• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,315
Reaction score
3,913
Points
113
நேரம் – 31 💜

“என்ன பண்றம்மா?” அலைபேசியைத் தோளிற்கும் காதிற்கும் இடையே வைத்திருந்த பரிதி முட்டையை உடைத்து வதக்கியிருந்த வெங்காயத்தில் ஊற்றி கிளறினான்.

“இப்போதான் டா சாப்பிட்டு கொஞ்சம் நேரம் படுக்கலாம்னு பார்த்தேன். நீ ஃபோன் பண்ணிட்ட. வேலைக்கு கிளம்பலையா டா?” எனக் கேட்டவாறே தொலைக்காட்சியின் சப்தத்தைக் குறைத்தார் சிந்தாமணி.

“இன்னும் இல்லம்மா. சமைக்கிறேன்!” என்றவன், “என்ன சமைச்ச?” எனக் கேட்டான். அவர் சோறு, வெண்டைக்காய் குழம்பு, கீரை பொறியல் என அடுக்கினார்.

“ஹம்ம்... அப்பா சாப்பிட வரலையா இன்னும்?” பேசிக் கொண்டே சமைத்தவற்றை தட்டில் இட்டான்.

“இல்ல டா... ரெண்டு மணிக்குத்தானே வருவாரு...” இவர் பதிலளிக்க,

“வாணி என்ன பண்றா? எங்க அவளை?” இப்போது இசைவாணியைப் பற்றி விசாரித்தான்.

“காலைல சாப்பிட்டுட்டு அவங்க வீட்டுக்குப் போனவடா. இன்னும் வரக் காணோம்!” இவர் அசட்டையாய்க் கூற, அங்கே அவன் முகம் கடுகடுவென்றானது.

“ப்ம்ச்... நான் கிளம்பும்போது படிச்சுப் படிச்சு சொன்னேனா இல்லையாம்மா? அவளை அந்த வீட்டுக்கு அனுப்பாதன்னு. சொல்லியும் என் பேச்சைக் கேட்காம அனுப்பிருக்க?” அவன் சினமுற்று தாயைத் திட்டினான்.

அதில் கோபம் வரப்பெற்ற சிந்தாமணி, “டேய்... உன் பொண்டாட்டியைப் பார்க்குறது மட்டும்தான் என் வேலையா? நீ‌ மட்டும்தான் எனக்குப் புள்ளையா? இன்னும் ரெண்டு புள்ளைங்க இருக்குங்க. என் புருஷன், புள்ளைங்களை நான் பார்க்குறதா? இல்லை உன் பொண்டாட்டி பின்னாடி திரியுறதா?” அவர் பொரிந்ததும், இவன் மூச்சை இழுத்து விட்டான்.

“ம்மா... அவ அங்கப் போய் ஆன்ட்டி ஃபோட்டோ முன்னாடி உக்கார்ந்து அழுவாம்மா. அதான் உன்னைப் பார்த்துக்க சொல்றேன். நான் என்ன சும்மாவா உன்னைத் திட்டுறேன். பாவம் அவ அம்மாவை பறிகொடுத்த சோகத்துல இருக்கா. அதான் தனியா விடாதேன்னு சொன்னேன்...” எனத் தாயை சமாதானம் செய்தான் பரிதி.

அவன் லண்டன் சென்று மூன்று நாட்கள் முடிந்திருந்தது. தினமும் இரண்டு முறை வீட்டிற்கு அழைத்து வாணி என்ன செய்கிறாள் எனக் கேட்டறிந்தான். அவளிடமும் பேசினான்தான். ஆனாலுமே என்னவோ மனத்தின் கனம் குறையவில்லை.‌ சுந்தரியின் இழப்பை அவனாலே ஏற்க முடியவில்லை. அப்படியிருக்கையில் இசைவாணி எப்படி அதிலிருந்து மீளுவாள் என மனம் அவளுக்காக வருந்திற்று.

இன்னும் ஒரு வாரத்தில் வாணி வந்துவிடுவாள் என எண்ணி அழைப்பைத் துண்டித்தவன், அவளுக்கே அழைத்தான். இரண்டு மூன்று முறை அழைப்புச் சென்று துண்டாகி பின்னர் ஏற்றாள்.

“தனியா அங்கப் போய் என்ன பண்ற வாணி நீ? அம்மாவோட இருன்னு சொன்னேனா இல்லையா?” இவன் அதட்ட, அவளிடம் பதிலில்லை.

“வாணி... பேசு, என்ன பண்ற, அழறயா நீ?” அவன் கவலையோடு கேட்டான்.

“இல்ல... இல்ல பரிதி‌. சும்மாதான் வந்தேன். இந்த வீட்லருந்தா அம்மாவோட இருக்க மாதிரி இருந்துச்சு...” அவனுக்காகப் பொய்யுரைத்தாள். கூடத்தில் வெறுந்தரையில் சுருண்டு படுத்து, தாய், தந்தை புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்திருந்தாள். இவ்வளவு நேரமும் கேட்பாரற்ற கண்ணீர் அவள் முகத்தை நனைத்தது. இவன் குரல் கேட்டதும், அது ஓய்வெடுக்க சென்றதுதான். ஆனாலும் அழுதக் குரல் அவளைக் காண்பித்துக் கொடுத்தது‌.

“பொய் சொல்றீயா வாணி? உன் வாய்ஸே சொல்லுது நீ அழுதிருக்கன்னு. லஞ்ச் டைமாச்சு, போ. போய் சாப்பிட்டு அம்மாவோட பேசிட்டு இரு. தனியா இருந்தா இன்னும் கஷ்டமா இருக்கும்!” என அவளைக் கட்டாயப்படுத்தி அங்கே செல்லப் பணித்துவிட்டுத்தான் ஓய்ந்தான் இவன்‌.

அடுத்து வந்த சில நாட்களும் தினமும் அவளிடம் ஏதோவொரு காரணத்தை வைத்து அரைமணி நேரமாவது பேசினான். அவளையும் பேச உந்தினான். அவளுக்கு அவன் மெனக்கெடல் புரிந்தது. ஆனால் மனம் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை . தேங்கிய இடத்திலே நின்றுவிட்டது. அவன் அதட்டலுக்கும் கரிசனத்திற்காகவும் தான் மூன்று வேளையும் சாப்பிட்டாள். சரவணா, அற்புதா என இருவரும் அவளுக்கு நாளொரு முறை அழைத்து நலம் விசாரித்தனர். சின்னவன் வந்து இவளைப் பார்த்துவிட்டு சென்றான்.

காமராஜூம் அம்சாவும் இவளுக்கு ஆறுதல் கூறினர். சிந்தாமணி அதட்டி உருட்டி மருமகளை இயல்பாக்க முயன்றார். இப்படி ஒவ்வொருவரும் அவளுக்காகப் பார்க்க, இசைவாணி தேறியிருந்தாள். இறந்துவிட்ட தாயும், தந்தையும் இனி வரவே மாட்டார்கள் என்ற நிதர்சனத்தை வலிக்க வலிக்க ஏற்றுக் கொண்டாள்.

அவளது விடுப்பு முடிந்ததும் லண்டன் பயணப்பட்டாள். தனியாக சென்றுவிடுவேன் என அவள் மறுத்தும் சரவணன் சென்னை வரைச் சென்று அவளை விமானம் ஏற்றிவிட்டிருந்தான். இரவு புறப்பட்ட விமானம் தன் நீண்ட பயணத்தை மறுநாள் காலை முடித்துக் கொண்டது.

இசைவாணி விமான பரிசோதனைகள் எல்லாம் முடிந்து வெளியே வர, பரிதி அவளுக்காக காத்திருந்தான். நேற்று பேசும்போது அவன் வருவதாய் கூற, “இயர்லி மார்னிங் எதுக்கு தூக்கத்தைக் கெடுத்துட்டு வர்ற பரிதி. எனக்கு வீட்டுக்கு வழி தெரியாதா? நானே வந்துடுவேன்‌. நீ வர வேணாம்!” என அவள் வற்புறுத்தலுக்கு வெறுமனே ம்ம் கொட்டியவன், இதோ அவளுக்காக வந்து நிற்கிறான்.

லண்டனில் குளிர்காலம் துவங்கி இருந்தது. தலை முதல் கால் வரை குளிரைத் தாங்கும் உடையோடு அவன் அமர்ந்திருந்தான். அவன் கண்களில் தூக்கம் அப்படியே இருந்தது.

“நானா வர்றேன்னு சொன்னேன்ல பரிதி!” இவள் கடிய, அதைக் கண்டு கொள்ளாமல் இவளது பொதியைத் தள்ளிக்கொண்டு நடந்தான். இசைவாணி தன் சுரிதாரின் மேலே குளிருடையை எடுத்து அணிந்து கொண்டாள். வெளியே வந்ததும் அவள் தேகம் குளிரில் நடுங்கிற்று‌. பொள்ளாச்சி வெயிலுக்கு லண்டன் குளிர் நேரெதிராய் இருந்தது. அமைதியாய் இருவரும் வீட்டை அடைந்தனர்.

இளைத்திருந்த அவள் தேகத்தைப் பார்த்தவன், “குட்டியா குண்டா க்யூட்டா இருந்த. இப்போ தேய்ஞ்சு போய்ட்ட வாணி!” என்றான் கவலையும் கேலியுமாக. அவள் பதிலுரைக்காது முறுவலித்தாள். அவள் உயரத்திற்கு ஏற்ற உடல்வாகு உடையவள். ஆனால் இந்த ஒரு மாதத்தில் உடல் எடை கணிசமாகக் குறைந்திருந்தது.

“யூ லுக் வெரி டையர்ட். போய் ரெஸ்ட் எடு வாணி‌. நானும் கொஞ்ச நேரம் தூங்கி எழுறேன்!” என அவன் அறைக்குள் முடங்க, இவள் சிந்தாமணி, காமராஜ், சரவணன் என அனைவரிடமும் தான் பத்திரமாக வந்துவிட்டேன் என்ற தகவலைப் பகிர்ந்துவிட்டு உறங்கிப் போனாள்‌.

மீண்டும் அவள் எழும்போது நேரம் காலை பதினொன்றாகியிருந்தது. நேற்றிரவு விமானத்தில் சாப்பிட்ட காய்கறி ரொட்டி கரைந்திருக்க, பசித்தது. கடந்த சில நாட்களாகத்தான் பசியுணர்வு இருப்பதே அவளுக்கு உறைத்தது. எழுந்து தன்னை சுத்தம் செய்துகொண்டு சென்றாள்.

சுவரில் அழகுக்காக ஒட்டப்ட்டிருந்த பூச்சாடியில் சின்னதாய் ஒரு கரும்பலை தொங்கிற்று. அதில் பரிதி ஏதோ கிறுக்கி வைத்திருந்தான். அருகே சென்று உற்றுப் பார்த்து அவன் கையெழுத்தைப் புரிந்து கொள்ள முடியாது திணறி வாசித்தாள்.

“கொஞ்ச நேரம் தூங்கலாம்னுதான் படுத்தேன் வாணி. பட், என்னையும் மறந்து அசந்து தூங்கிட்டேன் போல. லேட்டாகிடுச்சு. சோ, நூடுல்ஸ்தான் செய்ய முடிஞ்சது. எழுந்ததும் சாப்பிட்டு எனக்கொரு மெசேஜ் போடு. நீ நல்லா தூங்கிட்டிருந்ததால எழுப்பலை!” என்பதை ஐந்து நிமிடத்தில் வாசித்தவள், அவன் செய்து வைத்த துரித உணவை உண்டுவிட்டு கூடத்திலிருந்த நீள்விருக்கையில் சரிந்தாள்.

இவ்வளவு நேரம் ஓய்வெடுத்த சிந்தனை, மீண்டும் தாய், தந்தை என அவர்களையே சுற்றி வந்தது. சிறுவயதில் சென்னையில் அவர்கள் வாழ்ந்த வீடு, வசித்த பகுதி, அடிக்கடி ஊர்ச்சுற்ற செல்லும் இடங்கள், நண்பர்கள் என மெதுவாய் மனம் அசைபோட்டது.

ஒருநாள் இவளது சேட்டை அதிகமாகி சுந்தரி அடித்ததும் அழுது கொண்டே சிறுவயது வாணி தந்தையிடம் முறையிட்டதில், பெரியவர்களுக்கு இடையே பெரிய பிளவு ஏற்பட்டு மீண்டும் சேர்ந்தது நினைவு வர, அன்றைய நாளை நினைத்து மனம் கனத்தது. அதற்குப் பின்னே விளையாட்டிற்காக கூட சுந்தரி மகளிடம் கையை நீட்டவில்லை. வாணியின் தந்தைக்கு மகள் அழுதால் தாங்கவே முடியாது. ஆனால் இப்போது நிரந்தரமாக அழவிட்டுச் சென்று விட்டாரே என எண்ணியதும் விழியோரம் நீர் கசிந்தது.

அப்படியே விட்டத்தையே பார்த்திருந்தாள். இப்போது சிந்தனை அலுவலகத்தைச் சுற்றியது. இவளது தாயின் இறப்பை அறிந்து உடன் வேலை பார்க்கும் அத்தனை பேரும் அழைத்து தங்களது ஆறுதலைப் பகிர்ந்திருந்தனர். தான் வேலை பார்க்கும் திட்டம் எந்தளவில் உள்ளது என வேலையைப் பற்றி யோசித்தாள்.

நேரம் மதியத்தைக் கடந்து மாலையானது. வாணி படுத்திருந்த இடத்தைவிட்டு எழவேயில்லை. மதிய உணவும் உண்ணவில்லை. பரிதி வீட்டை ஓரளவிற்கு நன்றாய் வைத்திருந்தாலும், ஆங்காங்கே பொருட்கள் இறைந்து கிடந்தன. இதுவே வாணி முன்பு போலிருந்தால் வந்ததும் அவனைத் திட்டித் தீர்த்திருப்பாள். ஆனால் இப்போது எதுவுமே அவள் கண்ணிலும் கருத்திலும் தென்படவேயில்லை.

இயற்கை உபாதை அவளை உசுப்பவும்தான் எழுந்து கழிவறை சென்று வந்தாள். அழைப்பு மணி ஒலிக்க, பரிதிதான் வந்திருப்பான் என எண்ணிக் கதவைத் திறந்தாள். ஆனால் விக்னேஷ் வந்திருந்தான். அவனை எதிர்பாராது திகைத்தாலும், சின்ன முறுவலுடன் அவனை வரவேற்றாள்.

“சாரி வாணி... பரிதி லாஸ்ட் வீக்தான் சொன்னான்!” அவன் தயங்கி என்னப் பேசுவது எனத் தெரியாமல் அவள் முகம் பார்த்தான். ஒரு நொடி முகம் கசங்கி, கண் கலங்கினாலும் தன்னை மீட்டுக்கொண்டு புன்னகைத்தாள்.

“உட்காருங்க விக்னேஷ்... காஃபி ஆர் டீ? என்ன குடிக்குறீங்க?” என உபசரித்தாள்.

“அதெல்லாம் எதுவும் வேணாம்!” அவன் மறுக்க, இவள் அவனுக்கு தேநீர் எடுத்து வந்து கொடுத்தாள். விக்னேஷ் அவள் தாயைப் பற்றிய பேச்சைத் தவிர்த்து பொதுவாய் பேசினான். அவளும் அவன் வேலைப் பற்றிக் கேட்டாள். அவனது குடும்பத்தைப் பற்றி அறிந்து கொண்டாள். இவ்வளவு நேரம் தனிமையிலிருந்துவிட்டு விக்னேஷிடம் பேசவும் அவள் மனத்திற்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

“நீங்க சூப்பரா குக் பண்ணுவீங்கன்னு பரிதி சொன்னான். பாருங்க... டின்னர் டைமே வந்துடுச்சு. எனக்கும் பசிக்குதுங்க!” விளையாட்டாய் அவன் தன் வயிற்றைத் தடவிக் காண்பிக்க, வாணி சிரித்துவிட்டாள். விக்னேஷிற்கு அவள் சிரிப்பை பார்த்து நிம்மதியானது.

“சரி... ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க. நான் குக் பண்றேன். சாப்பிட்டு போங்க!” அவள் கூற,

“ஐயோ... நான் சும்மா சொன்னேன் வாணி. கண்டிப்பா இன்னொரு நாள் சாப்பிடுறேன். இப்போ கிளம்புறேன்...” அவன் அகலப் பார்க்க, இவள் விடவில்லை.

“உங்களுக்காகத் தனியா குக் பண்ணலை விக்னேஷ். எப்படியும் பரிதி வந்துடுவான். அவனுக்கும் குக் பண்ணணும் இல்ல. அதனாலே சங்கடப்படாதீங்க!” என்றவள் சமையலறை செல்ல, இவன் தன் அலைபேசியை எடுத்து ஐந்து நிமிடங்கள் அதில் கண்களை ஓட்டினான். பின்னர் திறந்தவெளி சமையலறை வழியே வாணி என்ன செய்கிறாள் எனப் பார்த்தான். எளிமையான சாம்பார் ஒன்றை பத்தே நிமிடத்தில் வைத்தவள், குளிர்சாதனப் பெட்டியை சந்தேகத்தோடு திறந்தாள். உள்ளே தோசை மாவு இல்லை.

ரவா தோசை ஊற்றலாம் என எண்ணி ரவை, அப்படியே அதில் இரண்டு தக்காளி, காய்ந்த மிளகாய் என அலைபேசியில் என்றோ பார்த்ததை வைத்து துரித மாவைத் தயார் செய்து தோசை ஊற்றி எடுத்து வந்தாள்.

“ஸ்மெல்லே பயங்கரமா இருக்கே வாணி. வெள்ளைத் தோசை பார்த்திருக்கேன். இதென்ன ரெட் கலர் தோசை. முன்னாடி நான் பரிதியைத் திட்டுனதை வச்சு பழிவாங்கலைதானே நீங்க? பாவம் வாணி நானு... காரம் ரொம்ப சாப்பிட மாட்டேன்!” அவளைக் கலாய்த்தபடியே சாப்பிட்டான்.

“தோசை மாவு இல்ல விக்னேஷ். இன்ஸடன்டா ரெடி பண்ணேன் இது. ஓகே தானே?” அவள் சங்கடத்துடன் கேட்க,

“ப்ம்ச்... டேஸ்ட் அள்ளுது போங்க. பரிதி எல்லா விஷயத்திலும் கொடுத்து வச்சவன்தான். அக்ரீமெண்ட் மேரேஜ்னாலும் இப்படி வகை வகையா குக் பண்ணித் தர நீங்க இருக்கீங்க. மொத்த லண்டனையே சுத்திக் காட்டி அவனுக்குக் காசை தண்ணியா செலவு பண்ண மதி இருக்கா. ஒரே ஜாலியா இருக்கான் பையன். நான் தான் இன்னும் தனிக்கட்டையா சுத்தீட்டு கிடக்கேன்!” அவன் பாவமாய் கூற, மீண்டும் இவள் முறுவலித்தாள்.

“பொறாமைப்படாதீங்க!” வாணி மென்னகையோடு கூற, வாயிலிருந்த தோசையோடு இல்லையென தலையை அசைத்தவன், அதை மென்று முழுங்கிவிட்டு, “கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்குங்க. அவன் உங்களைப் பத்திக் குறை சொல்லும்போது கழுதைக்குத் தெரியுமா கேம்பர் ஸ்மெல்னு என்னை நானே கேட்டுப்பேன். ராஸ்கல், அவனையெல்லாம் நீங்க கிட்டக்க வச்சிருக்கதே தப்பு!” என்றான் ஆற்றாமையான குரலில்.

அவன் பரிதியை மேலும் திட்டப்போக, “சாம்பாரைப் பத்தி நீங்க எதுவுமே சொல்லலை?” என அவனைத் திசை திருப்ப முயன்றாள் வாணி.

“இன்டேரக்டா அவனைத் திட்டாதடான்னு சொல்ல வர்றீங்க? இப்போதான் எனக்கு வயிறு ரொம்ப பர்ன் ஆகுது வாணி!” அவன் சிறு பையனாக மாறி கூற, இவளிடம் சின்னதாய் ஓர் சிரிப்பு படர்ந்தது.

பரிதி அந்நேரம் உள்ளே நுழைந்தான். கதவு பூட்டப்படாமல்தான் இருந்தது.
விக்னேஷை அவன் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. அதுவும் காலையில் சோர்ந்த முகத்துடன் இருந்த வாணியின் முகத்தில் புன்னகையைப் பார்க்கவும், இவனுக்கு முகம் மலர்ந்தது.

மாலை வேலை முடிந்தவுடன் நேரே வீட்டிற்கு வர வேண்டும் என்றுதான் கிளம்பினான். இசைவாணி தனியாய் இருப்பாளே என எண்ணி இவன் கிளம்ப, மதி மகிழுந்தை எடுத்து வந்து இவனுக்காக அலுவலக வாயிலில் காத்திருந்தாள். அவளை எதிர்பார்த்திருக்கவில்லை பரிதி. ஊரிலிருந்து வந்த அன்றே அவள் பரிதி வீட்டிற்குச் சென்று அவனைப் பார்த்து வந்தாள். பின்னர் அடுத்து நேரம் கிடைக்கவில்லை. இப்போது நேரமிருக்கவும், அவனோடு வெளியே செல்லலாம் என்று வந்துவிட்டாள்.

முதலில் இருவரும் பேசும்போது பரிதிதான் அதீத ஆர்வமாய் இருப்பான். இளமதி அவனுக்கு ஈடு கொடுத்துப் பேசுவாள். நாட்கள் செல்ல செல்ல இவளுக்கு அவன் மீதான ஈர்ப்பு அதிகமாயிற்று. அவனிடம் ஒருவித உரிமையுணர்வு கூட தலை தூக்கிற்று.

இவள் வந்ததும் வராததுமாய் வாணியின் தாய் இறந்ததைப் பற்றியே பரிதி பேச, அதில் கடுப்பானாலும் காண்பித்துக் கொள்ளவில்லை மதி. ஆனாலும் அவன் எண்ணங்களில் தான் மட்டுமே இருக்க வேண்டுமென எண்ணினாள். அதனாலே இப்போதெல்லாம் அவளே அவனைத் தேடிக்கொண்டு வந்துவிடுகிறாள்.

“வா இளா... இன்னைக்கு உன்னை ஒரு ப்ளேஸ்க்கு கூட்டிட்டுப் போகணும்!” என்றவள், அவனை புதிதாய் திறந்த பப்பிற்கு அழைத்துச் சென்றாள். பரிதி அங்கே சென்று அவளுடன் அமர்ந்து கதைப் பேசினான். நடனமாடினான். ஆனால் குடிக்கவில்லை.

“கமான் மேன்..கொஞ்சமா குடி. ஒன்னும் ஆகாது!” என அவள் ஊக்க,

“வேணாம் மதி. வாணிக்கு நான் குடிச்சிட்டு வந்தா பிடிக்காது!” இவன் தனக்குப் பிடிக்காதென மறுத்திருந்தால் மதி வற்புறுத்தியிருக்க மாட்டாள். ஆனால் வாணி பெயரைக் கூறி மறுக்கவும், அவனைக் குடிக்க வைத்து ஆக வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கியது.

“ஒரே ஒரு பெக் மட்டும் இளா. எல்லாரும் ட்ரிங் பண்றாங்க தானே? ஜஸ்ட் ஷோஷியலா இருக்கப் பழகு. இல்லைன்னா நீ கம்பெனி கொடுக்கலைன்னு எனக்கு எங்கேயும் போகப் பிடிக்காது!” என்றவள்,

“அப்புறம் அந்த லேடிக்குப் பிடிக்காதுன்றதுக்காக எல்லாம் நீ ட்ரிங்க்ஸை அவாய்ட் பண்ணாத. அவளும் நீயும் ஹவுஸ்மேட்ஸ் ஒன்லி. உன்னைக் கண்ட்ரோல் பண்ற ரைட்ஸ் அவளுக்கு கிடையாது. எனக்கு மட்டும்தான் இருக்கு!” என்றாள் உளறலுடன். பரிதி‌ மறுத்தும் அவனை கொஞ்சமாக குடிக்க வைத்து திருப்திப்பட்டுக் கொண்டாள் மதி. இவன் வாணியிடம் மாட்டிக் கொள்ள கூடாது என்ற பயத்துடனே சென்றான்.

ஆனால் வீட்டில் விக்னேஷ் இருக்கவும் அப்படியே அறைக்குள் செல்ல முடியாது தேங்கியவன், “என்ன விக்கி, வரேன்னு சொல்லவே இல்ல?” எனக் கேட்டான்.

“உன்னைப் பார்க்க வந்தாதானே உன்கிட்ட சொல்லணும்‌. நான் வாணியைத்தான் பார்க்க வந்தேன்!” என்றவன் முகத்தை ஒடித்து திருப்பி எழுந்து சென்று கையைக் கழுவ, இவன் நண்பனை யோசனையுடன் பார்த்தான்.

“என்னாச்சு பரிதி... ஏன் ஒருமாதிரி இருக்க நீ?” வாணி அவன் தோற்றத்தில் தெரிந்த மாற்றத்தில் புரியாது அவனருகே செல்ல,

“நத்திங்... ஐ’யம் ஓகே வாணி!” என அவன் விரைந்து பின்னே நகர்ந்தாலும் கூட, மதுவின் வாசனை இவளது நாசியைத் துளைக்க, அதிர்ந்து நின்றுவிட்டாள். அவன் அவளது முகம் பார்க்காமல் பக்கவாட்டில் திரும்ப, சில நொடிகள் அவனை வெறித்தவள், அகன்றுவிட்டாள்.

பரிதி ஒரு பெருமூச்சுடன் குளித்துவிட்டு வர, விக்னேஷ் சென்றிருந்தான். இவனுக்கான உணவை மட்டும் மேஜையில் வைத்திருந்தாள் வாணி. ஆளைக் காணவில்லை, தான் மது அருந்தியது பிடிக்காமல் அறைக்குள் அடைந்திருப்பாள் என்றெண்ணியவன், சாப்பிட்டுவிட்டு அவளைத் தொந்தரவு செய்யாமல் படுத்துவிட்டான்.

மறுநாள் காலை பாத்திரங்கள் உருளும் சப்தத்தில் கண்விழித்தவனுக்கு தலை பாரமாய் இருந்தது. எழுந்து வெளியே செல்ல, இசைவாணி கைத்தவறி கீழே போட்ட பாத்திரங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்‌. அடுப்பில் என்னவோ கொதித்தது. இவன் அவளிடம் பேச தயங்கி நிற்க, ஒரு எலும்பிச்சை பழத்தைப் பிழிந்து அவளே சாறெடுத்துக் கொடுக்கவும், அதை எடுத்துப் பருகியவன், “வாணி சாரி...” என்றான் சின்ன குரலில்.

அவள் அவனைக் கேள்வியாகப் பார்த்துவிட்டு சமையலைத் தொடர்ந்தாள். விடுமுறை முடிந்து வேலைக்கு செல்வதால் சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்ற பரபரப்பு அவளிடம். அதனாலே அவனிடம் பதிலுரைக்காது காரியத்தில் கண்ணாக இருந்தாள்.

“நான் உன்கிட்டதான் சாரி கேட்டேன் வாணி. அது... நேத்து மதி கம்பல் பண்ணான்னுதான் குடிச்சேன்!” அவன் சங்கடத்துடன் கூற, அவனைத் திரும்பிப் பார்த்தவளின் உதட்டில் கேலியான புன்னகை படர்ந்தது.

“என்கிட்டே நீ சாரி கேட்கணும்னு எந்த அவசியமும் இல்ல பரிதி. ட்ரிங்க் பண்றது உன்னோட சொந்த விருப்பம். அதுல நான் எப்படி தலையிட முடியும்? அதுவும் இல்லாம நீ குடிச்சிட்டு வந்தாலும் என்னை டிஸ்டர்ப் பண்ணாம அமைதியா சாப்பிட்டு படுத்துட்ட. சோ, எனக்கு எந்த பிராப்ளமும் இல்ல!” என்றவள் சில நொடிகள் யோசித்து,

“நீ என்கிட்ட இப்படி வந்து தயங்கி சொல்ல நமக்குள்ள என்ன இருக்கு? டைவர்ஸ் கேஸ் ஃபைல் பண்ணியாச்சு‌ சீக்கிரம் டைவர்ஸும் கிடைச்சிடும். சோ, உன் லைஃப் உன் இஷ்டம்!” என்றவள் அழகாய் புன்னகைத்தாள். அந்த சிரிப்பு அவனை காத தூரம் அவளிடமிருந்து தள்ளி தூக்கிப் போட்டது.

நெற்றியைக் கீறியவன், “இப்படிலாம் பேசாத வாணி. முன்ன மாதிரி நீ திட்டி ஓவர் ரியாக்ட் பண்ணா கூட ஓகே. பட், இது... இப்படி நீ பேசுறது ஒரு மாதிரி இருக்கு” என்றான் சின்ன குரலில்.

“உன்னை ஏன் பரிதி நான் திட்டணும். நான் தெளிவா சொல்றேன். உன்கிட்டே கோபப்பட்டு உன்னைத் திருத்துறது என் வேலை இல்லை. சரி, தப்பு எதுன்னு பிரிச்சு பார்க்குற வயசு உன்னோடது‌. இதுல நான் மூக்கை நுழைச்சு பழைய பஞ்சாங்கம் மாதிரி கருத்து சொன்னா நல்லாவா இருக்கும். மோர் ஓவர், நீயே சொல்லிட்ட நான் ஓவர் ரியாக்ட் பண்றேன்னு. அதான் எந்த ரியாக்ஷனும் கொடுக்கலை!” அமைதியான குரலில் உரைத்தவள், சமைத்த பாத்திரங்களைக் கழுவினாள். பரிதி அகலாமல் அவளையே பார்த்தான்.

சலிப்பாய் அவனை நோக்கியவள், “நான் இன்னும் லஞ்ச் ப்ரிபேர் பண்ணலை. அதை முடிச்சிட்டு குளிச்சு கிளம்பணும். நீ இப்படியே நின்னுட்டே இருந்தா எப்படி நான் குக் பண்றது?” எனக் கேட்டாள்‌.

“நீ ரொம்ப மாறிட்ட வாணி!” அவன் முணுமுணுத்து அகலப் பார்க்க, “பரிதி...” என்றவள் அவனை நிறுத்தினாள்.

“அம்மா இறந்த சோகத்துல நான் இருக்கவும், நீ என்கிட்ட அக்கறையா நடந்துகிட்டே. தேங்க் யூ சோ மச். பட், இப்போதான் நான் ஓகே ஆகிட்டேனே. நீ பழையபடி எப்படி என்னைத் தொரத்துறதுன்னு யோசி. என்னென்ன சொல்லி என் மேல பழி போடலாம்னு திங்க் பண்ணு. அதான் உன்னோட இயல்பு. எனக்காக நீ உன்னை மாத்திக்கணும்னு அவசியம் இல்ல!” என்றாள் தீவிரக் குரலில். பரிதி அவளை முறைத்தான்.

“உன் மேல பழி போட்றது ஒன்னும் என் வேலை இல்ல வாணி. நீ செஞ்சது தப்பு. அதை ஒத்துக்கப் பழகு. அதுக்காகத்தான் நான் உன்கிட்ட கோபப்பட்டேன். மத்தபடி உன்னைக் குறை சொல்றது என் நோக்கம் இல்ல. அண்ட் யெஸ், ஆன்ட்டி இல்லைன்னதும் உன் மேல என்க்கொரு கன்சர்ன்!” என அவன் மேலும் பேசப் போக,

“அதான்... அந்த அக்கறை சர்க்கரைதான் எனக்கு வேணாம். என்னை நான் பார்த்துக்கிறேன்!” என இடை வெட்டினாள் அவள்.

அதில் முகத்தை தூக்கியவன், “ரொம்ப நல்லது... எனக்கும் வேலை மிச்சம். நீ சாப்டீயா, தூங்கிட்டீயான்னு டைமர் செட் பண்ணி வாட்ச் பண்ற வேலை மிச்சம். இனிமே அழறதுன்னா என் முன்னாடி மட்டும் அழாத. ஏன்னா என்னால யார் அழுதாலும் பார்த்துட்டு இருக்க முடியாது. இரக்கம் பொத்துட்டு வந்துடும்!” என்றான் சிடுசிடுப்புடன். அவனை உணர்வற்றுப் பார்த்தாள் இசைவாணி. பரிதிக்கு அதெல்லாம் கருத்திலே படவில்லை. உண்மையில் இந்திய நேரம் லண்டன் நேரத்தோடு ஒத்து வராத காரணத்தால் அலைபேசியில் டைமர் வைத்து அவள் உண்டாளா, உறங்கினாளா என அறிந்து கொண்டவன், மறைக்காமல் அப்படியே அதை உரைத்தும்விட்டான்.

அவள் எதுவும் பேசாமல் அவனையே பார்த்திருக்க, “என்ன பார்வை? ஹம்ம்... அம்மாப்பா இல்லாதவளாச்சேன்னு போனா போகுதுன்னு பாவம் பார்த்து கேர் பண்ணா, வேணாம்னு சொல்லுவாளாம். எனக்கென்ன அவசியம் வந்துச்சு உன்னைப் பார்த்துக்க. இனிமே நீ என்ன பண்ற, ஏது பண்றன்னு எந்தக் கேள்வியும் நான் கேட்க‌ மாட்டேன். என்னமோ பண்ணிக்கோ. போ!” என்றவன் வெறுப்புடன் அகல, அவனையே பார்த்திருந்த இசைவாணியின் கண்களிலிருந்து சரசரவென கண்ணீர் இறங்கிற்று.

ஆம்! அவன் சொல்வது உண்மை தானே? இப்போது தான் தாய், தந்தையற்ற அனாதை தானே? அவன் கூறிச் சென்றது சரியாய் அவளைத் தாக்க, அ
ழக் கூடாது என நினைத்தாலும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. முகத்தை அடித்துக் கழுவிவிட்டு சமைத்தவள், உண்ணாமல் அலுவலகம் கிளம்பிவிட்டாள்.

தொடரும்...

 
Well-known member
Messages
525
Reaction score
380
Points
63
Ada ponga ya ivanga rendu perum pesunalae sandai than ya poduraga avan akkarai ah iva venam nu sonna nu ipadi kanmoodi ah varthai ah vittutan
 
Top