• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,330
Reaction score
3,963
Points
113
கடலிலே மழை வீழ்ந்தப் பின் கதையை இப்போது முழு நீள ஆடியோவாக நம்ம இறகி தமிழ் நாவல்ஸ் சேனலில் பப்ளிஷ் பண்ணிருக்கோம். கேட்டு மகிழுங்கள் மக்களே!

லிங்க் 👇,



நேரம் – 45 💜

இரண்டு நாட்கள் கடந்து போயிருந்தது. வாணிக்கு அலுவலகம் வீடு என நகர, திங்கட்கிழமை காலை பரிதி எங்கும் தென்படுகிறானா என இயல்பாகத் தேடினாள். அடுக்குமாடி கட்டிடத்தின் வாயிலிலும் காணவில்லை. அலுவலகம் அருகேயும் அவனைப் பார்க்க முடியவில்லை.

ஊருக்குச் சென்றுவிட்டான் எனப் புரிந்து கொண்டவள், கசப்பாய் முறுவலித்தாள். அவ்வளவுதான் அவன், அவன் குணமும் மரத்திற்கு மரம் தாவும் குரங்கு போலத்தான். போகிறான் என தோளைக் குலுக்கிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டாள். திங்கள் அலுவலகம் செல்லும்போது இவளுக்கு தயக்கமாய் இருந்தது. ஆனால் நிஹாரிகா, ரஞ்சித் என ஒருவரும் அன்றைய நிகழ்வைப் பற்றிக் கேட்கவில்லை. மாறாக அவள் நன்றாக இருக்கிறார்களா என அவளது நலத்தை மட்டும் நாடினர். அதுவே வாணிக்குப் பெரும் ஆறுதலாகயிருக்க, வேலையில் ஆழ்ந்து போனாள்.

அதோ இதோவென வாரயிறுதியை எட்டிவிட்டது. வெள்ளிக்கிழமை மாலை சோர்வுடன் அவள் வீட்டிற்கு வந்தாள். கடந்த சில நாட்களாக வேலை பளு கூடிவிட்டது. நண்பர்களிடம் பேசக் கூட நேரம் வாய்க்காது கணினி முன்னே உட்க்கார்ந்திருந்தாள். வீட்டைத் திறந்ததும் எப்போதும் போல ஒரு வெறுமை முகத்தில் அறைந்தது. மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டே உடை மாற்றி கூடத்திலிருந்த நீள்விருக்கையில் படுத்துக் கண்ணை மூடினாள்.

சுந்தரியும் சோமசுந்தரமும் கண்களில் நிறைய, சின்னதாய் முறுவலித்தாள்‌. பின்னர் அலைபேசியை எடுத்து தாய் தந்தையோடு செலவிட்ட நேரங்களை புகைப்படங்களாகப் பார்த்திருந்தாள். அவளது இருபத்தியிரண்டாம் பிறந்த நாளின்போது தந்தையோடு சேர்ந்தெடுத்த காணொளியொன்று வந்தது.

அவரை அணைத்துக்கொண்டு நின்றிருப்பாள் இவள். சுந்தரி அதற்குத் திட்ட, இவள் முகம் கோணவும் சோமசுந்தரம் மகளுக்கு ஆதரவாக மனைவியை அதட்டுவார். பின்னர் அவரே கோபித்துக்கொண்ட சுந்தரியை கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்வார். அதைப் பார்த்தவளின் முகத்தில் சின்ன புன்னகை மலர்ந்தது. தலையை உயர்த்திக் கூடத்தின் சுவரில் மாட்டப்பட்டிருந்த தாய், தந்தை புகைப்படத்தைப் பார்த்தாள். அதில் லேசாக தூசிப் படிந்தது போல தோன்ற, எழுந்து சென்று தன் கைக்குட்டையால் படத்தை துடைத்து மீண்டும் மாட்டினாள்.

எத்தனை வயதானால் என்ன? மனம் தாய், தந்தையின் அருகாமையை வேண்டும். அந்த இரண்டு மனிதர்கள் நம் வாழ்வில் இல்லையென்றால் சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் அநாதை என்ற வார்த்தை உண்மை தானே? என்னவோ இப்போதெல்லாம் தனிமை அவளை நிரம்ப பாதித்தது. யாரேனும் பேசுவதற்கு, பழகுவதற்கு ஆட்கள் இருந்தால் நலம் எனத் தோன்றிற்று‌.

கமலாவை அழைக்கலாம் என யோசித்தாலும், இப்போதுதான் அவருக்கு மகள்களோடு சேர்ந்து வாழ வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவருக்கும் வயது மூப்பு காரணமாக உடல் உபாதைகள் வருவதாக சென்ற முறை அலைபேசியில் உரையாடும்போது பகிர்ந்திருந்தார். அதன் பொருட்டே அவரை அழைக்க தயங்கி, வேண்டாமென விட்டுவிட்டாள்.

வேறு பணியாளரை வைக்கவும் அவளுக்கு விருப்பமில்லை. அவள் ஒற்றை ஆள் என்பதால், பெரிதாக எந்த வேலையும் இராது. தானே செய்துகொள்ள முடிவெடுத்தாள். இருந்தாலும் தனிமை வாட்டியது. பக்கத்து குடியிருப்பில் ஒரு குடும்பம் வசிக்கிறது. அந்தப் பெண் இவளைப் பார்த்தால் சின்னதாக புன்னகைக்கிறார். கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்வதால், காலையில் கிளம்பினால் இரவுதான் வீடு திரும்புவார்கள். இவளிடம் பேச அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.

ஏதேதோ யோசித்தவாறே சுத்தமாக இருந்த வீட்டை மீண்டும் ஒருமுறை கூட்டினாள். பின்னர் துடைத்தாள். அலைபேசியில் பாடலை ஒலிக்க விட்டுக்கொண்டே வேலை செய்தாள். சுத்தம் செய்து முடித்தவள், இரவுக்கு என்ன சமைக்கலாம் என சோம்பேறித் தனத்தோடு எளிமையான சமையல் காணொளியை அலைபேசியில் பார்த்திருந்தாள்‌. வீட்டின் அழைப்புமணி இசைத்தது. இந்த நேரத்தில் யாரது என எச்சரிக்கையுடன் கதவு குமிழில் பார்த்தாள். சிந்தாமணி நின்றிருக்கவும், ஒரு நொடி அதிர்ந்து போனாள்.

அவரை எதிர்பார்க்காது திகைத்தவள், கதவை திறக்க, “அண்ணி... எப்படி இருக்கீங்க?” என கீர்த்தனா ஓடிவந்து இவளை இறுக அணைத்துக் கொண்டாள். வாணியால் சட்டென்று சிரிக்க முடியவில்லை. சிந்தாமணிக்குப் பின்னே நின்றிருந்த பரிதி அவள் பார்வையை எதிர்கொள்ள தயங்கித் தலையை தாழ்த்தினான்.

“உள்ள வாங்க அத்தை... வா கீர்த்தனா!” என அவர்களை வரவேற்று அமர வைத்தவள், “என்ன அத்தை... சொல்லாம கொள்ளாம இப்படி சர்ப்ரைஸா வந்திருக்கீங்க?” என தன்னை முயன்று சரிசெய்து புன்னகைத்தாள்.

“சும்மாதான் வாணி. உன் புருஷன் ஊர்லருந்து வந்தான். சனி, ஞாயிறு இவளுக்கும் லீவு. அதான் உன்னைப் பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்!” என்றவர் மருமகள் கையைப் பிடித்துக்கொள்ள, அவர் பதிலில் இவளுக்கு நம்பிக்கையில்லை. பரிதிதான் இவர்களை அழைத்து வந்திருக்க கூடுமென எண்ணி அவனை முறைத்துப் பார்த்தாள். அவன் அவர்களிடமிருந்து சற்றே தள்ளி ஒரு ஒற்றை நாற்காலியில் அமர்ந்திருந்தான். இவள் முறைப்பில் அவன் முகம் வாடியது.

“அத்தை... சாப்டீங்களா நீங்க? நான் எதுவுமே கொடுக்காம பேசுறேன் பாருங்க!” என வாணி பதறி எழ, “வாணி... சாயங்கலாம்தான் ஓட்டல்ல சாப்பாடு வாங்கிக் கொடுத்தான் உன் புருஷன். நீ பதறாத... பொறுமையா நைட்டுக்கு சமைக்கலாம்...” என மருமகளை அழைத்து தன்னருகே அமர்த்தியவர், இங்கே வேலை எப்படி, என்ன, ஏது என பொதுவாக விசாரித்தார். இவள் கீர்த்தனாவிற்கு ரொட்டியெடுத்து வந்து கொடுத்தாள்.

“அண்ணி... நான் சின்ன புள்ளை இல்ல. ஐ’யம் எய்டீன் நவ்!” அவள் சிணுங்க, வாணி சிரிப்புடன் அவள் கன்னத்தைக் கிள்ளினாள். பரிதி வாணியின் சிரித்த முகத்தைதான் கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான். தன்னிடமும் அவள் இயல்பாக பேச மாட்டாளா என மனம் ஏங்கிற்று. அவள் பாராமுகத்தால் இவன் வாடிப் போயிருந்தான்.

அவன் பார்வையின் குறுகுறுப்பை உணர்ந்தவள், “பேசிட்டே ஏதாவது குக் பண்ணலாம் வாங்க அத்தை...” என சிந்தாமணியோடு சமையலறைக்குள் ஒதுங்கினாள். எளிமையாக உப்புமாவும் தேங்காய் சட்னியும் அரைத்து இரவுணவை முடித்தனர். கீர்த்தனாவும் உற்சாகத்துடன் அண்ணியிடம் வளவளத்தாள். பரிதிதான் அம்மூவர்களிடமிருந்து தனித்தமர்ந்திருந்தான். வாணி அவனைக் கண்டு கொள்ளவே இல்லை.

“ம்மா... எனக்கு தூக்கமா வருது!” கீர்த்தனா உறங்க ஆயத்தமாக,
“போய் பெட்ல படு கீர்த்தி...” என்றாள் வாணி.

“இல்ல வாணி... நீயும் அவனும் ரூம்ல படுங்க. நாங்க ரெண்டு பேரும் ஹால்ல படுத்துக்கிறோம்...” சிந்தாமணி கூற, இவள் மறுத்தாள்.

“அத்தை... அது மூனு பேர் படுக்குற அளவு பெரிய பெட். நம்ப மூனு பேரும் அதுல படுத்துக்கலாம். உங்க புள்ளை ஹால்ல படுத்துப்பாரு. இல்லைன்னா ரூம்ல கீழே படுத்துப்பாரு!” இவள் இயல்பாக கூற, பெரியலரால் எதுவும் பேச முடியவில்லை. சரியென தலையை அசைத்தார்‌. கீர்த்தனா உறங்க சென்றுவிட, அதுவரை மருமகளை ஊன்றிக் கவனிக்காத சிந்தாமணி, அவள் கழுத்தில் தாலி இல்லையென்பதைக் கண்டு அதிர்ந்தார்.

“வாணி... தாலி எங்க போச்சு? அந்து எதுவும் விழுந்துடுச்சா? இல்ல நீ கழட்டி வச்சுட்டீயா?” அவர் பதறிப் போய் கேட்க, அவள் என்ன சொல்வது எனத் தெரியாமல் கழுத்தை தடவினாள். இவர்கள் வருவார்கள் என அவள் எதிர்பார்க்கவில்லை. அப்படியே தெரிந்தாலும் கூட மீண்டும் இவரிடம் பொய்யாக நடிக்க விருப்பமில்லை வாணிக்கு. பரிதி தாயின் கேள்வியில் தயங்கியபடியே அவர்கள் அருகே வந்தான்.

“வாணி... உன்னைத்தான் கேட்டுட்டு இருக்கேன். தாலி எங்க போச்சு?” என அவர் மருமகளிடம் கடுமையாகக் கேட்க, பரிதியை திரும்பிப் பார்த்தாள் அவள். அவனும் அவருக்கு என்ன பதிலிறுப்பது எனத் தெரியாமல் சங்கடத்துடன் பிடரியைக் கோதியபடியே நின்றிருந்தான்.

“அது... உங்கப்‌ புள்ளைதான் கோபத்துல என் கழுத்துலருக்க தாலியை அத்து எறிஞ்சுட்டாரு அத்தை!” மருமகள் கூற்றில் சிந்தாமணி அதிர்ந்து போய் மகனைப் பார்த்தார்.

“என்னம்மா சொல்ற நீ? ஏதோ எனக்கும் என் பொண்டாட்டிக்கும் சண்டை. நான் தப்பு பண்ணிட்டேமான்னு என்னை அடம் பிடிச்சு இங்க கூட்டிட்டு வந்தான். தாலியை அத்து எறிஞ்சதையெல்லாம் அவன் சொல்லவே இல்லையே. இது எப்போ நடந்தது? என்கிட்ட ஒரு வார்த்தை நீ சொல்ல மாட்டீயா? நீங்களே எல்லாத்தையும் பார்த்துக்கிட்டா பெத்தவங்க நாங்க எதுக்கு?” என மருமகளிடம் காய்ந்தவர், பரிதியை உக்கிரமாகப் பார்த்தார்.

“வாணி சொன்னது உண்மையா?” சிந்தாமணி மகனை தீயாய் பார்த்துக் கேட்க, அவன் பயத்துடன் இரண்டு அடிகள் பின்னே நகர்ந்தான். பொதுவாகவே அவர் பரிதியைக் கை நீட்டி அடிக்க மாட்டார். அவன் பெரிதாக ஏதாவது ஏற்றுக்கொள்ள முடியாத தவறு செய்தால் தோசைக் கரண்டி, விளக்குமாறு என போட்டு புரட்டி எடுத்துவிடுவார். அவரிடம் அடிவாங்கிய நினைவில் பயத்தோடு அவன் தலையை ஆமாமென அசைக்க, மகன் சட்டையைக் கொத்தாகப் பற்றினார் பெரியவர்.

“பொண்டாட்டி தாலியை அத்து எறியுற அளவுக்கு பெரிய சண்டியராகிட்டீயோ? ஹம்ம்... எவ்வளோ தைரியம் இருந்தா இப்படி பண்ணிருப்ப நீ? உன் ஆம்பளைத் திமிரை அவகிட்டே காட்டிருக்கீயா டா? எவ்வளோ படிச்சு எங்க வேலை பார்த்து என்ன ப்ரயோஜனம். கட்டுன பொண்டாட்டியை ஒழுங்கா பார்த்துக்க துப்பில்லாதவன் எல்லாம் ஆம்பளையே இல்ல டா!” என ஆத்திரம் தீரும்வரை அவன் இரண்டு கன்னத்திலும் மாறி மாறி அறைந்தார் சிந்தாமணி. பரிதிக்கு பல்லே உடைந்துவிடும் அளவிற்கு வலித்தது. அமைதியாக அவரது அடிகளைப் பெற்றுக் கொண்டான்.

வாணி கையைக் கட்டி நடப்பதை வேடிக்கைப் பார்த்தாள். பொய்யாக கூட அவள் பதறி மாமியாரைத் தடுக்கவில்லை. அவர் அவனை அடிக்க அடிக்க இவளுக்குள்ளே கனன்ற நெருப்பின் வீரியம் மெல்ல மெல்ல மட்டுப்பட்டது. மதி தன் தாலியை அறுத்த போதே இவளுக்கு இரண்டு பேரையும் கன்னம் கன்னமாக அறைய வேண்டும் என சினம் மூண்டெழுந்தது. ஆனால், அவர்களுக்கும் அவளுக்குமிடையில் என்ன உறவு இருக்கிறது எனக் கேட்டு ஒதுங்கிக் கொண்டாள். ஆனாலும் அடிமனத்தில் கோபம் அப்படியேதான் இருந்தது. இப்போது சிந்தாமணி செய்கையில் கொஞ்சம் திருப்திப்பட்டுக் கொண்டாள்.

“முப்பது வருஷமாச்சுடா எனக்கு கல்யாணமாகி. உங்கப்பா இதுவரைக்கும் என் மேல கை நீட்டுனது இல்ல. சண்டை வந்திருக்குதான். ஆனால் எல்லாமே வாய் சண்டை தான். ஆனால் கல்யாணமான ரெண்டு வருஷத்திலயே ஐயாவுக்கு கொம்பு முளைச்சிடுச்சோ? ஹம்ம்... அம்மாப்பா இல்லாத புள்ளைடா அது. நல்லா பார்த்துக்கணும்ன்ற அறிவு கூடவா இல்ல உனக்கு? உன்னை இப்படித்தான் வளர்த்தேனா நான்?” என அவன் கன்னத்தை வீங்க வைத்தே விட்டார் பெரியவர். ஆனாலும் அவர் கோபம் குறைவதாகத் தெரியவில்லை. மேலும் ஏதாவது அவனை அடிக்க கிடக்கிறதா என அவர் தேட, பரிதிக்கு கண்ணெல்லாம் கலங்கிப்‌ போனது‌. உதட்டைக் கடித்து வலியைப் பொறுத்துக் கொண்டவன், கத்தவில்லை, அலறவில்லை.

“ஏம்மா வாணி... இவன் தாலியை அறுத்தப்பவே சொல்லிருந்தா ஊரக்கு வர வச்சு அவுக அப்பாகிட்டே சொல்லி காலை உடைச்சு வீட்டோட போட்டிருப்பேனே. நீ இவ்வளோ நடந்தும் அமைதியா இருந்திருக்க? படிச்ச புள்ளை தானே நீ? அப்பவே நாலு கொடுக்காம அழுதுட்டு தனியா வந்து உக்கார்ந்திருக்க?” என வாணியிடமும் பாய்ந்தார் அவர். அவள் பதிலளிக்கவில்லை.

நீள்விருக்கையில் அமர்ந்தவர், சில நொடிகள் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, “வாணி... நீ போய் படும்மா!” என்றார் அவளிடம். அவள் அவரைத் தயங்கிப் பார்த்தாள்.

“நீ போ... இவன்கிட்டே எனக்குப் பேச வேண்டியதிருக்கு!” என அழுத்தமாக அவர் பார்க்க, இவள் பரிதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அகன்றாள். அவன் வீங்கிப் போன முகத்துடன் தாய் முன்னே நின்றிருந்தான்.

“உன்னை இப்படியா பரிதி நான் வளர்த்தேன்? உங்கப்பா திட்டுனா கூட என் புள்ளைன்னு இடையில வந்து தடுப்பேனே டா. நான்தான் உன்னை ரொம்ப செல்லம் கொடுத்துக் கெடுத்துட்டேன் போல. பொம்பளை புள்ளைங்களை மதிக்கணும்னு சொல்லித்தானே வளர்த்தேன்? கட்டுன பொண்டாட்டியோட தாலியை அறுத்துட்டு அவளை அனுப்பிருக்க நீ? அப்பன், ஆத்தா இல்லாத புள்ளை அது. யார்கிட்டேயும் சொல்லி அழ முடியாம உள்ளுக்குள்ளே வச்சு புழுங்கி போய்ருக்கும்டா!” என அவர் கண்டனத்துடன் பேச, பரிதி படக்கென தரையில் அமர்ந்து அவர் மடியில் முகம் புதைத்தான்.

அவன் அழுகிறான் என அவர் உணர்ந்தாலும் இறுகிப் போயிருந்தார். அவரால் மகனின் செயலை ஏற்கவே முடியவில்லை. மனம் ஆற மறுத்தது பெரியவருக்கு. ஏதோ சின்ன பிணக்காக இருக்குமென அவர் எண்ணி வர, இவன் இத்தனை பெரிய காரியத்தை செய்திருக்க கூடுமென அவர் கற்பனை கூட பண்ணவில்லை.

தன் கணவருக்கு இந்த விஷயம் தெரிந்தால் என்னவாகுமோ என இப்போதே பயந்தார் பெண்மணி. அவன் முகத்தை நிமிர்த்தினார் இவர். அவன் அவசரமாய் கண்களைத் துடைத்துக் கொண்டான். இந்த வயதில் மகன் அழுததும் தாய்க்கும் நெஞ்சு கனத்தது.

“ஏன்டா இப்படி பண்ண? நீதானேடா இந்தப் பொண்ணுதான் வேணும்னு அடம்பிடிச்சு கல்யாணம் பண்ண. அப்போ அவளை நல்லா பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு தானே? ஊரா வீட்டுப் பொண்ணுன்னு இப்படி செஞ்சியாடா? நம்ப வீட்டுலயும் ஒரு பொம்பளை புள்ளையை வச்சிருக்கோம்டா. நாளைக்கு அவ புருஷன் இப்படி பண்ணா நீ அமைதியா இருப்பீயா?” எனக் காய்ந்தவர், “உங்களுக்கு இடையில என்னதான்டா பிரச்சனை? அதைக் கேட்டாலும் வாயைத் தொறந்து சொல்ல மாட்டுற?” என ஆற்றாமையுடன் முடித்தார்.

“நான்தான் தப்பு பண்ணிட்டேன்மா. சின்ன சின்ன பிரச்சனையை பெருசாக்கி அவளை அடிச்சு தாலியை பிடுங்கிட்டேன். அது... அது ஏதோ கோபத்துல செஞ்சிட்டேன். இப்போ தப்பை உணர்ந்துட்டேன். எனக்கு என் பொண்டாட்டி வேணும்மா!” என்றான் வேதனை மிகுந்த குரலில்.

“செய்றதையும் செஞ்சிட்டு பொண்டாட்டி வேணும்னு சொன்னா யாருடா உன்னை மன்னிச்சு ஏத்துப்பா? எந்தப் பொண்ணா இருந்தாலும் கோபப்படத்தான் டா செய்வா!” இவர் சினம் குறைந்தாலும் கண்டனத்துடன் கூற, அவன் முகம் வாடினான்‌.

“இன்னும் எத்தனை அடிவேணா அடிச்சுக்கோம்மா. ஆனால், அவளை என்கூட சேர்த்து வச்சுட்டுப் போம்மா. என்னால அவ இல்லாம வாழ முடியாது!” வருத்தமும் ஏக்கமுமாக பரிதி கூற, சிந்தாமணிக்கு அதற்கு மேலும் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.

“சரி விடு... அவகிட்டே நான் பேசுறேன். இதுதான்டா முதலும் கடைசியும். இனிமே அவகிட்டே இந்த மாதிரி நடந்துக்காத. பொண்டாட்டியை மதிச்சு நடக்கப் பழகு. அப்போதான் உங்க வாழ்க்கை நல்லாருக்கும்!” என்றார் அவர் மகன் தலையைக் கோதி.

வாணி அறையிலிருந்து அவர்கள் அறியாமல் எட்டிப் பார்த்தாள். சிந்தாமணி அவன் முடியைக் கோதுவதைப் பார்த்ததும் இவளுக்கு தாயின் ஞாபகம் வந்தது போல. அவர் இருந்திருந்தால் தானும் உடைந்து போன சமயத்தில் ஆறுதல் தேடி தாய்மடி சேர்ந்திருக்கலாம் என மனம் கனத்தது.

என்னதான் சிந்தாமணி மகனை அடித்தாலும் அவன் செய்த தவறை உடனே மன்னித்து ஏற்றுக் கொண்டதில் இவள் முகம் மாறியது. அவர் மகன் என்றால் நியாயத் தராசு அவன் பக்கம் சரிந்ததிருக்கிறது போல. உதட்டில் விரக்தி சிரிப்பு உதிர, சென்று படுத்துக் கொண்டாள்‌. சில நிமிடங்களில் அவர்கள் இருவரும் வரும் அரவம் கேட்டது. தாயும் மகனும் கீழே போர்வையை விரித்துப் படுத்துக் கொண்டனர்.

ஏழு மணிக்கு வாணிக்கு விழிப்பு வந்தது. அவள் எழும்போது கீர்த்தனா அருகே இல்லை. கழிவறையில் சப்தம் கேட்க, இவள் முகம் கழுவிவிட்டு தேநீர் தயாரிக்கச் சென்றாள். ஐந்து நிமிடத்திலே சிந்தாமணி எழுந்துவிட்டார்.

“வாணி... பரிதி ஃபோன்லருந்து அஜித்துக்கு ஃபோன் போட்டு குடுத்தா. அவுக அப்பாவுக்கு காலைல டீ குடிக்கலைன்னா நாளே ஓடாது. நான் அவனை சீக்கிரம் எழுந்து டீ வாங்கிட்டு வரச் சொன்னேன்!” சிந்தாமணி பரிதியின் அலைபேசியை நீட்ட, இவள் அவனுடைய கடவுச் சொல்லை ஒருமுறை முயற்சித்தாள். முதலில் வைத்திருந்ததை மாற்றியிருக்கிறான் என யோசித்து இளமதி என தட்டச்சு செய்ய, அது திறந்து கொண்டது. சட்டென முகம் மாறியதை மாமியார் அறியாமல் அஜித்திற்கு அழைத்து அவரிடம் கொடுத்துவிட்டு அடுப்பின் பக்கம் திரும்பி நின்று கொண்டாள்.

“அஜித்து... எழுந்திருச்சிட்டீயா டா? உங்கப்பா காலைல கடை தொறக்கப் போய்ட்டாரா? அவருக்கு டீ கொடுத்தீயா?” என சிந்தாமணியின் குரல் மெல்ல தேய, பரிதியின் வாசம் உள்ளே நுழைந்தது. சுவரில் சாய்ந்து கையைக் கட்டி நின்றவன், அவளையே பார்த்திருந்தான்.

தேநீர் கொதிக்கவும் அதை வடிகட்டி சர்க்கரை கலந்தவள், மெதுவாக அவனைத் திரும்பிப் பார்த்தாள். அந்தப் பார்வைக்காகத்தான் காத்திருந்தேன் என்பது போல வலது பக்க கன்னத்தை அவள் பார்வைபடும்படி திருப்பி காண்பித்தான். பின்னர் மறுபக்கத்தையும் காட்டினான். இரண்டு கன்னமும் சிவந்து வீங்கிப் போயிருந்தது. என்னவோ அடித்த குழந்தை தாயிடமே ஆறுதல் கேட்டு பாவமாய் நிற்பது போலிருந்தது அவன் செய்கை. சில நொடிகள் அவனை சலனமற்றுப் பார்த்தவள், தனக்கும் சிந்தாமணிக்கும் தேநீரை எடுத்துக்கொண்டு அகல, இவனும் குவளையைக் கையிலெடுத்தான்.

சிந்தாமணி மகனையும் கணவரையும் பற்றி ஏதோ பேச, கேட்டிருந்த வாணியை, “அண்ணி... ஒன் மினிட் வாங்களேன்!” என்ற கீர்த்தனாவின் குரல் கலைத்தது.

இவள் சென்றதும், “அண்ணி... பீரியட்ஸாகிட்டேன். பேட் வச்சிருக்கீங்களா?” சிறு சங்கடத்துடன் அவள் கேட்க, “இருக்கு... டோன்ட் நெவர்ஸ் கீர்த்தி‌. அப்படியே இல்லைனாலும் பக்கத்துலயே ஷாப் இருக்கு...” என்றவாறே அவளுக்கு அணையாடையைக் கொடுத்தாள்.

“சூடா டீ குடி.‌‌.. யூ வில் ஃபீல் பெட்டர்!” என அண்ணிக் கொடுத்த தேநீருடன் தாயோடு அமர்ந்த கீர்த்தனா, ஏதேச்சையாக அண்ணனின் முகத்தைப் பார்த்து அதிர்ந்து போனாள்.

“அண்ணே... என்னாச்சு? ஏன்... உன் முகம் சிவந்து போயிருக்கு?” அவள் பதற, பரிதி சங்கடத்துடன் தங்கையைப் பார்த்தான்.

“ம்மா... கைரேகை மாதிரி இருக்கு. என்னம்மா இது. அவனை அடிச்சியா நீ?” அவள் அதிர்ந்து தாயைப் பார்க்க, “அதெல்லாம் ஒன்னுமில்ல. பெரியவங்க விஷயத்துல நீ தலையிடாத கீர்த்தி...” என அவர் மகளை அதட்டினார்.

“அவன் என்ன தப்பு பண்ணாலும் இப்படி போட்டு அடிப்பீயா நீ? அண்ணன் என்ன ஸ்கூல் பையனா? அவனுக்கு கல்யாணமே ஆகிருச்சு. ஆனால் நீ இன்னும் கை நீட்டி அவனை அடிக்கிற?” அவள் ஆற்றமாட்டாமல் தாயிடம் எகிறினாள்.

“கீர்த்தி... அமைதியா இரு. ஒன்னுமில்ல!” பரிதி தங்கையை அமைதிப்படுத்த, அவள் அண்ணியைப் பார்த்தாள். நீங்களாவது சொல்லுங்க என்ற கோபப் பார்வை அது. வாணி சங்கடத்துடன் சின்னவளைப் பார்க்க, வெடுக்கென எழுந்து அறைக்குள் அடைந்தாள் கீர்த்தனா. காலை உணவு உண்ணும்போது கூட அவள் முணுமுணுவென தாயை வசைபாடியே படியேதான் சாப்பிட்டாள்.

“ம்மா... என் ப்ரெண்டைப் பார்த்துட்டு வரேன்!” என பரிதி அகல, கீர்த்தனா வயிற்று வலி என சென்று படுத்துக் கொண்டாள். மாமியாரும் மருமகளும் தனித்து விடப்பட்டனர். சிந்தாமணி தயங்கியபடியே பேச்சைத் தொடங்கினார்.

“பரிதி பண்ணது ரொம்ப தப்புதான் ஆத்தா. ஆனால் கோபத்துலயும் ஆத்திரத்துலயும்‌ மனுஷன் நிதானம் தவறிப் போய்டுவான்‌. அப்படித்தான் உன் புருஷனும் புத்திக் கெட்டுப் போய் இப்படி பண்ணிட்டான். அதுக்காக அவனை வேணாம்னு சொல்லுறது சரியா வாணி? அத்துவிட்ற உறவா இது? காலத்துக்கும் நீயும் அவனும் சேர்ந்து வாழணும் ஆத்தா!” என்றவரைப் பார்த்து விரக்தியாக சிரித்தவள்,

“உங்கப் பையன்தான் என்னை விட்டுட்டாரு அத்தை...” என்றாள். அவர் புரியாது மருமகளைப் பார்த்தார்.

“அவருக்கு என்னைப் பிடிக்கலையாம். நான் வெள்ளையா அழகா இல்லையாம். அவர் அழகா இருக்காரு. நான் அவருக்குப் பொருத்தம் இல்லைன்னு சொல்லிட்டாரு!” என சில நொடிகள் தயங்கி, “அவருக்கு வேற ஒரு பொண்ணை பிடிச்சிருக்கு அத்தை...” என்றாள். சிந்தாமணி அதிர்ந்து நெஞ்சில் கை வைத்தார். மருமகள் கூற்றில் அவருக்கு மனம் பதறிற்று.

“வாணி... எம்மவன் அப்படியெல்லாம் தப்பு பண்றவன் இல்ல. நீ ஏதோ புரியாம பேசுற!” அவருக்கு மகன் மீது கடலளவு நம்பிக்கையிருந்தது. இவள் கசப்பாய் சிரித்தாள்.

பின்னர் தன் அலைபேசியை எடுத்து மதியும் அவனும் காதலைப் பறிமாறிக் கொண்ட கணங்கள், முத்தமிட்டது என அனைத்தையும் காண்பித்தாள். மதி அவளது முகநூல் பக்கத்தில் இன்னும் இவற்றை அழிக்காமல் வைத்திருக்க, அதைத்தான் எடுத்துக் காண்பித்தாள். சிந்தாமணி, தான் கண்ணால் கண்டது எதையும் நம்ப முடியாமல் நெஞ்சம் நடுங்கிப் போய் அமர்ந்திருந்தார். அவரால் பரிதியின் செயலை நம்பவும் ஏற்கவும் முடியவில்லை. தாலியை அறுத்ததற்கே அவர் மனம் கொதித்துப் போனது. ஆனால் இப்போதோ மகன் செய்த செயலுக்கு அவனை என்ன செய்தால் தகும் என்று அவருக்கு கண்மண்‌ தெரியாமல் சினம் பொங்கிற்று.

“அத்தை... நீங்க கோபப்படணும்னு நான் இதை சொல்லலை. அவருக்கு அந்தப் பொண்ணைத்தான் பிடிச்சிருக்கு. நான் செட்டாக மாட்டேன்னு சொல்லிட்டாரு. பிடிக்காத ஒருத்தரைக் கட்டாயப்படுத்தி வாழ வச்சா அந்த வாழ்க்கை நல்லாருக்காது. மதி நல்ல பொண்ணுதான்!” மெல்லிய குரலில் இவள் பேச,

மருமகளைக் கண்டனமாகப் பார்த்தவர், “அந்தப் பொண்ணு எப்படி இவனுக்குப் பழக்கம்?” எனக் கேட்டார். அவர்களது அறிமுகம் முதல் நடந்தது அத்தனையும் கொஞ்சம் மென்று விழுங்கி உரைத்துவிட்டாள் இசைவாணி.

அவளுக்குப் பரிதியை மாட்டிவிட வேண்டுமென்ற எண்ணமில்லை. ஆனால், இதைத் தவிர வேறு என்ன காரணம் காண்பித்தாலும் சிந்தாமணி அவளை அவனோடு சேர்ந்து வாழ வற்புறுத்துவார். அதுவும் இல்லாமல் அவள் இல்லாத ஒன்றைக் கூறவில்லையே. எப்படியும் பரிதி, மதி பிரச்சனை தீர்ந்துவிட்டால் அவள்தானே இவர்கள் வீட்டு மருமகள். என்றோ தெரிய வருவதை இவளே தெரியப்படுத்தியிருந்தாள். சிந்தாமணி அனைத்தையும் கேட்டு நெஞ்சு கொதித்துப் போய் அமர்ந்திருந்தார். எத்தனை பெரிய விஷயம். ஆனால் யாரும் தங்களிடம் கூறவில்லை. அதுவும் பரிதி. அவனை இப்படியா தான் வளர்த்தோம் என பெற்ற மனம் கூனுக் குறுகிப் போயிற்று.

உடனே கணவருக்கு அழைத்து இந்த விஷயத்தைப் பகிர வேண்டுமென கோபம் மனம் கூற, திடுதிப்பென்று இப்படியொரு விஷத்தைக் கூறினால் மார்த்தாண்டம் பதறிவிடுவார் என எண்ணியவர், ஒரு முடிவோடு எழுந்து முந்தானையை இடுப்பில் சொருகினார்.

“உன் புருஷனுக்குப் ஃபோன் போட்டுக் குடு வாணி!” அவர் அழுத்தமாகக் கேட்க, வாணி தன் இரண்டாம் எண்ணிலிருந்து அவனுக்கு அழைத்தாள்.

“பரிதி... எங்க இருந்தாலும் பத்து நிமிஷத்துல வீட்டுக்கு வர்ற நீ!” அவர் கட்டளையாகக் கூற, அவனுக்கு என்னவோ ஏதோ என பதற்றம் சூழ்ந்தது.

“வரேன் மா...” என மகன் அவசரமாக கிளம்பினான்.

“விளக்கமாறு எங்க இருக்கு வாணி?” மருமகளிடம் சிந்தாமணி கேட்க, அவள் புரியாது விழித்தாள்.

“வேக்கம்தான் அத்தைப் போடுவேன். விளக்கமாறு இல்ல இங்க!” அவள் பதிலளிக்க,

“பக்கத்துல கடை எதுவும் இருக்கா. விளக்கமாறு வாங்கணும்!” அவர் கூறியது இவளுக்குப் பாதி புரிந்தும் புரியாத நிலைதான். குடியிருப்பிற்கு எதிரே அமைந்திருந்த சின்ன பல்பொருள் அங்காடிக்குச் சென்று புதிய விளக்குமாறு ஒன்றை வாங்கிக்கொண்டு வீடு வந்தார் பெண்மணி.

அவர் என்ன செய்யப் போகிறார் என ஊகித்தவள், “அத்தை... வேணாம் ப்ளீஸ்!” என தயங்கினாள். அவரிருக்கும் கோபத்திற்கு பரிதி கையில் கிடைத்தால் நிச்சயம் மருத்துவனையில் சேர்க்குமளவிற்கு காயம்படுவான் என பெண் மனம்‌ பதறிற்று. என்னதான் அவள் நடந்ததைக் கூறினாலும் தங்களுக்கிடையேயான ஒப்பந்தத்தைப் பற்றி உரைக்காது அவன் மீது மட்டுமே குற்றம் சுமத்தியதில் இவளுக்கு நெஞ்சு குறுகுறுத்தது. அதனாலே அவனைக் காப்பாற்ற முயன்றாள். ஆனால், சிந்தாமணியின் கோபம் காட்டாற்று வெள்ளம் போலிருந்தது. எப்போது பொங்கி அணையைக் கடக்கும் எனப் பயந்து போனாள்‌.

“நீ இதுல உள்ள வராத வா
ணி!” அவள் எதிர்த்துப் பேச முடியாத குரல் அது. பெரியவர் நெஞ்சு கொதித்துப் போய் அமர்ந்திருக்க, பரிதி வீடு வந்து சேர்ந்திருந்தான்.

தொடரும்...

 
Top