• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,351
Reaction score
4,091
Points
113
நேரம் – 41 💜

தானியில் சென்று பரிதி வீட்டின் முன்னே இறங்கிய வாணிக்கு உள்ளே செல்ல கால்கள் ஒத்துழைக்கவில்லை. அவனால் ஏற்பட்ட காயத்தின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. அவன் மீதான அதிருப்தியும் தற்போதைய அவன் செயல்களில் உயர்ந்திருக்க, அப்படி மானம், ரோஷத்தையெல்லாம் வெளியே வைத்துவிட்டு உள்ளே செல்ல வேண்டுமா என மனம் கேள்வியெழுப்பியது.

அம்சவல்லி வற்புறத்தவில்லை எனில் இவள் இங்கு வந்திருக்கவே மாட்டாள். தங்கள் விவாகரத்தை தெரியப்படுத்த மட்டுமே இந்த வீட்டிற்கு வர வேண்டும் என தான் நினைத்து வைத்தவற்றை அவளே மீற வேண்டிய சூழ்நிலை. சில நொடிகள் மூச்சை இழுத்துவிட்டாள்.

பரிதி என்ற தனிமனிதன் செய்த தவறுக்காக அவன் குடும்பத்து ஆட்களை குற்றம் சுமத்துவது அப்பத்தமென இளகிய மனம் கூறிற்று. தாய் இறந்த போது சிந்தாமணி எப்படித் தன்னை மடிதாங்கினார் என்ற நினைவு எழ, மற்றதையெல்லாம் உதறிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

சின்னவர்கள் இருவரும் கல்லூரிக்குச் சென்றிருக்க, கூடத்தில் பாயை விரித்து விச்ராந்தையாகப் படுத்திருந்த சிந்தாமணி ஏதோ ஒரு தொலைக்காட்சி தொடரில் மூழ்கியிருந்தார். இவள், தான் அணிந்திருந்த உடையை ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொண்டாள். உயர் கழுத்து வைத்து முதுகோடு மறைத்திருந்தது அந்த சுரிதார். கடந்த நான்கு நாட்களாக‌ இதே போலத்தான் உடை அணிகிறாள். அவள் கழுத்தில் தாலி இல்லையென்று தெரிந்தால் அம்சாவும் காமராஜூம் பயந்துவிடுவார்கள் என அவர்களிடம் மறைந்தாள்.

இங்கே சிந்தாமணி கண்களிலும் கண்டிப்பாக தவறாமல் தென்பட்டுவிடும் என்பதால் இப்போதும் முதுகையும், கழுத்தையும் முழுமையாக மறைக்கும் வகை உடையை அணிந்து வந்தாள். திடுதிப்பென்று வந்து நிற்கும் மருமகளை எதிர்பாராது திகைத்த சிந்தாமணி எழுந்துவிட்டார். என்னவோ, ஏதோ என அவர் மனம் பதறிற்று.

“என்ன வாணி... சொல்லாம கொள்ளாம வந்திருக்க, நீ மட்டும் வந்திருக்க, பரிதி எங்க? அவன் நல்லா இருக்கான் தானே?” என பெரியவர் படபடக்க, இவள் முன்னறிவிப்பின்றி வந்த தன்னையே நொந்தவள், அவன் நன்றாக இருக்கிறான் என அவரை ஆசுவாசம் செய்தாள்.

“நல்ல பொண்ணுமா நீ. நான் பயந்துட்டேன். தனியாவா லண்டன்லருந்து வந்த? அவனையும் கூட்டிட்டு வந்திருக்க வேண்டியதானே வாணி?” என அவர் விசாரிக்க, இவள் சென்ற வாரம்தான் பெங்களூருக்கு மாற்றலாகி வந்ததாக உரைத்தாள்.

“ஏன் வாணி இப்படி இளைச்சு போய்ருக்க? சரியா சாப்பிட்றதில்லையா நீ? போ... போய் மூஞ்சி கைகாலை கழுவிட்டு வா. எனக்கும் உன் மாமாவுக்கு மட்டும்தான்னு நான் தொட்டுக்க ஒன்னும் செய்யலை. வடகத்தை பொரிச்சுக்கலாம்னு விட்டுட்டேன். பத்து நிமிஷம் பொறு. ஏதாவது செய்றேன்!” என அவர் அகல, இவள் தயங்கியபடியே பரிதியின் அறைக்குள் நுழைந்தாள். கொஞ்சம் அலங்கோலமாகத்தான் காட்சியளித்தது அறை. புதிதாய் வெள்ளை அங்கி ஒன்று சுவரில் தொங்கியது. மேஜை முழுவதும் மருத்துவம் சம்பந்தமான புத்தகங்கள். அஜித் இந்த அறையை உபயோகிக்கிறான் என உணர்ந்தவள், கழிவறை சென்று வந்தாள்.

அதற்குள்ளே இரண்டு முட்டைகளைப் பொரித்து, சாம்பார், மாங்காய் ஊறுகாய், வடகம், சோறு என மருமகளுக்குப் பரிமாறினார் பெரியவர்.

“நீங்க சாப்பிடலையா அத்தை?” எனக் கேட்டவளுக்கு உணவு தொண்டையில் இறங்கவில்லை. எவ்வகையான உறவுமில்லாத இடத்தில் எப்படித் தன்னால் பொருந்திப் போக முடியுமென மனம் விலகி நிற்கச் சொல்லி அறிவுறுத்தியது. இப்போது அவள் இந்த வீட்டு மருமகள் அல்ல. தார்மீக முறைப்படியும் சரி, சட்டப்படியும் சரி, அவர்கள் விவாகத்தை ரத்து செய்திருக்க, இவளால் சிந்தாமணி முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. அவர் மகனைப் பற்றிக் கேட்டார்.

“அவனுக்கும் உனக்கும் சண்டை சரியாகிடுச்சா வாணி? அவன் ஏதாவது சேட்டை பண்ணா, அதட்டி வைம்மா. இல்லைன்னா ரொம்ப ஆடுவான். அதுக்காக நிறைய திட்டிடாத. பிள்ளை ரொம்ப தூரத்துல இருக்கான். ஏங்கிப் போய்டுவான். நீ இங்க வந்துட்டீயே. பாவம் அவன் சாப்பாட்டுக்கு என்ன செய்றானோ?” எனக் கவலைக் கொண்டவர், “அவனோட நீயும் ரெண்டு வருஷம் அங்கேயே இருக்கலாம்ல ஆத்தா?” எனக் கவலையுடன் கேட்டார்.

“அப்படி அங்க தங்க முடியாது அத்தை‌‌. என் பிராஜெக்ட் முடிஞ்சுடுச்சு. சோ, நான் பெங்களூர்லதான் வேலை பார்க்கணும். மறுபடியும் லண்டன் போகணும்னா வேலையை விட்டாதான் முடியும். எனக்கு வேலை ரொம்ப முக்கியம் அத்தை. இன்னும் வீட்டு லோன் முடியலை!” என்றாள். அவருக்கும் அவள் சூழ்நிலை புரிந்தது.

“சரித்தா... பேசாம அவனுக்கு நீ வேலை பார்க்குற இடத்துலே வேலை வாங்கி கொடேன்!” என வெகுளியாக சிந்தாமணி கேட்க, இவரைப் போய் பரிதிக்கு ஏமாற்ற எப்படி மனம் வந்தது என இவளுக்கு ஆதங்கமாய் இருந்தது. அவளிடம் பேசிய பத்து வார்த்தைகளில் ஆறு வார்த்தை பரிதி என்றுதான் வந்தது. இங்கே இந்தப் பெண்மணி மகனைப் பற்றி கவலைக்கொள்ள, அவன் அங்கே வாரத்திற்கு நான்கு நாட்கள் குடித்துவிட்டு ஊரைச் சுற்றுகிறானே எனக் கோபம் பொங்கிற்று. ஆனாலும் இப்போது அவள் மூன்றாம் மனுஷி. அவனைக் கேள்வி கேட்கவோ, இவரிடம் அவனைப் பற்றிக் கூறவோ எவ்வித உரிமையும் அற்றவள்.

முன்பும் அவளுக்கு அந்த உரிமை இருந்தது இல்லை. எப்போது எப்படி முகத்தில் அடித்தாற் போல பேசுவான் என எண்ணியே வாணி அவனின் தனிப்பட்ட விஷயங்களில் பெரிதாய் தலையிடவில்லை. ஒரு தோழியாக அவனுக்கு எடுத்துக் கூறலாம் என்ற எண்ணம் வந்தாலும், அதை உள்ளேயே அமிழ்த்திவிடுவாள்.

தன் முகத்தையே சிந்தாமணி பார்த்திருப்பது தெரிய, “இல்ல அத்தை... இது பெரிய ஐ.டி சொல்யூஷன். அவ்ளோ ஈசியா அங்கேருந்து இங்கே வேலை கிடைக்காது!” என்றவள், அவருக்குப் புரியும்படி எளிமையாக விளக்கினாள். அவற்றையெல்லாம் கேட்ட சிந்தாமணி, இவ்வளவு இருக்கிறதா என ஆச்சர்யப்பட்டார். பின்னர் லண்டனில் எப்படி வாழ்க்கை சென்றது என அவர் கேட்க, இவள் பொறுமையாய் சாப்பிட்டுக் கொண்டே பதிலளிக்க, மார்த்தாண்டம் வந்துவிட்டார்.

“ஏன் ஆத்தா... இப்படித்தான் சொல்லாம கொள்ளாம வந்து நிக்கிறதா? ஒன்னு கெடக்க ஒன்னு ஆகிப் போச்சுன்னா என்ன பண்றது? இனிமே இந்த மாதிரி சொல்லாம வரக் கூடாது!” என அவர் கடிய, இவள் தலையை மட்டும் அசைத்தாள்.

“இந்தா சிந்தாமணி... இதை மருமகளுக்கு வச்சுக் கொடு!” என்றவர், ஜிலேபியும் பால்கோவாவும் வாங்கி வந்திருந்தார். அவள் என்றோ ஒருநாள் உண்டுவிட்டு நன்றாக இருக்கிறது எனக் கூறியதை நினைவு வைத்து அதே கடையில் வாங்கி வந்திருக்கிறார் எனப் புரிந்தவளுக்கு ஒரு மாதிரியாகிற்று. இவர்களிடமா முகத்தை காண்பித்து, பேசக் கூடாதென்று நினைத்தோம் எனத் தன்னைத் தானே எண்ணி வெட்கிப் போனாள். பரிதி போலொரு சுயநலமான மனிதனுக்கு இப்படியொரு அம்மா, அப்பா என எண்ணி கேலியாகச் சிரித்தாள்.

மார்த்தாண்டம் அவளிடம் எப்படி வந்தாள், தற்போது எங்கே இருக்கிறாள், அவள் முன்பு வேலை பார்த்தது போல கோயம்புத்தூருக்கே வர முடியாதா? தனியாக அங்கே பாதுகாப்பில்லாத இடத்தில் எப்படி என விசாரிக்க, “வீடு ரொம்ப சேஃப்டிதான் மாமா. அங்க பக்கத்துல ஃபேமிலி நிறைய இருக்காங்க. ஆஃபிஸ் கேப்லதான் போவேன், வருவேன்!” என்றவள், தற்போதைக்கு இங்கே வேலை மாற்றல் கிடையாது என்றாள்.

“ஏன் வாணி... இப்படி நீயொரு பக்கம், அவனொரு பக்கம் இருக்கீங்களே! எப்போதான் எங்களோட இருக்கப் போறீங்க. அவன்தான் அங்கேயே கிடக்கான். சரி நீயாவது எங்களோட வந்து இருக்காம, தனியா இருக்க. ஒத்தாளுக்கு என்ன சமைச்சு சாப்பிட்றதுன்னு யோசிச்சு சாப்பிடாம இருக்காத வாணி. நல்லா சாப்பிடு. பிரசவதப்போ கஷ்டப்படத் தேவையில்லை!” என அவர் பேச, இவள் முகம் மாறாது கேட்டு, முயன்று முறுவலித்தாள். மார்த்தாண்டம் உண்டுவிட்டு சற்று நேரம் ஓய்வெடுத்துக் கிளம்பினார்.

“ஏன் வாணி... பரிதி அப்பா இருந்தாருன்னு இதைக் கேட்கலை. உன் புருஷன் உன்கிட்டே எதுவும் சொன்னானா? ரெண்டு மூனு மாசமா ஒழுங்கா அவன் பணம் அனுப்பலை. அவுக அப்பாவுக்கு பெரிய கடையா டவுன்ல வைக்கலாம்னு சொன்னான். அதுக்காக இடம் எதுவும் வாங்கிப் போட்ருக்கானா என்ன? நான் கேட்டா ஏதும் சொல்ல மாட்றான். அது ஏதோ சொல்வீங்களே... சப்புரைஸ்!” என அவர் தடுமாற,

“சர்ப்ரைஸ் அத்தை!” என்றவள் இவள்.

“அதான்மா... அந்த மாதிரி எதுவும் செய்றானா உன் புருஷன்? என்னதான் அவரை முறைச்சுட்டே திரிஞ்சாலும் அப்பா மேல ரொம்ப பாசமானவன்மா அவன். அவருக்கு ஒன்னுன்னா துடிச்சுப் போய்டுவான்!” என மகனை எண்ணி வாஞ்சையுடன் பேசினார் சிந்தாமணி. அவரைப் பார்த்து இவளால் வருத்தப்பட மட்டுமே புரிந்தது. மூன்று மாதங்களாக அவன் பணம் அனுப்பவில்லை எனில் என்ன செய்திருப்பான் என இவளால் ஊகிக்க முடிந்தது.

“என்கிட்ட எதுவும் உங்க புள்ளை சொல்லலையே அத்தை. அடுத்த மாசம் வருவாரு. நீங்களே கேளுங்க!” என்றதோடு அந்தப் பேச்சை இவள் முடித்தாள். என்னவோ அவர் பேசும்போது இவளுக்கு கோபம் பொங்கிற்று. வீட்டின் நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டியவன், இப்படி ஊதாரித்தனமாக சுற்றுகிறானே என ஆதங்கத்துடன் நினைத்தாள்.

“சின்னவ வர்ற நேரமாச்சு வாணி. வந்ததும் பசிக்குதுன்னு சொல்லுவா. இன்னைக்கு சோறும் இல்லை. ஏதாவது செய்றேன் நான்!” என அவர் எழ,

“அத்தை... நீங்க இருங்க. நான் அவளுக்குப் பிடிச்ச மாதிரி ஏதாவது ஸ்னாக்ஸ் செய்றேன்...” என வாணி சமையலறைக்குள் நுழைந்தாள்.

சிந்தாமணி காலிஃப்ளவர் வாங்கி வைத்திருக்க, இவள் அதை சுடுநீரில் போட்டு கழுவி எடுத்துப் பொடி பொடியாக நறுக்கி மிளகாய் பொடி தூவி எண்ணெயில் பொரித்தெடுத்தாள். ஒன்றை எடுத்து சாப்பிட்டு பார்க்க, சுவை நன்றாகயிருந்தது.

“ம்மா...” என அழைத்துக் கொண்டே வந்த கீர்த்தனா, “என்னம்மா‌ பொரிக்கிற? வாசனை வாசல்வரை வருதே...” என யோசனையுடன் சமையலறைக்குள் எட்டிப் பார்க்க, சின்ன சிரிப்புடன் இசைவாணி நின்றிருந்தாள்.

அவளை எதிர்பாராமல் திகைத்தவள், “அண்ணி... வாட் எ சர்ப்ரைஸ்! சொல்லவே இல்லை நீங்க வரீங்கன்னு!” என ஓடிச் சென்று அவளை இறுக அணைத்துக் கொண்டாள். வாணி ஒரு நொடி தடுமாறி அவள் முதுகில் தட்டிக் கொடுத்தாள்.

“இந்த அண்ணன் கூட சொல்லலை பாருங்களேன் அண்ணி. எங்க அவனை?” என்றவள் துள்ளலுடன் அகலப் பார்க்க,

“உங்கண்ணன் வரலை கீர்த்தனா. நான் மட்டும்தான் வந்தேன்!” என்றாள் மூத்தவள்.

“ஓ...” சின்னவள் முகம் வாடிப் போனது.

“அவருக்கு லீவ் கிடைக்கலை. அடுத்த மாசம் வருவாரு!” அவளை சமாதானம் செய்த வாணி , “நீ போய் ப்ரெஷ்ஷாகிட்டு வா. உனக்காகத்தான் காலிஃப்ளவர் பக்கோடா...” என்றாள்.

“செம்ம அண்ணி... இதுக்காகவே உங்களை நான் மிஸ் பண்ணேன்...” கீர்த்தனா ஒரு துண்டு காலிஃப்ளவரை எடுத்து வாயிலிட்டு சிலாகிக்க, வாணி முறைத்தாள். இவள் ஓடிச்சென்று உடைமாற்றி வந்து ஒரு கிண்ணத்தில் பக்கோடாவை எடுத்துக்கொண்டு சென்று கூடத்தில் அமர்ந்தாள். சிந்தாமணி பக்கத்து வீடுவரை சென்றிருந்தார்.

அவர் வரவும், “ம்மா... அண்ணி செஞ்ச பக்கோடா. டேஸ்டா இருக்கு...” என அவரிடம் மகள் கூற, “சரி... சரி. நீ ஒராளே காலி பண்ணிடாத. அஜித்துக்கும் வை. இல்லைன்னா அவன் வந்து கத்துவான்...” என்றவர் சமையலறைக்குள் நுழைந்தார்.

கீர்த்தனாவின் அலைபேசி இசைத்தது‌. பரிதி அழைத்திருக்க, “ண்ணா... நீயும் வந்திருக்கலாம் இல்ல. அண்ணி மட்டும் வந்திருக்காங்க. உனக்கு லீவு கிடைக்கலையா?” என இவள் வருத்தத்தோடு கேட்டாள்.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன அண்ணி வந்திருக்கா?” அவன் கேட்க,

“ப்ம்ச்... ண்ணா, அதான் அண்ணி சர்ப்ரைஸ் பண்ணிட்டாங்களே. அப்புறம் என்ன நீ எங்ககிட்ட மறைக்கிற? அண்ணிதான் காலிஃப்ளவர் பக்கோடா செஞ்சு கொடுத்தாங்க. நல்லா இருக்கு” என்றாள் ஒன்றை வாயில் போட்டு மென்று கொண்டே. அவனுக்கு இச்செய்தி புதியது. வாணி அங்கே சென்றிருக்கிறாளா? வாய்ப்பில்லையே என மனம் கூற, சின்னதாய் தொற்றிக்கொண்ட பரபரப்புடன்,

“கீர்த்தி.. வீடியோ கால் வா. பேக் கேமரா ஆன் பண்ணி உன் அண்ணியைக் காட்டு!” என்றான்.
 
Administrator
Staff member
Messages
1,351
Reaction score
4,091
Points
113
“ஏன்ண்ணா.‌. ப்ரன்ட் கேமராலயே அண்ணி நல்லா தெரிவாங்க. என் ஃபோன் கேமராவும் நல்லாதான் இருக்கு” என அவள் நொடித்தாள்.

“அதுக்கு சொல்லலை நான். நீ ஃபோனை நீட்டுனா அவ பேசுவாளோ? மாட்டாளோ? நான் சொன்னதை செய்!” அவன் அதட்ட,

“அப்போ அம்மா சொன்ன மாதிரி உனக்கும் அண்ணிக்கும் சண்டையா?” எனக் கேட்டுக் கொண்டே அவன் சொன்னபடி காணொளி அழைப்பில் இணைத்தாள் கீர்த்தனா. பரிதி வாணியைத்தான் தலைமுதல் கால் வரை ஆராய்ந்தான்.

இந்த மூன்று மாதங்களில் அவளிடம் எவ்வித மாற்றமும் இல்லை. அப்படியே இருந்தாள். இல்லையில்லை, கொஞ்சமே கொஞ்சம் எடை குறைந்திருந்தாள். பெங்களூர் குளிருக்கு அவளது கோதுமை நிறம் சற்றே வெளுத்துப் போயிருந்தது. எப்போதும் அணியும் சுரிதார், சின்னதாய் காதணி, சுருட்டை முடியை பின்னலிட்டிருந்தாள். கழுத்தை மறைத்த உடையை அவன் கவனித்ததும், ஏனென்று புரிந்தது.

“அத்தை... இந்தாங்க!” ஒரு கிண்ணத்தில் காலிஃப்ளவரை வைத்து மாமியாரிடம் நீட்டினாள் அவள்.

“எனக்கு வேணாம் ஆத்தா. நீயும் பிள்ளைகளும் சாப்பிடுங்க!” அவர் மறுக்க,

“அத்தை... ரொம்ப நாள் கழிச்சு நான் செஞ்சிருக்கேன். சாப்பிடுங்க நீங்க...” என இவளே அவருக்கு ஊட்ட, சாப்பிட்டுவிட்டு பாராட்டினார் பெரியவர். இவள் சின்ன சிரிப்புடன் ஏதோ கூற, அவரும் சிரிக்க என அவர்களை விழியகலாமல் பார்த்திருந்தான் பரிதி. அவர்கள் பேசியது காதில் விழவில்லை எனினும், இரண்டு பெண்களின் சிரித்த முகமும் அவனது அகத்தில் ஆழமாய் பதிந்தன.

‘எத்தனை இயல்பாக இவள் தங்களோடு பொருந்திப் போகிறாள்?’ மனம் கேட்டது. இத்தனை நாட்கள் அவனிருப்பை வைத்து அவள் நாடகமாகிறாள் என இவனே அவள் மீது பொய்யாய் சாடியிருக்கிறான். அவனுக்கு அந்த உண்மை தெரிந்தாலும் கூட அதை ஒப்புக் கொண்டு பிரகடனப்படுத்த விருப்பமில்லை. இப்போது என்னவோ போலானது அவனுக்கு. ஏன் இந்தப் பெண் இத்தனை இணக்கம் காண்பிக்கிறாள் என அவன் மனம் சுணங்கிற்று. நீண்ட நாள் கழித்து காண்பதால் அவளிடம் இரண்டு வார்த்தைகள் பேச வேண்டும் என்ற ஆசை கழுத்து நிறைய முட்டி நின்றது. ஏன் அவளிடம் பேச வேண்டும் என அவனுக்கே தெரியவில்லை. ஆனால் ஏதாவது பேச வேண்டும் என்ற அவா.

“அண்ணா... உன் பொண்டாட்டிய சைட்டடிச்சது போதும். அம்மாகிட்டே பேசுறீயா?” என்ற கீர்த்தனா தாயிடம் கொடுக்க, அவர் அவனிடம் நலம் விசாரித்து என்ன செய்கிறான் எனக் கேட்டவர், “இதோ... உன் பொண்டாட்டிகிட்டே ரெண்டு வார்த்தைப் பேசுடா!” என்றார்.

அலைபேசியில் தெரியாமல் கூட தன் முகத்தைக் காண்பித்து விடக் கூடாதென வெகுகவனமாக தள்ளி நின்றவளுக்கு மாமியார் பேச்சில் முகம் மாறியது. ஆனால் மறுக்க முடியவில்லை. அதற்காக பரிதியின் முகம் பார்ப்பதா? முடியவே முடியாது என மனம் முரண்டியது. அவனுக்கும் அவளுக்குமான உறவிற்கு எப்போதோ முற்றுப்புள்ளி வைத்துவிட்டாளே. அவன்தான் வலுக்கட்டாயமாக வைக்கச் செய்தவன் என தனக்குள் இறுகிப் போனாள்.


“இல்லத்தை...” என அவள் மறுப்பதை பொருட்படுத்தாமல் அவர் அலைபேசியை இவள் கரத்தில் திணிக்க, அவன் முகத்தைப் பார்க்காதவள், “பேசிட்டு வரேன் அத்தை. நீங்க இதைப் பார்த்துக்கோங்க...” என அறைக்குள் நுழைந்தாள். பரதிற்கு மூன்று மாதங்கள் கழித்து அவளிடம் பேசப் போகிறோம் என்றதிலே எங்கிருந்தோ வந்த படபடப்பு ஒட்டிக் கொண்டது. நீண்ட நாள் கழித்து சந்திக்கும் தாயிடம் பேசப் போகும் சேயாய் ஒருமாதிரி அவன் மனத்தில் சந்தோஷ ஊற்று பெருகிற்று.

“எப்படியிருக்க வாணி?” ஆசையாய், ஆவலாய் அவன் கேட்டு முடிப்பதற்குள் இவள் அழைப்பைத் துண்டித்திருக்க, அவன் முகத்தில் அறைந்தது போலானது.

‘ரெண்டு வார்த்தை என்கிட்ட பேசுனா குறைஞ்சு போய்டுவாளா என்ன?’ அவன் மனம் குமைந்தது. என்னவோ அவள் செயலை ஏற்க முடியாமல் அன்றைக்கு முழுவதும் மனதிற்குள்ளே புலம்பினான். வெளியே ஒரு வார்த்தைக் கூட மறந்தும் உதிர்க்கவில்லை. மதியின் செவியில் தெரியாமல் வாணியின் பெயர் விழுந்தால் கூட இவனது நிம்மதி பறிபோய்விடும் வாய்ப்பு அதிகம்.

“அண்ணி இன்னைக்கு நீங்க என் பக்கத்துலயே படுத்துக்கோங்க!” என கீர்த்தனா வாணியின் கையைப் பிடித்திழுக்க, அவளிடம் சின்னதாய் சிரிப்பு.

“ஏய் கீர்த்தி... அண்ணி ரூம்க்குள்ளே படுக்கட்டும். அஜித் நீ வெளியே வந்து படுத்துக்கோ!” சிந்தாமணி கூற, இவள் மறுத்தாள்.

மருமகள் வெளியே படுக்க சங்கடப்படுவாள் என அவர் பார்க்க, “உங்களோடவே படுக்குறேன் அத்தை!” என்றவள் அறைக்குள் செல்லாமல் கீர்த்தனாவிற்கும் சிந்தாமணிக்கும் இடையில் படுத்தாள்‌.

“வாணி... உனக்கு வசதிபடாது. உள்ளே போய் படுத்தா!” அவர் மீண்டும் கூற, “அத்தை...” என்றவள், போர்வையை இழுத்து கழுத்துவரைப் போர்த்திக் கொண்டாள். அவரும் வேறு எதுவும் சொல்லவில்லை.

சிறிது நேரம் கண்களை மட்டும் வெறுமனே மூடிப் படுத்திருந்தாள் வாணி. இத்தனை நாட்கள் அவள் மட்டும் தனியாய் தூங்கிப் பழக்கப்பட்டவள். இப்போது இருபுறமும் ஆள் இருந்ததால் சட்டென உறக்கம் விழிகளை அண்டவில்லை. ஆனால் என்னவோ இந்த சூழலில் தானாய் ஒரு பாதுகாப்பை மனம் உணர்ந்தது. தனியாய் இருந்தப் பொழுதுகளில் என்னதான் அவளுக்கு அவளே தைரியம் கூறிக் கொண்டாலும், ஆழ் மனத்தில் சின்ன பயம் எப்போதும் இருக்கும். கீர்த்தனா அவள் மீது கையைத் தூக்கிப் போட, சின்னதாய் முறுவலித்தவள், பின்னர் தூங்கிப் போனாள்‌.

மறுநாளும் சிந்தாமணியோடு அவளுக்கு நேரம் பறந்தது. வியாழன் ஊருக்குச் செல்வதாக அவள் கூற, “என்ன வாணி? அதுக்குள்ளேயும் கிளம்புறேன்ற. வெள்ளிக்கிழமை மாரியாத்தா கோவில்ல பொங்கல் வச்சு சாமி கும்பிடுறோம்‌. ரெண்டு வருஷமும் நீ கிட்ட இல்லாம போய்ட்ட. இப்போதான் இங்கருக்க. இந்த தடவை நீதான் உன் கையால பொங்கல் வச்சு ஆத்தாவுக்குப் படைக்கணும்!” என அவர் கூற, இவள் பலமாய் மறுத்தாள்.

அவளுக்கு இவரது நம்பிக்கையைக் குலைக்க விருப்பமில்லை. முறையாய் இந்த வீட்டிற்கு அவள் மருமகளாக இருந்திருந்தால் இதையெல்லாம் மனம் நிறைந்து செய்திருப்பாள். ஆனால் இப்போது அதெல்லாம் அவளால் செய்ய முடியாது. மனம் முரண்டியது. இரண்டு நாட்கள் இங்கு தங்கியிருந்ததே மனத்திற்குள் நெருஞ்சி முள்ளாய் குத்திற்று. பரிதியை நினைத்ததும் தன் போல அவள் உடலும் மனமும் இறுகியது. அவனுடைய மனைவி என்ற பெயரில் தான் எதையும் செய்ய கூடாது என தீர்க்கமாகயிருந்தாள்.

“ஏன் வாணி... சனி, ஞாயிறு உனக்கு லீவதானே? வெள்ளி ஒருநாள் கூட லீவு போடு‌த்தா...” பெரியவர் வற்புறுத்த,

இவள் அவரை சங்கடமாகப் பார்த்து, “எனக்குப் பீரியட்ஸ் அத்தை!” என்றாள் பார்வைத் தழைத்து. உள்ளார்ந்த அன்புடன் அவளது இருப்பை வேண்டி நிற்பவரிடம் பொய்யுரைப்பதில் மனம் தயங்கியது. இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் தன்னை நிறுத்திய பரிதியை மனத்திற்குள்ளே திட்டி தீர்த்தாள்.

‘அதுதான் அவனுக்கென ஒரு வாழ்க்கையைப் பார்த்துவிட்டானே? இங்கே வந்து தன்னை இந்த உறவிலிருந்து விடுவித்தால் என்ன?’ அவனை மானசீகமாக சாடினாள். அவளிடம் அன்பு செய்யும் இவர்களிடம் அவளால் ஒருநிலைக்கு மேலே பொய்யாக நடிக்க முடியவில்லை. பெரும் சஞ்சலமும் உறுத்தலும் அவளை அலைக்கழித்தன.

“அட என்ன வாணி? எத்தனாவது நாளு உனக்கு?” அவர் கேட்க, “இரண்டாவது நாள் அத்தை...” என்றாள் இவள்.

“வெள்ளிக்கிழமை நாலு நாளாகிடும். தலைக்கு தண்ணியை ஊத்திட்டு வந்து பொங்கல் வை வாணி. மாரியாத்தா நம்பளை மாதிரி பொண்ணு தானே? அவ கோச்சுக்க மாட்டா...” எளிதாக அவர் கூற, இவளுக்குத் தலையை ஆட்டுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

“வெறும் சுடிதாரா எடுத்துட்டு வந்திருப்ப ஆத்தா நீ. இந்தா ரெண்டாயிரம். போ... போய் ஒரு நல்ல சேலையா எடுத்துக்கோ. பக்கத்து தெரு பானுகிட்டே கொடுத்தா, ஒரே நாள்ல சட்டை தச்சு வாங்கிடலாம்!” சின்ன டப்பாவில் பத்திரப்படுத்தியிருந்த கசங்கிய நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுகளை அவள் கையில் திணித்தார் பெரியவர். வாணிக்கு அவர் செயலில் என்னவோ போலானது.

“ஐயோ அத்தை... என்கிட்ட காசு இருக்கு. நானே எடுத்துக்கிறேன்!” அவரிடம் பணத்தை திருப்பிக் கொடுக்க முனைந்தாள் இவள்.

“உன்கிட்ட காசில்லைன்னு யார் சொன்னா வாணி? ரெண்டு வருஷம் ஆச்சு நீ இந்த வீட்டுக்கு மருமகளா வந்து. ஒரு நல்லது கெட்டத்துக்கு கூட புருஷனும் பொண்டாட்டியும் எங்ககூட இல்லை. உனக்குன்னு எதுவுமே எடுத்து தரலை நாங்க. அதான் காசு கொடுத்தேன். அஜித் வந்ததும் அவனோட கடைக்குப் போ வாணி!” என அவர் அகல, வாணி அந்த காசைத் திறந்து பார்த்தாள். மார்த்தாண்டத்தின் உழைப்பு என அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. இந்தப் பெண்மணி இப்படி ஒவ்வொரு ரூபாயாக சேர்க்க, அங்கே ஒருவன் மது, மாது என பணத்தை கெட்ட வழியில் செலவழிக்கிறானே என்ன எண்ணி வருத்தம் கொண்டாள்.

கீர்த்தனாவும் அஜித்தும் கல்லூரி முடிந்து வந்துவிட்டனர். வாணி இளையவனுடன் வெளியே கிளம்புவதைப் பார்த்த சின்னவளும், அடம்பிடித்து அவர்களுடன் சென்றாள். வாணி தனக்கு, சிந்தாமணி, கீர்த்தனா என மூவருக்கும் ஒரே நிறத்தில் ஒரே மாதிரியான புடவை எடுத்தாள். அஜித் அவனுக்கு உடை வேண்டாமனெ சங்கடப்பட, வாணி அதைக் பொருட்படுத்தாமல் அவனுக்கும் மார்த்தாண்டத்திற்கும் ஒரே மாதிரியான வேஷ்டி சட்டை எடுத்துக் கொடுத்தாள்.

கீர்த்தனா புடவையைக் பெரிதாய் கண்டு கொள்ளாமல் தாவணி பக்கமே பார்வையைப் பதித்திருக்க, “கீர்த்தி... ஹாஃப் சேரி வேணுமா?” என அவளை கவனித்துக் கேட்டாள் பெரியவள். அவள் கண்களில் ஆசை தெரிந்தாலும் வேண்டாமென மறுத்து தலையசைத்தாள்.

அதில் புன்னகைத்த வாணி, அவள் முன்பு தாயிடம் அடம்பிடித்து வேண்டுமனெ கேட்ட அதே வகை தாவணியை வாங்கிக் கொடுத்தாள். அது ஒன்று மட்டுமே மூவாயிரம் ரூபாய் விலை போட்டிருந்தது.

பணத்தை எண்ணி கீர்த்தனா, “அண்ணி... வேணாம். இன்னொரு நாள் எடுக்கலாம்!” எனத் தயங்க, “அத்தைகிட்டே நான் சொல்லிக்கிறேன். அவங்க உன்னைத் திட்ட மாட்டாங்க டா!” என்றாள். சில நொடிகள் யோசித்த கீர்த்தனா, பின்னர் குதூகலத்துடன் அந்த உடையை அங்கேயே கண்ணாடி முன்பு வைத்துப் பார்த்து அலப்பறை செய்தாள். அஜித் பெண்கள் உடை தேர்வு செய்யட்டும் என ஓரமாய் அமர்ந்திருந்தனர். அனைவருக்கும் எடுத்து முடித்ததும், ஒரு நகை கடை முன்னே நின்றாள் வாணி.

“என் ப்ரெண்ட் இங்க வொர்க் பண்றாங்க. ஒரு டூ மினிட்ஸ்... அஜித், நீயும் அவளும் போய் ஐஸ்க்ரீம் சாப்பிடுங்க. நான் பேசிட்டு வந்துட்றேன்...” என அவனிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு அந்த நகை கடைக்குள்ளே நுழைந்தாள்.

அவள் முன்பு அணிந்திருந்த தாலியைப் போல, ஆனால் மாங்கல்யம் இல்லாமல் வெறுமேன கழுத்தணியை வாங்கி அணிந்து கொண்டாள். இதெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? முடியாது என மறுத்துவிட்டு கிளம்பிவிடு என மூளை அவளை சலவை செய்தது. ஆனால் பெரியவர்களை எடுத்தெறிந்து அவளால் பேச முடியவில்லை. அவள் குணமும் அதுவன்று. இன்னும் இரண்டு நாள் மட்டும்தான். இதற்குப் பின்னே இந்த நாடகத்தை தொடர அவசியமிருக்காது எனத் தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள். கழுத்தில் அணிந்திருந்த மெல்லிய கழுத்தணி என்னவோ பெரும் பாரத்தை தூக்கி சுமப்பது போல கனத்தது. அன்றைக்கு நடந்ததை மீண்டும் நினைக்க விரும்பாதவள், விறுவிறுவென வெளியே வந்தாள்.

“அண்ணி.. வாங்க... உங்களுக்கு என்ன ப்ளேவர் வேணும்?” கீர்த்தனா தங்களோடு இவளை இணைக்கவும், வாணி மெல்ல மெல்ல இணைப்பிற்கு மீண்டிருந்தாள். அப்படியே அந்தப் பகுதியிலிருந்த கடையைச் சுற்றிக் கொண்டே வந்தனர்.

“சேரிக்கு மேட்சிங்கா ஜிமிக்கி வாங்கலாம் கீர்த்தி வா...” வாணி தனக்கும் சின்னவளுக்கும் தெருவோரக் கடையில் பெரிய குடை ஜிமிக்கி வாங்கினாள். வேறு என்னென்ன வேண்டுமென பார்த்து வாங்கினர்.

அவர்கள் வாங்கிய பொருட்களை எல்லாம் அஜித்தான் சுமந்து வந்தான். பெண்கள் இருவரும் கலகலவென பேசிக் கொண்டே, அப்பளம், பஞ்சு மிட்டாய், கரும்பு சாறு என வயிற்றை நிரப்பினர். அவர்கள் வீடு வர ஒன்பது மணியானது. வெளியே உண்டதே போதுமென இருவரும் கூறிவிட, அஜித் பெரியவர்களுடன் சாப்பிட்டான்.

கீர்த்தனா சற்று முன்னர் வெளியே தாங்கள் மூவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அலசி ஆராய்ந்து அவள் அழகாய் இருப்பதாய் தேர்ந்தெடுத்து புலனத்தில், ‘வொண்டர் ஃபுல் அ டேய் வித் அண்ணி. ஃபன் ஃபுல் அவுடிங்!’ என தட்டச்சு செய்து வைக்க, பரிதி பார்த்துவிட்டான். வாணி சிரித்த முகமாய் இருக்கவும், அவனுக்கு அங்கே புகைந்தது. அந்தப் புகைப்படத்தை கரங்கள் தன் போல அலைபேசியில் சேமித்துக் கொண்டன.

வெள்ளிக்கிழமை காலை நான்கு மணிக்கே சிந்தாமணி அனைவரையும் எழுப்பிவிட்டார்.‌ எல்லோரும் குளித்து கிளம்பி எழு மணிக்கு பொங்கல் வைக்க கோவிலுக்குச் சென்றனர். ஏற்கனவே ஆட்கள் ஆங்காங்கே விறகு அடுப்பை பற்ற வைத்து பொங்கல் வைக்க ஆயத்தமாக, இவர்கள் தங்களுக்கென பிடித்து வைத்திருந்த இடத்திற்குச்‌ சென்று தாங்களும் கலந்து கொண்டனர்.

“என்ன சிந்தாமணி... புடவையெல்லாம் சூப்பரா இருக்கு. மக, மருமகன்னு எல்லாருமே செட்டா போட்டிருக்கீங்க போல?” அவர்களுக்கு பக்கவாட்டில் பொங்கல் வைத்துக் கொண்டே பெண்மணி ஒருவர் கேட்க, சிந்தாமணியின் முகம் மலர்ந்தது.

“நான் வேணாம்னுதான் சொன்னேன்கா. என் மருமகதான் எடுத்துக் கொடுத்தா...” அவர் பூரிப்புடன் கூற, வாணி பொங்கல் வைத்துக் கொண்டிருந்தாள். ஆனாலும் அவள் செவி இவர்களது உரையாடலை உள்வாங்கிற்று.

“ரெண்டு வருஷமா உன் மருமகளைக் கண்ல காட்டாம வச்சிருக்கீயே? வெளிநாட்டுல இருந்து வந்துட்டாளா?” அவர் கேட்டதும், வாணியை தன்னருகே அழைத்த சிந்தாமணி, “போன வாரம்தான் வந்தாக்கா என் மருமக!” என்றார்.

வாணி முகம் மாறாதிருக்க வெகுபிரயத்தனப்பட்டாள். இப்படியெல்லாம் தர்ம சங்கடமான சூழ்நிலையை தவிர்க்க எண்ணியே அவள் மறுக்க, சிந்தாமணி அவளை வற்புறுத்தி அழைத்துவிட்டார். அக்கம் பக்கமிருந்த அனைவரிடமும் தன் மருமகளை அறிமுகம் செய்து வைத்தார் அவர். அவள் வெளிநாட்டில் பெரிய உத்தியோகத்தில் இருப்பதையும் பெருமையாக அவர் கூற, இவள்தான் பொங்கல் வைக்கிறேன் என அவ்விடத்தைவிட்டு அகன்றாள்.

கீர்த்தனா வாணியை பல கோணங்களிலிருந்து புகைப்படம் எடுக்க, “கீர்த்தி!” என்றாள் அதட்டலுடன்.

“அண்ணி..‌ இது நம்ப டே. வாட்சப், இன்ஸ்டான்னு ஷேர் பண்ண வேண்டாமா?” எனக் கேட்டாள். இவள் மென்முறைப்புடன் வேலையைத் தொடர்ந்தாள். பொங்கல் வைத்து சாமிக்குப் படைத்து கும்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்தனர்.

“வாணி... தக்காளி,வெங்காயம் நறுக்கி வதக்கு‌. நான் இட்லி சுட்றேன்...” என மாமியார் கூறியதை இவள் செய்ய, காலை உணவு முடிந்து விச்ராந்தையாக அமர்ந்தார்.

“ஏன் வாணி... புடவை ரொம்ப கூடுன விலையா?” இத்தோடு மூன்று முறை பெரியவர் கேட்டுவிட்டார். தரையில் அமரும்போது பதுவிசாக அமர்ந்தவர், உடனே அதை கழற்றியும் வைத்தார். அவருக்கு விலையுயர்ந்த புடவை அழுக்காகி விடுமே என்ற கவலை. வாணி அதன் விலையைக் கூறவேயில்லை.

கீர்த்தனா காலையில் குடும்பமாக எடுத்த புகைப்படத்தை அண்ணனுக்கு அனுப்பி, “நீ மட்டும் மிஸ்ஸிங் அண்ணா!” என்றாள் வருத்தமான பொம்மையோடு.

ஏழு மணிக்கு எழுந்து வந்த பரிதி தங்கையின் குறுஞ்செய்தியில்தான் கண்விழித்தான். மார்த்தாண்டம் அருகே அஜித் ஒருபுறமும், கீர்த்தனா மறுபுறமும் நிற்க, அடுத்ததாக சிந்தாமணி, இசைவாணி நின்றிருந்தனர். பெண்கள் மூவரும் ஒரே நிறத்தில் சேலையும், ஆண்கள் ஒரே போலான உடையும் அணிந்திருத்தைப் பார்க்கவே கண்ணுக்கு நிறைவாய் இருந்தது. அவர்கள் முகத்திலிருந்த புன்னகையைக் கண்டு இவனுக்கு ஏக்கமாகிற்று.

கடந்த நான்கு நாட்களாக மதியோடு ஏதோ சின்ன சின்ன சண்டையென அவனுக்கு நாளே சரியில்லாமல் போனது. ஒருமாதிரி வெறுப்போடு சுற்றினான். அவன் அவனாகவே இல்லை. அவளுக்குப் பயந்து பயந்து எதையும் செய்ய வேண்டியதாக இருந்தது. அவள் என்ன செய்தாலும் இவனால் கேட்க முடியவில்லை. அப்படி ஏதேனும் இவன் குரலை உயர்த்தினால், வாணியை இழுத்திடுவாள் மதி. அவளோட சண்டை போட்டு சமாதானம் செய்து இவனுக்கு சலித்து அலுத்துப் போனது. அதற்கு அவள் செய்வது எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பதே உசிதம் என வாயைப் பூட்டி வைத்திருந்தான். அப்படியொரு மனநிலையில் அவனிருக்க, அங்கே அவர்கள் குடும்பமாக கோவிலில் பொங்கல் வைத்துக் கொண்டாடவும், பரிதிக்கு மனம் சுணங்கியது.

அளவான புன்னகை, அலங்காரம் என நேர்த்தியாய் சேலை உடுத்தி தன் வீட்டு மக்களோடு ஒருத்தியாய் நிற்கும் வாணியை இமையெடுக்காமல் பார்த்தான். அந்த இடத்தில் அவனால் மதியைப் பொறுத்தவே முடியவில்லை. மனம் முரண்டியது. அவள் இதுபோல கோவிலுக்கெல்லாம் செல்வதை அறவே விரும்பமாட்டாள்‌. இவன் அழைத்தால் கூட, “பூமர் மாதிரி பண்ணாத மேன்!” என கேலி செய்வாள்.

அடுத்தடுத்து கீர்த்தனா அனுப்பிய புகைப்படத்தை ஒவ்வொன்றாகப் பார்த்தான்‌. முழுவதும் வாணிதான் நிறைந்து போயிருந்தாள். அவளைப் பார்க்க பார்க்க இவனுக்கு மனம் பிசைந்தது. எதற்கு ஏனென்றே தெரியாமல் கையிலிருந்த எதையோ இழந்துவிட்டதாய் நெஞ்சு கனக்க, மனம் சுணங்கியது.

“வெல்... எல்லா ஆங்கிள்லயும் உன் எக்ஸை ரசிச்சிட்டீயா இளா?” திடுதிப்பென்று பின்னே கேட்ட குரலில் இவனுக்கு இதயம் அதிர்ந்தது. போலியான ஆச்சர்யத்துடன் கையைத் தட்டிக் கொண்டே முன்னே வந்தாள் இளமதி. அவனிடம் பதிலில்லை.

“டேக்‌ யுவர் ஓன் டைம் மேன். கோ அஹெட்... உன் எக்ஸை இன்னும் நல்லா பார்த்து ரசி!” என எள்ளலாக அலைபேசியைக் கை காண்பித்தாள்.

“மதி...” அவன் பதிலுரைக்க வர,

“அவ உனக்கே தெரியாமதான் உன் வீட்டுக்குப் போய்ருக்கா. அதானே?” அவள் அப்படித்தானே என கேலியாகக் கேட்க, இவனிடம் பெருமூச்சு எழுந்தது.

“நீ நம்பலைனாலும் அதான் நிஜம் மதி. நீதானே அவ நம்பரை என் ஃபோன்ல ப்ளாக் பண்ண. அப்புறம் எப்படி நான் அவகிட்டே பேசிருக்க முடியும்? கீர்த்தனா சொல்லித்தான் எனக்கே தெரியும்!” அமைதியாய் பதிலளித்தான் பரிதி.

“பார்றா... அப்போ நிஜமாவே உனக்குத் தெரியாது. ரைட்... ரைட். அப்போ அவ ஏன் உன் ஃபேமிலியோட இன்னும் உறவாடீட்டு இருக்கா மேன்? உனகிட்டே என்ன எக்ஸ்பெக்ட் பண்றா?” மதி கேட்க, இவன் பதிலுரைக்கவில்லை.

“நான் சொல்லவா? பணத்துக்காக கிடையாது. ஏன்னா உன்கிட்டே அவ்ளோ பணம் கிடையாது. நீயே வாங்குன கடனையே இப்போதான் அடைச்சிருக்க. தென், வேற என்ன?” தாடையைப் போலியாகத் தடவியவள்,

"ஹம்ம்... ஐ திங்க் யூ வேர் குட் இன் பெட். சோ, இந்த மூனு மாசத்துல நிறைய பேரை ட்ரை பண்ணி யாருமே உன்னை மாதிரி இல்லைன்னு உன்கிட்டயே வரப் பார்க்குறா போல?” என அவனை உறுத்து விழித்தாள் மதி. பரிதியின் முகம், கண்ணெல்லாம் சிவந்தது.

“மதி... மைண்ட் யுவர் வேர்ட்ஸ். என்னைப் பத்தி பேச உனக்கு உரிமை இருக்கு. தேவையில்லாம இன்னொரு பொண்ணோட கேரக்டரை வாய்க்கு வந்த மாதிரி பேசாத?” என்றான் கையை மடக்கி தன்னுள் எழுந்த ஆத்திரத்தை அடக்கி.

“அட! அப்போ அவளும் பெட்ல ரொம்ப நல்லா பெர்பார்ம் பண்ணிருக்கா போலயே. அதான் நீ சப்போர்ட் பண்ற... ஹம்ம்... எத்தனை பேரை இந்த மாதிரி மயக்கி வச்சிருக்காளோ ப்ளடீ சீப் ***” ஆங்கில கெட்ட வார்த்தை ஒன்றை அவள் உதிர்த்த கணம், பரிதி அவள் கன்னத்தோடு சேர்த்து தன் மொத்த கோபத்தையும் காண்பித்து ஒரு அறை விட்டிருந்தான். மதிக்கு நொடியில் தலை சுற்றியது.

“இனிமே அவளைப் பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசுனா... ம்கூம்... ஒரு வார்த்தை உன் மனசுல நினைச்சா கூட நான் மனுஷனா இருக்க மாட்டேன் டீ!” என அவன் உறும, மதி அடி வாங்கிய அதி
ர்ச்சியில் கண்ணீர் வழிய கோபத்தோடு அவனைப் பார்த்திருந்தாள்.

கட்!கட்!கட் மக்களே! டேக் ஓவர்
ப்ரேக்கப்! 🙈

தொடரும்...




 
Active member
Messages
271
Reaction score
222
Points
43
Ivan break up panna yenna pannala yenna
Enga focus fulla ah vani mella dhan
Avalukana oru nalla caring person avala life kulla vandha podhum 😍😍😍😍😍😍
 

Lak

Member
Messages
50
Reaction score
13
Points
8
Nice
 
Top