியாகவில்லை.

“அற்புதா கால் பண்ணி கூப்பிட்டா. நான் போய் பார்த்துட்டு வரேன். குக் பண்ணிட்டேன். நீயா சாப்பிட்டுக்குறீயா? இல்ல, நான் சாப்பாடு போட்டு எடுத்துட்டு வரவா?” என அவன் முகம் பார்த்து நின்றாள்.

“என்ன சமைச்ச?” எனக் கொட்டாவிவிட்டான் அவன்.

“மிளகு ரசமும், முட்டைப் பொரியலும் செஞ்சேன்!” அவள் கூற, இவன் முகத்தைச் சுளித்தான்.

“ரசமெல்லாம் மனுஷன் சாப்பிட்டுவானா வானு? காய்ச்சல் வந்து நாக்கெல்லாம் கசந்து போய்ருக்கேன். சிக்கன், மட்டன்னு ஏதாவது செஞ்சு தரலாமில்ல?” எனக் கேட்டவனை அவள் முறைத்துப் பார்த்தாள்.

“சரி.‌. சரி. விடு, நீ சாப்பிட்டீயா?” என விசாரித்து அவள் உண்டுவிட்டதை உறுதி செய்தவன், “நான் பார்த்துக்கிறேன். பட், அங்கேயே ஸ்டே பண்ணிடாத. நைட்டு வீட்டுக்கு வந்துடுவ இல்ல. டூ மினிட்ஸ் ப்ரெஷாகிட்டு வரேன். ஆயின்மெண்ட் மட்டும் போட்டு விடு...” என அவளை வேலை வாங்கிவிட்டே அனுப்பி வைத்தான்.

வாணி காமராஜ் வீட்டிற்குள் நுழைந்ததும் அற்புதாதான் அவளை வரவேற்றது. பெரியவர் வேலைக்குச் சென்றிருக்க, அம்சா குழந்தையைத் தன்னறையில் உறங்க வைக்க போயிருந்ததால், இவளைக் கவனிக்கவில்லை.

“வா வாணி...” என்ற அற்புதாவின் பின்னே அவளது அறைக்குச் சென்றவள், “குட்டிப் பையன் எங்க அற்பி?” என ஆர்வத்துடன் கேட்டாள். என்னவோ அவனைக் கையில் தூக்கி முத்தமிட்டு கொஞ்சும்போது மற்ற எல்லாம் மறந்து போய்விடுகிறது. அவனே சிந்தையை ஆக்கிரமிப்பு செய்துவிடுகிறான். ஆழ்மனத்தில் குழந்தைக்கான ஏக்கம் புதைந்து கிடந்ததை, தனக்குள்ளே இன்னும் புதைத்துக் கொண்டாள்.

“அவன் அம்மாகிட்டே இருக்கான். ரெண்டு நாளா உடம்பு முடியலை அவனுக்கு. அதான் தூக்கிட்டு இங்க வந்தேன்!” அற்புதா உரைத்ததும், வாணியின் முகத்தில் கவலைப் படர்ந்தது.

“என்னாச்சு அற்பி? சொல்லவே இல்ல நீ. இப்போ அவன் எப்படி இருக்கான்? நான் பார்த்துட்டு வரேன்!” என இவள் நகரச் செல்ல,

“குழந்தையே பிடிக்காதுன்னு பெத்துக்க வேண்டாமுன்னு முடிவெடுத்தவ, என் புள்ளைக்கு உடம்பு முடியலைன்னதும் ஏன் இவ்ளோ கவலைப்பட்ற?” என நக்கலாக கேட்டாள் மற்றவள். அதில் வாணியின் முகம் மாறிற்று.

தன்னை சமாளித்தவள், “குழந்தையைப் பிடிக்கலைன்னு நான் சொல்லவே இல்ல அற்பி. பொறுப்பா குழந்தையைப் பார்த்துக்க முடியாதுன்னுதான் நான் வேணாம்னு சொன்னேன். மத்தபடி எனக்கு குழந்தைன்னா ரொம்ப பிடிக்கும்!” என்றாள் முறுவலித்து.

“சரி... சரி. என்னமோ கதை சொல்ற. அதெல்லாம் நாங்க நம்பித்தானே ஆகணும்!” என்றாள் நக்கலாக.

வாணி எந்த உணர்ச்சியையும் காண்பிக்காதவள், “நான் போய் விதுகுட்டியைப் பார்த்துட்டு வரேன்!” என அகலப் பார்த்தாள்.

அவளது கையைக் கெட்டியாகப் பிடித்த அற்புதா, “அவன் இப்போதான் தூங்குனான். எழுந்ததும் நீ தூக்கி கொஞ்சிக்கோ!” என இருக்கையை இழுத்துப் போட்டு வலுக்கட்டாயமாக அவளை அமர வைத்தாள்.

“சரி சொல்லு... சரோ ஏதோ கதை சொன்னான். எனக்கு சரியா புரியலை. நீயே விம் போட்டு விளக்குனா நல்லாருக்கும்!” அற்புதா இவளை ஊன்றிப்‌ பார்த்துக் கேட்க, அவள் பார்வையை சந்திக்க தயங்கிய வாணி தலையைக் குனிந்தாள்.

“அதான் அவனே சொல்லிருப்பானே அற்பி. மறுபடியும் அதைப் பத்தி பேச எனக்கு விரும்மில்லை!” அந்தப் பேச்சைத் தட்டிவிட முயன்றாள்.

“அட... அவன் அரைகுறையா சொன்னான் வாணி. நீ என்ன பண்ற, நீங்க ரெண்டு பேரும் லண்டன் போனதுலருந்து இங்க வந்த வரைக்கும் டாப் டூ பாட்டம் சொல்லி முடி. அப்போதானே நான்‌ யார் மேல தப்புன்னு ஒரு முடிவுக்கு வர முடியும்!” என்றாள் எள்ளலாக. வாணி முடியாது என்பதாகப் பார்த்தாள்.

“என்ன... சொன்ன பொய்யை மாத்தி எதுவும் உளறிடுவோமோன்னு பயமா மேடத்துக்கு? ஹம்ம்?” அற்புதா வாணியின் முகத்தைக் கண்களால் மேய்ந்தபடியே கேட்க, அவளிடம் கனத்த அமைதி.

பின்னர் ஒரு நெடிய மூச்சுடன்‌ நிமிர்ந்தவள், “எதுக்குப் பொய் சொல்லணும் நான்? நடந்ததைதான் சொன்னேன் அற்பி. எனக்கும் அவனுக்கும் செட்டாகலை. சோ, டைவர்ஸ் வாங்கிட்டோம்!” என்றாள் தெளிவான குரலில்.

“பார்ரா... பொய்யைக் கூட கான்பிடன்ஸா சொல்றா வாணி. எங்க கத்துக்கிட்ட நீ? ஹம்ம்.. முன்னாடிலாம் ஒரு பொய் சொல்ல அவ்ளோ யோசிப்ப. இப்ப பேசுறதெல்லாம் பொய்தான். ஏன் இப்படி உன்னையும் ஏமாத்தி மத்தவங்களையும் ஏமாத்துற? அம்மா, அப்பா வேணா நீ சொல்றதை நம்பலாம். பட், எங்ககிட்டே உன்னால நடிக்க முடியாது. உண்மையை சொல்லு வாணி!” அற்புதா அதட்ட,

“அற்பி... நிஜமான நான் பொய் சொல்லலை!” வாணி பலகீனமான குரலில் மறுதலித்தாள்.

“என்னைவிட மூத்தவளா இருந்தாலும் பரவாயில்லைன்னு கன்னத்துலயே அப்பிடுவேன். ஒழுங்கா என்ன நடந்துச்சுன்னு உண்மையை சொல்லு. இந்தம்மா குழந்தை வேணாம்னு சொல்வாங்களாம். அவன் வேற பொண்ணைப் பார்ப்பானாம். இதைக் கேட்க நான் என்ன காதுல பூ சுத்திட்டு இருக்கேனா? ஆரம்பத்துலருந்தே எனக்கு சின்னதா ஒரு டவுட். சரி, நம்மதான் தப்பா நினைக்கிறோமோன்னு நினைச்சு விட்டுட்டேன். நீயும் பரிதியும் ஏன் தனித்தனியா படுக்குறீங்க? உன் ரூம்ல எக்ஸ்ட்ரா மேட்ரஸ் எதுக்கு?” என அவளை உறுத்து விழித்தாள் அற்புதா.

அந்தக் கேள்வியில் சங்கடப்பட்ட வாணி, “அது எங்கப் பெர்சனல்!” என்றாள் கண்டனத்துடன்.

“ரூம்க்குள்ளே இருக்கவரைதான் பெர்சனல். வெளிய வந்துட்டா நாங்க கேட்போம். ரொம்ப பெர்சனலா ஒன்னு கேட்குறேன்.‌ அவனுக்கு ஏதாவது ஹெல்த் இஷ்ஷூவா? உனக்கு...ஐ மீன் நான் கேட்க வர்றது புரியுதா?” எனத் தயங்கினாள்‌. வாணி‌ சட்டென முகத்தைச் சுளித்து இல்லையனெ பலமாகத் தலையை அசைத்து மறுத்தாள்.

“அப்பறம் என்னத்துக்கு எல்லாரோட உசுரையும் வாங்குறீங்க? பிரிஞ்சு போற ஆளும் மூஞ்சியும் பாரு. காலைல எழுந்திரிச்சு அவனுக்கு சோத்தை ஆக்கி வச்சுட்டு வந்திருக்க தானே நீ?” என சலித்தாள் சின்னவள். வாணி வாயையே திறக்கவில்லை. படக்கென அறைக்கதவை திறந்து உள்ளே வந்த சரவணன் அவளை முறைத்துக் கொண்டே தமக்கை அருகே அமர்ந்தான்.

“நீயா ஒழுங்கா சொல்லிடு வாணி. இல்லைன்னா உன் எக்ஸ் புருஷனை நாலு உதை உதைச்சு உண்மையை வாங்க வேண்டி வரும்!” என அவன் கையை முறுக்க, வாணி அவனைக் கண்டனமாகப் பார்த்தாள்.

“இந்த முறைப்பெல்லாம் வேணாம். எங்களுக்குத் தேவை உண்மை. பொய்யா ஏதாவது கதை சொல்லலாம்னு யோசிக்காம ஒழுங்கா என்ன நடந்ததுச்சுன்னு மறைக்காம சொல்ற.‌ இல்ல, இன்னையோட உனக்கும் எங்களுக்குமான ரிலேஷன்ஷிப்பை முடிச்சுக்குவோம்!” என அற்புதா அதட்ட, சரவணனும் அதை ஆமோதிப்பதாகத் தலையை அசைத்தான். வாணி இதற்கு மேலும் மறைக்க முடியாது என்றெண்ணி, தன் நீண்ட மௌனத்தைக் கலைத்தாள்.

“எங்களோடது உண்மையான மேரேஜ் இல்ல!” என்றவளை இருவரும் புரியாது பார்த்தனர். மெல்லிய குரலில் ஆதி முதல் அந்தம் வரை வாணி நடந்ததைப் ஒப்பிபித்து முடித்ததும், அற்புதா சட்டென அவள் கன்னத்திலே ஓங்கி அறைந்திருந்தாள்.

“அறிவிருக்கா டீ உனக்கு? எதெதுல விளையாடுறதுன்னு விவஸ்தையே கிடையாதா? மேரேஜ்னா உனக்கு அவ்ளோ ஈஸியா போச்சா? நிஜமா உன்கிட்டேருந்து இதை நான் எதிர்பார்க்கலை வாணி. நீதான் எங்களுக்கு மூத்தவ, பொறுப்பானவ. இப்போ வரைக்கும் அப்படித்தான் இருந்த. ஆனால், இந்த விஷயத்துல மட்டும் ஏன்டி கிறுக்குத்தனமா நடந்துருக்க?” என ஆற்றாமையுடன் அவள் முதுகில் இரண்டு அடி வைத்தாள்.

சரவணன் அதிர்ச்சியிலிருந்து வெளி வரவில்லை. இப்படியெல்லாம் ஒப்பந்த திருமணம் செய்வார்களா என அவன் திகைத்துப் போனான். அறிவை அடகு வைத்தவர்களால் மட்டும்தான் இப்படி யோசிக்க முடியும்‌ என பற்களை நறநறத்தவன், எங்கே வாணியின் மீது கை நீட்டி விடுவோமோ என்றெண்ணி விறுவிறுவென வெளியேறினான்.

அற்புதா மனம் ஆறும்வரை அவளைத் திட்டித் தீர்த்துவிட்டாள். இப்படி உன் வாழ்க்கையை நீயே பாழாக்கி விட்டீயே என ஆற்றாமையுடன் கத்தியவள், “என் முகத்துலயே முழிக்காத வாணி. நான் வேற ஏதோ பிரச்சனையா‌ இருக்கும்னு நினைச்சேன். பட், இப்படின்னு கற்பனை கூட பண்ணலை!” எனக் கடுப்புடன் எழுந்தாள்.

“அற்பி... அத்தை, மாமாவுக்கு இந்த விஷயம் தெரிய வேணாம்!” வாணி தயங்க,

“ஆமா...இவ செஞ்ச விஷயத்தை எல்லார்கிட்டயும் சொல்லிப் பெருமைப்பட போறேன் நானு. எதுவும் பேசுன, சாவடிச்சுடுவேன் வாணி...” என சீறிவிட்டுப் போனாள்.

சிறிது நேரம் அறையிலே அமர்ந்திருந்த வாணி, பின்னர் எழுந்து வெளியே சென்றாள். அம்சா அவளைப் பார்த்ததும் எப்போது வந்தாள் என விசாரித்தவர், சாப்பிடுமாறு கூறினார். இவள் மறுத்துவிட்டாள். அவரிடம் இயல்பு தொலைந்து போயிருந்தது. என்னவோ ஒரு விலகல் தெரிய, வாணிக்கு மனம் சுணங்கிற்று.

விதுரன் அழும் சப்தம் கேட்டதும் இவள் அவனைத் தூக்க சென்றுப் பின்னர் தயங்கி அற்புதாவின் முகம் பார்க்க, “போ!” என அவள் கோபத்தோடு கூற, சட்டென சென்று குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்து தட்டிக் கொடுத்தாள். அவன் அழுகை மெதுவாய் குறைந்தது. படுக்கையில் சிறுநீர் கழித்ததால் அவன் அழுதிருக்கிறான் என உணர்ந்தவள், அவனுக்கு உடை மாற்றிவிட்டாள். பின்னர் அம்சா சாதத்தை குழைத்தை எடுத்து வர, தானே ஊட்டிவிட்டாள். அற்புதா தன்னை முறைப்பது தெரிந்தாலும் நிமிரவில்லை.

காமராஜ் வந்ததும் அவரைப் பார்த்துவிட்டு வாணி கிளம்ப யத்தனிக்க, “கைப்புள்ளையவா வீட்ல விட்டுட்டு வந்திருக்க? ஆறு மணியானதும் கிளம்புறேன்னு சொல்ற?” என அற்புதா நக்கலாக கேட்க, வாணி எதுவும் பேசாமல் கிளம்பினாள். ஆனாலும் அவள் முகத்தில் வருத்தம், கோபமுமிருந்தது.

அவள் வந்ததும் பரிதி அவளுக்கு தேநீர் தர, “இப்போ என்ன புதுசா அக்கறை உனக்கு? ரெண்டு வருஷம் கூட இருந்தேனே? பச்ச தண்ணீ குடிக்க குடுத்துருக்கீயா நீ?” என அவனிடம் சீறினாள். பரிதிக்கு அவள் கோபமாக இருக்கிறாள் எனப் புரிந்தது. ஆனால் யார் மீது, எதன்‌‌ மீது எனத் தெரியாமல் விழித்து அகன்றான். மறுநாளும் அவள் முகம் தெளியவில்லை.

“அண்ணி... அம்மா எலும்பு சூப் அண்ணனுக்கு கொடுத்தாங்க!” என கீர்த்தனாவும் அஜித்தும் வந்து சற்று நேரம் பேசிவிட்டு சென்றதும், வாணி இயல்பிற்குத் திரும்பினாள். பின்னர் அற்புதாவும் சரவணனனும் வந்துவிட, அவர்களை எதிர்பாராமல் திகைத்தாள்.

“விதுவைப் பார்த்துக்கோ நீ. அவன்கிட்ட எங்களுக்குப் பேச வேண்டியிருக்கு!” என வந்ததும் வராததுமாய் பரிதியை அவர்கள் கையோடு அழைத்துக்கொண்டு அறைக்குள் நுழைய, இவள் கலவரமான முகத்தோடு அவர்களைத் தடுத்தாள்.

“ட்ராமா புருஷன்தானே அவன். என்னமோ உண்மையா புருஷன் மாதிரி சீன் போடுற?” என அற்புதா கதவை அடித்துச் சாற்ற, சரவணன் கோபத்தோடு பரிதியை பார்த்தான்.

அற்புதா பேச்சிலே அவர்களுக்கு உண்மை தெரிந்துவிட்டதை உணர்ந்த‌ பரிதி, “என்ன டா... எதுக்கு இப்போ முறைக்கிற? காபியை தட்டி விட்டப்பவே உன் மூஞ்சில ஒன்னு விட்டுருக்கணும். அப்போ உடம்புல ஸ்ட்ரெந்த் இல்ல எனக்கு!” என சிடுசிடுத்தான்.

“அடிப்படா அடிப்ப... உன் கையை ஒடிக்கிறதுக்குத்தான் நான் வந்திருக்கேன்!” என்ற அற்புதா காயமில்லாத இடத்தில் வலிக்குமாறு நான்கு அடிகளைக் கொடுத்தாள்.

வலி தாங்காமல் அலறியவன், “ரெண்டு பேரும்தான தப்பு பண்ணோம்.‌ என்னை மட்டும் ரூம்க்குள்ளே கூட்டிட்டு வந்து அடிக்கிறது நியாயமே இல்ல அற்பி!” என பரிதி புகார் வாசித்தான்.

“நேத்தே அவளுக்கு கொடுத்துட்டேன். இன்னைக்கு உனக்கு... ஹம்ம். எவ்ளோ நெஞ்சழுத்தம் உங்களுக்கு? மேரேஜ்னா அவ்ளோ ஈஸியா போச்சா? நைட்டெல்லாம் எனக்குத் தூக்கமே வரலை டா. அவதான் கேட்டான்னா புடணில அடிச்சு அனுப்புறதை விட்டுட்டு நீயும் சரின்னு சொல்லிருக்க? உங்களுக்கெல்லாம் புத்தியே கிடையாதா?” எனக் கேட்டு அவனையும் ஒரு வழி செய்தாள்.

“போதும் அற்பி... இதுக்கும் மேல என் உடம்பு தாங்காது. அதான் நாங்க பண்ணத் தப்பை சரி பண்ண போறோமே. அப்புறம் என்ன? ரியலைஸ் பண்ணிட்டோம்!” அவன் கடுப்புடன் கூறினான்.

“என்னத்த சரி பண்ணி கிழிப்ப? உனக்குத்தான் அங்க எவளோ மதுன்னு இருக்காளாமே. நீ அவளை கட்டிக்கிட்டு அப்படியே லண்டன்ல செட்டிலாகிடுவ. இங்க இவ தனியா கிடந்து சாகணுமா?” என சினந்தான் சரவணன்.

“டேய்... நான் உங்ககிட்டே வந்து சொன்னேனா மதியைக் கல்யாணம் பண்ண போறேன்னு. அவ எப்பவோ என் லைஃபை விட்டுப் போய்ட்டா. இப்போ அவகூட எந்தக் காண்டாக்டும் கிடையாது. அது ஏதோ அப்பியரன்ஸ் பார்த்து அவ மேல அட்ராக்சன் வந்துச்சு. பட் எனக்கும் அவளுக்கும் செட்டாகலை. நாங்க பிரிஞ்சுட்டோம். எனக்கு வாணிதான் பொருத்தமா இருப்பானு செருப்பால அடிச்ச மாதிரி உறைச்சனாலதான் நான் அவ கால்ல விழாத குறையா என்னை ஏத்துக்க சொல்றேன். அவதான் வேணா வேணான்னு நோகடிக்கிறா?” என்றான் சலிப்பும் கோபமுமாக.

“ஓஹோ... உனக்கு அவ வேணாம்னு வாணிகிட்டே வந்திருக்க. இதுவே அந்தப் பொண்ணு செட்டாகியிருந்தா இவளைத் திரும்பிக் கூடப் பார்த்திருக்க மாட்டல்ல?” சரவணன் குரலில் கோபம் தெறித்தது.

“ப்ம்ச்... இதுக்கு நான் பொய் சொல்ல விரும்பலை டா. ஒருவேளை மதிளோட எனக்கு செட்டாகியிருந்தா நான் வாணியைப் பத்தி யோசிச்சிருக்க மாட்டேன்தான். அதான் உண்மை. பட், ஒன் திங்க். நான் வாணியை ஏமாத்தலை, பொய் சொல்லலை‌. அக்ரீமெண்ட் போடும்போதே ரெண்டு பேரும் லீகலா பிரியுறோம்னு சொல்லித்தான் இந்த ரிலேஷன்ஸிப்க்குள்ளே வந்தோம். பட், ஏதேதோ ஆகிப் போச்சு!” என்றான் உண்மையை மறைக்காமல். சரவணனால் எதுவும் பேச முடியவில்லை. அவன் கூறியது உண்மைதானே? வாணிதான் ஆரம்ப புள்ளி. அவளை விட்டுவிட்டு இவனை சாடுவது தவறு எனப் பல்லைக் கடித்தான்.

“நடந்தது நடந்து போச்சு பரிதி. பைனலா என்ன டிஷிஷன் எடுத்திருக்க நீ? வாணியை உண்மையா உனக்குப் பிடிச்சிருக்கா? இல்லை மறுபடியும் பொய் சொல்லி அவ வாழ்க்கையைக் கெடுக்கப் பார்க்குறீயா? அப்படியொரு எண்ணம் இருந்தா தயவு செஞ்சு அவளை விட்ரு. எங்கம்மா அவளுக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்துக் கட்டி வைக்க ரெடியா இருக்காங்க!” என அற்புதா கூறியதும், அவன் வெடுக்கென எழுந்தான்.

“யார் பொண்டாட்டிக்கு யார் மாப்பிள்ளை பார்க்குறது? அவ என் வாணி அற்பி. இதுவரைக்கும் நாங்க பண்ணது தப்பா இருக்கலாம். பட், வாணிதான் என் பொண்டாட்டி. அதுல எந்த மாற்றமும் இல்ல. டைவர்ஸ் பேப்பரை நான் கிழிச்சு போட்டுட்டேன். அவ இல்லாம என்னால இருக்க முடியாது. இப்போதைக்கு அவ கொஞ்சம் கன்ப்யூஸ்டா இருக்கா. கொஞ்சம் ஸ்பேஸ் கொடுக்கலாம்னு தான் யோசிச்சு நேத்து எல்லார்கிட்டயும் அப்படி சொன்னேன். மத்தபடி ஐ நீட் ஹெர் ஃபார் மை என்டயர் லைஃப்!” என்றான் உறுதியான குரலில்.

“பரிதி‌... நீ உண்மையை தானே சொல்ற? பொய்யில்ல தானே?” அற்புதா சந்தேகத்தோடு கேட்க, அவளை முறைத்தவன்,

“அப்படியே அவளை மாதிரியே இரு நீயும். நான் உண்மையைத்தான் சொல்றேன் அற்பி. எனக்கு வாணி வேணும் அட் எனி காஸ்ட். அவளை நான் யாருக்கும் விட்டுத்தர ரெடியா இல்ல. நான் செல்ஃபிஷ்தான். வாணி விஷயத்துல பெரிய செல்ஃபிஷா இருந்துட்டுப் போறேன். யூ க்நோ ஒன் திங்க், ஷீ லவ்ட்‌ மீ மோர் தன் ஐ லவ்ட் ஹெர். அவளுக்கு என் மேல கோபம். அதான் வீம்பா இருக்கா. பட், என்னோட வாழ்ந்தாதான் அவ சந்தோஷமா நிம்மதியா இருப்பா.‌ எனக்கும் என் வாணிதான் வேணும்!” என்றான் உணர்ந்து உளமார. அற்புதாவின் முகம் தெளிந்தது.

“சரி... நீ சொல்றதும் கரெக்ட். அவ பெங்களூர் போகட்டும். நீ அவளை டிஸ்டர்ப் பண்ணாத‌. கிவ் ஹெர் சம் ஸ்பேஸ்!” என்றாள் நிம்மதியுடன்.

“அற்பி...‌ நீ போய் வாணிக்கிட்டே பேசு‌. ப்ரோவோட எனக்கு கொஞ்சம் பெர்சனல் டீலிங்!” சரவணன் கூறியதும், அவன் சட்டையைப் பிடித்தாள் தமக்கை.

“இப்போதான் டா ஒரு பஞ்சாயத்து தீர்ந்திருக்கு. நீ மறுபடியும் ஆரம்பிக்காத. கையையும் வாயையும் வச்சுட்டு சும்மா இரு. எப்படினாலும் அவங்க ரெண்டு பேர் சண்டை போட்டு சமாதானமாகட்டும்!” என அவனைக் கையோடு அழைத்துச் சென்றாள்.

வாணி விதுவை மடியில் போட்டுத் தட்டிக் கொடுத்தாள். அவன் அப்போதுதான் கண்ணயர்ந்தான். இவளின் பார்வை கவலையோடு மூடிய அறைக் கதவில் படிந்து மீள, அற்புதவும் சரவணனும் வெளியே வந்தனர். அவர்கள் பின்னே அவசரமாக பார்வையை ஓட்டினாள்.

“யம்மா வாணி... உன் ட்ராமா புருஷன் நல்லாதான் இருக்கான்!” என கேலி செய்த அற்புதா குழந்தையைத் தூக்கிக்கொண்டு விடை பெறுவதாக கூற, இவள் மாலை போகுமாறு கூறினாள்.

“இல்ல வாணி. என் மாமியாருக்கு பேரனைப் பார்க்காம நாள் போகலையாம். அங்கப் போகத்தான் கிளம்புனேன். சரி முதல்ல உன் பிராப்ளத்தை தீர்க்கலாம்னு வந்தேன்!” என்றவள் கிளம்பினாள். சரவணன் இருவரையும் முறைத்துவிட்டுத்தான் சென்றான். வாணி இப்போது பரிதியின் முகம் பார்த்தாள்.

“ஒன்னும் இல்ல வானு. அவங்க சும்மா நடந்ததை கேட்டாங்க. அவ்ளோதான்!” என மழுப்பிவிட்டான் இவன். அவள் அதை நம்பவில்லை.

மறுநாள் இரவு பெங்களூர் பயணப்பட்டாள் இசைவாணி. வீட்டிலிருந்து வேலை செய்ய அவள் கேட்ட அனுமதி மறுக்கப்பட்டிருக்க, இதற்கு மேலும் விடுப்பு கிடைக்காது என்பதால் கிளம்பிவிட்டாள். பரிதியின் உடல்நிலை தேறியதால், அவன்தான் அவளை பேருந்தில் ஏற்றிவிடச் சென்றான்.

“அண்ணி... தக்காளி தொக்கும், பூண்டு ஊறுகாயும் அம்மா கொடுத்துவிட்டாங்க!” எனக் கிளம்பும் தருவாயில் அவளது பையில் இரண்டு டப்பாக்களை அடைத்துவிட்டுப் போனாள் கீர்த்தனா. வாணிக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. யோசனையுடன் கிளம்பினாள். அப்படியே மார்த்தாண்டத்திடமும் தலையசைத்து விடை பெற்றாள். அவர் மகனையும் மருமகளையும் புரியாது பார்த்திருந்தார்.

“பத்திரமா போ வாணி. போனதும் எனக்கு மெசேஜ் போடு!” பேருந்தில் அவளது இருக்கை அருகே நின்று பரிதி கூற, அவள் வெறுமனே தலையை அசைத்தாள்.

சில நொடிகள் தயங்கிய பரிதி, “வானு, நான் ஒன்னு சொன்னா கோச்சுக்க கூடாது!” என்றவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

“இந்த விக்கி‌ பரதேசி கூட உன் ஃப்ரெண்ட்ஷிப்பை கட் பண்ணிடு வானு. அவன் என்னை ரொம்ப வெறுப்பேத்துறான். டென்ஷன் பண்றான். என்னால கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியலை!” என்றான் கடுப்புடன்.

வாணி அவனை மேலிருந்து கீழாகப் பார்த்தவள், “நீயெல்லாம் திருந்தவே மாட்டல்ல?” எனக் கேட்டாள்.

“ஏன்... நான் என்ன தப்பு பண்ணேன்‌ திருந்த. நான் சரியாத்தான் இருக்கேன்!” என அவளை முறைத்துவிட்டு விறுவிறுவென வெளியேறி தன் இருசக்கர வாகனத்தை முடுக்கினான். வாணியின் பார்வை அவன் முதுகைத் துளைக்க, பிடரியைக் கோதியபடியே பெருமூச்சுடன் அவளைத் திரும்பிப் பார்த்தான். படக்கென தலையை உள்ளிழுத்துக் கொண்டாள் அவள். ஆனாலும் அவள் மு
கத்தில், கண்களில் என‌ இவன் பார்வை படர்ந்து விலகிற்று.

‘இந்தப் பொண்ணுங்களை புரிஞ்சுக்க கடவுளால கூட முடியாதுப்பா!’ என முணுமுணுப்புடன் அவன் அகன்றான்.

தொடரும்...

 
Well-known member
Messages
612
Reaction score
421
Points
63
அப்பாடா அட்லீஸ்ட் அற்புதா, சரவணன் கிட்ட உண்மைய சொன்னான்
 
Top