• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,327
Reaction score
3,954
Points
113
நேரம் – 43 💜

வலதுகையில் ஒரு பையைத் தோளோடு சேர்த்து மாட்டியிருந்த இசைவாணி, இடது கையில் கனமான பை ஒன்றைச் சுமந்து வந்தாள். கடைக்குச் சென்று வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி வர நேரமெடுத்தது. பரிதியை காவலாளி உள்ளே அனுமதித்திருக்க மாட்டார் என்ற எண்ணத்தில் இவள் இரண்டாம் தளத்திற்குச் செல்ல, படிகளில் அமர்ந்து கண்களை மூடி சுவரில் சாய்ந்தமர்ந்திருந்தான் அவன். பயணக் களைப்பில் அவன் முகம் சோர்ந்து கிடந்தது.

அவனைக் கண்டதும் வாணி திடுக்கிட்டு, “செக்யூரிட்டி...” எனக் கத்திவிட்டாள். அதில் பதறி‌ எழுந்தவன், அவளைப் பார்த்ததும் முகம் மலர்ந்தான் பரிதி.

“வாணி... என்ன இவ்ளோ வெயிட் தூக்கிட்டு வர!” எனக் கேட்டு அருகே வந்தவனைக் கண்டு முகத்தைச் சுளித்தவள், பார்வையாலே எட்ட நிறுத்திவிட்டாள். காவலாளி அவள் குரல் கேட்டு உள்ளே ஓடி வந்தார்.

அவரை இவள் கண்டனமாகப் பார்க்க, “மேடம்... புருஷன் பொண்டாட்டி சண்டைக்குள்ளே வர வேணாம்னு தம்பி சொன்னாப்புல. அதான் நானும் நீங்களே பேசிக்குவீங்கன்னு அவரை உள்ளே விட்டேன்!” என அவர் சின்ன குரலில் கூற, வாணியின் முகத்தில் அப்பட்டமான எரிச்சல் படர்ந்தது.

“அண்ணா... நான்தான் இந்தப் பையன் யாருன்னே தெரியலைன்னு சொல்றேன். நீங்க என்னடான்னா ஹஸ்பண்ட் அண்ட் வொய்ஃப்னு சொல்லிட்டு இருக்கீங்க?” எனக் கடுப்பாக கேட்டாள் அவள்.

“வாணி... நம்ப பிரச்சனைக்குள்ளே அவரைப் போட்டு திட்டாத!” பரிதி இடைபுக,

“யாரு மேன் நீ?” என ஒரே வார்த்தையில் அவனை அதிரச்‌ செய்தாள். பரிதி முகம் மாறாதிருக்க வெகு சிரமப்பட்டான்.

“அண்ணா... நீங்க போங்க. நான் பேசிக்கிறேன்!” பரிதி காவலாளியை அப்புறப்படுத்த முயன்றான். அவர் வாணியின் முகம் பார்த்து தயங்கி நின்றான்.

“நீங்க போங்க... நான் பார்த்துக்கிறேன். இப்போதான் ஞாபகம் வருது இந்தப் பையன் நான் பொள்ளாச்சில இருந்தப்போ பக்கத்து வீட்ல இருந்தான். தம்பி மாதிரிதான். சோ, போங்க நீங்க!” என்றவளின் பேச்சில் பரிதியின் முகத்தில் கடுப்பு படர்ந்தது. அவள் தம்பி என்றதில் அவர் விழித்தார். இதற்கு மேலும் அவர் இங்கிருந்தால் நன்றாயிராது என அவரைப் பேசி அனுப்பி வைத்தான் பரிதி.

“லூசா வாணி நீ... அவர்கிட்டே போய் தம்பி, நொம்பின்னு சொல்லிட்டு இருக்க?” அவளிடம் அதட்டல் போட்டான். வாணி அவனை ஒரு நொடி உறுத்து விழித்தபடியே கதவைத் திறந்து பையை உள்ளே வைத்தவள், “நீ இவ்ளோ தூரம் வந்திருக்க வேண்டிய அவசியமே இல்ல. ஒரு கால் பண்ணிருந்தா நானே வீக்கெண்ட் வந்து உங்க வீட்ல டைவர்ஸ் பத்தி பேசிருப்பேன். எனக்கும் பெரிய ரிலீஃப் கிடைச்சிருக்கும்!” என்றாள் அலட்சியமான குரலில்.

“நான் அதுக்காக வரலை வாணி...” அவன் தயங்கினான்.

“ஃபார் வாட்?”‌ சின்னதாய் தோன்றிய எரிச்சலுடன் கேட்டவள், “இதுக்கும் மேல உனக்கும் எனக்கும் என்ன இருக்கு? அதான் ரெண்டு வருஷம் என்னை அட்டை மாதிரி உறுஞ்சிட்டீயே. இனிமே உனக்கு என்னால ஹெல்ப் பண்ண முடியாது!” என்றாள் தீர்க்கமான குரலில்.

மூச்சை இழுத்துவிட்டவன், “வாணி... நான்... நான் உன்கிட்ட சாரி‌ கேட்கலாம்னு வந்தேன். இந்த ரெண்டு வருஷமா உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணியிருக்கேன், திட்டிருக்கேன். அழ கூட வச்சிருக்கேன். பட், நீ எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணிருக்க, நல்லது மட்டுமே செஞ்சிருக்க. அதைக் கூட சரியா புரிஞ்சுக்காத நான் ஒரு மடையன்!” அவன் தயங்கி தவிப்புடன் கூற, சுவரில் சாய்ந்து நின்றவள், அவனை நக்கலாகப் பார்த்தாள்.

“அப்படியா? அவ்ளோ நல்லவனா நீ?” என போலியாய் வியந்தவள், “சரி... சாரி கேட்டுட்டு கிளம்பிடு. இதுக்கும் மேல என் முன்னாடி வராத!” என்றாள் கண்டிப்பான குரலில்.

“சாரி வாணி... சீரியஸ்லி சாரி. நான் ரொம்ப கெட்டவன்‌.‌ உன்னை கஷ்டப்படுத்திட்டேன். எல்லாத்துக்கும் சேர்த்து என்னை மன்னிச்சிடு!” எனக் கெஞ்சலோடு அவள் கையைப் பிடிக்க வந்தவனைத் தவிர்த்து வெகுகவனமாக தள்ளி நின்றவள், “கேட்டாச்சுல... கிளம்பு!” என வெளியே செல் என்பது போல கையைக் காண்பித்துவிட்டு, அவன் அகலும் முன்பே கதவை அவன் முகத்தில் அறைவது போல அடித்துச் சாற்றினாள்.

பரிதி மேலும் ஏதோ சொல்ல வந்தான். அதற்குள்ளே வாணி சென்றுவிட, இவன் நெற்றியைப் பிடித்தான். ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறதே என உள்ளம் குமைந்தது. தான் கூற வருவதை அவள் கேட்டாலொழிய தன் பக்கத்தை எடுத்துரைக்க முடியாது என்றுணர்ந்தவன், விக்ரமாதித்தனாக மாற முடிவெடுத்தான்.

“வாணி... டோரை ஓபன் பண்ணு ப்ளீஸ்... ஒரு டென் மினிட்ஸ். நான் என்ன சொல்றேன்னு கேட்டுட்டு கதவைப் பூட்டு!” இவன் பலமுறை கத்தியும், கதவைத் தட்டியும் அவளிடம் பதிலே இல்லாமல் போக, தற்போதைக்கு அவள் கோபத்திற்கு தூபம் போட வேண்டாமென வேறு எவ்வித முயற்சியும் இல்லாமல் தன் பொதிகளை எடுத்துக்கொண்டு நண்பனின் அறைக்குச் சென்றான். கமலேஷ், கல்லூரியில் இவனோடு ஒன்றாகப் படித்தவன். அவனிடம்தான் சிறிது காலம் தங்குவதற்காக இடம் கேட்டிருந்தான்.

“என் ரூம்லயே தங்கிக்கோ மச்சான். பட், ஓனர் ரூம் ரெண்ட் ஒரு டூ தௌசண்ட் எக்ஸ்ட்ரா கேட்பாரு. அதை மட்டும் கொடுத்துடு!” என்றவனிடம் இவன் சம்மதம் தெரிவித்து, அங்கேயே இரவுணவை முடித்து உறங்கி எழுந்தான்.‌ காலையில் எழுந்து வேகவேகமாக கிளம்பியவன், வாணியிடம் எப்படி பேச வேண்டுமென கண்ணாடியின் முன்பு நின்று ஒருமுறை ஒத்திகைப் பார்த்தான்.

‘சே... ஸ்டபர்னா பேசாத டா. கொஞ்சம் பாவமா வச்சுக்கோ மூஞ்சியை. நீ பேசுற டோன்லயே அவ உன்னை மன்னிச்சிடணும்!’ என்றவன், வேண்டுமென்றே தலையை அரைகுறையாக வாரிக் கலைத்தான். சட்டையைக் கசக்கி அணிந்தான். தொளதொள கால்சராய் அணிந்தவன், தாடியை சவரம் செய்யவில்லை.

அவனைப் பார்த்த கமலேஷ், “மச்சான்... என்னடா இது? பிச்சைக்காரன் மாதிரி?” என முகத்தைச் சுளிக்க, தொண்டையைச் செருமிய பரிதி தனக்கும் மனைவிக்கும் இடையே சின்ன கருத்து வேறுபாடு என்பது போல கூறினான்.

“அது சரி.‌.. ஹஸ்பண்ட் அண்ட் வொய்ஃப்னா சண்டை வரத்தான் செய்யும். அதுக்காக உன் வொய்ஃப் இப்படி உன்னை வீட்டுக்குள்ள கூட விடாம தொரத்தியிருக்காங்களே. ரொம்ப பாவம் மச்சான் நீ!” கமலேஷ் கூற்றிற்கு இவன் வேகமாக மறுத்து தலையசைத்தான்.

“நோ... நோ. ரெண்டு வருஷமா அவளை நான் நிறைய பாடாப்படுத்திட்டேன் டா. ரொம்ப ரொம்ப நல்லவ என் பொண்டாட்டி. நான்தான் டா தப்பு பண்ணது!” என்னவோ அவளின் பிம்பத்தை நண்பனிடம் சரிய விடாமல் பாதுகாத்தான் பரிதி.

அவன் சட்டென சிரித்துவிட்டவன், “நம்ப தப்பு பண்ணாலே அவங்க கால்ல விழணும் டா. இதுல க்ரைம் உன்னோடது. சோ, என்னோட ஆழ்ந்த இரங்கல்டா உனக்கு!” என அவன் கேலியாக நகர்ந்தான்.

பரிதி, வாணி அலுவலகம் செல்லும் நேரத்தை நேற்றே வாயிற்காவலாளியிடம் விசாரித்து தெரிந்துகொண்டு, சரியாய் அந்த நேரத்திற்கு‌ அங்கு சென்று நின்றான். அவன் உள்ளே நுழைய முற்பட, “தம்பி... மன்னச்சிடுங்க. உங்களை உள்ளே விடக் கூடாதுன்னு வாணி மேடம் ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க. அப்படி நீங்க உள்ளே வந்தா அப்பார்ட்மெண்ட் செக்ரடரிக்கிட்டே கம்ப்ளைண்ட் பண்ணிடுவேனுட்டாங்க. எனக்கு என் வேலை முக்கியம்பா!” இவன் ஒற்றைக் காலை கூட உள்ளே நுழையவிடாமல் தடுத்து விட்டார் காவலாளி.

பரிதிக்கு முகம் சோர்ந்தது. ஆனாலும் தன்னால் அவர் வேலை பறிபோய்விடக் கூடாது என்றெண்ணியவன், “விடுங்கண்ணா..‌. நான் உள்ளே வரலை. வெளியவே நிக்கிறேன்...” என்றுவிட்டு கமலேஷிடம் வாங்கி வந்த இருசக்கர வாகனத்தில் சாய்ந்து நின்றான்.

வாயிலில் மகிழுந்து ஒன்று வந்து நிற்கவும், இரண்டு நிமிடத்தில் கீழே வந்தாள் இசைவாணி. அடர் நீல நிறத்தில் சுரிதார் அணிந்து கைப்பையைத் தோளில் சரிசெய்தபடி நடந்தவள், “வாணி... ப்ளீஸ், உன்கிட்டே பேசணும் நான்...” என்ற பரிதியின் குரலை அலட்சியம் செய்து மகிழுந்தில் ஏறியமர்ந்தாள். பரிதி மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டான். மாலை அவளது அலுவலக வாயிலில் நின்றான். அவள் அவனை மூன்றாம் மனிதன் போல கடந்தாள்.

தொடர்ந்து இரண்டாம் நாளும் அவன் வந்து நிற்க, “ம்மா... அந்த பச்சை சட்டைக்காரன் இரண்டு நாளா உங்களை ஃபாலோ பண்றான்.‌ எதுவும் தொல்லைப் பண்றானா? பார்க்க பொறுக்கி மாதிரி இருக்கான். நீங்க பேச்சு எதுவும் கொடுக்காதீங்க. லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு வார்த்தை சொல்லி வைங்க!” என ஓட்டுநர் பரிதியைக் கவனித்துக் கூறினார்.

“இல்லண்ணா... அதெல்லாம் ஒன்னும் இல்ல. ரெண்டு மூனு நாள் சுத்தீட்டு அவனே போய்டுவான். போலீஸ் எல்லாம் வேணாம்...” என இவள் தன்மையாய் மறுத்து முறுவலித்தாள். அவரும் அந்தப் பேச்சை அத்தோடு முடித்துக் கொண்டார். அடுத்து வந்த ஒருவாரமும் பரிதி அவள் செல்லும் இடத்திற்கெல்லாம் பின்னே சென்றான். அவளிடம் எப்படியாவது பேசிவிட முயல, வாணி அதற்கு இடம் கொடுக்கவில்லை.

சனிக்கிழமை விடுமுறை என்பதால் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் அன்றைக்கு அருகேயுள்ள உணவகம் ஒன்றிற்கு மதிய உணவு சாப்பிட சென்றிருந்தாள் வாணி. பரிதியும் அவள் பின்னே சென்றான்.

“ஹே இசை! கம்... கம். நீதான் செகண்ட். இன்னும் அந்த மூனு தடியனுங்களை காணலை!” நவநாகரீக யுவதி ஒருத்தி சிரிப்புடன் இவளை வரவேற்க, அவள் குறிப்பிட்ட அந்த மூன்று தடிமாடுகளும்‌ ஒன்றன் பின் ஒன்றாக வந்து சேர்ந்தனர்.

ஆறு நாற்காலிகளிருக்க, இவர்கள் ஐந்தை ஆக்கிரமித்து தங்களுக்கு வேண்டிய உணவை வரவழைத்தனர். கூடுதலாக இருந்த இருக்கையை இழுத்துப் போட்டு பரிதி அங்கே அமர்ந்தான். இசைவாணி எரிச்சலோடு கண்களை மூடித் திறந்தாள். கடந்த ஒரு வாரமாக எங்கு சென்றாலும் வால் போல இவன் பின் தொடர்தலில் அவன் மீதான கோபமும் வெறுப்பும் அவளுக்கு இன்னுமே உயர்ந்திருந்தது.

“ப்ரோ... அங்க டேபிள் ஃப்ரியா இருக்கே. அங்கப் போய் உட்கார்ந்துக்கோங்க!” மூன்று பேரில் ஒருவன் உரைக்க,

“ப்ரோ... என் பொண்டாட்டியோட சண்டை. அவ என்கூட சாப்பிட‌ வர மாட்டேன்னு சொல்லிட்டா. தனியா சாப்பிட ஒருமாதிரி இருந்துச்சு. அதான் நீங்க யங்ஸ்டரா இருக்கவும், உங்களோட ஜாய்ன் பண்ணிக்கிட்டேன்!” பரிதி பாவமான குரலில் கூற, மற்ற நால்வரும் என்ன சொல்வது எனத் தெரியாமல் திகைத்தனர்.

“ப்ரோ... சாரி. நீங்க இருந்தா எங்களுக்கு கம்பர்டபிளா இருக்காது!” இசை வாணியின் தோழி நிஹாரிகா அவனை அப்புறப்படுத்தப் பார்த்தாள்.

“நிக்கி, பரவாயில்லை விடு. அவர் நம்பளோட ஜாய்ன் பண்ணிக்கிடட்டும்!” அந்தக் கூடத்தில் ஆஜானுபாகுவாக இருந்த ரஞ்சித் கூற, வாணி படக்கென எழுந்துவிட்டாள். ஒரு வாய் உணவைக் கூட அவள் உண்ணவில்லை.

“ரஞ்சித், அவனை இங்கருந்து போகச் சொல்லு. இல்ல, நான் கிளம்பிடுவேன்!” கடுகடுத்தக் குரலில் அவள் கூற,

“சாரி ரஞ்சித் ப்ரோ... நான் போக மாட்டேன்‌. இங்கதான் இருப்பேன். நீங்க எல்லாரும் சாப்பிட்டதுக்கு நானே கூட பே பண்றேன்!” பரிதி பிடிவாதத்தோடு வாணியைப் பார்த்தவாறே கூற, அவள் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு அகலப் பார்த்தாள். அவள் உண்ணாமல் செல்கிறாளே எனப் பதறி எழுந்தான் இவன்‌.

“வாணி ப்ளீஸ்... என் மேலருக்க கோபத்துல சாப்பிடாம போகாத நீ. வந்து உக்காரு!” பரிதி அவள் கையை அழுத்திப் பிடித்தான்.

“கையை விடு... பப்ளிக் ப்ளேஸ்ல ஒரு பொண்ணுக்கிட்டே இப்படித்தான் நடந்துப்பீயா?” அவள் சீற, மற்றவர்கள் நடப்பதை புரியாது பார்த்தனர். இருவரும் தெரிந்தவர்களாக இருக்கக் கூடுமென நணபர்கள் உள்ளே நுழையாமல் வேடிக்கைப் பார்க்க,

“சரி நான் போயிடுறேன். ப்ளீஸ்... நீ சாப்பிட்டு போ!” அவள் கையை விட மாட்டேன் என இறுக்கிப் பிடித்தான் அவன். வெடுக்கென தன் கையை உதறியவள், அவன் கன்னத்திலே பளாரென்று அறைந்திருந்தாள். இவர்கள் சண்டையை சுவாரஸ்யமாக வேடிக்கைப் பார்த்திருந்த சிலர் இதை எதிர்பாராமல் திகைத்துவிட்டனர். பரிதி அதிர்ந்து போய் வாணியைப் பார்த்தான்.

“இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங். என் பின்னாடி வர்‌ற வேலையை நிறுத்து. உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உன்னைப் பார்க்க பார்க்க எனக்கு கோபமும் வெறுப்பும் அதிகமாகுது!” என சினத்துடன் அவள் சீற,

“ஏய்... இசை, என்ன பண்ற நீ?” என நிஹாரிகா வந்து தோழியைப் பிடித்திழுத்தாள். மற்ற மூவரும் பரிதியை அவ்விடத்தைவிட்டு அகற்றப் பார்த்தனர். அவன் ஒருவித பிடிவாதத்தோடு அங்கேயே நின்றான். ஆனாலும் இத்தனை பேரின் முன்பு அவள் அடித்ததில் முகம் கன்றிச் சிவந்தது. பலர் அவனைப் பாவமாய் பார்க்க, அந்தப் பார்வையில் கூனிக் குறுகிப் போனான். உள்ளம் வெதும்பிற்று. ஆனாலும் இறுகிப் போய் நின்றான்.

தன் கைப்பையை எடுத்துக்கொண்ட வாணி, விறுவிறுவென அகல, நிஹாரிகா அவளைப் பின்தொடர்ந்து சென்றாள். வாணியை அவள் வற்புறுத்தி அழைக்க, “சாரி நிக்கி, நான் வீட்டுக்குப் போறேன். என்னால டே ஸ்பாயிலாக வேணாம். நீங்க என்ஜாய் பண்ணுங்க!” என்றவள், விறுவிறுவென அகன்றாள். மற்ற மூவரும் பரிதியை அமர வைத்து அவன் யாரென விசாரித்தனர். எப்போதும் அமைதி, சின்ன புன்னகை என அவர்கள் பார்த்த அமைதியான இசைவாணி இன்றைக்கு ஒருவனைப் பொது இடத்தில் கை நீட்டி அடித்திருக்கிறாள் என்றதை அவர்களால் நம்பவே முடியவில்லை.

“வாணி என் வொய்ஃப். வீ ஹேட் சம் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங். இன்னொரு நாள் நான் உங்ககிட்டே பேசுறேன். இப்போ கிளம்புறேன்!” என பரிதி
சென்றுவிட்டான்‌. வாணியின் கைவண்ணத்தில் அவன் கன்னம் செம்மை பூசியிருந்தது.

மற்ற நால்வரும் உண்டு கிளம்பினாலும் வாணி தனக்கு திருமணமானதை தங்களிடம் மறைத்துவிட்டாள் என மனத்தாங்கலுடன் தான் சென்றனர். ஆனாலும் அவள் வந்த இந்த சொற்ப மூன்று மாதத்தில் அவளைப் பற்றி முழுமையாக கூற வேண்டிய அவசியம் என்ன எனத் தனக்குத் தானே கேட்டுக்கொண்டு, அவளது தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் மூக்கை நுழைக்காது நாகரீகமாக நடந்து கொண்டனர்.

இசைவாணி வீட்டிற்குள் நுழைந்ததும் கோபத்தைக் குறைப்பதற்காக மூச்சு பயிற்சி, யோகா செய்தாள். அவள் இங்கு வந்ததும் முதலில் யோகா வகுப்பில்தான் சேர்ந்தாள். அதீத சோகம், மகிழ்ச்சி, வெறுப்பு, கோபம் என எவ்வித உணர்வாலும் தான் முடங்கி விடக் கூடாதென தினமும் தியானமும் யோகாவும் செய்கிறாள்.

இங்கு அவள் வந்து சேர்ந்தபோது அவளைச் சுற்றியிருந்த தனிமை அவளை நிரம்ப அச்சுறுத்தியது. யாருமற்று வீட்டிலே அடைந்து கிடந்தவளுக்கு தாய் இறந்தபோது வந்த மனவழுத்தம் மீண்டும் வந்து மெல்ல ஓட்டிக் கொண்டது. சென்ற முறை போலல்லாது இம்முறை விரைவிலே அவள் தன்னை மீட்டெடுத்தாள்.

வேண்டாமென செருப்பால் அடிக்காத குறையாக தாலியை அறுத்தெறிந்து அனுப்பிய ஒருவனுக்காக அவள் ஏன் வாழ்க்கையில் முடங்கி செல்ல வேண்டும். உண்மையில் பரிதி தன் அன்பிற்கு தகுதியில்லாதவன். அவனிடம்‌ அன்பை கொட்டிக் கவிழ்த்தது தன் தவறு. உதாசீனம் செய்துவிட்டு போனவன் சுகமாக வாழ, தான் ஏன் தன்னுணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாது புழுங்கி மடிய வேண்டுமென தனக்குத் தானே கேட்டு, மெதுவாய் அதிலிருந்து வெளிவர முயன்றாள்.

ரத்தமும் சதையுமாக அவள் இந்த உலகத்திற்கு வர முழுமுதற் காரணமாக இருந்த தாய் தந்தை இறந்த போது அவளென்ன அவர்களுடனே சென்றுவிட்டாளா என்ன? இல்லையே, அழுது கரைந்தாலும் கூட தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள எண்ணவில்லை. அப்படியிருக்கையில் வெறும் இரண்டு வருடம்‌ மட்டுமே பழகியவனுக்காக, வேண்டாமென முகத்தின் முன்பே தயவுதாட்சண்யம் பார்க்காமல் உதறி சென்றவனுக்காக அவள் வாழாதிருக்க முடியுமா?

எப்படியிருந்தாலும் அவளின் மிச்ச காலத்தை வாழ்ந்துதானே ஆக வேண்டும். நின்று நிதானமாக அவன் விட்டுச் சென்ற இடத்திலே பரிதியோடு அவன் ஆதியையும் அந்தத்தையும்‌ புதைத்து அழுது முடித்தவள், புதிதாய் தன் வாழ்க்கையைத் துவங்கியிருந்தாள்.

யோகா, தியானம்,‌ புத்தகம், நண்பர்களோடு வெளியே சுற்றுவது, அவர்களைத் தன் வீட்டிற்கு அழைப்பது என எப்போதும் தன்னை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள முயன்றாள். நான் நன்றாக இருக்கிறேன் என மனத்தில் ஆழப் பதித்தாள். பரிதியின் இன்மை எவ்வகையிலும் தன்னைப் பாதிக்காமல் தன்னை தானே மெல்ல தேற்றிக் கொண்டாள்.

அவள் எல்லாவற்றிலுமிருந்து மீண்டு வந்திருக்க, மீண்டும் புதிதாய் பெய்த மழைக்கு முளைத்த காளான் போல வளர்ந்து நிற்பவனைப் பார்த்து அவளுக்கு கோபம் மட்டும்தான் வந்தது. முன்பு‌ போல அன்பும் அக்கறையும் அவன் மீது முகிழ்க்கவில்லை. பரிதி என்ற மனிதன் இளமதிக்கானவன் என இவள் ஆணியடித்ததைப் போல மனத்தில் பதிந்து கொண்டாள். அதனாலே அவனைப் பார்த்ததும் இவளுக்கு எதுவுமே தோன்றவில்லை. அடுத்தவளின் கணவன் எனத்தான் எண்ணினாள்.

‘நான் மதியோட வாழ்ந்தாதான் சந்தோஷமா இருப்பேன். நீ... நீ எனக்கு அக்கா மாதிரி வாணி!’ எத்தனை முறை இந்த வார்த்தைகளைக் குத்தீட்டிப் போல அவளைக் காயப்படுத்தியிருக்கின்றன. அவளுக்கும் இந்த உறவிற்கு எதிர்காலம் இல்லையென்று தெரியும். அவனைக் கட்டாயப்டுத்தியோ, கட்டுப்படுத்தியோ அவனுடன் வாழும் எண்ணம் சர்வநிச்சயமாக இவளுக்கு இல்லை. ஆனால் அவனுடன் இருந்த காலத்தில் இவள் பரிதி மீது காண்பித்த அன்பு மிகத் தூய்மையானது, அப்பழுக்கற்றது.அவனைப் பிடித்து, பிரியம் வளர்த்த ஒரு காரணத்திற்காக அவன் செயல்களையும், பேச்சுகளையும் தாங்கிக் கொண்டாள். சுந்தரியிடம் அவன் காண்பித்த அக்கறையும், அவருக்கு அவன் கொடுத்த நிம்மதியும் இவளைக் கட்டிப் போட்டு வைத்திருந்தன.
ஆனால் மதி, ஒரு மூன்றாவது பெண் தன்னை ஏன் காயப்படுத்தி அழ வைக்க வேண்டும் என கோபமும் ஆற்றாமையும் பெருகிற்று.

அவளுக்கும் தனக்கும் என்ன முன் விரோதமா என்ன? எதுவுமே இல்லை. ஆனாலும் அவள் தன்னை எதிரியாகப் பாவித்து வலிக்க வலிக்க அடித்த போது பரிதி இவள் பக்கம் நிற்காமல் போனபோது தான் வாணி மொத்தமாகக் காயம்பட்டிருந்தாள். அவள் அவன் மீது காண்பித்த நேசத்திற்கு குறைந்தபட்சம் மதியை அவன் கண்டித்திருந்தால் இவளுக்கு சின்ன நிம்மதி கிடைத்திருக்கும். ஆனால் அவளுக்காக தன்னிடம் வாதாடி தாலியைக் கழற்றிக் கொடுத்த போதுதான் வாணி மொத்தமாய் வெறுத்துப் போனாள்.

முதன்முதலாக பரிதி மதியை முத்தமிட்டதை இவள் பார்க்க நேர்ந்தபோது சத்தியமாய் உடைந்தழுதாள். உதட்டைக் கடித்து அழுகையை அடக்கி, தளர்ந்த நடையை சரிசெய்து அறைக்குள் அடைந்தவளுக்கு, அன்றைக்கு இரவு உறக்கமே வரவில்லை. மெல்லிய விசும்பலுடன் தேம்பிக் கொண்டே கிடந்தாள்.
எதிர்காலம் இல்லாத ஒருவன் மீதான பிரியம் இப்படித்தான் வலிக்க வலிக்கத் தன்னை அடிக்கும் என புரிந்து கொண்டவள், நாகரீகமாக விலகிக் கொள்ளத்தான் முடிவெடுத்தாள். என்ன அதை அவளே செய்திருந்தால், இப்போது பரிதி வந்து நிற்கும்போது அவனை குறைந்தபட்சம் நண்பனாக பாவித்திருக்க முடியும்.

என்னவோ இதை நீ செய்தாக வேண்டுமென அவளின் உணர்வைக் கொன்று புதைத்து அவர்களே அம்முடிவை எடுக்க வைத்ததுதான் இவளை அவனிடமிருந்து மொத்தமாய் தள்ளி நிறுத்திற்று. நண்பன், அறிந்தவன், தெரிந்தவன் என்ற எவ்வித பசப்பு வார்த்தைகளைக் கொண்டும் அவனைத் தன் வாழ்க்கையில் இணைத்துவிடக் கூடாது என்ற அறுதியோடுதான் இந்தியாவில் கால் வைத்திருந்தாள்.

நடந்த அனைத்தையும் கடந்துவிட்டேன் என்ற எண்ணத்தில் சுவரில் சாய்ந்து கண்களை மூடினாள் இசைவாணி. தியானம் செய்தும் கூட மனம் நிலையாக மறுத்தது. மூடிய இமைகளுக்குள் சற்று முன்னர் பரிதியின் அதிர்ந்த முகம் வரவும், படக்கென கண்ணைத் திறந்தாள்.

சுயநலவாதி, இந்தப் பரிதி ஒரு முழுமுதற் சுயநலவாதி எனத் தெரிந்தும் இவள் அவனுக்காக அனைத்தையும் செய்திருக்கிறாள். அன்பு ஒரு முட்டாள்தனம். தன்னையும் தன் பிரியத்தையும் பொருட்படுத்தாதவர்களிடம் தான் மானம், வெட்கம், ரோஷம் எல்லாவற்றையும் துறந்து ஏற்றுக்கொள்ளச் சொல்லி கெஞ்சும். ஆனால் வாணி அப்படியில்லை. அவளுக்கு சுயமரியாதை நிரம்ப இருந்தது.

அதுதான் வெகு தெளிவாக உரைத்துவிட்டானே பரிதி. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கும்போது தன்னை அங்கே வேண்டாத பொருளாக எண்ணினாள். அவர்களுக்கு இடையில் தனக்கு எந்த வேலையும் இல்லை. என் உணர்வுகள் என்னோடு போகட்டும்‌‌. பிரியத்தை உரியவர்களிடம் சேர்க்க வேண்டுமென்று எவ்வித கட்டாயமும் இல்லையே.

இவள் ஒரு தோழனாக அவனைப் பிடித்திருக்கிறது என்று கூறியிருந்தால் கூட, ‘சீ... வயசுல சின்ன பையன்கிட்டே இப்படித்தான் பேசுவீயா? உன்னால உன் ஃபீலிங்க்ஸை கண்ட்ரோல் பண்ண முடியலையா? நீயெல்லாம் என் மேல ஆசைப்படலாமா? என்னோட எக்ஸ்பெக்டேஷன்ல எ-கிட்டே கூட நீ வரமாட்ட!’ என தன் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தியிருப்பான். இதெல்லாம் வெறும் அவள் கற்பனைக்கு எட்டிய வார்த்தைகள். இதற்கு மேலும் அவளை வதைத்துப் போட்டிருப்பான் அவன். அவள் அவனை உடல் தேவைக்காக நாடினால் என்று கூட நாக்கு கூசாமல் சொல்லத் தயங்காத ஜென்மங்கள் பரிதியும் மதியும். அப்படிப்படவனுக்காக ஒரு சொட்டு கண்ணீரைக் கூட வாணி இழக்கத் தயாராக இல்லை.

இப்போது அவன் வந்ததின் நோக்கம் அவளுக்குப் புரிந்தது‌. அவனுக்கும் மதிக்கும் வீட்டில் பேசி திருமணம் முடித்து வைப்பதற்காக தன் காலில் கூட விழத் தயங்காத சுயநலக்காரன் பரிதி. அதற்காகத்தான் வந்திருப்பான். மதி தூபம் போட்டு அனுப்பியிருப்பாள்.

எங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாட்டில் என் மீதுதான் முழுத் தவறும் என குற்றத்தை ஒப்புக்கொள்ளும் குற்றவாளியாகத் தன்னைக் கூண்டில் ஏற்றி என் கண்ணீரில் அவர்கள் கழுத்தில் மாலை ஏற வேண்டும் என்பதுதான் மதியின் குரூர எண்ணமாக இருக்க கூடும். அதற்கும் சரியென தலையை ஆட்டிவிட்டு இந்தப் பரிதி தன் பின்னே காலைச் சுற்றும் நாய் குட்டியாக சுற்றுகிறான். அவள் ஒருகாலும் இதற்கு சம்மதிக்கப் போவதில்லை.

அதுதான் அவர்கள் யாருமே வேண்டாமென இவள் அமைதியாக வாழ நினைத்து ஒதுங்கிவிட்டாளே. ஆனாலும் இப்படி துரத்தி துரத்தி தன்னைக் காயப்படுத்தி குளிர் காய நினைக்கிறான் இந்தப் பரிதி. இவளுக்கு நெஞ்சு கனத்தது.

நன்றிகெட்ட ஜென்மம் அவன். அவனுக்காக எத்தனை வித்ததில் இவள் விட்டுக் கொடுத்துப் போயிருக்கிறாள். அவன் குடும்பத்தை இன்றுவரை தன் குடும்பமாக எண்ணி அவர்களுக்கு ஒன்றென்றால் இவளுக்குப் பதறித் துடிக்கிறது.

ஆனால் அவன் ஈவு இரக்க மற்றவன். என்னை அழ வைத்து பார்ப்பதுதான் அவர்கள் எண்ணமென்றால் அது எப்போதும் நடக்காது. நான் மீண்டுவிட்டேன். ஏற்கனவே ஒருவன் துரோகத்தைப் பரிசளித்துவிட்டுப் போனான். இவனாவது சுயநலக்காரன் என அவளுக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் அர்ஜூன், அவன் பெயரை நினைக்கவே இவளுக்கு கசந்து வழிந்தது. அவனையே கடந்து விட்டாள். இந்தப் பரிதியெல்லாம் தன்னை ஒன்றுமே செய்ய முடியாது.

என் பலவீனம் தாயும், தந்தையும்தான்‌. அவர்களே இல்லாத உலகத்தில் அவளுக்கு பலவீனமென எதுவுமே கிடையாது. வாழும் வரை தன் இஷ்டப்படி வாழ்ந்து முடித்து விட வேண்டும். சாவு வரும்போது அதை மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றெண்ணி பெருமூச்சுவிட்டாள் வாணி.


தான் கொடுத்த அறைக்கு எப்படியும் பரிதி தன்னைத் தேடி வர மாட்டான் என அவள் உறுதியாய் எண்ண, மறுநாளே வந்து நின்றான் அவன்.

தொடரும்

 
Top