• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,315
Reaction score
3,913
Points
113
நேரம் – 25 💜

லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் தன் பயணப் பொதியை இழுத்துக்கொண்டு வெளியே வந்தான் பரிதி. அவனருகே வெள்ளை வெளீரென சருமம் பற்களோடு போட்டிப் போட, முட்டிக்கு மேல் கால்சராயும் தொளதொளவென கொசவு சட்டையும் அணிந்திருந்த பெண் நடந்து வந்தாள். இருவரது முகத்திலும் சிநேக பாவம் படர்ந்திருந்தது. ஒருவரையொருவர் பார்த்து சின்னதாய் புன்னகைத்தனர்.


சென்னையிலிருந்து இங்கு வரும்போது விமானத்தில் அவனருகே அமர்ந்த பெண்தான் இவள். பரிதியுடன் கைக்குலுக்கி அவள் விடைபெற யத்தனிக்க, “ஹம்ம்... மதி!” தொண்டையைச் செருமி‌ அழைத்தான் பரிதி.

“யெஸ் இளா!” அவள் இவனைப் புருவம் தூக்கிப் பார்த்தாள். செயற்கையாய் அவள் கண்களில் வைத்திருந்த மெல்லிய சாம்பல் வண்ண லென்ஸால் அவனை உடுருவியபடி குறும்பாகப் பார்த்தவள், “டூ யு வாண்ட் மை நம்பர்?” என அவன் தயங்கிய விஷயத்தை எடுத்துக் கொடுத்தாள். பிடரியைக் கோதி சின்னதாய் உதடு பிரித்து சிரித்தவனின் தலை மெதுவாய் ஆடியது.

மனம் சில பல மணி நேரங்களுக்கு முன்னே அவளைப் பார்த்த நொடிக்குத் தாவிற்று. மெழுகு சிலை போல கொழு கொழு கன்னங்களும் கழுவி துடைத்தாற் போல மாசு‌ மருவற்ற முகமும், முக்கிலிருந்த மூக்குத்தியும், சுருண்டு படர்ந்த குட்டை முடியுமாய் வந்து நின்றவள், “எக்ஸ்யூஸ் மீ?” எனக் கேட்டதும், சில நொடிகள் இவனுக்குப் பேச்சு மறந்து போனது. திகைத்து விழித்து, எழுந்து அவளுக்கு வழிவிட்டான்.

தனக்கருகே அவள் அமர்ந்ததும் ஜில்லென்ற மழைச்சாரலில் நனைந்தது போல குளிர்ந்தவன், மெதுவாய் பேசத் தொடங்கி அவள் பெயரை அறிந்தான்
இளமதி என அவள் கூறியதும் தன்‌ பெயரின் பிற்பாதி என ஆர்வத்தோடு பேச்சை நீட்டிக்கச் செய்து, இங்கு என்ன செய்கிறாள் என அவன் தயங்கிபடியே கேட்க, அவளோ மடை திறந்த வெள்ளம் போல சிரித்துப் பேச, இவன் அதில் விழ்ந்து போயிருந்தான்.

சில நிமிட பேச்சிலே இளம்பரிதி இளாவாகி சுருங்கிப் போயிருக்க, இளமதியும் மதியாகிப் போனாள். இப்போது அவரவர் பாதையை நோக்கி நகர்கையில் அவளை எப்படி மீண்டும் சந்திக்க என மனம் பரபரத்தது. அதனாலே தயங்கி அவள் தொடர்பிலக்கத்தைக் கேட்கலாமா? வேண்டாமா என நின்றான். ஆனால் அவளுக்கு அப்படியொன்றும் இல்லை போல.

“கமான் இளா... லெட்ஸ் பீ ஃப்ரெண்ட்ஸ். நெக்ஸ்ட் வீக் எண்ட் மீட் பண்ணலாம். நீங்க போய் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க. வீ வில் கோ அவுட்!” என்றவள் தன்னுடைய இலக்கத்தைக் கொடுத்துவிட்டுப்‌ போனாள். அவள் குரலில் ஒரு நளினம் அழகாய் அவனை ஆட்டுவித்தது. இயல்பாக தன் நட்பழைப்பை ஏற்றவளை சிரிப்புடன் பார்த்தான்.

எப்படியெல்லாம் ஒரு பெண்ணின் தோற்றம் தன்னை ஈர்க்க வேண்டுமென எண்ணியிருந்தானோ, அதற்கெல்லாம் உருவம் கொடுத்தது போல இளமதி வெகு அழகாக நளினமாக இருந்தாள். நீண்ட வருடங்களாக லண்டனிலே வசிப்பதால் இந்த நாட்டின் வாசம் நிறைய அவளிடம் வீசிற்று. அவளுடைய உடை, கைப்பை என அனைத்திலும் பணக்காரத்தன்மைக் கொட்டிக் கிடந்தது.

‘கண்டிப்பா என்னைத் திரும்பி பார்க்க மாட்டா. ஆள் இருக்கான்னு கூட கேட்காம விட்டுட்டோம்!’ என பெருமூச்சுவிட்டவன் தோளில் படாரென்று ஒரு அடி விழவும், திகைத்து திரும்பினான். மாநிறமும் ஆஜானுபாகுவான உடலுடன் இளைஞனொருவன் இவனைக் கேலியாகப் பார்த்தான்.

“ஏன் மச்சான்... வரும் போதே உன் வேலையை ஸ்டார்ட் பண்ணிட்ட போல? எங்கேயோ பெரிய மச்சம் இருக்குடா உனக்கு?” எனக் கேலி செய்தவன், இளமதியை சில நொடிகள் பார்த்தான். அவள் ஒரு மகிழுந்தில் ஏறிப் பின்னர், இவனிடம் சின்ன கையசைப்புடன் விடை பெற்றாள்.

“விக்கி... நீ வேற, அவ ஹை க்ளாஸ் பொண்ணு டா. நான் சும்மா பேசினேன். தட்ஸ் இட், அந்தப் புறாவெல்லாம் நமக்கிட்டே சிக்காது!” என்றவன், “இருந்தாலும் உன் தங்கச்சியை நீ இப்படி பார்க்க கூடாது!” என தனக்கு அவன் கொடுத்த அடியைவிட இரண்டு மடங்காக கொடுத்தான். விக்னேஷ் அவனை முறைக்க, இருவரும் தங்களை தாங்களே கலாய்த்துக் கொண்டே விமான நிலையத்திற்கு பக்கவாட்டிலிருந்த தொடர்வண்டி நிலையத்தை நோக்கி நடந்தனர்.

விக்னேஷிற்கு சிவகாசிதான் சொந்த ஊர். ஒரே கல்லூரியில் இவனும் பரிதியும் முதுகலை படிக்க சேர்ந்த போது நட்பாகியிருந்தனர். இவர்களோடு குஜராத் மற்றும் டெல்லியிலிருந்து பயில வந்த இரண்டு பேர் சேர்ந்து நால்வரும்தான் முதுகலை ஒன்றாய் முடித்தனர். அதில் பரிதிக்கு மட்டும் நுழைவு இசைவு கிடைக்காது போய்விட்டது. மற்ற மூவரும் படிப்பு முடிந்த கையோடு வேலை தேட மீண்டும் இங்கே வந்துவிட்டனர்.

விக்னேஷிற்கும் குஜராத்தை சேர்ந்த விராஜிற்கும் சென்ற மாதம்தான் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்திருந்தது. மூன்றாமவன் சலீமிற்கு இன்னும் நல்ல உத்தியோகம் அமையவில்லை. அதனால் அவன் பகுதி நேர வேலையைத் தொடந்து கொண்டே நிறைய நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டான். இவர்கள் மூவரும் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் பரிதியின் கால்கள் நுழைந்தன.

“ஹே பரிதி... கமான் மேன்!” மற்ற இருவரும் இவனை உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களோடு கடந்த ஐந்து மாதக் கதையை அவன் பேச, வீட்டிலிருந்து அழைப்பு வந்துவிட்டது. மார்த்தாண்டம் இவனுக்கு நான்கைந்து முறை அழைத்துவிட்டார்.

“அங்கப் போய் இறங்குனதும் ஃபோன் போட சொன்னேன்லடா. ஏன் நான் ஃபோன் பண்ணாலும் எடுக்கலை?” அவர் சத்தம் போட,

“ஃபோன் சைலண்ட்ல இருந்துச்சுப்பா. இப்போதான் எடுத்தேன்!” என்றவன், முகத்தை நீரால் அடித்துக் கழுவினான்.

“சரி சரிடா... பத்திரமா இரு. வெளிய எங்கேயும் ஊர் சுத்தாத. சீக்கிரம் வேலைக்கு சேர்ற வழியைப் பாரு!” அவர் அறிவுரை கூற,

“ஏன்யா பரிதி... ஏரோப்ளேன்ல கொடுத்த சாப்பாடு பத்துச்சோ என்னவோ? போ... போய் முதல்ல குளிச்சி சாப்பிட்டுட்டு தூங்கு. அப்புறம் பொறுமையா வேலை தேடலாம்!” சிந்தாமணி மகனைப் பிரிந்த வருத்தத்தில் பேசினார். கீர்த்தனா அடுத்தாக பேச, அஜித் இவனைக் கண்டு கொள்ளவில்லை.

“ஆமா... வாணி எங்க டா? ஆளைக் காணோம்? உனக்குத்தான் சமைக்கிறேன்னு சொல்லிட்டு இருந்தா? இன்னுமா சமைக்கிறா?” சிந்தாமணி இடையில் இசைவாணியைப் பற்றிய பேச்சை எடுக்க, பரிதி கடுப்பானான்.

நுழைவு இசைவு வந்ததும் அவனுடனான தொடர்பை முற்றிலும் அவள் தவிர்த்திருந்தாள். இவன் எப்போது வருகிறான்? என்ன செய்கிறான் என எவ்வித கேள்வியும் அவளிடம் இல்லை. ஆனால் இவன் அடுத்த ரெண்டு மாதமும் சுந்தரியோடு மருத்துவனை அடிக்கடி சென்று வந்து, அவரது உடல்நிலை நன்கு தேறியப் பின்னர்தான் ஆசுவாசமானான். அவள் இல்லாத போது கூட அவளது தாயைத், நான் பார்த்துக் கொண்டேன். ஆனால் அந்த நன்றி அவளுக்கில்லை என இவனுக்குள் கோபம் கனன்றது.

“ஆ... நாலு மாசம் கழிச்சு புருஷனைப் பார்க்கிறதால நாலஞ்சு ஐட்டம் பண்றா போல அவ. சரி... நீங்க போய் படுங்க, நான் என் பொண்டாட்டி கையால் சாப்பிட போறேன்!” என கடுப்புடன் அலைபேசியைத் துண்டித்துவிட்டு குளித்து வந்து நால்வரோடும் அரட்டையடித்து உண்டு அப்படியே கூடத்திலே கை காலை நீட்டி உறங்கிப் போனான்.

“வாணி... என்னடீ? மாப்பிள்ளை வந்துட்டாரா? சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்குறாரா?” சுந்தரி கேட்ட கேள்வி அனைத்திற்கும் வெறுமனே உம் கொட்டினாள் வாணி.

“சரி... சரி, தம்பி ரொம்ப டையர்டா இருப்பாரு‌. நீ அவரை டிஸ்டர்ப் பண்ணாத. அவரோட பேக்ல உனக்குப் பிடிக்குமேன்னு மாங்கா ஊறுகாய் வச்சுவிட்டேன். எடுத்து வெளிய வை. உன் மாமியார் வேற பலகாரம் சுட்டுக் கொடுத்தாங்க. எதையும் வேஸ்ட் பண்ணாம சாப்பிடுங்க!” என்றார் பொறுப்பாய். இவள் அசிரத்தையாய் கேட்டுக் கொண்டவள், வெளியே செல்வதற்கு தயாராகினாள்.

“மாப்பிள்ளை வந்திருக்காரு. அவரை விட்டுட்டு நீ வெளியே எங்க கிளம்புற?” அவள் அணிந்திருந்த சுடிதாரின் மேல் குளிரைத் தாங்கும் உடையை உடுத்தினாள்.

“பம்ச்... ம்மா... வீக்கெண்ட்லதான்மா க்ரோசரீஸ் வாங்க போக முடியும். வீக் டேய்ஸ்ல எனக்கு வொர்க் இருக்கும். உன் மாப்பிளைக்கு வாய்க்கு வக்கனையா சமைச்சுப் போட வேணாமா?” சின்னதாய் குரலை உயர்த்தியவள், கைப்பையை எடுத்து மாட்டிக்கொண்டு வீட்டுக் கதவைப் பூட்டினாள்.

“மாப்பிள்ளை உள்ளே இருக்காரே. நீ கதவைப் பூட்டிட்டு இருக்க வாணி?” சுந்தரி சற்றே கோபமாக கேட்டாள்‌.

“ம்மா... உன் மாப்பிள்ளை நல்லா தூங்குறாரு. நான் கொஞ்ச நேரத்துல ஷாப்பிங் முடிச்சிட்டு வந்துடுவேன்மா...” என சலித்தாள் இவள்‌.

“ஏன் வாணிமா... அங்க கடையெல்லாம் எப்படி இருக்கும்? நம்ப ஊர் மளிகை கடை மாதிரியா? இல்ல பெரிய மால் மாதிரி இருக்குமா?” எனக் கேட்ட கமலா, “கருவாடெல்லாம் அங்க கிடைக்குமா?” சந்தேகத்தோடு அவளைப் பார்த்தார்‌.

“எல்லாமே கிடைக்கும் கமலாம்மா. நம்ம ஊர்ல இல்லாதது கூட இங்கே அவைலபிள்தான். என்ன இண்டியன் சூப்பர் மார்க்கெட் போனால்தான் கிடைக்கும். இங்க பக்கத்துல ஒரு ஷாப் இருக்கு. பட் எல்லா ஐட்டமும் கிடைக்காது!” என காணொளி அழைப்பைத் துண்டித்து காதிற்கு கொடுத்தவாறு இரயில் நிலையத்தை நோக்கி நடையிட்டாள்.

“வாணி... கருவாடு கூட கிடைக்குமா?” கமலா ஆர்வமாக கேட்டார். இவள் ஆமாமென பதிலளித்துவிட்டு இரயில் நிலையத்தினுள் நுழைந்தாள்.

“சூப்பர் வாணி... அப்போ மறக்காம கருவாடு வாங்கிக்கோ. குச்சி கருவாடு வேணாம், துண்டு கருவாடு வாங்கு. மாப்பிள்ளைக்கு நான் பண்ண கருவாடு தொக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லி ரெண்டு டைம் செஞ்சு கொடுத்தேன். எப்படி செய்றதுன்னு சொல்லித் தரேன். அப்பப்போ அவருக்கு பண்ணிக் குடு!” என அவர்கள் இருவரும் பரிதியைப் பற்றியே பேச, இவளுக்கு அந்தப் பேச்சை தொடர விருப்பமில்லை.

“ம்மா... ட்ரெயின் வந்துடுச்சு. நீங்க ரெண்டு பேரும் போய் தூங்குங்க. நான் நைட் கால் பண்றேன்...” என அழைப்பைத் துண்டித்துவிட்டு தொடர் வண்டிக்காக காத்திருக்கத் தொடங்கினாள். நான்கு மாதத்தில் லண்டன் மாநகரத்தின் பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள அவள் பழகியிருந்தாள். முதலில் தனியாய் வெளியே செல்ல தயங்கி அருகிலிருக்கும் கடையில் என்ன இருக்கிறதோ அதையே வாங்கி சமைத்தாள்.

பின்னர் அவளுடன் வேலை பார்க்கும் பெண்தான் ஒருமுறை இந்தியப் பொருட்கள் கிடைக்கும் பல்பொருள் அங்காடிக்கு அழைத்துச் சென்று பழக்கப்படுத்த, அதையே பின்பற்றி செல்லத் துவங்கினாள் இசைவாணி. இந்த நான்கு மாதத்தில் இங்கிருந்த முருகன் மற்றும் சிவன் கோவிலுக்கு ஒருமுறை சென்று வந்தாள்.

அவள் வசிப்பது ஹவுன்ஸ்லோ பகுதி. அதனாலே அருகிலிருந்த பிக் பெண்ணின் உயர்ந்த கோபுரத்தை ஒருமுறை சுற்றி வந்தாள். தனியாய் சென்றதாலோ என்னவோ அவளுக்கு வெறுமையாய் இருந்தது. பின்னர் விடுமுறை நாளில் எங்கேயும் செல்லாமல் பொருட்கள் வாங்க கடைக்கு செல்வது, சமைத்து உண்பது, படம் பார்ப்பது, தூங்கி எழுவது என எதையாவது செய்தாள். அவள் மட்டும் இருக்கும் நேரங்களில் அறையில் மெல்லிய இசையைக் கசிய விட்டிருப்பாள். உண்மையில் தனிமையை போக்கத்தான் பாடல் கேட்க தொடங்கினாள்.

அங்கே கமலா, சுந்தரி உடனிருந்ததால் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இங்கே யாரிடமும் அவளுக்கு ஒட்ட முடியவில்லை. தமிழ் பேசும் ஓரிருவரைத் தெரிந்தாலும் அவர்கள் ஏற்கனவே ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கி அதை சுற்றியே நகர்ந்தனர். இவளாகப் பேச சென்றால் இவளை அவர்கள் கண்டு கொள்ளாதது போல எண்ணம் வரவும், யாருடனும் நட்பு ஏற்படுத்தும் முயற்சியை முற்றிலுமாக கைவிட்டாள்.

ஆனால் அவள் வீட்டின் கீழ் வசிக்கும் வயதான லண்டன் தம்பதியினர் இவளிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டனர். இவளாக சென்று பேசவில்லை. ஒருமுறை இவள் ஏதோ சமைக்கும்போது, “நல்ல வாசனை வருதே, என்ன சமைக்கிறமா?” என ஏழுபது வயது முதிய பெண் ஆங்கிலத்தில் கேட்டுக் கொண்டே வர, முதலில் இவள் தயங்கினாள்.

அவர் சிரித்துப் பேச, இவளுக்கும் புன்னகை பிறந்தது. தான் சமைத்ததை அவர்களுக்கு கொடுக்க சற்றே தயங்கினாள். இந்தியாவில் போல இங்கே மசாலா அதிகம் சேர்த்த கார உணவுகளை யாரும் உண்ண மாட்டார்கள்.அப்படியிருக்கையில் இவள் உண்ணக் கொடுத்து அந்த வயதான தம்பதியருக்கு உடல்நிலை கெட்டுவிடுமோ என அஞ்சியவள், அதை அவரிடமும் தெரியப்படுத்தினாள்.

அவர் சின்னதாய் ஏமாந்தாலும் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு வேண்டாமென மறுத்து சென்றுவிட, மறுநாள் அவர்களுக்காகவே மெனக்கெட்டு காரம் உப்பு அனைத்தையும் குறைத்து சமைத்து எடுத்துச் சென்று கொடுத்து பேசிவிட்டு வர, தானாக அவர்களுடன் பிணைப்பு ஏற்பட்டது.

சென்ற வாரம் இவள் வசிக்கும் தளத்திலிருந்த பங்களாதேஷை சேர்ந்த பெண்ணொருத்தி இரண்டு கனமான பைகளைத் தூக்கி வர, வாணியாகச் சென்று அவளுக்கு உதவி செய்ததில் அந்தப் பெண் அடுத்து இருமுறை பார்க்கும்போது புன்னகைத்துவிட்டு போனாள். இப்படி அதுவாக அமைந்த நட்புகளை அவள் வரவேற்றாள். மற்றபடி பெரிதாய் யாரிடமும் இன்னும் ஒட்டி உறவாடவில்லை.

நாற்பத்தைந்து நிமிட பயணத்தில் அந்தப் பல்பொருள் அங்காடிக்குச் சென்று தேவையானவற்றை வாங்கிவிட்டு ஒரு மகிழுந்து பதிவு செய்து வீட்டிற்கு வந்துவிட்டாள். வரும்போது சுமைகளை அவளால் தூக்க முடியாது என்பதால் தனிப்பட்ட போக்குவரத்தை பயன்படுத்தினாள்.

பெரும்பாலும் பணத்தை சேமிக்க எண்ணி பொது போக்குவரத்தைதான் பயன்படுத்துவாள். எண்ணதான் அவளுடைய சம்பளம் சில பல லட்சங்களைத் தாண்டினாலும் இங்கிருக்கும் விலையைப் பார்த்துவிட்டு மனம் தானாய் இந்திய ரூபாயைக் கணக்கிட, செலவு செய்ய தயங்கி முடிந்தளவு சேமித்தாள்.‌

அறுபது லட்சம் கடனை அடைத்துவிட்டால் போதும் இப்போதைக்கு. அவள் வந்ததின் நோக்கமும் அதுதானே. தன் செலவைக் குறைத்து வீட்டிற்குத் தேவையான பணத்தை அனுப்பிவிட்டு மீதவற்றை கடன் வாங்கியவரிடம் அப்படியே கொடுத்தாள். இந்த நான்கு மாதங்களில் கிட்டத்தட்ட ஒன்பது லட்சத்தை சேமித்திருந்தாள். இரண்டு வருடத்தில் தாராளமாக கடனை அடைந்துவிடலாம் என மனமும் கணக்கிட்டு மகிழ்ந்தது. கடைக்குச் சென்று வந்தவள், மதியத்திற்கு சாதம் வைத்து தயிரோடு உருளைக்கிழங்கு வறுவல் என வெகுசாதாரணமாக சமைத்து உண்டு பொழுதைக் கழித்தாள்.

அப்படியே நாட்கள் நகர, இரண்டு வாரங்கள் ஓடியிருந்தது. இடைப்பட்ட நாட்களில் பரிதி பற்றிய கேள்விகள் அத்தனைக்கும் பொய்யை மட்டுமே கூறி இவளுக்கே சலித்தது. அவன் சாப்பிடுகிறான், தூங்குகிறான், வேலைத் தேட கிளம்பி விட்டான், நேர்முகத் தேர்வுக்கு தயாராகிறான் என சுந்தரியையும் கமலாவையும் சமாளிப்பதற்கே அவளது மொத்த ஆற்றலும் வடிந்து போனது. எத்தனை முறைதான் பொய்யே உரைப்பது. ஒருமாதிரி வெறுப்பாயிருக்க, முடிந்தளவு காணொளி அழைப்பைத் தவிர்த்தாள்.

“ம்மா... வொர்க் டைட்டா இருக்குமா. வீக் எண்ட் வீடியோ கால் பண்றேன்!” என தன் தாயை சமாளித்தாள்.

அங்கே கீர்த்தனா பரிதியைப் பார்க்க வேண்டுமென கூற, “அவர் ஃப்ரியானதும் நானே கால் பண்றேன் கீர்த்தி. நீ என்ன பண்ற? படிக்கிறீயா இல்லையா?” என பேச்சை திசை திருப்பினாள்.

இதெல்லாம் பரிதிக்கு தெரியாது. வந்ததிலிருந்து ஓரிரு முறை தன் பெற்றோர்களிடம் பேசியவன், சுந்தரிக்கும் தானாக அழைத்துப் பேசினான். வாணியோடு தங்கி இருப்பது போன்ற தோற்றத்தையே அவனும் உருவாக்கினான். அவனுக்குப் பொய் கூறுவதில் பெரிதாய் தயக்கமிருக்கவில்லை. ஆனால் வாணிக்குத்தான் இரு வீட்டாட்களையும் ஏமாற்றுகிறோம் என உறுத்தலாக இருந்தது.

அதற்காக பரிதியுடன் ஓரே வீட்டில் தங்குவதை அவள் விரும்பவில்லை. அந்த நினைப்பே கசப்பு மருந்தை விழுங்கியது போலிருந்தது. இன்னுமே அவன் பேச்சில் உண்டான காயம் ஆறியிருக்கவில்லை. தான் செய்தது தவறு என உணர்ந்து ஒரு வார்த்தை கூட மன்னிப்பை யாசிக்காத அவனுடன் ஒரே வீட்டில் தங்க மனம் ஒப்பவில்லை. இப்படியே அந்த மாதத்தை கடத்திவிட்டாள். ஆனால் அந்த வாரத்தின் இறுதியில் சுந்தரி மகளைப் பிடித்துக்கொண்டார்.

“ஏன் வாணி... நீ வீடியோ கால் பண்ணி ஒரு மாசமாச்சு‌. அப்படியென்ன உனக்கு வேலை கிடக்கு? இன்னைக்கு லீவ் தானே? மாப்பிள்ளையையும் பார்த்து நாளாச்சு. அவர் எழுந்திரிச்சதும் பேசு. அப்படியே அவுக வீட்டுக்கும் பேசு!” என அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டார். இவள் அதற்கு மேலும் மறுத்தலித்தால், சந்தேகம் வரக் கூடுமென எண்ணி தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தாள்.

யாரிடம் சென்று நிற்கவே கூடாது என ரோஷத்தோடு எண்ணுகிறோமோ அவனிடமே சென்று உதவி கேட்க வைத்துக் கடவுள் வேடிக்கைப் பார்க்கிறார் எனத் தன் விதியை நொந்தபடி உடை மாற்றி முகம் கழுவியவள், துப்பட்டாவை எடுத்து கழுத்தைச் சுற்றி போட்டாள். பெரிதாய் குளிர் இல்லை என்பதால் குளிருடையை அணியாது வீட்டைப் பூட்டிவிட்டு ஒரு மகிழுந்திலேறி பரிதியின் குடியிருப்பை அடைந்தாள். இருவருடைய வீட்டிற்கும் இடையில் பதினைந்து நிமிடங்கள்தான் தொலைவு. அவனிருந்தது சௌத்ஹெல். இவள் அதற்கு அடுத்தப் பகுதியான ஹென்ஸ்லேவில் தங்கியிருந்தாள்.

சென்ற வாரம் இசைவாணி உடன் வேலை பார்க்கும் தோழியொருத்தியின் வற்புறுத்தலில் அவளது வீட்டிற்குச் சென்றாள். அப்போதுதான் அந்தப் பகுதியின் முதல் தெருவிலிருந்து பரிதி நடந்து வருவது தெரிந்தது. இரண்டாவது வீட்டில்தான் அவன் தங்கியிருக்கிறான் எனப் பார்த்துவிட்டாள். ஆனால் அவன் தன்னைக் காண கூடாது என விரைந்து அகன்றிருந்தாள்.

குறுகலாயிருந்த அந்த நான்கைந்து படிகளை விரைந்து கடந்தவளுக்கு அங்கிருந்த மூன்று வீடுகளில் எதில் அவன் தங்கியிருக்கிறான் எனத் தெரியாது தயங்கிப் பின்னர் முதல் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள். சில பல நிமிடங்களில் துருக்கிய ஆடவனொருவன் கதவைத் திறந்தான்.

“இங்க இளம்பரிதின்னு யாராவது தங்கியிருக்காங்களா?” அவள் ஆங்கிலத்தில் தயங்கியபடியே கேட்க, “நோ... ராங் அட்ரஸ்!” என அவன் கதவைச் சாற்றிவிட, இரண்டாவது வீட்டை சமீபித்தாள். இரண்டு முறை பொத்தானை அழுத்தியும் எவ்வித எதிர்வினையுமில்லை.

“யார் வேணும்?” இவள் பின்னே குரல் கேட்டதும் திடுக்கென பயந்தவள், திரும்பிப் பார்த்தாள். இந்தியர்களின் திராவிட நிறத்தோடு நின்றிருந்த விக்னேஷ்தான் அவளிடம் கேட்டான். அவனிடம் பரிதியின் பெயரைக் குறிப்பிட்டு விசாரித்தாள்.

“தமிழா?” இவளது உடை, பாவனை, கழுத்திலிருந்த தாலி என ஏதோ ஓர் உந்துதலில் அவன் கேட்க, வாணியின் தலை தானாய் அசைந்தது.

“வாங்க... வாங்க. அவன் தூங்கிட்டு இருக்கான். நான் எழுப்புறேன்...” இவளை உள்ளே அழைத்தான்.

“இட்ஸ் ஓகே, நான் இங்கேயே நிக்கிறேன். அவனை வரச் சொல்றீங்களா?” இவள் சங்கடத்துடன் மறுத்தாள். ஆண்கள் மட்டும் குடியிருக்கும் வீட்டிற்குள்ளே செல்வதில் மிகுந்த தயக்கம் அவளுக்கு. அந்தப் புரிந்து கொண்டவன், விரைந்து சென்று பரிதியை எழுப்பினான்.

அவன் அத்தனை சீக்கிரத்தில் எழவில்லை. ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். இளமதியுடன்‌ நேற்று ஊரைச் சுற்றிவிட்டு தாமதமாகத்தான் தூங்கினான்.
“மச்சான், உன்னைப் பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்கு டா!” இவன் உலுக்கியதில் உச்சுக் கொட்டியபடியே எழுந்தமர்ந்தான் பரிதி.

“அட்ரஸ் மாறி வந்திருப்பாங்கடா. என்னைப் பார்க்கலாம் வந்திருக்க மாட்டாங்க!” என்றவன் மீண்டும் உறங்க செல்ல,

“டேய்... தமிழ் பொண்ணு டா அவங்க. உள்ள வர சங்கடப்பட்டு வாசல்லயே நிக்குறாங்க...” விக்னேஷ் அழுத்தமாய்க் கூற, சிறு சலிப்புடன் எழுந்து கண்ணைத் தேய்த்துக் கொண்டே வாயிலுக்கு வந்தான் பரிதி.

மெல்லிய ஊதாவும் வெள்ளையும் கலந்த உடையிலிருந்தாள் இசைவாணி. கழுத்தைச் சுற்றிய துப்பட்டா, நான்கு மாதத்தில் சற்றே வெளுத்துப் போன அவளது மாநிறத் தோல் எதிர் வெயிலுக்கு மெலிதாய் மிணுமிணுத்தது. தன்னருகே அரவம் கேட்டதும் வேடிக்கைப் பார்த்திருந்த இசைவாணி திரும்பினாள். இருவரது பார்வையும் மற்றவரை சமீபித்தது. நான்கைந்து மாதங்கள் கழித்து பார்த்துக் கொள்கின்றனர். ஆனால் பரஸ்பர நலவிசாரிப்போ அனுசரணையான பார்வையோ ஏதுமில்லை. மூன்றாம் மனிதரை ஆராயும் பார்வைதான் பார்த்தனர்.

அவளை எதிர்பாராமல் பரிதி திகைத்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாதவன், “நீ எங்க இங்க?” என இலகுத்தன்மை அற்றுக் கேட்டான். அந்தக் குரலே இவளுக்கு அந்நியமாய் தோன்றிற்று‌.

“அம்மா வீடியோ கால் பேசணும்னு சொன்னாங்க!” இவள் பதிலளிக்க,

“பேசு...” அலட்சியமாக கூறியவன், அதற்காக ஏன் வந்திருக்கிறாய் எனப் பார்த்தான். அவனது அலட்சியத்தில் ரோஷம் வந்து அங்கிருந்து அகன்றுவிடுவோம் என வாணி எண்ணினாலும், சுந்தரியை சமாளிக்க முடியாது என உதட்டைக் கடித்து கோபத்தை அடக்கி, “நம்ப ரெண்டு பேரையும் பார்த்துப் பேசணும்னு சொன்னாங்க!” என்றாள் பொறுமையாக.

“ப்ம்ச்... அதுக்காக இவ்ளோ தூரம் வருவியா நீ? ஏதாவது பொய் சொல்லி சமாளிக்க வேண்டியதுதானே? ஏன் உனக்குப் பொய் சொல்றதுதான் கை வந்த கலையாச்சே!” இதற்காக என்னுடைய தூக்கத்தைக் கலைத்து விட்டாள் என்ற கடுப்பில் அவன் சுள்ளென பேச, இசைவாணியின் முகம் மாறிற்று. அருகே நின்றிருந்த விக்னேஷ் தன் நண்பனைக் கண்டனத்துடன் பார்க்க, இவள் விறுவிறுவென படிகளில் இறங்கினாள். மூன்றாவது மனிதன் முன்னே அவன் தன்னை எடுத்தெறிந்து பேசிவிட்டானே என அவமானத்தில் இவளுக்கு கண்கள் கலங்கின. எதுவும் பேசாது சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கினாள். அ

“டேய் பரிதி..‌யார் டா அந்தப் பொண்ணு, ஏன் டா இப்படி பேசுற நீ?” விக்னேஷ் இவன் தோளில் தட்டினான். பரிதி பதிலுரைக்காமல் இசைவாணியையே பார்த்திருந்தான். என்னவோ இத்தனை நாட்கள் அவன் இருக்கிறானா? என்ன என ஒரு வார்த்தைக் கூட கேட்காமல், அவளுக்குத் தேவை எனும்போது வந்து நிற்கிறாளே என்ற கடுப்புதான் அவனின் இத்தகைய பேச்சிற்கு காரணம்.

“டேய்... உன்கிட்டதான் கேட்குறேன். யாரந்தப் பொண்ணு?” விக்னேஷ் மீண்டும் கேட்க,

“அக்கா மாதிரி...” எனக் கூற வந்த வார்த்தையை விழுங்கி, “தெரிஞ்ச பொண்ணு...” என்றான் பெருமூச்சுடன்.

“தெரிஞ்ச பொண்ணு சரி. அவங்கம்மாகிட்டே நீ ஏன் டா பேசணும்? எனக்குப் புரியலை!” அவன் தொணதொண கேள்வியில் கடுப்பானவன்,

“அவ கழுத்துல நான் தாலி கட்டியிருக்கேன்‌. அப்போ அவங்கம்மாகிட்டே நான் பேசலாம் தானே?” என எரிச்சலாக கேட்டு உள்ளே நுழைந்து முகத்தை அடி
த்துக் கழுவி உறக்கத்தை விரட்டிய பரிதி, அலைபேசியை எடுத்து சுந்தரிக்கு அழைத்துக்கொண்டு அவள் சென்ற திசையில் விரைந்தான்.

தொடரும்...



 
Well-known member
Messages
602
Reaction score
411
Points
63
இங்க வந்தும் சண்டையா? இதுல இவனுக்கு புது சிநேகம் வேற
 
Well-known member
Messages
525
Reaction score
380
Points
63
Ithunga rendum avanga ego ah va vida mataga aana sandai ah mattum eppudi than salikama poda thonuthu nu theriyala soppa ivanga panchayathu ku illaya oru end nu than ketka thonuthu
 
Top