• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,333
Reaction score
3,977
Points
113
நேரம் – 46 💜

“என்னம்மா... எதுக்கு அவசரமா கூப்பிட்ட?” பரிதி நுழைந்ததுமே வாணியின் முகத்தைப் பார்த்துவிட்டு, தாயிடம் யோசனையுடன் கேட்டான்.

“உன் தங்கச்சி ரூம்ல இருக்கா. அவளை இங்க வர சொல்லிட்டு நீ போ. நான் வரேன்!” என அவர் கூறியதும் கீர்த்தனாவை வெளியே அனுப்பிவிட்டு சிந்தாமணி தன்னிடம் ஏதோ பேச நினைக்கிறார் என்ற யோசனையுடன் அவர் சொன்னதை செய்தான் மகன்.

வாணி தவிப்புடன் அவர் கையைப் பற்றினாள். “அத்தை... ப்ளீஸ்... வேணாம்!” என இறைஞ்சலுடன் அவரைப் பார்த்தாள். நடந்தவற்றில் பாதியை மென்று முழுங்கி அவள் உரைத்திருக்கிறாள் என்ற குற்றவுணர்வு மேலெழும்பி நின்றது. அதனாலே வந்தவுடன், பரிதியிடம் அவள் கண்ணைக் காண்பிக்க, அவன் துர்திஷ்டவசமாக அதைப் பார்க்காமல் சென்றுவிட்டான்.
மருமகள் கையை உதறிவிட்டு பெரியவர் நடக்க, கீர்த்தனா மலங்க மலங்க விழித்தாள்.

“அண்ணி... என்னாச்சு?” அவள் வாணியிடம் கேட்க, பெரியவள் பதிலுரைக்காது மூடியக் கதவையே தவிப்புடன் பார்த்தாள்.

“என்ன பேசணும்மா?” பரிதி கேட்டதும் சிந்தாமணி கையிலிருந்த விளக்குமாறால் அவனை அடி வெளுக்கத் தொடங்கினார்.

“ஏன்டா நாயே! மத்த ரெண்டு புள்ளைங்க மாதிரி உன்னையும் ஒழுக்கமாகதானே வளர்த்தேன்? ஹம்ம்... கண்ணுக்கு லட்சணமா பொண்டாட்டி இருக்கும்போது உனக்கு இன்னொரு பொண்ணுக் கேட்குதா? எவளோ ஒருத்தி பின்னாடி சுத்திருக்க? உங்கப்பா ராமர்டா. ஆனால் நீ... எப்படி என் வயித்துல வந்து பொறந்த? வெளிநாடு போய் கொஞ்சம் காசு சம்பாரிச்சதும் கட்டுன பொண்டாட்டி கசந்துட்டாளோ? உன்னைப் பெத்ததுக்கு பெறாமலே இருந்திருக்கலாம்னு தோண வச்சுட்டடா. பெத்த வயிறு எரியுது எனக்கு. நம்பி வந்த பொண்ணை கைவிடாம பார்த்துக்கிறவன்தான் டா உண்மையான ஆம்பளை. கருமம்... வெள்ளைத் தோளைப் பார்த்ததும் புத்தி மாறிடுச்சா உனக்கு!” என அவர் கண்மண் தெரியாமல் பரிதியை அடி வெளுக்க, அவன் அவர் பேச்சில் அதிர்ந்து, பின்னர் வலி தாங்காமல் கத்தி கதறத் தொடங்கினான். புதிய விளக்குமாறு குச்சியின் கூர்மையான நுனி ஒவ்வொன்றும் அவனைக் குத்திக் கிழித்தன.

“ஐயோ... அம்மா வலிக்குதும்மா. வேணாம்மா. ப்ளீஸ்மா!” என அவன் அலறல் கேட்டதும்,

“ம்மா... என்னம்மா பண்ற நீ? கதவைத் தொற. உனக்கெல்லாம் மனசாட்சி இருக்கா இல்லையா? பெத்த புள்ளையை யாராவது இப்படி போட்டு அடிப்பாங்களா? ராட்சசி மாதிரி நடக்காதம்மா. கதவைத் தொறம்மா!” கீர்த்தனாவிற்கு கண்ணிலிருந்து கண்ணீர் பொலபொலவென வடிந்தது. அவன் கதறல் வாணியின் நெஞ்சைப் போட்டு உலுக்க, அவள் விழிகளும் கலங்கின. அவசர அவசரமாக அறைக்குள்ளே நுழைந்து மாற்றுச் சாவியைத் தேடியெடுத்தவள், அறையைத் திறந்து உள்ளே நுழைந்தாள்.

சிந்தாமணி இவளைக் கவனிக்கும் மனநிலையில் இல்லை. மகன் செய்த செயலே அவரது மூளையை ஸ்தம்பிக்கச் செய்தது. அதனாலே ஆத்திரம் தீரும்வரை அவனை காயப்படுத்தினார்.

“அத்தை... போதும் நிறுத்துங்க!” வாணி இடையில் புகுந்ததை அவர் கவனிக்காமல் அவளையும் அடித்துவிட, “ஆ...” என அவள் அலறிவிட்டாள் அவள்.

பரிதி படக்கென அவள் வயிற்றோடு பிடித்து தன்னோடு இறுக்கி அணைத்துப் பின்னே கொண்டு வந்தவன், “ம்மா... அவளை ஏன்‌மா அடிக்கிற” என்றான் கத்தலாய். அதில்தான் சிந்தாமணி சுயம் பெற்றார்.
அவனை உக்கிரமாகப்‌ பார்த்தவர், கையை ஓங்க வர, வாணி முன்னே வந்துவிட்டாள்.

“அத்தை... போதும். விடுங்க!” என்றாள் கண்கலங்க. இரண்டு அடிக்கே அவளது கழுத்து கை என சிவந்து தடித்துவிட, பரிதிக்கு உடலே காயமானது. அவளுக்கு மனம்‌ பதறிற்று.

“வெளியப் போ வாணி முதல்ல. அவனை என் ஆத்திரம் தீர அடிச்சிக்கிறேன். அவன் பண்ணது சின்ன தப்பா? முன்னாடியே சொல்லிருந்தா அவன் காலை உடைச்சு வீட்டோட போட்டிருப்பேன். அப்புறம் எப்படி இன்னோரு பொண்ணு பின்னாடி‌ போய்ருப்பான்!” அவர் சினத்துடன் சீற, கீர்த்தனா அதிர்ச்சியுடன் பெரியவர்களைப் பார்த்திருந்தாள்.

“அத்தை... அவர் மேல மட்டும் தப்பில்ல. நானும் தான் தப்பு பண்ணிருக்கேன். ஆமா, நாங்க பிடிச்சுப்‌ போய்தான் கல்யாணம் பண்ணோம். ஆனால்... இப்போ எங்களுக்கு இடையில ஒத்து வரலை. அதான் பிரிஞ்சுடலாம்னு முடிவெடுத்தோம். நீங்க கட்டாயப்படுத்தி அவரை என்னோட வாழ வச்சாலும் எனக்கு அதுல விருப்பமில்ல. உங்கப் பையன் மதியோட முறையா கல்யாணம் பண்ணி வாழத்தான் ஆசைப்படுறாரு. இதுக்கும் மேல என் முன்னாடி நீங்க அவரை அடிக்க கூடாது!” என்றாள் அழுத்தமாய்.

“என்ன பேசுற வாணி நீ? நீங்களே பிரியுறதுன்னு முடிவெடுத்திட்டா எல்லாம் சரியாகிடுமா? உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்ச எங்ககிட்ட எதையும் சொல்லாம உங்க இஷ்டத்துக்கு வாழுவீங்கன்னா, அப்புறம் குடும்பம், உறவுன்னு நாங்க எதுக்கு இருக்கோம்? அவன் பண்ண தப்பை தட்டிக் கேட்பேன்னு பார்த்தா நீ அவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வர. ஆரம்பத்துலயே நீ கண்டிச்சிருந்தா அவன் ஏன் இப்படி போய்ருக்கப் போறான். அவன் இவ்வளோ தூரம் வந்ததுக்கு நீயுந்தான் காரணம்!” இவளிடம் அவர் பாய்ந்தார்.

தாயும் தாரமும் பேசியவற்றைக் காதில் வாங்கினாலும் பரிதி நிமிரவில்லை. அவன் கண்களில் கண் கலங்கிற்று. சிந்தாமணி அடித்த அடியில் அவன் உடம்பு மொத்தமும் புண்ணாகிப் போயிருந்தது. ரத்தம் வேறு வர, எங்கெங்கே அடிபட்டிருக்கிறது என கண்ணை சிமிட்டிப் பார்த்தவனின் செவி அவர்கள் பேச்சை உள்வாங்கின.

“நீங்க சொல்றது சரிதான் அத்தை. என் மேலயும் தப்பிருக்கு. இல்லைன்னா உங்கப் புள்ளை இந்த மாதிரி பண்ணிருக்க மாட்டாரு. நான்தான் எல்லாத்துக்கும் காரணம்!” அவள் ஒரு முடிவோடு பேச, பரிதி படக்கென எழுந்து அவளருகே வந்தான்.

“ம்மா... அவ ஏதாவது உளறுவா. நீ நம்பாத!” என்றவன், “வாயை மூடு வாணி...” என்றான் அதட்டலுடன். அவனை நிமிர்ந்து சில நொடிகள் சலனமற்றுப் பார்த்தவள், ஒரு நெடிய மூச்சுடன் மாமியாரைப் பார்த்தாள்.

“உங்கப் புள்ளை குழந்தை வேணும்னு ஆசைப்பட்டாரு அத்தை. எனக்கு குழந்தைப் பெத்துக்கிறதுல விருப்பம் இல்ல. வேலை, வீடுன்னு ஏற்கனவே எனக்கு டென்ஷன் அதிகம்.‌ சோ, மேற்கொண்டு என்னால ரெஸ்பான்சிபிலிட்டி எடுக்க முடியாதுன்னு பேபிக்கு நான் நோ சொல்லிட்டேன். ஏதாவது குழந்தையை தத்தெடுத்துக்கலாம்னு சொன்னேன். அவருக்கு அதுல இஷ்டம் இல்ல. சோ, அப்பப்போ சண்டை வந்துட்டே இருந்துச்சு. நான் முடியவே முடியாதுன்னு ஸ்ட்ராங்கா சொல்லிடவும், பிரிஞ்சுடலாம்னு டிசைட் பண்ணோம். நானும் ஓகே சொல்லிட்டேன். அதுக்கு அப்புறம்தான் அவர் மதியோட பழக ஆரம்பிச்சாரு. அதனால அவரை மட்டும் குற்றவாளியாக்காதீங்க. ரெண்டு பேர் மேலயும் ஈக்வல் தப்பிருக்கு” என்றாள் வார்த்தையைக் கோர்த்து. அவனை மட்டும் குற்றவாளியாக்குவதில் அவளுக்கு துளியும் விருப்பமில்லை. ஒப்பந்த திருமணத்தைப் பற்றி கடைசிவரை யாரிடமும் பகிரக் கூடாது என்ற எண்ணத்துடன் இருந்தவள், தன் மீதும் தவறு என சாயம் பூசிக் கொண்டாள். சிந்தாமணி மருமகளை அதிர்ந்து பார்த்தார்.

படக்கென அவள் முழங்கையைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்பிய பரிதி, “அறிவில்லையா டீ உனக்கு? என்ன உளறீட்டு இருக்க?” என்றான் கடுப்புடன். ஏற்கனவே இருக்கும் பிரச்சனையை இவள் மேலும் சிக்கலாக்குகிறாளே என்ற கோபம் அவன் குரலில் தெறித்தது.

“விடு பரிதி... உண்மையை சொன்னாதான் அத்தைக்கு உன் மேல கோபம் போகும்!” என்றவள், “என்னை மன்னிச்சிடுங்க அத்தை. உங்களுக்குப் பேரக் குழந்தைங்களைப் பார்க்க ரொம்ப ஆசைன்னு தெரியும். ஆனால் எனக்கு அதுல பெருசா விருப்பம் இல்ல. மதி ரொம்ப நல்ல பொண்ணு. உங்கப் பையனுக்கும் அவளை பிடிக்கும். நீங்க மாமாகிட்டே பேசி அவரை அவளுக்கு கல்யாணம் பண்ணி வைங்க. உங்க மகன் ஆசைப்படி சீக்கிரமா பேரக் குழந்தை வந்துடும் உங்களுக்கு. நான் உங்க குடும்பத்துக்கு குழந்தை பெத்து தர மெஷின் கிடையாது. எனக்கு விருப்பமில்லைன்னா நான் அதை செய்ய மாட்டேன்!” என்றாள் உறுதியான குரலில்.

சிந்தாமணிக்கு தலையே சுற்றியது. என்ன பேசுகிறாள் இந்தப் பெண். குழந்தையை யாராவது வேண்டாம் என்பார்களா? எத்தனைப் பேர் கோவில், குளம் என குழந்தை பேருக்காக அலைகிறார்கள். ஆனால் இந்தப் பெண் அதை சுமையாகப் பாவிக்கிறாளா என அவர் மனம் அதிர்ந்தது. அவரால் பேசவே முடியவில்லை. இப்போது பரிதி மீதான கோபம் மட்டுப்பட்டிருந்தது. வாணி இவ்வாறு செய்யவில்லை என்றால் அவன் வழித் தவறி போயிருக்க வாய்ப்பில்லை என மகனுக்கு ஆதரவாக யோசித்தார். இருவர் மீதும் தவறிருக்கிறது.

“ம்மா... அவ ஏதோ என்னைக் காப்பாத்த பொய் சொல்றா. அவளை ரெண்டு வருஷமா உனக்குத் தெரியுமில்ல. அவ இப்படி பேசுற ஆளா? நீயே யோசி. அவ... அவ எனக்காக பார்க்குறா!” பரிதி வாணியை முறைத்துக் கொண்டே தாயிடம் கூற, அவருக்கு என்ன எதிர்வினையாற்றுவது என்றே தெரியவில்லை.

இசைவாணி பெரியவரை அழைத்து வந்து இருக்கையில் அமர்த்தியவள், “கீர்த்தனா, அம்மாவுக்குத் தண்ணி எடுத்துட்டு வா!” என அவளை நீர் கொண்டு வரப் பணித்து மாமியாரை ஆசுவாசம் செய்தாள்.

“சாரி அத்தை... என்னை மன்னிச்சிடுங்க. நாங்களா உங்ககிட்ட சொல்லாம முடிவெடுத்தது தப்புதான். ஆனால் இந்த முடிவுதான் சரியா இருக்கும். எனக்கு குடும்ப வாழ்க்கைல பிடிப்பு இல்லாம போச்சு. குழந்தை பெத்துக்க, வளர்க்க எல்லாம் ஆசை வேணும். எனக்கு அப்படியெல்லாம் ஆசையே கிடையாது. உங்கப் பையனோட வாழ்க்கை என்னால வீணாக வேணாம். என்னை எவ்ளோ கன்வின்ஸ் பண்ணாலும் நான் சம்மதிக்க போறதில்லை. ரெண்டு வருஷம் போராடி அவரே முடியலைன்னுதான் என்கிட்டேருந்து லீகலா டைவர்ஸ் வாங்கிட்டாரு!” என்றாள் மெல்லிய குரலில். சிந்தாமணிக்கு அன்றைய நாளின் பெரும் அதிர்ச்சி. தலைக்கு மேலே வெள்ளம் போயிற்று என்பதாக அவர் உணர்ந்தார். எதுவுமே பேச முடியாத நிலையில் நின்றார்.

“வாணி... வர்ற கோபத்துக்கு உன்னை அறைஞ்சுடப் போறேன். கொஞ்ச நேரம் அமைதியா இரு!” என கடுகடுத்த பரிதி,

“ம்மா... ரெண்டு பேரும் தப்பு பண்ணிருக்கோம். அதை உணர்ந்து சரி செய்ய நான் ஆசைப்படுறேன். என் பொண்டாட்டியை நான் பார்த்துக்கிறேன். ப்ளீஸ் நீ இந்தப் பிரச்சனையை யார்கிட்டேயும் சொல்லிடாதம்மா. நமக்குள்ளே இருக்கட்டும். அவளை சரி பண்ணி நான் வீட்டுக்கு கூட்டிட்டு வரேன். நீ இப்போ கிளம்பு. இதுக்கும் மேல நீ இங்கருந்தா என் கூட சேர்த்து வைக்கக் கூடாதுன்னு என்ன வேணா பொய் சொல்லுவா இவ. நீயும் அதை நம்பித் தொலைவ. நீ நினைக்கிற அளவு பெரிய பிரச்சனை இல்ல‌. என்னால ஹேண்டில் பண்ண முடியும்மா!” என இவன் அவரைத் தவிப்புடன் பார்த்தான். சிந்தாமணி எழுந்து நின்றார். அவருக்கு தன் வளர்ப்பு தவறிவிட்டதோ என மனம் பரிதவித்தது.

“கீர்த்தனா, அடுத்து பொள்ளாச்சிக்கு பஸ் எப்போ இருக்குன்னு பார்த்து நாலு டிக்கெட் போடு. எல்லாரும் கிளம்புறோம்!” அவர் அழுத்தமாகக் கூற, வாணி முடியாது என்பது போல மறுப்பாய் பார்த்தாள்.

“அத்தை.‌.. எனக்கு லீவ் கிடைக்காது. நான் வரலை. நீங்க எல்லாரும் போங்க...” அவள் கூற,

“ம்மா... நீயும் கீர்த்தியும் கிளம்புங்க. நான் அவளை சமாதானம் பண்ணிக் கூட்டீட்டு வரேன்!” பரிதி உரைக்க,

“ப்ளீஸ் பரிதி... தயவு செஞ்சு கிளம்பிடு. நீ சமாதானம் செஞ்சாலும் என்னால வர முடியாது. நீங்க போங்க... நான் லீவ் கிடைச்சதும் வரேன்!” அவளுக்கு அங்கே சென்று இருவீட்டாரின் கேள்விக்களுக்குப் பதில் செல்ல பிடிக்கவில்லை. இங்கே கீர்த்தனாவின் முன்பு இப்படி நடந்ததே ஒருவித அவமான அவளுக்கு முகம் கன்றியது. தன் வாழ்க்கையை அமைதியாக வாழ நினைத்தவள் அவள். ஆனால் எளிதாய் முடித்துவிடலாம் என அப்போதைய தீர்வாக ஒப்பந்த திருமணம் என அவளே அவள் வாழ்க்கையை மிக மோசமான படுகுழியில் தள்ளிவிட்டிருக்கிறாள். எப்படி அதை சரி செய்ய போகிறோம் என பயம் நெஞ்சை அழுத்தியது. எளிதாய் விவாகரத்து, பிரிவு என அவள் எண்ணியிருந்தவை எல்லாம் இப்போது பூதாகரமாய் அவளைத் துரத்தின.

“நீங்க வர்றீங்களா? இல்லையான்னு கேட்கலை. என்னை மதிச்சா வாங்க. இல்ல, இவ என்ன சொல்றது, நம்ப என்ன கேக்குறதுன்னு இருந்தா தாராளமா இங்கேயே இருந்துக்கோங்க. அத்தை, அம்மா உறவெல்லாம் இங்கேயே அத்துவிட்டுட்டுப் போய்டலாம்!” சிந்தாமணி தீர்க்கமாகப் பார்க்க, வாணியின் முகம் கலங்கியது. சில நொடிகள் யோசித்தாள்.

எத்தனை நாட்களுக்குப் பயந்து ஓடுவது? எப்படியும் சந்தித்துதானே ஆக வேண்டும். அதை இப்போதே செய்துவிட்டால் மனநிம்மதியாவது எஞ்சும் என எண்ணியவள், தலையை சம்மதமாக அசைத்தாள். அன்று இரவு ஏழு மணி பேருந்தில் நால்வருக்கும் பயணச்சீட்டை கீர்த்தனா பதிவு செய்ய, யாரும் யாரிடமும் பேசாமல் ஒருவித இறுக்கத்துடனே இருந்தனர். சமைத்த உணவு யாரும் சீண்டாமல் கேட்பாரற்று கிடந்தது. கீர்த்தனாவிற்குப் பசித்தாலும் நடந்த அதிர்ச்சியில் உண்ணாமல் இருந்தாள்.

“கீர்த்தி... போய் சாப்பிடு. பஸ்ல போகும்போது பசிக்கும்!” என அவளை விரட்டிய சிந்தாமணி, மூவரையும் கட்டாயப்படுத்தி உண்ண வைத்தார்.

“அத்தை.‌. நீங்களும் சாப்பிடுங்க!” வாணி அவரை சாப்பிட சொல்ல, அவளை சில நொடிகள் பார்த்தவர், சாப்பிட்டார். அவருக்கு வாணியின் பேச்சின் மீது நம்பிக்கை வர மறுத்தது. அவள் தவறிழைத்திருப்பாளா என உள்மனம் கேள்வி கேட்டது. பரிதி கூறியது போல இந்த இரண்டு வருடத்தில் வாணியுடன் பழகியவருக்கு அவள் மீது தவறு இருப்பதாய் தோன்றவில்லை. என்னவோ தவறாகப்பட்டது. ஆனால் என்னவென அவரால் இனம் கண்டறிய முடியவில்லை.
என்ன செய்து இவர்கள் வாழ்க்கையை சீரமைக்கப் போகிறோம் என்ற கவலையுடன் நால்வரும் பேருந்தில் பயணமாகினர்.

கீர்த்தனா தாயோடு அமர்ந்து கொள்ள, அவர்களுக்கு நான்கு இருக்கை தள்ளி, பரிதியும் வாணியும் உட்கார்ந்தனர். அவன் ஜன்னலிருக்கையை ஆக்கிரமித்தான். சிந்தாமணி பேசிச் சென்ற பின் பரிதி கோபத்தோடு இவளிடம் பேச முனைய, “வேணாம் பரிதி. ஐ யம் சோ டையர்ட். உன் கூட பேச என்கிட்டே எனர்ஜி இல்ல!” என அவள் சலிப்புடன் கூற, அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விட்டான்.

சிறிது தூரம் சென்றதும் பரிதி ஒரு பக்கமாய் அமர்ந்தான். பின்னர் மறுபுறம் திரும்பி அமர்ந்தான்.‌ முதுகு முழுவதும் புண்ணாகிப் போயிருந்தது. வெளியே தெரியும் இடங்களில் காயம் குறைவு. உள்ளே அடி பலமாக விழுந்திருந்தது. அவன் அசைவதால் இவளுக்கு அசௌகரியமாக இருக்க, “ப்ம்ச்... அசையாம இரு பரிதி!” மெல்லிய எரிச்சலோடு கூறினாள்.

அவளை முறைத்தவன், “அவன் அவன் கஷ்டம் அவனுக்குத்தான் தெரியும். சாஞ்சு உக்காரவே முடியலை. முதுகெல்லாம் புண்ணாகிடுச்சு. எண்ணெய் வச்சா ஷர்ட்ல தெரியும்னு குளிச்சிட்டு அப்படியே ட்ரெஸை போட்டுட்டேன். ஈரம் பட்டது இன்னும் காந்துது!” அவன் வலி தாளாமல் எரிச்சலில் முனக, இவள் கண்ணை மூடித் திறந்தாள்.

“சாரி... நான் உன்னை மாட்டி விடணும்னு பண்ணலை பரிதி. அத்தை ரொம்ப அடிச்சுட்டாங்களா?” குற்றவுணர்வு மேவிய குரலில் கேட்டாள் அவள். அவளை சில நொடிகள் பார்த்தவன், பேருந்தில் அனைவரும் உறங்குவதை உறுதி செய்துவிட்டு படக்கென அவள் மடியில் படுத்து வயிற்றோடு கட்டிக் கொண்டான். வாணி திடுக்கிட்டுப் போனாள்.

“சாஞ்சு உக்கார முடியலை வாணி. லேசா தடவி கொடேன் முதுகை!” மெல்லிய குரலில் அவன் கேட்க, இவள் தயங்கியபடியே அவன் முதுகை மெல்ல தடவினாள். அவனுக்கு சுகமாய் இருந்தது போல. சற்று நேரத்தில் தூங்கிப் போயிருந்தான். வாணி இருக்கையில் சாய்ந்து கண்ணை மூடினாள். அழுகையாக வந்தது அவளுக்கு. ஏன் தான் இவ்வளவு பலவீனப்பட்டு விட்டோம் எனத் தன்னைத் தானே தேற்ற முயன்றபடியே கண்ணயர்ந்தாள்.

காலையில் சிந்தாமணிதான் அவர்களை எழுப்பினார். பரிதி அவள் மடியில் படுத்து நல்ல உறக்கத்திலிருக்க, வாணி படக்கென கண் விழித்தாள்.

“உன் புருஷனைக் கூட்டிட்டு இறங்கு வாணி...” அவர் கீர்த்தனாவை அழைத்துக்கொண்டு கீழே செல்ல, இவள் அவன் முதுகில் தட்டச் சென்று பின்னர் பதறி, “பரிதி... எழுந்திரி!” என அவன் கன்னத்தில் தட்டினாள். அவன் உடல் சுட்டது. அவன் நெற்றி, கழுத்து எனக் கை வைத்துப் பார்த்தாள். உடல் நெருப்பாய் சுட்டுக் கிடந்தது. சிந்தாமணி அடித்ததுதான் காரணம் எனப்‌ புரிந்தவள், தன் நெற்றியிலே அறைந்து கொண்டாள்.

“பரிதி... எழுந்திரி. ஹாஸ்பிடல் போய்ட்டு வீட்டுக்குப் போவோம்!” என அவனை எழுப்பி அமர்த்தினாள். அவனுக்கு தலை பாரமாக இருந்தது.

“தலை ரொம்ப வலிக்குது வானு!” சோர்வாக இருக்கையில் சாய்ந்தான்.

“உனக்கு ஃபீவரா இருக்கு. ஹாஸ்பிடல் போய்ட்டு போகலாம் வா!” என பேசி, சரி செய்து அவனை அழைத்துச் சென்றாள்.

“அத்தை... அவருக்கு ஹை ஃபீவரா இருக்கு. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போய்ட்டு வரேன் நான். நீங்க கீர்த்தனாவோட வீட்டுக்குப் போறீங்களா?” வாணி தயங்கியபடியே கேட்க, சிந்தாமணி பதில் கூறாமல் இருவரையும் ஒரு அர்த்தப் பார்வைப் பார்த்தார். வாணிக்கு புரிந்தாலும் கூட அமைதியாக நின்றாள்.

“ம்மா.. ஆட்டோ பிடிக்கிறேன். இடையில கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல நாங்க இறங்கிக்கிறோம். ஜீ.ஹெச்ல ஓபி தொறந்துதான் இருக்கும். ஒரு ஊசியைப் போட்டுட்டு வரேன். நீங்க அப்படியே வீட்டுக்குப் போங்க...” என்ற பரிதி, ஒரு தானியைக் கைக் காண்பித்தான். பெண்கள் மூவரும் முன்னே அமர்ந்து கொள்ள, அவன் ஓட்டுநர் இருக்கையைப் பகிர்ந்து கொண்டான். அரசு மருத்துவனைக்கு முன்பு ஒரு தனியார் மருத்துவமனை இருந்தது.

“அண்ணா... அந்த ஹாஸ்பிடல் வாசல்ல நிறுத்துங்க...” என்ற வாணி, “இங்க எனக்குத் தெரிஞ்ச டாக்டர் இருக்காங்க. நாங்க பார்த்துட்டு வரோம் அத்த...” என்றவள், பரிதியை நோக்கினாள். அவன் மறுப்பேதும் உரைக்காமல் அவளோடு சென்றான்.

அவனை ஆராய்ந்து மருந்து, மாத்திரைகள் எழுதிக் கொடுத்த மருத்துவர், “புருஷன் பொண்டாட்டியை அடிச்சா மட்டும் இல்ல, பொண்டாட்டி புருஷனை அடிச்சாலும் கூட அது டொமஸ்டிக் வயலன்ஸ்தான்மா!” என்றார் வாணியை முறைப்புடன் பார்த்து. அவள் எப்போதும் பார்க்கும் மருத்துவர் அன்று பணியில் இல்லை. புதிதாய் ஒரு பெண்மணி இருந்தார்‌. அவர் கூற்றில் பரிதிடம் மெல்லிய சிரிப்பு படர்ந்தது. வாணி அவனை முறைத்தாள். செவிலியர் அவனை அழைத்துச் சென்று ஊசியை செலுத்தினார்.

“புண்ணுல தண்ணி படாமா பார்த்துக்கோங்க. ஆயின்மெண்டை மார்னிங் அண்ட் ஈவ்னிங் போடுங்க. ஒன் வீக்ல சரியாகிடும்!” என்ற அறிவுரைகளுடன் அனுப்பி வைத்தார். பின்னர் இருவரும் வீட்டிற்குச் சென்றனர். மார்த்தாண்டம் கடை திறக்கவில்லை அன்று. ஞாயிறு முழுநாள் விடுமுறை விட்டிருந்தார்.‌

“நீ உன் வீட்டுக்குப் போ. நான் இங்கயே இருக்கேன்...” வாணிக்கு அங்கே செல்ல விருப்பமில்லாமல் தன்னுடைய வீட்டிற்குள் நுழைய, அவள் பின்னே பரிதியும் வந்தான்.

அவனை சலிப்புடன் பார்த்தவள், “உன் வீட்டுக்குப் போ பரிதி. உங்கம்மா வெயிட் பண்ணுவாங்க” என்றாள்.

“இதுவும் என் வீடுதான். அம்மாகிட்டே சொல்லிக்கலாம்” என்றவன் அவளின் அறைக்குள்ளே நுழைந்தான். சென்ற மாதம்தான் வாணி வீட்டை சுத்தப்படுத்தியிருந்ததால், ஓரளவிற்கு வீடு நன்றாக இருந்தது. ஆனாலும் லேசாய் தூசி படர்ந்திருப்பது இவள் கண்களை உறுத்த, சுந்தரியின் அறைக்குள்ளே நுழைந்து குளித்து உடைமாற்றி வந்தாள்.

வீட்டை சுத்தப்படுத்தலாம் என அவள் ஆயத்தமாக, “வாணி...” என பரிதி கத்தினான். இரண்டு முறை அவன் அழைத்ததும், இவள் சென்று பார்த்தாள். மொத்த உடையையும் களைந்துவிட்டு முட்டிவரை ஒரு கால்சராய் மட்டும் அணிந்து நின்றிருந்தான். அவனிருந்தக் கோலத்தில் வாணி சங்கடப்பட்டு முகத்தைச் சுளித்தாள்.

“அதான் மனசுல வம்மம் வச்சு அடி வாங்க வச்சுட்டியே டீ. அப்புறம் என்ன மூஞ்சியைத் தூக்குற. வந்து முதுகுல ஆயின்மெண்ட் போட்டுவிடு. எரிச்சல் தாங்கலை!” அவன் கடுப்புடன் கூற, இவள் திரும்பி செல்ல யத்தனித்தாள்.

“ஏய்... ஏய். வாணி. ப்ளீஸ்... வந்து போட்டு விடு. ரொம்ப எரியுது எனக்கு...” அவள் சென்றுவிடுவாள் என அவன் கெஞ்ச, வாணி அவன் கையிலிருந்த களிம்பை வெடுக்கென பிடிங்கி அவன் முதுகில் மென்மையாய் தடவினாள். எரிச்சல் மெல்ல குறைந்து களிம்பு பூசியதும் குளிர்ந்தது.

“கால்லயும் வாணி. இதோ கைல... இங்கயும்!” என அவன் காண்பித்த இடத்திற்கெல்லாம் பொறுமையாக வாணி களிம்பிட்டு முடிந்ததும், பரிதி அவள் கையைப் பிடித்தான். என்னவென பார்த்தாள் அவள். அப்படியே அமர்ந்தவாறே அவளை வயிற்றோடு இறுகக் கட்டிக் கொண்டான். வாணி உணர்ச்சிகளற்று எவ்வித எதிர்வினையும் காண்பிக்காமல் இறுகிப் போய் நின்றாள்.

“சாரி வாணி... நடந்த எல்லாத்தையும் மன்னிக்க முடியலைன்னா மறந்துடு. நம்ப புதுசா வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணலாம். வீம்பை விட்டுட்டு கொஞ்சம் இறங்கி வா வானு. உனக்கு இப்போவும் என்னைப் பிடிக்கும்னு எனக்குத் தெரியும்!” என உறுதியாக உரைத்தவனை தன்னிடமிருந்து பிரித்தவள்,

“ஆயின்மெண்ட் போட்டு விட்டதும் உன்னை எனக்குப் பிடிச்சிருக்குன்னு அர்த்தமா பரிதி? என்னாலதான் நீ அடிவாங்கிட்டன்னு உன் மேல பரிதாபம்தான் வந்தது. இதுக்குப் பேர் பிடித்தம், காதல் எல்லாம் இல்ல. ரொம்ப குழப்பிக்காத. என் முடிவுல நான் ஸ்ட்ராங்கா இருக்கேன். இன்னைக்கே எல்லாத்தையும் முடிச்சுக்கலாம். எப்படியும் அத்தை மாமாகிட்டே சொல்லி, அப்படியே காமராஜ் மாமாகிட்டேயும் பேசிடுவாங்க. ஈவ்னிங் அவங்க வந்ததும் அங்கப் போகணும். நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கோ. ரெண்டு ஃபேமிலிக்கும் பதில் சொல்லணும் நம்ப. டைவர்ஸ் பத்தி கேட்பாங்க. நான் பேப்பர்ஸ் ரெடியா வச்சிருக்கேன். அங்க வந்து ஏதாவது உளறிட்டு இருக்காம, ம்யூட்சுவலா பிரியிறோம்னு ஒத்துக்கோ. என் உயிரைப் போட்டு வாங்காத. அவங்ககிட்ட பதில் சொல்லவே எனக்கு முடியாது. இதுல உன் பங்குக்கு பண்ணி என் கோபத்தை அதிகப்படுத்தாத.” என்றவள், கழிவறைக்குள் நுழைந்து கையைத் தேய்த்து சோப்பு போட்டுக் கழுவினாள்.

‘ம்யூட்சுவலா பிரியிறதுக்கா டீ இவ்வளோ அடியும், மிதியும் வாங்குனேன்? நெவர். என்ன ஆனாலும் பரவாயில்லை. என் பொண்டாட்டியோட என்னைச் சேர்த்து வச்சுடுங்கன்னு பாரபட்சம் பார்க்காமல் எல்லார் கால்லயும் விழுந்துட வேண்டியதுதான்!’ என்றெண்ணிய பரிதி குப்புறப்படுத்தான்.

தொடரும்...

 
Top