• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,309
Reaction score
3,887
Points
113
நேரம் – 29 💜

“போதும்மா... குழம்பு மீன் வேணாம். போ, போய் மசலா தடவி சூடா வறுத்து எடுத்துட்டு வா!” என்ற பரிதி வெகுகவனமாக மீனிலிருந்த முள்ளை நீக்கி அதை வாய்க்குள் தள்ளினான். அவனுக்கருகே அமர்ந்திருந்த இசைவாணியிடம் பேசிக்கொண்டே கீர்த்தனா சாப்பிட்டாள்.

இவர்கள் இருவரும் பொள்ளாச்சி வந்து ஓரிரு நாட்கள் கடந்து போயிருந்தன. இசைவாணி வந்ததும் மாமியாருக்கு, மாமனாருக்கு என வாங்கி வந்தவற்றை அவர்களிடம் கொடுக்க, பெரியவர்கள் பூரித்துப் போயினர். பரிதி சென்ற முறை லண்டனிலிருந்து வந்தப்போது தம்பி, தங்கைகளுக்கு மட்டும்தான் உடைகள், இன்னட்டுகள் என சிலவற்றை வாங்கி வந்தான். பெற்றவர்களை அவன் மறந்து போயிருந்தான். ஆனால் வாணி அவரவருக்கு என்னத் தேவையென யோசித்து வாங்கிக் கொடுத்தாள்.

“வாணி... இப்போ எனக்கு இந்த டச்சு போனு எதுக்கும்மா?” எனக் கேட்ட சிந்தாமணி ஆசையாய் அந்த அலைபேசியைத் தடவிப் பார்த்தார். மகன் உபயோகித்து வேண்டாமென கொடுத்திருந்த பழைய அலைபேசியைத்தான் இத்தனை நாட்களாக அவர் உபயோகித்தது. இப்போது மருமகள் புதிதாய் தனக்கென வாங்கிக் கொடுக்கவும், அவரது முகம் மலர்ந்தது.

“அப்போ உனக்கு ஃபோன் வேணாம்... அப்படித்தானேமா?” என்ற பரிதி கேலியுடன் தாயிடமிருந்த அலைபேசியைப் பிடுங்கப் பார்க்க, அவர் மகனை முறைத்தார்.

“என் மருமக எனக்கு வாங்கி கொடுத்தது டா. நீ ஒரு நாளாவது எனக்கும் அப்பாவுக்கும் ஏதாவது வாங்கி கொடுத்திருக்கீயா?” என அவனை சாடவும் அவர் தவறவில்லை.

“என்னம்மா நீ... என்னையும் என் பொண்டாட்டியையும் பிரிச்சுப் பார்க்குறீயா? அவ வேற, நான் வேறல்ல. அவ வாங்கிக் கொடுத்ததே நான் கொடுத்ததுக்கு சமம்தான்!” என இவன் பொய்யாய் கோபப்பட, இசைவாணி அவனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, கீர்த்தனா கேட்ட நவீன கடிகாரத்தை எடுத்துக் கொடுக்க, சின்னவளுக்கு ஆச்சர்யம் தாளவில்லை.

“அண்ணி... நான் போகும்போது சொன்னேனே... மறந்துருப்பீங்கன்னு நினைச்சேன். தேங்க்ஸ் அண்ணி, என் ப்ரெண்ட் ஸ்மார்ட் வாட்ச் வச்சிருக்கா. ஸ்கூலுக்கு எடுத்துட்டு வந்து சீன் போடுவா. இனிமே நானும் எடுத்துட்டுப் போவேனே!” என்றவள் துள்ளி குதிக்க, இவள் உதட்டில் முறுவல் பிறந்தது.

“எடுத்துட்டுப் போறதெல்லாம் சரி கீர்த்தனா. படிப்புல கவனைத்தை சிதற விட்றாத. ட்வெல்த் போயிட்டல்ல? நல்லா படிக்கணும்!” என்றாள் கண்டிப்பான குரலில்.

“ப்ம்ச்... அதெல்லாம் என் தங்கச்சி பார்டர்ல பாஸ் பண்ணிடுவா. நீங்க வொர்ரீ பண்ணிக்காதீங்க அண்ணி!” கீர்த்தனாவை இடித்துக்கொண்டே அஜித் வந்தமர்ந்தான். இவள் அவனுக்கான பையைக் கொடுத்தாள்‌.

திறந்து பார்த்தவன், “தேங்க்ஸ் அண்ணி... தேங்க் யூ சோ மச்!” என்றான் உணர்ச்சி பெருக்குடன். முதல்முறை நீட் தேர்வில் அவன் சொற்ப மதிப்பெண்ணில் மருத்துவ சீட்டை தவறவிட்டிருந்தான். இன்னும்

ஒரு வருடம் எடுத்து எப்படியாவது அடுத்த முறை நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று தீவிரமாகப் படித்து வருகிறான். எப்படியும் மருத்துவராகிவிடுவேன் என்ற எண்ணம் அவனிடம் வலுப்பெற்றிருந்தாலும் கூட, முதல்முறை தோற்றதை வைத்து சிலர் அவனைக் கேலி செய்திருந்தனர். ஆனால் வாணி அவன் மீதான நம்பிக்கையில் வெள்ளை அங்கியும், இதயத்துடிப்பு மானியும் வாங்கிக் கொடுத்திருந்தாள். அவனுக்கு மனம் ஒரு மாதிரி நெகிழ்ந்து போயிற்று.

“நம்ப வீட்டு டாக்டருக்கு நான்தான் ஃபர்ஸ்ட் கோட் வாங்கிக் கொடுத்திருக்கேன். நெக்ஸ்ட் இயர் நாங்க இந்தியா வரும்போது அஜித்தை டாக்டரா பார்க்கணும்!” என்றாள் சிரிப்புடன். அவளுக்கு அவனின் படிப்பின் மீதான ஆர்வம் எப்போதும் பிடிக்கும். பரிதி மாதிரி இல்லாமல் அஜித் கொஞ்சம் புத்திசாலி, உழைப்பாளி‌. அவனைக் கணித்தே இருந்தாள்.

‘ப்பா... இந்த ட்ராமவை இதுக்கு மேல பார்த்தா எனக்கு வாய் கோணிக்கும். எப்படித்தான் டிசைன் டிசைனா யோசிச்சு ஒவ்வொருத்தரையும் கவுக்குறாளோ? ஏதோ சினிமால ஹீரோயின் புகுந்த வீட்டு ஆட்களை கைக்குள்ள போட்டுக்குற மாதிரி செய்றா. இவளுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை? இன்னும் ஒரு வருஷத்துல யாரோ எவரோன்னு போகப் போறோம்‌. அதுக்கு இதெல்லாம் அவசியமா?’ மனத்தில் கருவினான் பரிதி. அன்றைக்கே சென்று தாயையும், கமலாவையும் பார்த்து வந்திருந்தாள் வாணி.

“முதல்ல உன் மாமியார் வீட்ல நாலு நாள் இரு பாப்பா. ரொம்ப நாள் கழிச்சு வந்ததால உன் மாமியார் மாப்பிள்ளைக்கு ஆசையா சமைச்சுப் போடணும்னு நினைப்பாங்க. அப்புறம் ஒரு நாலு நாள் இங்க வாங்க. நான் பார்த்துக்கிறேன்!” என சுந்தரி கூற, இவள் தலையசைத்து ஏற்றுக் கொண்டாள்.

அவர் கூறியது போலவே சிந்தாமணி பரிதி வந்து இறங்கியதும், “என்ன பரிதி... இப்படி இளைச்சுப் போயிட்ட? உன் பொண்டாட்டி நல்லா சமைச்சுப் போடலையா?” எனத்தான் கேட்டார். வாணி என்ன எதிர்வினையாற்றுவது எனத் தெரியாது நின்றிருந்தாள்.

“பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதாம்மா. என்னைப் பொய் சொல்ல சொல்றீயா? நீ கூட பழைய குழம்பை போட்டு என்னை இர்ரிடேட் பண்ணுவ. ஆனால் என் பொண்டாட்டி விதவிதமா சமைச்சுத் தருவா. இதுவரைக்கும் நான் டேஸ்ட் பண்ணாத டிஷ் கூட செஞ்சு கொடுத்துருக்கா. அவ இன்ஜினியரிங் வேலை பார்க்குறதுக்குப் பதிலா செஃபாகி இருக்கலாம்னு நானே சொல்லிருக்கேன். மூனு வேளையும் சுடசுட அவ கையால சாப்பிட்டு நாலஞ்சு கிலோ ஏறிப் போய் வந்திருக்கவன்கிட்ட போய் இளைச்சுட்டன்னு டையலாக் விட்றம்மா நீ. என் பொண்டாட்டியை வம்பிழுக்கத்தானே கேட்குற?” என அவன் காலாட்டியபடியே கூற, சிந்தாமணி கன்னத்தில் கைவைத்து அவனைப் பார்த்தார்.

“ம்மா... வாணி... என்ன பேசுறான் பார்த்தீயா இவன்? நான் அக்கறைல கேட்டா சண்டை இழுக்குறேனா? வாய் ஓவராகிடுச்சுடா மகனே உனக்கு!” என அவன் கன்னத்தில் இடித்தார் பெரியவர். இசைவாணி அவனை சில நொடிகள் புரியாது பார்த்துவிட்டு மாமியாரிடம் பேசச் சென்றாள். வந்த அன்று கோழி அடித்துக் குழம்பு வைத்தார் பெரியவர். அடுத்த நாள் ஆட்டுக்கறி, அடுத்தாக மீன். இன்னும் என்னென்ன வருமோ என அவள் கேலியுடன் உண்டாள்.

“ஏய்... அந்த வாட்சை கழட்டி வச்சாத்தான் என்ன டீ? தூங்கும்போது கூட அதைப் போட்டுட்டேதான் தூங்குவியா?” கீர்த்தனா தலையில் ஒரு அடியைப் போட்டார் சிந்தாமணி.

“போம்மா...” அவள் சிணுங்கியபடியே தட்டை வேறுபுறம் திருப்பி உண்ண ஆரம்பித்தாள்.

மறுநாள் காலை சிந்தாமணி நாட்டுக் கோழியும் நண்டையும் கணவரிடம் கூறி வாங்கி வரச் செய்து மும்முரமாக சமைத்துக் கொண்டிருந்தார்.

“ம்மா... மா!” அப்போதுதான் பரிதி எழுந்தான். சேம்பேறித்தனமாக இருக்கவும், பிறிதொரு நேரம் பல் துலக்கி கொள்ளலாம் என சூடு குறைவாயிருந்த தேநீரை ஒரே மிடறில் குடித்து குவளையைக் கழுவப் போட்டான்.

“இன்னைக்கு என்னம்மா சமையல்?” என்றவன் அடுப்பிலிருந்த பாத்திரத்தை எட்டிப் பார்த்தான்.

பொன்னிறமாக வெங்காயத்தை வதக்கிய சிந்தாமணி இஞ்சி பூண்டு விழுதை அதில் சேர்த்து கிளறியபடியே, “உங்கப்பா நண்டு வாங்கிட்டு வந்தாரு. அதான் அதைக் கூட்டு வச்சிட்டு, நாட்டுக் கோழி குழம்பு வைக்கிறேன் டா. செத்த இரு, குழம்பு வச்சதும் சூடா தோசை ஊத்தி தரேன். சாப்பிடுவ!” என்றார் சமையலில் கவனமாக.

“ம்மா... லண்டனல் இருக்கும்போது என் பொண்டாட்டி ஒரு சிக்கன் கிரேவி பண்ணாம்மா. என்ன டேஸ்ட்... ஹம்ம்... இப்போ நினைச்சா கூட என் அடி நாக்கு வரை எச்சி ஊறுது!” என சப்புக் கொட்டியவன்,

“நீ என்ன பண்ற... அவகிட்டே எப்படி செய்றதுன்னு கேட்டு எனக்கு செஞ்சுத் தர்ற!” என்றான். சிந்தாமணி பக்கவாட்டாய் திரும்பி மகனை முறைத்தார்.

“ப்ம்ச்... என்னம்மா நீ? நான் அங்க இருக்கப்போ உன் கையால செய்ற மீன் குழம்பை மிஸ் பண்றேன்னு ஒரு வார்த்தை சொன்னதுக்கு என் பொண்டாட்டி நீ வைக்கிற மாதிரியே குழம்பு வச்சு கொடுத்தா. ஆனால் நீ என்ன இப்படி முறைக்கிற? கொஞ்சமாச்சும் என் பொண்டாட்டி மாதிரி பெருந்தன்மையா இருக்கப் பழகும்மா!” என்றான் சற்றே குரலை உயர்த்தி. முகப்பறையிலிருந்த இசைவாணி இவனைக் கடுப்புடன் பார்த்திருந்தாள்‌.

“என்ன வாணி... அங்க இருந்தா எப்படி? வா... வந்து அம்மாவுக்கு அந்த கிரேவி எப்படி செய்றதுன்னு சொல்லிக் குடு!” என்றான் நக்கலாக. வாணி அவனைத் தீயாய் முறைத்தாள்.

“ஏன்டா...பொறந்ததுல இருந்து என் சமையலத்தானே சாப்பிட்டு வளர்ந்த. இப்போ புதுசா பொண்டாட்டி வந்ததும் என் சமையல் கசந்து போச்சா?” சிந்தாமணி மகனிடம் காய்ந்தார்.

“ப்ம்ச்... என்னம்மா நீ? அவ வைக்கிற கிரேவில திக்னஸ், ஒரு கன்சிஸ்டன்சி இருக்கும். வாசனையே ஆளைத் தூக்கும். இதுல புதினா, மல்லி எல்லாம் போட்டு டெகரேட் பண்ணுவா பாரு...” என அவன் இழுக்க, விறுவிறுவென சமையலறை வாசலில் சென்று நின்றாள் இசைவாணி. அருகிலிருந்த எதையாவது எடுத்து அவனை அடித்துவிடும் ஆத்திரம் அவளிடம். ஆனாலும் பொறுமையாயிருந்தாள்.

“போதும்டா யப்பா.‌.. உலகத்துல இல்லாத பொண்டாட்டி, ஒரு வருஷம் அவ சமைச்சுப் போட்டதுக்கு இவ்வளோ ஆகாது டா!” என்ற சிந்தாமணி மருமகளைப் பார்த்து கழுத்தை ஒடித்து திருப்பினார். வாணி பரிதியை சினத்தோடு பார்த்தாள்.

‘கோபம் வருதா... வருதா? என்னை என்னென்ன கொடுமை டீ பண்ண நீ? ஹம்ம்... ஒரு தூசி கண்ல பட்டா கூட மொத்த வீட்டையும் க்ளீன் பண்ணவா சொல்ற? அனுபவி?’ என அவளை கேலியாகப்‌ பார்த்தவன், “என்ன வாணி அங்கேயே நிக்குற? வா... வந்து குக் பண்ணு!” என அவள் கையைப் பிடிக்க வந்தான்.

இவள் நாசூக்காக மறுத்தவள், “அத்தை...” என்றாள் தயங்கியபடியே.

“அப்படியென்ன பொல்லாத டேஸ்ட்ல உன் பொண்டாட்டி குழம்பு வைக்கிறான்னு நானும் பார்க்குறேன்...” என்ற சிந்தாமணி, “நீயே பண்ணு வாணி...” என அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டு கடுப்புடன் அகன்றார். பரிதி வாணியின் முகத்தைப் பார்த்து திருப்திபட்டு, விசிலடித்துக் கொண்டே செல்ல, இவள் அவர் பாதியிலே விட்ட சமையலை முடித்தாள்.

காலையில் உண்ணும்போதும், “சே! என்ன கைப்பக்குவம் வாணி உனக்கு? டேஸ்ட் அள்ளுது போ. கிரேவி அப்படியே நாக்குல கரையுது. பெர்ஃபெக்ட் காரம், உப்பு எல்லாம். கறி கூடப் பஞ்சா வெந்துருக்கே!” என சிலாகித்தவன், இரண்டு பெண்களின் கோபத்தை உயர்த்திக் கொண்டே சென்றான்.

“ப்பா... என்னப்பா நீங்க? என் பொண்டாட்டி எப்படி சமைச்சிருக்கா? ஒரு வார்த்தை பாராட்ட உங்களுக்கு மனசு வரலையா?” என மார்த்தாண்டத்தையும் கேட்டான்.
வாணி கோபமும் சங்கடமுமாய் தலையைக் குனிந்தே உண்டாள்.

“ஆமாத்தா... கறிக் குழம்பு ரொம்ப நல்லா இருக்கு. இவ கூட தண்ணியா வைப்பா. நீ கெட்டியா வச்சிருக்க!” முன்பு நடந்த சண்டை தெரியாத மார்த்தாண்டம் மருமகளை மனமுவந்து பாராட்டினார்.

“நான் என்ன ஒன்னே ஒன்னா பெத்து போட்டிருக்கேன். கெட்டியா குழம்பு வைக்க? மூனு பேரைப் பெத்தா தண்ணியா வச்சாதானே எல்லாருக்கும் பத்தும். இவளை மாதிரி கெட்டியா குழம்பு வச்சு உங்களை மட்டும் பார்த்தா குடும்பந்தான் ஓடுமா? இல்ல... இந்த வீட்டைக் கட்டி உக்கார்ந்திருக்க முடியுமா? குழம்பை தண்ணியா வச்சு மிச்சம் புடிச்சுத்தான் இந்த வீட்டைக் கட்டியிருக்கோம்னு மறந்துடாதீங்க!” சிந்தாமணி பொங்கிவிட்டார் கணவர் பேச்சில்.

“ஏய்... சிந்தாமணி... என்னத்துக்கு இப்படி பேசுற? மருமக நல்லா சமைச்சிருக்கான்னு பாரட்டுனதுக்கு ஏன் இப்படி குரலை உசத்துற?” பெரியவர் மனைவியை சத்தம் போட, அவர் முகம் சின்னதானது‌.

“இந்தம்மா இப்படித்தான்பா. வந்ததுலருந்தே என் பொண்டாட்டி மேல பொறாமை பட்டு சண்டை போட்டுட்டே இருக்கு!” எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றிக் கொளுந்துவிட்டெறிய வைத்த பரிதி உண்டு எழ, சிந்தாமணியின் பார்வையை எதிர்க்கொள்ள முடியாமல் அரைகுறையாக சாப்பிட்டு அறைக்குள் நுழைந்தாள் வாணி.

பரிதி வந்ததும், “அறிவில்ல உனக்கு? என்ன பண்றோம், பேசேறோம்னு தெரிஞ்சுத்தான் செய்றீயா?” என்றாள் சீறலாக.

மெத்தையில் அமர்ந்து கையைப் பின்னோக்கி கொடுத்து அவளை அலட்சியமாகப் பார்த்த பரிதி, “ஏன் இல்ல... நல்லா தெரிஞ்சுத்தான் பண்றேன்!” என்றான் நக்கலாக.

“அப்போ எனக்கும் உங்கம்மாவுக்கும் சண்டை மூட்டி விட்றதுதான் உன்னோட இன்டென்ஷனா?” அவள் குரலில் கோபம் தெறித்தது.

“டெபனட்லி... ப்யூர்லி சண்டை இழுத்து விட்றதுதான் என்னோட இன்டென்ஷன்!” என அவளை உறுத்துப் பார்த்தவன்,

“வந்ததும் வராததுமா கலர் கலரா வாங்கி கொடுத்து எங்க்மமாவோட ஜவ்வு மாதிரி ஒட்டிக்கிட்ட? ஒரு வருஷத்துல நீ பிரிஞ்சு போகாம இப்படியே ஓட்டியிருக்கதை மெயிண்டென் பண்ணிட்டா நான் என்ன பண்றது? அப்பப்போ இப்படி சண்டை மூட்டி விட்டாதானே நாளைப் பின்னே ஈஸியா உன்னை என் வீட்லருந்து தொரத்திவிட முடியும். நல்லவளா... தியாகி பட்டத்தோட போய் என் பேரை டேமேஜ் பண்றதுதானே உன் ப்ளான்? அதெல்லாம் என்கிட்ட நடக்காது இசைவாணி!” என்றான் அழுத்தமாக.

அவனை சில நொடிகள் உணர்வுகளற்றுப் பார்த்தவள், இவனிடம் பேசி தன் தரத்தை இறக்கிக்கொள்ள வேண்டாமென அகன்றிருந்தாள். ஆனால் வீட்டைவிட்டு துரத்துவேன் என அவன் கூறியதில் மனத்தில் கோபம் பொங்கிற்று. இங்கிருக்கும் சில நாட்களில் இவனுடன் சண்டையிட்டு அது பெரியவர்களின் நிம்மதியைக் குலைத்துவிடும் என்பதாலே பொறுமையாய் சென்றாள். இல்லையெனில் அவனை உண்டு இல்லையென ஆக்குமளவிற்கு அவளுக்குள்ளும் கோபம் கனன்றது.

அடுத்து வந்த இரண்டு நாட்களும் சிந்தாமணிக்கு வாணியின் மீதான அதிருப்தியைக் குறைக்க விடாது ஏதாவது ஒன்றைக் கூறி இருவருக்குமிடையே பிணக்கை உருவாக்கினான் பரிதி. இசைவாணியால் அவனை எதுவுமே செய்ய முடியவில்லை. லண்டன் சென்றதும் என்னென்ன வகையில் அவனுக்குத் திருப்பிக் கொடுக்கலாம் என்ற கற்பனையில் தற்போதைக்கு மனத்தை தேற்றினாள்.

ஒரு வாரம் இங்கேயே கழிந்துவிட, சுந்தரியுடன் தங்க ஆசைப்பட்டவள், “அத்தை... நானும் அவரும் அம்மா வீட்ல போய் ஒரு வாரம் இருந்துட்டு வரோம்!” என சிந்தாமணியிடம் சென்று நின்றாள்.

“அதை ஏன்மா என்கிட்டே கேட்டுக்கிட்டு. அதான் உன் புருஷன்காரன் இருப்பானே! அவன்கிட்டே சொல்லு!” என்றார் முகத்தை திருப்பி.

“ஏய் வாணி... இதெல்லாம் உங்கம்மாகிட்டே சொல்லணுமான்னு என்கிட்டே கேட்டுட்டு இப்போ என்னம்மோ அவங்கட்ட பெர்மிஷன் கேட்குற? ஹக்கும்... அம்மா அதெல்லாம் எதுவும் நினைச்சுக்க மாட்டாங்க. நாளைக்கு நம்ம உங்க வீட்டுக்குப் போய் ஒன் வீக் ஸ்டே பண்ணிட்டு வரலாம்!” என்றவன், நிலக்கடலையை உரித்து வாயிலிட்டான்.

வாணி சிந்தாமணியைப் பார்க்கவே இல்லை. வந்த இரண்டு நாட்களும் மருமகளை அத்தனைப் பாசமாக, அக்கறையுடன் பார்த்துக் கொண்டவர் மகன், செய்கையில் மொத்தமாய் மாறிப் போனார். இவளால் அவரிடம் பரிதியின் செய்கையைப் பற்றியும் உரைக்க முடியவில்லை. இயலாமையில் கையை மடக்கியவள், அவனை வெறுப்போடு பார்த்தாள். அதெல்லாம் என்னைப் பாதிக்கவில்லை என்பது போல நடந்து கொண்டான் இவன்.

மறுநாள் இவர்கள் இருவரும் சுந்தரியைக் காண செல்ல, “சர்ப்ரைஸ்...” என அற்புதா ஆறுமாத வயிறு லேசாய் அசைய மெலிதாய் குதித்தாள்.
 
Administrator
Staff member
Messages
1,309
Reaction score
3,887
Points
113
“ஏய் அற்புதா... என்ன டீ பண்ற?” சுந்தரி அவளை அதட்ட, வாணி சென்று அவளை அணைத்துக் கொண்டாள். ஏற்கனவே அற்புதா கருவுற்றிருக்கும் விஷயம் இவர்களுக்குத் தெரியும்.

ஆனால் இப்போதுதான் நேரில் சந்திக்க சந்தர்ப்பம் வாய்த்தது. சென்ற முறை விடுமுறைக்கு வந்த அவளின் கணவன், கையோடு மனைவியை அழைத்துச் செல்ல நுழைவு இசைவோடு வந்தான். ஆனால் அவர்கள் கிளம்பும் நேரம் இவளது கர்ப்பம் உறுதி செய்யப்பட, பெரியவர்கள் மருமகளை மகனோடு அனுப்பாது தங்களுடன் வைத்துக் கொண்டனர்.

“அப்புறம் அத்தை மகளே... லண்டன் ஃபிகர்ஸ்லாம் எப்படி? ஏதாவது ஒன்னை எனக்கு செட் பண்ணி விடுறது?” சரவணன் வந்ததும் அவளைப் படுத்திவிட்டான். இவளும் சளைக்காமல் அவர்களுக்கு பதில் சொன்னாள். பரிதியும் சேர்ந்து கொள்ள, அடுத்த இரண்டு நாட்களும் சிரிப்பும், கேலியுமாக சென்றது.

பரிதி சுந்தரியையும் அழைத்து வந்து அவர்கள் விளையாடும்போது சேர்த்துக் கொண்டான். கமலாவை கூட சில நேரத்தில் வற்புறுத்தி அழைத்தான். அவனுடைய கவனம் அவர்களிடமும் இருந்தது.
இரண்டு நாட்களில் அற்புதாவும், சரவணனும் விடைபெற, இவன் மொத்த நேரமும் பெரியவர்களுக்கு என்றானது.

இந்த ஒரு வருடம் எப்படி சென்றது என சுந்தரியிடம் கேட்டறிந்தான். அவரது உணவு பழக்க வழக்கங்கள், உடல்நிலையில் என்னென்ன முன்னேற்றம் வந்துள்ளது, முழுதாய் நலமாகிவிட்டாரா? இடையில் மருத்துவரைச் சந்தித்தாரா? என ஒவ்வொன்றும் அவன் அக்கறையுடன் அறிந்துகொள்ள சுந்தரிக்கு மனம் நிறைந்து போனது.

“ஆன்ட்டி... இப்போ நீங்க பெர்பெக்ட்லி ஆல்ரைட். பட், இருந்தாலும் எங்களோட திருப்திக்காக ஒரே ஒரு டைம் ஜெனரல் செக்கப் பண்ணிடலாம். இயர்லி ஒன்ஸ் எல்லாரும் பண்றதுதான்!” என அவன் கூற, பெரியவரால் மறுக்க முடியவில்லை.

“சரிங்க தம்பி... உங்க ஆசைக்காகப் போகலாம்!” என்றார் புன்னகையுடன்.

கண்கள் இடுங்கத் தாயைப் பார்த்த வாணி, “ஏம்மா... ஆப்ரேஷன் பண்ண‌ முன்னாடி ஒவ்வொரு டைம் ஹாஸ்பிடல் போகும்போதும் என்னை என்ன பாடுபடுத்துன? நான் என்ன நோயாளியா? அது, இதுன்னு... ஹம்ம்... ஆனால், இப்போ நல்லா இருக்கும்போது கூட உன் மாப்பிள்ளை ஒரு வார்த்தை கூப்பிட்டதும் உடனே வர்றேன்னு சொல்லிட்ட?” குரலில் மெல்லிய கோபம் இழையோட கேட்டாள்.

“என்ன வாணி நீ? நீயும் மாப்பிள்ளையும் ஒன்னா? அவர் எனக்கு மகன் மாதிரி, ஒரு ஆம்பள பையன் இல்லையேன்ற குறையைத் தீர்க்க வந்தவரு!” சுந்தரி கூறவும்,

“அப்போ இன்னும் எனக்கு நீங்க மகன் போஸ்ட் கொடுக்கலையா ஆன்ட்டி? மாதிரிலதானே இருக்கேனா? சோ பேட்!” என அவன் அவரைக் கேலி செய்ய, சுந்தரி சிரிப்புடன் பதில் சொல்ல என அவர்களையே சில நொடிகள் உற்றுப் பார்த்தாள் இசைவாணி. இந்தப் பரிதியிடம் கல்மிஷம் இல்லை, துவேஷம் இல்லை, பொய்யில்லை. அவன் சிரிப்பு சொன்னது அவன் உண்மைத்தன்மையை.

‘இதுல எது நிஜம்? எது இவனோட உண்மையான குணம்?’ வாணியால் பரிதியின் குணத்தை இன்னதென இனம் கண்டறிய முடியவில்லை.‌

“தம்பி... கருவாட்டு தொக்கு வச்சு, முட்டை அவிச்சுடுறேன். வேற எதுவும் செய்யவா?” சுந்தரி மதிய உணவுக்கான பேச்சிற்குத் தாவிவிட, அருகில் அமர்ந்திருந்த இசைவாணியின் தொடர் குறுகுறு பார்வை இவனுக்கு அசௌகரியத்தை கொடுத்திருக்க கூடும்.

“பாருங்க ஆன்ட்டி... நீங்க எனக்கு என்னப் பிடிக்கும்னு கேட்டு குக் பண்ணித் தர்றதுல உங்க மகளுக்குப் பொறாமை. என்னை முறைச்சுப் பார்க்குறா!” அவரிடம் இவன் கேலியாக கூற,

“என்ன வாணி இது? அவர் நம்ப வீட்டு மாப்பிள்ளை” சுந்தரி மகளைக் கண்டிக்க, கோபத்தோடு எழுந்தவள்,

“இங்க வந்து நாலு நாளாச்சும்மா. நாலு நாளும் அவனுக்கு என்ன பிடிக்கும்னு மட்டும் கேட்டு குக் பண்ற? அங்கேயும் அத்தை அவங்க மகனுக்குப் பிடிச்சதாதான் செஞ்சு கொடுத்தாங்க. என்னை யாருமே ஒரு மனுஷியாவே மதிக்கிறது இல்ல. எனக்கு என்னப் பிடிக்கும்னு உனக்கு ஞாபகம் கூட இல்லைல?” என ஆற்றாமையுடன் கேட்டு விறுவிறுவென அறைக்குச்‌ சென்றாள்.

“ப்ம்ச்... வாணிம்மா... என்ன நீ? சரி உனக்கு என்ன வேணும்னு சொல்லு. அம்மா செஞ்சுத் தரேன்!” சுந்தரி மகள் பின்னோடு சென்று அவளை சமாதானம் செய்தார்.

“ஒன்னும் வேணாம் போ...” என அவள் முறுக்கிக்கொள்வது இங்கே வரை கேட்டது.

“கமலாக்கா... என்ன பொண்ணு வளர்த்து வச்சிருக்கீங்க? புருஷன் சாப்பிட்றதைப் பார்த்து பொறாமை படுறா‌. இதெல்லாம் சரியில்ல போங்க!” பரிதி சிரிப்புடன் கமலாவிடம்‌ புகார் வாசித்தான்.

“தம்பி... இது பொறாமை இல்ல. வாணிக்கு அம்மா, அப்பாதானே உலகம். ஒத்தையா அவங்க அன்பை அனுபவிச்ச புள்ளை. இப்போ திடீர்னு நீங்க வந்ததும் அம்மா உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குறதுல பாப்பாவுக்கு சின்னதா மனசு சங்கடப்பட்டிருக்கும். அவ அம்மாவை நீங்க பங்கு போடுறீங்கன்னு கோபம். வேற ஒன்னும் இல்ல!” இவர் வாணியை வாஞ்சையுடன் பார்த்துக் கூற,

“ஹக்கும்... உங்ககிட்டே நியாயம் கேட்டேன் பாருங்க. உங்க வீட்டுப் பொண்ணுக்குத்தானே நீங்க சப்போர்ட் பண்ணுவீங்க?” என அவன் சடைத்தான்.

சுந்தரி மகளை சமாதானம் செய்து அடுத்து வந்த இரண்டு நாட்களும் அவளுக்குப் பிடித்ததாகவே சமைத்துக் கொடுத்தார். நால்வரும் சேர்ந்து அருகேயுள்ள சில இடங்களை சுற்றிப் பார்த்தனர். மறுநாள் கோவிலுக்குச் செல்லலாம் என்ற சுந்தரியின் ஆசைப்படி, சிவன் கோவில் சென்றனர். கமலா வாணி எடுத்துக் கொடுத்த புடவையைத்தான் உடுத்தி வந்தார்.

“ஏன் வாணிம்மா... இந்த சேலைல என்ன மூன்னூறு ரூவான்னு போட்டிருக்கு. லண்டன்ல இவ்வளோ சீப்பாவா கிடைக்குது ட்ரெஸ்ஸூ?” என அவர் அதை உடுத்தும் போதே கேட்டார்.

“அவங்க நாட்டு காசுக்கு மூன்னூறு ரூவா கமலாம்மா. நம்ம நாட்டுக்கு கொஞ்சம் அதிகம். விலையைக் கேட்காதீங்க நீங்க!” என அவள் கூற, அவர் நேரே சென்று பரிதியிடம் எவ்வளவு எனக் கேட்டார்.

“நம்ப நாட்டு காசுக்கு மூவாயிரம் கமலாக்கா!” என அவன் பொய் கூற,

“மூவாயிரமா? எதுக்கு வாணிமா இவ்ளோ விலைக்கு எடுத்த?” என இவர் முகத்தை தூக்கினார்.

உண்மையில் அது முப்பதாயிரம் புடவை. அதை சொல்லியிருந்தால் அவரை சாமளித்திருக்க முடியாது என இவள் நிம்மதி பெருமூச்சுவிட்டாள். நால்வரும் சேர்ந்து சிவனை தரிசித்துவிட்டு, வெளியே உண்டு அப்படியே திரைப்படம் ஒன்றிற்கு சென்று வந்தனர்.

சுந்தரி ஓய்வெடுக்கட்டும் என வாணியும் கமலாவும் எளிமையாக இரவு உணவை சமைக்க, அனைவரும் சாப்பிட்டு முடித்தனர். சுந்தரியின்‌ அறையில் அமர்ந்து பரிதி அவரோடு அளவளாவ, இவர்கள் சமையலறை சுத்தம் செய்துவிட்டு வந்தனர்.

“ம்மா... டைம் என்னாச்சு? தூங்காம என்ன கதையடிச்சிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?” என தாயை அதட்டிய வாணி,

“பரிதி... போய் தூங்கு!” என்றாள் கண்டிப்பான குரலில்.

“பாருங்க ஆன்ட்டி... உங்க முன்னாடியே என்னை எப்படி மிரட்டுறான்னு. தனியா இருக்கும்போது ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசரா இருக்கா!” அவன் போலியாய் புகார் வாசித்தபடியே எழுந்து நின்று கையைத் தூக்கி உடலை பின்னோக்கி வளைத்து நெட்டி முறித்தான். பெரியவரிடம் பேசியதில் அவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை.

கொட்டாவி ஒன்றை விட்டவன், “ஓகே ஆன்ட்டி... மார்னிங் பேசலாம். உங்க மக என்னைக் கண்ணாலே மிரட்டறா...” என அவன் அகல, சுந்தரி முகத்தில் சிரிப்பு.

“படும்மா... உன் மருமகன் எங்க ஓடிடப் போறாரு. காலைல எழுந்து அவன்கிட்டே பேசு!” இவள் மூக்கைச் சுருக்கி பொறாமை வழிந்தக் குரலில் கூற, மகள் கையைப் பிடித்திழுத்து தன்னருகே அமர்த்தினார் அவர்.

“தங்கமான பையன் வாணி... இப்படியொரு பையனோட நீ சந்தோஷமா வாழ்றதைப் பார்க்க உங்கப்பாவுக்கு கொடுத்து வைக்கலை!” என்றார் வருத்தத்துடன்.

அவரைப் பார்த்து முறுவலித்தவள், “அப்பா இங்கதான்மா இருக்காரு. அவரும் நம்பளை பார்த்துட்டுத்தான் இருப்பாரு!” என்றாள் அவர் கையைத் தட்டிக் கொடுத்து. சுந்தரியிடம் பெருமூச்சு எழுந்து அடங்கிற்று.

“சரி... ரொம்ப யோசிக்காம தூங்குமா!” என்றவளை அவர் ஆதுரமாகப் பார்த்தார்.

அந்தப் பார்வையில் ஏதோ வேறுபாட்டை உணர்ந்தவள், “என்னமா... ஏன் இப்படி பார்க்குற?” என அதட்டினாள்.

“நான் ரொம்ப நிம்மதியா இருக்கேன் வாணிம்மா. இனிமே உன்னைப் பத்தி யோசிக்கவே தேவையில்லை. பரிதி தம்பி என்னைவிட உன்னை நல்லா பார்த்துக்குறாரு. இப்போ கண்ணை மூடுனா கூட நிம்மதியா போய்டுவேன் நான்!” என்றார் இயல்பாக. அவரையும் மீறி அந்த வார்த்தைகள் வந்து விழுந்தன.

“ச்சு... என்ன பேச்சுமா இது? ஹம்ம்... எவ்வளோ கஷ்டப்பட்டு ஆப்ரேஷன் முடிச்சு உன்னைக் காப்பாத்தி வச்சிருக்கோம். பேச்சுக்கு கூட அப்படி சொல்லாத நீ!” இவள் தாயை அதட்டினாள்.

அதில் சிரித்தவர், “சும்மா சொன்னேன் வாணிமா. நெருப்புன்னா வாய் சுட்டுடுமா?” என்றவர்,

“உன்னை விட இளையவ அற்புதா. அவங்கம்மாப்பாவை பாட்டி தாத்தாவாக்கப் போறா. ஆனால் நீ எதுவுமே சொல்லாம இருக்கீயே டீ. இன்னும் ஒரு வருஷம் அங்க இருந்தா போதும்தானே? இங்க வந்ததும் ஆணோ, பெண்ணோ பெத்துக் குடு வாணி. அந்த ஆசையும் நிறைவேறிடுச்சுன்னா போதும்!” என்றார் மகளை எதிர்பார்ப்புடன் ஏறிட்டு.

சில நொடிகள் தயங்கிவள், “ஒரு வருஷம் போகட்டும்மா. முதல்ல இங்க வந்துக்குறோம் நாங்க..” என அப்பேச்சைக் கத்தரித்தாள்.

“பாப்பா சொல்றதும் சரித்தானேம்மா?” கமலா கேட்க, பெரிவர் தலையை அசைத்தவர், மகளை அணைத்து முத்தமிட்டார். அவர் செய்கையில் இவளுக்கும் முறுவல் படர, தாயை அணைத்து தானும் முத்தமிட்டாள். கமலா இவர்களை சிரிப்புடன் பார்த்திருந்தார்.

“சரி... சரி. நீ போ, மாப்பிள்ளை உனக்காக காத்திட்டிருக்க போறாரு...” சுந்தரி அவளை விரட்டினார்.

“யாரு உன் மாப்பிள்ளை தானே? கவுந்தடிச்சுப் படுத்து தூங்கிருப்பான்!” எனக் கேலியாக முணுமுணுத்தவாறே சென்ற மகளை சுந்தரி கண்களில் நிரப்பிக் கொண்டார்.

மறுநாள் காலை சுந்தரிக்கு விடியாமலே போயிற்று.

தொடரும்
 
Well-known member
Messages
519
Reaction score
376
Points
63
Parithi oda character ah simple ah sollanum nu ennaku therincha varaikum avanuku oruthar ah pidicha avangalukku enna vena seiyuvan athu than sundari avanga vishyathula avan nadathukira vithathula theriyuthu and vani ah avanuku pidikkala na ra tha vida ava mela ulla virupatha innum unara ah la avan athu than aval ah ipadi imsai panran aana aniyayam ah sundari aunty ah yen ipadi potu thallitiga sis
 
Top